அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தூங்கியா விட்டார்கள்!

குறட்டைச்சத்தம் பலமாகத்தான் கேட்கிறது. ஆசாமி தூங்கியே போனான் சந்தேகமில்லை. இனி நமக்கு வேட்டைதான்! என்று கள்ளன் எண்ணிக்கொண்டான். குஷியாக உள்ளே நுழைந்தான். கூடத்திலே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த வீட்டுச் சொந்தக்காரனை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, அவனைத் தாண்டிக்கொண்டு, ரூமுக்குள் நுழைந்து பெட்டி பேழையைத் தேடி! வீட்டுச்சொந்தக்காரன் தூங்குவதாக பாவனை செய்து கொண்டிருந்தானே தவிர, உண்மையில் தூங்கிவிடவில்லை. குறட்டைச் சத்தத்தைக் கேட்டு, ஏமாளி, தாராளமாக உள்ளே நுழைவான். பிறகு நையப்புடைக்கலாம் என்றே, உறங்குவதாக பாவனை செய்தான்.

ஏமாளிக்கள்ளன் ரூமுக்குள் காலெடுத்துவைத்ததும், எழுந்தான் வீட்டுக்காரன் சந்தடி செய்யாமல், வைத்தான் ஓர் அறை கள்ளன் முதுகிலே! “அடி ஆத்தே! யாரோ அறையறமாதிரி இருக்கே” என்று துடித்துத்திரும்பிப் பார்த்துத் தூங்கிக்கொண்டிருந்த வீட்டுக்காரன், நிற்கக்கண்டு நடுங்கினான், அடடா! தூங்கிவிட்டேன் என்று எண்ணிதானே, துரைமகன் போல உள்ளே நுழைந்தாய்” என்று கேட்டு அடி, உதை, குத்து ஆகிய வரிசை நடத்தி, ஊர்கூட்டி உதை பாகத்தைக் காட்டி போலீசில்விட்டு நையப்புடைக்க வைத்தான், கள்ளனை! இந்தக் கள்ளனின் மூளைக்கும், சில ஆரிய சனங்களின் மூளைக்கும் அதிக வித்தியாசமில்லை! ஆனந்தவிகடன், ஆஸ்யம் என்று கூறிக்கொள்வதிலே, பெருமை பாராட்டுகிறதல்லவா! மூளை வேகத்தைப் பாருங்கள் கட்சி செத்துவிட்டதாம்! செத்தும் அதற்குக்கிராக்கி. இது என்ன அறிவில்லாததாக இருக்கிறதே என்பீர். இதற்கு பெயர் ஆஸ்யம்! ஆமாம், சிரிக்க வேண்டும் சார், சிரித்தாகவேண்டும்;

“இறந்துபோன பிறகும் அதற்குக் குஷிபிறந்திருக்கிறது” என்று அக்டோபர் 25ல், ஆ.வி. எழுதுகிறது. இறந்தபிறகு எதற்குத்தான் எதுதான் இருக்கமுடியும்! இறந்தபின், எது இருக்கும்! இருந்தால்தானே குஷியோ குமுறலோ இருக்க!! இதுகூடத் தெரியவில்லையே கபந்தத்துக்கு என்றுதானே கூற வேண்டி யிருக்கிறது. அறிவுக்கே புறம்பான இது ஆஸ்யமாம்! அதாவது ஜஸ்டிஸ் கட்சி, பிணமாகிவிட்டது என்றால் செயலற்றுக் கிடக்கிறது என்ற பொருள் கொள்ள வேண்டுமாம்! சரி! அப்படியே பொருள் கொண்டாலுங்கூட, வீட்டுக்காரன் தூங்குவதாக எண்ணி உள்ளே நுழைந்து உதைபட்ட கள்ளனின் கதி இத்தகைய கசடர்களுக்கு ஏற்படுமே!! அரசிய லிலேயே வீர வெட்டியான் வேடம் பூண்டு உலவினாரே, சூரர், சத்தியமூர்த்தியார், அவர் சொல்லிச் சொல்லி அலுத்தார், ஜஸ்டிஸ் கட்சியை ஐயாயிரம் அடி ஆழத்திலே குழிதோண்டிப் புதைத்துவிட்டேன் என்று! அவ்வளவு ஆழமான குழி தேவை என்று அவர் கருதக்காரணம், கிலிதான்! ஆரியத்துக்கு, அவ்வளவு ஆழமான குழி தேவையில்லை. அது ஏற்கனவே இளைத்து ஈளைகட்டி, எலும்புருக்கியதால் தாக்கப்பட்டு, மெலிந்து எலும்புக்கூடாகிவிட்டது. ஒரு கடைசி அடி, ஒரு சாக்கடைக்குழி போதும், அதைப்போட்டுப் புதைக்க! ஜஸ்டிஸ் கட்சிக்கு, ஆழமான குழி வேண்டும், அது அவ்வளவு பெரியது! வெட்டிய குழி, வேதியருக்கு வீண்வேலையாக முடிந்தது, “மீண்டும் மீண்டும் ஜஸ்டிஸ் கட்சி கிளம்புகிறதே” என்று மீசையற்ற கூட்டம் கூவிக்கிடந்தது. அதன் கொடுக்கு ஆ.வி. அதன் கண்ணுக்கு ஜஸ்டிஸ் கட்சி உயிரற்றுக் கிடப்பதாகத் தோன்றுகிறது போலும். கள்ளன் எண்ணியதுபோல், எண்ணி ஆ. வி. கஷ்டப்பட இஷ்டமானால், தாராளமாக எண்ணிக்கொள்ளட்டும். நாம் எப்படி தடுக்கமுடியும், ஆரியகுதர்க்கர்களின் அறிவுகெட்ட பேச்சை! பட்டால்தானே தெரியும் புரட்டர்களுக்கு படாமலா தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள்! வருகிறது விரைவில், இதுகளுக்குப் புத்தி கற்பிக்கும் சமயம்! வந்தே தீரும்! அதுவரை, இதுகள் வரட்டுத்த
வளைகளாக, குருட்டு நாய்களாக, கிழட்டுக் கழுதைகளாக இருக்கட்டுமே, அதுகளின் ஆசையும் தீர்ந்து போகட்டுமே!!

8.11.1942