அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தீயிட்ட திருவிளையாடல்!
(நக்கீரன்)

மதுரைக்குச் சம்பந்தர் கூட்டம் வந்த செய்தியைச் சமணர்களால் அறிந்த பாண்டியன், “அவர்கள் யார்? ஏன் இங்கு வந்தார்கள்?” என்று சமணர்களைக் கேட்டதாகவும், அதற்கவர்கள், “ஒரு பார்ப்பனச்சிறுவன் - சீர்காழியிற் பிறந்தவனாம் - சூலபாணியின் அருள்பெற்றவனாம் - எங்களை வாதில் வெல்லப்போகிறானாம்” என்று சொன்னதாகவும், அதுகேட்ட அரசன், ‘இதற்கு என்செய்வது’ என்று சமணர்களைக் கேட்டதாகவும், சமணர்கள், “அச்சிறுவனை வலிந்து துரத்துதல் கூடாது; அவன் உள்ள மடத்தில் மந்திரத்தால் தீயிட்டால், அவன் தானே ஓடிவிடுவான்” என்று சொன்னதாகவும், அரசனும் அதற்கு உடன்பட்டதாகவும் சொல்லப்படும் ஒரு பகுதி சம்பந்தர் வரலாற்றில் காணப்படுகிறது.

இந்நிகழ்ச்சி, சிறிதளவு அறிவுடையாராலும் எள்ளி நகையாடப்பட்டுத் தள்ளப்படுமேயன்றி, உண்மையென ஒப்புக்கொள்ளப்படமாட்டாது. அதிலும் இங்குப் பேசப்படும் அரசன், சமணர்களின் இம்முடிவுக்கு ஒப்புக்கொண்டே , மந்திரத்தீ மூட்ட உடன்பட்டான் என்பது தினைத்துணையும் நம்பமுடியாத ஒரு செய்தியாகும். எப்படியென்றால், இங்குப் பேசப்படும் அரசன், முன்னர்ச் சைவ சமயத்தைச் சார்ந்திருந்தவனென்றும், சமணர்கள், தங்கள் சமய உண்மைகளையும், சைவ சமயப்பொய்ம்மைகளையும் அரசனுக்கு விளக்கிக்கூற, அவ்விளக்கத்தால் தெளிவுபெற்ற அரசன், பின்னர்ச் சைவத்தைக் கைவிட்டுச் சமணத்தை மேற்கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சமயத்தைப் ‘பொய்’ என்று கைவிட்டு இன்னொரு சமயத்தை ‘மெய்’ என்று ஒப்புக்கொண்டு, ஒப்புக்கொண்ட அச்சமயவழி நிற்கும் ஒருவன், அதிலும், அச்சமயத்தை ஒப்புக் கொள்ளும்படி செய்த சமயாசிரியர்கள் (சமணர்கள்) தன்னுடன் இருக்கும்போது, சம்பந்தரின் மடத்திற்குத் தீயிடுவதே முறை என்ற முட்டாள்தனமான முடிவை ஒருபோதும் ஒப்புக்கொண்டிருக்கவேமாட்டான். ஒன்றைப் பொய் என்றும் இன்னொன்றை மெய் என்றும் உணர்ந்த ஒருவன், அதிலும் சமயங்கள் பற்றிய மெய் பொய்களை அந்தந்தச் சமய நூல்களையும் சமய ஆசிரியர்களையும் துணையாகக் கொண்டு ஆராய்ந்து உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்த ஒருவன், ‘அதைவிட இது மேல்’ என்ற நம்பிக்கையைக் கொண்ட ஒருவன், தன்னுடைய கொள்கையை மெய்ப்பித்து நிலை நாட்டுவதற்குக் ‘கையாலாகாதவன்’ போல் இத்தகைய இழிசெயலைச் செய்ய முற்பட்டவர்களுக்கு உடந்தையாய் இருந்தான் என்று கூறுவது, ஒரு மன்னனின் நிலைமைக்கு ஏற்புடைத்தென்று எவருமே ஒப்புக்கொள்ளமாட்டார்.

சம்பந்தர், சமணர்களோடு வாதிட்டு அவர்களை வெல்லவந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், அம்மன்னன், சமணர்களை நோக்கிச்“சம்பந்தனா?

சைவனா?

சூலபாணியின் அருள்பெற்றவனா?

சின்னபையனா?

இவனை வாதில் வெல்வதா உங்கட்கு முடியாத காரியம்! நன்று சொன்னீர்கள்! வந்தவனோடு வாதிட்டு அவன் வாயை அடக்கி வந்தவழியே திரும்பி ஓடும்படி செய்வதைவிட்டு, அவன் தங்கி இருக்கும் மடத்திற்குத் தீ இடுவதா? இதனைப் பிறர்கேட்டால் எள்ளி நகையாடாரோ! கையாலாகாத்தனம் என்று கழறாரோ! வந்தவனோடு வகையாகப் பேசத் தெரியாதவர்கள் - பேசும் திறமையற்றவர்கள் அவன் தங்கியிருந்த வீட்டுக்கா தீ வைத்தார்கள் - தீய செயலைப் புரிவோர்; இதற்கு அந்நாட்டு மன்னனும் உடந்தையாக இருந்தானாமே! என்று, நன்று இவர்கள் செய்கை என்றன்றோ இதனைக்கேள்விப் படுவோர் ஏளனம் செய்வர். ‘இங்ஙனம் செய்வது நும்மை மட்டும் அன்று, எம்மையுமன்றோ இழிவுபடுத்தும்! ஒரு மன்னன் தன் நாட்டுக்கு வந்த ஒருவனைக் கேள்வி கேட்பாரின்றித் தீயிட்டுக் கொளுத்தினானாம்! இவனும் ஒரு மன்னனாம்! மன்பதையைக் காப்பவனாம்! அதிலும், வந்தவன் இவன்போன்று ஒரு நாட்டுக்கு அரசனும் அல்லவே? இவனோடு போர் தொடுத்து இவனுடைய நாட்டைக் கைப்பற்ற வந்தவனுமல்லவே! அப்படி வந்தாலும், வந்த மன்னனோடு இந்த மன்னனும் போரிட்டு வெற்றி தோல்வி காண்பது முறையேயன்றி, வந்த மன்னனை, அவன் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, யாரும் அறியாமல் தீயிட்டுக் கொல்வது இறைமாட்சிக்கு ஏற்றதல்லவே! இது போன்ற கொடுமை, வந்து கொடுங்கோலாட்சி செலுத்தும் நாட்டிலும் நடைபெறாதே! இவனோ, வந்தவிருந்தினரை வரவேற்று, இனி வர இருக்கும் விருந்திரை எதிர்நோக்கி நிற்கும் மரபில் வந்தவனாயிற்றே! இவனா இப்படிச் செய்தான்? ஒருவன், தனக்குப் பிறவி எதிரியாக இருந்தபோதிலும், அவன் தன்னை நாடிவந்துவிட்டால், வந்தவனைத் தன் எதிரியென்றும் எண்ணாது - ஏளனமும் செய்யாது வரவேற்று மகிழ்விக்கும் மரபில் பிறந்த இவனா இத்தகைய கொடுமையைச் செய்தான்? என்று எம்மை உலகம் ஏளனம் செய்து இழிவுபடுத்தும்; ஆகையால் உங்கள் கருத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது. நீங்களோ? கொல்லாமை எல்லார்க்கும் சொல்லும் நல்லவர்கள் - நீங்களா இக்கொலைப் பாதகத்திற்கு ஆளாவது ! கூடாது! கூடாது!!

நாங்கள் சமணர்கள்!

அருகனின் அருள் பெற்றவர்கள்!

அறிவை அரணாகக்கொள்பவர்கள்!

ஆண்டில் மட்டுமன்று அறிவிலும் பெரியவர்கள்!

இப்படிப்பட்ட எங்களோடு வாதிட்டு வெல்லும் திறமை உனக்கில்லை என்பதை நாங்கள் நன்றாக உணர்கின்றோம்; ஆயினும், வந்தவர்களை நெறிமுறையின்றி இழிவுபடுத்தும் இயல்பு எங்கட்கில்லையாதலால், உன்னைச் சிறியவனென்று சிறுமைப்படுத்தாது வரவேற்கின்றோம் - வாதாடவும் தயாராக உள்ளோம் என்று சம்பந்தருக்குச் சொல்லியனுப்புங்கள்” என்பதாக, அம்மன்னன் சமணர்களுக்குக் கூறியிருக்கவேண்டும்; அதுவே முறை.
ஆனால், கதை அப்படி அமையவில்லை. சம்பந்தர் தங்கியிருந்த மடத்தைத் தீயிட்டுக் கொளுத்துவதே முறையென்று சமணர்கள் கூறியதற்கு, அம்மன்னனும் உடந்தையாக இருந்தான் என்பதே கதையிற் கூறப்பட்டுள்ளது. அதாவது: -

“.........சிறுமறையோன் உறைமடத்தில், வெந்தழற் பட விஞ்சை மந்திரத்தொழில் விளைத்தால்,
இந்த நன்னகரிடத்திரான் எழும் என்று இசைந்தார்”
என்று சமணர்கள் கூற, அதற்கு,

“ஆவதொன்றிது வேயாகில் அதனையே விரைந்து செய்யப் போவதென்ற வரைப் போக்கி..................”

என்று மன்னன் கூறியதாகச் சேக்கிழார் பாடியுள்ளார். எனவே, மன்னனும் இக்கொடுமைக்கு உடந்தையாகவே இருந்தான் என்பது, சேக்கிழாரின் பாடல்களில் இருந்து தெரியவருகிறது.

இனி, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, ‘இவை தமிழ்மக்களை இழிவுபடுத்துவதற்காக வேண்டுமென்றேபாடப்பட்டன’ என்று நாம் கூறினால், நம்மீது சீறி விழுகின்றனர் சிலர். கூறப்படும் கருத்துகளை எண்ணிப் பார்ப்பதற்குக்கூட நேரமில்லாமல், சேக்கிழார் என்ற சொல்லைச் செவிமடுத்தவுடனே - கம்பர் என்ற சொல் காதில் பட்டவுடனே, சேக்கிழாரைச் சிறுமைப்படுத்துவதா? கம்பரைக் காய்வதா? என்றெல்லாம் எம்மீது சரந்தொடுக்க முற்பட்டு விடுகின்றனரேயல்லாமல், அவர்களால் கூறப்பட்டவை காலத்திற்கும் கருத்திற்கும் ஒவ்வாதவை என்று நாம் எடுத்துக்காட்டும் ஆய்வுகளை ஆரஅமர இருந்து முடிவு செய்வதில்லை. எதனையும் எண்ணிப்பார்த்து முடிவுகட்டும் இயல்பு நம்மவர்க்கு உண்டாக வேண்டுமென்பதற்காகவேதான் இத்தகைய ஆராய்ச்சிகளை நாம் அடிக்கடி எழுதி வருகின்றோம் என்பதனைக்கூட அவர்களால் உணரமுடிவதில்லை.

சம்பந்தர் மதுரைக்கு வந்தார்! ஏன் வந்தார்?

சமணர்களோடு வாது செய்ய! இதனை அறிந்தனர் சமணர்! மன்னனிடம் கூறினர்! என்ன கூறினர்?
சம்பந்தர் தங்கியிருக்கும் மடத்தில் தீயிடவேண்டுமென்றனர்! மன்னன் அதற்கு மறுசொல் கூறாமல் இசைந்தான்!

சண்டைக்கு வந்தவனோடு சண்டையிடுவது; அல்லது முடியாது, வந்தவனிடம் படைபலம் மிகுதியென்றால் சமாதானம் பேசுவது அல்லது சரணடைவது, அல்லது வந்தவன் எப்படிப்பட்ட பலம் பொருந்தியவனானாலும், அவனுடன் சமாதானம் பேசுவதோ, சரணடைவதோ கூடாதென்று நினைப்பவர் அவனோடு போரிட்டு மடிவான்: இப்படித்தானே ஒரு மன்னன் நடந்து கொள்வான் - நடந்து கொள்கிறான் இதுபோலவே, வாதிட வந்தவனோடு தாமும் வாதிடுவதே முறை; வாதிடும் வல்லமை இல்லையென்றால், வந்தவனோடு வகையாகப் பேசி அனுப்பி விடவேண்டும்; அல்லது வாதிட்டுத் தோல்வியடைய வேண்டும். இங்ஙனமன்றி, வாதிட வந்தவனை நெறிதவறிய முறையில் நெருப்பிட்டுப் பொசுக்குவதும், அதற்கு அம்மன்னனின் உடன்பாடும் கிடைத்ததாம்! ஒரு மன்னன், அவன் எப்படிப்பட்டவனாயினும் இந்தக் காரியம் செய்ய இசைந்திருப்பானா என்பதையாவது எண்ணிப் பார்க்கவேண்டாமா!

இனி, இங்ஙனம் வாதிடவந்த ஒருவனைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்று எவரேனும் கூறினால், அதனைக் கேட்டவன் என்ன நினைத்திருப்பான்? “வாதிட்டு வெல்லும் திறமை இவர்கட்கு இல்லைபோலும்! அதனாலேதான் இவர்கள் அவனை நெருப்பிட்டுப் பொசுக்கவேண்டுமென்கிறார்கள். இவர்களுடைய சமயமும் சமயக் கோட்பாடுகளும் வாதிட
வந்தவனுடைய சமயத்தையும் சமயக்கோட்பாடுகளையும் விட எந்த விதத்திலும் மேம்பாடுடையதன்று” என்றுதானே நினைத்திருப்பான். நினைப்பது மட்டுமல்ல, உடனே அந்தச் சமயத்தையும் சமயக்கோட்பாடுகளையும் கைவிட்டிருப்பான். ஆனால், இங்குப் பேசப்படும் மன்னன்,
‘ஆவதொன்றிதுவேயாகில் அதனையே விரைந்து செய்ய”
என்று கூறியதாகவே சேக்கிழார் பாடியுள்ளார். அதாவது, நெருப்பிடுவதைத்தவிர வேறு வழியில்லையாகில், அதனையே செய்யுங்கள் என்று பாண்டியன் சமணர்களுக்குக் கூறினான் என்பது இதன்பொருள்.

இனிப் பாண்டியன் இக்கொடுமைக்கு ஒருபோதும் உடன்பட்டிருக்கவே மாட்டான் என்பதும், அவன் எதனையும் நடுநின்று உணர்ந்து கடைப்பிடிப்பவன் என்பதும் அவனைப் பற்றிக் கூறப்படும் பல நிகழ்ச்சிகளிலிருந்து நன்று புலனாகின்றது. பாண்டியனுடைய தூய்மைக்கும் நேர்மைக்கும் உரிய சான்றுகளைப் பின்னால் ஆராய்ந்துவிளக்குவாம். இங்குச் சேக்கிழார், சம்பந்தருக்கு உயர்வு கொடுக்கவும், பாண்டியனுக்கு இழிவு கற்பிக்கவும் கையாண்ட முறையையே எடுத்துக்காட்டுகின்றோம். இங்ஙனம் பாண்டியனை இழிவுபடுத்திய சேக்கிழார் எப்படிப்பட்டவர்? ஓர் அரசனால் அமைச்சராக இருந்து அரசியலை ஒழுங்காக நடத்தியவர் என்று சொல்லப்படுபவர்! அரசியல் அறிவுபெற்ற சேக்கிழாரே, ஓர் அரசன் முன்பின் யோசனையின்றி - விசாரணையின்யின்றி, ஒருவன் தங்கியிருக்கும் இடத்திற்கு நெருப்பிடுங்கள் என்று கட்டளையிட்டான் என்பதாகக் கூறுகிறார் என்றால், அதனை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? ஒருக்கால், அரசன் அங்ஙனம் செய்யும்படி கட்டளையிட்டது உண்மையென்று வரலாற்றில் காணப்பட்டாலும், அதனை அரசியல் அறிவுபெற்ற சேக்கிழார்,
“இப்படி ஓர் அரசன் செய்திருப்பானா?

இது அரசியல் நெறிமுறைக்கே மாறன்றோ!

என்றாலும், வரலாற்றில் அப்படித்தான் காணப்படுகின்றது, அதன்படியே நான் புராணத்தைப் பாடுகின்றேன்; இதனைப் படிப்பவர்கள் என்மீது குற்றம் சாட்டுதல் கூடாது”
என்றாவது ஒருபாடல் பாடியிருந்தால், சேக்கிழார் மீது நாம் எவ்விதக் குற்றமும் சுமத்துவதற்கில்லை. பெரியபுராண மூலத்தில் காணப்படாத எத்தனையோ நிகழ்ச்சிகள், சேக்கிழாரின் ‘கைச்சரக்காகப் பாடப்பட்டிருக்கும் போது, பொறுப்பும் தேவையுமுள்ள இடங்களில் மட்டும் சேக்கிழார் தம்கைச் சரக்கைப் பயன்படுத்தாத காரணம் என்ன? என்பதையாவது எண்ணிப்பார்க்க வேண்டாமா? ஒரு சமயத்தையும் அதன் ஆசிரியர்களையும் உயர்வுபடுத்தும் உற்சாகத்தில் சமுகத்தையும் அதன் உயரிய நற்பண்புகளையும் இழிவு படுத்தும் முறை, பெரியபுராணத்திற்போல வேறெந்த நூலிலும் மிகுதியாகக் காண்டல் அரிது,
இனிச் சம்பந்தர் தங்கியிருந்த மடத்தில் மந்திரத்தீ இடுவதற்கு மன்னனும் உடந்தையாக இருந்தான் என்ற பகுதிக்குப் பெரியபுராண உரையாசிரியர் ஒருவர், “மந்திரத்தீ சுடாதென மன்னன் கருதினான் போலும்”

என்று பொருள் விரித்துள்ளார், மந்திரத்தீ சுடாது என்பது எவராலும் எளிதில் ஒப்புக் கொள்ளப்படக்கூடியதாகும். இதனை ஓர் உரையாசிரியர் தம்முடைய புலமையின் வாயிலாக அளந்து கூறவேவேண்டியதில்லை இதனால், அவருடைய புலமைக்கு ஏற்றமோ மதிப்புமோ ஏற்பட்டும் விடாது. மந்திரத்தீ சுடாது என்று மன்னன் கருதியிருந்ததால், அந்தக் கருத்தைச் சமணர்கள் கூறிய அதே விநாடியிலேயே அவன் தன்னுடைய கருத்தையும் வெளியிட்டிருப்பான். சமணர்கள் அங்ஙனம் செய்யமுற்படுவது பயனற்ற காரியம் என்று கூறித் தடுத்துமிருப்பான். அன்றியும், மந்திரத்தீ சுடாது என்பதை மன்னன் உண்மையாகவே நம்பி அங்ஙனம் கூறினான் என்பதும் தினைத்துணையும் பொருந்தாப் போலியுரையாம். எப்படியென்றால், சமணர்கள் அந்தக் கருத்தை வெளியிட்ட உடனே மன்னன், அவர்களை நோக்கி, “மந்திரமாவது மனையைக் கொளுத்துவதாவது! மந்திரத்தால் ஒன்றைச் சுட்டெரிக்கலாமென்றால், சுடுந்தன்மை வாய்ந்த இயற்கைப் பொருளான நெருப்பு என்பதாக ஒன்று தனியாக இருப்பானேன்? சுடவேண்டிய எல்லாப் பொருள்களையும் மந்திரத்தால் சுட்டுவிடலாமே! தண்ணீர் வெந்நீராக வேண்டும் . அந்த அளவுக்கு ஒரு மந்திரம்; வீடு வெந்து சாம்பலாகவேண்டும் - அது வேகுமளவுக்கு ஒரு மந்திரம், இங்ஙனம் சுடப்பட வேண்டிய பொருள்களுக்கு ஏற்றவாறு மந்திர ஒலியின் அளவும் கூட்டியும் குறைத்தும் உச்சரித்தால் போதுமே! இதற்காக உலகம் நெருப்பும் விறகும் தேடி அலைய வேண்டியதில்லையே! என்று கூறியிருப்பான். அதுமட்டுமன்று! மந்திரத்தீ சுடாது என்று மன்னன் கருதியிருந்தால், அதனைக் கூறிய சமணர்களையும் சமண சமயக் கொள்கைகளையும் ஒப்புக்கொண்டு, அச்சமயவழி நின்றிருக்கமாட்டான். ஆனால், மன்னன் அங்ஙனம் நடந்தான் என்பதற்குப் புராணத்திற் கருவியில்லை.

இனி, ஒருக்கால், மந்திரத்தீ சுடாதென்பது உரையாசிரியரின் கருத்தாக இருந்து, அதனை அவர், மன்னன் பால் ஏற்றிக் கூறியிருக்கலாம்; இதில் என்ன தவறு என்றும் சிலர் கேட்பர். உண்மை. ஒருக்கால் இது உரையாசிரியரின் கருத்தாக இருந்திருக்கலாம் என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இந்தக் கருத்தை உரையாசிரியரின் சொந்தக் கருத்தாகக் கொள்வதற்கும் இல்லையே! எப்படியென்றால், சமணர்களால் சம்பந்தரின் மடத்திற்கு இடப்பட்ட நெருப்பைச் சம்பந்தர் தம்முடைய தேவாரத்தின் துணைக்கொண்டு வெப்பு நோயாக மாற்றி அதனைப் பாண்டியன்பால் அனுப்பி அவனை வெப்பு நோயால் வருந்தும்படி செய்தார் என்று சொல்லப்படும் பகுதிக்கும் இவ்வுரையாசிரியர் பொருள் எழுதியுள்ளார். ஆனால் இங்கு, அவர் தம்முடைய “மந்திரத்தீ சுடாது” என்ற கருத்தைத் தழுவி உரை எழுதியதாகக் குறிப்பு எதுவும் காணப்படவில்லை. மற்று, மந்திரத்தீ சுடும் என்பதை வலியுறுத்தும் முறையிலேயே அவருடைய உரை இங்கு விரிந்து நிற்கின்றது. எப்படியென்றால், சமணர்கள் தங்கள் மந்திரத்தால் தீயிடும் முயற்சி வெற்றி பெறாது போகவே, நெருப்பைக் கையிற்கொண்டு மடத்திற்குத் தீயிட்டனர் என்று சொல்லப்படும் பகுதியில், சம்பந்தர், அந்த நெருப்பை வெப்பு நோயாக மாற்றிப் பாண்டியனைத் துன்புறுத்தும்படி செய்தார் என்பதற்கு இவ்வுரையாசிரியர் மறுப்பேதும் கூறவில்லை. மந்திரத்தீ சுடாதென்பது இவ்வுரையாசிரியரின் கருத்தாக இருந்ததென்றால், இங்ஙனம் அதனை வலியுறுத்தியிருக்கவேண்டும். ஆனால், இங்கு மந்திரத்தீயின் மகிமையைப் பெரிதும் ஆதரித்தே உரை எழுதியுள்ளார். அதாவது, சம்பந்தரின் தேவார மந்திரபலத்தால் நெருப்புத் தன்னுடைய உண்மையான, வடிவத்தை மாற்றி, அதன் குணமான வெப்பத்தோடு மட்டும் சென்று பாண்டியனை வருத்திற்றாம். அதிலும் “அவ்வெப்பம்” சம்பந்தர் சொல்லியபடி ‘பையவே’ சென்று பாண்டியனை அடைந்ததாம்.

சமணர்களின் மந்திரத்திற்குக் கட்டுப்படாத நெருப்புச் சம்பந்தரின் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது மட்டுமன்று; அவர் சொல்லியபடியெல்லாம் ஆடிற்றாம். இந்த இடத்தில் உரையாசிரியரின் மறுப்பு எதுவும் பொறிக்கப்படவில்லை. மந்திரத்தீ மன்பதையை (உலகத்தை) ஒன்றும்செய்யாது - செய்யமுடியாது என்பது உரையாசிரியரின் கருத்தென்றால், இங்கும் அதனை வலியுறுத்தியிருக்க வேண்டும். அங்குச் சமணர்களின் மந்திரத்தீ சுடவில்லை. இங்குச் சம்பந்தரின் மந்திரத்தீ சுட்டது மட்டுமன்று, அவர் ஆணையிட்டபடியெல்லாம் மெதுவாகவும், விரைவாகவும் வடிவம் மாறியும் வேலை செய்திருக்கிறது. அதுமட்டுமன்று; பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயைச் சம்பந்தர் தம்முடைய மந்திரபலத்தால் மாற்றிய பொழுது, பாண்டியனுக்கிருந்த வெப்பம் அன்றே நீங்கி, அவனுடைய உடம்பின் ஒரு பகுதி பொய்கைபோல் குளிர்ந்துவிட்டதாம். சம்பந்தரின் மந்திரபலம் இதோடு நிற்கவில்லை. இன்னும் கேளுங்கள் வியப்பை! பாண்டியனுடைய உடம்பின் இன்னொரு பகுதியை அவ்வெப்பம் இருமடங்காக வருத்திற்றாம். அதாவது? பாண்டியனுக்கேற்பட்ட வெப்பு நோயை மாற்றுவதற்குச் சம்பந்தரும் சமணர்களும் போட்டியிட்டுச் சம்பந்தர் வலப்பாகத்தையும், சமணர்கள் இடப்பாகத்தையும் எடுத்துக்கொண்டு தத்தம் மந்திரத்தை ஏவினராம். அதில், சம்பந்தரின் மந்திரபலம் பாண்டியனின் வலப்பக்க உடம்பைப் பொய்கை (குளம்) போல் குளிரும்படி செய்துவிட்டுச் சமணர்கள் எடுத்துக்கொண்ட இடப்பக்கத்தில் போய்ப் பாண்டியனை,

“அழலென மண்டு தீப்போல், இருபுடை வெப்புங்கூட இடங்கொளா தென்னப் பொங்க”

என்று சேக்கிழார் கூறுகின்றபடி பெரிதும் வருத்திற்றாம். இவ்வளவு பலம் பொருந்திய மந்திரத்தைத்தான் உரையாசிரியர்,

“மந்திரத்தீ சுடாதென்று மன்னன் கருதினான்போலும்”

என்று மிக எளிதாகக் கூறிவிட்டார். இனி, ஒருக்கால், சமணர்களின் மந்திரம் பலிக்காது; சைவர்களின் மந்திரம்தான் பலிக்கும் என்று உரையாசிரியர் கருதி அங்ஙனம் சொன்னார் என்று கொள்வதற்கும் இல்லையே! அவர், பொதுவாக ‘மந்திரத்தீ சுடாது’ என்று கூறினாரேயன்றிச் சமணர்களின் மந்திரத்தீ சுடாது,’ சைவர்களின் மந்திரத்தீ சுடும் என்று வலிந்து பொருள்கொள்ளக் கூடிய முறையிலேனும் சொல்லவில்லையே! ‘மந்திரம்’ என்ற சொல்லைப் பொதுவாக வைத்தன்றோ அதற்குச் ‘சுடுந்தன்மை’ இல்லையென்று அடித்துக் கூறியிருக்கின்றார்.

இனிச் சமணர்களால் இடப்பட்ட மந்திரத்தீ சம்பந்தரின் மடத்தைச் சுடவில்லை என்பதற்குச் “சம்பந்தரும் சிவனடியார்களும் அங்குத் தங்கியிருந்தார்கள், எனவே, சமணர்களால் ஏவப்பட்ட தீமந்திரம் அங்குச் செல்ல முடியவில்லை” என்பது, நூலுரை ஆசிரியர்களின் கருத்தாகச் சொல்லப்படுகின்றது அல்லது கொள்ளப்படுகின்றது. சமணர்கள், தங்களுடைய மந்திரபலத்தால் தீ மூட்டமுடியாதென்று நினைத்திருந்தால், ஒரு போதும் அந்த முயற்சியில் இறங்கியிருக்க மாட்டார்கள். மந்திரத் தீ மூட்டும் முயற்சியைக் கைவிட்டுக் ‘கைத்தீ’ வேலையையே மேற்கொண்டிருப்பார்கள். ஒருக்கால் அரசனிடம் மந்திரத்தீ மூட்டுவதாக உரைத்திருந்தாலும், தீமூட்டும் போது அந்த முயற்சியை ஒருபோதும் மேற்கொண்டிருக்கவே மாட்டார்கள்.

இனிச் சைவமெய்யன்பர்கள் அங்குத் தங்கியிருந்த காரணத்தால்தான் சமணர்கள் இடம் மந்திரத்தீ மடத்தைச் சுடவில்லை என்பது உண்மையானால், சமணர்கள், கையில் தீக்கோல் கொண்டு சுட்டதுமட்டும் எப்படி அந்தச் ‘சிவ’ மடத்தைப் பொசுக்கிற்றோ? நெருப்பைப் பொய்கைபோலக் குளிரும்படி செய்யும் அருளாற்றல் பெற்ற சிவ மெய்யன்பராம் சம்பந்தர் அங்கிருக்கும்போது, சமணர்களால் இடப்பெற்ற ‘கைநெருப்பு’ மட்டும் தன்னுடைய வேலையைச் சரிவரச் செய்தது என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஒரு விநாடியிலேயே திரிபுரங்களையும் சுட்டெரிக்கவல்ல நெருப்பைத் தன்னுடைய நெற்றிக் கண்ணுக்குள்ளேயே வைத்திருப்பதாகச் சொல்லப்படும் சிவன், தன்னுடைய அடியவரான - திருவிறக்க (அவதார)மான சம்பந்தரின் மடத்தில் தீப்பற்றவிட்ட காரணம் என்ன? ஏன் அதை அவர் தடுக்கவில்லை? மடத்தில் தீப்பற்றும்
போது சிவன் வேறு வேலையில் இருந்ததால் அதைக் கவனிக்கவில்லையென்றாலும், அடியவர்களின் அலறல் கேட்ட பின்னராவது, தீயை அணையும்படி செய்திருக்கலாமே! அதுவும் செய்யவில்லையே! மடத்தில் படுத்திருந்த அடியவர்களன்றோ தீயை அணைத்ததாகச் சேக்கிழார் கூறுகின்றார்!

“.....மறுகிப் பரிசனத் தவர்பதைப்பொடுஞ்சிதை த்தது நீங்கி”

என்பது சேக்கிழார் வாக்கு. அதாவது சமணர்கள், மடத்திற்கு நெருப்பிட்டதை அறிந்து சிவனடியார்கள், அங்கும் இங்கும் ஓடி அலைந்து - சுழன்று நெருப்பை அணைத்தார்கள் என்பதே இதன் பொருள். சிவப்பெருந்தகையின் திருவருள்போலும், நெருப்பணைக்கவல்ல (ஊடிணூஞு ஊடிஞ்டtஞுணூண்) சிவனடியார்கள் சிலரைச் சம்பந்தருடன் இருக்கும்படி செய்தது! இல்லையேல் சம்பந்தர் வெந்து சாம்பலாகி இருப்பார். எப்படியென்றால், மடத்தில் தீப்பற்றிய செய்தி அடியவர்கள் சொல்லித்தான் சம்பந்தருக்குத் தெரிந்ததென்று சேக்கிழாரே கூறியுள்ளார்,
“கழுமலபதிக் கற்பகக்கன்றைத் தொழுது நின்று அமண் குண்டர் செய்தீங்கினைச் சொன்ன பொழுது” அப்படியா?
“மாதவர் துயிலும் இத்திரு மடப்புறம்பு, பழுது செய்வதோ! பாவிகாள்!”
என்று சம்பந்தர் கூறியதாகச் சேக்கிழாரே பாடியுள்ளார். எனவே, சம்பந்தர் தப்பியது தம்பிரான் (சிவன்) புண்ணியந்தான்! இது கிடக்க.

இனிப் பாண்டியனுக்கு வெப்புநோய் ஏற்பட்டுவிட்டதென்பதை அறிந்த மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பாண்டியனை அடைந்து, மணிமந்திர - ஔடத முறைகளை முறைமுறையாகச் செய்தனர்; நோய் நீங்கவில்லை; நோய் முன்னிலும் அதிகமாக முறுகி எழுந்தது என்றும் சொல்லப்படுகின்றது. ‘பாவிகளான’ சமணர்களின் மந்திரம்தான் பலிக்கவில்லை யென்றால், புண்ணியவான்களான குலச்சிறை - மங்கையர்க்கரசி ஆகியோரின் மணி-மந்திர-ஔடதம் எதுவுமே மன்னனின் நோயை நீக்க முடியவில்லை என்று சேக்கிழார் கூறுவது, ‘சைவமுறைப்படி’ பெரிதும் வருந்தத் தக்கது - வெட்கப்படக்கூடியது. மதுரை, சமணமயமாக மாறிய போது, மங்கையர்க்கரசி - குலச் சிறை ஆகிய இருவருமன்றோ சைவத்தின் உயிர்நாடியைக் கையில் பிடித்து வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தவர்கள்! இப்படிப்பட்ட ‘அப்பழுக்கற்ற’ சைவ மெய்யன்பர்களால் கொடுக்கப்பட்ட மணி - மந்திர - ஔடதங்கள் எதுவும் மன்னனுடைய நோயைப் போக்க முடியவில்லையாம்! ஏன் இந்த நிலை ஏற்பட்டது? அவர்களின் சைவப்பற்றில் ஏதேனும் இழுக்கா? இருக்க முடியாதே! அவர்களுடைய சைவப்பெரும் பற்றையும் அதனை அவர்கள் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் உரத்தையும் பாராட்டிச் சம்பந்தரே பாடியிருக்கும்போது, அவர்களது சைவப்பற்றில் குற்றம் இருக்க இடமில்லை. பின், ஒருக்கால் அவர்களால் கொடுக்கப்பட்ட மணிமந்திர - ஔடதங்களில் ஏதேனும் பழுதுண்டோ என்று எண்ணுவதற்கும் சேக்கிழார் இடந்தர
வில்லை.

“மருத்து நூலவர் தங்கள் பல்கலைகளில் வகுத்த, தொழில் யாவையுஞ் செய்யவும் மேன்மேல், உருத்தெழுந்த வெப்பு” என்று சேக்கிழார் கூறியிருப்பதால், மணி-மந்திர-ஔடதங்களில் யாதோ கோளாறு இருந்தது. அதனால்தான் நோய் நீங்கவில்லை என்று சொல்வதற்கும் இல்லையே! ஒருக்கால், நோயறிந்து மருந்து கொடுத்த மருத்துவர்பால் இக்குற்றத்தை ஏற்றலாமோ என்றால், மருத்துவர்களைப் பற்றிச் சேக்கிழார் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் மருத்துவத் துறையில் பல்கலை பயின்ற நிபுணர்கள் என்றே சொல்லப்
பட்டுள்ளது. ஒருவேளை, பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்புநோய் எதனால் - எப்படி உண்டாயிற்று என்பதை அந்த மருத்துவர்களால் கண்டறிந்து கூறமுடியவில்லை என்று கொள்வதானால், இங்கும் சேக்கிழார் தமிழ் மருத்துவர்களை இழிவுபடுத்துவதையே தம் தொழிலாகக் கொண்டவர் என்பதைத் தவிர, வேறு சமாதானம் எதுவும் கூறுவதற்கில்லை - கூறவும் முடியாது. பாண்டியனுக்கேற்பட்ட நோயை அறிந்து மருந்து கொடுக்க வந்த மருத்துவர்கள், அவன் உடம்பைச் சோதித்து, நோய்க்கு மூலம் இது, என்று சொல்லமுடியாமற்போனார்கள் என்றால், அவர்களைப் பல்கலை தெரிந்த மருத்துவர்கள் என்று கூறுவது பொருந்தாதன்றோ! பாண்டியனுக்கேற்பட்ட நோய் உடற்கோளாறினால் ஏற்பட்டதா? வேறு, ஏவலினால் ஏற்பட்டதா என்பதைக்கூட அறியமுடியாத மருத்துவர்க்குப் “பல்கலை தெரிந்த மருத்துவர்” என்ற பட்டத்தைக் கொடுப்பதும், பின், அவர்களால் கொடுக்கப்பட்ட மருந்தினால் நோய்தீர வில்லை என்று கூறுவதும் மருத்துவர் குலத்திற்கே ஒரு இழிவை உண்டாக்குவதற்காக அங்ஙனம் கூறப்பட்டதே என்று பொருள் கொள்ளாமல், வேறு எந்தவகையில் இதற்குத் தணிவு (சமாதானம்) கூறலாம் என்பதற்குச் சேக்கிழாரைக் காரணமின்றித் தாக்குவதாக எம்மீது குற்றம் சாட்டும் அன்பர்கள்தான் விடைகூறவேண்டும்.

இனி ஒருவனுக்கு நோய் உண்டாவதென்றால், அவனுடைய உடற்கோளாறினால் ஏற்படுமேயன்றி, யாதாயினும் ஒரு ஏவலினாலோ வேறு சூழ்ச்சிகளினாலே ஒருவனுக்கு நோய் ஏற்படுவதில்லை என்பதை நன்குணர்ந்ததால்தான், பாண்டியனுக்கு ஏற்பட்டதாகச் சொல்லப்படும் வெப்புநோயை நீக்க வந்த மருத்துவர்கள், அவ்வெப்பு நோய்க்கு ஏற்ற மருந்தைக் கொடுத்தார்கள் என்று கொள்ளலாமேதவிர, வேறு விதமாகக் கொள்வதற்கு யாதும் இல்லை என்று ஒழிக.

இனிப், பாண்டியனுக்கேற்பட்ட வெப்புநோய் சம்பந்தரின் ஏவலினால் உண்டானதென்று கூறுவதன்வாயிலாகச் சேக்கிழார் மிகவும் இழிவான மூடப்பழக்க வழக்கங்களைத் தமிழ் நாட்டில் உண்டாக்கி வைத்த குற்றத்திற்கும் ஆளாகிறார். எப்படியென்றால், சமணர்கள் சம்பந்தர் தங்கியிருந்த மடத்தைப் பொசுக்குவதற்கு இடப்பட்டதாகச் சொல்லப்படும் தீயைச் சம்பந்தர் பாண்டியன்பால் ஏவிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. நல்லவேளையாக, இந்த “ஏவல்” வேலையை ஒரு தமிழன் செய்தான் என்று சொல்லாமல் ஒரு பார்ப்பனன் செய்தான் என்று சொன்னாரே சேக்கிழார், அதுவரைக்கும் அவருக்கு எமது நன்றி! என்றாலும், சம்பந்தரால் கையாளப்பட்ட இந்த ‘ஏவல்’ தொழிலை இன்றும் பல தமிழ் மக்கள் தங்கள் தொழிலாக வைத்து, நாட்டில் மூடப்பழக்க வழக்கங்களைப்பரப்பி வருவது கண்கூடு . ஏவல் - பில்லி - சூனியம் - பேய் - பிசாசு என்று பலவிதமான, பயனற்ற - பொருளற்ற கொடிய தொழில்களை நம்மவரிற் பலர் கற்றுக்கொண்டு, மக்களை அறியாமைக்கும் மூடப்பழக்க வழக்கங்களுக்கும் ஆளாக்கி, அதனால் பொருள் அழிவையும் மானக்கேட்டையும் உண்டாக்கி வருகின்றனர். இவற்றிற்குக் காரணம், பெரிய புராணம்போன்ற சமய நூல்களும் அவற்றின் மூலவர்களான பார்ப்பனருமே தான் என்று நாம் ஆராய்ந்து கூறினால், நம்மை மதத்தின் பகைவன் - பார்ப்பன விரோதி என்றெல்லாம் நாக்கடிக்கப்பேசு கின்றனர். ஏவல் - பில்லி - சூனியம் முதலிய மனித அறிவுக்கும் - தேவைக்கும் பொருந்தா – வேண்டப்படா மூடப்பழக்க வழக்கங்களை மக்கட்குப் புகுத்தும் ஒரு நூலுக்குப் பெயர் பெரியபுராணம்! அதன் மக்கள் பக்தி சிரத்தையுடன் படிக்க வேண்டுமாம்! குறைகூறக்கூடாதாம்! என்னே, இவர் தம் அறியாமை!!

இனி, இத்தகைய உண்மைகளை நாம் ஆராய்ந்து கூறும் போது, சிலர் ‘இல்லாத குற்றத்தை ஒரு நூலின் மேலேற்றி, அந்தக் குற்றத்துக்காக அந்த நூலை ஒழித்திட வேண்டுமென்று கூறுவதாக எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். ஒரு நூலில் இல்லாத குற்றம், அதனைப்படிக்கும்போது எப்படி உண்டாகும் என்பது எமக்கே தெரியவில்லை. எடுத்துக் காட்டாக, ஏவல் - பில்லி - சூனியம் முதலியனவற்றைச் சைவ மெய்யன்பர்களோ வேறு சமய மெய்யன்பர்களோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவை நாட்டில் நடைமுறையில் இருப்பதையும் விரும்பார்கள். அவற்றை உண்மையென்றும் நம்பார்கள். அவற்றால் மக்களுக்குக் கெடுதலேயன்றி நன்மையாதும் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், அவர்களால் போற்றிப் பேணப்படும் பெரிய புராணத்தில் ஏவல் தொழில்முறை கற்பிக்கப்பட்டிருக்கிறதே - தேவாரம் அந்த ஏவல்தொழிலுக்கு மந்திரமாக அமைந்திருக்கிறதே! என்று கூறுபவர்களாக இல்லாததை வலிந்து புகுத்தி ஒன்றின்மீது குற்றம் சுமத்துபவர்கள்? சம்பந்தர், தம்பால் வந்த தீயைப் பாண்டியன் பால் ஏவினார் என்ற செய்தியைப் படிக்கும்போதே, ஏவலும் அதனையொட்டிய ‘பில்லி - சூனியம் - பேய் - பிசாசு ஆகிய எல்லாமே நினைவுக்கு வந்துவிடுகின்றனவே! ஒரு நிகழ்ச்சியைப் புராணத்தில் படிக்கும்போது, அதிலும் புராணங்களிலுள்ளவற்றை ஆராய்ச்சியுணர்வோடு படிக்கும் போது, அந்நிகழ்ச்சியை ஒட்டிய - தழுவிய பல நிகழ்ச்சிகள், படிப்பவனுடைய நினைவுக்கு வராமல் இருக்கமுடியுமா? அங்ஙனம் வரும்படி படிப்பதுதவறா? அன்றிவருவனவற்றை மறைப்பது முறையா? என்பவற்றிற்குச் சைவமெய்யன்பர்கள் தான் விடைகூறவேண்டும். அங்ஙனமின்றி, ஒரு நாயைக் கொல்லவிரும்பும் ஒருவன், அதற்குக் கெட்ட பெயரை வேண்டுமென்றே உண்டாக்கி அதனைத் தூக்கிலிட்டுக் கொல்லுவது போன்ற முறையை ஒரு நடுநிலை ஆராய்ச்சியாளன் எப்பொழுதுமே - எந்தக் காரணத்தைக் கொண்டும் கையாளவே மாட்டான் என்பதை அறிவுள்ள எவரும் ஒப்புக்கொண்டே தீருவர். எனவே, நாம் ஒன்றைப்படிக்கும்போது, அதில் இல்லாததையோ ஆராய்ச்சியிற்பட்டு ஐயம் உண்டாக்காததையோ வேண்டுமென்றே விரித்துக்கூறும் வழக்கினர் அல்லர் என்பதை, இனிமேலாவது அத்தகைய எண்ணங்கொண்டோர் கைவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

இனி, ஒருக்கால், சம்பந்தர்கையாண்ட ஏவல்முறைவேறு; இஞ்ஞான்றை மக்கள் கையாளும் ஏவல் முறை வேறு; அதனையும் இதனையும் ஒன்றுபடுத்திக் கூறி, அதனை இதற்கு ஒப்புவமை கூறலாமோ என்றும் சிலர் கேட்பர். விலங்கு, பொன்னாலானால் என்ன? இரும்பாலானால் என்ன? இரண்டும் விலங்கிற்குரிய தொழிலைச் செய்தே தீரும் என்ற மேற்கோளையே அத்தகையினர்க்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். அன்று செய்யப்பட்ட ஏவல், சம்பந்தர் செய்தார் என்பதனாலோ, அதற்குப் பயன்பட்ட மந்திரம் தேவாரம். என்பதனாலோ அதனை உயர்ந்ததாகவும், இன்று செய்யப்படும் ஏவலை, ஒரு சாத்தான் செய்கிறான் என்பதனாலோ, இதற்குப் பயன்படும் மந்திரம் ஓம்மலையாளபகவதி என்பதனாலோ தாழ்ந்ததாகவும் கருதப்படமாட்டாது. செய்பவனும் செய்யப்படுவதற்குக் கையாளப்படும் கருவியும் வெவ்வேறாதல் பற்றி, செய்யப்படும் காரியத்தையும் வேறு என்று கூறுவது கருத்திழந்தோர் செயலேயாகும். குடியிருக்கும் வீடு, ஓட்டு வீடாய் இருந்தால் என்ன? ஓலை வீடாய் இருந்தால் என்ன? சம்பந்தர், தனக்குத் தெரிந்த தேவாரத்தை மந்திரமாகப் பயன்படுத்தி,

‘ஏவல் தொழிலைச் செய்தார்; சாத்தான், தனக்குத் தெரிந்த ஓம்மலையாளபகவதி என்ற மந்திரத்தால் அந்தத் தொழிலைச் செய்கின்றான். இதில் தவறென்ன காணமுடியும்?

இனி, இந்த ஏவல்-பில்லி-சூனியம்-பேய்-பிசாசு ஆகிய தொழில் முறையினால் உண்மையான பயன் யாதாயினும் ஏற்படுகின்றதா? ஏற்பட முடியுமா என்பது குறித்து நாம் ஈங்கு ஆராயவில்லை. இது பற்றி ஒரு தனி ஆராய்ச்சி செய்து, அதன் மண்டையில் அடிக்க வேண்டுமாதலால், இங்கு எடுத்துக் கொண்ட பொருள் பற்றிச் சிறிதுகூறி இதனை முடிப்போம்.

இனிச், சம்பந்தர், பாண்டியன் பால் ஏவிய நெருப்புக்குப் ‘பையவே சென்று பாண்டியர்க் காகவே”
என்று கட்டளையிட்டு அனுப்பினாராம். இதற்குச் சேக்கிழார் கூறும் காரணம், “மங்கையர்க்கரசியாரது மங்கலநாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாரது அன்பை முன்னிட்டும் மன்னவன்பால் உற்றபிழை கருதியும், அவன் மீண்டுஞ் சிவநெறி அடையப்போதலை நினைந்தும், “பையவேசென்று” என்று பாடிதாகச் சொல்லப்படுகிறது. விஞ்ஞான முறையில், மெதுவாகவும் விரைவாகவும் ஓட்டப்படும் பொறி (இயந்திரங்களைப் போலச், சம்பந்தரும் தம்முடைய மந்திரப் பொறியை ஓட்டுவதில் ‘தயவு’ காட்டி மெதுவாக ஓடும்படி செய்து, மங்கையர்க்கரசி - குலச்சிறை - பாண்டியன் ஆகியவர்களைக் காப்பாற்றியது குறித்து யாரும் வியப்படையாவிட்டாலும், “இன்று, ஏதேதோ பொறிகளாம்! மின்சாரமாம் அவற்றை வேண்டியபடி மெதுவாகவும் விரைவாகவும் ஓட்டக்கற்றுக் கொண்டனராம்! இது ஒரு வியப்புக்குரிய செயலா? அன்று, நம் சம்பந்தர், மந்திரத்தையே தாம் விரும்பியபடி மெதுவாகவும் விரைவாகவும் ஓட்டியிருக்கிறார். அந்தக் காலத்து விஞ்ஞானத்
துக்கு, இந்தக்கால விஞ்ஞானம் எந்த வகையில் குறைந்தது, கூறுமின் பார்ப்போம்” என்று கூறி எக்காளமிடும் புராண விஞ்ஞானி கண்டுதான் வியப்படையவேண்டும்.

எனவே, இதுகாறும் கூறியவற்றால், கொல்லா விரதத்தை மேற்கொண்ட சமணர்கள் இந்தக்கொலைப் பாதகத்தை ஒருபோதும் செய்திருக்கமாட்டார்கள் என்பதும், பாண்டியன் தீ வைக்கும் கொடுமைக்கு உடந்தையாக இருந்திருக்கமாட்டான் என்பதும் புலப்படுவதோடு, வஞ்சனையில் மிகுந்து - ‘ஏவல்’ தொழிலை மேற்கொண்டு தகாக்காரியங்களைச் செய்த அக்காலச் சைவக்கூட்டமே இக்கொடுமையைத் துணிந்துசெய்து, பின்னர், அக்குற்றத்தைச் சமணர்களால் ஏற்றிப் பாண்டியனையும் ஏனையோரையும் சூழ்ச்சியால் தம்வழி திருப்பிச் சைவத்தை நிலைநாட்டினர் என்பதும் விளங்கும். ஆகையால், தீயிட்ட திருவிளையாடலை இவ்வளவில் நிறுத்தி, அடுத்த கட்டுரையில், நெருப்பில் இட்ட ஏடு வெந்து சாம்பலாகாமல் பச்சென்றிருந்தது பற்றியும், ஆற்றிலிட்ட ஏடு எதிர் சென்றது பற்றியும், அவற்றிற்கு அக்காலச் சைவமெய்யன்பராய்ச் சம்பந்தர் கையாண்ட முறைகள் பற்றியும் சமணப் பெருமக்களைக் கழுவில் ஏற்றிக் கொலை புரிந்த கொடுமை பற்றியும் ஆராய்வாம்.

13.10.1946