அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தண்டனை பெற்ற தண்டமிழ் வீரர்கள்

சிறைவாசம் கழிந்து திரும்பினர்
திராவிடமணி, அனந்தப்பன், வைரவன்

ஆச்சாரியார் சென்னைக்கு வருகிறார் என்பதை அறிவிக்கும் வகையில் 23.10.50 இரவு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தார் என்பதற்காக ஆளவந்தாரால் பிடித்துச் செல்லப்பட்டு, ஒருவராகக் காவல் தண்டனை அடைந்த சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகக் கமிட்டி உறுப்பினரும் தண்டையார்பேட்டை வட்டக் கழகச் செயலாளருமான சி.எஸ்.திராவிடமணி 30.10.50 அன்று காலை 10 மணிக்குச் சிறையிலிருந்து விடுதலையானார்.

ஒருவாரத் தண்டனையை அனுபவித்துவிட்டு ஆளவந்தாரின் அடக்குமுறை முத்திரையைப் பொறித்துக் கொண்டு சிறையினின்றும் வெளியேறிய கழக வீரரை ஏராளமான கழகத் தோழர்கள் வரவேற்றனர். தண்டையார் பேட்டை கழகத் தோழர்கள் தங்கள் செயலாளருக்கு மலர்மாலை சூட்டி மகிழ்வித்தனர்.

தண்டையார் பேட்டை தி.மு.க.துணைச் செயலாளரான தோழர் ஏ.டி.கோவிந்தசாமி, மற்றும் தோழர்களான ஆர்.எஸ்.வேணு. பி.சங்கரன், ஆர்.எஸ்.தம்பி, ஏ.தணிகாசலம், எஸ்.கே.நாகப்பன் முதலிய முக்கிய வீரர்கள் வந்திருந்தோரில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தோழர்களோடு, விடுதலையான தோழர் திராவிடமணி நேராக தலைமைக் காரியாலயத்திற்கு வந்து சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் கோவிந்தசாமியைச் சந்தித்து அளவளாவிவிட்டு, பின்னர் வீட்டிற்குச் சென்றார்.

ஆச்சாரியார் சென்னை வருகையையொட்டி 24.10.50 அன்று கருப்புக்கொடி காட்டச் சென்றதாக, காருண்ய மிகுந்த காங்கிரஸ் ஆளவந்தாரால் கைது செய்யப்பட்டு, லா காலேஜ் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் மாஜிஸ்டிரேட்டால் ஒருவாரம் கடுங்காவல் தண்டனையடைந்த இலட்சிய வீரர்களான தோழர்கள் சிங்காரத்தோட்டம் எம்.அனந்தப்பன், மீரான் சாகிபு தெரு வைரவன் ஆகிய இரு தோழர்களும் 30.10.50 அன்று விடுதலையாயினர்!

ஆளவந்தாரால் ஒருவாரம் சிறைக்குள் பூட்டப்பட்டு மகிழ்வோடு ஒரு வாரத்தைக் காராக்கிரத்தில் கழித்துவிட்டு, புன்சிரிப்போடு சிறையினின்றும் அவர்கள் நீங்கிய காட்சி, திராவிட இளம் வீரர்களின் நெஞ்சுறுதியின் சின்னமாக இருந்தது.

(திராவிடநாடு 12.11.50)