அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திருநாள் காண வாரீர்!

நாம் அரசியலில் அனாதைகள் ஆதரவு இல்லாதவர்கள் அடக்கப்படுபவர்கள்.

இதைச்சொல்லுவதில் வெட்கப்படவில்லை நான் வேதனைக் கண்ணீர் சிந்துகிறேன். நிர்க்கதியாக நிற்கும் நமக்குப் பத்திரிகைப் பலமில்லை பணபலமில்லை ஆனால் நாம் எதிர்த்து நிற்கும் எதிரிகளோ, மிகப்பெரியவர்கள்! பெரியவர்கள் என்பதற்காக நாம் பின்னடையவில்லை அவர்கள் தந்திரக்கோட்டைகளைத் தவிடுபொடியாக்கியே வருகிறோம்.

நாணயமான எண்ணம், உண்மையான இதயத்துடிப்பு, தெளிவான நம்பிக்கையிருக்குமானால், நமது கோரிக்கைகள் கானல் நீராகிவிடாது. கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளும் மனோபாவமும் நெருக்கடிகளைப் பொறுத்துக் கொள்ளும் நெஞ்சுரமும், நம்மிடையே வளரவேண்டும்.

வெற்றி முழக்க மெழுப்பிய வீரப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நாம் வீணாசையிலும், வெட்டி வீரத்திலும், நாட்களைக் கழிக்கும் சுபாவமும், போக்கும் கொண்டவர்களல்ல நாம்.

நமது கட்டுப்பாடும், ஐக்கியமும் இன்று மகோன்னதமாக வளர்ந்திருக்கின்றன. இந்த நிலையைக் காணும் அரசியல் தொண்டன் எவனும் அகம்களிக்காமல் இரான்! எனது இதயமும், இந்நிலையில் பூரிக்கிறது! இந்தப் புதுநிலை வளருவதே சமுதாய வெற்றியின் நன்னாள், புதுவாழ்வு தரும் பொன்னாள்.

அத்தகைய திருநாளைக் காணப் புறப்பட்டுவிட்டோம். தொடங்கி விட்டோம்.

தோளில் சுமை, பாதையில் சங்கடம் எனினும் துணிவைத் துணை கொண்டு வீரப் போரில் இறங்கிவிட்டோம்.

நாம் எதிர்த்து நிற்கும் சக்திகள், இலேசானவையல்ல எனினும் எதிர்க்கிறோம்.

வடநாட்டு ஏகாதிபத்தியம் வளர்ந்து வரும் பயங்கரம் நம் கண்ணில் தென்படுகிறது பதைக்கிறோம்! எனினும் பயப்படவில்லை!!

அறிவுத்துறையில் நம்மைப் புறங்காட்டிடச் செய்யும் தந்திரசாலி களின் திட்டங்கள், கோரவாயுடன் கொக்கரிக்கின்றன! எனினும், நாம் குலையவில்லை கொட்டுமுரசு என்று குரலெழுப்புகிறோம்!

தனிநாடு கோரும் நமக்குத் தெரியும்-வளர்ந்து வரும் வடநாட்டு ஆதிபத்தியத்தின் தலைவர்களான நேருவுக்கும் பட்டேலுக்கும் இருக்கும் சக்தியும், புகழும் அவர்கள் பெரியவர்கள் உலகத்துக்கே அறிமுகமானவர்கள்.

அவர்கள் மடியிலே அரசாங்கத்தின் கஜானாச் சாவி! கையிலே சிறைக்கதவின் திறவுகோல்!!

நம்மை, சுண்டுவிரல் காட்டி ஆட்டிவைக்கும் அதிகாரமும், நமது இலட்சியத்தைப் புறமுதுகிடச் செய்யும் பிரச்சார வசதியும் அவர்களிடம் கிடக்கிறது.

ஆயினும் நாம் அயரவில்லை! அஞ்சவில்லை!! கலங்கவில்லை!!

அது ஏன்?

வடநாட்டில் மந்திரிகள் இருப்பானேன். அவர்கள் தென்னாட்டை ஆள்வானேன்?

கீர்த்தி பெற்ற மாபெரும் சமுதாயம், சோற்றுத்துருத்திகளிடம் தொடைநடுங்கிச் சாவானேன்? ஆண்ட பரம்பரை, வீழ்ந்து கிடப்பானேன்? கஜினியும், அலெக்சாண்டரும், பாபரும், அக்பரும், அவுங்கசீபும் அடியெடுத்து வைக்காத வைக்கமுடியாத தென்னாடு சிறப்பிழந்து மடிவானேன்?

இந்தக் கேள்விகளை நாம் நினைக்கிறோம்-நெஞ்சங் குமுறுகிறது கேட்கிறோம் மக்கள் மனங்கொதிக்கிறார்கள்.

ஆனால் நம்மோடும், மக்களோடும், ஒத்துப்போக மறுக்கும் காங்கிரஸ் நண்பர்களைக் கேட்கிறேன். ‘கனம்களைக் கேட்கிறேன், தனித்து வாழ, நம்மிடம் ஆற்றல் இல்லையா? வாள் வலிமையற்றவரா, நாம்? நிகும்பலையாகத்தை நம்பியவரா நாம்? இந்திரனின் வஜ்ராயுதத்தையும், பிரம்மாஸ்திரத்தையும் நம்பிக் கிடந்தோரா நாம்? நெஞ்சிலே வஞ்சத்தையும், உதட்டிலே விஷத்தையும் வைத்துக்கொண்டு வாழ்வோரை நாம்? காட்ட முடியுமா? கையிலே வாள்-கீழே தலை! இதல்லவா, நமது வீரம். இதை யாரே மறுப்பர்?

வெள்ளைக்காரனை விரட்டியதாக வீரம் பேசும் வீராதி வீரர்களைக் கேட்கிறேன், வெற்றி பெற்றோம் என்று எக்களிப்போடு உலவும் எனது நண்பர்களைக் கேட்கிறேன்!

எது உமது தாய்நாடு? சேரனும் சோழனும் பாண்டியனும் சேர்ந்துலாவியது எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவியது என்றெல்லாம் சமயம் வாய்த்த போது, பெருமை பேசுகிறீர்களே, அந்தத் தாய்நாடு தமிழகம் எப்படியிருக்கிறது?

நீங்கள் மறந்துவிட்டீர்கள், உங்களது தாய் நாட்டை நாங்கள் கவனமூட்டுகிறோம். தாய் நாடு அடிமைப்பட நீங்கள் உடந்தையாக யிருக்கிறீர்கள் அதை எடுத்துக் காட்டுகிறோம்.

நீங்கள் உலவும் இந்தப் பூமி என்றாவது அந்நியப் படையெடுப்பால் அழகிழந்ததுண்டா? சந்திரகுப்தன் காலடி சமுத்திரகுப்தன் குதிரைக்குளம்பு, கனிஷ்கன் முரசம் சாந்த சொரூபி அசோகனின் ஆட்சி சமரச ஞானி அக்பரின் செங்கோல் எதுவும் படாத நாடல்லவா, தென்னாடு!

வீழாத நாடு! பிறரால் வீழ்த்தப்படாத நாடு!

இன்று கையிலே தராசு ஏந்திய டாடாவும், நெஞ்சிலே வஞ்சம் தாங்கிய பிர்லாவும் உலவும் வேட்டைக்காடாக வல்லவோ ஆகிவிட்டது.

இந்த உண்மையை மறுக்க முடியுமா? மறைக்க முயற்சிப்பவன் ஒன்று சர்வாதிகாரியாக இருக்க வேண்டும்-அல்லது பைத்தியக்காரனாக இருக்கவேண்டும்.

இழந்தோம்-மறக்கவில்லை!
நாம் நமது எல்லையை இழந்துவிட்டோம்-ஆனால் மறந்து விடவில்லை. நமது பழம் வீரம் மங்கி வருகிறது ஆனால் மறைந்து விடவில்லை.

எனவேதான், வீர முரசும் கொட்டுகிறோம். நமது வாழ்நாளிலேயே சுதந்திர திராவிடத்தில் நமது மூச்சு போகவேண்டும் என்ற ஆசை வர வர எனக்கு அதிகமாகி வருகிறது. என்னைச் சேர்ந்தோரிடமும் வளர்ந்து வருகிறது. கனவை நனவாக்க வேண்டும் என்று இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். நமது பிற்காலச் சந்ததி நமது கல்லறை மீது கண்ணீர் வடிக்கும்படி விட்டு விடாதீர்கள்.

நம்மிடம் வீரமிருக்கிறது. விரும்பியதைப் பெற தீரர்கள் உள்ளோம். நமது கோரிக்கை நியாயம் நிரம்பியது. நீதிதான் நமது பாதை. இந்நிலையில் நாம் ஏன் தயங்கவேண்டும்? வடநாட்டார், என்ன வீராதி வீரர்களா? அல்லது வடநாட்டு ஆட்சிதான் திறமை நிரம்பிய ஆட்சியா? அவர்களது வீரமும் திறமையும்தான் காஷ்மீரில் பின்வாங்குவதிலும், லெயிக் அலீயைத் தப்பியோட விட்டதிலும் சிரிப்பாய்ச் சிரிக்கிறது!

சிறு காஷ்மீரைக் காக்க இவ்வளவு கஷ்டநஷ்டங்களை அனுபவிக்கும் இந்தக் கையாலாகாத ஆட்சியை நம்பி மாபெரும் திராவிடத்தை ஒப்பு விக்கலாமா? நாளை ஒரு வெளிநாட்டான் படையெடுத்தால், என்ன ஆகும் நமது வாழ்வு?

வேண்டுமானால், தரை மார்க்கமாக வடநாட்டுக்கு ஆபத்து ஏற்படுவது சுபலம். தென்னாட்டில் முடியாது மூன்று பக்கம் கடல், வடக்கே விந்தியம், நமதுநாடு, இயற்கைக் கோட்டை இளித்த வாயரால் வீழ்ந்தது முன்பு இதை இப்போது, பெற நாம் முயல வேண்டாமா?

இன“று காங்கிரஸ் உள்ள நிலையைப் பார்த்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் எல்லோரும் நமது பாசறை நோக்கி வருவார்கள். நம்மைவிட ஆதாரத்தோடு பிரிவினைக் கிளர்ச்சிக்கு போராடவே செய்வார்கள். இந்த நம்பிக்கையை நாடு இன்றுள்ள நிலை எனக்குத் தருகிறது.

வளரும்!
கம்யூனல் ஜி.ஓ. நமது பிரச்சினையென்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது. இப்போது கைவிடமாட்டேன் என்று அவர்களே பேசுகிறார்கள். “வேத பாராயணத்தால் ஏமாற்றி காலங் கழிக்கவிடோம். தகுதி திறமை பேசும் கும்பல் தங்கள் வீட்டுக்காரிகளை வயலில் நடவுநட அனுப்புமா? உழுது நாற்று நட இறங்குவரா, முப்புரி அணிந்தோர்?” என்று அதட்டிக் கேட்கிறார். காங்கிரஸ் தோழர் கன்னியப்பன். நாம் கூட இதுபோலக் கேட்டதில்லை. ‘அந்தக் கூட்டத்திற்கு, உழுது பழக்கம் இல்லையே’ என்ற எண்ணத்தால் இன்று அவர் கேட்கிறார்.

இந்த நிலை வளராமலா போகும்?

ஆகவே, நமது கோரிக்கை மென்மேலும் வலுப்பெற்று வருகிறது. கிடைக்காத இடங்களிலெல்லாம் குரல் கேட்கிறது. இந்த நேரத்தில் நமது கடமையைச் செய்யத் தயங்காதீர்! அரும்புமீசை-கொண்டோரே. ஆற்றல்படைத்த என் தம்பிமார்களே, கோவில்பட்டித் தீர்மானங்களை வெற்றியாக்கிக் காட்டுங்கள். அறப்போர் எப்போது? என“று கேட்பீர்கள். ‘திட்டம் தரப்பட்டு விட்டது! தயராகுங்கள்-தனித் திராவிடம் பெற தளரா உழைப்பைத் தரத்தயாராகுங்கள்!

எனது நாட்டின் இழிவைத் துடைக்க நான் என் கடமையைச் செய்தேன், என்ற திருப்தியோடாவது செத்துமடிவோம்-ஆளவந்தார் நமது போரில் நம்மீது ஈட்டிகளை வீசினால்! நாட்டின் விடுதலைப் போரில் ஈடுபடும் நம்மீது துப்பாக்கியையும், பீரங்கியையும் நீட்டலாம். நீட்டட்டுமே! என்ன போகும்? உயிர் போகும் மானமிழந்து மதிகெட்டு வாழ்வதினும் நாட்டின் விடுதலைக்காக இந்த உயிர் போனால் தான் போகட்டுமே!

நமது பணி மகத்தானது-மாபெரும் சமுதாய வாழ்வையே புதுப்பிப்பது. இதற்கு நாம் எவ்வளவோ, தியாகங்களைச் செய்யாமலா முடியும்?

முயல்போம், எதிரிகளின் சூது நம்மை இவ்வுலகினின்றும் பிரித்துவிட்டால்-நமக்குப் பின்னர் நாட்டுக்காகப் போராடி உயிர் விட்டோம் என்ற பெருமையாவது உலவட்டும்! வீரபரம்பரையினர், வீழ்ந்து அடி பணிந்து கிடந்தனர்-என்ற அவமானச் சொல் சரித்திர ஏட்டிலிருந்து மறைய, நாம் சிறிதும் இரத்தமாவது பயன்படட்டும்!

ஆமாம், இதை முடிவோடு கூறுகிறேன்.

வீட்டுக்கு வீடு, நமது வீரகீதம் எழும்பட்டும் அமிர் சந்த், சாணக்யன் பரம்பரையின் சூதுச்செயலை! ஒழிப்போம் என்பது நாடெங்கும் முழங்கட்டும்! அந்நியன் எம் நாட்டை ஆள ஒரு போதும் சம்மதியோம் என்ற பேச்சு எங்கும் உலவட்டும்!

இந்த முரசொலி கோவில்பட்டியிலே எழுப்பப்பட்டுவிட்டது. நமது கல்லறைமேல் புல்முனைக்கும் வரை இனி அடங்காது தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்!

(திராவிட நாடு 2.7.50)