அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திருக்கழுக்குன்றத்தில் கருப்புக்கொடி!

கழகத்தோழர்களுக்குக் காவல்
பொதுமக்கள் வீராவேசம்

10.9.50 காலை டில்லி மந்திரி திவாகர் சரித்திரப் புகழ்வாய்ந்த மகாபலிபுரத்தைப் பார்க்கச் சென்றார். அவர் வருகிறார் என்ற செய்தி திடீரென்றுதான் கிடைத்தது என்றாலும், வீதிகளெல்லாம் “திவாகரே திரும்பிப்போ” திராவிடநாடு திராவிடருக்கே” என்ற எழுத்துக்கள் நிறைந்திருந்தன. மகாபலிபுரம், சிறிய ஊர் என்றாலும் டில்லி மந்திரியை கருப்புக்கொடிகள் தான் வரவேற்றன! மக்கள் கரங்களில் மட்டுமல்ல, வீடுகளின் கூரைகளிலும், வழிநெடுக இருந்த மரக்கிளைகளிலும் கருப்புக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

திருக்கழுக்குன்றம்
மகாபலிபுரம் தந்த ‘கருங்கொடி’ வரவேற்பைப் பெற்றுக்கொண்ட டில்லி சர்க்கார் மந்திரி திவாகர் காலை 10 மணி சுமாருக்கு திருக்குக்குன்றம் திரும்பினார். கருப்புக்கொடி காட்டத்தக்க ஏற்பாடுகள், கழகத்தோழர்களால் பிரமாதமாகச் செய்யப்பட்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழக வீரர்களும் வழிநெடுக கருப்புக்கொடிகளோடு தயாராக கால்கடுக்க, நின்று கொண்டிருந்தனர்.

காலையில் 8 மணிக்குத்தான் திவாகர் திருக்கழுக்குன்றம் வருவதாகக் கழகத்தோழர்களுக்குச் செய்தி கிடைத்தது. டில்லி மந்திரிவர இடையில் 2 மணி நேரம்தான் அவகாசம் இருந்ததென்றாலும், கோயில்பட்டி தீர்மானப்படி கருப்புக்கொடி காட்டவேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்.

காவலில் தோழர்கள்
அந்த நேரத்தில் போலீஸ் டி.எஸ்.பி.யும், செங்கற்பட்டு சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், திராவிட முன்னேற்றக் கழக மத்திய செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் சி.பஞ்சாட்சரம் சி.எம். கண்ணபிரான், திருக்கழுக்குன்ற தி.மு.க.துணைச்செயலாளர் தோழர் பி.நடேசன், செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் எம்.எஸ்.மணி, எஸ்.ரகுநாதன், கா.சோமசுந்தரம், வி.முருகன், டி.என். வேதாசலம் முதலியவர்களை அழைத்து கருப்புக்கொடி காட்டக் கூடாதெனத் தடுத்தனர்.

“கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை. ஏன் காட்டக் கூடாதென்கிறீர்கள்?”

“அதெல்லாம் தெரியாது-கூடாது என்று மேலதிகாரி களிடமிருந்து தகவல் வந்திருக்கிறது.

“அந்தகவலின் படி தான் எங்களைத் தடுக்கிறீர்களா?”

“ஆமாம்!”

“நீங்கள் உங்கள் மேலதிகாரிகள் தகவலை நிறைவேற்ற விரும்புகிறீர்கள். அது போலவே எங்களது மேலிடமாகிய, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக் கழகம், டில்லி மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டுமாறு எங்களுக்கு திட்டம் தந்திருக்கிறது. அது ஜனநாயகத்துக்கு கட்டுப்பட்ட முறை ஆகவே...”

போலீஸ் அதிகாரிகள், கழகத்தவர் தீவிரமாக இருப்பதைக் கண்டதும் மேற்படி எட்டு பேர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று காவலில் வைத்தனர்.

தீ மூண்டது!
கழகத் தோழர்களைக் காவலில் வைத்ததால் ஆத்திரத் தீ ஊர் முழுவதும் பரவியது. அதன் விளைவாக நூற்றுக் கணக்கான வீரர்கள் கருப்புக்கொடி தாங்கி, திவாகர “வந்ததும் மலையடிவாரத்திலும், ஏரிப்பேட்டையிலும், டிரங்க் ரோடிலும், ‘திவாகரே திரும்பிச் செல்லும்’, ‘திராவிட நாடு திராவிடருக்கே, “வடநாட்டாதிபத்தியம் ஒழிக’ என்று பேரொலி எழுப்பினர். திவாகர் காரை நோக்கியும் கருங்கொடிகள் வீசப்பட்டன.
திருக்கழுக்குன்றத்தை விட்டுப் போகும் வரையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

தோழர்கள் விடுதலை!
காவலில் வைக்கப்பட்டிருந்த தோழர்கள் அனைவரும், திருக்கழுக்குன்றத்தை விட்டு திவாகர் சென்ற பின்னர் 10.15 மணிக்கு வெளியே விடப்பட்டனர்.

(திராவிட நாடு.17.9.50)