அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தூது நீ சொல்லி வாராய்!

``தூது நீ சொல்லி வாராய்- பெண்ணே
குற்றாலா முன்போய்த் தூது நீ சொல்லி வாராய்!
ஆதி நாட் - சுந்தரர்க்குத் தூது போனவர் முன்னே (தூதுநீ)
வந்தாலிந்நேரம் வரச்சொல்லு- வராதிருந்தால்
மாலையாகினும் வாச...- நுற்றலாதம்..
கந்தாலென நொஞ்சைத் தரச்சொல்லு- தராதிருந்தால்
தான் பெண்ணாவிய, பெண்ணை நானாவிடேனென்று (தூது)

``கன்னியரென்ன, கல்லுங்கரையுமே, `நான் சொல்லி வருவேன் தூது என்று முன் வருமே! என்ன இனிமை! எவ்வளவு உருக்கம்! என்ன எழில்! தேசிகரின் தீந்தமிழ் இசையின் திறனைக் கேட்ட பிறகும், தமிழிலே இசை தகுமோ, கூடுமோ என்று பேசுவோரும் கிளம்ப முடியுமோ’’ என்றனர் தமிழர் அன்று. குயில், சோலையின் ரம்மியத்தைக் கண்டால் கூவுமாம்! மேகத்தின் மனோதாங்கண்டு மயில் ஆடுமாம்! அன்று தேசிகர் சோலைக் குயிலானார்! தமிழர் சோலை! முகமெலாம் மலர்கள்! விழியெலாம் ஒளிதான்! பேச்சும், மூச்சும் தமிழ் மயம், தமிழ் மணம் கமழும், திருநாளன்று, ``நாளைப் போகமலிருப்பேனோ’’ என்றாறாமே கந்தன், அந்த வேடத்தில், தமிழ் நாட்டவரை விரைவில் மகிழ்விக்கப் போகும் (நந்தனார்- தமிழ்ப் படக் காட்சி மூலம்) பண்பாட்டை பணி தேசிகர் அவர்கள் குற்றாலக் குறவஞ்சியிலிருந்து மேலே தந்த பாடலை மணிரங்கில் மதுரமாகிப் பாடி, மக்களை மகிழ்வித்தார். ``இவ்வாறு இனிமையான தமிழ்! இசைக்குப் பொருத்தமானதப்பா இனிய தமிழ்! என்பதைத் எடுத்துப் பொழிந்த பின்னர், தாங்கள் தமிழ் மொழி கற்கண்டு! என்று உரிமையோடு, உள்ள எழுச்சியோடு, உவகை யோடு, உற்றார் முன் உள்ளோம் என்ற உணர்ச்சி யோடு, வாழுமிடம் தமிழுலகம் என்ற பூரிப்போடு பக்கத்திலே வீற்றிருப்பவர், தமிழர் தலைவர் பெரியார் என்ற பெருமைகளை உணர்ந்து உற்சாகங் கொண்டு, ஆடும் சிரமமும், பாடும் பார்வையுங்கொண்ட மலர் முகச் சோலை, மதிவளர்ச் சாலையா? கலைக் கோயில்... எண்ண மும் தோன்றிட்ட மன்றத்திலே பாடுகிறோம் என்ற பரிவுடன், தேசிகர் பாடினார்.

குற்றால நாதருக்குத் தூது கூறினார்களோ இல்லையோ நானறியேன், பக்திப் பிரபாவ விஷயத்தைத் தெரியேன், ஆனால் தூது சொல்லி வரப் பெண்கள் மட்டுமா, ஆண்களும் கூட அன்று சித்தமாயிருந்தனர். குற்றாலத்தாரிடமல்ல, தமிழ் நாட்டிடம், மாலை தரச் சொல்லியவல தமிழரின் செங்கோலை!

தமிழரிடம் செங்கோல் இருந்த காலையில், என்னென்ன எழில்கள் இருந்திருக்குமென் பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தன, காட்சிகள், காஞ்சியில்.

முவேந்தர் மும்முரசு கொட்டி முத்தமிழ் வளர்ந்த காலையிலே, தேசிகரைப் போன்ற இசை அரசுகளே, மன்றங்களிலே இருந்திருக்க முடியும்! எங்கள் தமிழ் கற்கண்டு, என்று மார் தட்டிக் கூறி இருக்க முடியும். ``இன்பத் தமிழின் வெள்ளத்திலே, நீந்தி விளையாடித் தமிழர் வாழ்ந்த நாள் ஒன்றுண்டு! அந்த வாழ்வு இன்று இல்லை! நாளை வாராது போனால் தந்தால் அவ்வாழ்வைத் தரச் சொல்லு தராவிட்டால் மீளாத் துக்கம் மேலும் தரச் சொல்லு என்று தமிழர் யாவரும் கேட்டுக்கொள்ளும் நாள் இது.
* * *

நான் இசைவாணனல்ல; தமிழன்! தமிழ் வெறும் பேச்சு மொழியல்ல, பாட்டு மொழி! எனவே இசைவாணராக இராது போயினும் தமிழர், பாடலின் ரசத்தைப் பருகிட முடியும்! பாடலின் ரசம், தமிழின் (சுவையாக) இருக்க வேண்டுமானால், தமிழ் (தமிழ் மொழி) வேண்டும். தமிழைத் தமிழிலே தமிழர் முன்னிலையில் தமிழ் மணமன்றத்தில் தமிழர் தந்தார். தேசிகரின் இசையைக் கேட்டு இன்பத்தன்றோ இசை அரசே! என்று அன்பு ததும்ப அன்று சென்னை கோகலே மண்டபத்திலே நமது செல்வம் அழைத்தான். அந்த `இசை அரசு’வின் இனிய தமிழ் இசையை நமது மாகாணத்தின் பற்பல பாகங்களிலிருந்து வந்த தமிழர்கள் கேட்டுக் களித்தனர். கானம், காட்சி, கருத்துரை, கனிவு இவ்வளவும் பெற்று மகிழ்ந்த தோழர்களை பார்த்து தான் நான் சொல்லுகிறேன். தூது சொல்லி வாரீர் என்று. வாராதிருந்தோருக்கு, வந்திருந் தோர் சொல்லுங்கள், தமிழ் வளர்ச்சி கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளுங்கள், தடை நீக்கிடுங்கள், வாகை சூடுங்கள் என்று கூறுகிறேன். தங்க வேலரை நான் தருணமறியும் தங்கவேலர் என்று அழைத்திருக்கிறேன் ஒரு முறை, கனிவுடன் மட்டுமல்ல, காரணத்தோடு. அதை உறுதிப் படுத்தி விட்டார் இப்போது.

வெப்பம் வாட்டும்போது, குளிர்ச்சியான காற்று வீசப் பெற்றால் மீனம் குளிர்வது போல், சுருதியில் சேராக் கீதம் காதைக் குடைந்து கெடுத்த காலை குழல் ஓசை கிளம்பி செவிக்கும், சிந்தனைக்கும் செந்தேனைப் பெய்வது போல, வறியருக்கு வாழ்வுப் பசை கிடைத்திடும் வகை தோன்றுவது போல், தண்டவாளப் பெயர்த் தெடுப்பு, பாதை அடைப்பு, தீமுட்டுந் திருவிழா, தெருக் கலகம், வீணாட்டம் ஆகிய காரியங்கள் நடைபெறுவது கேட்டுக் கேட்டு நொந்த உள்ளத்துக்கு, இரண்டு நாட்கள், இனிய தமிழ் மணம் கிடைக்கச் செய்தார் தருணமறிந்து. தனது செல்வக் குமாரனுக்குத் திருமணம், அது தமிழ் முறையாகச் செய்து தமிழ் மணம் கமழ்ந்து தமிழர் மனமெலாம் பூரித்திட வழி செய்தார். தருணமறிந்து செய்தவர், தமிழ் இசையின் சுவையறிந்துதான் தேசிகரை அழைத்திருந்தார். இசை விருந்து அளிக்கவாரீர் என்று.

தமிழர் தளபதி தோழர் ஏ.கே.தங்க வேலரின் புதல்வர் தோழர் சாம்பசிவத்திற்கும், தோழியர் மங்கையர்க்கரசியாருக்கும் தமிழ்த் திருமணம் காஞ்சிபுரத்தில் மிக விமரிசையாக, ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிக்கு, காஞ்சிபுரம் கோட்ராமபாளையம் கந்தன் இல்லத்தில் நடந்தேறியது.

அன்னாளிரவே, வெளியூர்களிலிருந்து தமிழர் சங்கத் தலைவர்களும், தோழர்களும் வந்து சேர்ந்து, வெளியூர் அன்பர்களுக்கென இருந்த விடுதிகளில் தங்க வைத்து உபசரிக்கப் படடனர். முகமும் மனமும் மலர, விருந்தினர்கள் ஏராளமாகக் கூடினர்.

ஞாயிறன்று காலையில், கதிரோனும், தமிழரும் கண் மலர, தோழர் சக்திவேல் கோஷ்டி யினரின் பூபாளம் ஆரம்பித்தது.

மாஜி மந்திரி தோழர் எஸ்.முத்தைய்யா முதலியார் சி.டி.இ. அவர்கள் தலைமையில், தமிழர் முறைப்படி திருமணம் நடந்தேறியது. கந்தன் இல்லத்தினெதிரே போடப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில், மாகாணத்தின் பல பாகங்களிலுமிருந்து வந்த தோழர்களும், தாய் மார்களும் குதுகலத்துடன் வீற்றிருந்தனர். உள்ளூர் பிரமுகர்களும், தாய்மார்களும் சந்தோஷத்துடன் திருமணத் தம்பதிகளை வாழ்த்தலாயினர்.

தலைவர் முத்தைய்யா முதலியார், தமிழறிஞர் திருஞான சம்பந்தனார், பெரியார், அண்ணாத்துரை ஆகியோர் மணமக்களை வாழ்த்தியும், திருமணம் தமிழ் முறையில், பார்ப்பனரை நீக்கி நடத்தப்பட்டதைப் பாராட்டி யும், சொல்லும், செயலும் ஒத்து விளங்கும் தங்கவேலரின் அருங்குணங்களைப் போற்றியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

கந்த விலாசு ஜவுளி கடையினர், வாலாஜா பாத் இந்து மத பாட சாலையினர், மற்றும் பல கழகங்கள் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன. தோழர் தங்க வேலர், விருந்தினருக்கு வந்தனங் கூறினார்.

12 மணிக்கு விருந்து துவங்கிற்று. ஐந்தாறு இடங்களிலே விருந்து வசதிகள் செய்யப்பட்ட தால், வந்திருந்து ஏராளமான அன்பர்களுக்கு உபசாரம் குறையாது நடந்தது. சுமார் ஐயாயிரம் ஏழை மக்களுக்கும் உணவளிக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு, ரயில் ரோடில், தோழர் தங்க வேலர் புதிதாகச் கட்டி, பொதுமக்களுக்கு இனாமாக வழங்கியுள்ள கந்தன் பூஞ்சோலைத் திறப்புவிழாவும், தங்கவேல் கழகம், தங்கவேலர் படத் திறப்பு விழாக்களும், சிறப்புற நடந்தேறின. வைபவத்திலே காஞ்சிபுரம் தோழர் கெங்காசுரம் இனிய இசை விருந்தளித்தார். நகர சபைக் கமிஷனர் தோழர் எஸ்.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தங்கவேல் கழகத்தைத் திறந்து வைத்து, தோழர் தங்கவேலரின் பொது நலத் தொண்டின் ஆர்வத்தைப் பாராட்டினார். பெரியார், தங்கவேலரின் குணாதிசயங்களையும், தமிழர் பணியாற்றும் திறனையும் விடுத்துரைத்து, தங்கவேலரின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவிலும், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இரவு 6.30 மணியிலிருந்து 9.30 மணி வரையிலே இன்பத் தமிழை, இசையை, இனிமையை, தென்றலை, தேனைப் பெய்து, தமிழரின் உள்ளத்தை உருக்கினார். இசை அரசு தண்டபாணி தேசிகர். வீதியெங்கும் மக்கள் கூட்டம், விழிகளிப்புமயம், தமிழரின் உள்ளம் குளிர்ச்சி மயமாக இருந்தது, தேசிகரின் தீந்தமிழ் இசையால்.

பெரியார், தேசிகரைப் பாராட்டி, அவருடைய இசைத் திறனைப் புகழ்ந்து, தமிழ் இசையை அவர் ஆதரிக்கும் அன்பினைப் போற்றியுரைத்து விட்டு, தேசிகரைத் தமிழர், குறிப்பாகத் தமிழ் செல்வான் மகள் மேன்மேலும், ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, தமிழ் இசை பற்றிய விளக்கமும் உரைத்தார். இரவு 10- மணிக்கு மேல், காஞ்சிபுரம் திருமதி சரஸ்வதி அம்மையாரின் கானம் நடந்தது.

திங்களன்று, தமிழரின் மற்றோர் திருநாள் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் கண்ணன் டாக்கீஸில், திராவிட நாடு பிரிவினைக் கமிட்டிக் கூட்டம் தோழர் எஸ்.முத்தையா முதலியார் தலைமையில் நடந்தது. தலைவரும், பெரியார் டி.பி.வேதாசலம், ஏ.கே.தங்கவேலர், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் திராவிட நாடு பிரிவினை சம்பந்தமாக மேற்கொண்டு செய்ய வேண்டியதனைப் பற்றிப் பேசினர். பல தீர் மானங்கள் நிறைவேறின.

அடுத்த மாநாடு, டிசம்பரில், திருச்சியில் நடத்துவதென்றும், அதற்கு பிரபல முஸ்லீம் லீக் தலைவர்களை அழைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது, தோழர் தங்கவேலரின் வந்த னேபாசாரத்துடன் 12 மணிக்குக் கமிட்டி கலைந்தது. விமரிசையான விருந்துக்குப் பிறகு, மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை திருவாடு துறை, சக்திவேல் கோஷ்டியின் நாதஸ்வரக் கச்சேரி நடந்தது.

6.30 மணியிலிருந்து 9.30 மணி வரை, தமிழ் உலகின் இசை ஏறாக இருந்து, தொண்டை நாட்டின் தொல்சிறப்பை மற்றை நாட்டினருக்கு விளக்கி, விருதுபல பெற்று, சங்கீதச் சக்கரவர்த்தியாக விளங்கிய காஞ்சிபுரம் நயனாப் பிள்ளையின் குமாரர், இசைச் செல்வர், தோழர் ரத்தினசாமியின், இசை இன்பத்தில் ஏராளமான மக்கள் இன்புற்றனர். காஞ்சித் தோழர்கள் ராதா, சுந்தரேசன், முறையே பிடில், மிருதங்கம் வாசித்தனர்.

மூன்று நாட்களாக முத்தமிழ், முக்கனி, இனிமைக்கொப்ப, வைபவத்தில் கலந்திருந்தனர் தமிழர், களித்தனர், வாழ்த்தினர்.

திருமண வைபவத்தின்போது, வாலாஜா பாத் இந்து மத பாடசாலைக்குத் தோழர் தங்கவேலர் ஐம்பது ரூபாய் நன்கொடை வழங்கினார்.

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒலிபெருக்கி ஏற்பாடாகி இருந்தது. மூன்று நாட்களும், காஞ்சி யிலே தமிழர் முரசே தழிழர் செவியில் கேட்ட வண்ணம் இருந்தது.

(திராவிட நாடு - 6.9.1942)