அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தீர்ப்பு!

“செம்பொன்னும் ஓடும்” ஒப்பு நோக்கும் சீலர் என்று எண்ணி னோம் இவனை; இவனோ போகாமே யோகம் என்று வாழ்ந்து வந்தான். ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு அறிந்த தவசி என்று இவனை எண்ணினோம், இவனோ கல்விக்கும் கலவிக் கும் உள்ள தொடர்பைக் காட்டப்பிறந்தவன் போலானான். காமக் கள் ஊறிய அவன் வாயினின்றும் கடவுள் அருள்மொழி வெளி வருகிறதென்று நம்பினோமே! மங்கையரின் மலரடி வருடிய இவன் கரங்களிலே, நீறுபெற்றுப்பூசி, பேறு கிடைக்குமென்று எண்ணி னோம். கன்னிகளுடன் பள்ளியறையிலே இரவைப் பகலாக்கிக் கிடந்ததால் இவனது கருவிழி மேலே செல்ல, நாம், இவர் இவ் உலகை மறந்திடும் உத்தமர், என்று நினைத்தோம். பரமாத்மாவைப் பரமாத்மா என்று துதித்தோம்! கூத்திக் கள்ளனைக் குருதேவா என்று கும்பிட்டோம். வீணனுக்கு விலாநோக உழைத்தோம், பொருளைக்கொட்டி அழுதோம் இவன் போகத்துக்கு. ஆற்றோரத்திலே கொக்கு காத்திருந்து மீனைக் கொத்துவதுபோல, இவன், மடத்திலே பீடத்திலே மஞ்சள் உடையணிந்து, அமர்ந்திருந்து மக்களை ஏய்த்து வந்தான். ஒழிந்தான்! உலகு, இவன் சூது உணர்ந்தது, பீடத்திலிருந்து விரட்டப்பட்டான்! இனி, பழியும் பாவமும் நீங்கி, மடம் பரிசுத்தமாகும்.” காவி உடையுடன் ஊரை ஏய்த்துக் காமவாடை காததூரம் அடிக்கக் கோலாகலமாக வாழ்ந்து, பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுக் காரி உமிழப்பட்டு, கோர்ட்டாரால் பதவியிலிருந்து விரட்டப்பட்ட மடத்தின் அதிபதியின் கொட்டம் அடங்கிற்றே என்று எண்ணி பக்தகோடிகள் பூரித்தன.

தீர்ப்பளித்த நீதிபதி, “இதுபோல வழக்குகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மதத்தின் தலைவர்கள் என்று சிலரை பூஜிக்கத் தொடங்குவதும், அவர்களுக்காக மடம் கட்டுவதும், ஏராளமான பொருள் தருவதும், பிறகு, அந்தச் சடங்கள் மைனர் வாழ்க்கையை ஆரம்பிப்பதும், ஊரிலே நாறுவதும், பிறகு கூக்குரல் கிளம்புவது, வழக்குத்தொடருவது, மடத்திலிருந்து அவனைத் துரத்திவிட்டு வேறு ஆசாமியைப் பிடிப்பது என்ற முறையிலேயே காரியம் நடக்கிறது. இந்தத் தொல்லை ஒழியுங்காலம் எப்போது வருமோ தெரியவில்லையே” என்று கூறுகிறார், இதுபோல வழக்குகளைப் பார்த்த அலுப்பால்.

புதிதாக அமர்த்தப்பட்ட, மடாதிபதியோ, “சர்வ ஜாக்ரதையாக நடக்க வேண்டும். அவன் சிக்கிக்கொண்டது போலச்சிக்கி நாம் சீரழியக்கூடாது. மடத்து ஆட்களைக் கொஞ்சம் தட்டிக் கொடுத்து நடக்க வேண்டும், இல்லையானால் வெளியே ஏதேனும் உளறி விடுவார்கள்” என்று எண்ணி, பூனைபோல் நடக்க ஆரம்பிக்கிறான்.

பழைய மடாதிபதி, பெருமூச்சுடன் கலந்த சர்வேஸ்வராவைக் கூறிக்கொண்டு, “துஷ்டப்பயல்கள், துரோகம் செய்தார்கள்” என்று சொல்லி சோகமும் கோபமும் கொதிக்க, வாழுகிறான்.

இதுபோல விரட்டப்பட்டவன் விசாரமடைவதும், புதிதாக வந்தவன் சுற்றுமுற்றும் பார்த்து நடப்பதும், பக்தர்கள், ஒரு பீடை ஒழிந்தது என்று ஆறுதலடைவதுமாக, நம் நாட்டிலே, அடிக்கடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

சின்னாட்களுக்கு முன்பு வடநாட்டிலே ஒரு “மகந்து” - அதாவது, சுமார் 12 இலட்ச ரூபாய் சொத்துள்ள, மடத்தின் அதிபதி - நீறுபூசுவதை விட்டு நீள்விழியாளுடன் நெளிந்து கொண்டும், தோடுடைய செவியனைப்பாடும் வாயால், துடியிடையாளைத் தோத்தரித்துக்கொண்டும், குடித்துக்கூத்தாடியும் கிடந்தான் என்ற குற்றஞ் சாட்டப்பட்டு, பன்னெடு நாட்கள் கோர்ட்டிலே வழக்கு நடைபெற்று, கடைசியில், அந்த மகந்து சடாமுடி மைனராகவே வாழ்க்கை நடத்திவந்தார் என்பது நிரூபிக்கப்பட்டு, “மகந்து” வேலையிலிருந்து நீக்கப்பட்டார் என்றும், வேறு ஒருவர் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டு, கண்காணிப்புக்காக ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டதென்றும், செய்தி, பத்திரிகைகளில் வெளிவந்தது. இதுபோல், பல வழக்குகள் அடிக்கடி கிளம்புகின்றன. பல புகார்கள் உலவுவதுண்டு. புகார் முற்றி வழக்கு நடப்பதும், வழக்கு முடிந்து வேறு ஆள் அமருவதுமாகக், காரியம் நடைபெற்று வருகிறதே யல்லாமல், இந்த வழக்கம் அழிந்தொழிந்தது என்று கூறும் நிலை ஏற்படவில்லை. ஏற்படாது என்பதே நமது திடமான அபிப்பிராயம். சில மட அதிபர்கள் மறைதிறையுடன் நடக்கக்கூடும், சிலர் வெளிப்படையாகவே, வெட்கத்தை விரட்டிவிட்டு, பலருக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டுத் தமது குதூகல வாழ்வைக் குறைவர நடத்திக்கொண்டிருக்க முடிகிறது. ஒரு தமிழ்ப் பண்ணை, இரண்டோர் ஸ்தாபனங்களுக்கு நன்கொடை நல்குவது, சிலருக்கு வித்வான் என்றும், ஆதீன அன்பரென்றும், பட்டம் தருவது, முதலான சிலப்பலச் செயல்புரிந்து, செந்தமிழையும் சிவநெறியையும், பக்தியையும் முக்தி மார்க்கத்தையும் பரப்புதற்கே, முற்றுந்துறந்த இம்முனிபுங்கவர் தமது மடத்துப் பொருளைச் செலவிடுகிறார் என்ற பிரசாரம் பரவுமாறுசெய்து சில ஸ்தாபனங்கள் “காயகல்பம்” சாப்பிட்டுவிட்டோம் இனி நமது அமைப்பு அழியாது என்று கருதிடக்கூடும். “வெண்ணிறப் பட்டுத்திச் சந்தனம் மேனி எல்லாம் பூசிக், கண்கவர் பூஷணங்கள் அணிந்தே கட்டிலறை நோக்கி” இந்தச் சொகுசுக்காரர்கள் நித்தநித்தம் நடப்பதும், அதற்கு, தோடி ஆலாபனமும் காம்போதி கிருதியும் நாயனத்திலே கிளம்புவதும், உள்ளே சென்றபிறகு, நளினிகள் நடையழகையும் பின்னர் இடை யழகையும் காட்டுவதும், இவர், தமது கொடையழகை அவர்களுக்குக் காட்டுவதும், அதன் விளைவாக, டாக்டருக்கு, சிவநேசச் செல்வர், தமது “படை” அழகைக்காட்டுவதும், அவர் மருந்திடுவதுமாக, நடைபெறும் லீலைகள் அடியோடு மத ஸ்தாபனங்களை விட்டு ஒழியுமா என்று கேட்டால், ஒழியாது என்று கூறுவோம். கொட்டாத தேளும் குலைக்காத குக்கலும், உதைக்காத கர்த்தபமும் உறுமிடாத சிறுத்தையும், எங்கு காணமுடியும்! ஒரு சாதாரண, இந்திரியங்களின் அமைப்பும் இயல்பும் கெடாத ஒருவரை கோட்டைபோல் சுற்றுச் சுவர் கட்டியதும், கதிரவனின் கோபத்தை மாற்றிடும் குளிர் சோலையும், முல்லையும் மல்லியும், ரோஜாவும் பிறவும் குலுங்கி நறுமணத்தை நல்கிடும் நந்தவனமும், அதன் நடுவே ஒரு வசந்த மண்டபமும், அதையடுத்து சிங்கார நீரோடையும், கொலுமண்டபமும் கூடமும் மாடமும் அமைந்த மாளிகைக்குள் இருந்திடச்செய்து, எடுபிடிகள் சுற்றி நிற்கவும் ஏடு ஏந்திகள் புகழ்ந்து பாடவும், கெடுமதியினர் காணிக்கை கொட்டவும் வாழ வழி செய்து கொடுத்து, உயர்தர உணவும், மிருதுவான ஆடையும், தங்கக் குண்டலமும் தங்கப் பாதக் குறடும் நீரிலே வாசனையூட்டியும், நெருப்பிலே சந்தனத்தூள் கொட்டியும் காட்டி, ஆபரணங்களைப் பூட்டி, அவர்முன் இருகை நீட்டி, “சன்னிதானம் வாழ்க! சபேசன் மைந்தா வாழ்க! எமது இறைவா வாழ்க! என்று தொழுதிடச் செய்தால், உழைக்காது அலுக்காதுள்ள அந்தப் புருஷர், இச்சையால் உந்தப்பட்டு, இயற்கைக்கு அடங்கி இமயவனை வேண்டுவதுபோதும் எவளாவதொரு “உமையவளை”த் தொழுதாக வேண்டும், என்று ஆரம்பிக்காதிருக்க முடியுமா! முற்றுந்துறந்த முனிவரானாலும் கற்றைக்குழலாளின் கழலடி தொழுததாகத்தானே கதைகளும் கூறுகின்றன. நமது நாட்டு மகந்துகள், மட அதிபர்கள், ஆஸ்ரமவாசிகள், ரிஷிகள், யோகிகள், ஆண்டவர்கள், சாமிகள், எதைத் துறந்தார்கள்? ஓடெடுத்து உலவுகின்றனரா? காடு அடுத்துக் கடுந்தவம் புரிகின்றனரா? பாடுபடும் மக்களுக்கு உதவும், பரோபகாரிகளா? எதைத்துறந்தார்கள்? எதை அவர்கள் துறக்க முடியும்? தேன்குடத்தை எதிரேவைத்துவிட்டு, நாக்கை அறுத்து விடுவதா! பாற்குடத்தை பக்கத்திலே வைத்துவிட்டுப், பூனை குடிக்காதிருக்க மந்திர உச்சாடனம் செய்வதா? நடக்கக்கூடிய காரியமா? நாம் கேட்கிறோம், கடவுட் திருப்பணி புரிய காணிகள் விடுவானேன், விவேகபோதனை புரிய வேலிகள் ஆயிரம் எதற்கு, துறவுக்கோலத்துக்குப் போகப் பொருள்கள் தருவது முறையா, ஏன், இந்த “மகான்களை” ஊரைச்சுற்று, உண்டி கிடைக்குமிடத்திலே புசி, நீரோடை கண்டால் குளி, நிழலிலேபடு, நிகண்டுகளை ஓது, உபதேசம் செய், என்று கூறிடக்கூடாது! இதுபோன்ற உண்மைத் துறவு வாழ்க்கை, பல்லக்கும் பரிவாரமும், பட்டமும் படாடோ பமும் இல்லாத வாழ்க்கையிலே, பாடுபட்டுப் பிழைக்கும் வாழ்க்கை யிலே, இந்த ஆசாமிகளைப் புகுத்தினால், இன்று பாழாகும் பலகோடி ரூபாய் மக்களுக்குப் பயன்படும், இன்று கற்பு அழிவதும் கரு சிதைவதுமாயுள்ள கொடுமை ஒழியும், கோர்ட்டுகளிலே வழக்கு குறையும். மதத்தின் பெயர் கூறி வாழும் மதோன்மத்தர்கள் ஒழிவர்.

“வடநாட்டு மகந்து தவறு செய்தார், எனவே அவரை நீக்கி விட்டோம், வேறு ஒருவர் அமர்த்தப்படுவார்” என்று கோர்ட்டார் தீர்ப்பளித்தனர். நமது தீர்ப்பு, இதுபோன்றதன்று. மக்கள் மன்றத்திலே, இந்த மதமுதலாளிகளின் வழக்கு விசாரிக்கப்படுமானால், ஒரே ஒரு தீர்ப்பு - உன்னதமான தீர்ப்பு - உலகை உய்விக்கும் தீர்ப்பு - ஏழைகளின் பணத்தையும் உழைப்பையும் எவரும் பறித்திடாத முறை ஏற்படச்செய்யும் தீர்ப்பு - ஒழிக இந்த மதஸ்தாபனங்கள்! விரட்டுக இந்த வீணர்களை! மடத்துப் பொருளை மக்களுக்காக்குக! உண்டு கொழுத்து ஓங்காரக் கூச்சலிடும் மாமிசமலைகளை, விரட்டுக வெளியே!! என்ற தீர்ப்புதான் கிடைக்கும்.

ஆம்! அந்த நாள் வரத்தான் போகிறது, ஆஸ்ரமங்களிலிருந்தும், பர்ணசாலைகளிலிருந்தும், மடங்களிலிருந்தும் மந்திரங்களிலிருந்தும் இந்த மதோன்மத்தர்கள் விரட்டப்படும், நாள்!!

14.11.1943