அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தென்னாட்டுக் காங்கிரசும் ‘நான்சென்ஸ்‘ ஆகிறது!

பண்டித நேரு பட்டம் சூட்டுகிறார்
மொழியார்வம் முட்டாள்தனமாம்
வெட்டவெளியில் வீசிய வார்த்தை

“நான்சென்ஸ்“! - இந்தச் சொல் அகில இந்திய ஜோதியாம் பண்டிதருக்குச் சொந்தமாகி விட்டது. சென்னைக்கு வந்து சென்றபோது, நம்மையெல்லாம் ‘நான்சென்ஸ்‘ என்றழைத்தார், அதனைப் பேலியாக்கிப் பிரசுரித்தன, தேசீய ஏடுகள்! பிரமுகர்கள், கிண்டல் செய்தார்கள், “பார்த்தேளேல்லியோ, பண்டித நேரு போட்ட போட்டை!“ என்ற பரவசத்தோடு. தூக்கிப் பார்க்கக் கிடைத்ததோர் ‘சந்தர்ப்பம் என்றெண்ணி, விறைப்பும் ஏளனமும் கலந்த பார்வையை வீசிக் காட்டினார்கள்! நாமோ, அவர்களின் சேட்டைகள் கண்டு, நகைத்தோம், அந்தச் சொல் என்றோம். அரசியல் வனில், ஒரு மீளாத களங்கத்தைப் பண்டிதர் ஏற்படுத்தி விட்டார். அந்தச் சொல்லை வீசிய ‘ஜார்‘ பரம்பரையின் பக்கம் அவரும் போக நேர்ந்ததே எனப் பரிதாப்பட்டோம். இனிமேலாவது இவ்வண்ணம் ‘எச்சில் இலை‘ வார்த்தைகளை எடுத்தெறியார்! தவறை உணர்வார் என நம்பினோம்.

“நீங்கள் நம்பலாம். ஆனால், அதன்படி நடந்து பழக்கமில்லையே எமக்கு! என்ற வீம்புதான் காரணமோ, அல்லது “உங்கள் யாவரையுமே அவ்விதம் தான் நான் மதிக்கிறேன்“ என்பதுதான் காரணமோ புரியவில்லை – மீண்டும், அதே ‘நான்சென்ஸை‘ வீசியிருக்கிறார். இம்முறை, நம்மீது அல்ல! நாம் வேறு தாங்கள் வேறு‘ என்ற வேற்றுமைக் கண்கொண்டு நம்மைக் கேலி செய்தார்களே, தேசீய நண்பர்கள், அவர்கள் மீது!

ஐதராபாத்திலே, நாணல் நகரிலே, கூடிய காங்கிரஸ் மாநாட்டில், தென்னாட்டுக் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை ‘நான்சென்ஸ்‘ என்ற நாமம் சூட்டி அழைத்திருக்கிறார், அலகாபாத்தார்.

மாநாடு, ‘வெட்ட வெளி‘யலே நடைபெற்றதாம்! அந்த வெட்ட வெளி‘ தாக்கிய வெப்பமோ அல்லது மாநாடு கூடிய இடம் ‘வெட்டவெளி‘யாகவே யிருந்ததாலோ தெரியவில்லை, வேகத்தோடு வீசியிருக்கிறார், அந்தச் சொல்லை.

மொழிவாரி மாகாணம் குறித்து தமிழ்நாட்டு நண்பர் ஆர்.வி.சாமி நாதன் பேசினாராம் – அதையொட்டி கன்னடிய நண்பர் ஒருவரும், தெலுங்குத் தோழர் ஒருவரும் பேசியிருக்கிறார்கள்.

இவர்களது பேச்சை ‘நான்சென்ஸ்‘ என்றார் – சினந்தார் – சீறினார், ஆசிய ஜோதி. அதுவும் சாதாரணமாக அல்ல, ஓர் அடைமொழி போட்டு – ‘ஆவேசங் கலந்த முட்டாள்தனம்‘.

பண்டிதரை, இத்தகைய ‘நான்சென்ஸ்‘ வீசச் செய்தோர், தென்னாட்டிலிருந்து சென்ற காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், தென்னாட்டிலிருந்து சென்றோர்‘ இவ்விதம் ‘இந்து‘ இதழே கூறுகிறது. அவர்கள் பேசினர்! அதனை ‘நான்சென்ஸ்‘ என்று சீறினார் – செப்பினார்.

“ஆமாம்! அர்த்தமில்லாமல் பேசினால் கோபம் வராதோ? வீணாக மொழி வெறிகொண்டு இங்கிருந்து சென்றோர், பேசியிருப்பர் அதனால், கண்டிக்க வேண்டிய வரானார். நேரு துரும்பைத் தூணாக்கிப் பிரதமாதப்படுத்துகிறாயே!“ என்று கேட்க நினைக்கலாம் சிலர்.

அவர்களை, ‘வெட்டவெளி‘க்குச் சிறிது அழைத்துச் செல்வோம்! ஜனவரி 17ந் தேதி காங்கிரஸ் விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில். மொழிவாரி மாகாணம் குறித்துத் தென்னாட்டினர் மட்டும் பேசவில்லை. வேறு சிலரும் பேசினர்!

ஆனால் தென்னாட்டினர் பேசும்போதுதான், பண்டிதர் குறுக்கிட்டாராம் – கோபித்தாராம் – ‘நான்சென்ஸ்‘ என்றாராம்.

ஆர்.வி. சாமிநாதன் பேசியது போன்றே குருமுக்கிங் பேசியிருக்கிறார்! லட்சுமிசந்த் பேசியிருக்கிறார்.!

அப்போது ‘நான்சென்ஸ்’ வீசவில்லை, பண்டிதர்.

ஆனால், ‘தென்னாட்டுப் பிரதிநிதி‘கள் பேசும்போது, ‘நான்சென்ஸ்‘ வந்து விழுந்திருக்கிறது.

குருமுக்கிங். பஞ்சாபை மொழிவாரி மாகாணமாக்காததால், சீக்கியர் இயக்கம் வளர்ந்ததென்று சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைமைத் தாக்கிப் பேசியிருக்கிறார் – ஆனால் ‘தலைமை‘ அவர்மீது ‘நான்சென்சை‘ வீசவில்லை. லட்சுமிசந்த் மீதும் வீசவில்லை ஆனால், தென்னாட்டார்மீது வீசியிருக்கிறது.

காரணம் என்ன? ஒருவர் சீக்கியர், அவர்தம் சீற்றம் கூடாதென்பதா! மற்றொருவர் மராட்டியர் விளைவு விபரீதம் ஆகுமென்பதாலா!

அவர்களைக் கண்டிக்கத் துணியவில்லை பண்டிதர். ஆனால் நம்மனோர் மீது மட்டுமே ‘நக்கல்‘ மொழியை எறிகிறார்!

சீக்கியரைவிட, மராட்டியரைவிடத் தென்னாட்டார் கோழைகள் என்பதாலா – இந்தக் கூற்றை, அவர் வீசியதற்குக் காரணம்.

முன்பு, நம்மீது! இப்போது, ‘அவர்கள்‘ என்று அழைக்கப்பட வேண்டும் என்ற ஆவலிலிருக்கும் தேசீய நண்பர்கள் மீது! - பொதுவாக தென்னாட்டின்மீது.

தென்னாட்டை, இவ்வளவு இளப்பமாகக் கருதுவதேன், பண்டிதர்?

‘திராவிடரியக்கத்துக்குச் சரியான சூடு கொடுத்தார்!‘ என்று சந்தோஷமடைந்தீர்களே, நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள் – ‘வெட்டவெளி‘ வீசுகிறது, வேதனையான சுடுசொல்! திராவிடரியக்கத்தின்மீது மட்டுமல்ல – உங்களையும் எங்களையும் தாங்கிக் கிடக்கும் தென்னாட்டின் மீது!

திராவிட நாடு – 1-2-53