அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘திருமேனி‘கள் செயல்!

‘தேவ கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் திருமேனிகளுக்குச் சாஷ்டாங்க நமஸ்காரம் இப்பவும் தாங்கள் எல்லாம் கூடி முடிவு செய்தாததாக ஒரு சமாசாரத்தைப் பத்திரிகையில் படித்தேன். அறிவும், திருவும், உருவும் – அதற்கு மேலாக எம்பிரான் ஏழுமலையானைத் தரிசிக்கும் பாக்கியமும் பெற்ற தாங்களா இவ்விதம் செய்தீர்கள் என, என் ஆன்மா துடித்தது. சர்வவியாபியாய் நிறைந்திருக்கும் வெங்கடாஜலபதியின் தாசனாகிய நான், அது சம்பந்தமாக விக்ஞாபனம் ஒன்றைச் சமர்ப்பிக்கிறேன். கால நிலையை அனுசரித்து யுக்தானுசாரம் நாமெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்.“

இவ்விதம் எழுதியிருக்க வேண்டிய கடிதம்! ஆனால், அனந்தசயனம் கொஞ்சம், ஆத்திரமும் அவசரமும் கலக்க, வேறு வார்த்தைகளில் எழுதியிருக்கிறார். வேறு யாருக்குமல்ல! திருப்பதி – மலைக்கோயில் தர்மக்கர்த்தாக்களுக்கு அதைக் கண்ணுற்ற அவர்கள் சீறினராம் – ‘போடு குப்பையில்!‘ என்று குமுறினராம் தோழர் அனந்தசயனம், பார்லிமெண்டு உறுப்பினர்! பார்லிமெண்டின் உதவி சபாநாயகர்!! - அதனால் தனக்குப் பழக்கப்பட்ட இரண்டொரு வார்த்தைகளை வலியுறுத்தி, மேற்படி கடிதத்தைத் தீட்டியிருக்கிறார். அந்த வார்த்தைகள், “எம்பிரானைப் பராமரிக்கும் தர்மகர்த்தாக்களைச் சீறியெழச் செய்திருக்கிறது. அரசவையில் அமர்ந்திருக்கும், அனந்தசயனம் அப்படியென்ன காரசாராக எழுதியிருப்பார் என்று கேட்கலாம். “ஏழுமலையானுக்கு ஏனிந்த வைர முடி? எடுத்து அதைப் பணமாக்குங்கள்! உண்டியில் குவியும் இலட்சக்கணக்கான ரூபாய்களை உடனுக்குடன் பணக்கஷ்டத்தால் திண்டாடும் பிரதமர் நேருவுக்கு அனுப்புவீர்!) இடமில்லை யென்று அலையும் ஏழை மாணவர்களுக்கு இன்னொரு கல்லூரி அமைத்துத் தருவீர்9“ – இப்படியெல்லாம், எழுதக் கூடிய ஆசாமியா அவர்? ஆகவே, தர்மகர்த்தாக்கள், மனமும் தொந்தியும் கொதிக்கக்கூடிய இந்த வார்த்ததைகள் எதையும் அவர் தீட்டவில்லை. ஆனாலும், தர்மகர்த்தாக்கலள், அவரது கடிதத்தைச் மதிக்கவில்லை – கோரிக்கையை மறுத்து விட்டார்கள். அவ்விதம், தர்மக்கர்த்தாக்களின் கோபாக் கினியைக் கிளறக் கூடிய விதமாக, அனந்தசயனம் எம்.பி. எழுதிய அந்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

பொதுஸ்தாபம்
அங்கு நடக்கும் காரியங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும்.
நாடெங்குமுள்ளோர் காணிக்கை செலுத்தும் இடம்.

இந்த, வார்த்தைகள் மூலம் , தனது எண்ணத்தைத் தெரிவித்திருக்கிறார். இவை உங்களுக்கும் நமக்கும் சாதாரணமானவைதான்! அன்பர் அனந்தசயனம் கூட ‘ஜனநாயகம்‘ பேசப்படும் இந்த யுகத்தில், இந்தச் சாதாரண ஆலோசனையை ஏற்கத் தயங்கார், தர்மகர்த்தாக்கள் என்ற கருத்துடன்தான், கடிதத்தைத் தீட்டியிருப்பார்! ஆனால் அவருக்கு அஞ்சக்கூடியவர்களா ‘நமது‘ தர்மகர்த்தாக்கள்! ஆண்டவன் ‘பட்ஜட்டை‘ வகுப்பவர்களாயிற்றே! எப்பேர் பட்டவர்கள்) எத்தனை சில்லரைக் கோயில்களின் ‘பட்ஜெட்‘ பராமரிப்புக்குப் பின் திருப்பதியானுக்கு “சேவை“ செய்ய, அமர்த்தப்படுகிறார்கள். ஆலோசனை கூற அனந்தசயனம் யார்? அந்த வட்டாரத்துப் பார்லிமெண்டு உறுப்பினராயிற்றே, என்பீர்கள்9 உண்மை அதுமட்டுமல்ல உங்களையும் நம்மையும் போலக் கோயிலாருடன் மோதிக்கொள்ளும் குணம் படைத்தவருமல்ல. பக்திமான், பரமாத்மாவின் திருப்பெயரைத் தாங்கியவர். அடிக்கடி பரமதயாளனின் பாதார கமலங்களைச் சேவிக்க, மலைப்படிகளில் ஏறி இறங்குபவர். அரசுப் பொறுப்பேற்றிருக்ப்போரோடு கூடியுலவும் கியாதி பெற்றவர். கீர்த்தி மிக்கவரும் கூட – வைணவர் குழாத்தில் ஏழுமலையானுக்குத் தீங்குவரினும் சகியாத சற்புத்திரர்களின் முதல் வரிசையில் இருப்பவர். அவரது, விருப்பத்தை – அல்ல! அல்ல!! வேண்டுகோளை – நிராகரித்து விட்டனர், “யார், இவன் யோசனை கூற?“ என்று, கடிதத்துக்கு மதிப்பளிக்கவில்லை. காரணம், அனந்தசயனம், தாம் இருக்கும் பார்லிமெண்டுச் சூழ்நிலையை யொட்டி, பரமனைப் பாதுகாப்போருக்கு, இரண்டொரு விஷயங்கள் ஞாபகமூட்டியதுதான். அவர் நினைவூட்டிய வாசகங்கள்.

கோயில் ஒரு பொதுஸ்தாபனம், அதை நிர்வகிப்போரின் நிர்வாக விஷயங்கள் நாட்டுக்குத் தெரிய வேண்டும்.

அதற்கான வகையில், தர்மகர்த்தாக்கள் கூடும் கூட்டங்களுக்குப் பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்க வேண்டும்.

இவைதான் இதை நிராகரித்திருக்கிறார்கள். அனந்த சயனம் மட்டுமல்ல, தென்னிந்திய பத்திரிகையாளர் சம்மேளனத் தலைவரும், தர்மகர்த்தாக்களுக்கு, பத்திரிகை நிருபர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறார். “பத்திரிகை பாமராளுக்குத்தானே! பரமன் விஷயத்தை பாமர ஜனங்களுக்கு எதற்குச் சொல்லுவது“ எனும், முடிவோடு, ஆகஸ்டு 22ந்தேதி நடைபெற்ற மேற்படி கோயில் தர்மகர்த்தாக்கள். இருவர் வேண்டுகோளையும் புறக்கணித்து விட்டு, “இனி எந்தப் பத்திரிகை நிருபரையும் எமது கூட்டங்களில் அனுமதியோம்“ என்று தீர்மானமாகத் தெரிவித்து விட்டனர். பாமர ஜனங்களுக்கு பரமன் விஷயத்தை சொல்லக்கூடாது என்றெண்ணி, இம்முடிவு, செய்யப்பட்டதோ, வென்று பார்த்தால் மேற்படி தர்மகர்த்தாக்களில் எவரும் முற்றும் துறந்த முனிபுஙக்வரல்ல! முவாசையையும் ஒழித்து, நரை முதிர்ந்து, ‘நாதன் தாளடி பணி மனமே‘ என்று பஜனை பாடும் பயதினருமல்ல! மேற்படி தர்மகர்த்தாக்களின் தலைவர் வட பாதி மங்கலம் “மைனர்“ என்று அழைக்கப்படும் ஆரூர் தியாகராஜ முதலியார்! ஆயிரக்கணக்கான சொந்த நிலமும் அதற்குச் சமமான கோயில் நிலமும் கொண்டு வாழ்பவர்! தஞ்சைச் சீமான்! சமீபத்தில் “தேசீய குளத்தில்“ மூழ்கி “எப்போது கிடைக்கும் பதவிமோட்சம்“ எனும் அவலில் உந்தப்பட்டுக்கிடப்பவர். இத்தகையவர் தலைமையில் இயங்கும் தேவஸ்தானத்து கர்த்தாக்களை, எல்லாம் துறந்தவர் என எப்படிச் செப்பமுடியும்? ஆகவே, பரலோகத்துக்குப் பாதை வகுத்துத்தரும் பக்குவ வயதினரல்ல, இருந்தும் ஏன் இந்த அனுமதி மறுக்கப்படவேண்டும், பத்திரிகையாளருக்கு? தர்மகர்த்தாக்கள் கூடிப்பேசும்போது நிருபர்கள் இருந்தால் என்ன? நிருபர்கள் என்ன நெருப்பா! நீசர்களா! அருகதையற்றவர்களா! அல்லது, “ஆண்டவனே வந்து அவர்கள் வரக்கூடாது‘ என்று தர்மகர்த்தாக்களின் கனவில் கூறிச் சென்றாரா? என்ன காரணம் இருக்க முடியும், இந்தச் செயலுக்கு! - “பொது ஸ்தாபனம் கோயில், அதன் விபரங்களை மூடி வைக்காதீர்கள்“ என்கிறார், அனந்தசயனம். ‘கோயிலின் நலன்களில் மக்களுக்கு கவலை உண்டு – மக்களைப் பிரிக்காதீர்கள் கோயில் விபரம் பெறக்கூடாமல்“ – என்றும் எழுதியிருக்கிறார். ஆனால், தர்மகர்த்தாக்கள் மறுக்கிறார்கள், இந்தச் சலுகையை! காரணம் என்ன கூறமுடியும்? தர்மகர்த்தாக்கள் கூட்டத்தில் நடப்பவை மக்களுக்குத் தெரியாமல் தடுக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் எழுவதேன்?

பொது ஸ்தாபனம் நிர்வாகத்தையேற்றோரிடையில் “இரக்1யம்“ காக்கப்பட வேண்டுமென்று கருதுவதேன்? “இரகஸ்யம்“ என்ற வார்த்தை எழுந்தாலே உள்ளுக்குள் ஏதோ, நாற்றம் என்றன்றோ, கருதப்படும்! அத்தகைய ‘நாற்றம்‘ ஏதாவது, அங்கு அடிபபதுண்டா? ‘ஆம்‘ எனில் அதை மூடி வைத்தே, காலத்தைக் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் தர்மகர்த்தாக்களுக்கேன் ஏற்படவேண்டும். அகில உலகையும் காத்து ரட்சிக்கும் எம்பிரானுக்கு அனுதினமும் நடைபெறுகின்ற பூசனைகளையும், அர்ச்சனைகளையும், கண்காணிக்க வேண்டிய திருக்குழாம் இதுபோன்ற நடவடிக்கைகளையெடுப்பதேன்! அதிலும், திருப்பதியார் சாதாரண கடவுள் அல்ல. ஏராளமான வருவாய்களை உடையவர். அவரது நிர்வாகக் குாாம், ஒரு தனிசர்க்கார் எனலாம். அவ்வளவு பணம் குவியும் ஒரு ஸ்தாபனத்தின் போர்டு கூடும்போது, அந்தக் கூட்டங்களுக்குப் பத்திரிகையாளர் போகக்கூடாதாம் வந்தால் அனுமதியோம்! என்று முடிவு செய்திருக்கிறார்கள். பக்தர் அனந்தசயனம், ‘ஜனநாயகம்‘ என்னும் சொல்லை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். ஆனால் கோயிலாரோ, மறுத்துவிட்டார்கள். அவரும் பக்தர்! இவர்கள் பக்தர்களின் எண்ணிக்கையைம் பணகூருவாயையும் கணக்கிடடுப் பார்க்கும் தர்மகர்த்தாக்கள்! பக்தர் கோருகிறார் – பரிபாலனம் செய்வோர் மறுக்கிறார்கள். என்ன காரணம் என்று யோசித்துக் கூறுங்கள்!

திராவிட நாடு – 31-8-52