அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தறுதலை ஆட்டம்!

தென் ஆப்பிரிக்காவிலே உள்ள பரங்கிகளின் மண்டைப் புழு, மிக வேகமாக அவர்களை ஆட்டிப் படைக்கிறது. தென் ஆப்பிரிக்க சர்க்காரின் சட்டத்தை அங்குள்ள இந்திய மக்கள் பெரும்பாலும் தமிழர் மீறுகின்றனர்- அமைதியான முறையில் அவர்கள் மீது சட்டம் பாயட்டும். இந்த வெள்ளைக் கும்பல் ஏன் பாயவேண்டும்? சட்டப்படி ஒரு நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளாமல் ஸ்மட்ஸ் துரை இருந்தபோதே, தென் ஆப்பிரிக்க வெள்ளைக்காரர்கள், நூறுபேர் கூடி அமைதியாகச் சட்டமறுப்பு நடத்துபவர்களைத் தூற்றியும் தாக்கியும், கூடாரங்களைக் கிழித்தும் கொளுத்தியும், தாய்மார்களை ஆவமதித்தும் தறுதலை ஆட்டம் இடியிருக்கிறார்கள். ஸ்மட்ஸ் கையாலாகாதவர் என்று தீர்மானித்துவிட்டு இந்தத் துரைமார்கள் கிளம்பிவிட்டார்களா? காலித்தனத்திலே தங்களுக்கு முதல் தாம்பூலம் தரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா? ஏன் இந்த ஆணவம் பிடித்த செயல்? இதனால் “இந்தியரின்” மனம் புண்படும் என்று மட்டுமல்ல, உலகிலே நாகரிகத்தையும் நற்பண்மையும் மதிக்கும் எந்த அறிஞரும், இந்த வெள்ளை நிறத்திமிரைக் கண்டிப்பர் என்பது திண்ணம்.

கடல் கடந்து சென்று கண்காணா இடத்திலே வசித்துவரும் நம் தமிழ் மக்களைக் கேவலமாக நடத்திய தென் ஆப்பிரிக்கப் பரங்கியரின் திமிர் அடங்கிட நெடுநாட்கள் பிடிக்காது. இந்த ஆணவச் சேட்டையின் மூலம் தென் ஆப்பிக்காவிலுள்ள தமிழ் மக்களை அடக்கிவிடலாம் என்று நம்பினால், அந்த வெள்ளை நிறத்திமிர் பிடித்தவர்கள், ஏமாறப் போவது நிச்சியம், ஸ்மட்ஸ் துரை, கொஞ்ச நஞ்சம் மிச்சமாக இருக்கும் நன்மதிப்பையாவது காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், உடனே இந்த உதவாக்கரை வெள்ளையரின் சேஷ்டையைக் கண்டித்துத் தண்டிக்க வேண்டும். இல்லையேல், அவர்களின் செயலக்கு, ஸ்மட்ஸ் துரையும் உடந்தைதான் என்று உலகு தீர்ப்பளிக்கும் என்பது உறுதி. உலகில் ஆநீதியை ஒழிக்கவும், ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பூசல் ஏற்படக்கூடிய காரணம் இருந்தால் அதனை நீக்கவும் நிறுவப்பட்டுள்ள, ஒக்கிய நாடுகள் மன்றத்திலே, தென் ஆப்பிரிக்க சர்க்கார், இந்தியவர்களை இழிவுபடுத்துவதப் பற்றிய தகவலை சர். ஏ. இராமசாமி முதலியார், இந்திய சர்க்கார் போக்கு அங்கு விசாரிக்கப்படும் விரைவில் அந்தச் சபையின் யோக்கியதை என்ன என்பதை உலகு கண்டுகொள்ள அரிய வாய்ப்பு பார்ப்போம். “இலட்சிய சிருஷ்டி” என்று ராஜதந்தரிகள் புகழ்ந்து வாழ்த்திய சபை, என்ன செய்கிறது என்று சட்டமறுப்பு நடந்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் டாக்டர் மோகாம்புரி நாயகர் உட்பட, பல தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டனை தரப்பட்டு வருகிறது. துரைமார்களின் துடுக்குத்தனத்தை அடக்க தென் ஆப்பிரிக்க சர்க்கார் முன்வரக் காணோம். இந்த நிலையில், இலங்கையிலேயும், தமிழர்கள் தவிக்கிறார்கள்.

பெயர் சேனாநாயகர், ஆகவே, வீரமாகப் பேசியாக வேண்டும் என்று எண்ணிவிட்டார் போலும் இலங்கை மந்திரியார், தமிழர் நடத்தும் நியாயமான கிளர்ச்சியைக் கண்டு, நமது போக்கை மாற்றிக் கொள்ளாததுடன், தமிழரைக் கிள்ளுக்கீரை என்று எண்ணிக்கொண்டு அவர்கள் நடத்தும் கிளர்ச்சியால் ஒன்றும் நேரிட்டுவிடாது என்று துந்துபி நாதம் செய்கிறார். சோறும் துணியும் தரவேண்டுமென்று, இங்கே காவடி தூக்கிய காலம் போய், இப்போது சேனாநாயகர்கள், தமிழரை மிரட்டி அடக்கவும், சட்டத்தால் தாக்கவும் துணிந்துவிட்டனர். இலங்கை சர்க்காரின் போக்கைத் தமிழகம், கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறது. தமிழரைத் தாழ்வாகக் கருதித் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வது கூடாது என்று சேனாநாயகாவுக்கு எச்சரிக்கிறோம். தமிழரின் காலை மிதிக்கவேண்டாம். அவர்கள் பிறர்தலை தம்காலில் உருளுமளவு போராடிய பரம்பரையினர். வீரர்களின் மனத்தைப் புண்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில் இழைக்கப்படும் கொடுமை, இலங்கையில் நடைபெறும் அக்ரமம், இவைகள் இங்கே, நமது நாட்டிலேயே, நம்மவர்களிலே, பாடுபடும் பரம்பரையாக உள்ள பழங்குடியினருக்கு நாம் செய்யும் கொடுமைகளோடு ஒப்பிட்டால், சிறுபிள்ளை விளையாட்டாகவே தோன்றும். உலக மன்றத்தை நேருக்கு நேர்நின்று சந்தித்துப் பேசுமளவு, யோக்கியதை நமக்கு இல்லை. நாம், நம் மக்களில் ஒரு முக்கியமான பிரிவினரை நீதியுடன் நடத்திக்கொண்டு வரவில்லை. எனவேதான் சட்ட மறுப்புக்கும் சாஸ்திர மறுப்புக்கும் உள்ள பேத்தை நாம் முன்பு விளக்கினோம். ஆனால், இங்கு ஆநீதியும் அக்ரமும் நடப்பதனாலேயே, உலகிலே வேறோர் இடத்திலே புதிதாக ஆநீதியும் அக்ரமமும் முளைத்தால், சகித்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. மக்களை மக்கள் தாழ்வாகக் கருதும் தத்துவத்தைத தலைதூக்க விட்டதன் பலனைத்தான் இன்று நாம் சேரிகளிலே பார்க்கிறோம்.
பேத உணர்ச்சிக்கு ஏக்காரணத்தைக் கொண்டோ என்ன சாக்குக் கூறியோ, இடமளித்துவிட்டனர். இங்கு, முன்னோர்கள் காலத்திலே அதன் விளைவு என்ன? அறிஞர்கள் கண்டு வெட்கப்படும் நிலையிலும், ஆற்றலுள்ளவர்களும், இதனை அடியோடு போக்குவது சுலபமாகத் தோன்றவில்லையே என்று ஆயாசப்படவும், அரசியல் கட்சிகள் இமை வேகத்திலே, இது விஷயத்திலே நடக்கும்போதே ஆபத்து வருமோ என்று பயத்தோடு இருக்கவேண்டியதுமான, பயங்கரம் நிரம்பிய, சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பொறுமை வேண்டும் - படிப்படியாகத்தான் முன்னேற முடியும் - பக்குவமாக நடந்து கொள்ளவேண்டி இருக்கிறது என்றெல்லாம் கூறும் தலைவர்களையே காண்கிறோம். அலட்சிய சுபாவத்தாலே, அந்த நாளிலே ஜாதி பேத அக்ரம்ததை நுழைய விட்டதனுடைய பலனை இன்று நாம், வட்டி தொடர் வட்டியுடன் சேர்த்துப் பெற்று வருகிறோம். தீண்டாமை, ஜாதி பேதம் என்ற கொள்கையும் திட்டமும், மெள்ள மெள்ள இங்கே நுழைந்தபோது, எதிர்த்திருந்தால், இந்தக் கேவலமான நிலைமை இன்று இராது.
அக்ரமத்தைச் சகித்துக் கொண்டதால், ஆநீதியைப் பொறுத்துக் கொண்டதால், இன்று மக்களை மக்களே தீண்டுவதும் கூடாது, அது பாபம், என்ற முதல்தரமான மடத்தனம், உயர்தரமான சாஸ்திர சம்பிரதாயமாகி விட்டது. சமூகம் ஜாதி பேதத்தின் பிடியிலே சிக்கிச் சின்னா பின்னப்பட்டதைக் காண்பதால், அதனைப் போக்குவது எவ்வளவு கஷ்டமாகி விட்டது என்பது தெரிவதால், முளையிலே கிள்ளி ஏறியாததால், இன்று வெட்ட வெட்டத் துளிர்விடும் விஷவிருட்சமாக ஜாதி இருப்பதைக் காண்பதாலேதான் தென் ஆப்பிரிக்காவிலே, இன்று புதிதாக முளைக்கும் அக்ரம்ததை உடனே அழித்தாகவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது. அலட்சிய சுபாவத்தாலேயோ, எத்தனையோ துன்பமும் இழிவும் பழியும் இதனைவிட அதிகமாக இங்கே இருக்கிறது என்ற எண்ணத்தாலேயோ, சும்மா இருந்துவிட்டால், பிறகு ஒரு சில ஆண்டுகளிலே, அக்ரமம் நிலைத்து விடுவதுமட்டுமல்ல, ஓங்கி வளர்ந்து பிறகு, நீக்கமுடியாததாகிவிடும். ஆகவேதான், தென் ஆப்பிரிக்கச் சட்ட மறுப்பû நாம் ஆதரிக்கிறோம். மனுவின் சாஸ்திரத்தை, சம்பிரதாயத்தை நம் முன்னோர்கள் ஏற்றுக்கொண்டதன் பலனாய், நாலாயிரம் ஜாதிகளாகிப், பாழாகிவிட்டோம். மனு, ஆப்பிரிக்காவில், ஆதோ ஊலாவுகிறான் ஸ்மட்ஸ் உருவிலே என்றால், நமக்கு ஆத்திரம் வரத்தான் செய்யும். அந்த அக்ரமத் திட்டத்தை அடியோடு ஒழிக்க அஞ்சா நெஞ்சுடன் போராடிக் கண்காணா நாட்டிலே, வெள்ளையரின் சிறையிலே, புகத் துணிந்த வீரர்களைப் பாராட்டுகிறோம். அவர்களின் போர், வெற்றிகரமான முடியவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

காந்தியார் சொல்வது போல, இங்கே ஜாதி இந்துக்கள் சம்பிரதாயத்தின் பேரால் என்ன ஆநீதியûச் செய்கிறார்களோ, அதைத்தான் ஸ்மட்ஸ் ஆப்பிரிக்காவிலே சட்டத்தின் பேரால் செய்கிறார். “அந்தச் சட்டமும், இந்தச் சம்பிரதாயமும் தவிடுபொடியாக வேண்டும். மனிதத் தன்மையின் மேன்மையும் உரிமையும் நிலைக்க வேண்டுமானால், இன்று ஜாதி இந்துக்கள் கொண்டுள்ள சம்பிரதாயங்கள் அவ்வளவும் அந்த நாட்களிலே, மனு புகுத்திய சட்ட திட்டங்களே, தென் ஆப்பிரிக்காவிலே உள்ள நமது நாட்டு மக்களைச் சேரிகளில் தள்ளிவிடும் துணிவு எப்படி ஸ்மட்சுக்குப் பிறந்தது? சேரிகள் கிராமந்தோறும் உள்ள இந்தியாவிலே இருந்துவந்தவர்கள் தானே இவரக்ள், மனிதர்களிலேயே மேல் கீழ், ஜாதிகளை ஏற்றுக்கொண்டு, வரைமுறை கெடக்கூடாது என்று இன்றளவு வரையில் நடந்துவரும் நாட்டிலே இருந்து வந்தவர்கள்தானே இவர்கள், இவர்களை இங்கேயும் சேரியில் தள்ளி வைக்கலாம் என்ற தைரியம் பிறந்தது.
இங்கே, மனுவின் அக்ரமச் சட்டங்களையும் அவைகளை உள்ளடக்கிய சாஸ்திர, சம்பிரதாயங்களையும், நாம், தைரியமாக எதிர்த்து ஒழித்திருந்தால், பரங்கிக்குத் தைரியம் பிறந்திருக்க முடியுமா? சாஸ்திர மறுப்பு இங்கே நடந்திருந்தால் அங்கே ஸ்மட்சின் சட்டம் பிறந்தே இருக்காது. அந்தத் தைரியமே உண்டாகாது. இப்போதும், அங்கே சட்டமறுப்பு நடக்கட்டும். இங்கே சாஸ்திர மறுப்பையும் துவக்கலாமே! ஏன், அதற்குமட்டும், உரிமை, விடுதலை வட்கை, சர்வ தேசநீதி ஆகியவை பற்றி மேதாவித்தனமான கருத்துரைகள் தரும், ஏடுகள், மௌனம் சாதிக்கின்றன. தென் ஆப்பிரிக்காவிலே, சட்ட மறுப்பு மூலம், ஸ்மட்ஸ் துரையின் சட்டத்தை ஒழிக்கத் திராவிட இளைஞர்கள் ஆயிரம்பேர் தருகிறோம். இங்கே சாஸ்திர மறுப்பைத் திராவிடர் கழகம் துவக்கினால், எத்தனை வீரர்கள், தூய கதரணிந்தோர் வரத் தயாராக உள்ளனர்? சட்டமறுப்புக்கு மட்டுந்தானா வீரர்கள், சாஸ்திர மறுப்புக்கு இல்லையா? மனு ஆப்பிரிக்காவிலே மட்டுந்தானா தாக்கப்பட வேண்டும். இங்கே மனு மனம்போன போக்கிலே இன்றும் இருக்கிறானே கேட்பார் இல்லையா, நீதி கிடையாதா என்று திராவிடர் கழகம் கேட்கிறது, நாட்டு மக்களை நோக்கி பெருமூச்சு மட்டுந்தானே பதிலாகக் கிடைக்கிறது.

(திராவிட நாடு 30.6.46)