அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தற்காலிக சாந்தியே!

நாம் திராவிடர்; நம்முடைய நாகரிகம் திராவிட நாகரிகம்; நம்முடைய பழக்க வழக்கங் கள் திராவிட நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டவை, உண்ணல் உடுத்தல் கொள்ளல் கொடுத்தல் ஆகிய எல்லாவற்றிலுமே நாம் நம்முடைய இன மரபுரிமையைப் பாதுகாத்து வந்திருக்கிறோம், நம்முடைய மொழி, கலை ஆகிய இரண்டும், நம்மால் போற்றப்பட்டு வந்த சிறந்த முறையால், பிறநாட்டுப் பிறமொழிகளைப் பேசும் பிற நாகரிகங்களையுடைய மக்களாலும் வரவேற்கப்பட்டதோடன்றி, அவை, அவர் களுடைய பழக்க வழக்க- நாகரீகங்களுள்ளும் புகுந்து, அவர்களது வாழ்க்கைத் துறைகளைச் சிறப்பித்தனவென்ற செய்திகள் பலவற்றை வரலாற்று நூல்கள் நம் கண்முன்னே தோன்றிக் கழிபேரு வகை அடையச் செய்தன.

இந்த நிலையில், `திராவிடம், திராவிடர், திராவிட நாகரிகம், திராவிடக் கலை, அதை யொட்டிய பழக்க வழக்கங்கள் ஆகிய ஒன்றும் இப்போது கிடையாது; எல்லாம் ஒன்றாய்க் கலந்து விட்டன, திராவிடம் வேறு ஆரியம் வேறு என்று சொல்லப்பட்ட காலம் மலையேறிவிட்டது; இப்போது ஆரியமும், திராவிடமும் பிரிக்க முடியாதபடி ஒன்றாய்ப் பிணைக்கப்பட்டு விட்டது’ என்று ஒருசிலர் கூறியதும் எங்கள் செவிகளுக்கு எட்டியது.

எவருடையவும், எதனுடையவும் கலப் பின்றித் தனித்து வாழ்ந்து நம்முடைய மரபு ரிமையைப் பாதுகாத்து வந்த நாம், `ஆரியத்தோடு பிணைக்கப்பட்டுப் பிரிக்க முடியாதபடி ஆய் விட்டோம்’ என்று ஒருவர் இருவரோ அல்லது சிலரோ கூறும்படியான நிலைமைக்கு, ஏள் ஆளானோம் என்பதை நம் தலைவர்களிற் பலர் ஆராயத் தொடங்கினர்.

நம்மவருட் பெரும்பகுதியினர், தங்களை இந்துக்கள் என்று நினைக்கும்படியும், இந்து மதத்தைத் தங்களதாக ஏற்றுக் கொள்ளும் படியும், இந்துமத ஆசாரங்களைத் தங்கள் பழக்க வழக்கங்களிற் கொண்டு வந்து கையாளும் படியும் செய்த ஆரியர்களுடைய சூழ்ச்சிகளை அறிந்து கொள்ள முடியாமற் போனதினாலேயே, அவர்கள் (திராவிடர்களிற் பெரும்பகுதியினர்) தங்களை இந்துக்கள் என்று ஒப்புக்கொண்டு அல்லற்படுகின்றனர் என்பதையும், அதனா லேயே, சிலர் ஆரியமும், திராவிடமும் ஒன்றாய்க் கலந்து விட்டதென்றும் கூறும்படி நேர்ந்த தென்பதையும் கண்டார்கள்.

அதன் பயனாகக் கடந்த பதினைந்து ஆண்டுகட்கு மேலாகவே நமது தலைவர்களும் இயக்கத் தோழர்களும் ஆற்றிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகளும், எழுதிய ஆணித்திறமான எழுத்துக்களும், நம்மவரிற் பெரும்பாலாரை, `நாம் இந்துக்களுமல்ல, ஆரியர்களோடு கலப்புற்றவர் களுமல்ல, நாம் தனித் திராவிடரே’ என்று எண்ணும்படி செய்ததோடு, செயலிலும் தாங்கள் திராவிடர்களே என்பதைக் காட்டிக் கொள்ளும் முறையில் தங்கள் வாழ்க்கையில் பல மாறுதல்களை நடத்தியும் காட்டினர்- காட்டி வருகின்றனர். திருவாரூரில் நடைபெற்ற மாகாண மாநாட்டில் கூடிய பலவாயிரக்கணக்கான திராவிடப் பெருங்குடி மக்கள், ``நாங்கள் திராவிடர்களேயன்றி, இந்துக்கள் அல்ல’’ என்ற தீர்மானத்தையும் ஒரே மனதாக நிறைவேற்றி வைத்தனர். இத்தீர்மானத்தை எப்படியாவது நிறைவேற்றி நடைமுறையில் கொண்டு வரு வதற்காக நமது ஒப்பற்ற தலைவர் பெரியார் அவர்கள் எடுத்துக் கொண்ட பெருமுயற்சிக்கும், உழைப்புக்கும் திராவிட மக்கள் என்றைக்கும் கடமைப்பட்டவர்கள் என்று கூறுவது மிகையாகாது.

இத்தீர்மானத்தின் விளைவும் இதனை யொட்டி நமதியக்கத் தோழர்கள் செய்த பிரசாரத் தின் பலமுமே மறைந்துகிடந்த மாணவ உலகுக்கு மறுமலர்ச்சியும்- புத்துணர்ச்சியும் அளித்துப், புதுமையாம் புத்துலகை அமைக்கும் அற்புதச் சிற்பிகளுமாக்கியது என்பதை எவரே மறுக்க முடியும்! இன்றைய மாணவ உலகம் மலைபோல் நிமிர்ந்து நிற்கிறது! மார்பைத் தட்டுகிறது! மறந்தும் தலைவணங்கோம், மாற்றானுக்கு என்று கூறுகிறது! தலை போயினும் தரணியை நாம் அடைந்தே தீருவோம் என்று தாக்கீது விடுகிறது! ஆரியத்தை ஆயிரம் கல் தொலைவுக்கு அப்பால் ஒட்டுவோம் என்று அஞ்சாமொழி பேசுகிறது! இந்து மதத்தின் இடுப்பை ஒடித்து விட்டோம் என்று இறும்பூதெய்துகின்றது! மூடப் பழக்க வழக்கங்களை முறியடிக்கும் வரை தரையிற் படுப்பதில்லை என்று தரணி சுற்றி வருகிறது! தாயைப் பிரிந்த சேய் தடுமாறி நிற்பது போல், திராவிடத்தைப் பறிகொடுத்து நிற்கும் நிலையிலுள்ளவர்களை நோக்கிப் பக்கத் துணையாக மட்டும் நீங்கள் இருங்கள், நாங்கள் திக்கெட்டும் திராவிட முரசொலி கேட்கும்படி செய்து விடுகிறோம் என்று கேண்மையூட்டுகிறது! இதனை வெற்றியின் அறிகுறியென்றே வீணரும் வேற்றாரும் உணர்ந்து தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டாலன்றித் திருத்தியமைக்கும் திராவிட நாட்டின் தெருக்கோடியிலும் அவர்கள் தலைகாட்ட முடியாதென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

எனவேதான், இந்து சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டிருக்கும் ராவ் கமிட்டியார், தற்காலிகத் திருத்தமாகத் திராவிடத் தலைவர் களால் கொண்டு வரப்பட்டிருக்கும் சில திருத்தங்களையும் தங்கள் திருத்தங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், அத் திருத்தக் கமிட்டியின் உறுப்பினர்களாகக் குறைந் தது மூன்று திராவிடர்களாவது சென்னை மாகாணச் சார்பில் இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறோம்.

திராவிட நாடு தனியாகப் பிரிக்கப்பட்டு அதன் ஆட்சிமுறை அமைக்கப்படும்போது, திராவிடப் பெருங்குடி மக்களுக்கு உகந்த முறையில் ஒரு சமூக அமைப்பு முறைச் சட்டம் வகுக்கப்படுமேயன்றி, இப்போதிருக்கும் இந்து சட்டத்தையோ அல்லது திருத்தியமைக்கப்படும் இந்து சட்டத்தையோ அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஆகவேதான், இத்திருத்தங்களைத் `தற்காலிக திருத்தம்’ என்று நாம் குறிப்பிட்டோம்.

`இந்து’ என்று தன்னைச் சொல்லிக் கொள்ள விரும்பாத ஒருவன், இந்து சட்டத் தையோ, அதன் திருத்தத்தையோ ஒருபோதும் வரவேற்க மாட்டான். ஆனால், இன்னும் சில திராவிடர்களுக்குத், தாங்களும் இந்துக்களே என்று எண்ணிக் கொண்டிருக்கும் மயக்கம், தெளியாததால், அம்மயக்கம் தெளியும் வரையில் அல்லது தெளிய வைக்கும் வரையிலாவது இச்சட்டத்தைச் சில திருத்தங்களோடாவது இருக்க விடுவதை விடக், கால நிலை வேறு வகையில் இதற்கு மாற்றம் காண இடம் அளிக்கவில்லை. இந்தி எதிர்ப்பு, ஒட்டலில் பேதம் ஆகியவற்றில், வெற்றி கண்ட திராவிடர்கட்கு இது ஒரு பெரிய காரியமன்று, என்றாலும் `எண்ணித் துணிக’ என்பதை எண்ணி இன்னும் கொஞ்சங் காலத்திற்கு இதுபோன்ற காரியங்கட்கு வாய்தாப் போட வேண்டி யிருக்கிறது.

(திராவிட நாடு - 11.2.1945)