அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தித்திக்கும் செய்தி கேளீர் கட்டாய இந்தி ஒழிந்தது!

அறப்போர் அளித்த பலன்
தமிழன் தொடுத்த போரின் மாண்பு

கட்டாய இந்தி ஒழிந்தது!
‘கனம்’ மாதவமேனன், கல்லறைக்கு அனுப்பிவிட்டார், கட்டாய இந்தித் திட்டத்தை!!

ஒழிந்தது தொல்லை! மலர்ந்தது மகிழ்ச்சி!!
தமிழரின் மனம் குளிர்ந்தது! தன்மானம் நிலைத்தது!! தாய்மொழி வென்றது! திருஇடம் தலை நிமிர்ந்து நிற்கிறது! தீரரின் விழியெல்லாம் களிப்பு வழிகிறது! போர்க்களம் புகுந்த தோழரெல்லாம் புன்னகை பூத்திடும் முகத்தினராய் உலவுகின்றனர்!

களை போன பிறகு, உழவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியைக் காண வேண்டுமா? கண் கெட்டதே என்று கவலைப்பட்டவனுக்கு மருத்துவர் உதவியால் மீண்டும் பார்வை பழுதற்றதானதும் அவன் எங்ஙனம் இருப்பான் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? பாய்ந்த வேலை வாங்கி எறிந்து, எதிரியை வீழ்த்தும் போது வெற்றிவீரனின் அகமும் முகமும் எங்ஙனம் இருந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?

காதலித்தவளைக் கடிமணம் புரியும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற காளையின் களிப்பைக் காணவேண்டுமா? கார்கண்ட மயிலை, கதிரவனைக் கண்ட கமலத்தைக், காணவேண்டுமா?

இதோ, தமிழரைக் காணுங்கள், பிறப்பால்மட்டுமல்ல, உணர்வால், பண்பால் தமிழராக உள்ளவரைக் காணுங்கள், இவ்வளவும் தெரியும்!

தமிழன் வெற்றிக்களையுடன் உலவுகிறான்-வீறுகொண்ட தமிழன் ஏறுநடை நடக்கிறான்! எப்பக்கம் அது புகுந்துவிடும் இந்தி எத்தனை பட்டாளம் கூட்டிவரும்? என்ற கலிக்குரலொலி அவன் நடைக்குப் பின்னணிக்கீதமாக அமைந்திருக்கிறது போலும்! அற்பமென்போம் அந்த இந்தி தனை அதன் ஆதிக்கம் தனை வளரவிடோம்? என்று கூறுகிறது அவன் விழி! ஆம்! மொழிப்போரில் வெற்றிபெற்றவன் உலவுகிறான். வாகைசூடியவன் உலவுகிறான் அறப்போர் தந்த அரும்பலனை எண்ணி எண்ணி மகிழ்கிறான். அமைச்சர் மாதவனார் அறிக்கை விடுத்துள்ளார். கட்டாய இந்தித்திட்டம் கல்லறை சென்றுவிட்டது என்று!

ஒழிந்தது கட்டாய இந்தி! மலர்ந்தது தமிழன் உள்ளம்! அறம் வென்றது! ஆணவம் மடிந்தது! கோலாகலமாகக் கொலுமண்டபம் புகுந்து கொக்கரித்த இந்தியைக் கோல்கொண்டு இனிக்காப்பாற்ற இயலாது என்பதைத் தம் கூர்மதியால் கண்டுகொண்ட அமைச்சர், கொல்லைப்புறம் போயிரு! என்று கூறிவிட்டார்!! இளங்கோ அடிகள் பிறந்த நாடன்றோ, அமைச்சர் மாதவனார் இருக்குமிடம்! அன்றும் இன்றும்! அவரும் இவரும்!! மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு மாறுபாடு உண்டே. என்பீர். உண்மை. எனினும், அடிகள் நம்மையும் அறியாமல், தம்மை மறந்திருந்த மாதவனாரின் மனதை மாற்றி அமைத்துவிட்டார் போலும்!

காரணம் அதுவோ, வேறு எதுவோ அறியோம்-அறிந்திடத் தேவையுமில்லை அமைச்சர் மனம் மாறி அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார். கட்டாய இந்தித் திட்டம் இனிக் கிடையாது என்று களிப்பூட்டும் செய்தி களம் புகுந்தகாளைகளுக்கு இனிப்பூட்டும் செய்தி காலப்போக்கை கருத்துள்ளோரெல்லாம் காணச் செய்யும் செய்தி! நம் மனக் கண்முன் தோன்றித் தோன்றி நம்மை மகிழ்வித்து வந்த நிலை, இதோ, இன்று, அறிக்கை வடிவெடுத்து வந்து நம்மைக் களிப்பிலாழ்த்துகிறது. எந்த நிலை காணவேண்டுமென்று நாம், இடியையும் ஏசலையும், ஏளனத்தையும் சாபத்தையும், அமைச்சர்களின் சீற்றத்தையும் அடிவருடிகளின் சிறுமதிச் சொற்களையும், ஆணவத்தையும் அடக்கு முறையையும் சோளக் கஞ்சியையும் மண“ கப்பரையையும் சகித்துக் கொண்டோமோ, அந்த நிலை இன்று உருவாகி வந்தது. சொந்த ஆட்சி அமைத்துவிட்டதால் அல்ல. தொல்லை தந்த ஆட்சியே தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட தால்! வெற்றியின் மாண்பு, வேறு எதிலே உள்ளதையும் விட இதிலேதான் அதிகம் உளது! வென்றது செந“தமிழ்! வேற்றுமொழி, சென்றது கொல்லைப் புறம்!! தித்திக்கும் செய்தி! இனி வர இருக்கும் வெற்றிக்கு வித்தாக அமைந்திடும் செய்தி!!

தமிழ், தாழ்நிலை பெற்று, இந்தி முதலிடம் பெற்றதும், இந்த அக்ரமம் அடுக்குமா என்று கேட்டனர் திரு இடத்தவர்.

புருவத்தை நெறித்தனர் புது வாழ்வினர்!

தொன்மையும் இனிமையும் கொண்ட தாய் மொழியாம் தமிழை அழிக்கும் செயலாகுமே, ஐயன்மீர்! அறமோ இது, ஆளவந்தது இதற்கோ? என்று நெகிழ்ந்து கேட்டனர் தமிழர்-பற்களை நறநறவெனக் கடித்தனர். துரைத்தனத்தவர் என்ற பட்டம் பெற்றவர்!

இந“தியைத் திணிக்காதீர்! நாம் சொன்னோம் பணிவுடன்
எதிர்த்துப் பேசாதே! அவர்கள் கூவினர் ஆணவத்துடன்
தமிழ் காத்திடத் தயங்கோம்-நாம் கூறினோம் உறுதியுடன்
போலீசைப் பார்! அவர்கள் கூறினர். அணிவகுப்பைக் காட்டி
அவர்களிடம் அதிகாரம் இருந்தது-எனவே ஆர்ப்பரிப்பு
இருந்தது.

நம்மிடம் நம்பிக்கை இருந்தது. நமது கோரிக்கை நியாயம் நிரம்ப இருந்ததால்!

அவர்கள் சீறினர்!

நாம் சிரித்தோம்!!

அவர்கள் ‘சிறை’ என்றனர்

நாம், ‘சரி’ என்றோம்

அவர்கள் ‘இம்மியும் விட்டுக் கொடோம்’ என்றனர்

‘தமிழக மேல் ஆணை-தளரமாட்டோம் என்றோம் நாம்

‘எம்மை அறியீரோ?’ என்று கேட்டனர் அவர்கள்.

அறிவோம் ஐயா! உம்மையும் அறிவோம். உம் போல, அதிகார போதையால் நேர்மைப் பாதையில் நடக்கத் தவறியவர்கள் அடைந்த கதியையும் அறிவோம்’ என்று நாம் கூறினோம்.

அவர்கள் அடித்தனர்-நாம் தாங்கிக் கொண்டோம்!

அவர்கள் நம்மைச் சிறையில் அடைத்தனர். நாம் அங்கு பாடினோம், ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்டிடும் இந்தச் சிறைச்சாலை’ என்று.

நாம் வென்றோம் அவர்கள் மாற்றிக்கொண்டனர் தமது திட்டத்தை! கட்டாய இந்தி ஒழிந்தது; கன்னித் தமிழ் வெற்றி பெற்றது!

நாம் எதிர்த்தது மட்டுமல்ல-மொழி வல்லுநர்கள் இன இயல் பாராய்ச்சியினர் கல்வித்துறை வித்தகர்கள்-மாணவர்கள் வேறு வேறு அரசியல் கட்சியினர்-நேர்மையாளர்கள். நெஞ்சில் உரம் உள்ளவர்கள் அனைவருமே எதிர்த்தனர். கட்டாய இந்தித் திட்டத்தை! ‘கனம்’ கள் கை கொட்டிச் சிரித்தனர்! ‘கனம்களின் கட்டளை தாங்கிகள் கண் சிமிட்டினர்! பேனா முனையைச் சாமரமாக்கி கனம்களுக்கு ஊழியம் செய்யும் ‘பேறு’ பெற்றவர்கள், கண்டித்தனர், கேலி செய்தனர்-நம்மை!!

இன்று? இந்தி கட்டாய பாடமில்லை-என்ற தலைப்பைத் தாங்கிக்கொண்டு வெளிவருகின்றன. கனம்களின் காகிதக் கேடயங்கள்!

இதுகள்-காட்டுக் கூச்சல்-கலவரம்-புஸ் வாணம்-ஈரோட்டு மிரட்டல்-இவ்விதம், சொல்லம்புகள் வீசினர்!

நாலு நாளில் புகைந்து போய்விடும் தலைகீழாக நின்றால்கூட கட்டாய இந்தியைக் கைவிட முடியாது- இவ்விதம் ஆரூடங்கள் வெளியிட்டனர்!

இன்று? அறிக்கை வெளியிடுகிறார்கள், கட்டாய இந்தித் திட்டம் இனி இல்லை வேறு!

ஏன்? அமைச்சர் மாதவமேனன், என்ன கூறுவார்! என்ன கூற முடியும்!!

தீர்க்காலோசனைக்குப் பிறகு நிபுணர்களைக் கலந்து பார்த்த பிறகு இப்போதைய நிலைமையை ஆராய்ந்த பிறகு அவ்வப்பொழுது கல்வித் துறையில் மாற்றங்கள் செய்வது அவசிமய் என்கிற உண்மையை உணர்ந்ததால்!

இப்படிப் பல காரணங்கள் காட்டுகிறார், ‘கனம்’!!

வேறென்ன செய்வார்? தமிழர் பெரும்படை எதிர்த்தது! அடக்கினோம் ஆனால் புயல் அடங்கவில்லை-ஆகவேதான், கட்டாய இந்தித் திட்டத்தை ரத்து செய்கிறோம்-என்றா கூறுவார்! மந்திரியும் மனிதர்தானே, பாவம், மனம் எப்படி இடந்தரும்!

காரணம் எதையோ கூறட்டும்-கஷ்டமான நிலைமையில் எதையேனும் கூறத்தானே வேண்டும்- ‘கனம்’ கூறும் காரணமல்ல முக்கியம். அவருடைய ‘முறை’ மாறிவிட்டதே, அதுதான் முக்கியம் நமது நன்றி அவருக்கு! அவரை நல்வழிப்படுத்திய சூழ்நிலைக்கு, இரட்டிப்பு நன்றி!

தாமதமாகத்தான் கிடைத்தது, எனினும், கிடைத்ததே கனி, அது வரையில் மகிழ்ச்சிதான்!

வாழ்க மாதவனார்! வளர்க அவர் தம் நன்னெறி!

கட்டாய இந்தித் திட்டத்தைத் தமிழகத்தில் முதன் முதல் கொண்டு வந்தார் ஆச்சாரியார்!

ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்றனர்-அவர் மனம் மாறவில்லை.

தாலமுத்துவும் நடராஜனும் பிணமாயினர்-அவர் மனம் மாறவில்லை ஆனால் மருண்டார்!

தமிழகமெங்கும் அவருக்கும் அமைச்சர்கள் எவருக்கும், எதிர்ப்பு அச்சம் பிறந்தது ஆச்சாரியாருக்கு.

புற்றிலிருந்து ஈசல் கிளம்புகிறதே! என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

ஈசல் வென்றது! ஆச்சாரியாரின் கட்டாய இந்தி கல்லறை சென்றது!!

இது தமிழக வரலாறு! வரலாறு ஆள வருவோருக்கு வழிகாட்டியாக அமைதல் வேண்டும். ஆனால், ஆளவந்தார்கள். மீண்டும் அழைத்து வந்தனர் கட்டாய இந்தியை-வலிய வலியச் சண்டைக்கு இழுத்தனர் தமிழர்களை.

நாலு எழுத்து கற்றுக்கொள்ளுங்கள்-என்று சுலபமாகப் பேசினார் ஆச்சாரியார்.

நாட்டுக்கு ஆட்சி மொழி இந்திதான்-கற்றேயாக வேண்டும் என்று பயமின்றிக் கூறினர். அவர் இடத்தில் அமர்ந“தோம்.

இட்லிக்குச் சட்னிபோல, தமிழுடன் இந்தி-என்று உவமை கூறினார். உபநிஷதம் படித்தவர்.

ரயிலுக்கு டிக்கட்போல, வாழ்வுக்கு இந்தி-என்று ஆர்ப்பரித்தனர் ஆளவந்தார்கள்.

இந்தி, ஆச்சாரியார் காலத்தில், குலுக்கி மினுக்கி வந்தது. இப்போதோ கொக்கரித்தபடி வந்தது.

இந்தியை, ஆச்சாரியார் முன்பு கூட்டி வந்து காட்டினார்.

இப்போதோ, இந்தியை வடநாட்டுத் தலைவர்கள் அதிகாரப் பத்திரம் கொடுத்து அனுப்பிவைத்தனர்!
பச்சை நிறக் கிளி! பஞ்சவர்ணக்கிளி என்று வர்ணனை கூறி, இந்தியைத் தமிழகத்தில் நுழைத்தார் ஆச்சாரியார். பச்சைவர்ணமோ, பஞ்சவர்ணமோ, கிளி எமது தமிழ்ப் பூங்காவை அழித்துவிடும் என்று ஆச்சாரியாருக்கு நாம் கூறினோம்-கிளி பறந்து சென்றுவிட்டது.

இம்முறை, கிளி வடிவுடன் கூட அல்ல, கழுபோல வந்தது. அதற்குக் ‘களம்’ கள் வழிபாடு செய்தனர். தமிழரின் முழக்கம் இந்தியைப் புறக்கடைக்குத் துரத்திவிட்டது.

இரண்டாம் முறையாக நாம், கட்டைய இந்தித் திட்டத்தை முறியடித்திருக்கிறோம்.

நம் வாழ்நாளில், தாய்மொழியைக் காப்பாற்றும் திருப்பணியை இருமுறை புரியும் வாய்ப்பும், இருமுறை வெற்றி காணும் பெருமையும் கிடைத்ததே என்று எண்ணுவீர்-மகிழ்ச்சியும் கொள்வீர்-இயல்புதான் ஆனால், அன்பரீர்! கூர்ந்து பார்மின், நிலைமை தரும் பாடம் வேறு என்பது விளங்கும். நமது வாழ்நாளில், இருமுறை தாய்மொழிக்கு ஆபத்து நேரிட்டுவிட்டது இருமுறை வேற்று மொழியின் படை எடுப்பு நடந்திருக்கிறது இது காட்டும் பாடம் என்ன? அதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

நாமெல்லாம் கருத்துக் குருடராகாதிருக்கும் நாட்களில் நமது தாய்மொழியில், வையகம் புகழ்ந்து வரவேற்கக்கூடிய அரிய இலக்கியச் செல்வங்கள் இருந்தும், வேற்றுமொழி படை எடுத்திருக்கிறது. அதற்கு, தமிழ்நாட்டினரில் சிலர் கோட்டைக் கதவைத் திறந்துவிட்டு, குற்றேவல் புரிந்திடத் துணிந்தனர்! இஃது எவ்வளவு கேவலம்! எத்துணை அக்ரமம்! இதனை எண்ணிப் பார்க்கும்போது, விழிப்புடன் இருந“தாலொழிய, எதிர் காலத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என்றுதானே தெரிகிறது. எனவே, வீரத்தமிழர்கள்! வெற்றி கண்ட தோழர்கள்! இனியும் விழிப்புடன் இருக்கத்தான் வேண்டும்! புற்றுக்குள்ளே பாம்பு புகுந்து கொண்டால் போதும் என்று பூந்தோட்டத்தில் உலவமுடியுமா?

பெற்ற வெற்றி மிகவும் சாமான்யம் என்று கூறவில்லை. பலனற்றது என்றும் சொல்லவில்லை. தித்திக்கும் செய்திதான் எனினும், இதைப்பெற நாம் பட்டபாடு எவ்வளவு என்பதையும் எண்ணிப் பார்ப்பதுடன் மொழி ஒன்றுக்காகவே நாம் இவ்வளவு பாடுபடவேண“டியிருக்கிறதே. ஏன் இத்தகு நிலை நமக்கு என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

ஆச்சாரியாரின் அறிவாற்றலாலேயே காப்பாற்றப்பட முடியாமற் போன இந்தியை மீண்டும் ஏனய்யா திணிக்கத் துணிகிறீர்கள்- என்று நாம் கேட்டோம் பொதுக்கூட்டங்கள் நடத்தினோம்-மாநாடுகள் கூட்டினோம் அறிஞர் பெருமக்களின் கருத்துரைகளைத் திரட்டி வழங்கினோம். தமிழ்மொழிக்குத் தலையாய காப்பாளர்களாக உள்ள புலவர் பெருமக்களின் பேருரையைப் பெற்று வழங்கினோம். கல்வித்துறையினரின் கருத்துரைகளை, மாணவரின் மனப்போக்கை எடுத்துக் காட்டினோம்-இம்மியும் நகரவில்லை, ‘நம்ம சர்க்கார்!’

யாரோ சிலர்-அரசியல் வாணவேடிக்கைக்காரர்கள் பிரமத் துவேஷிகள் காங்கிரஸ் விரோதிகள் இப்படி எல்லாம் அர்ச்சித்தனர்.

ஓமாந்தூராரிடம் பெரியோர் நேரிலேயே சென்று நிலைமையை விளக்கினார் அந்தக் ‘குணாளரும்’ ஆகாது-முடியாது என்றுதான் கூறிவிட்டார்.

இந்தப் பிரச்சனையிலே, தமிழர்களில் பல்வேறு கருத்தினரும் ஒன்றுபட்டுள்ளனர், என்பதை விளக்க, ‘இந்தி எதிர்ப்பாளர் மாநாடு’ சென்னையில் கூட்டப்பட்டது 17.7.48 ல்.

“எனது வணக்கத்துக்குரிய கலைக்கடல் மறைமலை அடிகளார் பத்து ஆண்டுகளுக்கு முன்பும் நமக்கு வெற்றி தேடித்தந்தவர், இன்றும் தலைமை வகித்து நம்மை நல்வழியில் நடத்தி இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி வெற்றி தேடிக்கொடுக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பெரியார் கூறிட, காவியுடையுடன் மறைமலை அடிகள் தலைமை வகித்த மாநாடு அது.

நோய்வாய்ப்பட்டுள்ளேன் எனவே வர இயலவில்லை-போரில் பங்கு கொள்வேன்-என்று நாவலர் பாரதியார் முடங்கல் அனுப்பினார்.

திரு.வி.க. இதோ தமிழ் காக்க நான் உள்ளேன், என்று புயலும் தென்றலும் மாறி மாறி வீசும் முறையிலே சொற்பெருக்காற்றினார். கதராடையும் தமிழ் உள்ளமும் கொண்ட ம.பொ.சி முழக்கமிட்டார். நாரண. துரைக்கண்ணன் வரவேற்புத் தலைவராயிருந்தார். மணிமொழியார் செயலாளராக இருந்தார். தமிழறிந்து, தாம் தமிழரென்பதையும் அறிந்த தன்மானத் தோழர்கள் கூடித் தீர்மானித்தனர், கட்டாய இந்தியை ஒழிக்க அறப்போர் தொடுத்தாக வேண்டும் என்று அன்றைய மாநாட்டின் போது கூடியது போல, பல திறப்பட்ட பல்வேறு வகையான அரசியல் கருத்துக்கள் கொண்ட தமிழர் தலைவர்கள் ஒன்று கூடி ஒரு மனப்பட்டு, உறுதி தெரிவித்தது முன்பு நடைபெறாதது இனியொரு முறை நடைபெறுமா என்பதும் ஐயமே! எனினும், மாநாட்டின் மாண்பினை ஆளவந்தார்கள் மதிக்க மறுத்தனர். கட்டாய இந்தி கூடாது என்று கருத்தைக் கூறிடவும், ஆளவந்தார்கள் பிடிவாதம் காட்டினால் அறப்போர் தொடுக்கப்படும் என்பதை வலியுறுத்தவும் சென்னை மாகாண மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாடு 1.8.48ல் பேராசிரியர் இலக்குவனார் தலைமையில் நடைபெற்றது. சர்க்கார் இதனையும் பொருட்படுத்த மறுத்தனர். மமதை அந்த அளவுக்கு வளர்ந்திருந்தது.

14.8.48 ல் மாகாணத் தமிழாசிரியர்கள் மாநாடு புலவர் எஸ்.எஸ். அருணகிரிநாதர் தலைமையில் நடைபெற்றது. கட்டாய இந்தித் திட்டம் கண்டிக்கப்பட்டது. ‘கனம்கள்’ இதையும் கவனிக்க மறுத்தனர்.

காங்கிரசை ஆதரித்தாலும் கண்ணியத்தை மறக்க மறுத்த சில ஏடுகள், வளர்ந்து வரும“ கிளர்ச்சி நிலையை ஆட்சியாளருக்கு எடுத்துக்காட்டி அறிவுரை புகட்ட முயற்சித்தன பலன் இல்லை!!

அமைச்சர்கள் அறிவுரைகளைத் துச்சமென்று கருதினர். அவர்களிடம் போலீஸ் படைகளின் எண்ணிக்கைப் பட்டியல் இருந்ததல்லவா! அந்தப் போதை அறிவுக் கண்களை மூடிவிட்டன! ஆதரவாளர் என்ற போர்வையில், ஏடுகள் பல அபின் எழுத்தை ஊட்டியும் விட்டன! கேட்க வேண்டுமா கனம் களின் பேச்சை! ஆர்ப்பரிப்பு மயம்!!

ஒழித்துவிடுவோம்-சட்ட விரோதமாக நடந்தால் படுசூரணமாக்கி விடுவோம்-இவ்விதம் ‘மிரட்டினர்’ நாம் எழுதினோம், “சிறைகளில் வாடுவதும், வேலாயுதங்கள் போல் மரக்கிளைகளில் தொங்குவதும் கூட விடுதலை விரும்பிகளுக்கு மேலானதாகத் தோன்றும். அவினாசியார் இத்தகைய மன எழுச்சியை ஊட்டுகிறார்” என்று.

வெறும் பேச்சு என்று எண்ணிக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள்.

“கொல்லும் அதிகாரம் பெற்றோரே, எமக்குச் சாகத் தைரியம் உண்டு! சிறையிலிடும் அதிகாரம் பெற்றோரே, அதை நிரப்ப எமக்கு முடியும்! அடக்குமுறை வீசும் ஆற்றல் பெற்றோரே! அதனை அமைதியுடன் ஏற்றுக்கொள்ளும் திறம் மைக்குண்டு” என்று தீட்டினோம். ஆட்சியாளர்கள் அசையவில்லை.

அறிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. அறிவுரைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆன்றோர் சான்றோரின் கருத்துரைகள் வெட்டிப் பேச்செனக் கருதப்பட்டன. எனவே, ஆகஸ்ட்டு பத்தாம் நாள் அறப்போர் தொடுக்கப்பட்டுவிட்டது.

வெற்றிகண்டு இதயம் குதூகலிக்கும் இந்த நேரத்தில், இந்த வெற்றிக்காக நாம் பட்ட நஷ்டங்களையும் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம் இனி வரப்போகும் உரிமைப் போருக்கான வழிகாட்டியாக இவையிருக்கும் என்ற எண்ணத்தால்.

இந்தியை எதிர்ப்பதென 2.8.48 திங்கள் அன்று சென்னை மவுண்ட்ரோடு மீரான“சாயபு தெரு 1ம் எண் இல்லத்தில் நடைபெற்ற கழக நிர்வாகக் கமிட்டி அவசரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அறப்போரில் இறங்குவதென முடிவு செய்யப்பட்ட மேற்படி கமிட்டிக் கூட்டத்திற்கு, பெரியார், தி.பொ. வேதாசலம், கே.கே.நீலமேகம், சி.என்.அண்ணாதுரை, ஈ.திருநாவுக்கரசு, பா.சீதாபதி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, ஏ.சித்தையன், டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், சி.டி.டி.அரசு, என்.வி.நடராசன், என“.ஜீவரத்தினம், சி.தங்கராஜ், கே.கோவிந்தசாமி, ஆ. திராவிடமணி, எஸ்.நீதி மாணிக்கம், சி.முனுசாமி, வி.ரங்கராஜ், ஜி.பராங்குசம் கே.ஏ.மணி பழனிசாமி ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது, கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “முதல் நடவடிக்கையாக ஆகஸ்டு 1 ந் தேதி முதல் சென்னையில் முக்கியமாய், தொண்டை மண்டலம் உயர்தரப்பள்ளி அல்லது இந்து தியாலாஜிகல் உயர்தரப் பள்ளியில் இந“தி படிக்கச் சொல்லப்படும் பிள்ளைகளைச் சமாதான முறையில் படிக்கச் செல்லவேண்டாமென்று மறியல் தொடங்குவதென்று தீர்மானிக்கின்றது.

இந்த மறியலைத் தொடங்குவதற்கு முதற்படைத் தலைவராக (சர்வாதிகாரியாக) இருந்து மறியலைத் துவக்கி நடத்தும்படி இக்கமிட்டி தோழர். சி.என்.அண்ணாதுரை எம்.ஏ. அவர்களை நியமிக்கின்றது.”

இந்தியை எதிர்த்து மறியல் களம் புகுவதென முடிவு செய்யப்பட்ட பிறகு 10.8.48 அன்று சென்னை தொண்டைமண்டலம் துளுவ வேளாளப் பள்ளிமுன் துவக்கப்பட்ட அறப்போர் 31.3.49 வரை விடாது நடத்தப்பட்டது. 120 நாட்கள் அமைதியான முறையில் அறப்போர் வீரர்கள் மறியல் செய்து வந்தனர். ஒரே பள்ளியில் என்றல்ல, தொண்டை மண்டலம் துளுவவேளாளர் பள்ளியில் 16 நாட்கள், முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளி முன்பு 36 தினங்கள், இந்து தியாலாஜிகல் பள்ளி முன்னர் 68 நாட்கள் என்று சிறிதுகூடக் சளைக்காது அறப்போர் நடத்தினர்-நமது தோழர்கள்.

அறப்போரிலீடுபட்ட தோழர்களுக்கு ஆட்சியாளாளரால் ஏற்பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறிது நாட்கள் வரை. இது செத்து விடும் என்று கனவு கண்ட ஆளவந்தாருக்கு மொழிப்போர் வளர்வது காண கிலி எழும்பிற்று! ‘என்ன முடியும் இதுகளால்’ என்று கெக்கலித்தோர் பின் ‘என்ன செய்வது!’ என்று திகைக்கலாயினர்! திகைப்பு-ஆத்திரமாக மாறவே அடாத செயல்களால் அறப்போரை அடக்கி விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.

மறியல் வீரர்களை லாரிகளில் இழுத்துக்கொண்டு போய் நகருக்குப் பல மைல்களுக்குப்பால் தன்னந் தனியே விட்டனர். கர்ப்பணியான அறப்போர் வீராங்கனை தனலட்சுமியையும் அவரது ஐந்து வயதுச் சிறுவனையும் 32 மைலுக்கப்பால் ஒரு சவுக்குக் காட்டுக்கருவில் ஆளரவம் இல்லாத இடத்தில் இறக்கி விட்டுத் திரும்பினர்.

மறியலுக்கு வரும் வழியிலேயே மறித்து-தொண்டர்களை இழுத்துச் சென்றனர் லாரிகளில்.

41அ என்கிற சட்டத்தை வீசினர்-போக்கு வரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகக் குற்றஞ் சாட்டி 75க்கு மேற்பட்ட மறியல் தொண்டர்களை இரண்டு வாரங்கள் வரை சிறைக்குள்ளே பூட்டிப் போட்டனர். ஆண்களை மட்டும் என்றல்ல; பெண்கள் மீதும் 41அ வீசப்பட்டது, மிரட்டினர் அவர்கள் மிரளவில்லை!

செய்வகையறியாது, வீம்பைப் பெரிதென எண்ணி வெம்புலிகளிடம் சிக்கிவிட்டோமே என்று ஆளவந்தார் திகைத்து நின்ற நேரத்தில் ஐதராபாத் மீது, இந்திய சர்க்கார் ‘போலீஸ் நடவடிக்கை’யை மேற்கொண்டது.

எதிர்பாராத இந்த நடவடிக்கையைக் கண்டு, பொறுப்புணர்ந்த நாம் பெருந்தன்மையோடு நடந்து கொண்டோம்-தற்காலிகமாக போராட்டத்தை 17.9.48 முதல் ஒத்திவைத்தோம்.

ஒத்திவைப்பதற்கு இருநாட்கள் முன்னர், நமது போருக்கு நாட்டிலிருக்கும் செல்வாக்கையும், மக்கள் மன்றத்தில் நமக்கிருக்கும் ஆதரவையும் ‘எச்சரிக்கையாக’ ஆளவந்தாருக்குக் காட்டும் நோக்குடன் 15.9.48 அன்று நாடெங்கும் அடையாள மறியல் நடத்துமாறு அறைகூவி அழைத்தோம்.

நாடு நம் கோரிக்கைக்கு செவி சாய்த்தது-நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில், இந்தி எதிர்ப்பு மறியல் வெற்றிகரமாக நடைபெற்றது.

தடியடி தர்பார், கைதுக் காட்சிகள், மிரட்டல் வார்த்தைகள் எல்லாம் நடைபெற்றும், மக்கள் மருண்டுவிடவில்லை அவைகளை மண் தூசென மதித்தனர்!

திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, சாந்தோம், முத்தியாலுபேட்டை, மதுரை, போளூர், தூத்துக்குடி, வந்தவாசி, முசிரி, சிவகங்கை, சேலம், விழுப்புரம், துறையூர், வண்ணாரப்பேட்டை, ஸ்ரீரங்கம், செங்கற்பட்டு, காஞ்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு, நாமக்கல், சிதம்பரம், பண்ணுருட்டி, கரூர், லெட்சுமாங்குடி, கடையநல்லூர், காட்டுப்புத்தூர், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை, திருவத்திபுரம், திருவையாறு, திண்டிவனம் பவானி, புதுக்கோட்டை, குடவாசல், பாபநாசம், ஆம்பூர், திருக்கோயிலூர், விருதுநகர், சாத்தூர், கும்பகோம், திருக்காட்டுப்பள்ளி, திருக்கோயிலூர், அரக்கோணம், லால்குடி, வில்லிவாக்கம், சீர்காழி, திருத்துறைப்பூண்டி, திருப்பத்தூர், செங்கம், கோவில்பட்டி, திருவிடமருதூர், கள்ளுக்குரிச்சி, ஆற்காடு, வாலாஜா பேட்டை, இடப்பாடி, ராஜாமடம், கண்ண மங்கலம், சோழவந்தான், நன்னிலம், தஞ்சை, சாத்தூர், மன்னார்குடி, அய்யம்பேட்டை, ஆரணி, ராசீபுரம், திருப்பனந்தாள், ஜெயங்கொண்டம், ஆத்தூர், சின்னசேலம், சூலூர், குத்தாலம், பழனி, தாரமங்கலம், வாணியம்பாடி, ஒரத்தநாடு, கல்லிடைக்குறிச்சி, வில்வரெட்டி பாளையம், காயல்பட்டினம், திருநாகேச்சுவரம், பந்தணைநல்லூர், அரும்பாக்கம், போளூர், திருவாரூர், ஆனைமலை, பெண்ணாகடம், சேந்த மங்கலம், சிங்கம்புணரி முதலாய இடங்களிலெல்லாம் அடையாள மறியல் நாளன்று தமிழ் முழங்கிற்று! தயங்கோம் தமிழ்காக்க என்ற வீரர்கள் கர்ஜனை எழுப்பினர்!

ஆளவந்தாரின் கெடுபிடி, அடிதடி, துப்பாக்கி இவையெதுவும் அவர்களைக் கலங்கச் செய்யவில்லை, ‘கடமை! இது என் கடமை! இது என் கடமை!’ என்று புன்சிரிப்போடு கூறிக்கொண்டு புற்றீசல்கள் போலப் புறப்பட்டனர். ஆட்சியாளரின் அடக்குமுறைகளை மார்பிலே தாங்க.

அன்றையதினம் மட்டும் நாட்டின் நானா இடங்களிலும் நானூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள்-கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டோரைக் கூண்டிலேற்றிற்று அரசாங்கம்! குற்றங்களைச் சுமத்தியது-பலருக்கு மூன்று மாதம் கடுங்காவல்! இன்னும் பலருக்கு ஒரு மாதம் இரண்டு வாரம் மொழிகாக்க விழியால் தங்கள் வீரத்தை விசிவிட்டு சிறைகோட்டம் செல்வதே தங்கள் தேசத் தொண்டின் தியாக முத்திரை என்று எண்ணிய வண்ணம் இறுமாந்து கிடந்தனர் சிறைக்குள் நமது வீரர்கள்.
இந்நிலையில் ஐதராபாத் நடவடிக்கை முடிந்து விட்டதால் ஈரோட்டில் நடைபெற்ற 19வது தனி மாநாட்டில் செய்த முடிவையொட்டி மீண்டும் 2.11.48 அன்று அறப்போர் துவங்கி, வெற்றிகரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோடை விடுமுறை வரவே பள்ளிகள் மூடப்பட்டன. அதையொட்டி அறப்போரையும், ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டு 31.3.49 அன்று 120 ஆவது நாளாக மறியல் நடைபெற்றது.

அன“றைய மறியலை பெண்களே முன்னின்று நடத்தினர். தாய்மொழி காக்கும் போரில் தங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவது போல மறியலை அன்று பெண் தொண்டர்களேயிருந்து பெருமிதமாக நடத்தினர்.
ஆளவந்தாரின் அட்டகாசம் அவர்களுக்குத் தெரிந்ததுதான் எனினும் அஞ்சவில்லை! தயங்கவில்லை!!

இந்தி எதிர்ப்பு துவக்கப்பட்ட சின்னாட்களுக்கெல்லாம், கவர்னர் ஜெனரல் ஆச்சாரியார் சென்னைக்கு வந்தார். தொட்டிலை ஆட்டிவிட்டு, நல்லபிள்ளை போல நடிக்கிறார் அவர் என்பதால் ஆத்திரமடைந்திருந்தோர் அவரது வருகையைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனத் துடித்தனர். இளைஞர்களின் துடிப்பைக் கண்ட நாம் இதுபற்றி ஆலோசிப்பதற்காக 22.8.48 அன்று சென்னை மவுண்ட்ரோடு மீரான் சாயபு தெரு முதல் வீட்டில் கூடினோம். கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆளவந்தாரின் தாக்கீதின் பேரில் போலீசார் எல்லோரையும் வளைத்து நூற்றுக்கு மேற்பட்ட கழகத் தலைவர்களையும், பிரமுகர்களையும், முக்கியஸ்தர்களையும் கைது செய்துகொண்டு போய்ச் சிறையிலடைத்தனர்.

இந்தச் சிறுநரிச் செயல் திராவிட இளைஞர் இதயத்தில் சீற்றத்தைச் சிருஷ்டித்தது சீறினர்-கருங்கொடி ஆர்ப்பாட்டம்! ‘ஆச்சாரியாரே திரும்பிப்போம்!’ என்ற முழக்கம் நகரெங்கும் ஒலித்தது. போலீசாரின் கைது, தடியடி, ஆகியவைகளை யெல்லாம் மீறி ‘நடத்தவேண்டுமென’ எண்ணி அதிருப்தி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்-தீரர்கள், வீரர்கள், சூரர்களான இளைஞர்கள்!

அறப்போர் துவக்கப்பட்ட பின் ஆளவந்தார் நடத்திய அட்டகாசச் செயல்கள், ஏராளம், ஆங்காங்கு கழகத் தோழர்கள் மீது அடக்குமுறை அம்புகளை வீசிக்கொண்டிருந்தனர். பேச்சுரிமைக்குத் தடை, பொதுக்கூட்டங்களுக்கு 144, என்ற அளவில் ஆளவந்தார் போக்கு இருந்தது. அதைக் கண்டிக்கு முகத்தான் குடந்தையில் நடைபெற்ற உரிமைப் போர் இயக்க வரலாற்றின் ஒரு இரத்த ஏடு! 11 நாட்கள் உரிமையை நிலை நாட்டும் நோக்குடன் குடந்தையில் ஊர்வலம், முதலியவை நடைபெற்றன. நடைபெறுவதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் போதே குடந்தை கழகப் பிரமுகர்களையும், தலைவரையும் ஆட்சியாளர் கைது செய்தனர் சிறைக்குள்ளே தள்ளினர்!

புண்பட்டிருந்த பொதுமக்கள் இதயத்தில் மேலும் ஒரு புது அம்புபாய்ச்சப்படவே சீறிடும் சிங்கங்களாயினர்! உரிமைப் போர் நடத்தப்பட்ட பதினொரு நாட்களுக்கும் குடந்தை, இயக்க வீரர்களின் பாசறையாகயிருந்தது. ஓட ஓட விரட்டியடித்தனர் போலீசார்! மிருகத்தனமாகத் தாக்கினர்! வருவோர் போவோரை யெல்லாம் அதிகார வர்க்கத்தின் தடிகள் தாக்கின! இரத்தம்- ஐயோ என்ற அலறல்! ‘அப்பாடீ’ என்ற கிழவிகளின் கூக்குரல் இவைகளைக் கிழித்துக்கொண்டு வழியும் இரத்தத்தைத் துடைக்கவும் எண்ணாது ‘வாழ்க தமிழ்!’ ‘வீழ்க இந்தி!’ என்று கூறியவண்ணம் தெருவிலே வீழ்ந்த வாலிப வீரர்கள்! ஆகிய காட்சிகளால் குடந்தை நிறைந்து கிடந்தது.

எடுத்த கோரிக்கையில் வெற்றி காணும் வரை, இத்தகைய கொடுமைகள் எங்களுக்கு நிலாச்சோறு என்பதுபோல வீரர்கள் முழங்கினர்! முதலில் பிடிவாதமும், பிறகு சமரசவாதமும் பேசிய ஆள்ரோர் கடைசியில் அடங்கினர்! வெற்றிக்கீதம், நமது இதயங்களிலெல்லாம் எழும்பிற்று!

இத்தகைய வீரக்கட்டங்களைத் தாண்டி விட்டோம். இன்று, இந்தி விருப்பபாடமாகிவிட்டது. சொல்லடி, தடியடி எல்லாம் வீசப்பட்டது நம்மீது ஆனால் இப்போது அவர்களாகவே முன்வந்து ‘இந்தி கட்டாயமில்லை’ என்று அறிவித்திருக்கின்றனர்!

அறப்போர் நிகழ்ச்சிகள் பலப்பல ஆளவந்தார்களின் முறைகளும் பலப்பல அவற்றிலே மிக முக்கியமானது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்த முறை, தமது ஆதரவேடுகள் மூலம், செய்துவந்த தப்புப் பிரசாரம்.

“கதிரவன் காய்கிறான்! அவர்கள் ஓய்வெடுப்பதில்லை! கார் மிரட்டுகிறது, அவர்கள், கடமையைச் செய்யாமலிருப்பதில்லை, அவரவர் தத்தமது சொந்த நலனுக்கான காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளை-இவர்களோ, நாட்டின் எதிர்காலத்தை நோக்கமாகக்கொண்டு நற்பணியைத் தளராமல் செய்துவரு கின்றனர். அதோ ஒருவர் அவசர அவசரமாகச் செல்கிறார் தமது அலுவலகம் நோக்கி சென்றால்தான் குடும்பம் செம்மையுற நடத்தமுடியும் என்ற எண்ணம் அவருக்குச் சவுக்கு! இதோ இன்னொருவர், சற்று ஏளனமாகப் பார்க்கிறார் இதுகளுக்கு ஏன் இந்த்த தொல்லை என்று பேசுகிறது அவருடைய பார்வை! ஏளனம் கண்டு, அவர்கள் தமது கடமையைக் கைவிடவில்லை. எந்த நேரத்தில், சென்னைநகரில் மக்கள், பல்வேறு பணிபுரியக் கிளம்புகின்றனரோ, எப்பணி புரிந்தேனும் குடும்பத்தை நடத்த வேண்டுமே என்ற கவலையுடன், தொழில் நிலையம் நோக்கியோ, துரைத்தன அலுவலகம் நோக்கியோ, நாணயமான பணி புரியவோ, நாட்டு மக்களைக் கெடுக்கும் காரியம் செய்யவோ, இலாபவேட்டைக்கோ, வாழ்க்கை எனும் மூட்டையைச் சுமக்க வேண்டுமே என்ற வாட்டத்துடனோ, ஏதோ ஓர் வகையான வேலையில் ஈடுபடப்பலரும் செல்கின்றனரோ, அதே நேரத்தில், சொந்த நலனை மறந்து, நாட்டுமொழியைக் காக்க, வீட்டையும் துறந்து, பணிபுரிகின்றனர். அறப்போர் வீரர்கள்.

இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! எனும், அவர்களின் குரலொலி கேட்ட வண்ணம் இருக்கிறது பள்ளி வாயிலில் ஒவ்வோர் நாளும் ஓய்வின்றி முழக்கமிடுகின்றனர்-மாணவச் சிறாரின் மனம் உருகும் வகையில், காண்போரில் கண்ணியவான்களின் கண்களெல்லாம் கேள்விக் குறிகளாக மாறும் விதத்தில்!

இந்தி மொழி ஏகாதிபத்யம், முளையிலேயே அழிக்கப்பட்டு வருகிறது. அறப்போர் வீரர்காள்! உங்கள் முழக்கம், எங்கும் எதிரொலிக்கிறது! சென்னையில் எங்கோ ஓர் மூலையில் கவனிப்பாரற்ற நிலையில், யாரோ சிலர், போடும் கூச்சல் என்று இதனைத் துச்சமென்று கருதுவதாகப் பாவனை செய்தபோதிலும், யாருடன் உரையாடிக் கொண்டிருந்தாலும், டில்லியில் உலவினாலும் தமது வீட்டுக்கொல்லையில் உலவினாலும் அறப்போர் வீரர்காள்! நீங்கள்தான் அவர்களின் அகக்கண்முன் தெரிகிறீர்கள் ஒவ்வோர் நாளும், இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று நீங்கள் இடும் மூழக்கம், புகாத இடமில்லை, கேளாத நாளில்லை! அமைச்சர்களின் செவிகளில், இந்த முழக்கம் ஒலித்தவண்ணம் இருக்கிறது! ஆகவேதான் அவர்கள் எங்கு சென்றாலும், எதைப் பேசச் சென்றாலும், உங்களைப் பற்றியே பேசநேரிடுகிறது! அறப்போர் வீரர்களே! நீங்கள் அமைச்சர்களை மறந்தாலும், அமைச்சர்கள் உங்களை மறக்கமுடியாது அவ்வளவு வெற்றிகரமாக, அவர்களின் சிந்தனையில் இடம் பெற்றுவிட்டீர்கள்! அறப்போர் தொடர்ந்து நடைபெறட்டும்! அமைச்சர்களின் திட்டம் மாறியே தீரும், என்ற உறுதியுடன் பணிபுரியும் உங்கள் முயற்சி வீண்போகாது! வீண்போகாது!!”
என்று நாம் தீட்டினோம்.

வீண் போகாதா! என்ன தெளிவு! வீண் போகாதாமா, வெட்டிப் பேச்சு என்று இதனையும் ஏளனம் செய்தனர்.

இன்று! அறப்போர் வீண் போகவில்லை என்பது விளங்கிவிட்டது.

அறப்போரின் போது இந்தி மொழிக்கான ஆதரவுப் படைக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் அவினாசியாரே, ஐயோ, தமிழ் அழிகிறதே! என்று இரண்டு திங்களுக்கு முன்பு, கோவையில் வேறு பலருடன் கூடி அழவேண்டிய அளவுக்கு தமிழக மனப்பான்மை மாறவேண்டிய சூழ்நிலை, அறப்போர் காரணமாக ஏற்பட்டுவிட்டது! இதனினும் பெரியதோர் பெருமைக்குரியதோர் வெற்றி வேறென்ன காணமுடியும்!

அறப்போர் உண்டாக்கிக்கொண்டுவரும் அரியதோர் சூழ்நிலையைக் கவனித்துக்கொண்டு வந்த நமக்கு, கட்டாய இந்தி ஒழியப்போவது திண்ணம் என்ற நம்பிக்கை வளர்ந்தது. ஆனால், ஆளவந்தார்களின் பேச்சை அளவுகோலாகக் கொண்டு பிரச்சினைகளைக் கவனித்தவர்கள், கட்டாய இந்தியாவது எடுபடுவதாவது-காங்கிரஸ் மந்திரியாவது தமது திட்டத்தை மாற்றுவதாவது-இந்தி ஒழிக என்ற கூச்சலால் என்ன பலன் பூஜ்யம்தான்! என்று ஏளனம் பேசினர். அவர்கள் கேலியாகச் சிரித்தனர் நாம் கண்ணியமாகச் சகித்துக்கொண்டோம். இப்போதும் நாம் அவர்களின் முகத்தில் அசடு வழிவது கண்டு கேலியாகச் சிரிக்கவில்லை. அவர்களையும் அழைக்கிறோம் களிப்பிலே பங்கு பெற வாரீர் என்று அழைக்கிறோம். உள்ள உறுதியுடன் நடத்தப்படும் கிளர்ச்சி பலன் தந்தே தீரும் என்ற உண்மையை உணர வாரீர் என்று அழைக்கிறோம்.

கட்டாய இந்தியை நாங்கள் எதிர்த்த போது எதிர்த்தவர்கள் ஏளனம் செய்தவர்கள், இதுகளால் என்ன ஆகும் என்று எண்ணியவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒன்று கூறுகிறோம் கட்டாய இந்தியை எதிர்ப்பதற்கான காரணம் எப்படி இன்று ஆட்சியாளரால் ஏற்றுக்கொள்ளப் பட்டதோ, அது போலவேதான் நாம் மேற்கொள்ளும் பிரச்சினைகள் ஒவ்வொன்றும், எதிர்க்கட்சியினரும் என்றேனும் ஓர் நாள் ஏற்றுக்கொண்டே தீரவேண்டிய வகையான காரணங்கள் கொண்டதாகும். இதை உணர இந்த வெற்றி பயன்படும் என்று நம்புகிறோம்.

முதல் பாரம் துவங்கி ஆறாம் பாரம் வரையில் கட்டாய பாடமாக இந்தி மொழியை வைப்பது என்று 2.5.50 ல் எந்த அமைச்சர் மாதவமேனன் உரத்த குரலில் உத்திரவு பிறப்பித்தாரோ அதே அமைச்சர், 18.7.50ல் கட்டாய இந்தித் திட்டத்தை ஒழிக்கும் புது உத்திரவை வெளியிட்டிருக்கிறார். வெற்றியின் மாண்புக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்!

யாரோ நாலுபேர் எதிர்க்கிறார்கள் யாரோ எதிர்க்கிறார்கள் பல பேர் எதிர்க்கிறார்கள் அவினாசியாரும் எதிர்க்கிறார் ஆர்.கே.சண்முகமும் எதிர்க்கிறார்! இப்படி வளர்ந்திருக்கிறது இந்தி எதிர்ப்புச் சூழ்நிலை!!

அறப்போரின் விளைவன்றி வேறென்ன இதற்குக் காரணம்.

எனவேதான், இந்தியைத் திணித்தபோதே ஆச்சாரியார் ஆட்சிக் காலம் முதற்கொண்டே இந்தி ஆதிக்கத்தை ஒழிக்க அரும்பாடு பட்ட அனைவரையும் பாராட்டுகிறோம். நமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தி எதிர்ப்புப் போர் அணிவகுப்பு இருமுறை அமைக்கவும், போராட்டத்தை முன்னின்று நடத்தவும் காவலராக இருந்துதவிய பெரியாருக்கு நமது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெரும்புலவர்கள், கவிஞர்கள், மாணவமணிகள், ஆகியவர்கள் காட்டிய ஆர்வமும் கொண்ட பங்கும் கொஞ்சமல்ல தமிழகம் இத்தகையவர்களைப் பெற்றிருப்பதால் பெருமை அடைகிறது. அவர் களனைவருக்கும் நமது நன்றி.

வரிசையில் தான் கடைசியாகக் குறித்துள்ளோம் வகையில் அல்ல தாய்மார்கள் இந்த அறப்போரில் காட்டிய ஊக்கம், உற்சாகம், உறுதி, ஆயாசப்பட்ட ஆடவருக்கும், அறப்போர் வீரர்களுக்குத் தேவையான ஆற்றலை ஊட்டுவதாக அமைந்திருந்தது. தாய்மார்கள், அறப்போரிலே ஈடுபட்டு பட்ட கஷ்டநஷ்டம் தமிழக வரலாற்றிலேயே முக்கியமான இடத்திலே பொறிக்கப்பட வேண்டிய தரத்ததாகும். அவர்களின் அரிய தொண்டு கண்டுதான் ஆளவந்தார்களே ஓரளவு யோசிக்கத் தொடங்கினர் என்போம் மொழிக்காக அறப்போர் தொடுத்த தாய்மார்களுக்கு தமது நன்றி!

திரு இடத்தின் வரலாற்றிலே ஒரு தித்திக்கும் கட்டம் கண்டோம் களித்தோம்.

அதனால் கிடைத்திடும் ஆர்வமும், எழுச்சியும், நம்பிக்கையும், நல்லறிவும், மேலும் மேலும் நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லுமாக!

அஞ்சேல்! வெற்றி நமதே! என்று நாம் அறப்போர் அறிக்கைகளின் இறுதியில் பொறிப்பது வழக்கம். இதனை இதுகாறும் ஏளனம் செய்தவர்கள் இனியேனும் திருந்துவார்கள் என்று நாம் நம்புகிறோம்.

பெற்றோம் வெற்றி! பெறுவோம் மேலும் பல வெற்றிகள்!!

(திராவிட நாடு-23.1.50)