அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தியாகக் கட்டம்

சர்ப்பம்!

சந்தனக் கிண்ணம்!!

இரண்டிற்குமுள்ள வேற்றுமையை மறந்து, விபரீதப்பாதை நோக்கிப் பயணம் புறப்பட்டிருக்கின்றனர். இந்நாட்டின் ‘முடிசூடா மன்னர்’களென நினைத்துத் திரியும் காங்கிரசு ஆட்சியினர்.

ஆத்திரம் கண்ணை மறைக்குமாம்-ஆனால் அது இவர்களது அறிவுக்கே திரை போட்டு வருகிறது! அதிலும், அடுத்த தேர்தல் நெருங்குகிறது என“பதால், இவர்களது போக்கே விசித்திரமயமாகிக் கொண்டு வருகிறது!

எதைக்கண்டாலும் பயம். பாய்ச்சல்! யாரைப் பார்த்தாலும் சஞ்சலம், சந்தேகம்!

இந்த விபரீதப் போக்கின் விளைவால், இவர்கள் கண்ணுக்ச் சந்தனக் கிண்ணங்கூட சர்ப்பம் போலக் காட்சி தருகிறது!

பட்டம், பதவி நமக்கு எட்டிக்காய் என்று சொல்லியுங்கூட, பயம் நிரம்பிய கண்களோடு நம்மைப் பார்க்கின்றனர்.

கேடுநிரம்பிய காட்டை அழிப்பதுபோல, சோகம் நிரம்பிய ஒரு மாபெரும் சமுதாயக் கேடுகளை ஒழிப்பதற்காகப் பரவும் நமது கொள்கைத் தீயைக்கண்டு கொதிப்படைகின்றனர் கொடுமைகளை எல்லாம் வீசி நம்மை அடக்கத் துடிக்கின்றனர்!

ஏளனம், கேலி, மிரட்டல், கண்டனம் ஆகிய அஸ்திரங்கள் யாவும் அவர்கள் அம்பறாத் தூணியிலிருந்து கிளம்பியும் நம்மை அசைக்க முடியவில்லையென்பதால் அடக்குமுறை பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டனர்!

இருதரப்புக்கும் வேதனையானது-மொத்தத்தில் நாட்டை அராஜகபூமியாக்குவது ஆனாலும், அதுதான் சரியான வழியென்று கருதி விட்டனர்!

திராவிடரியக்க வரலாற்றிலே ஒரு புது அத்தியாயம் அரும்பி விட்டது. தியாகச் சோதனைக் கூட்டம் ஆரம்பமாகிவிட்டது. வீரத்தைச் சோதிக்கும் விசித்திரம் துவங்கப்பட்டுவிட்டது.

அடக்குமுறைப் பாதையில் நடந்து அழிந்துபட்ட சாம்ராஜ்யங்களின் முடிவுகள் வேதனையானவை-ஆனாலும், அதேவழியில் அடியெடுத்து வைத்துவிட்டனர் இந்த அகிம்சா மூர்த்திகள்!

அவர்களின் கொடுமைகள் வளருகின்றன. நம்முடைய பொறுப்பும் அதிகமாகின்றது!

அவர்கள் நம்மீது பாயப் பாய நமது கடமை விரிந்துகொண்டே இருக்கிறது!

புதுயுகம் காணமுயன்ற எவருமே, புன்சிரிப்போடு வாழ்ந்ததில்லை. தேய்ந்த திராவிடத்துக்காக அறப்போரில் இறங்கி விட்ட நாம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

வேதனைகள், நமது இலட்சிய ஈடேற்றத்திற்கு நாம் தரும் காணிக்கைகள்.

நாம் சிந“தும் இரத்தம்-நமது இன்பபூமிக்கு அர்ப்பணிக்கும் அமுதத்துளிகள்.

ஆகவே, எத்தகைய அடக்குமுறை நம்மை எதிர்நோக்கினும்- நாம் அவைகளை மகிழ்வோடு ஏற்க வேண்டியவர்களாகி விட்டோம்.

நமது வாழ்வில் தியாகக் கட்டம் உதயமாகி விட்டது.

நெடுநாட்களாக எதிர்பார்த்த ‘நேரம்’ ஆரம்பமாகிவிட்டது.

தடியடியாலும், துப்பாக்கியாலும் துவக்கி வைக்கப்பட்டு விட்டது.

பொறுப்பு நிறைந்த புது புதுச் சுமைகளை தாங்க வேண்டியவர்களாகி விட்டோம். நமது தியாகச் சீயங்கள், தமது வீரத்தைச் செயலால் காட்டப் புறப்பட்டு விட்டனர்.

நாட்டுப் பற்றால், ‘நலிந்த இந்நாட்டைப் பொன்னாடாக்கு வோம்’ என்ற இலட்சியவெறியால், குருதி கொட்டினும் குண்டுகள் துளைக்கிலும் அவைகளை அலட்சியப்படுத்திப் புறப்பட்டு விட்டனர். அறப்போர்க்களம் நோக்கி!

அந்த முன்னணிக் காளைகளுக்கு எதிர் காலத்தின் சார்பில் நமது வாழ்த்துக்களைக் குவிப்போம்.
அவர்களது காராக்கிரக வாசமும், இரத்தத் துளிகளும் நமது இலட்சிய வெற்றியின் அடையாளங்கள்.

ஆகவே, அவர்கள் பாதையில் நாமும் நடப்போம். அமைதியோடு நடப்போம்.

ஒழுங்கும் கட்டுப்பாடும் நமது கைவிளங்குகளாக இருக்கட்டும் பலாத்காரம். வழக்கம்போல நம்மை விட்டு நீங்கியே கிடக்கட்டும்.

நாம் படும் வேதனை நமது இன்பத் திராவிடத்துக்கு நாம் செலுத்தும் காணிக்கை.

காணிக்கை செலுத்தவேண்டிய கட்டம் துவங்கிவிட்டது! செலுத்திக்கொண்டே இருப்போம். மாற்றாரின் பசி தீரும் வரை!!

(திராவிடநாடு 12.11.50)