அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திருநாள்!
2
பொங்கற் புதுநாள், தமிழர் திருநாள்! திருந்திய தமிழரின் திருநாள்! தீதெலாம் களைந்தெரிந்து, நன்மை பயிரிட்டு நற்பயனெனும் அறுவடையைக் குவித்து, குவித்ததைப் பதுக்கிவைக்காமல், குறித்ததைவிட அதிகம்பெற்றுக் கள்ளத்தனத்தால் காசாக்காமல், வேண்டுவோர்க் கீந்திடவேண்டும் என்ற நன்னெறியுடன் மட்டுமல்ல, உழைப்பவர் வாழ்க்கைக்கு உரியதை உடையவர் எனும் புதுமுறை அமைக்கவேண்டும் என்று உறுதிகொண்ட தமிழரின் திருநாள்! அறுவடையின் உவகைதரும் உரை, மனைகள் பலவற்றிலே கேட்கப்பட்டு, இன்முக மாதரும் எழில்முகச் சிறாரும், களித்திடும் ஆடவரும், அனைவரும் அகமகிழ்த்திடும் பொங்கற் புதுநாளன்று இன்பம் பெற்று, இன்பம் இன்று மனத்திலே பொங்குதல் போல் என்றும் தங்கி, வாழ்வே திருநாளாகத் திகழ்ந்திட வேண்டும் என்ற அன்புரை கூறி, “திராவிட நாடு” தமிழரின் இல்லங்களிலே, உவகையுடனும் உரிமையுடனும் உடன் பிறந்தான் என்ற முறையில் வருகிறது - வாழ்த்தும் வணக்கமும் தருகிறது. அன்பும் ஆதரவும் வழங்கப்பெறும் என்ற நம்பிக்கையால் பூரிக்கிறது.

வீணரின் விழாக்கள் பல உண்டு-மதி தேய்ந்ததையும், சூதுச் சிந்தையினரின் வலைதனிலே தமிழர் வீழ்ந்தனர் என்பதைனையும் காட்டிடும் வகையிலே விழாக்கள் பல உண்டு - திங்கள் தோறும் உண்டு. திருநாள்கள் என அவற்றைத் ‘திராவிட நாடு’ கருதுவதில்லை. தமிழரின் வாழ்வின் வளத்தைக் கருக்கிட எண்ணிய, தீயர் தீமூட்டிடும் கெடுநாட்கள் அவை என்று எச்சரித்திடுவதைப் பணி எனக்கொண்டதாகும், நம் ஏடு! நாடு சிறக்க, நற்கருத்துகள் பரவப் பயன்படும் முறையிலேயல்ல; கேடுசூழ, கெடுமதி வெல்ல உழைத்தோர் உழல, எத்தர்வாழ, வகுக்கப்பட்ட வழிகளிலே, பண்டிகை ஒன்று என்று கூறுவோம்.
பொங்கற் புதுநாளை நாம் அத்தகைய ‘பண்டிகை’ என்றல்ல, படையலுக்காக அல்ல, மாடு விரட்டு அல்ல, அறுபடை விழாவாகக் கருதி, உழவு, நாட்டு மக்கள் உள்ளம், ஆகிய துறைகளிலே சிந்தனையைச் செலுத்துவதற்கு இதனைக் கருதவேண்டும். பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வைதிகர்கள், இந்தத் திருநாளையே போகிப் பண்டிகை-சங்கராந்திப் பண்டிகை- என்ற புராணப் பெயரிட்டழைத்துத் தேவையற்றதும். தீங்கு தருவதுமான கருத்தினையும் செயலினையும் தூவிடுவர். ஏமாறாத தமிழர் மட்டுமே, இதனைத் தமிழரின் பெருவாழ்வுக்கான முறை காணக் கூடிக் கலந்து பேசி, குறைமதியினைக் களைந்திட்டு உழைத்து உரு பயன்பெறுவதற்கான திட்டமிடும் நான்னாளாகக் கொள்வர். இம்முறையிலே, சில ஆண்டுகளாகப் பல்வேறு இடங்களிலே தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது-

புது முறையின் முரசொலி அதுவென்போம். மணியோசையும், ஐயருக்குக் காணிக்கை தருவதற்காகக் கொட்டும் காசு ஓசையும், வேட்டும், வெறிக்கூச்சலும் விழாவொலியாக இருந்திடாமல் தமிழரின் வாழ்வு, தமிழர் நாட்டின் நிலைமை, திருத்தும் முறை, ஒன்றுபடும் மார்க்கம் ஆகியவைபற்றி அறிஞர்கள் கூற, அனைவரும் கேட்டு அகமகிழ்வது காண்கிறோம்.

அம்முறையிலேயே இதழை நாம் தொகுத்துமிருக்கிறோம்.

சங்கராந்தி புருடனின் பெருமைகளைக் கூற அல்ல. போகிப் பண்டிகையும் யோகிகளும் என்ற புளுகுரைகளைத் தீட்ட அல்ல - சூரிய பகவானின் தேரிலே பூட்டப்பட்டுள்ள குதிரைகளின் வர்ணம் வயது பற்றி ‘ஆராய’ அல்ல-நாட்டு வளம்-நிலைமை-உழைப்போர்-உளம் உடைந்தோர்-உண்டு களிப்போர்-ஆகியவற்றினை விளக்க ஒரு வாய்ப்பாக்கினோம் இந்த விழாவினை. பொங்கற் புதுநாளன்று தங்கும் இன்பம் மங்காது மறையாது இருப்பதுடன் எங்கும் பரவுவதற்கான மார்க்கத்தை மக்கள் கண்டறியவேண்டும் என்பது நமது ஆவல். அந்தத் துறையிலே மக்களின் சிந்தனையைச் செலுத்துவதற்கு, இதழ் பயன்படுத்துமானால், நாம் பெருமகிழ் வடைவோம்.

உழவரின் பெருமைக்குரிய நன்னாள் இத்திருநாள். எனவே, இந்நாளன்று அவர்தம் நிலையினையும், உழவுத் தொழிலின் நிலையினையும் ஊரார் அறிந்திட வேண்டுவது அவசியம். அதோ உள்ள கிழங்கும் கீரையும், மஞ்சளும் கரும்பும், செந்நெலும், பாகும், அவரையும் அவன் அளித்த அரும்பொருள்கள்! அவன் பாடுபட்டுக் குவித்த செந்நெல், மாளிகைகளில், மந்தகாச முகவதிகளின் மேனிக்கு மெருகாக அமைகிறது - பிரபுவின் மோட்டாராகிறது - வைரமாக ஜொலிக்கிறது - வழக்கு மன்றத்திலேறி வக்கீல்களைக் கொழுக்க வைக்கிறது - வழக்கு மன்றத்திலேறி வக்கீல்களைக் கொழுக்க வைக்கிறது - ஏரடிக்கும் சிறு கோல்தரும் பெரிய செல்வத்தின் துணைகொண்டு, நாட்டிலே, போக போக்கியங்கள் மலிகின்றன. அவன், இவ்வளவும் தந்தவன், தலைமுறை தலைமுறையாகத் தந்து கொண்டே வருகிறவன், அதோ மண் குடிசையிலேதான் இருக்கிறான். அவனுக்கும் இன்று பொங்கல்தான்! ஆனால் அது, மண் கலயத்தோடு, நின்றுவிடுகிறது- மகிழ்ச்சி அவனுக்கு உண்டு. ஆனால், மாளிகைகளிலே காணப்படும் மகிழ்ச்சி அல்ல அது. உழைத்தவன் அதன் பயனைப் பெறாதிருக்கிறான் - அதனை அறியாமலுங்கூடப் பெரும் பகுதியினர் உளர். அந்த நிலை நல்லதல்ல - நல்லதைத் தராது - தமிழர் திருநாளன்று இதனை மனத்திலே பதியச் செய்து கொள்ள வேண்டும் உழவன் உழைக்கிறான்- உழைக்காதவன் பிழைக்கிறான் - அரிமா பட்டினி கிடக்கிறது; நரி கொழுக்கிறது!! நாடு வளம்பெற, அது அல்ல, கையாளப்பட வேண்டிய அறம்! முறை மாறியாகவேண்டும். இன்பம் பொங்கும் இந்நாள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம். தூங்கும் கலப்பைத் தொழிலாளர்கள் காலமெல்லாம் பாடுபட்டுக் கையே தலையணையாய், தரையே பஞ்சணையாய், வானமே போர்வையாகக் கொண்டு வதைகிறார்கள். வறுமை, அறியாமை, பிணி, கடன் முதலிய எண்ணற்ற தளைகளால் கட்டுண்டு கட்டுண்டு கிடைக்கிறார்கள். அவர்களில், யாரும் முழு வாழ்வு வாழ்வதில்லை. அப்படிப்பட்டவர்களைத்தான் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்று புகழ்ந்து பாடி இருக்கிறார்கள். புகழ்ந்து ஏமாற்றி இருக்கிறார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்!

இந்தியா கிராமங்களே பெருவாரியாக உள்ள இடம்! இந்தியாவின் பண்பாடு தெரியவேண்டுமானால், கிராமத்தைக் காணவேண்டும். இந்தியாவின் இருதயம் கிராமத்திலேதான் இருக்கிறது-என்றெல்லாம் பேசுகிறார்கள். என்ன காண்கிறோம் கிராமங்களில்? பரம்பரை நிலச்சுவான்தார்களின் அட்டகாசத்தை! பாடுபடும் விவசாயியின் அவதியை!!

இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும். இல்லையானால் விடுதலை உணர்ச்சி வெற்றி பெறாது. நம் நாட்டில் பெரும்பாலும் கிராமங்கள் உள்ளன-உண்மை-அங்குள்ள இந்த முதலாளித்துவ முறை சரிந்தாலொழிய, புது வாழ்வு எப்படி இருக்க முடியும் விடுதலை பெற்ற இந்தியாவிலே! விடுதலை என்றால் என்ன பொருள்? பிரபுவும் புரோகிதனும் பிடித்தழுத்த, பாமரன், அடிமையாய், ஏழையாய், மூட நம்பிக்கைகளின் பிண்டமாய் வாழ்வதா? அது விடுதலை ஆகாது! மேனாடுகளிலே, சகலவிதமான நாகரிக வளர்ச்சியும், இந்த நிலச்சுவான்தாரி முறை ஒழிந்த பிறகே சாரமாயிற்று. இங்கோ, அந்த ஆரம்ப வேலையே நடைபெற வில்லை. இதற்கான முதல் வேலைதான் ஜமீன் ஒழிப்பு என்று கூறவேண்டும் - முடிவானதல்ல. ஜமீன் முறை புண்ணின்மேலே காணப்படும், உலர்ந்த சதைப்பொறுக்கு! அதைக் கிள்ளி எடுத்தானதும், புண் ஆறிவிட்டது என்று அர்த்தமல்ல! புண் தெரியும் கண்ணுக்கு. அதற்குத் தக்க மருந்திட வேண்டும். அதுவும் போதாது, இரத்த சுத்தியும் நடந்தாக வேண்டும். முறைகள் மாறவேண்டும். புதிய திட்டங்கள் வேண்டும்.

பிரிட்டனில், வியாபார மூலம், தொழிற்சாலை மூலம், பலர் புதுப் பணக்காரராயினர், இவர்களின் மீது, பரம்பரைப் பணக்காரராக, நிலச் சுவான்தாரராக, பண்ணைப் பிரபுவாக இருந்தவர்கள், போர் தொடுத்தனர். “ஆலையிலே, ஏனைய மக்களை ஆறணா கூலிக்கு வேலை வாங்கி, அவர்களின் இரத்தத்தை உறுஞ்சி இவன் பணப்பேயாகிறான். இவனுடைய போக்கைத் தடுக்க வேண்டும். ஏழையின் கண்ணீரைத் துடைக்கவேண்டும். ஆலைகளிலே, வேலை நேரம், கூலி விகிதம் ஆகியவற்றை, நிர்ணயிக்க வேண்டும். தொழிற்சாலை மூலம் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதித்துக் கோடீஸ்வரர் ஆகும் இவர்களிடம் சர்க்கார் தாராளமாக, வரி வசூலிக்க வேண்டும்” என்று பிரபு பேசினார். பிரபுவுக்கும் பண்ணையாருக்கும் தான் பாராளுமன்றத்திலே செல்வாக்கு!

“அதுசரி! ஆலையிலே மட்டுந்தானா இந்த முறை தேவை? உமது ஜமீனிலே என்ன நிலை? விவசாயியின் கோழி மேய்கிற குப்பைமேட்டுக்குக் கூட வரி கேட்கிற புண்யபுருஷனல்லவா நீ? காட்டிலே உள்ள கள்ளிச் சுள்ளியை ஒடித்தால், ஒடித்தவனின் கையை ஒடித்துவிடும் கருணாமூர்த்தி யல்லவா! சேற்றிலே மீன் பிடித்தால் செலுத்தடா கட்டணம் என்று கேட்பவனல்லவா செல்லாயியின் முகவெட்டு கொஞ்சம் நன்றாக இருந்தால், உன்சேஷ்டைக்கு அவளைக் கருவியாக்க எண்ணும் காமச் செருக்குடையோனல்லவா நீ? உன் ஆதிக்கத்தை மட்டும் அப்படியே விட்டுவைக்க வேண்டுமோ?” என்று ஆலைக்காரன் கேட்டான்.

பழைய பரம்பரைப் பணக்காரனுக்கும் புதிய பணக்காரனுக்கும் இடையே வந்த போரின் மூலம், பாட்டாளிக்குக் கொஞ்சம் வசதி கிடைத்தது பண்ணையிலுஞ் சரி, ஆலையிலுஞ் சரி!

இங்கோ, இந்த இருசாராரும், ஒருசேர நிற்கிறார்கள். அரசியல் கொடி பேதப்பட்டாலும் கட்சிச்சட்டை வேறாக இருந்தாலும், தங்கள் ஆதிக்கத்துக்குச் சம்பந்தப்பட்ட விஷயம் என்று வருகிறபோது, கோடி, புதிதாகி விடுகிறது. பணக்கொடி காட்டுகிறார்கள் இருவகை முதலாளிகளும்.
காங்கிரஸ் கொடிகாட்டிப் பல பண்ணைகள், ஆதிக்கத்தை இன்று நிலைக்கவைத்துக் கொண்டுள்ளன. ஆலைமீது அதுபோலவே கதர்க்கொடி ஏற்றிவிட்டு, கள்ளமார்க்கட் செய்யும் கனதனவான்களும் உள்ளனர்.

பிரிட்டனிலே, இருவகைப் பணக்காரர்களுக்கும் இடையே மூண்ட போட்டியினால், பாட்டாளிக்குச் சில உரிமைகள் கிடைத்தன என்றோம். இங்கு அதற்கு நேர்மாறாக, இருவகையினரும் ‘தேசியம்’ பேசிக்கொண்டு ‘கூட்டுப்படை’ அமைத்து, எழையின் அணிவகுப்பைச் சிதறடிக்கிறார்கள். இந்தப் பயங்கர நிலையிலிருந்து, ஏழைகளைத் தப்பவைக்க வேண்டுமானால், புதிய திட்டம் தேவை என்பதை வலியுறுத்த வேண்டும்.

பெரியார் இராமசாமியின் பெரும்படைதான் தமிழகத்திலே முதன் முறையாக ஜமீன்தார் அல்லாதார் மாநாடு லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடுபோன்ற, கொள்கைத் திட்ட, மாநாடுகளை நடத்தின. மீண்டும், திராவிடர் கழகமேதான், இந்தப் புதிய முறைக்கும் போர் தொடுத்தாக வேண்டும்.

1. ஜமீன்முறை ஒழியவேண்டும்.

2. பண்ணைகள் கலைக்கப்பட வேண்டும்.

3. உழுபவனுக்கு நிலம் தரப்பட வேண்டும்.

4. உடனடியாக விவசாய வருமானவரி விதிக்க வேண்டும்.

5. குடும்பத்தேவைக்கு மட்டும் போதுமான நிலம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நிலவரி கூடாது.

6. தரிசு நிலத்தை, உழவர்களுக்குப் பங்கிட்டுத் தரவேண்டும்.

7. அதனைத் திருத்த, வளம்செய்ய, நீண்ட காலக் கடனைச் சர்க்கார் தரவேண்டும்.

8. கூட்டுப் பண்ணைகளை நடத்திப் பார்க்க வேண்டும்.

9. கிராமத்திலே வசதிகள், நகரவாசிகளுக்கு இருப்பது போலவே செய்ய வேண்டும்.

10. கிராமத்திலே வேரூன்றி உள்ள நிலப்பிரபுத்துவத்துக்கு முடிவுகாலம் கட்ட வேண்டும்.

இவையும் தேவையான இவற்றை ஒட்டிய வேறு பலவும் திராவிட கழகத்தின் திட்டம். இவை, பெரியாரின், வேலைத்திட்டத்தினை விளங்கிக் கொண்டவர்கள் அறிவர்.

திராவிடர் கழகம், திராவிடர்களாகிய உழவர்களை, அவர்கள் தம்மைத் திராவிடர் என்று உணர்ந்தாலும் உணராவிட்டாலும், பாதுகாத்து, முன்னேற்றுவதில் ஈடுபட்டே தீரும். திராவிட நாடு திராவிடருக்குத்தான்-ஆனால், தேய்ந்து போகும் உழவரும், தேயவைக்கும் நிலப்பிரபுவும் இன்றுள்ளது போல் இருப்பர் என்றல்ல பொருள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்ற முறையில், நாட்டைத் திருத்தி அமைப்போம். அதுதான் நமது அரசு நல் அரசு என்பதைக் காட்டுவதாகும். தமிழர் திருநாள், இந்தத் திட்டத்தை நாம் கொள்வதற்குப் பயன்பட வேண்டும். பிறகு, வாழ்வே திருநாள்; அட்டியில்லை.

(திராவிட நாடு பொங்கல் மலர் – 1947)