அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திருநாள்!
1
பொங்கற் புதுநாள் வந்துற்றது, புன்னகை பூத்தது, புத்தாடை அணிந்தோரின் முகமெல்லாம். வாழ்க்கையில் அன்றாடத் தொல்லைகளை அகம் தாங்கித் தாங்கி இருப்பினும், அன்று ஒரு நாளேனும் அவற்றினைத் தூங்க வைத்துவிட்டு, மகிழ்வுடன் இருப்பர் எங்கும். பொங்கற்புதுநாளன்று, இன்பம் பொங்குக, எங்கும் தங்குக என்று கூறி, நமது வாழ்த்துரையை அன்பர்களுக்கெல்லாம் வழங்குகிறோம்.

போர் நீங்கிச் சமாதானம் பிறந்த புத்தாண்டு விழாவிலேயும், போர் நெருக்கடி எனும் புகைபடக் கசங்கிய கண்களிலே, பழைய ஒளி மீண்டும் முழுவதும் தோன்ற முடியாத விதத்திலே, சூழ்நிலை இருக்கிறது. குறிப்பாகத் தமிழகத்திலே, இவ்வாண்டு, மழையில்லை, விளைவில்லை, எனவே, மனத்துக்கு நிம்மதியில்லை என்ற மொழியே எங்கும் கேட்கப் படுகிறது. வெடித்துக் கிடக்கும் வயலைப்பார்த்து நொடித்துப் போகும் கிராமவாசி, இவ்வாண்டு முழுவதும் எங்ஙனம் காலந்தள்ளுவது என்ற கவலையில் மூழ்கிக்கிடக்கிறான். சோறிடும் கிராமத்தானே சோகத்திலே இருக்கிறான் எனில், வயல் காணாப் பட்டினத்தானின் நிலை எங்ஙனம் இருக்கும்? எனவே, இவ்வாண்டு உணவுப்பஞ்சம் ஏற்படாதபடி தடுத்துக் கொள்வதற்கான, வழிவகைகள் கண்டுபிடிப்பதிலேயே, கருத்துள்ளவராக அனைவரும், அதிகாரிகளும் பொதுமக்களின் தலைவர்களும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பங்கீட்டு அரிசி தந்துவரும் சர்க்கார், கோதுமை தர எண்ணம். ஆனால், அதுவும் இல்லை என்று கூறுகின்றனர். வள்ளிக்கிழங்கு வழங்கலாம் என்று கூறுகின்றனர். பெரியதோர் பொறுப்பு இவ்வாண்டு இப்பகுதிக்கு ஏற்பட்டுவிட்டது.

பொறுப்பினை உணர்ந்து, கடமைகளைக் காலமறிந்து செய்து, அறுவடை கண்ட விழாவே பொங்கற் புதுநாள். இது “சூரியபகவானுக்கோ” “சோம தேவனுக்கோ” சோட சோபசாரம் செய்யும் நாளன்று. “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்ற கவிதையின் கருத்தைக் காட்சியாக்க வேண்டிய உறுதி கொள்ளவேண்டியநாள். திருத்தாவயலாக, காட்டு வெள்ளத்தை நம்பி, கரை, கட்டு, காவல் இன்றி, வரம்பின்றிக் கிடந்து, விளைந்த காட்டுக் குருவிகளுக்கு இடமளித்து, வளம்குன்றி, வகைஇழந்து கிடக்கிறது.

“வண்மைசேர் தமிழ்நாடெங்கள் நாடு
வாழ்த்துவோம் அன்போடு”
என்று புதுமைப் பொன்மொழியார் பூரிப்புடன் வாழ்த்திய இந்நாடு. உழைப்பின் பயனால் உறும் உள்ள மலர்ச்சியை விளக்கும் விழாக் கொண்டாடும் இந்நாளிலே, நம் நாட்டை நலியச்செய்யும் சிறுசெயல்யாவையும், போக்கிடச் சூள் உரைத்திடுக. சோர்வின்றி உழைக்க முன்வருக! என்று தமிழரைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆகவே, இந்தப் பொங்கற்புதுநாள் பரிசாகத் தமிழகத்
துக்குப் புரட்சிக் கவிஞர் கூறிய.

“மனுவின் மொழி அறமான தொரு நாள் - அதை
மாற்று நாளே தமிழர் திருநாள்!

சினம், அவா, சாதி, மதப்பிலே நாறும் யாகம்
தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!”

என்ற செய்யுளைக் காணிக்கையாகத் தருகிறோம்.

(திராவிட நாடு பொங்கல் மலர் 1946)