அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தத்துவம் பேசுகிறார்!
“பயலே! இனிமையானது, குளிர்ச்சியானது, உடலுக்கு நல்லது என்று கூறி, ஏ;நத இளநீர் பருகினாயோ, அது இருந்த அதே தென்னை தந்ததுதான், நான் பருகிய, கள்! கேவலம் என்று பேசுகிறாய், புத்தித் தெளிவு இல்லாமல், கண்டிக்கிறாய், விவரம் தெரியாமல்” என்று பேசினான், குடித்துப் புரண்ட குப்பண்ணன் குத்திவிட்டுக் கூலி கேட்கும் குருவப்பன் ஆமாம் சாமி போட்டான்!
“மலம், மலம் என்று கேவலமாகப் பேசுகிறாயே தம்பி! மலத்தைதத்தான் ஏருவாகப்போட்டுக் கத்திரி பயிரிட்டார்கள். பிஞ்சுக் கத்திரி சுபையாக இருக்கிறது என்று கூறினாயல்லவா! எந்த மலத்தைக் கேவலம் என்று பேசுகிறாயோ ஆ;த மலம் தநத பொருள்தான் கத்திரி! அந்தக் கத்திரியும் மலமாகத்தான் ஆகப்போகிறது” என்று சொன்னான், வேதாந்தம் படித்து மனதைக் குழப்பிக் கொண்ட மன்னார்சாமி.

“நான் உண்டு, என்னை பிடிக்க போலீசுண்டு, நீ யார் குறுக்கே வர! உன் வேலையைப் பார்த்துக் கொண்டு கிட!” என்று கூறினான், களவாடிப் பிடிபட்ட கந்தன், வீட்டுச் சொந்தக்காரனிடம்.

“தெரு வழிவந்தால் என்ன, புறக்கடைப் பக்கம் வந்தால் என்ன? முக்காடிட்டுக் கொண்டு மறைந்து வந்தாùன்ன, வந்திருப்பது யார், நானல்லவா!” என்று நியாயம் பேசினான், யாருமறியாமல் புறக்கடைச் சுவர் ஏறிக் குதித்து, சந்தடி செய்யாமல் உள்ளே நுழைந்த கள்ளச் சாமியார்!

“உன்னை நான் மணம் செய்து கொண்டிருந்தால், இதே காரியத்தைத்தானே, உன் பெற்றோர் சம்மதத்துடன் செய்திருப்பேன்! இப்போது நடைபெற்றதும் அதுதானே! இதற்கு ஏன் விம்முகிறாய், விசனப்படுகிறாய் என்று தைரியம் கூறினான், கற்பழித்த கணபதியாப்பிள்ளை.

வால்குடித் தொகுதியில், ஜில்லாபோர்டுத் தேர்தலுக்கு காங்கிரஸ் ஆபேட்சகராக நிற்கும் ராஜா சிதம்பரம், இதுபோலவே ஒரு நியாயம் பேசுகிறார், சாகசமாக, துணிவுடன், எந்த இடத்திலிருந்து எதிர்ப்பும் கண்டனமும் பிறக்க வேண்டுமோ அங்கு புன்னகை கிடைத்துவிட்டதே என்ற பூரிப்பில், நான் முன்பு காங்கிரஸ் கட்சியை எதிர்த்துத் தேர்தலில் முறியடித்திருந்தால் என்ன, இப்போது அதுபற்றிக் கவனிக்கலாமா! இப்போது நாட்டிலே, இரண்டே கடசிகள் உள்ளன ஒன்று கம்யூனிஸ்டு, மற்றொன்று கம்யூனிஸ்ட் ஆல்லாதார்!! நான் இரண்டாவது!! இந்த அரசியல் தத்துவம் குடியாத்தம் பெற்றெடுத்ததாகும்!! என்று பேசுகிறார்.
அரசியல் உலகிலே, இப்போது மூண்டு முடைநாற்ற மடித்துக் கிடக்கும் நோய், இப்படியும் பேசவைக்கும், இதைவிட மோசமாகவும் பேசவைக்கும்! ராஜா சிதம்பரம் போல் துணிந்து செயலாற்றக்கூடியவர்களை மட்டுமல்ல, மிகமிகச் சாதாரணப் பேர்வழிகளை எல்லாம்கூடப் புதுப்புதுப் பாணியல் பேச வைக்கிறது - குடியாத்தம் தேர்தலிலிருந்து கிளம்பியிருக்கிறதாம், ஒரு புது அரசியல் தத்துவம்! அதன் இலட்சணம் இதுதானாம் - கட்சி மாறுவது, கொள்கையை மறப்பது, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நடந்து கொள்வது, திறந்த வீட்டுக்குள் நுழைவது, இத்யாதி!! அருமையாக இருக்கிறதல்லவா!!

பக்தர்களின் நெஞ்சு நெகிழும், பாமரரின் உள்ளத்திலும் பக்தி சுரக்கும், நன்னெறியில் நாட்டம் செல்லும், நாவார நாதன் நாமத்தைப் பூஜிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று திருவிழா நடத்துவதாகக் கூறுகிறார்கள் நவயுகத் தம்பிரான்கள். ஆனால் அதே திருவிழாவை, உண்ணவும் உரசவும், ஆள்ளவும் கிள்ளவும், ஆறுக்கவும் பறிக்கவும், இடிக்கவும் உடைக்கவும், சரியான சான்சு என்று பலே பேர்வழிகள் கொள்கிறார்களல்லவா, அதுபோலவே, நாட்டு மக்களின் குரலுக்கு நல்ல மதிப்பு அளித்து, ஒரு நாசகாரத் திட்டத்தைத் தொலைத்து, மக்களை மகிழ வைத்த மகத்தான தொண்டுக்காகக் களித்து, நன்றி காட்ட வேண்டி, குடியாத்தம் தொண்டுக்காகக் களித்து, நன்றி காட்ட வேண்டி, குடியாத்தம் தேர்தலில் காமராஜருக்கு பல்வேறு கட்சியினரும் ஆதரவு தந்தனர் - அந்தத் தூய காரியத்தையே தமது தீய செயலுக்குத் திரையாக்கிக் கொண்டு திருவிளையாடல் நடத்துகிறார்கள், காற்றடிக்கும் பக்கம் திரும்பும் கனவான்கள்.

குடியாத்தம் தேர்தலின்போது ஐதோ ஓர் மாபெரும் சர்வகட்சி மாநாடு நடைபெற்றது போலவும், அதிலே பல்வேறு கட்சிக்காரர்களும் கூடிக் கலந்து பேசி, இனி நாட்டிலே இரண்டே கட்சிகள் மட்டுமே இருத்தல் வேண்டும் என்று முடிவெடுத்தது போலவும், அந்த முடிவின்படி, கம்யூனிஸ்டு, கம்யூனிஸ்டு ஆல்லாதார் என்று இருகட்சிகள் மட்டுமே இனி இயங்கவேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டதுபோலவும், அந்த ஏற்புடைய திட்டத்தை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பைத் தம்மிடமே நாடு ஒப்படைத்திருப்பது போலவும், ராஜா சிதம்பரம் பேசுகிறார்! தகிடுதத்தக்காரரை அவர்தம் தனம் தான்யம் என்பது கண்டு தட்டிக் கேட்க அஞ்சிடும் நிலைக்குத் தமிழகம் வந்திருக்கிறது என்ற தைரியம், ராஜாவைப் பேசச் செய்கிறது. மிகமிகச் சாமான்ய அரசியல் தெளிவு படைத்தவனும் உணருகிறான், இவர்கள் ஏன் கட்சி மாறுகிறார்கள் என்பதனை! ஜனநாயகப் பண்பும், பொதுவாழ்வுத்துறையின் தூய்மையும், சுயநலப் பேய்பிடித்தாட்டும் நிலையிலுள்ளவர்களுக்குக் கால் தூசுதானே! கட்சிகள் அவர்களுக்கு வெறும் ஐணிகள்!! கட்சி ஊழியர்கள், அவர்களுக்குக் கையாட்கள்! கொள்கை என்பது அவர்களுக்கு, வெறும் எழுத்துக் குவியல்! குறி எப்போதும் பதவிமீது! இப்படிப்பட்ட குணாளர்கள், பல்வேறு நாடுகளிலே, மக்களால் பொதுவாழ்விலிருந்தே விரட்டி அடிக்கப்படுவார்கள்! இங்கே, இதற்கு என்ன விலை? என்று அவர்கள் துணிந்து பேரம் பேசுகிறார்கள். தங்கள் அரசியல் ஒழுங்கீனத்தை மறைக்க, தத்துவம் பேசுகிறார்கள், தத்துவம்!

ராஜா சிதம்பரம் எனும் ஒருவரின் போக்கு கண்டுமட்டுமல்ல, இதுபற்றிக் கூறுவது ஒரு புதிய கூட்டமே உருவாகிறது!! மாணிக்கவேலர் என்பது அரசியல் ஆகராதியல் ஒரு புதுப் பதமாகிவிட்டதல்லவா, அதுபோல, அரசியலில் ஒரு புது இனமே உண்டாகிறது! எல்லோரையும் ஏமாளி என்று எண்ணிக் கொண்டு ஏய்த்துப் பிழைக்கக் கிளம்பும் இனம்! இடந்தேடிகள்!!

ராஜா சிதம்பரம், குடியாத்தம் தேர்தலின்போது காமராஜரை ஆதரித்தாரா? இல்லை!

குடியாத்தம் தேர்தலில் காங்கிரசை எதிர்த்தவர் கம்யூனிஸ்டு, அந்தக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆணைப்பிலே இருந்துவந்தார், ராஜா சிதம்பரம்!

இப்போது “வலிய ஆணைந்த சுகம் போலே!” என்று கீதம் பாடிக்கொண்டு காங்கிரசிலே நுழைந்துவிட்டார்!! அந்தக் கட்சியோ இப்போது கண்டாரைக் கொல்லும் கட்டழகியாகி விட்டது!! கதவு திறந்து இருக்கிறது! கண்ஜாடை காட்டினால்போதும், கட்டிலறைக்கே சென்று விடலாம்! தாராளம் தங்கு தடையின்றி பெருக்கெடத்து ஓடுகிறது!! அந்தச் சுகானுபவத்திலே ராஜா மூழ்கி ஆனந்தம் அனுபவிப்பதிலே யாருக்கும் மனத்தாங்கல் இல்லை. கட்சி மாறுவது என்பதே பெரிய பாபம் என்று பேசிடும் பேதையர் இங்கு இல்லை! ஆண், பெண்ணாகவும், பெண் இணாகவும்கூட, ஆபரேஷன் முறையால் மாறலாமாமே! ஆகவே, ராஜா சிதம்பரம், ரகுபதி ராகவ ராஜாராம் கோஷ்டியிலே சேருவதுபற்றி, யாரும் திடுக்கிட்டுப் போகவில்லை, ஆனால் அதற்கு அவர் தத்துவம் காட்டுகிறாரே, அதுதான் உண்மையிலேயே, மானரோஷத்திலே கடுகளவு அக்கரையாவது உள்ள, எந்தக் கட்சிக்காரனையும் பதறச் செய்கிறது. குடியாத்தம் வழிகாட்டுகிறதாம்! அந்த வழி, ஜல்லா போர்டுக்குத்தான் கூட்டிச் செல்லும் போலும்!! நேற்றுவரையில், குடியாத்தம் தேர்தல் நடைபெறும்போது கூட ஒக்கிய முன்னணியில் கூடிக் குலவினார், இப்போது தத்துவம் பேசுகிறார்! இது போதாதென்று பெரியாரின் போக்கை வேறு மேற்கொள் காட்டுகிறார்.

ஐதோ நெஞ்சிலே பேரிடி விழும்படியான, நல்லோர் கண்டு கைகொட்டி நகைக்கும்படியான நெருக்கடியில் போதாவது பெரியார்மீது பக்தியும் அவருடைய போக்கை இதாரமாகக் காட்டவேண்டும் என்ற யுக்தியும் பிறந்ததே, அதுவரையில் மகிழ்ச்சிதான்! தமிழாசிரியர் பொன்னம்பலனாரை வாட்டியபோது, பெரியார் இருக்கிறாரே, இடித்துரைப்பாரே என்ன தெரியும்” என்று அதிகாரக் குரலில் பேச முடிந்தது. பெரியாரின் ஆதரவுடனும் இசியுடனும் துவக்கப்பட்ட திராவிட சட்டசபைக் கட்சியில் சேராமலிருக்க முடிந்தது. பெரியார் போக்கு நோக்கு பற்றிய கவலை அப்போது இல்லை. அப்போது!! ஓட்டுக் கேட்கச் செல்லுமிடமெல்லாம் கேள்விக்குறி தெரிகிறபோது ஓடி இடி வேலை செய்து பாடுபட்ட நண்பர்களே, சாடுகிறபோது, பணம் தண்ணீர்பட்ட பாடு ஆனால்தான் தப்பிப் பிழைக்க முடியும் என்று தனவந்தர்களான நண்பர்கள் கூறுகிறபொழுது, கண்பஞ்சடையும் போது குற்றாலத்தானைக் கூப்பிடும் பக்தன் போல, இப்போது, பெரியாரின் பெயரை உச்சரித்து, பெரும் பழியை மறைத்திட முயலுகிறார், இந்தப் பெரிய புள்ளி!
ஆண்டவனுடைய பெயரை ஏவரெவரோ எதெதற்கோ உபயோகப்படுத்துவதுபோல, பெரியாரின் நிழலில் இருந்துகொண்டு எதை எதையோ செய்துகொண்டு வாழலாம் என்று வயிற்றெரிச்சலையே வாழ்க்கை வழியாக்கிக் கொண்டதுகள் எண்ணுவதுபோல, ராஜா, நடத்தும் அரசியல் சூதாட்டத்துக்கு, பெரியாரின் போக்கை இதாரமாக்கிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்.

பெரியாருக்கு நாற்பதாண்டுப் பொது நலத் தொண்டு அளித்திருக்கும் செல்வாக்கு, இப்படிப்பட்ட சீரழிவான செயலாற்றும், சட்டை மாற்றுவோருக்குப் பயன்படவேண்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும் பெரியாருக்கு இழைக்கக்கூடிய பெரும் தீங்கு வேறு இருக்க முடியாது.

இந்த ஊர் சப்இன்ஸ்பெக்டரும் நானும் ஒரு சாலை மாணவர்கள் என்று கூறிக்கொண்டு, கன்னக்கோல் தூக்கும் கள்ளனை, நட்பின் பெருமையை உணர்ந்தவன் என்றா கூறுவர் - கொண்டாடுவர்.

பெரியாரின் செல்வாக்கு இப்படிப்பட்ட பெரும்பிழை புரிவோரைச் சுட்டுக் சுருக்கும் தீ! அதைச் சுயநலக் கும்பல், குளிர்காயப் பயன்படுத்த எண்ணுவது, சகிக்க முடியாத துரோகமாகும்.

அப்படித்தான் பெரியார் என்ன, ராஜாசிதம்பரங்களை அழைத்து, நீங்களெல்லாம் இனி காங்கிரசிலே சேர்ந்து விடுங்கள் என்று சொன்னாரா?

நாட்டிலே இனிக் காங்கிரசுக்கு எதிராக, ஜனநாயக முறையில், கட்சிகளே வேண்டாம் என்று பெரியார் கூறி விட்டாரா?

கம்யூனிஸ்டு - கம்யூனிஸ்டு அல்லதார் என்று இனி இரண்டே கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டாரே? இல்லை!!

குடியாத்தம் தேர்தலில் பெரியார் காமராஜரை ஆதரித்து, ராஜா சிதம்பரம் போன்றவர்கள் தத்துவம் பேசிக் கொண்டு தகிடுதத்தம் செய்யட்டும் என்பதற்காக அல்ல!

நள்ளிரவிலே புகுந்து நவரத்ன மாலையைக் களவாடிச் செல்பவன், பிடிபட்டு வழக்கு மன்றத்திலே நிற்கும்போது, எல்லாம் மாயை! என்பது இந்த உடைமைக்காரரின் உயரந்த இலட்சியம், அதை நம்பித்தான் மாலையை எடுத்துக் கொண்டேன், என்றா வாதாடுவது, ராஜா சிதம்பரம் வாதாடுகிறார், பெரியார் குடியாத்தத்தில் ஒரு தத்துவம் கண்டார், நான் அந்தத் தத்துவத்தின்படிதான் நடந்து கொள்கிறேன் என்று நாடு, எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் என்ற தைரியம் ஆவக்கு நிரம்ப இருக்கிறது. எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்வது போன்ற நிலையில் இருப்பது போலத்தான் நாடு காட்சி அளிக்கும், ஆனால் உண்மையை நாடு உணராமலிருக்கவில்லை.

எனக்குப் போட்டி யார் தெரியுமோ? அந்தப் பயல்கள்! கண்ணீர்த்துளி!! என்று ஒரு போடுபோட்டேன் - பிறகுதான் பெரியார் உண்மையை உணர்ந்தார் - என்று ராஜா பேசி மகிழக்கூடும் பெரியார், கண்ணீர் துளிகளிடம் கடும்கோபம் கொண்டிருக்கிறார், நாடு அறியும். ஆனால் அதற்காகவே, ராஜாவின் போக்கை அவர் மதிக்கிறார் என்று பொருள் கொள்வது அவரை அறியாதார் செயலாகும்!

பார்! பார்! மகா பெரிய மனுஷன் போல இருந்தான்! ஆசிரியர் பொன்னம்பலத்தை அல்லலுக்கு ஆளாக்கினபோது நான் ஒருவன் இருக்கிறேன் என்று கூடக் கவனம் வரவில்லை. இப்போது, கண்ணீர்த்துளி போட்டியிடவே கோயில் படிக்கட்டு ஏறி இறங்குவதுபோல, நம்மை நாடி வருகிறான், வரட்டும்! என்றுதான் பெரியார் கருதியிருக்க முடியுமே தவிர இதே வருகிறார் ஒரு புதிய தத்துவப் பேராசிரியர் என்று பாராட்டியா வரவேற்றிருப்பார்!

காமராஜரைப் பெரியார் ஆதரித்தார். அதனால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்று எந்த மதியிலி பொருள் கொள்ளச் சொன்னான்.

காமராஜ் - காமராஜ் சர்க்கார் - காங்கிரஸ் கட்சி - மூன்றும் ஒன்றுபோலத் தோன்றும், அரசியல் யூகமற்றவர்களுக்கு வேறு வேறல்லவா அவை!

காமராஜரை ஆதரித்தார் பெரியார் - உழைப்பால் உயர்ந்தவர் - கொள்கையில் பற்றுள்ளவர் - மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பவர் - மனுதர்மப் பாதுகாவலரின் திட்டத்தை ஒழித்தவர், என்பதால், காங்கிரஸ் தலைவர் என்பதற்காக அல்ல, காங்கிரஸ் தலைவராக இருந்த போதிலும் இவ்வளவு நற்பண்புகளுக்கு இருப்பிடமாகி, காட்சிக்கு எளியோனாய் இருப்பதுகண்டு.

காமராஜரை மட்டுமல்ல, அத்தகைய பண்புகள் கொண்ட யாரையும், அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் (திராவிட முன்னேற்றக் கழகம் தவிர) ஆதரிப்பார், பாராட்டுவார்.

இதை அவர் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாகவே நடைமுறையாக்கிக் கொண்டிருக்கிறார்.

கலப்பு மணம் செய்து கொண்டதற்காக டாக்டர் சுப்பராயனை இன்றும் பாராட்டுகிறார். ஆரிய இன உயர்வுக்குப் பாடுபடும் ஆச்சாரியாரையே பன்முறை பாராட்டியிருக்கிறார்.

காமராஜரைப் பாராட்டுவதென்பது, எல்லோரும் காங்கிரசில் மூழ்கிவிடுங்கள் என்று கூறுவதாகாது.
சிறுமலை வாழைப்பழம் நல்லது என்று கூறி விடுவதாலேயே, சிறுமலையில் உள்ள அத்தனையும், குப்பை கூளம், குளவி ஓணான், அத்தனையும் நல்லது என்றா பொருள் கொள்வது.

சென்ற கிழமைதானே பேசியிருக்கிறார், காங்கிரஸ் மந்திரி சபையில் நிதியமைச்சராக உள்ள கனம் சுப்பிரமணியத்தின் போக்கைக் கண்டித்து.

காமராஜரை ஆதரிப்பதுபோலவே, காமராஜ் சர்க்காரையும் பெரியார் ஆதரிப்பார், செயல் கண்டு, சீர்தூக்கிப் பார்த்து.

காமராஜ் சர்க்காரை மட்டுமல்ல, அருமையான காரியங்களைச் செய்த போது ஆச்சாரியார் சர்க்காரையும் ஆதரிக்கத்தான் செய்தார்.

இவைகளைக் கொண்டு பெரியார், காங்கிரசை ஆதரிக்கிறார் என்ற முடிவு கட்டுவது, பேதைமை! பெரும் பிழை!!

கடந்த பொதுத் தேர்தலின்போது, கம்யூனிஸ்டுகளைப் பெரியார் ஆதரித்தார் - நாடே கூறலாயிற்று பெரியார் கம்யூனிஸ்டாகி விட்டார் என்று! பித்தர் சிலர் அவர் திராவிடர் கழகத்தையே கலைத்துவிடப் போகிறார் ஏன் கூறினர். பிடித்து வைத்தால் பிள்ளையார் வழித்து எறிந்தால் சாணி ன்ற நிலையில் உள்ள சிலர், பெரியார், கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பது கண்டு, கம்யூனிஸ்டுக் கோலம் பூண்டு பூரித்தனர். இன்று என்ன நிலமை! இதேபோலத்தான், எதிர்காலத்தில் காங்கிரஸ் விஷயமாகவும்!!

பெரியார், திராவிட மக்களின் நலனைக் கருத்தில் கண்டு அவ்வப்போது கொள்கை வகுப்பார், திட்டம் தீட்டுவார், நாம் அவைகளை ஏற்று நடக்க வேண்டும் என்று டி.பி. வேதாசலமும் நீடாமங்கலம் ஆறுமுகமும் கூறுவதிலே பொருளும் உண்டு, பொருத்தமும் உண்டு. ராஜா சிதம்பரம், நான் பெரியார் காட்டிய குடியாத்தம் தத்துவத்தைப் பின் பற்றுகிறேன் என்று பேசுவதிலே, பொருள் இருக்கமுடியுமா, பொருத்தம்தான் உண்டா!

ஆனால் ராஜா சிதம்பரம் தத்துவம் பேசுகிறார்!

“இவைகளை எல்லாம்வி காங்கிரஸ்காரர் களின் பெரிய மானக்கேடான காரியம் என்னவென்றால் காங்கிரஸ் காரனல்லாதவராய் இருந்த காலத்தில் எவன், ஸ்தலஸ்தானங்களில் திருடினானோ, கொள்ளை அடித்தானோ, திருடினான், கொள்ளை அடித்தான், போர்ஜரி பண்ணினான், பொய்க் கணக்கு, பொய் பில்லு போட்டுப் பணம் சம்பாதித்தன், கண்ட்றாக்டில் கொலை பாதகமாய் நடந்து கொண்டான் என்று கூப்பாடு போட்டார்களோ அவனையே காங்கிரஸ் சார்பாய் காங்கிரஸ் மெம்பர்கள் நிறுத்துகிறார்கள் என்றால் காங்கிரசின் யோக்யதைக்கு வேறு எதை ஊதாரணமாகச் சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை.

பெரியாரின் கருத்துரை இது! ராஜா சிதம்பரனாரின் காங்கிரஸ் பிரவேசத்தைக் குறித்துக் கூறப்பட்டதல்ல, முனிசிபாலிடி, ஜில்லாபோர்டு போன்ற ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றக் காங்கிரஸ்காரர்கள் கையாளும் தேர்தல் தந்திரங்களைக் கண்டித்து முன்னம் பெரியார் கூறிய கருத்துரை இது. காங்கிரசில் சேருவோரும், சேர்ந்தால் பெரியரால் பாராட்டப்படுவோம் என்று தவறாகக் கருதுவோரும், இந்தப் போக்கைப் பெரியார் எவ்வளவு வன்மையாகக் கண்டித்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள உதவட்டும் என்பதற்காகவே இதனை எடுத்து காட்ட நேரிட்டது.

இரத்னச் சுருக்கமாகப் பெரியார் கூறிவிட்டார். இந்தச் செயல்பற்றி, போக்கு பற்றி மானக்கேடான காரியம்!

(திராவிடநாடு - 26.9.54)