அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திருமுகம்!-1955

திருநாள் கொண்டாடும் தோழர்காள்!

பொங்கற் புதுநாள், ஆண்டுக்கொரு முறை நாம் காணும் திருநாள், திரு இடத்தவருக்குத் தக்கதொரு பொன்னாள்!

இந்நாள் இன்புற்று, அந்த இன்பம் எந்நாளும் இருந்து மகிழ்வளித்தல் வேண்டும் என்று விரும்புகிறேன்.

எங்கிருந்தோ இன்றுமட்டும் வந்து இன்மொழி பேசும் இந்த விழாக்கோலம், மனை எலாம், என்றும் நிலைத்திருக்கக் கூடாதா என்று, எண்ணுவோரில் நானும் ஒருவன் - இல்லையே என்பதறிந்து, ஏங்கித் தவிப்பவர்களில் நானொருவன் - உங்களைப் போலத்தான்.

இன்றுகூட, இன்பம் தம்மை நாடி வராததால், தேடித் தேடிப் பார்த்துத் தேம்பிக் கிடப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள்! பால் பொங்கிற்று - என்ற கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் வேறு பக்கம் பார்வையைச் செலுத்துவோர் இருக்கத்தான் செய்கிறார்கள் - கண்ணீர் பொங்குவதை நாம், இன்றாவது காணாமலிருத்தல் நல்லது என்று எண்ணுகின்றனர், கண்ணியர்கள்.

ஊருக்கோர் விழாவாமே - உழைத்தவனை உயர்த்திப் பேசிடும் விழாவாமே - இந்த நாளில், நாமும், விழாக் கொண்டாட முயலவோ, வறுமை வெளியே தெரிய ஒட்டாதபடி மறைத்து, வாட்டத்தை - வருத்தத்தை மூலையில் இருக்கச் செய்து, முறுவலை வரவழைத்துக்கொண்டு, நாட்டின் விழாக் கோலத்தில் நாமும் கலந்து கொள்வோம் - ஒப்புக்காகவாவது - என்று எண்ணிடும் குடும்பம் எத்தனை எத்தனையோ!!
விழாக்கோலத்தன்று, நமது வேதனையை வெளியே தெரியவைத்து, காட்சிக்குக் களங்கம் உண்டாக்குவானானேன் என்று எண்ணிப் புன்னகையைப் போரிட்டு வரவழைத்துக்கொண்டு, விழாவில் நுழைகின்றனர், பலர் பலப்பலர்.

நாடு முழுதும் விழாக்கோலம் கொண்டாடும் நாள் வரவில்லை - விரைவில் வரும் என்பதற்கான அறிகுறியும் பளிச்செனத் தெரியக் காணோம்.

உள்ளதைக் கணவன் உண்ண இட்டுவிட்டு, அவன் உள்ளன்புடன், “உன் வேலை முடிந்ததோ?” என்று கேட்கும்போது, “முன்பே!” என்று கூறிவிட்டு, அமுதளித்த அணங்கு அவன் ஆனந்தம் பெறக்கனிவும் தந்து, தண்ணீர் பருகிவிட்டு, தாலாட்டும் திருத்தொண்டுக்குச் செல்லும் காட்சி, நெஞ்சை நெக்கு நெக்குருகச் செய்வதன்றோ!

நாடு இன்று உள்ள நிலையில், விழா நிகழ்ச்சி இதனினும் மிகுதியான உள் நெகிழ்ச்சியைத் தருவதாகவே அமைந்திருக்கிறது.

மேட்டுக்குடியினருக்கு. இந்த விழா ஒரு பிரமாதமன்று! அவர்களுக்கு வாழ்வே விழா!!

அடித்தளத்தில் உள்ளவர்களுக்கு விழா, சொல்லளவிலும், ஊருடன் ஒட்டிப் பேசும் முறையிலும் தான்.!

நடுத்தரத்தினர், முறுக்குக் குறைந்த நரம்புகளைத் தடவிக்காண்டே யாழிடம் இன்னிசை வேண்டி நிற்கும் பான்மைபோல, வாழ்க்கைச் சிக்கல்களை அகற்றிட முடியாத நிலையில், ஏதோ ஒரு வகையில், விழாக் கொண்டாடுகின்றனர்.

அந்த அளவு இன்பமாவது, அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயல்வோர் யாராயினும், அவர்கள், நமது வணக்கத்துக்கு உரியர்! வாழ்த்துவோம் அவர் தமை!

தி.மு.க. மூலம் என்னுடன் ‘தோழமை’ பூண்டுள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு, நான் அனுப்பிடும் பொங்கற் புதுநாள் வேண்டுகோள் இதுதான் - அடித்தளத்தில் இறுத்தப்பட்டு அவதிக்கு உள்ளாகிக் கிடப்போருக்கு, முழு வாழ்வு கிடைக்கச் செய்யும் பணியாற்ற வேண்டும் என்ற உறுதிப்பாடு, இன்று வேண்டும். அதுநாளும் வளரவேண்டும்.

இயற்கை வளம் மிகுதியும் உள்ள எழில் மிக்க ஒரு நாட்டிலே பிறந்திருக்கிறோம்.

எரிமலை மிரட்டுவதில்லை! பூமி வெடித்துக் கெடுப்பதில்லை! கடல் பொங்கி அழிவூட்டுவதில்லை! பொலிவும் பொறுப்புணர்ச்சியும் மிகுந்த தாய்- நமது நாடு!

தென்றலளிக்கிறாள், தாய்!

தேன்பொழியும் கனி வகைகளைக் குவிக்கிறாள்; நறுமணக் குவியலைக் கொட்டுகிறாள்; நானாவிதமான உணவு வகைகளைப் பெருக்கிக் காட்டுகிறாள்!

பொன் வேண்டுமா? மணிவேண்டுமா? பூசச் சந்தனம் வேண்டுமா? வாசமளிக்கும் பண்டம் பல வேண்டுமா? முத்து வேண்டுமா? மூலப்பொருள் வேண்டுமா? கலம் கட்டத் தேக்கு, தேவையான கருவிகள் செய்ய இரும்பு வேண்டுமா? உருக்க நிலக்கரி வேண்டுமா - எது வேண்டும் சொல் மகனே1 - என்று ÷ட்கிறாள் அன்னை - தருகிறாள் தாராளமாக!!

எனினும், தரித்திரம் தீண்டுகிறது, துடிக்கிறார்கள் மக்களில் பெரும் பகுதியினர்.

நாடு, அன்று இருந்த நிலை தெரியுமா என்று கேட்டுப் புலவர் பெருமக்கள் வேறு, நமது ‘கையாலாகாத’ தன்மையை இடித்திடித்துக் காட்டுகின்றனர்.

என் செய்வது?

அவர்கள் கூறுவது, முற்றிலும் உண்மை. நாம், இயற்கை வளமிக்க நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமல்லர், உலகு புகழ வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள்!!

முரசு அதிர்ந்த நாட்டில் - நாம் இன்று கேட்பது, முகாரி!!

நம் முதாதையர் வாழ்ந்த வாழ்வின் வகை பற்றிக் கேள்விப்படும் போது, நம்மை நாமே நொந்து கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

அதிலும், நம் மூதாதையர், யார் என்பதையும் தெரிந்துகொள்ளும் தெளிவற்று, மூவேந்தர்களை அறியாமல் முசுகுந்தச் சக்ரவர்த்தியை அறியும் முயற்சியில் ஈடுபட்டு, உழலுவோராக ‘நம்மவர்கள்’ இருப்பதைக் காணும்போது, நமது வேதனை வளருகிறது.

வாளை பாய்ந்திடும் வயல்! கருங்குவளை கண்மலரும் கழனி! சந்தன மரத்திலே உடலைத் தேய்த்து நறுமணத்தைப் பரப்பும் வேழம் நிரம்பிய காடு, இசை பரப்பும் அருசி, துள்ளும் மான், தோகை விரித்தாடும் மயில், பண்பயிலும் குயில், பாவையருக்குச் சொல் நயம் கற்பிக்கும் கிள்ளை, - இப்படி எல்லாம் விளக்கமளிக்கிறாக்õள். சங்கத் தமிழ் பயின்ற புலவர்கள் - அதைக் கேட்கக் தித்திக்கவும் செய்கிறது - அப்படிப்பட்ட நாடு, இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணும்போது தேள் கடியாகவுமாகிறது. என் செய்வது!

காலைக் கதிரவன் ஒளி, காவலனுடைய கோயிலின்மீது பட்டு - எங்கும் ஒரே தகத்தகாயம்..! என்கிறார் புலவர்!

இங்கு இருந்ததாம்!

எங்கோ ஆரியமன்னர் இருவர், ஏது பேசுகிறோம் என்பதறியாமல், தமிழரை இழித்துரைத்தனராம் - இங்கிருந்து கிளம்பினானாம், செருமுனைச் சிங்கம் சேரன் செங்குட்டுவன் - கல் சுமக்கச் செய்தானாம்! இங்கு! அன்று!!

இன்று, கடல் கடந்து சென்றுள்ளனர் நமது உடன் பிறந்தார், கல் சுமக்க!!

புராணிகர் தரும் வருணனையை மட்டும் கேட்டால், நமக்கு வேதனை பிறக்காது - ஏனெனில், அவர் தரும் வருணனையில் அவ்வளவும், ‘அவன் தந்தது’ என்று முடிக்கிறார்.

அழகான அரண்மனையா? மயன் கட்டினான்!

பெரியதோர் நதியா? அவர் ஜடா பாரத்திலிருந்து வந்தது.

ஜெய பேரிகை கொட்டிய மகாராஜாவா? அயன் தந்த வரம்!!

இப்படிச் சொல்கிறார், புராணிகர் - அவ்வளவும் அருளின் விளைவு என்று கூறிவிடுகிறார்.

இன்று அதுபோல் இல்லையே என்ற எண்ணம் வருமேயானால், அருள் கிடைத்ததும், பெறுவோம், நம்மால் ஆவது ஒன்றுமில்லை, என்று மனத்துக்குத் திருப்தி தேடிக்கொள்ளமுடியும். இந்தப் பொல்லாத புலவர்கள் அப்படிச் சொல்லவில்லையே!

நம் மூதாதையர்கள், ஆற்றலால் இவ்வளவும் பெற்றனர் என்று கூறி அல்லவா, நம்மைக் குத்துகிறார்கள்!

“அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” - அரசர்கள் அறிஞர்களின் அறிவுரை வழியே செல்பவராம்!

“அறிஞர்களோ, களத்திலே உனக்கு வெற்றி தேடித்தரும் வாள், எதனால் வலிவு பெறுகிறது தெரியுமா, மன்னா! ஏரடிக்கும் சிறு கோலால்!” என்றும், ‘வயலிலே யானை புகுந்து பயிரை அழித்திடுவதுபோல, வரை முறையின்றி வரிவிதித்தல் அடாது’ என்றும், நாடு வளம்பெறுவதும் வாடுவதும் ஆட்சி முறையைப் பொறுத்திருக்கிறது என்றும், வீணான போரிட்டு வீரம் பேசுவது அழகன்று என்றும், மன்னர்களை இடித்துரைக்கவும் அஞ்சாத ஆண்மையாளர்கள். இவ்வழி நிற்கும் அரசின் கீழ் வந்த மக்கள் வளம் பெறாது இருப்பதுமுண்டோ!

அரசர்கள், ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற குழுக்களை அமைத்துக்கொண்டு ஆட்சி செய்தனர்.
பகைவர், தமிழகத்தைத் தாக்க இயலாவண்ணம் போர்த்திறனுடன் போர்க்கருவிகளும், அஞ்சா நெஞ்சமும் பெற்றிருந்தனர் பேரரசர்கள்.

வளைவில் பொறி
கருவிரல் ஊகம்
கல் உமிழ் கவண்
கல்லிடு கூடை
ஆண்டலை அடுப்பு

இப்படிப் பலப்பல அமைப்புகள்! அவ்வளவும் தவம் செய்து பெற்றவை அல்ல! உலைக் கூடத்தில் உருக்கி வார்த்து, அடித்து எடுக்கப்பட்டவை! இவ்வளவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.

இத்துணைப் போர்க்கருவிகளைப் பெற்று வெற்றி வீரனாக இருக்கும் மன்னனையும் பார்த்துப் புலவர் சொல்வாராம்,
“கடுஞ்சினத்த கொல்களிரும்
கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகழ்மறவரும்”
யானை, குதிரை, தேர், வீரர் - இவை இருக்கலாமய்யா மன்னா! ஏராளமாக இருக்கலாம். ஆனால், அரசு வெற்றி பெறுவதற்கு இவை காரணங்கள் என்று எண்ணிடாதே.
“அறநெறி முதற்றே
அரசின் கொற்றம்”
அறநெறி வேண்டும், அதுதான் வெற்றிக்கு வழிகோலும், என்று இடித்துரைக்கிறார்! அதற்குப் பரிசும் பெறுகிறார்!!

பதினாறாம் நூற்றாண்டிலே இங்கிலாந்து நாட்டிலே மன்னன், தன்னை ‘தேவ அம்சம்’ என்று கூறித் திரிந்தான் - ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் இங்கு அரசருக்கு, அறநெறி செல்! என்று அன்புக்கட்டளையிடும் அருந்தமிழ்ப் புலவர்கள் இருந்தனர்.

அழகான நகர்கள் - எழில் உமிழும் சிற்றூர்கள்!

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் - இப்படி வண்ணங்கள்.

ஆறுகிடந்தன்ன அகல் நெடுந்தெரு - என்கிறார் புலவர்.

இரப்போர் சுற்றமும்
புறப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்!
என்று உழவுத் தொழிலைத்தான், நாட்டுக்கே அச்சாணியாக்கிக் கூறுகிறார், புலவர்.
“நூலினும்
மயிரினும்
நுழைநூற் பட்டினும்”

ஆடைகள் நெய்வராம்!

தெளிந்த வெண்ணிறமான அருவிநீர் வீழ்ச்சி இருக்கிறதே, அப்படி இருக்கும் ஆடைகள் நெய்தனராம். டாக்கா மஸ்லின் என்றால் மட்டுமே புரிந்துகொள்ளும் தாழ்நிலை பெற்ற நமக்கு இது புரிவதும் கடினமே. புலவர் கூறுகிறார்.

“அவிர் துகில் புரையும்
அவ்வெள் ளருவி” என்று.

இந்த வளம் போதாதோ? போதும், தாங்கள் மட்டும் வாழ்வது என்று குறுகிய எண்ணமிருந்தால், தமிழர், உலகுக்கும் தமிழகத்து வளத்தையும் திறத்தையும் வழங்கலாயினர் - வாணிபத்துறை இதற்கே பெரிதும் பயன்பட்டது.

எழுகடல் தாண்டி, ஒன்பது அரக்கரை மாய்த்து, அவர்கள் தங்கக்கூண்டிலே அடைத்து வைத்திருந்த பஞ்சவர்ணக் கிளியைக் கொண்டுவந்து, பட்டத்தரசனிடம் கொடுத்து, ராஜ்யத்தில் பாதியும் அரசகுமாரியையும் பரிசாகப் பெற்ற வீரனுடைய கதைகளைப் பிற நாடுகள் பெற்றிருந்தன - இந்தியத் துணைக் கண்டத்தில்.

இங்கு! கடாரம் கொண்டவன், இமயத்தில் கொடி பொறித்தவன், இலங்கை வென்றவன் - இப்படிப் பேரரசர்களின் வரலாறுகள்!!

பஞ்சவர்ணக் கிளி அடைபட்டிருந்த ‘கூண்டு’ எங்கே என்று தேடிட ‘ஆராய்ச்சியாளர்’ உளர் -அரசாங்கச் செலவில்! பேரரசர்களின் வரலாற்றைக் கண்டறிந்து தொகுத்து எழுதும் முயற்சிகூட இல்லை!!

வளமுள்ள நாடு - அறமறிந்த அரசர்கள் - அவர்கட்கு ஆற்றலளிக்கும் மாவீரர் - அவர்கள் நெறி தவறாமல் பார்த்துக்கொள்ளப் பேரறிவாளர், இவர்கள் அனைவருக்கும் உணவிடும் உழவர், அவர்க்கு உறுதுணையாகப் பல்வேறு தொழில் புரிவோர், இவர்தம் கைவண்ணம் உலகு காண வழிவகுத்த வணிகர்...! இப்போது நாம்!!

எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்!!

“காணார், கேளார், கால்முடப் பட்டார்
பேணா மாக்கள், பேசார், பிணித்தோர்”

இவர்களுக்கு ஆதரவு அளிப்பதுதான் தருமம், அன்று நமது நாட்டில்!

இன்று இவர்களைக் கோபுர வாயிற்படியில் உட்காரக் கண்டு, உள்ளே சென்று, சூடம் கொளுத்தி, நமக்குச் சுகவாழ்வு தரும்படி, எம்மானை வேண்டுகிறோம் - தர்மங்கூடச் செய்கிறோம் பிராமண தானம்! கோயில் திருப்பணி!! அன்று அங்ஙனமில்லை. செல்வமும் கொழித்திருந்தது; அறநெறியும் தழைத்திருந்தது.
யானை வெண்கோடும்
அகிலின் குப்பையும்
மான் மயிர்க் கவரியும்
சந்தனக் குறையும்
சிந்துரக் கட்டியும் காடு, நாட்டுக்கு அளிக்கும்! - என்றால், வளம் எத்தகையது என்பதை எண்ணிப் பார்த்தல் எளிதுதானே! காடே, இவ்வளவு தருகிறது! நாடு, எப்படி இருந்தது? புலவர் நம்மைக் கடை விதிக்கே அழைக்கிறார் - பார்வை எப்படியோ என்ற அச்சம்கொண்டு நாளங்காடி - பகலிலுள்ள கடைக்கு அழைக்கிறார் - (கடை இருவகை, பகலில் உள்ளது, இரவில் உள்ளது) அங்கு.

பண்டங்கள் மலை மலையாக!

பண்டங்களை வாங்கிக்கொண்டு போகிறார்கள் - பெரும் அளவு.

கடை வீதியிலோ, பண்டம் எப்போதும் தங்குதடையின்றிக் குவிந்து கிடக்கிறது.

கடலிருக்கிறதே அன்பா! அது மழை பெய்வதற்காக, தண்ணீரைக் கொடுத்துவிடுகிறது, - மேகமாகிறதல்லவா வெப்பத்தால்!

அப்படிக் கொடுப்பதால், கடல் நீரின் அளவு குறைந்துவிடுகிறதோ! இல்லையல்லவா!

ஆறுகள் பலப்பல, கடலில் வீழ்கின்றன அல்லவா! அதனால் கடல் நீரின் அளவு அதிகமாகி விடுகிறதோ? இல்லையல்லவா!

அதுபோல, கூடல் நகர (நாள் அங்காடி) கடை வீதியில், பண்டங்கள் எவ்வளவு வெளியார்க்கு விற்றாலும் குறைவதில்லை, வெளியார் எவ்வளவு பண்டங்களைக் கொண்டுவந்து விற்றாலும் மிகுவதில்லை, எப்போதும் அளவின் வளம் நிலைத்து நிற்கிறது - என்று கூறுகிறார்.

“மழை கொளக் குறையாது
புனல் புக மிகாது
கரை பொருது
இரங்கு முந்நீர் போலக்
கொளக் கொளக் குறையாது
தரத் தர மிகாது
மாடம் பிறங்கிலை
மலிபுகழ்க் கூடல்
நாளங்காடி.”
முந்நீர், என்றால் கடல் என்பதுமறியாது, கங்கை, யமுனா, சரஸ்வதிபோன்ற மூன்று புண்ணிய தீர்த்தங்கள் போலும் என்று எண்ணும் நாளில் அல்லவா இருக்கிறோம்!

அங்காடிகளிலே, பண்டங்கள் வளமாக இருக்கும் என்றாரே புலவர், என்ன பண்டங்களோ என்று ஆவல் பிறக்கும்; பாருங்கள் பண்டங்களை!

நீரின் வந்த நிமிர் பரிப்புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும், குணகடல் துகிரும்
கங்கை வாரியும், காவிரிப் பயனும்,
ஈழத்துணவும், காழகத் தாக்கமும்
இவையெல்லாம்!

இவைதமைக் கொண்டு வாணிபம் செய்தோர், எங்ஙனம் இருந்தனர்?

நடுவு நின்ற நன்னெஞ்சினோர்:
நல்ல இதயம் படைத்தவர்கள் - நடுநிலை தவறாதவர்கள்.

பழிபாவத்துக்கு அஞ்சி நடப்பது என்கிறார்களே. அது சொல்லளவு அன்று, செயலில்.

வடுவஞ்சி வாய்மொழிந்து தேய்ந்தது, விற்க! கூடுதலானது, வாங்க! இது பிழைக்கும் வழி, என்பதன்று, முறை.

தமவும் பிறவும் ஒப்ப நாடி நடந்து வந்தனர்.

வரைமுறையின்றி வெளிநாட்டுப் பண்டங்கள் குவிந்து, உள்நாட்டுச் செல்வ நிலையைச் சீரழிக்க விட்டனரோ! இல்லை!

‘புலிபொறித்துப் புறம் போக்கி’
வந்தனர், ஆட்சியாளரால் அனுப்பப்பட்ட அதிகாரிகள் - சங்கம் உண்டு!

நெஞ்சு உருமும் நேர்மைத் திறனும், கடமை உணர்ச்சியும் கொண்ட அதிகாரிகள், பண்டங்களைப் பரிசீலனை செய்து ‘உல்கு’ - (சுங்கம்) வாங்கி, புலிக்கொடி முத்திரையிட்டு, ஒரு புறம் வைத்தனர் - இதை வைகல்தொறும் செய்தனர் - நாளெல்லாம் செய்தனர். இத்தகைய வளமிருந்ததால், சதங்கை, பரியகம், நூபுரம், பாடகம் காற்சரி இவற்றைக் காலில் அணிந்து பொன்வளை, சித்திரவளை, மணிவளை, சங்க வளை, பவழ வளை, இவைதமைக் கையில் பூண்டு, கழுத்திலே வீரச் சங்கிலி, சவடி சரப்பளி, முத்தாரம் போட்டுக் கொண்டு, வலம்புரி, பூரப்பாளை போன்ற அணிகலன்களைத் தலையிலே அணிந்துகொண்டு, பொன்னார் இழையும் துகிலும் பூண்டு, பெண்கள், ஆடியும் பாடியும் மகிழ்வர்! அலைகடலைக் கிழித்தெறியும் நாவாய் ஏறிச் சாவகம், யவனம் சென்று, பொருள் ஈட்டித் திரும்பிய வாணிக வாலிபனும், எதிரியின் வாளைக் களத்தில் போரிட்டுப் பறித்துக் கொண்ட வீரனும், களைத்தும் இளைத்தும் வருவர்!

சாலையிலும் சோலையிலும், தமிழ் இசை! தையலரின் ஆடலால், எழும் சதங்கை ஓசை!

கடலையும் களத்தையும் கண்டு கண்டு எதை எதையோ காண வேண்டும் என்று எண்ணிடும் நெஞ்சம் கொண்ட இளைஞர்கள்!

சந்திப்பு!!

எப்படி இருக்கும் என்று விவரிக்கவும் வேண்டுமா! பாருங்கள், தெரியும் - கேட்டு இன்புறத்தான் வேண்டும் எனில், நண்பர் நெடுஞ்செழியனைப் பிடித்திழுத்து வாருங்கள் - நான் அகநானூற்றுப் பருவத்தை ஏறத் தாழக் கடுந்துவிட்டவன்!!

இவ்விதமான இன்பத் திராவிடம் இன்று உள்ள இழிநிலை நமக்கு நன்றாகத் தெரியும், பொன்னான இந்த விழாவே அனைவருக்கும் உண்டு என்று கூறத்தகும் நிலை இல்லை என்பது ஒன்றே போதும், நாடு நலிந்து கிடப்பதற்குச் சான்று.

இந்த நலிவு போக்கும் பணிக்கு நம்மை நாமே ஒப்படைத்துவிட வேண்டும்.

அங்ஙனம் ஒப்படைத்துப் பணியாற்றி வரும் எண்ணற்ற இளைஞர்கள். இன்று நாட்டிலே புதியதோர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டனர் - பொங்கற் புதுநாள் நமக்கேற்ற விழாநாள் - பிறஆரியக் கலப்புடை ஆகா நாட்கள் என்ற தெளிவு ஓரளவுக்குப் பிறந்திருப்பதே, பெருமைக்குரியது. விழிப்படைந்து விட்டோம்! அந்த விழிப்புணர்ச்சி பெறப் பலப்பல பாடுபட்டோம் - பல கட்டங்களைக் கடந்தோம்.

பல கட்டங்களைத் தாண்டிவிட்டோம்! புதியதோர் கட்டம் வந்து சேர்ந்திருக்கிறோம்! இங்கு நம்மைச் சுற்றிலும், நையாண்டி செய்வோர் அல்லர் அலட்சியம் செய்வோர் அல்லர், எந்த முறையினாலாவது நம்மை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற உறுதியை வெறி அளவுக்குக் கொண்டிருப்பார் உள்ளனர். அப்படியா? என்று கேட்டு அச்சப்படவும் வேண்டாம்; அவர்களை ஒரு கை பார்க்கிறோம் என்று முழக்கமிட்டுக் கொண்டு பாய்ந்து சென்று மோதிக்கொள்ளவும் வேண்டாம். அதற்காக அல்ல, இதைக் கூறுவது. நாம், மேற்கண்டுள்ள பயணத்தில் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டு வருகிறோம் என்பதை அறியவும் அகமகிழவும், இந்த அளவுக்கு முன்னேற எந்த உறுதியும் உள்ள உரமும், அறிவுத்தெளிவும் நமக்கு உறுதுணையாக அமைந்திருந்தனவோ, அவை நம்மை மேலும் அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை பெறவும், இடையே எழும்பும் இடர்ப்பாடுகள் கண்டு நாம் மனம் உடையவும் மாட்டோம். மாச்சரியம் கொள்ளவும் மாட்டோம் என்பதை ‘மாற்றார்’ என்ற கோலம் பூண்டுள்ளவர்களுக்குக் கூறிக் கொள்ளவுமே, இதைக்குறிப்பிட்டேன்.

நாம், மிக மிகச் சாமான்யர்கள்!

இதை நாம், அடிக்கடி நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.

நமக்குள்ள உற்சாகமும் ஊக்கமும், நம்பிக்கையும் எழுச்சியும் இதனால் குலையும் என்று, கருதவேண்டும். நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நினைவிலே வைத்துக்கொண்டால்தான், நாம் பெறும் வெற்றிகளின் பெருமை துலங்கும்.

நாம், மிக மிகச் சாமான்யர்கள்!

நாம், சாதித்துள்ளவையோ, மிகப் பெரியவை!

நாம், சாதித்தாக வேண்டியவற்றுடன் ஒப்பிடும்போது, இவை, கடுகளவு!!

நாம், சாமான்யர்களானாலும், சாதிக்க வேண்டியவற்றைச் சாதித்துத் தீருவோம்.

நாம், சாமான்யர்களானாலும்... என்பது கூடத் தவறு.

நாம், சாமான்யர்கள் - எனவேதான் நாம் சாதிக்க வேண்டியதைச் சாதிக்கப் போகிறோம்.

ஏனெனில், கவிஞர் இக்பால் கூறியபடி, இது, பாமரமக்கள் பாராளும் காலம்! சாமான்யர்களின் யுகம்! தேவ புருஷர்கள், காலமன்று!!

நாம், சாமான்யர்கள் - எனவேதான் சாமான்யர்களின் பிரச்சினையைக் கவனிக்கிறோம்.

‘சத் புருஷர்கள்’ ‘ரிஷிசிரேஷ்டர்கள்’ ‘முனிபுங்கவர்கள்’ என்போர் சாமான்யர்களின் பிரச்சினையை அன்று, ‘சர்வேஸ்வரனைப் பற்றிய பிரச்சினையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். கதைகள் பல உள, இதைக் காட்ட! நாம், எடுத்துக்
கொண்டுள்ள காரியம், எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? ஏன் பிறந்தோம்? ஏன் இறந்துபடுகிறோம்? இறந்த பின் என்ன ஆகிறது? பிறக்கு முன் என்ன இருந்தது? - என்ற பிரச்னைகளுக்கு. விளக்கம் காண்பது அல்ல! அது, சாமான்யர்களாகிய நமக்குத் தேவையற்றது!
நமது பிரச்னை, மக்கள் மக்களாக மாண்புடன் வாழ, ஒரு வழி கண்டறிந்தாக வேண்டும் என்பதாகும்.

மனித உருவிலும், மிருக வாழ்விலும் உள்ள நிலை மாற்றப்பட்டாக வேண்டும்!

மனித வாழ்வின் மேம்பாடு குலையும்படி உள்ள, எண்ணங்கள், ஏற்பாடுகள் எவையும் களைந்தெறியப்பட்டாக வேண்டும்.

எல்லோரும் இன்புற்று வாழவேண்டும். எத்தன் - ஏமாளி - என்ற நிலை இருத்தல் ஆகாது.
இல்லாமை, இருத்தலாகாது!

அறியாமை, அகற்றப்பட்டாக வேண்டும்!!

அடிமை, என்ற நிலை, ஏற்பாட்டிலே மட்டுமல்ல, எண்ணத்தாலும் இருத்தல் கூடாது.
சுயமரியாதை!


புரட்சி!

திராவிட நாடு திராவிடருக்கே!

என்று நாம் கூறுகிறோம் - இவற்றின் உட்பொருளை ஆராயும்போது, இறுதியாக நமக்குக் கிடைக்கும் கருத்து, மனிதவாழ்வின்
மேம்பாடு என்பதுதான், என்பது புலனாகும் - ஆத்திரம் அகற்றி ஆய்ந்தறிவோருக்கு.
நாம், இந்தப் பெருஞ்செயலில் ஈடுபட்டு விட்டோம்.

வழி அறியாமல், திகைத்தோம்!

இன்று, நாம், வழி அறிந்து செல்கிறோம். எனவேதான், பல கட்டங்களைக் கடந்து செல்ல முடிந்தது.

நாம்! - இந்தச் சொல்லே, நாட்டு நடவடிக்கைக்கான அகராதியில், இடம் பெறாதிருந்த நாளொன்று இருந்தது; அறிவீர்கள்.

நாம்! - இந்த அகராதியில் இடம்பெறப் பாடுபட்டோம் - கஷ்ட நஷ்டம் ஏற்றுக்கொண்டோம் - கல்லடியும் சொல்லடியும் தாங்கிக்கொண்டோம் - ‘கண்ணீரும் செந்நீரும்’ கொட்டினோம் - அகராதியில் இடம் பெற்றோம். பிறகோ?

நாம் - பாடுபடத் தொடங்கினோம் - காட்டுப் பாதையில் நடந்தோம் - கள்ளி காளானைக் கண்டோம் -” கடுவனும் காட்டெருமையும், செந்நாயும் சீறும் புலியும் மிரட்ட, துரத்த, அவற்றுக்குத் தப்பி, சந்தன மரத்தின் மீது அமர்ந்து சிந்து பாடும் குயிலைக் கண்டிட வேண்டும் என்று
ஆவலுடன் செல்லும் வீர வேட்டுவன் போலச்சென்ற வண்ணம் இருந்தோம்”!

இதுகள் - என்ற ஏளன மொழியால் நம்மை நாடு அழைத்தது!

ஏளனம் கேட்டு, இளம் உள்ளம் பதைத்தது - மூதறிஞர், நம் தலைவர் கூறினார், வெற்றி! வெற்றி! தோழர்களே! இதுதான் வெற்றி! நாம், அவர்களின் ‘பார்வை’யில் பட்டுவிட்டோம். அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள், நாம் அவர்களின் கண்ணுக்கே படாமலிருந்த நிலை அன்று. நாம் தெரிகிறோம், எனவேதான் ‘இதுகள்’ என்று ஏளனம் செய்கிறார்கள், இது நமக்கொரு வெற்றி! என்று எக்காளமிட்டார்.

ஓவியன், கோடுகளை வரைந்துவிட்டான் - அவன் மனக்கண், என்னென்ன அழகழகான உருவங்கள் இனி அங்கு எழும் என்பதைக் காண்கிறது. மற்றவருக்கோ, சில சிறு கோடுகள் - வளைவுகள் - இவையே, தெரிகின்றன! இரண்டு கீறல் இருக்கிறது. ‘குறுக்கும் நெடுக்குமாக’ - ஒரு புறம் - இன்னொரு புறம் நாலைந்து புள்ளிகள் - வேறொரு புறம் சிறு வளைவு - பிறிதொரு புறம் ஐந்தாறு நேர்க்கோடுகள் - இவ்வளவுதான் தெரிகிறது. மற்றவர் காணும்போது - ஓவியன், இவற்றைக் கொண்டுதான் பிறகு, அழகான அருவியையும் அந்திவானத்தையும், அதன் அழகு கண்டு சொக்கி நிற்கும் ஆரணங்கையும், வேழத்தை வேட்டையாட வந்த வீரன், அந்த வேல் விழியாளைக் கண்டு காதல் பொழிவதையும் காட்டப் போகிறான்.

இதுகள்! - என்ற நிலை, இத்தகைய கீறல் - கோடு - வளைவு.

நாம் - இதுகள் ஆனோம் - அதாவது நாட்டு நடவடிக்கையில் நமக்கோர் இடம் உண்டு, நாலுபேர் கூர்ந்து கவனித்துத் தீரவேண்டிய இடம் உண்டு என்பது ஏற்பட்டுவிட்டது. இந்தக் கட்டம் இழந்து சேரமட்டும் நாம் கொட்டிய உழைப்புக் கொஞ்சமன்று.

பிறகு, புதுபுதுக் கட்டங்கள்!!

இதுகளை ஒழித்தாக வேண்டும்!

இதுகள் எமக்கு எம்மாத்திரம்!

இதுகளைச் சட்டை செய்யவேண்டாம்!

இதுகளால் ஏதும் ஆகாது!

இப்படி ஒரு கட்டம்!!

பிறகு?

இதுகளின் யோக்கியதையைக் கேளுங்கள்!

இதுகளின் வண்ட வாளங்களை விண்டிடுவேன் கேண்மின்!

இதுகளின் குடலைப்பிடுங்கி மாலையாக்கிப் போட்டுக்கொண்டு, கூத்தாடுவேன் காண வாரீர்!

இதுகள் மயக்கும் - மயங்கிவிட வேண்டாம்! அடுக்கு மொழி பேசும் – கேட்கவேண்டாம்! அழகு நடையில் எழுதும் – படிக்கவேண்டாம் – கூட்டம்போடும், போகாதீர்கள்! கூத்தாடுவர் – பார்க்காதீர்கள்! -
இப்படி ஒரு கட்டம்!

இந்தக் கட்டத்தில், முத்தமிழ் கற்றோரும் நம்மை எதிர்த்தனர், முடிபோட்டு விடுவோரும் தாக்கினர், கற்றறிந்த கனவான்கள் கிளம்பினர். கலாம் விளைத்தலைக் கலையாக்கிக் கொண்ட கண்ணியரும் கலந்து கொண்டனர். ஆகமத்தைத் தூக்கிக்கொண்டு சிலர், அரிவாளை ஏந்திக்கொண்டு சிலர், சாபம், நிந்தனை, பழிசுமத்தல் எனும் பல்வேறு முறைகள், இத்துடன் ஆபாசமாகத் தாக்கிப் பேசுவது - எழுதுவது - என்று இவ்வண்ணம் போர்புரியக் கிளம்பிற்று ஒரு பெரும் படை!

பெரும்படை என்பது, அளவு குறித்து!! இந்தக் கட்டமும் தாண்டினோம்!

அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அவர்கள் எதற்கும் காரணம் கேட்கிறார்கள். தவறு என்ன?

அவர்கள் கொண்டுள்ள குறிக்கோள் சாலச் சிறந்ததுதான்.

இப்படிக் கூறிடப் பொதுமக்களில் ஒரு பெரும் பிரிவு, முன் வந்துவிட்டது - பொச்சரிப்புக்காரரின் முகம் கருத்தது. இப்போது, புதுக்கட்டம்! ஆட்சியாளருக்குத் தூபமிட்டு, ஆவேசமாடவைத்து, நம்மை அழித்தொழிக்கலாம் என்ற அற்ப ஆசையால் உந்தப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர் சிலர் அரங்க மேறி அலறித் துடித்து, இவர்களைப் பேச விடாதீர்கள் - எழுத அனுமதிக்கக் கூடாது - படக் காட்சி எடுக்குமிடத்தில் அண்ட விடாதீர்கள் - நாடகமாட அனுமதி தராதீர் - சட்டம்! சட்டம்! கடுமையான சட்டம்! மேலும் மேலும் கடுமையான சட்டம் வேண்டும் - என்று சர்க்காரிடம் சென்று, ‘சோடசோபசாரம்’ செய்து, ‘வரம்’ கேட்கிறார்கள். தேவதையும், அங்ஙனமே ஆகுக! என்று திருவாய் மலர்ந்தருளும் நிலை. இதுதான், இப்போது உள்ள புதுக்கட்டம்.

இந்தக் கட்டத்திலே நாம் தரப்போகும் ‘பலி’யைப் பொறுத்துத்தான் நமது இறுதி வெற்றி இருக்கிறது.

இதற்குத் தயாராக எண்ணற்ற இளைஞர்கள் உள்ளனர், என்பதை நான் அறிவேன். இளைஞர் உலகின் மனப்பாங்கு, காலக் கண்ணாடி, எழுச்சியின் எழில் மிகு சித்திரம், உரிமைப் போர் முரசொலி! விடுதலை விருத்தம்! வாழ்க்கை எனும் வாவியிலே -சுயநலம் எனும் நச்சு கலக்கப்படாத நிலை! குடும்பம் எனும் கோல் கொண்டு துழாவி, சேற்றை மேலுக்குத் தள்ளி, நீரைப் பாழாக்கும் பருவம் - சுயநலமும் சுகபோகப்

பித்தும், எருமை எனப் புகுந்து இதயத் தாமரையைத் துவைத்துப் பாழாக்கிடாத பருவம் - சந்தனக் காட்டைக் கடந்து, மணத்தை இன்பம் எனும் குழவியைப் பெற்றெடுத்துத் தரும்தென்றல் போலச் சுருதியும் தாளமும் அமைந்து, சொற்சுவையும் பொருட் சுவையும் இழைந்து, கேட்போருக்குக் களிப்பூட்டுவதோடு, கருத்தூட்டும் இசைபோல உள்ளது வாலிபப் பருவம்.

மாயாவாதமும் மன மருட்சியும் நெருங்க நடுங்கும் நிலை அது. புராணமும் புல்லர் மொழியும் புகப் பயப்படும் மனம். பதவியும் படாடோபமும் பத்துக் காதத்திலே மிரண்டோடச் செய்யும் வீரம் குடிகொண்ட மனம்!

வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரர்கள். அடிமைத்தனம் எங்கு இருக்கக் காணினும் அவர்களின் விழி கனலைக் கக்கும்; மொழி வீரத்தைப் பொழியும்! உரிமை, உரிமை, என்று உரைப்பர்! அந்த நடமாடும் எஃகுக் கம்பிகள் நாட்டு விடுதலைப் போருக்கேற்ற நல்ல தம்பிகள்! பாடுபட்டழைத்துப் பயன் காணா மக்களைக் கண்டால், கண்கள் குளமாகிவிடும், கரங்கள் இடுக்கண் களையத் துடித்திடும். சிந்தனை சமதர்மத்துக்குத்தவும்! இத்தகைய மாண்புடைய மணிகளே, அறியாமை எனும் மையிருட்டிலே சிக்கிக் கிடக்கும் தமிழகத்திலே, நாம் காணும் தூங்கா விளக்குகள்! துயர் துடைத்திட இடர் பல ஏற்கவும் தயாராக உள்ள செயல் வீரர்கள், எத்தரை வீழ்த்திடக் காலம் தந்த ஈட்டி முனைகள்! சனாதனத்தை அழிக்கும் சுரங்க வெடிகள்! பழைமை எனும் நீர் மூழ்கிக் கலத்தை வீழ்த்தும் டார்ப்பிடோக்கள்! வைதிகபுரிமீது, பகுத்தறிவுக் குண்டுகளை வீசும் வீர விமானிகள்!

புராணம் படிக்கச் சொன்னால், படியை ஆழாக்காகக் காய்ச்சிச் சீனியும் சிறிதளவு குங்குமப் பூவும் சேர்த்து, தங்க வளை குலுங்க, தாமரைக் கண்ணிலே கனிவு கூத்தாட, வைரம் ஒளிவிட, அழகு ஆலவட்டம் வீச, வெள்ளிச் செம்பிலே, காய்ச்சிய பாலை ஊற்றி எடுத்துச் செல்லும் காரிகையரும், காணிக்கை தந்த காலைத் தொட்டுக் கும்பிடும் கனதனவான்களும், அனுமாரின் வீரப்பிரதாபங்களைக் கேட்டு அம்பியின் சேட்டைகளை அதனுடன் ஒப்பிடும் அம்மையாரும், பத்துத்தலை இராவணன் இராமனின் ‘பட்டமகிஷியை’ இச்சைக்கினியவளே! பச்சை மாமயிலே! பசும்பொன் மேனியளே! பவள இதழழகி! உருகி உடல் கருகி உள்ளீரல் பற்றி எரியாது, அவியாது, என் செய்வேன்! காதல் கனலை இனித் தாங்க வல்லேன் அல்லேன்! உன்னை நான் அடைந்தேயாக வேண்டும். இன்றேல் உயிர் தரியேன்! உன்மீது எனக்குள்ள மோகம் கைலையைவிடப் பெரியது. உன்னை எண்ணி நான் விடும் கண்ணீர் வெள்ளம் கங்கையைவிடப் பெரியது, ஏக்கத்தால் கிளம்பும் என் பெருமூச்சோ எரிமலை கக்கும் நெருப்பு! தங்கக் கட்டிலிலே, மலர் தூவிய பஞ்சணையிலே நாமிருவரும் கொஞ்சிவிளையாடக் காலம் என்று வருமோ! மாதே! மாதரசி! மணியே! - என்றெல்லாம் வருணித்து ஆசை மொழி காட்டினான் என்று புராணிகர் படிக்கும்போது, உண்மைதான், பெண்ணை வசியப்படுத்த இந்த ஆண்கள் இதுபோலத்தான் இனிக்க இனிக்கப் பேசுவது வழக்கம் என்று அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு கூறும் ஆரணங்குகளும், புடைசூழ இருந்திடக் கண்டு, இரும்பூ தெய்திடலாம். காண்கிறோம் இத்தகு காட்சிகளை! கேள்விப்பட்டிருப்பீர்கள், காகுத்தன் கதை படித்த கலா விற்பன்னன் ‘சீதா பஹரணம்’ செய்து வெற்றிபெற்ற செய்திகளையும்!

நாம் மேற்கொண்டுள்ள பணி, இவ்விதமானதா?

அல்ல! அல்ல!

சமுதாயத்தைத் திருத்த முற்படுகிறோம். சமுதாயம், ‘ரிஷீஸ்வரர்களின்’ திட்டத்தின்மீது கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, நம்மைத் தடுக்கச் சிலர் முற்படும்போது, அந்த ‘ரிஷீஸ்வரர்களின்’ விஷயங்களையே கூட அம்பலமாக்குகிறோம்.

ஆபத்தான செயலல்லவா! ஆத்திரம் அடைகிறார்களே, பழைமையின் பாதுகாப்பாளர்கள், பகைக்கிறார்களே, நமது வாழ்வையே பாழாக்கவும் துணிகிறார்களே, என்று உற்றார் பெற்றோர் கூறத்தான் செய்கிறார்கள். அவர்களின் ஆசையும் பாசமும் நமக்கெல்லாம் புரியாமலும் இல்லை!
இன்று, இதோ எவ்வளவு களிப்பு - குடும்பத்தில் குதூகலம் - வெட்கத்தால் சிவப்பாகிவிட்டதே, என்னடா செய்தாய் சேட்டை என்று பெரியவர் கேட்கிறார், வாலிபனை - அவன் தண்ணீர் கேட்டுக்கொண்டுதான் அவள் இருந்த பக்கம் போனான் - தண்ணீரா பருகுகிறான் - வளை ஒலி - இச்சொலி - வெட்கம் பிறக்கத்தானே செய்யும் - மேலும் அந்தப் பயல், கரும்பு சுவைப்பதையும் மறந்து, அம்மாவிடம் கொஞ்சு மொழியில் கேட்கிறான், “அம்மா! எனக்கும் ஒரு முத்தம்” என்று - ஒன்பது தருகிறாள். வள்ளல் பிறந்த நாடல்லவா! இத்தகைய இனிய காட்சிகளைக் காணவேண்டும் என்று பெற்றோருக்கு ஆசை இருக்குமே தவிர. ‘ஆறு மாதம் கடுங்காவல்’ என்ற சொல் கேட்பதிலா விருப்பம் பிறக்கும். “பாதிக் காலம் ஜெயில்! மற்றப் பாதிகாலம் ரயில்! இதுதானே உங்கள் வாழ்வு!” என்று கேட்டாவிட்டார் என் உடன்பிறந்தானை, அவன் வாழ்வின் மாமருந்து! அப்படித்தான் பலருடைய நிலையும்.

பேச்சு - இல்லையேல் பெருமூச்சு - சிலவேளைகளில் கண்கூடக் கசியும், பல இல்லங்களில் - இளைஞர் பலர், நாடு மீட்டிடும் நற்பணியாற்றும் போது ஏற்படும் தொல்லைகளைக் காணும்போது. ஆனால், இப்படி இடுக்கண் காண்போர் நாம்தானா? உலகிலே கஷ்ட நஷ்டம் ஏற்கும் அணிவகுப்பு, இதுவா முதலாவது! இல்லை! இல்லை!

கேட்கும்போதே, திகில் பிறக்கும் கொடுமைகளை, சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்ட தீரர்கள் ஏராளம்!

உலகு, ஒளிபெற, தமது வாழ்க்கையிலே இருளைச் சேர்த்துத் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள்.
பழங்காலத்துச் சிறைக்கூடம், பயங்கரமான இடம் - பழிவாங்கும் இடம்; சித்திரவதை புரியும் இருட்டுக் கிடங்கு. அங்குத் தள்ளப்பட்டபோதும் வீரர்கள் குன்றாது நின்றனர். குவலயத்தாரின் மேன்மைக்காகத் தமது இரத்தத்தை, தசையை ஈந்து, இளமையை இழந்து, இன்னலை வரவேற்றுக் குடும்பத்தை மறந்து, வாழ்வை இழந்து எத்தரை வணங்க மறுத்தனர்; குன்றின்மேலிட்ட விளக்கென இன்று அவர்தம் எண்ணங்கள் கொள்கைகள், திட்டங்கள், முறைகள் ஒளி தருகின்றன.

பக்தர்களுக்காவது கஷ்டங்கள் ஏற்பட்டபோது, எல்லாம் அவன் செயல் என்ற ஆறுதலும், கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற நம்பிக்கையும் துணைசெய்தன. புராணங்களின்படி இத்தகைய பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கப் பரமசிவன் இடபமேறியோ, விஷ்ணு கருடனேறியோ வந்து ரட்சித்துவிடுவர்!

நாட்டு விடுதலைக்கோ, உரிமைக்கோ, மக்கள் விடுதலைக்கோ, மானத்துக்கோ போரிட்ட வீரர்கள், வெஞ்
சிறையில் வீழ்ந்தபோது அவர்களுக்கு, “அந்த லோகவாசர்கள்” தரும் ஆறுதலும் கிடைப்பதில்லை. அரன், அரி ஆகியோர் வந்து வந்து வரமளிப்பதும் கிடையாது.

இந்து மார்க்கத்தில் தவிர, ஏனைய இஸ்லாமிய, கிருஸ்தவ மார்க்கங்களிலே, கடவுள், கதை ஏந்தியோ, கத்தி தாங்கியோ, சக்கரம், சூலம், வேல், வில், ஆகியவை ஏந்திக்கொண்டோ இருப்பதில்லை. எனவே, ‘பக்தர்கள்’ பாடுபட்டால், வாகனமேறிவந்து சக்கரத்தை ஏவி, பாவியின் சிரசைத் துண்டிக்கச் செய்து, பக்தனே! மெச்சினேன் உன் திறத்தை! பரமபதம் வந்துசேர்! - என்று அழைப்பதில்லை.

ஏசுவிடம் - அவருடைய மார்க்கத்தைச் சேர்ந்தவர், தனக்கு இன்னலும் இழிவும், பழிச் சொல்லும் பகைவர் தாக்குதலும் வந்துறும்போது, முறையிட்டால், என்ன சொல்லுவார்! என்னைச் சிலுவையில் அறைந்தனர், அறியாயா! உன் கொள்கைக்காக, உனக்குக் கஷ்டம் விளைவித்தால், யார் என்ன செய்ய முடியும்! கொள்கையிலே உறுதி இருந்தால், கடுநெருப்பும் குளிரும்! - அதாவது உன் மனப்பக்குவம்தான் உனக்குத் துணை - வெளி உதவி கிடைக்காது - தேடாதே! - என்றுதானே கூறமுடியும்.

முகமதுவிடம் முறையிட்டால் அவர் மச்சகூர்ம அவதாரம் எடுத்துப் பழக்கப்பட்டவரா - எனவே அவரும், “வந்து ரட்சிக்க முடியாது! மெக்கா மெதினா பாதையிலே என்மீது வீசப்பட்ட கற்கள் கொஞ்சமல்ல! உலகம் உன் கொள்கையின் உயர்வை உணர்ந்து பின்பற்றும் வரையிலே உன்னைத் துன்பம்தான் தழுவும். அதைச் சகித்தலே வீரம்” என்ற சன்மார்க்கமே போதிப்பார்.

நம் நாட்டு நாயன்மார்கள், பக்தர்கள், ஆழ்வாராதிகள் ஆகியோருக்கு, எதிரிகள் எவரேனும் நஞ்சிட்டால் அமுதமாக மாறும். வெளி உலகிலே இப்படி நேரிட்டதில்லை. சாக்ரடீசுக்குத் தந்த விஷம், திராட்சை ரசமாக மாறிவிடவில்லை. உயிரைக் குடித்தேவிட்டது!! நெருப்பிலே தள்ளுவர் பக்தர்களை, உடனே, அவன் அருளால் தாமரைத் தடாகமாகிவிடும், தீக்குழம்பு இருந்த இடம்! நீரிலே தள்ளுவர், மாளிகையாகிவிடும்! பாம்பு வீசுவர், மாலையாக மாறிவிடும்! தூணிலே இருந்து சிங்கம் வெளிப்படும், எதிரியின் மார்பைப் பிளந்துவிடும்! - எல்லாம் இங்கு! பக்தர்களுக்குக் கஷ்டம் வரும் - ஆனால், கஷ்டம் தீர்க்கமுடியாததாகிவிடாது - மலைபோல் வந்த துன்பம் பனிபோல நீங்கிவிடும்.

கல்லோடு கட்டிக் கடலிலே போட்டனர், ஒரு நாயனாரை. பதிகம் பாடினார்; உடனே கல்லோ தோணியாகிவிட்டது.

கல்லாகும்படி சபித்து விடுகிறான் கணவன். கற்பை இழந்துவிட்ட தன் மனைவியைக் காகுத்தனின் கால் தூசி படுகிறது. கல்லுருவிலிருந்து, பெண்ணுருக் கொள்கிறாள் பத்தினி!

பக்தர்களுக்கு நேரிடும் தொல்லைகள், இன்னல்கள், ஆபத்துகள் அனந்தம் - பயங்கரமானவை. ஆனால், அவையாவும், பஞ்சு பஞ்சாகப் பறந்துபோய் விடும், பகவான் அருளால்!

இந்த ‘வசதி’ கிடையாது, வேறு மார்க்கத்துப் பக்தர்களுக்கு!!

இந்த ‘வாய்ப்பு’க் கிடைப்பதில்லை. இங்கும் சரி வேறு எங்கும் சரி, நாட்டுக்குழைப்போர், மக்களின் நலனுக்கு உழைப்போர் - ரட்சிக்கப் படுவதில்லை - நெருப்பு அவர்களைச் சுட்டுச் சாம்பலாக்கி இருக்கிறது, நஞ்சு அவர்களைப் பிணமாக்கியிருக்கிறது, கொடியோனுடைய வாள், அவர்களின் தலையைக் கீழே உருட்டி இருக்கிறது.

பக்தர்களுக்கு நன்றாகத் தெரியும், தங்களுக்கு எவ்வளவு பயங்கரமான ஆபத்து நேரிட்டாலும், பகவான் காப்பாற்றிவிடும் சக்தியும். பண்பும் கொண்டவர் என்பது. எனவே, அவர்கள் சகித்துக்கொள்ள முடிந்தது - துயர் துடைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்ததால்!

நாடு விடுதலை பெறவேண்டும், மக்கள் நலன்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துக்காகப் பணிபுரிபவருக்கோ, தங்கள் கொள்கையின் தூய்மையிலே நம்பிக்கை நிரம்ப உண்டு, ஆனால் பகவான், ஆபத்து வேளையிலே வந்து ‘கை கொடுப்பார்’ என்பது பற்றிய நம்பிக்கையைக் கொள்ள முடிவதில்லை - ஏனெனில், பகவான் அப்படிப் பட்டவர்களை, பக்தர் கூட்டத்தவரல்லாதாரை, ரட்சிக்க முனைந்ததாக, அதற்காகச் சக்கரம் ஏவியதாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ, கதையும் கிடையாதல்லவா!!

பக்தர்களுக்கு வந்துள்ள ஆபத்துகள், சோதனைகள், பகவானுடைய லீலா விநோதங்களை விளக்கும் சம்பவங்கள்.

நாட்டுக்குழைத்தோருக்கு வந்த ஆபத்துகள், ஆபத்துக்களாகவேதான் இருந்தன! கல், கனியாக வில்லை. தூக்கு மேடை, துளசி மாடமாகி விடவில்லை. பகத்சிங், பிணமாகாம
லிருக்க, பகவான் அருளவில்லை. திருப்பூர்க் குமரனைத் தடிகொண்டு தாக்கியபோது, பாண்டியன் தந்த பிரம்படி, அண்டபிண்ட சராசரம் முழுவதும் பட்டது போன்ற, அற்புதம் நிகழ்த்தி, ஆண்டவன் அந்த இளைஞனைக் காப்பாற்றவில்லை. சிதம்பரனார் செக்கு இழுத்தபோது, நந்தன் தூங்கும்போது சிவ கணங்கள் உழவுவேலை செய்ததுபோலச், சிதம்பரனார் வசம் விடப்பட்ட செக்கு, அவனருளால், தானாகச் சுற்றவில்லை - அவரேதான் இழுக்க நேரிட்டது.

பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றுக்கும், கொள்கைக்காகப் பணிபுரிந்தவர்களின் வரலாற்றுக்கும், இந்த மாபெரும் வித்தியாசம் இருப்பதை மனத்திலிருத்திப் பார்த்தால்தான், ஊருக்குப் பிழைத்தவர்களின் மாண்பு உள்ளபடி விளங்கும்.
இளைஞனாக உள்ளே சென்று, வயோதிகனான பிறகே, சிறையிளின்றும் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர்!

திடகாத்திரமாக இருந்தபோது உள்ளே தள்ளப்பட்டு, தாளமுத்துகளான பிறகு வெளியே தள்ளப்பட்டவர்கள், எவ்வளவு! குடும்பத்திலே மணி விளக்காக இருந்த நிலையிலே, உள்ளே தள்ளப்பட்டுச் சிறையினின்று வெளி வரும்போது, குடும்பம், புயலில் சிக்கிய கலம்போன்ற நிலையில் இருக்கக் கண்டவர் எவ்வளவு.

மக்களின் வாழ்வு பூங்காவாக வேண்டும் என்பதற்காகத் தம் வாழ்வைப் பாலைவனமாக்கிக் கொண்டவர்கள் எவ்வளவு. கருகிய மொட்டுகள், சகக்கி வீசப்பட்ட மலர்கள் என்ற நிலை பெற்றவர்கள் எவ்வளவு.

அத்தன்மையான ஆண்மையாளர்களிலே சிலருக்காவது அவர்களின் அந்திய காலத்திலேயோ, அவர்கள் மறைந்த பிறகோ, கீர்த்தி ஏற்பட்டது; உலகு புகழ்கிறது; உத்தமர்கள் என்று போற்றப்படுகின்றனர்.

பலர் பாடுபட்டனர்; எனினும், ‘ஊர்பேர்’ தெரியாதவர்களாகிவிட்டனர். அவர்களின் கல்லறைகளைக் கூடக் கயவரும் காலமும் கல்லி எடுத்தெறிந்து விட்டநிலை காண்கிறோம்.

பலப்பலர், காட்டு ரோஜா பூத்து, மணம் வீசி, தானாக உலர்ந்து, உதிர்ந்து, சருகாகிவிடுவது போலாயினர்.

நாம், அறிவுப் பணியாற்றும் ஓர் ஒப்பற்ற படையிலே உள்ளவர்கள் என்று எண்ணும்போது, எத்தகைய இடுக்கண் வரினும், அஞ்சாது, தொண்டாற்றவேண்டும். அலை, மலை எனத்தான் எழுகிறது - ஆயினுமென், அலை மடியும்; கலம் மேலால் செல்லும், என்ற உறுதிப்பாடு நமக்கு வேண்டும்.

அடக்குமுறையை நாம், ஆழ்கடலில் கலம் விடுவோன் காணும் அலைஎனக் கொள்ளவேண்டும்.
பயமூட்டுவதாக இருக்கிறது என்பதற்காகப் பயணத்தை நிறுத்திவிட முடியாது.

தந்தையர் நாடுதந்த ‘பண்பாடு’ அது அன்று!

தாயகத்தின் தளை நீங்கும் வீரர் என்ற பெயருக்கு இழுக்கின்றி, நடந்துகொள்ள வேண்டும்.

நம்மால் ஆகுமா! - என்ற திகைப்புப் பிறக்கும் கட்டம் அல்ல இது.

நமக்கு இது எம்மாத்திரம்!! - என்ற தகாத்துணிவும் கூடாது.

நாம், சாமான்யர்கள் - எனினும், பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறோம்.

நாம் சாமான்யர்கள் - எனவே, வெற்றி பெறுவோம்.

நாம் மருளமாட்டோம், மையலூட்டும் மாது மலரணைக் கழைத்திடுவதாயினும்.

நாம், நமது நாடு இருந்த நிலைமையும் தெரிந்து கொண்டோம். இன்று உள்ள நலிவும் புரிந்துவிட்டது - அந்த நலிவு நீக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டோம். பணியாற்றி வருகிறோம்.

பழைய நாள்தொட்டு, தாயகம் கொண்டாடி மகிழ்ந்த இப்பொங்கல் புதுநாளன்று நாம், புது உறுதி பெறுவோம்.

இந்நாள் தரும் இன்பம் புதியதோர் பொலிவு பெற்றுத் தாயகம், சிறந்து விளங்கிடச் செய்யும் சீரிய ஆற்றலை நமக்குத் தருமாக.

வாழ்க தோழர்காள்! வளர்க நுமது தொண்டு!

(திராவிட நாடு பொங்கல் மலர் – 1955)