அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தோல்வி - ஆனால்!

கந்தம் சமர்ப்பயாமி! புஷ்பம் சமர்ப்பயாமீ! தாம்பூலம் சமர்ப்பயாமி! தட்சணை சமர்ப்பயாமி! என்ற எலி, தமிழ்க்குடும்பங்களிலே கேட்கும்வரை, பாப்பனியத்தின் பாதந்தாங்கிகட்கு “ஒட்சமர்ப்பயாமீ” என்ற சத்தம் கேட்பதிலே ஆச்சரியமில்லை. மார்க்கத்துறையிலே, பார்ப்பனருக்கு அடிபணிந்து கொண்டே, அரசியல் துறையிலே மட்டும் அவர்களை ஆதிக்கம் செலுத்தவொட்டாது செய்ய வேண்டுமென்று கூறுவது பொருந்தாது, பலிக்காது, ஒவ்வொரு தேர்தல் தோல்வியும், நமக்கு இதனைப் பாடமாகப் புகட்டுகிறது.

சென்னையில் நடைபெற்ற, மத்ய சட்டசபைத் தேர்தலில், நமது கட்சி அபேட்சகர் தோற்று விட்டார். பெரும்பாலான ஓட்டர்கள், தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. பார்ப்பன சமுதாயம், கட்டுப்பாடாக வேலை செய்து, தேர்தலில், வெற்றியடைந்து விட்டது.

ஆகாகான் அரண்மனையைச் சுட்டிக்காட்டியும், காந்தியாரின் பட்டினிக் கஷ்டத்தைப் பேசியும், இச்சமயம், காங்கிரசுக்கு ஆதரவு இருப்பதாகக் காட்டினால், பிரிட்டிஷார் தேசீயத் தலைவர்களை” விடுதலை செய்வார்கள் என்று கூறியும், பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் ஏமாற்றப்பட்டனர். இந்தத் தேர்தல், உண்மையில், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், சண்டையாகும். ஆகவே, இதிலே, எக்காரணங் கொண்டேனும், பார்ப்பனக்கட்சி அபேட்சகர் தோற்று விட்டால், பார்ப்பனீயத்துக்குப் பேராபத்தாக முடியும் என்பது தெரிந்த அச்சமூகம், தேர்தலுக்கு அருகத்தே ரங்கய்ய நாயுடு நிற்கிறார் என்று நினையாமல், தாங்களே நிற்பதாகக் கருதிக்கொண்டு, அக்கறை காட்டி, மற்றவரிடம், சர்க்கரை மொழி பேசி, தேர்தலில் வென்று விட்டனர்.

இந்தத் தேர்தலிலே வெற்றி கிடைத்ததும், இந்த உபகண்டத்துக்கு விடுதலை கிடைத்து விடுமென்றோ, காங்கிரசாரின் உச்சி குளிர்ந்ததும், பிரிட்டிஷாரின் உள்ளம் மருண்டு, சுயாட்சி உருண்டோடி வந்துவிடுமென்றோ, ஏற்படக்கூடுமேயானால், நாம், இத்தேர்தலிலே தோல்வியுற்றதை ஒரு நஷ்டமென்று கருதி மனக் கஷ்டமடைய மாட்டோம். நமது தோல்வியின் மூலம் மட்டுமன்று, மரணத்தின் மூலமே, இந்த உபகண்டத்தின் விடுதலை கிடைக்கப்பெறும் என்றால், முகமலர்ச்சியுடன் மரணத்தையும் வரவேற்போம். ஆனால், தேர்தல் வெற்றிகள், சுயாட்சிபெறும் வழிவகை செய்வதில்லை. எட்டு மாகாணங்களிலே கொட்டு முழக்குடன் காங்கிரஸ் வெற்றி பெற்றது, கிடைத்தது என்ன? சுயாட்சியா? இல்லை! பழி வாங்கும் ஆட்சியே நடக்கக் கண்டோம். வாக்காளர்கள், முன்பு மன எழுச்சியுடன், காங்கிரசுக்காக ஓட்டுகளைக் குவித்து, அக்குவியலைக் கண்டதும், பிரிட்டிஷ் ஆட்சியாளர், தலை குனிந்து சுயாட்சியை, அளிப்பர், என்று எண்ணினர்; ஏமாந்தனர்; ஆனால், அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வில்லை. கானலை நீர் என நம்பியே இன்னமும் ஏமாறுகின்றனர்; ஏய்த்து வாழ்பவரின் ஏவலராகும் மனப்பான்மையை அவர்கள் இன்னமும், மாற்றிக்கொள்ளவில்லை. முன்பு பெற்ற வெற்றியைக் காட்டி, காங்கிரசார் வெள்ளையருடன் பேரம் பேசியதையும், பதவிகளில் வீற்றிருந்து வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசி நின்றதையும், வெட்டி வேலை செய்து கொண்டு வீணாட்டமாடிக் கொண்டு, மக்களின் வேதனையைக் குறைக்கத் துளியும் பாடுபடாது, வரிமேல் வரி போட்டு, மதோன் மத்தராகக் காங்கிரசார் வாழ்ந்ததையும், தமிழ் மொழிக்காகப் போராடியவர்களைச் சிறையிலே தள்ளியதையும், சமதர்மிகளைச் சாடியதையும், தொழிலாளரைத் தொல்லைப்படுத்தியதையும், வியாபாரிகள் தலைமீது விதவிதமான வரிகளை ஏற்றியதையும், அன்று கண்டு மனங்குமுறி, கைபிசைந்து கண்ணீர் உகுத்தனர். ஆனால், இவ்வளவு இன்னல்களை விளைவித்த கூட்டத்தை சற்றே விலகியிரும் என்று கூறிடும் நெஞ்சத் துணிவும், அறிவும் ஆண்மையும், மக்களிடம் இன்னும் பிறக்கவில்லை. புல்லர்களின் புன்னகை கண்டதும், அவர்கள், புண்ணை மறந்து தமது கண்களில் தாமே, மண்வாரித் தூவிக் கொண்டனர். சொல் வேறு செயல் வேறு என்றுள்ள கூட்டத்திற்கு மீண்டும் சோடச உபசாரம் செய்ய முன் வந்தனர்; இதனைச் சொரணை கெட்டதன்மை என்றுரைத்தால் கடுமையான வார்த்தையை உபயோகித்தோம் என்று நம்மைக் குறை கூறப்பலர் துணியார் என்று கருதுகிறோம்.

இந்த வெற்றியைக் கொண்டு, காங்கிரஸ், ஒரு இம்மியும் பயனுள்ள செயலைச் செய்திடப் போவதுமில்லை, செய்யும் நிலையுங்கூட அவர்கட்கு இல்லை; வெற்றி முரசு கேட்டுக் களித்தாடுபவரின், கைகால் அலுக்குமேயொழிய, மக்களின், கஷ்டத்திலே கடுகளவும் குறைய மார்க்கம் ஏதும் ஏற்படப் போவதில்லை சென்னையிலே நடைபெறப்போகும் உபதேர்தலிலே காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கிறதா, என்று பார்த்துவிட்டு, சுயாட்சியை அனுப்பி வைக்கிறேன் என்று சர்ச்சில் துரை மகனார் சூளுரைக்கவுமில்லை சுயாட்சிக்கும் உபதேர்தலுக்கும் சம்பந்தமே யில்லை. இந்த வெற்றியைக் கண்டு, பார்ப்பனீயம், பல்லிளிக்கிறது; பலத்த சுயமரியாதைப் பிரசாரத்துக்குப் பிறகும், நமக்குச் சேவை செய்யும் “சற்சூத்திரர்கள்” ஏராளமாக இன்னமும் இருந்து வருகிறார்கள் என்று கூறிக்களிக்கிறது; திராவிடர்கள் தூக்கத்திலே யிருந்து இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை. ஆகவே நமது வாழ்வுக்கு வாட்டம் ஏற்படப்போவதில்லை என்று எக்காளமிடுகிறது; பார்ப்பனீயப் புரட்டு, புராணப்புரட்டு, மதப்புரட்டு ஆகியவைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டே அரசியல் சூதாட்டம் நடைபெறுகிறதென்ற உண்மையை ஊரார் அறிந்து கொள்ளும் விதத்திலே, சுயமரியாதைக்காரர்கள் பேசி வருவதால், எங்கே தமிழர் விஷய முணர்ந்து, விலங்குகளை உடைத்தெறிந்து, விழியில் பொறி கிளம்ப, மொழியில் உறுதி ததும்பக் கிளம்பி விடுகிறார்களோ, என்று எண்ணிப் பயந்து கிடந்த பார்ப்பனீயம், பயமில்லை! நமக்கு அடிமைகட்குக் குறைவில்லை! என்று இன்று பூரிக்கின்றது. அதன் வேதனையை இவ்வெற்றி ஓரளவு மாற்றிவிட்டது; பயத்தைப் போக்கி வைத்திருக்கிறது; இவையன்றி நாட்டு விடுதலைட்ககோ, மக்களின் நலனுக்கோ, இவ்வெற்றி தினையளவு பலனுந்தரப்போவதில்லை என்பதை வெற்றிபெற்ற தோழர் கத்தேரங்கய்ய நாயுடு அவர்களே அறிவார்.

காங்கிரஸ் கட்சிக்கு இன்று மத்ய சட்டசபையிலே இன்ன காரியம் செய்ய வேண்டுமென்ற வேலைத்திட்டம் எதுவுங் கிடையாது; காங்கிரஸ் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூவுவதும், வெளியேற்ற நாடகமாடுவதுந் தவிர வேறொன்ற றியாத திருக்கூட்டத்துக்கு ஒரு புது ஆள் கிடைத்திருக்கிறது என்பதன்றி இதனால் ஏற்படக்கூடிய பலன் எதுவுமில்லை; இந்த உண்மைகளை உணரும் நிலையை இழந்த வாக்காளர்பால் பரிதாபப்படுகிறோம், கோபங்கொள்ளவில்லை. வாலை ஒடித்து, முதுகிலே பட்டை எழும்பச் சவுக்காலடித்து, சரியாகத் தீனி போடாமல் உடலை இளைக்கவைத்த பிறகும் மாடு, கழுத்தைக் குனிந்து கொடுத்து வண்டியோட்டியின் சாட்டையடிக்கு மீண்டும் தன் முதுகைக் காட்டும் போது, நாம், அந்த மாட்டினிடம் இரக்கத்தையே காட்டமுடியும். வேதனையூட்டும் கூட்டத்துக்கு வெற்றிச்சங்கூதி உதடு வீக்கங்கொள்ளும், வாக்காளர், பய பக்தியுடன், அக்கரையுடன், காங்கிரசுக்கு ஓட்டளித்த சம்பவம், வண்டியோட்டியிடம் மாடு வாழ்க்கை நடத்தும் விதத்தையே நினைவூட்டுகிறது.

சுயமரியாதை உணர்ச்சிமட்டும் தமிழர்களிடையே சரியாகப் பரவியிருந்தால், இவ்விதமான “தோல்விகள்” நமது இயக்கத்தி னருக்கு ஏற்பட்டிருக்க முடியாது. சமுதாயத்துறையிலே பார்ப்பனி யத்துக்கு இன்றுள்ள செல்வாக்கு அழிக்கப் பட்டாலொழிய, அரசியலிலே உண்மைத் தமிழர் எவரும் தலைதூக்க முடியாது. எப்படியேனும், தேர்தலில் வெற்றி பெறவேண்டும், அரசியலைக் கைப்பற்ற வேண்டும் என்று கருதும் நேயர்கள், இக்கருத்தை மறுத்துரைப்பதை நாமறிவோம். அவர்கள் பாதை வகுத்துக் கொள்ளா முன்னம், வண்டியேறும் பேர்வழிகள், பிறகு வண்டி காடுமேடு சுற்றி, இருசு வளைந்து, குடை கவிழ்ந்து போவதைக் கண்டு கலங்குவர். நாமோ பாதை வகுத்தபிறகே வண்டியைப் பூட்ட வேண்டும் என்ற கருத்துடன் தமிழர் இயக்கம் பணியாற்ற வேண்டும் என்று கூறுகிறோம். பெரியார் மட்டும், இவ்வளவு தீவிரமாகப் பேசா
திருப்பின், இவ்வளவு பச்சையாகப் புராணங்களைக் கண்டிக்காமலிருப்பின், சமுதாய இழிவு போக்கிக்கொள்ள இஸ்லாத்தைத் தழுவுக என்ற பயங்கரமான போதனை புரியாது இருந்திருப்பின், தேர்தல்களிலே, நமது கட்சி இப்படித் தோற்றிருக்காது என்று கூறிடும் தோழர்களையும் நாம் அறிவோம். ஆனால், இத்தகைய தீவிரமான கொள்கைகளைப் பேசாது, பழமையைத் துளியும் பயமின்றி கண்டிக்கும் மனப்பான்மையின்றி, நாலுபேருக்குப் பிடித்தமான நல்வார்த்தை பேசிக்கொண்டு நமக்கென்ன, எல்லாம் நாளாவட்டத்திலே படிப்படியாகக் குறைந்துவிடும் என்று நடுக்கப் பிரசாரம் புரிந்துகொண்டு, எதைச் சொல்லியாவது எந்த வேடம் புனைந்தாவது ஓட்டுகளைத் திரட்டி விட்டால் போதும், என்று பணியாற்ற ஒரு பெரியார் தேவையில்லை என்று கூறுவோம். புலி பசித்தாலும், புல் தின்னாது! தேர்தலிலே வெற்றி இல்லையே என்ற ஏக்கத்துக்காக, சுயமரியாதை இயக்கக் கர்த்தா, தன்னலக்காரரைத் தழுவவோ வைதீகர்களை ஆதரிக்கவோ, பழமை விரும்பிகளைக் கண்டு பச்சைச் சிரிப்புச் சிரிக்கவோ, தமிழர் சமுதாய முன்னேற்றக் கொள்கைகளை மறக்கவோ, முடியாது, கூடாது. பெரியாரின் பணி, தேர்தல் வெற்றிக்காக வேண்டி தேன்மொழிபேசி, தெகிடுதத்தக்காரரின் ஆசிகோரி நிற்பதன்று. தமிழர், தன்னுணர்வு பெற, ஆரியத்திடமிருந்து விடுதலைபெற, பழமையை ஒதுக்கி புத்துலகம் அமைக்கவே, பெரியாரின் பணி பயன்படவேண்டும். தேன் குடத்தைச் சுற்றி ஈக்கள் வட்டமிடுவதுபோல, அந்தக் கிழவரைச் சுற்றி ஆயிரக்கணக்கிலே வாலிபர்கள் நிற்பது, தேர்தலிலே வெற்றிபெறும் திருமந்திர உச்சாடனம் செய்ய அன்று! தேவரும், மூவரும் எமது உறவினர் என்றுரைத்து, வாழும் ஆரியரின் ஆதிக்கத்தைக் கருவறுக்க அவரிடம் பாடங் கேட்கவேயாகும்! சுயமரியாதைக் கொள்கைகளை அவர் போதிக்கிறார். அதனை ஏற்றுக்கொண்டு, பக்கபலமாக நின்று, ஜஸ்டிஸ் கட்சியின் தளபதிகள் நாளை முதல் வேலை செய்து பார்க்கட்டும், மணப்பந்தலிலே, ஆரியம் புகவொட்டாது தடுக்கட்டும், ஆபத்துக்கு ஆரியன் தேவையில்லை என்று அறையட்டும், அவன் புகுத்திய மந்திர தந்திரங்களை மூலையில் தள்ளட்டும், ஆரியப் பொய்க்கதைகளை நம்ப மறுக்கட்டும், மதத்துக்காகப் பொருளைச் செலவிட்டு மமதையாளரைக் கொழுக்க வைப்பதை நிறுத்தட்டும், பிறகு பார்க்கட்டும், தேர்தலின் போக்கு எப்படி மாறுகிறது என்பதை! வேகமான விமானமேறி, சீக்கிரத்திலே பிரயாணம் செய்ய வேண்டுமென்றால், பிரயாணி, வேகத்தைத் தாங்கும் சக்தியைப் பெற்றாக வேண்டும், பிரயாணமும் சீக்கிரத்தில் நடக்க வேண்டும், விமானமும் வேகமாகப் போகக்கூடாது என்று கூறிக்கொண்டு, மார்வலிக்காரர், விமானியைக்குறை கூறுவது போல, பார்ப்பனீயம் ஒழியவேண்டும், பெரியாரும் தமது தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுபவர், இரண்டிலொன்றைக் கொள்ள வேண்டுகிறோம். எது தேவை? பல்லிளித்தும் பசப்பி பாகுமொழி பேசியும் எப்படியேனும் ஓட் பெற்று ஊராள்வோராகி, பிறகு கிட்டிய பதவி போகாதிருக்க, பார்ப்பனதாசராக இருக்கும் நிலை தேவையா, தீவிரமான கொள்கையைப் பலமாகப் பிரசாரம் செய்து, செயலிலே நாட்டி, செந்தமிழர் படை திரட்டி, சனாதனக் கோட்டையைத் தாக்கித் தகர்த்து, சமதர்மமும் சுயமரியாதையும் மணக்கும் தமிழராட்சியை நிலை நாட்டும் செயல் தேவையா, என்பதைத் தோழர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தமிழருக்குப் பன்னெடுங்காலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டுள்ள இன்னலும் இழிவும் துடைக்கப்பட்டு, புது வாழ்வு பெறவேண்டுமானால், அச்சம், தயை, தாட்சணியமின்றி ஆரியத்தைக் கண்டித்து அழித்தொழிக்க வேண்டும். அதற்கு, நெஞ்சுறுதி மிகமிகத் தேவை, நிலை குலையாத மனப்பாங்கு அதைவிட அவசியம்; இடுக்கண் விளைந்த காலை விம்மாத விழியும், எதிர்ப்புக் கூட்டத்தின் எக்காளத்தைக் கேட்டுப் பதறாத உடலமும் தேவை அவருக்குக் கோபம் பிறக்குமே,இவருக்கு மனம் புழுங்குமே என்ற ஏக்கம் பிறக்கலாகாது. காந்தியும் கனபாடியும் கோபிப்பரோ, சீமானும் அலங்காரப் பொம்மைகளும் சீறுவரோ என்ற சிந்தனை உதித்திடலாகாது, பதவி கோருவோரின் பதைப்பு பிறக்குமோ என்ற பயம் எழலாகாது. நாம் அவர்களை அலட்சியப்படுத்த வேண்டுமென்றோ, பண்படுத்த வேண்டு மென்றோ, இவ்வாறு கூறுகின்றோமில்லை. நம் முன் நிற்கும் வேலை அவ்வளவு பெரிது. இத்துணை நெஞ்சுறுதி தேவை. சொந்த வியவகாரமன்று, சுயநலச்சேவையுமன்று நமக்கிருக்கும் வேலை, இன எழுச்சி எனும் இலட்சியம், அதனைச் சுலபத்திலேயோ, சுற்று முற்றும் பார்த்துக்கொண்டோ, செய்ய முடியாது.

தேர்தல் வேலையோ, இதற்கு முற்றிலும் நேர்மாறானது. அச்சம், தயை, தாட்சண்யம், இங்கு, மிகமிகப் பயன்படும். ஓட் திரட்ட இவை பயன்தரும் முறைகள்.

“உங்களைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன்” என்று அடுத்துக்கெடுக்கும் ஒருவரிடமும் அணுகிக் கூறவேண்டி வரும்.

“நீங்கள் மனது வைத்தால் இது ஒரு பிரமாதமா?” என்று கையாலாகாதவனிடமும் சொல்லித் தீரவேண்டும். “ஏதோ, இழுத்து விட்டு விட்டார்கள்; நின்று விட்டேன் நீங்கள் எப்படியாவது பெரிய மனது வைக்க வேண்டும், எனக்குத் தலை இரக்கம் நேரிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று இளித்துப் பேசவேண்டும்.

“எனக்குத் துரோகம் செய்தால், உன்னைத் தொலைத்து விடுவேன்” என்று மிரட்டவேண்டிய அவசியமும் “உனக்கு இந்த உதவி செய்கிறேன். அந்த வேலையை முடித்துத் தருகிறேன்” என்று ஆசைமொழி பேசவேண்டியும் நேரிடும்.

“ஏமண்டி செட்டிகாரு! நெற்றியிலே, நாமம் இல்லையோ, நீங்களும், நாயக்கரோடு சேர்ந்துவிட்டீரா?” என்று ஒருவர் கேட்பார். அவரிடம் “ஓட்” பெறச் செல்லும் அபேட்சகர், பெரியாரிடம் மதிப்புக்கொண்டவராக இருப்பினுங்கூட சமயத்தை உத்தேசித்து, “அதெல்லாம் இல்லை முதலியார்வாள்! அவர், ஏதோ இந்தப் பிராமணாள் செய்யும் அக்ரமத்தைக் கண்டு மனந்தாளாமல் பேசுகிறார். அதற்காகவேண்டி நமது ஆச்சார அனுஷ்டானாதிகளை நான் விட்டு விடுவேனோ” என்று அபேட்சகர் பேசித் தீரவேண்டும். தேர்தலுக்கு இத்திருக்கல்யாண குணங்கள் தேவை தமிழரின் புதுவாழ்வுக்கு இவை அடியோடு ஆகா! இதுதான் நமது நிலைமை, நேயர்கள், இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, எது அவசியம், எது தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

13.6.1943