அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தீக்கண்ணன்! திவ்யரூபன்!
“மன்மதன்! எவ்வளவு அபூர்வமான கற்பனை! அழகுக்கு, ஒரு தெய்வம். நமது முன்னோர்கள் தான் எவ்வளவு கற்பனா சக்தியுள்ளவர்கள் - மக்களை விடத் தேவர்கள், தேஜஸ் உள்ளவர்கள், என்று கூறியதோடு இல்லை, தேவர்களிலேயும், ஒரு பேரழகனைச் சிருஷ்டித்தனர். அவன் அழகுத் தெய்வம் - காதல் தெய்வம் - இன்பத்தின் தூதுவன், எழிகலுக்கு எடுத்துக்காட்டு. எவ்வளவு, வயமான மனம் இருந்தால், மன்மதன் போன்றதோர் கற்பனையைச் செய்திருக்க முடியும் நமது ஆன்றோர்.”

பழமைக்குப் புது மெருகிடும் பணியினைத் தமதாக்கிக்கொண்ட போக்கினர், இதுபோல் கூறுவர். குளத்தங்கரைக் குப்பன், மன்மதன், யமன், வாயு, வருணன், அக்னி, என்பன போன்ற தெய்வங்கள், நிஜரூபத்தில் உள்ளனர்., என்று கூறுவான். அத்தகையோர் அப்பாவிகள்! ஆனால் இந்த ‘மேதைகள்’, அப்பாவியுமாகாமல், அறிஞருமாகாகமல், அந்தரத்திலே தொகுங்குபவர்கள்!!

மன்மதன், என்று நிஜரூபத்திலே ஒரு தெய்வம், உண்டு; அவன், தேவலோகத்தில் இருந்துகொண்டு, தேவர் மூவர்யாவராயினும் சரி, மலர்க்கணையைக் கரும்புவில்லிலே பூட்டித்தொடுத்துக், காதலைக் கிளவிறிடும் வேலையைக் களிப்புடன் செய்து கொண்டிருக்கிறான், என்று கூறுவது தவறு. - என்று தெரிவிப்பர்.

ஆனால், அவ்வளவோடு நிற்பரோ! இல்லை! உடனே, ஒரு மூலைபாய்வர். மன்மதன், என்பது நமது முன்னோர்களின் வளமான மனதுக்கும், கற்பனா சக்திக்கும் ஓர் சான்று. மன்மதன் என்றோர் தேவன் இல்லை என்று கூறுவிடலாம் - ஆனால் அந்த அபூர்வமான கற்பனா சக்தியை நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது - கூடாது ?- அங்ஙனம் செய்தால் அடாது - என்று சிலவபல‘து’ போட்டு, முடிப்பர்! ஏன்? அவர்களிலே பலருக்கு, இவ்விதமான கற்பனா சக்தி, உலகிலேயே, வேறு யாருக்கும் ஏற்பட்டதில்லை, இங்கு மட்டுமேதான் உண்டான தனிப் பண்பு அது, என்பது எண்ணம். மன்மதனைப் பற்றி மட்டுமல்ல, மற்றத் தேவர்கள், அவர்களைப் பற்றித் தொடுக்கப்பட்டுள்ள கதைகள், அவகள் உலவுவதாகக் கூறப்படும் “லோகங்கள்”, இவை போன்றவைகளை, இங்கு மட்டுமே, ஆன்றோர், சித்தரித்தனர், வெளி உலகிலே, யாருக்கம் இதுபோல எண்ணம் உண்டானதே இல்லை, என்று கூறுகின்றனர்.

இயற்கையின் சக்தியிலே, அழிவுச் சக்திகளை, கோரரூபம் கொண்ட தேவர்களகவும், அழகு சக்தியை, வசீகரரூபம் கொண்ட தேவர்களாகவும், சிருஷ்டிக்கும், போக்கு, எல்லா நாட்டிலும் இருந்தது முன்னோர்களுக்கு.

எந்த நாட்டிலும் சரி, பலலோகங்கள், பலதேவதைகள், அவர்களைப் பற்றிப் பலப்பல கதைகள், கட்டுவதிலேதான், கற்பனைத் திறமை பாய்ந்தது. அது, ஏதோ, பிரமாதமான திறமை என்றும், அந்தத் திறமையும், இங்கே மட்டுமே இருந்ததென்றும், கூறிப் பூரிப்பர். வெளிநாடுகளிலே ஆன்றோர் கட்டிவிட்ட கற்பனைத் தேவர்களைப் பற்றி அறிந்தால், இந்தப் போக்கு எவ்வளவு தவறு என்பது விளங்கிவிடும்.

மன்மதனின் அழகுபற்றி, நாம் எவ்வளவு பூரிக்கிறோமா, கவிஞர்கள் எவ்வளவு வணர்க்கிறார்களோ, காதற்கதை தீட்டுவோர் எப்படி எப்படி எல்லாம் தீட்டடிக் காட்டுகிறார்களோ, அதிலே, ஒரு இம்மியும் குறையாது அளவுக்கு, அயர்லாந்திலே ஈலாதன், அந்த நாட்டு ஆன்றோர், காற்பனையால் சிருஷ்டித்த அழகுத்தேவன் - ஆஜானபாகு - அவனுடைய தங்கநிறக்கேசம் தோளில் புரண்டு கொண்டிருந்தது, தங்கக் கவசம் அணிந்துகொண்டு- மின்னும் பொன்னாலான ஐந்துவடம் கொண்ட சஙங்கிலியைக் கழுத்தில் அணிந்து கொண்டு, வெள்ளியால் செய்யப்பட்ட இரண்டு ஈட்டிகளும், தங்கப் பிடிபோட்ட கட்கமும் எடுத்துக் கொண்டு உலவும் திவ்ய புருஷன் - என்று அயர்லாந்து நாட்டுப்புராணிகன், அந்தநாளிலே புனைந்திருக்கிறான். இங்காவது, மன்மதனோடு விட்டுவைத்தார்கள் - அங்கு, ஈலா தான் எனும் அயர்லாந்து மன்மதனுக்கு, பிரஸ் என்றோர் மகனையும் சிருஷ்டித்து, அவனுமோர் ஆணழகன் என்று வர்ணித்துள்ளனர். கற்பனைத் திறமையிலோ, காவியரசனையிலோ, வசீகரத்தைப் பற்றிய வர்ணனையிலோ, அந்த நாட்டுப் புராணிகர்கள், ஈலாதான், பிரஸ், தேவர்ளைப் பற்றிக் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, எந்த வகையிலும், இங்கே, ஆன்றோர் வர்ணித்தைவிட ‘மட்டம்’ என்று தள்ளிவிட முடியாது. அவர்களும், அற்புதமாகத் தான், புளுகி வைத்திருக்கிறார்கள்! பொய்யுரையாக இருப்பினும், எமது முன்னோர், அதைப் பொன்னுரையாக்கியது போல, வேறு எங்குண்டு? என்று இறும்பூதெய்தியவரென நின்று கேட்கும், இலக்கிய உருவில் புராணப் பிரசாரம் புரியும் நண்பர்கள் பொய்யுரையை மெய்யுரை என்று நம்பும் ஏமாளிகளைவிட, ஆபத்தானவர்கள்!!

நம்மவர்கள், முக்கண்ணனைச் சிருஷ்டித்தனர் - கற்பனையில். இதிலே, புதைந்துள்ள கருத்து, தெரியுமோ, என்று கேட்கின்றனர், பொய்யுரைக்குள் பொன்னுரை காண்போர் - என்ன ஐயனே! என்று கேட்டிடின், கூறுகின்றனர், “கேளுமய்யா பகுத்தறிவு வாதியே! முக்கண்ணன், என்று கூறியது கற்பனை தான். ஆனால் கருத்து இருக்கிறது, அதிலே இரு கண், எவருக்கும் உள்ளதுபோல். ஆனால்இறைவனுக்கு, மூன்று கண்ணும் உண்டு. அந்தக் கண்ணுக்கு அழிக்கும் சக்தி உண்டு!அதைத் திறந்தால், தீ! தீயனயாவையும் தீய்ந்து போகச் செய்யும் தீயைக் கக்கும் கண், அந்த மூன்றாம் கண்! அது மூடியே இருக்கும். எப்போது, அக்ரமம், அநீதி, கொடுமை, தோன்றுகிறதோ., அப்போது, மூன்றாவது கண்ணைத் திறப்பார் - திறந்தால் - புராணிகர் கூறுவது கேட்டிருப்பாய் - திரியும் தகனமாகும்! இது போலத், தீயனவற்றைத் தீய்க்கும் திருவிழியும் உண்டு, அது சதாதிறந்திராது, திறந்தால் தீயன தீய்ந்தே போகும், என்ற உண்மையைக் காட்டவே இந்தக் கற்பனை. இது கருத்து நிரம்பியதன்றோ! வேறு எங்கேனும், எவரேனும், இது போன்ற ஆழ்ந்த கருத்தைக் கூறிடும் கற்பனையைக் கூறிடக் கேட்ட துண்டோ?” என் கடுங்கோபத்துடன், பேசுவர். அவர்கள் அறிவரோ இல்லையோ, மக்கள் நிச்சயமாக அறியமாட்டார்கள், இந்த அபூர்வமான அழிவுக்கண் கொண்ட தேவன், இங்குமட்டுந் தான், இருப்பதாகப் புராணம் இருக்கிறது, என்று எண்ணிக் கொண்டிருப்பர். ‘மேதை’ எழுத்தாளர்களும், மேதினியில் இது போல்க கற்பனை உரைத்தவர் வேறு பலரும் உண்டு என்பதைக் கூறுவதில்லை. திரிபுர மெரித்திடும் திருக்கண் கொண்டதேவன், வேறு இடத்துப் புராணத்திலும் உண்டு. இங்கு மட்டுமே உள்ள அபூர்வமான, விலைமதிக்கொணாத கற்பனையல்ல அது.

பேலர் என்றோர் தேவன்! அயர்லாந்து நாட்டக் கற்பனை. இந்தத் தேவனுக்குக் கண்கள் இரண்டுண்டு, அதிலே ஒன்று மூடியே கிடக்கும் - திறந்தால் தீர்ந்தது, எதிர்ப்பட்டதெல்லாம் தீய்ந்துபோகும். அந்தக் கண்ணுக்கு, அழிக்கும் சக்தி உண்டு. தேவர்களுக்கு எப்போதேனும் ஆபத்து நேரிட்டால், ‘அசுர’க் கூட்டம் எதிர்த்தால்,அப்போது இந்தப்பேலர் என்ற தேவனை, அழைத்துச் சென்று, எதிரிகளின் முன்நிறுத்தி, மூடி இருக்கும் கண்ணின் ‘இமையை’த் தூக்கிவிடுவார்கள், - அவ்வளவுதான் - அந்தப் பார்வை பட்டரத்திரத்தில், எதிரிக் கும்பல், பஸ்மீகரமாகும்!! இப்படி ஒரு கற்பனை, அங்கு! அதுவும் அங்கு கடவுள்! இது, முக்கண்ணன், திரிபுரதகனம் போன்ற கதைகளை விட மட்டமா! அல்லது, இதனை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த காலம் வரையிலே, தீக்கண்ணனுக்கு, அயர்லாந்து மக்கள், திருவிழா நடத்தாமலோ, திருப்பல்லாண்டு பாடாமலோ இருந்தனதோ!

முக்கண்ணில் ஒன்றுக்கு மட்டும், தீயை உமிழும் சக்தி வரக் காரணம் என்ன, என்று இங்கு கூறுவதில்லை. தீக்கண் தேவனுக்கு, இருவிழியில் ஒரு விழி, ஏன், அனல் கக்கும் ஆற்றல் பெற்றது, என்பதற்குக்கூட, அயர்லாந்து மக்கள், கதை கூறியிருக்கிறார்கள்.

பேலர், என்ற தேவன், அவனுடைய தகப்பனாரின் வீட்டிலே, சில மந்திரவாதிகள், மாந்தரிக விஷம் தயாரித்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் அறியாவண்ணம், பலகணி வழியாக அகனைப் பார்த்தானாம். கொப்பரையிலே கொதித்துக் கொண்டிருந்த கொடிய விஷம், புகையைக் கிளப்பிற்று - அந்தப் புகை, இவனுடைய கண்களிலே ஒரு கண்ணுக்குள்ளே, நுழைந்து விட்டது. உடனே, அந்தக் கண்தீக்கண்ணாகிவிட்டது. இது தெரிந்த தேவர்கள், கேட்டுக்கொண்டதற்கிணங்கித் தீக்கண்ணைத் திறவாமல், பேலர், வாழலானான் - என்று கதை இருக்கிறது.

எனவே, பொய்யுரைக்குள் பொன்னுரை தேடிக் காணும் நண்பர்கள், கருதுவது போலவும், கூறுவது போலவும் இங்கு மட்டுமே உண்டு இத்தகு பொய்யுரைகள், என்று எண்ணிவிட வேண்டாம். கற்பனைகள், எங்கும் உலவின! திருமூர்த்தி, திரிசூலி, தீக்கண்ணன், திவ்ய ரூபன், - எங்கும் கோயில்கள் கட்டினர் - கொட்டு முழக்குடன் திருவிழா நடத்தினர் - அவை, பொய்யுரைகள் என்று தெளிவு பிறக்கும்வரை, பூஜைகள் நடத்திக் கொண்டுதான் வந்தனர். அதன் பலனாக, பூஜாரிக் கூட்டம் கிளப்பிப், பாமரரை ஆட்டிப் படைத்துக் கொண்டுதான் இருந்தது. அந்தத் தேவர்களைப் பற்றி, குறைகூறுவோர், தண்டிக்கப்பட்டனர். சந்தேகித்தோர், நிந்திக்கப்பட்டனர். இப்படி எல்லாம் இருக்க முடியுமா, தீக்கண்ணாவது தேவனுக்காவது என்று கேள்வி கேட்டவர்கள், நாத்திகர் என்று தூற்றப்பட்டனர். நாடாள்வோரும் ஏடு தூக்கிகளும், பூஜாரிகளையே ஆதரித்தனர் - புத்தறிவைத் தடுத்தனர். ஆனால், புத்தறிவினர், ‘கொடுமைகளைச் சகித்துக் கொண்டதால், தமது கொள்கைகளைப் பரப்பி, படமையில் ஆழ்ந்திருந்த மக்களுக்கும் மதி பிறக்கும்படி அறிவைப் பரப்பியதால், இன்று, அங்கெல்லாம், தீக்கண்ணன்; திவ்யரூபன், என்பன போன்ற தேவர்களும் கிடையாது, அவர்களைக் குறித்துத் தீட்டப்பட்ட பொய்யுரைகளுக்கு மதிப்பறிப்பாரும் கிடையாது.

திராவிட நாடு 9-11-1947