அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தூண்டுகிறார்!

“நான் சித்திரவதை செய்யப்படுகிறேன்! சிதைத்து, சின்னாப்பின்னமாக்கி என்னை வதைக்கிறார்கள்! வாட்டுகிறார்கள்! எலும்பெல்லாம் நொருங்கிவிட்டன உடம்பெல்லாம் வீங்கிவிட்டது. தள்ளாடுகிறேன்! கடுமையான ஜன்னி-படுக்கையிலே நாதியற்றவன் போல கிடத்தப்பட்டிருக் கிறேன்! என் உயிர் ‘ஊசி முனை’யிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது. வாழத்தான் பிறந்தேன்! ஆனால் என் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் சித்திரவதைக்குள்ளாகி சிதைக்கப்படும் என்று நான் கனவிலும் கருதவில்லை நினைத்தது கூட இல்லை. நினைக்காதது நடக்கிறது. நடைப்பிணம் என்று சொல்வார்களே அந்தக் கட்டத்தையும் தாண்டிவிட்டேன். இனி நான் பிணம்! ஆமாம், அடுத்தது முடிவுதான்!! அந்த நிலைக்கு எனது வாழ்க்கை முறியடிக்கப்பட்டு விட்டது. நான் மலர் ஆனால் சருகாகிவிட்டேன்! எனது இதழ்கள், பலாத்காரமாகப் பிடுங்கப்பட்டு மிதித்து துவைக்கப்பட்டு விட்டன! ஆனாலும், என் இதயத்திலே எழும்பிய தாகம் இன்னும் அடங்கவில்லை. என் மூச்சு ஓடுங்க ஓடுங்க அது எழும்பி எழும்பி அடிக்கிறது! என் வாழ்நாளுக்குள்ளே நான் எடுத்த காரியம் வெற்றி பெற்றுவிடும் என்றே நம்பினேன். உலவினேன் நாள்தோறும் உழைத்தேன். என் நம்பிக்கை நாசமாகவில்லை. ஆனால் நான் நாசமாகிவிட்டேன்! என் வாழ்வு பலாத்காரமாக இந்த உலகிலிருந்து பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் தாய் தந்தையரைக் கண்டு எவ்வளவோ ஆண்டுகளாகிவிட்டன. என் அருமை மனைவியின் மதுர மொழியைக் கேட்டு மகிழ்ந்த காலம் போய்விட்டது. ஆசைக் குழந்தைகள் ‘அப்பா! அப்பா!!’ என்றழைத்த அன்புக்குரல் இதோ என் காதுகளில் ரீங்காரமிட்ட வண்ணமுள்ளது. எனது அருமைத் தோழர்கள் என்னைச் சுற்றி வட்டமிட்ட காட்சி, நாள்தோறும் நான் பொதுமேடையில் நின்று முழக்கமிட்ட நிகழ்ச்சி, மக்கள் என் கொள்கையைக் கேட்டு எழுப்பிய ஆரவாரம், அதெல்லாம் மரணப் படுக்கையில் கிடக்கும் என்னை மகிழ்விக்கின்றன. ஒரு குற்றமும் செய்தவனல்ல! திருடனல்ல. கொலைகாரனல்ல-தேய்ந்த சமுதாயத்துக்காகப் பாடுபட்டவர்கள்! அதற்குப் பரிசு-எனக்கு மரணப்படுக்கை! மக்கள் தந்தது அல்ல இந்தப் பரிசு. அவர்கள் நான் நாட்டிலே உலவியபோது மலர் மாலைகளையும், மகிழ்ச்சி வாழ்த்துக்களையும் தந்தனர். நான் கூறிய கொள்கைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அவர்கள் தந்த பரிசல்ல இது. என்னைப் பிடிக்காது. நான் கூறிய கொள்கைகளை வெறுத்து, மக்கள் என் மீது பாய்ந்து என்னை மரணப்படுக்கையில் போட்டிருந்தால்... மகிழ்ந்திருப்பேன்! ‘பொல்லாது செய்தோம்’ போலும் பொதுமக்களுக்குப் பிடிக்கவில்லை’ என்று நிம்மதியோடு என் வாழ்வை முடித்துக் கொள்வேன். ஆனால் மக்கள் என்னை மாவீரன்’ என்று வாழ்த்து கின்றனர்-நானோ மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டேன்! மக்கள் அல்ல என்னை மரணக்குழியில் போடுவது-அரசாங்கம்! ஆமாம், அரசாங்கம்தான் அன்பர்களே அரசாங்கம் தான்!!

‘தடியா’ என்று அழைத்தனர்-புன்சிரிப்போடு சென்றேன்! தடியால் தாக்கினர். தாங்கிக் கொண்டேன்! தள்ளி உதைத்தனர்-நான் ஆத்திரப் படவில்லை! துப்பாக்கி முனையில் நிறுத்தினர். நான் துயரமடையவில்லை! சுட்டனர் ‘ஐயோ’ என்றலறவில்லை. ‘அடைவோம்’ திராவிடம்’ என்று கூறிக்கொண்டே வீழ்ந்தேன்! அவர்கள் சித்திரவதையைக் கண்டு நான் சித்தங்கலங்கவில்லை. ‘இலட்சிய வெற்றிக்கு’ நாம் தரும் பரிசுகள் என்றே கருதினேன்! இன்று இதோ, நான் கிடக்கிறேன் மரணப் படுக்கையில்! என் உயிர் ஊசலாட அதைக் கண்டு மகிழ்ந்த நிற்கின்றனர் ஆளவந்தார்!

நான் என் வீட்டுக்காக அல்ல பாடுபட்டது. என் எலும்புகளை முறித்துத் தந்தது. என் சுயநலத்திற்காக அல்ல. நரம்புகள் அறுந்து வீழ, குண்டுகள் உடலைத் துளைக்க, குருதி மண்ணிலே தெறிக்க-நான் வீழ்ந்தது. கொடுஞ்செயல்புரிந்த போது அல்ல!

நாட்டுக்குப் பணியாற்றினேன்-அதற்குப் பரிசு இது!

பொதுப்பணி புரிந்தேன்-அதற்கு அதிகார வர்க்கம் தரும். வெகுமதி இது!

மக்கள் வாழ்வுக்காகப் பாடுபட்டேன். மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டேன்!!

இந்தக் காட்சியைக் காண விரும்புகிறார். நாட்டிலுள்ளோரிட மிருந்து இத்தகைய ‘மரணகீத்ததை’ எதிர்பார்க்கிறார். ‘தயாரித்துக் கொள்ளுங்கள்’ ‘தர்பார் நடத்தப் போகிறேன்’ என்று, நம்மை நோக்கி அறைகூவல் விடுக்கின்றார்.

வீர மரபினரே! வீழ்ந்த இனத்தின் வெற்றிச் செல்வங்களே! நாட்டு வாழ்வுக்காகப் பணியாற்றும் நல்லுத்தமர்களே! நாவால், செயலால், நாட்டுக்குழைக்கும் நல்லிளங் காளைகளே! எழுத்தின் சிற்பிகளே! இளங் கவிஞர்களே! பேச்சின் பிம்பங்களே! பழம் பெருமையின் விடி வெள்ளிகளே! தமிழ்ப் பேச்சினரே! வீர மூச்சினரே!

நம்மைத்தான், “மரணகீதம்” தயாரிக்கச் சொல்கிறார்! நம் வீரத்தைக் கேலி பேசி விலாவிலே குத்துகிறார்!! தடியடியும், துப்பாக்கியும் நம்மீது பாய வேண்டுமாம்-சொல்கிறார்! தூண்டிவிடுகிறார் துணிந்து செய்கிறார்!!

நம்மை விட்டு வைக்கக் கூடாதாம்!

நாம் நாட்டிலே உலவுவது தகாதாம்!

நமது தொண்டு-விபரீதமாம்!!

நாம் அடக்கப்பட வேண்டுமாம்!!!

கூறுகிறார். கொஞ்சங்கூட மனிதாபிமானமில்லாது கூறுகிறார்!

கொடுவாள் பாய்ந்து இரத்தம் வழிந்து, எல்லோரும் கதற. மரணப்படுக்கையில் கிடப்பவனைக்கண்டு கல்லும் உருகுமாம்! காடும் கதறுமாம்!!

சென்னைத் தடியடிக்கு ஆளாகி, குன்றத்தூர் குண்டுமாரிக்கு இலக்காகி குண்டுகள் உடலையும் உள்ளத்தையும் துளைக்க, ‘குய்யோ, முறையோ’ என குடும்பத்தோர் கூவிக்கிடக்க, கொடுமைக்காளாகி நிற்கும் நம்மைப்பார்த்து கேலி பேசுகிறார்! ‘விடாதே உதை’ என்று தூண்டிவிடுகிறார்! வெங்கொடுமைக் காளாகி, வேங்கைகளுக்கு இரையாகிக் கிடப்பவன் மீது ‘மீண்டும் பாய்ந்து பிடுங்க! விடாதே பிடுங்கு’ என்ற வேங்கைகளை பாயத்தூண்டுகிறார்! நாம் படுவது போதாதாம்! ‘இன்னும் படாத பாடு படுத்துங்க’ என்கிறார்!!

காமராஜர்-விருதுநகர் பெற்ற வீணராக இன்றில்லை. விவேகிகள் வீற்றிருக்க வேண்டிய, தலைமைப்பீடத்திலே, அமர்ந்திருக்கிறார். அவர் தான் தோழர்களே, கூறுகிறார். நம்மீது சர்க்கார் நடவடிக்கையெடுக்க வேண்டுமாம்!” வெந்தபுண்ணிலே வேலைப் பாய்ச்சுங்கள் என்று வேங்கைகளுக்கு உபதேசம் புரிகிறார்! ‘வேங்கைக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிறார் அவர் விவேகிகள் இருக்க வேண்டிய இடத்திலே இருப்பவர் ஆனாலும் சொல்லுகிறார்! அன்பர்களே!, நம்மைக்கண்டு சர்க்கார் சகித்துக்கொண்டிருக்கக் கூடாதாம், அவர் சொல்கிறார் இல்லை! இல்லை!! எச்சரிக்கை செய்கிறார்!

மலர்த் தோட்டம் நமது கழகம் ஆனால் அங்கு புகுந்து படாதபாடு படுத்துகின்றனர் ஆளவந்தார் நம்மை ஆட்டிப்படை கின்றர். காங்கிரஸ் ஆட்சியினர்.

காங்கிரஸ் ஆட்சியை ஆட்டிப்படைப்பவர் காமராஜர் அவர் எச்சரிக்கை விடுகிறார். காங்கிரஸ் சர்க்காருக்கு.

நாம் நேற்று முளைத்தவர்களல்ல ‘நமது இலக்கிய முரசு ஒலிக்க ஆரம்பித்தது இன்று நேற்றல்ல! சுமார் 30 ஆண்டுகளாக நாம் உலவி வருகிறோம்! நமது கொள்கைகளைப் பரப்பி வருகிறோம்!!

கால் நூற்றாண்டு கடந்துவிட்டோம் கண்ணியத்தோடு, வளர்ந்து விட்டோம் வீழ்ந்துபட்ட ஒரு மாபெரும் சமுதாயத்தின் இழிநிலை துடைக்கத் துவங்கி, எண்ணற்ற ஆண்டுகளாகி விட்டனர்! நமது பணி நடைபெறாத நாளில்லை கால் நூற்றாண்டு கதிரவன் வெயிலும் காலைப்பனியும் மாலையிருட்டும் கல்லடியும் சொல்லடியும் தாக்கியும் நம் பணி ஓய்ந்த நாளில்லை! நாம் உழைக்காத நேரமில்லை!

இலட்சக்கணக்கான கூட்டங்கள் பல்லாயிரக்கணக்கான மாநாடுகள் இது வரை நடத்தி இருக்கிறோம். பழைமை என்ற எதிரி வடநாட்டு ஏகாதிபத்யம் என்று விரோதி மூடநம்பிக்கை என்கிற கோளாறு ஆகியவைகளை எதிர்த்தே இதுவரை நமது பணி நடைபெற்று வந்திருக்கிறது.

நமது எதிரிகள் கோரமான உருவங்கள் ஒரு மாபெரும் சமுதாயத்தையே சாக்கடையாக ஆக்கிய அவ்வளவு சக்திவாய்ந்தவை.

ஆயினும் எதிர்த்தோம் கேலி! கல்லடி! சொல்லடி! தடியடி ஆகியவைகளைத் தாங்கிக் கொண்டே எதிர்த்தோம்!!

நமது வாழ்வைச் சின்னாபின்னப்படுத்தும், ‘கோரமான கொள்கைகள்’ என்கிற விரோதிகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம்.

நம்மை வீணராக்கிய வீண்கொள்கைகளை எதிர்த்தோம்-ஆனால் இதுவரை ‘எதுவும்’ ஏற்பட்டதில்லை.

எதிர்ப்போம் நாம்-ஆனால் ‘எதிரிகள்’ எவருக்கும் சிறு தீங்குகூட ஏற்பட்டதில்லை.

போராடுவோம் நாம் ஆனால் நம்மைப் போராடுமளவுக்குச் செய்த ‘வீண்கொள்கைகளின்’ பாதுகாவலரிடையில், சிறு காலம்கூட ஏற்பட்டது கிடையாது, நம்மால்!

கால் நூற்றாண்டு-கண்ணியமாகவே நடைபெற்று வந்திருக்கிறது.

வெள்ளையன் ஆண்டபோதும், நாம் பணிபுரிந்தோம். சுயராஜ்யம் கிடைத்த பிறகும் பணிபுரிகிறோம்.

அப்போதுஞ் சரி! இப்போதுஞ் சரி! வேதனைக்கு ஆளானோர் நாமே தவிர நம் வாழ்வைக் குலைக்கும் ‘கொள்கைகளை’ப் போர்த்தினோரல்ல!

கடந்த ஓராண்டைக் கேட்டாலே, நமது கதையைக் கண்ணீரோடு சொல்லும்!

திராவிட முன்னேற்றக் கழகம், துவங்கி நாம் நடந்துவந்த சென்ற ஆண்டுப் பாதையைப் பார்த்தாலே போதும் நாம் எவ்வளவு பரிதாபத்துக்குரியவர்கள்! ஆனாலும், நடந்துவந்துள்ளோம் என்பது விளங்கும்.

2035 கூட்டங்கள்
11 மாநாடுகள்

நம்மால், கடந்த ஓராண்டில், நடைபெற்றிருக்கின்றன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் 500 க்கு மேற்பட்ட கிளைக் கழகங்கள் மலம், நாள் தோறும் நிகழ்ந்திருக்கின்றன.

அன்றுஞ் சரி, இப்போதுஞ் சரி, நமது பணியால் சிறுபூசல் ஏதாவது உண்டா நாட்டில்? காட்டமுடியுமா?

வாழ்விழைந்து வதைபட்டுக்கிடக்கும் ஒரு மாபெரும் சமுதாயத்தினராகிய நாம் மாற்றாரால் படாதபாடு படுத்தப்படுகிறோமே தவிர, சிறு தீங்கும் இன்றுவரை, நமது பணியால் விளைந்தது கிடையாது.

இருந்துஞ் சொல்கிறார்-காமராசர், நம்மை விட்டுøக்கக் கூடாதாம்!

கல்லடி, தடியடிகள் நம்மீது பாய்ந்ததுண்டு தாங்கிக்கொண்டோம் வளர்ந்தோம்! காலை ஒடித்தனர், கண்களைப் பறித்தனர். மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தினர். மக்களை சோடாபுட்டிகளால் தாக்கினர் நாம் ஆத்திரங் கொண்டதே கிடையாது! பட்டப்பகலில் மதுரை-வைகையாற்றில் நமது மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தினர். நாம் பாயவில்லை விரட்டவில்லை! பொறுமையோடு தானிருந்தோம்.

நமது இயக்க வரலாற்றிலே, நம்மீது துப்பாக்கி துரைத்தனம் நடைபெற்றதே இல்லை குன்றத்தூரைத் தவிர!

மதுரைக் கொடுமை நிகழ்ந்தபோதும், நம்மீது பாய்ந்த, மாற்றார் மீது துப்பாக்கி நீட்டப்படவேண்டி நேரிட்டதே தவிர, நம்மீது அல்ல! காங்கிரஸ் போர்வையில் நம் தலைவர்கள் மீது பாய்ந்தோரைத் தடுக்கத் துப்பாக்கி வேலை செய்ததே தவிர, நம்மால் அல்ல!!

காரணம், அன்று முதல் இன்று வரை, அட்டகாசச் செயல்களில் ஈடுபடுவோரல்ல நாம் தனிப்பட்டோரிடம் என்றுமே, நாம் நமது கவனத்தைச் செலுத்தியதில்லை. நமது பணியின் பெருமை தெரியும் நமக்கு அதற்கு நாம் செய்யவேண்டிய தியாகத்தின் நிலையும் புரியும் நமக்கு.
“எதிரிகளின் தூற்றலை முறியடிப்பது அல்ல நம்முன் உள்ள வேலை! நாம் மகத்தான பணியினை மேற்கொண்டு விட்டோம்! நமது மாற்றார்கள். மதவெறி, சாதிவெறி, மூடப்பழக்க வழக்கம். சுரண்டல் முறை, எதேச்சாதிகாரம் என்று பலப்பல! பொறாமை கொண்டோர், பொச்சரிப்புக்காரர்கள், அரசியல் உடலிலே தோன்றும் அரிப்புகள்! நமது வேலை! அவர்களிடம் மல்லுக்கு நிற்பது அல்ல. அறிவுப்பணி புரியும் நமக்கு ஆற்றல் இருப்பது மெய்யானால், நாம் இந்தச் சில்லறைக்குச் சிந்தனையைச் செலவிடலாகாது. இதைத் தயவுசெய்து மனதிலே பதியவைத்துக் கொள்ளுங்கள். கண்ணியம் தோற்காது உறுதியாக இதைச் சொல்லுங்கள். தொடர்ந்து பணியாற்றுங்கள். திராவிடச் சமுதாயத்திலே, மோதலும், பேதமும் ஏற்படாத வகையில்! யானை பிடிக்கச் செல்பவன் பூனைக்குட்டியைத் துரத்திக் கொண்டு செல்வது நேரக் கேடல்லவா! சந்தனக்காட்டுக்குச் செல்பவன், சருகுகளைக்கண்டு, இவை போதும் என்று, இருந்து விடலாமா?” இதுதான் வீழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக வீரத்தோடு பணியாற்றும் நமது கழகத்தவருக்கு நாம் அடிக்கடி காட்டி வரும்பாதை.

இருந்தும், நம்மை நோ“ககி இப்போது துப்பாக்கி துரைத்தனம் நடத்தத் துவங்கியிருக்கிறது! தடியடி தர்பார் நடைபெற ஆரம்பித்திருக்கிறது!
எட்டுமுறை சுட்டிருக்கிறார்கள்!
தமிழ் நாடே-கண்டதில்லை!
எட்டு முறைகள்!!
விடாது, சுட்டிருக்கிறார்கள்
எட்டு முறைகள்!
பெரிய நகரமல்ல; சிற்றூர், அங்கு
எட்டு முறைகள்!!
பெரிய புரட்சி நடக்கவில்லை, பேசப்போனார்கள் அதற்கு எட்டு முறைகள்!

எதற்கும் நடைபெறாத கொடுமை! எப்போதும் நிகழாத கொடுமை! எங்கும், காணாத கொடுமை! ஆனால் காங்கிரசாட்சியிலே நடைபெற்றிருக்கிறது. குன்றத்தூரிலே நடைபெற்றிருக்கிறது அது கண்டு கொதிக்கவேண்டிய மக்கள் தலைவர் அப்படிக் கூறிக்கொள்பவர் காங்கிரஸ் தலைவர் காமராஜ் கூறுகிறார், “திராவிட இயக்கத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க” வேண்டுமாம்!

விரோதிகளோடு மோதுவது கிடையாது. பெரிய சதி செய்து அரசாங்கத்தை மாற்றும் கெடுமதி கொண்டோரல்ல நாம். நாட்டை, அமைதி புரியாக்குவதே நம் பணி என்று பேசியுலவுகிறோம்! சட்டசபை நமக்கு எட்டிக்காய்! பதவிப்போட்டி நம்மால் வெறுக்கப்பட்ட தூசி! தேர்தலில் போட்டியிட விரும்புவோரல்ல நாம்!

இன்று ஆள்வோரை, எதற்கெடுத்தாலும் தூற்றித் திரியும் கொள்கை நம்மிடம் கிடையாது.

நல்லது செய்தபோது நாம் பாராட்டத் தவறியதில்லை!

மதுவிலக்கு-ஜமீன் ஒழிப்பு கோயில் நுழைவு மடச் சீர்திருத்த மசோதா இந்து மதச்சீர்திருத்தம் இவை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த நடவடிக்கைகள்!

காங்கிரஸ் செய்கிறது என்பதற்காக நாம் காயவில்லை. ஒத்துழைத்தோம்! மக்கள் மன்றத்தின் ஆதரவைத் திரட்டித் தந்தோம். காங்கிரஸ் பிரமுகர்களோடு சேர்ந்து ஒத்துழைத்தோம்.

நாடு சீர்பெற; நடைபெறும் நடவடிக்கைகளிலெல்லாம் நாம் கலந்து பணியாற்றி வருகிறோம். சுருங்கச் சொன்னால், நமது கழகம் ஒரு அறிவாலயம், நமது கழகம் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்.

இது, இருக்கக் கூடாதாம். கூறுகிறார் காமராஜர்! நாம் வசதியற்றவர்கள் அவர்களிடம் பிரச்சாரப் பீரங்கிகள் ஏராளம் பணம் கொடுக்கும் பிரபுக்கள் பலர், ஆட்சி அதிகாரம் கையிலிருக்கிறது இருந்தும் கூறுகிறார், நாம் நடமாடக் கூடாதாம்!!

நாம் சட்ட வரம்புக்குட்பட்டவர்கள், நாட்டில் அராஜகமும் அமைதியின்மையும் தாண்டவமாடக்கூடாது என்பதே நமது ஆசை. ‘மக்கள் மன்றத்துக்கு நமது கருத்துக்களையுரைப் போம். ஏற்றால் பெருமிதங்கொள்வோம் இதே நமது தாராக மந்திரம்.

“மக்கள் உரிமைகள் மண்ணிலே வீசப்படக் கூடாது. மனிதனின் ஜீவாதார உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும். பேசவும், எழுதவும், எண“ணியதைக் கூறவும், ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அது, பறிக்கப்படுதல் அடாது! கூடாது! தகாது! ஆகாது!!”

இதுபோல வீரமுழக்கமிட்டனர். சுயராஜ்யப் போராட்டத்தின் போது, இன்று ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ்காரர்கள் ஆனால், இன்று சரித்திரம் திரும்புகிறது! பேச்சுரிமையும், எழுத்துரியும் அடக்குமுறை அம்புகளால் பறிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘தேர்தல்’ நெருங்க நெருங்க. இந்தப் போக்கு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

அடிக்கப் பொறுத்துக் கிடக்கும் பசுவுக்கும் ஆத்திரம் வருமாம் விடாது தாக்கப்பட்டால்! நம்மீது இன்றைய ஆட்சியினர் வீசிவரும் அடக்குமுறை ஈட்டிகள் ஒன்றல்ல, இரண்டல்ல; பொறுத்துப் பார்த்தோம் சகிக்கமுடியவில்லை.

அதன் விளைவாகவே, மக்களின் ஜீவாதார உரிமையான பேச்சுரிமை யை நிலைநாட்டி, இந்த ஆளவந்தாரின் போக்கை, மக்களுக்கு எடுத்துக்காட்ட முடிவு செய்தோம்.

கூவிடும் குயில், ஆடிடும் மயில் கண்டு பாய்பவனைக் கொடுங்கோலன் என்றே கூறுவர் எதேச்சையாகப் பறந்து திரியும் உரிமையோடு பறவைகள் கூட வாழ்கின்றன. ஆனால், அந்த உரிமை மனிதனுக்கு மறுக்கப்படுகிறது! விசித்திரமான நிலை.

பாலை விஷமென்று கருதுகின்றனர். பசுவைப் பாம்பென“று நினைக்கின்றனர். நிலவை நெருப்பு என்று எண்ணுகின்றனர். இந்த ஆளவந்தார். அதன் காரணமாக.

துப்பாக்கி வேலை செய்கிறது!

48 மணி நேரம் ஊரடங்குச் சட்டம்!!

சிறு ஊர் அங்கு 48 மணி நேரம்!!

கேவலமான போக்கு அது பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத காமராஜருக்கு நம்மைப் பற்றிய ‘கிலி’ அதிகமாயிருக்கிறது!

வாழ்விழந்து வதைபட்டுப் போன சமுதாயம் இன்று வீரமுழக்க மிடத் துவங்கி விட்டது. வஞ்சகர் சூழ்ச்சியும், ‘வரட்டுத் தவளை’ கள் கூச்சலும் இனி இங்கு ஏடுபடாது. இதை அடக்கு முறைப் பாதையில் செல்லும் அனைவரும் உணரவேண்டும். புது மறுமலர்ச்சி, நாட்டிலே பரவிவருகிறது. அதை உணர மறுப்பது-விவேகமல்ல. வீம்பால், வீண்பாதையில் நடப்பது, ஆபத்தைத்தான் தரும்.
காமராஜர் தேர்தலை நினைத்து மாபெரும் சமுதாயத்தின் எழுச்சிக் குரலை ஒடுக்க நினைக்கிறார். துப்பாக்கியைத் தூண்டி விடுகிறார்! தடியடி தர்பாரைக் காணத் தூண்டுகிறார்! நாம் நடமாடக்கூடாதென்கிறார்! நம்மை ‘மரண கீதம்’ தயாரிக்கச் சொல்கிறார்!!

‘புயலே’ வா என்றழைப்பதும் ‘எரிமலை’யே கிளம்பு என்பதும், ‘வெள்ளமே’ வாவெனக்கூவுவதும் விபத்தை விரும்பியேற் போரின் செயல்.

ஆனாலும், ஆட்சியாளருக்கு “எச்சரிக்கை” செய்கிறார் நம்மையும் ‘மரண கீதம்’ தயாரிக்கச் சொல்கிறார்!!

விரும்பாத நிலை-ஆனாலும் விரும்புகிறார் இது, அவருக்கு அழகல்ல-நாட்டுக்கும் நல்லதல்ல! ஆனாலும், தூண்டுகிறார்!!

(திராவிடநாடு 5.11.50)