அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தில்லைத் தீட்சிதர் திட்டம்!

மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளா? என்றல்லவா, கேட்டார் தீட்சிதர், தில்லைத்தலம் சென்று சிவலோக நாதனைக் கண்டு சேவிக்க விரும்பிப் பணிவுடன், உத்தாரம் தாரும் ஐயே! என்று கேட்ட நந்தனாரைப் பார்த்து. அவரோ, நாளைப் போகாமல் இருப்பேனா என்று கசிந்து கூறி, காலில் வெள்ளெலும்பு முளைத்த நாள் முதலாய் நான் அடிமைக்காரனல்லவா, என்று - அழுகுரலில் பேசிப் பார்த்தார். ஆணவத்துடன் தந்திர சுபாவமும் கொண்ட தீட்சிதர், ஒரு நிபந்தனை விதித்தார் - நாற்பது வேலி நிலத்தையும், உழுது பயிரிட்டு, அறுவடையும் செய்து முடித்து விட்டு, மார்கழி மாதம் திருவாதிரை நாள் காணச் செல்லடா நந்தா, என்று கூறினார். ஓரிரவில், நாற்பது வேலி நிலமும் உழுது பயிரிட்டு அறுவடையும் செய்தாக வேண்டும். இது நிபந்தனை. அன்று தீட்சிதர், நந்தனாருக்கு விதித்தது.

இன்று, இந்திய சர்க்காரை ஏற்று நடத்தும் காங்கிரஸ் கட்சியின் பெருந் தலைவர்களும், அவர்களை அர்ச்சிப்பதால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலையை உண்டாக்கிக் கொண்டு உழலும் ஏடுகளும், இதே முறையிலே, இப்போது இலட்சியவாதிகளுக்கு ஒரு நிபந்தனை விதிக்கின்றனர் - “சமதர்மபுரியைக் காணவேண்டுமா, சரி, காண அனுமதிக்கிறோம், ஆனால் ஒரு நிபந்தனை உண்டு, அதைக் கேளாய் தம்பி உற்பத்தியைப் பெருகச் செய். உன் கஷ்டங்களைக் கூறிக்கொண்டிராதே. இதுவன்று அதற்குச் சமயம். உனக்குத் தெரிந்த இலட்சியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிராதே, அது வீண் வேலை; உற்பத்தி பெருக வேண்டும் என்ற முக்கியமான நோக்கத்துடன், பாடு படு, உன் முழுத் திறமையைக் காட்டு, உள்ளன்போடு உழை; இந்தக் காரியத்தை நீ வெற்றிகரமாகச் செய்து முடித்தால், உற்பத்தி பெருகினால், நாட்டு மக்களின் கஷ்டமும், உன் கஷ்டமும் ஒழிந்து போகும்” என்று கூறுகிறார்கள்.

நாற்பது வேலி நிலமும் ஓரிரவில் பயிரிட்டாக வேண்டும் என்ற காரிய சாத்யமற்ற திட்டத்தைத் தீட்சிதர் கூறியதுபோலவே, தொழிலாளர்களிடம், உற்பத்தியைப் பெருகச் செய்தாக வேண்டும், என்று கூறப்படுகிறது.

எந்த முதலாளித்வ முறையின் கேட்டினாலே தொழிலாளி துயருற்று, உழைக்கும் சக்தியும் தொழில்தரமும் வாழ்க்கைத்தரமும் கெட்டுக் கிடக்கிறானோ, அதே முதலாளித்வ முறை, அதே தொழிலாளியைப் பார்த்து, களைத்துக் கீழே விழாதே - கண்ணீரைக் காட்டாதே - இலட்சியம் பேசாதே - உழைத்து உற்பத்தியைப் பெருக்கு - உறங்காதே! விழி! எழு! உழை! - என்று கட்டளையிடுகிறது. உழைத்து உழைத்து உருக்குலைந்து போய், ஓயாமல் உழைத்தும் உருவான பலன் தனக்கு ஏதும் கிடைக்காததால், உள்ளம் நொந்து போய், தன் உழைப்பின் பயனை உண்டு கொழுத்திடுபவர்கள் உல்லாசபுரியிலே உலவக் கண்டு மனம் வெந்து போய், இந்த நிலை மாறாதா, இதற்கோர் பரிகாரம் கிடைக்காதா, புது வாழ்வு பிறக்காதா அதற்கான இலட்சியத் திட்டம் துவக்கப்பட மாட்டாதா என்று ஏக்கத்துடன், கேட்கும் தொழிலாளியைப் பார்த்து, முதலாளித்வம், கூறுகிறது, உழைக்க வேண்டும்! மேலும் மேலும் உழைக்க வேண்டும்! பொருளை உற்பத்தி செய்து மலை மலையாகக் குவிக்க வேண்டும்! அதுதான் இன்று செய்யப்பட வேண்டிய கடமை! - என்று உபதேசம் செய்கிறது, உழைப்பாளியை உருக்குலைத்து வரும் முதலாளித்வம்.

பாட்டாளியின் வாழ்வு எவ்வளவு இருண்டு கிடக்கிறது, என்பது பற்றிக் கவலையற்று, அவனுடைய கண்ணீரைக் காண மறுத்து, இந்த நொந்த உள்ளத்தினால் எப்படி மேலும் மேலும் பாடுபட முடியும் என்பது பற்றிய எண்ணமும் கொள்ள மறுத்து, இரக்கமற்றுக் கூறுகிறார்கள், உற்பத்தியைப் பெருக்கு, அதுதான் உத்தமர் கடமை என்று. பாட்டாளியின் பாடுபடும் திறமை, அவனுக்குக் கிடைக்கும் வாழ்க்கை வசதியைப் பொறுக்கலாமா? கத்திபோல், பழுது பார்க்கப்படாத கலம்போல், தொழிலாளியின் திறமை, இன்று இருக்கிறதல்லவா? கத்தி சாணை தீட்டப்பட்டு, கலம் பழுது சரியாக்கப்பட்டு, பிறகுதான் காரியத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது போலத் தானே வறுமையால், வாழ்வு நொறுங்கி, அதன் விளைவாகத் திறமும் குன்றிப் போயுள்ள தொழிலாளிக்கு, வாழ்வை நொறுக்குமளவு உள்ள வறுமை நீக்கப்பட்டால் மட்டுமே, திறமை வளர முடியும், திறமை வளர்ந்தால் மட்டுமே, உற்பத்தி பெருக முடியும், அவனுடைய வாழ்விலே துளியும் வளம் இன்று இல்லாததற்கு எது காரணமோ, அந்தக் கேடு களைந்தால்தானே, அவன் நிம்மதி பெறமுடியும்! அந்தக் கேடுதானே முதலாளித்வ முறை! - என்பதை மறைத்துவிட்டு, பாட்டாளியைப் பார்த்து, உழைத்து அலுத்துப் போயிருக்கும் ஓட்டாண்டியைப் பார்த்து, தொழில் திறமையும் குன்றிப் போயுள்ள நடமாடும் வறுமையைப் பார்த்து, உழைத்து உற்பத்தியைப் பெருக்கு! திறத்தோடு வேலை செய்! பொருளை மலை மலையாகச் செய்து குவி! - என்று கட்டளையிடுகிறார்களே, இவர்களின் கன்னெஞ்சத்தை என்னென்பது.

பாட்டாளியின் வறுமைக்குக் காரணம், அவன் உழைத்து உருவாக்கும் பலனை, அவன் அடைய ஒட்டாதபடி தடுத்து, இடையே உள்ளவர்கள், தமதாக்கிக் கொள்கிறார்கள், அந்த முதலாளித்து வந்தான், மூலகாரணம், பாட்டாளியின் வாழ்வு பாழாவதற்கு, என்ற அடிப்படைத் தத்துவத்தை, அறிஞர் உலகு பன்னெடு நாட்களுக்கு முன்பே ஏற்றுக்கொண்ட தத்துவத்தை, ஆயிரமாயிரம் மேடையிலே, இதே காங்கிரஸ் தலைவர்கள், அடிவயிறு வலிக்க வலிக்க எடுத்துப் பேசிய தத்துவத்தை, இன்று தூக்கி மூலையில் வீசிவிட்டு, தொழிலாளருக்குள்ள துயருக்குக் காரணம் வறுமை - அந்த வறுமைக்குக் காரணம், பொருள் உற்பத்தி பெருகாதது, எனவே தொழிலாளியின் துயரம் போக வேண்டுமானால் பொருள் உற்பத்தி பெருக வேண்டுமானால் நடத்த முனையுமானால், இப்போதுள்ளது போல உள்நாட்டு முதலாளிகளின் மனம் கோணும் என்பது மட்டுமன்று பிரச்னை, ‘சிக்கல்’ சர்வதேசீயப் பிரச்னை அளவுக்குச் சென்றுவிடும். இருபதாண்டுகள், இந்தியாவைக் குத்தகைக்கு எடுக்க விரும்பும், இந்திய முதலாளிகளில் முக்கியமானவர்கள், முன்னணியினர், அமெரிக்க முதலாளிகளின், பங்காளிகள். டாலர் ஏகாதிபத்யத் திட்டத்தின் ஒரு சிறு பகுதிதான், இன்று இங்கு ஏற்பட்டு வரும் சமதர்ம பழிப்புத் திட்டம்.

டில்லி, பார்லிமெண்டில், உள்ள உரம் படைத்த உறுப்பினர் ஒருவர், நிதி மந்திரி சண்முகத்தை நோக்கி, “ஏனய்யா, முதலாளித்வமுறையை ஊட்டி வளர்க்கிறீர்? ஏன், உள்நாட்டு முதலாளிகளிடமும், வெளிநாட்டு முதலாளிகளிடமும், கடன் வாங்கி, தொழில்களைத் துவக்கும் திட்டம் தீட்டுகிறீர்? ஏன், தனிப்பட்ட முதலாளிகளின் தொழில்களைச் சர்க்காரே ஏற்று நடத்த முற்படக்கூடாது?” என்று மார்ச் 16ந் தேதி கேட்டார். நிதி மந்திரி, தம்முடைய நேர்த்தியான புன்னகையிலே ஒன்றைத்தான் பதிலாக அளித்திருப்பார். அங்கு ஓர் அஞ்சாநெஞ்சுடைய அறப்போர் வீரன், கேட்டது போதாது - பலனும் விளையாது. நாடு, கேட்க வேண்டும் அந்தக் கேள்வியை; நாட்டின் முற்போக்குச் சக்தி, உரிமைப்போரின் ஈட்டி முனை, என்றெல்லாம் சிறப்புப் பெயரிட்டழைக்கப்படும், வாலிபர்கள் கேட்கவேண்டும் அந்தக் கேள்வியை. நிதி மந்திரியை மட்டுமன்று - அவர் வசந்தா ஆலைக்கு அதிபர், அதனை அனைவரும் அறிவர் - ஆளவந்தார் அனைவரையுமே கேட்கவேண்டும், “ஏன் முதலாளித்துவ முறையை இப்போது, இவ்வளவு வெளிப்படையாக, ஆதரிக்கிறீர்கள், கட்டிக்காத்திட முனைகிறீர்கள், அன்பூட்டிப் பாராட்டுகிறீர்கள்; வெட்கமற்று; உண்மையை ஊரார் ஒருநாள் உணர்ந்து கொள்வார்களே! அப்போது நம்மைப்பற்றி என்ன எண்ணுவார்கள் என்ற அச்சமுமற்று!” என்று கேட்க வேண்டும்.

“ஆமாம்! கேட்கத்தான் வேண்டும். கேட்பதற்காகத்தான், சமதர்மிகளின் தலைவர், ஜெயப்பிரகாசர் வந்திருக்கிறார், மதுரையில் மாநாடு கூட்டினார், தமிழகத்தில் சுற்றுப்பயணம் நடத்துகிறார்,” என்று ஆர்வத்தோடு கூறும் இளைஞர், நமது மனக்கண் முன் நிற்கிறார். அவருடன் உரையாடல் நடத்திக் காணும் கருத்தினை, அடுத்த இதழில் தீட்டுவோம்.

4.4.1948