அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திண்டாட்டம்!

நாடாள வந்திருக்கிறோம் நாங்கள்-நாங்கள் யார் தெரியுமோ-குடியாட்சி கோமான்கள்! மக்களின் மதிப்பை பெற்ற மகான்கள்! நாட்டு மக்களின் பிரதிநிதிகள் நாங்களேதான். இதில் சந்தேகமில்லை.

நாட்டு மக்கள் எங்களைத் தான் ஆட்சி பீடத்தில் அமர்த்தி ‘அழகு பார்க்க எண்ணினார்கள்-அதனைச் செய்தும் பார்த்து விட்டார்கள்!

குடியாட்சி தினம் கொண்டாடுகிறார்கள், ‘குதூகலத்தோடு!’ மக்கள்!

உணவு கேட்டால் தடியடி தந்தோம்! நூல் கேட்டனர், ஆடை நெய்ய, துப்பாக்கியை நீட்டினோம்! உரிமை கேட்டனர்-சிறையைக் காட்டினோம“!

கூட்டங்களுக்குத் தடை போட்டு வருகிறோம் பெருமிதமாக நாடகங்களை நடத்தாதே என்று கட்டளைகள் பிறக்கின்றன எங்கள் ஆட்சியில் புத்தகங்கள் எழுதுவோரை விடுகிறோமா-வெளியிட்டவரை, அச்சிட்டவரை, அட்டைப் படம் வரைந்தவரைக் கூட விடுவதில்லை எல்லோர் மீதும் வழக்கு-தண்டனை அபராதம் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு!

குடியாட்சியின் மாண்புகளை எல்லாம் கூறிடப் போமோ- ‘அனுமார்வால்’ போல நீளுமே- ‘ஆதி சேட’ நாவினருக்கே முடியாதே!...

குடியாட்சி தினத்தில் இப்படிப் படித்திருக்கவேண்டும் படிக்கவில்லை.

உண்மையை, உள்ளபடியே கூறுவதானால், இப்படித்தான் அவர்கள் ‘ஆட்சி அறிக்கை’ அமைந்திருக்கும்.

உண்மைக்குத்தான் மதிப்பில்லையே! ஆகவே வேறு கூறினர் ஏதேதோ, உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றையும்!

கொண்டாட்டம் நடத்தினர்-இந்தியா குடியரசாகி ஓராண்டு முடிந்துவிட்டதால், சென்ற திங்கள் 26ம் நாள், நாடெங்கும்! ஆட்சியாளரின் கொண்டாட்டத்தைக் கண்டு நாடு வேடிக்கை பார்த்தது!

குடியாட்சி ஆனால் குடி மக்களோ, குதூகலத்துடன் இல்லை! ஆனால் கொண்டாட்டம் நடத்தினர் ஆள வந்தார்.

ஓராண்டு முடிந்து விட்டது என்று ‘காலண்டர்’ காட்டிற்று. ஆகவே, கொண்டாடினர்-மக்கள், குடியாட்சி பெற்றதால் குதூகலித்து விடவில்லை அதற்காக கொண்டாட்டம் நடத்தவில்லை.

விழா என்றால், மகிழ்ச்சி அங்கு நிறைந்திருக்க வேண்டும்! கொண்டாட்டம் ஆனால் அங்கு குதூகலமில்லை!

தேதி பார்த்து திருவிழா நடத்தினரே தவிர, களிப்பு மிகுதியில் கொண்டாட்டம் நடத்தவில்லை.
ஆட்சியாளரின் அலுவலகங்களிலே, ‘ஆனந்தப் பள்ளு’ பாடப் பட்டதே தவிர, மக்கள் மன்றத்திலே மகிழ்ச்சியில்லை.

ஆட்சியாளரின் கட்சியினர், ‘குதூகல வேடம்’ போட்டுக் காண்பித்தனர் மக்கள் அவர்களை மதிக்கவில்லை.

எங்கும் பசி-பட்டினி! அதனைத் தீர்த்து வைக்க முடியவில்லை.

நூல் இல்லை-ஆகவே தொழிலாளி வாடுகிறான். அந்த வாட்டத்தைப் போக்க முடியவில்லை.

நாட்டு வளத்தைப் பெருக்கமுடியவில்லை. நல்வாழ்வு தரமுடியவில்லை. மக்கள் துயரங்கள் மறைய மார்க்கமில்லை. துன்பத்திலே மூழ்கிக்கிடக்கிறார்கள். அவர்களைக் காக்க முயற்சி காணோம்.

ஆனாலும், குடியாட்சியாம்! இதற்குக் கொண்டாட்டமாம்!

வாழ்வு தருவதிருக்கட்டும் உரிமையாவது தந்துள்ளனரா? இல்லையே! எப்படி மகிழ்ச்சி இருக்கும்? மகிழ்ச்சி இருந்தால்தானே, மக்கள் கொண்டாடுவர்.

குடியாட்சி என்றால் மக்களுக்காக, மக்களாலேயே ஆளப்படும் மக்களின் ஆட்சியாகும்! ஆனால் அந்நிலையில்லை.

மக்களின் ‘பிரதிநிதி’ என்ற பெயரில் ஒரு ‘கட்சி கூடாராமாகி’ விட்டதே, ஆட்சி-மக்களுக்காக ஆள்வதாகச் சொல்கிறார்கள். ஆனால் மக்களின் உரிமைகளை மதித்திடவே இல்லை. இது மக்களின் ஆட்சியென்றால் யார் ஒப்புவர்-எவர் ஏற்றுக் கொள்ள முடியும்?

மனிதனின் அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து விட்டார்கள்.

எண்ண, பேச எழுதக் கூட உரிமையில்லை.

கூட்டங்களுக்குத் தடை நாடகங்களை நடத்தாதே என உத்தரவு ஏடு எழுதுபவர்களை மட்டுமல்ல, வெளியிட்டவர், அச்சிட்டவர், எல்லோரையும் வழக்கு மன்றத்திற்கு இழுத்து வந்தனர்.

‘இது ஆகுமா’ என்றால் சிறை-அது மட்டுமா, குன்றத்தூரிலே, குண்டு பேசிற்று!

வாழ்வு தரவில்லை! உரிமையும் பறிபோய்விட்டது!!

கொண்டாட்டம் நடத்துகிறது, காங்கிரசாட்சி-மக்களோ திண்டாட்டம் போடுகின்றனர்.

பசியால் வாடுகின்றனர்-வறுமையால் வதைகின்றனர்-அவர்களை வாழ்வித்து உள்ளத்திலே களிப்பும், நாட்டிலே செழிப்பையும் ஏற்படுத்தி விட்டால், தினமும் திருவிழாதான், கண்டநேரமெல்லாம் கொண்டாட்டந்தான்!

தேதி வந்துவிட்டது, திருவிழா கொண்டாடு என்றால், ‘திண்டாட்டம் போடுகிற நாங்கள், கொண்டாட்டம் எப்படி நடத்துவது’ என்று தானே மக்கள் கேட்பர்.

மக்கள் கேட்கவில்லை-கேட்டால் தான் ‘குடியரசு தினம்’ கொண்டாடிய கோமான்கள், உடனே அடக்கு முறையை அழைத்து வந்துவிடுகின்றனர்-ஆர்ப்பாட்ட புரியினராக மாறிக் கொள்கின்றனர்.
குடியரசு தினம் கொண்டாடுகிறார்கள் ஆட்சியாளர்- ‘தடியரசால்’ திண்டாடுகின்றனர் மக்கள்.

குடியரசு தினம் கொண்டாடியவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் நாட்டு நிலையை-பார்த்தால், கொண்டாட்டம் நடத்த நினைக்க மாட்டார்கள் நாட்டு மக்களின் திண்டாட்டத்தை துரத்திடத்தான் முனைவர்.

(திராவிடநாடு 4.2.51)