அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தவறை உணர்ந்தால்

முன்பின் யோசனையின்றியோ அல்லது அறியாமையினாலோ அன்றிச் சுற்றுச் சார்பின் காரணத்தாபலோ ஒருவன் தான் செய்யும் காரியங்களில் தவறிவிடுவதென்பது இயற்கையே. ஆனால், செய்யப்பட்ட காரியம் தவறு என்று தன்னால் உணரப்பட்டாலோ அல்லது பிறரால் உணர்த்தப்பட்டாலோ, அத்தகைய தவறை ஒப்புக்கொள்வதே முறையும் மனிதத் தன்மையுமாகும். அதிலும் செய்யப்பட்ட தவறு ஒரு தனி நபரின் நலத்தை மட்டும் பாதிப்பதாயிருந்தால், பலரின் நலத்தைப் பாதிப்பதாயிருந்தால், அத்தகைய தவறை உணர்ந்த - அல்லது உணர்த்தப்பட்ட அந்த விநாடியிலேயே ஒப்புக் கொண்டாக வேண்டும். ஒப்புக் கொண்டதோடு மட்டும் நின்று விடாமல், அத்தவறு செய்ததற்காகக் கழுவாயுந் தேடவேண்டும்.

போர்முறையை எதிர்த்துக் காங்கிரஸ்காரரால் செய்யப்பட்ட ஆகஸ்ட் 8ந்தேதித் தீர்மானம் நாட்டு மக்களின் நலன்களைப் பாதிக்கக்கூடியதென்பதை நாம் பலமுறை எடுத்துக் கூறிவந்திருக் கிறோம். நாம் மட்டுமன்று, நாட்டு நலனில் அக்கரை கொண்ட பல அறிஞர்கள் அத்தீர்மானத்தைக் கண்டித்து மிருக்கின்றனர். அகில இந்திய முஸ்லீம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னா அவர்கள்கூட இத்தவறை எடுத்துக்காட்டித், தோழர் காந்தியார் தம்முடைய தவறை உணர்ந்து ஆகஸ்ட் தீர்மானத்தை வாபீஸ் வாங்கவேண்டுமென்று அறிவுரை கூறியுள்ளார். அதுமட்டுமன்று அத்தீர்மானம் செத்து மடிந்துவிட்டதென்பதையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அத்தீர்மானத்தின் பேரால் நாட்டு நலனைப் பாதிக்கக்கூடிய காரியங்களை இன்னும் செய்து கொண்டிருப்பது எத்துணை முறை கேடாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின், நாட்டிலே ஏற்பட்ட கலவரங்களும், பொருளழிவும், அமைதிக் குறைவுமே நாம் கூறுவதற்குப் போதிய சான்றுகளாகும்.

அதுவுமின்றி, அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம், உண்மையிலேயே நாட்டு மக்கள் அனைவருடையவும் நலனைக் குறித்ததல்லவென்பதையும் ஜனாப் ஜின்னா அவர்கள் நன்கு விளக்கியுள்ளார். அதாவது, காங்கிரஸ்காரர்கள் அத் தீர்மானத்தை இரண்டுவித நோக்கங்களோடு நிறைவேற்றியிருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். ஒன்று முஸ்லீம்களின் கோரிக்கையாகிய பாகிஸ்தான் திட்டத்தை ஒழிக்கக்கூடிய ஒரு தேசிய சர்க்கார் வேண்டுமென்பது. மற்றொன்று, பொதுஜன சட்டமறுப்பியக்கத்தின் வாயிலாகப் போர்முறைக்கு ஊறு உண்டாக்குவதென்பது. இவ்விரண்டில் முன்னையது முஸ்லீம்களை மிரட்டுவதும், பின்னையது பிரிட்டிஷாரைப் பயமுறுத்துவதாகுமென்பதை லீக் தலைவர் எடுத்துக்காட்டுவதோடு, இவ்விரண்டிலும் காங்கிரஸ் காரர்கள் தோற்றுவிட்டனர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். எனவேதான், அத்தீர்மானம் வாபீஸ் பெற்றாக வேண்டுமென்று ஜனாப் ஜின்னா அவர்கள் கூறுகின்றார்; நாமும் கூறுகின்றோம்.

அதுவுமின்றி, அத்தீர்மானத்தை வாபீஸ் பெற்றுவிட்டால், அத்தீர்மானத்தின் பேரால் சிறைப்பட்ட தோழர் காந்தியாரையும் மற்றும் காங்கிரஸ்காரர்களையும் விடுதலை செய்வதற்கு பிரிட்டிஷ் சர்க்கார் வேறு எந்தக் காரணத்தைக் கூறியும் தடை சொல்ல மாட்டார்கள் என்றும், விடுதலை பெற்றபின் இந்தியர்கள் அனை வரும் ஒருமித்து நின்று ஏதாவது ஒரு முடிவுக்கு வரலாமென்றும் ஜனாப் ஜின்னா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்சிக்குத் தலைவராகவுள்ள ஒருவரின் நடுநிலைமை யான இவ் அறவுரைகளைப் புறக்கணிப்பதும், தாங்கள் செய்த தவறை உணராமலும், உணர விருப்பமில்லாமல் இருப்பதும் நாட்டு மக்களின் நலனில் அக்கரை கொண்டவர்களின் செயலாகாதென்றே கூறுவோம்.

நாட்டு மக்களின் நலன் ஒன்றே எங்கள் கட்சியின் நோக்கம் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ்காரர்கள், சர்க்கார் வகுக்கும் திட்டங்களை எதிர்ப்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை. தோழர் இராசகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சமயம் வாய்க்கும்போது சர்க்கார் பதவிகளுக்குப் போட்டி போடுவதிலும்; சர்க்காரிடம் சரணாகதி அடைவதிலும் சளைப்பதில்லை. இத்தகையவர்களால் செய்யப்படும் நாட்டு நலன் குறித்த சட்டமறுப்பியக்கங்களோ மற்ற எந்த விதமான கிளர்ச்சிகளோ ஒரு போதும் வெற்றியடைய மாட்டா வென்பதையே ஜனாப் ஜின்னா எடுத்துக்காட்டி, ஆகஸ்ட் தீர்மானத்தை வாபஸ் பெறுக என்று வற்புறுத்துகிறார்.

குறிப்பிட்ட ஓர் இனத்தின் நலனை மட்டுமே மனதில் வைத்து, அந்த இனத்தின் பேரால் அரசியலை அமைத்து, மற்ற இனங்களை அடக்கி ஆளும் எண்ணத்தோடு வகுக்கப்படும் திட்டங்களை அடிப்படையாகக் கொள்வதும், வெளிக்கு, ‘நாட்டிலுள்ள எல்லா இனங்களுக்குமே நாங்கள் சுதந்தரம் கேட்கிறோம்’ என்று சொல்லிக்கொள்வதுமாகிய பசப்புரைகளை நம்பும் நிலை இன்று பெரும்பான்மை மக்களிடம் இல்லை என்பதை இன்னும் காங்கிரஸ்காரர்கள் உணரவில்லை யென்றால், அதற்கு அவர்களின் தந்நலமே காரணமாகும். இத்தந்நலக் கொள்கை காங்கிரஸ்காரர் களிடம் நீண்ட காலமாகக் குடிகொண்டிருப்பதை அறிந்தே, முஸ்லீம்கள் பாகிஸ்தான் வேண்டுமென்றும், திராவிடர்கள் திராவிட நாட்டுப் பிரிவினை வேண்டுமென்றும் கூறி அவற்றிற்கான கிளர்ச்சிகளைச் செய்து வருகின்றனர். சமுதாயம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் சமத்துவ மனப்பான்மை காங்கிரசாரிடம் இருந்திருக்குமானால், இத்தகைய பிளவுகள் நாட்டிலே உண்டாகியிருக்க இடமேற்பட்டிருக்காது. எனவேதான் இந்திய மக்கள் அனைவருடையவும் ஒன்றுபட்ட முடிவுக்கு வருவதற்குக் காந்தியாரும் மற்றும் காங்கிரஸ்காரர்களும் தாங்கள் செய்யும் தவறை உணர்ந்தால் இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு இனத்தின் நலன்களிலும் தலையிட்டு அவற்றிற்கு முட்டுக்கட்டை போடாமல் இருப்பதற்கு வழி ஏற்படும் என்று கூறுகின்றோம்.

3.10.1943