அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


துக்கவாரம்
ஆனந்தசுதந்தரம், அடைந்துவிட்டோம்!

ஆடுவோமே! பள்ளுப்பாடுவோமே!

ஓட்டல்தோறும், வீடுதோறும், பள்ளிதோறும், காலைமாலை இரவு எந்த நேரமும் கீதம் கேட்கிறது.

சென்னையிலே, தஞ்சை, திருச்சி, மற்றும் பல ஊர்களிலே துக்கவாரம் நடைபெற்றது!

துக்கவாரம், மேலும் நீடித்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

யாருக்கு, என்ன துக்கம், என்று அறியக்கூடச் சர்க்காருக்கு அக்கரை இருப்பதாகத் தெரியக் காணோம்.

ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் ‘பேர்போன’ ஆசிரியர்கள் - அதிலும் தகறாருக்கு என்றுமே வராத தமிழாசிரியர்கள், துக்கவாரம் கொண்டாடுகிறார்கள், வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டபிறகு, மகஜர் பயனளிக்காத பிறகு - சம்பளம் போதாது என்று.

அமைச்சரை அணுகினாலோ, அவர் வறுமையால் வாடும் அந்தத் தமிழாசிரியர்களை, இழிவாகப்பேசி மனத்தைப் புண்படுத்தியே அனுப்புகிறாராம். சென்னையில் ஒவ்வொரு பேட்டையிலும், தங்கள் குறையை எடுத்துக்கூறி,
சுதந்தரநாட்டில்,
தமிழ் அமைச்சர் ஆட்சியில்,
எங்கள் நிலை இது - என்று விளக்கி வருகிறார்கள் தமிழாசிரியர்கள்.

துக்கவாரம் - துக்கத்தோடு முடிந்து விடாது. நேரடி நடவடிக்கைக்குத் தொடக்கமாகவே அமையும் என்று தெரிகிறது.

வறுமையில்வாடி, அமைச்சரால் அலட்சியப்படுத்தப்பட்டு, சங்க நூற்களைச் சுமந்து கொண்டிருப்பதைவிடச் சிறையிலே சென்று கிடப்போமே - சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நாட்டுமக்கள் உணரட்டுமே, என்று மனம் உடைந்து பேசுகிறார்கள்.

ஆங்கில ஆட்சி அகன்றது - ஆங்கிலத்துக்குள்ள தனிமதிப்பு அகன்றது - இனித்தாய்மொழிக்கு உயர்வும், தாய்மொழி ஆசிரியர்களுக்கு மதிப்பும் பிறக்கும் - அமைச்சரோ, குறளைக்கொட்டிப் பேசுகிறார் - கலைக்களஞ்சியம் அமைக்கிறார் - இளைஞர் - இப்படிப்பட்டவருடைய ஆட்சியிலே இதுவரை இருந்துவந்த இழிவும் பழியும் நீங்கி, இல்லாமை ஒழிந்து, எமது நிலை உயரும் என்று எண்ணி ஏமாந்தோம் - எமது துயரை உம்மிடம் தெரிவிக்கிறோம் செந்தமிழ் நாட்டவரே! எங்கள் கோரிக்கை நியாயமற்றதா, குறை, தீர்க்கப்படவே முடியாததா என்று கேட்போர் மனம் உருகக் கேட்கின்றனர், ஏழ்மையில் சிக்கியுள்ள தமிழாசிரியர்கள்.

ஏறக்குறைய, எல்லாப் பத்திரிகைகளும் - இந்து உட்பட - இவர்களின் குறை, களையப்படத்தான் வேண்டும் என்று எழுதிவிட்டன. அரசியல் கட்சிகள் அனைத்துமே அவர்களுக்கு ஆதரவு காட்டுகின்றன. என்றாலும், அமைச்சர் அசைந்து கொடுக்க மறக்கிறார் - அலட்சியமாகக் கருதுகிறார்.

தமிழாசிரியர்களால், ஆலைத் தொழிலாளர்கள் போல, உழவர் போல, போராட்டம் நடத்த முடியுமா? கிளர்ச்சி செய்ய அவர்களால் இயலுமா? அப்படிப்பட்ட கிளர்ச்சிகளை எல்லாம் கூட அடக்கிவிட்ட எமக்கு, அவர்களின் எதிர்ப்பா, ஒரு பிரமாதம்! - என்று இறுமாப்புடன் எண்ணுகிறார்கள் ஆளவந்தார்கள்.

காங்கிரசை, கம்யூனிஸ்டு, திராவிடக் கழகம் ஆகிய எதிர்க்கட்சிகள் மட்டுமே கண்டிக்கின்றன என்று எண்ணினோம். ஆனால், தமிழாசிரியர்கள் கண்டிக்கின்றனரே, அவர்கள் மனக்குறையைக் கூடத் தீர்க்க முன்வராதது நியாயமா என்று பொதுமக்கள், தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். யோசிப்பதோடு மட்டுமில்லை - தமிழாசிரியர்களுக்கு யோசனைகள் சொல்லவும் தொடங்கிவிட்டார்கள்.

துக்கவாரக் கூட்ட நடவடிக்கைகளை அமைச்சர், ஒற்றர் மூலம் தெரிந்துகொள்வாரானால், மறியல், உண்ணாவிரதம், பள்ளிகளில் வேலை நிறுத்தம் என்று பல திட்டங்கள், அக்கூட்டங்களில், வெட்டிக்கோ வீறாப்புக்கோ அல்ல - வேதனையிலே பிறந்த உறுதியுடன், பேசப்படுவதைக் கேள்விப்படக் கூடும். நிலைமையை, நேர்மையையும் நியாயத்தையும் சிந்திக்கும் யாரும், இப்படியே விட்டுவைக்க மாட்டார்கள். தமிழாசிரியர்கள் சிந்தும் கண்ணீர், வீண்போகாது.
தமிழாசிரியர் சார்பாகக் கிளர்ச்சியை முன்னின்று நடத்திவைக்க, ஒரு கூட்டுப்படை நிச்சயமாகத் தயாராகும் என்பதை அமைச்சர் உணரவேண்டும். பணம் இல்லை என்ற பழம் பாட்டோ, தமிழாசிரியர்கள் சுனாமனாக்கள் என்று கூறும் சுடுசொல்லோ, நெடுநாட்களுக்கு அமைச்சருக்கு அரண் அளிக்காது.

ஏன் ஆங்கிலம் போன்ற அன்னிய மொழி ஆசிரியர்களுக்குக் காட்டப்படும் அளவு மரியாதையும், நிலையும், தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படுகிறது?
தமிழ் நாட்டில் தமிழாசிரியர்களை, ஆப்பிரிக்காவிலே ஜெனரல் ஸ்மட்ஸ், ‘இந்தியரை’ வைத்திருக்கிற நிலையிலே வைத்திருப்பது, அமைச்சருக்கோ அவருடைய தோழர்களுக்கோ, கீர்த்தியைத் தரக்கூடிய செயலா?

தமிழ்! தமிழ்! என்று போட்டுவந்த கூச்சல், போலிதானா?

எங்கள் ஆட்சியிலே தாய்மொழிக்கே ஆக்கமிருக்கும் என்று சொன்னதை மறந்தனரா?

ஆட்சியை, ஆங்கிலர் நடத்தினால் நம்மவரின் அருமை பெருமைகளை அறிய முடியுமோ, குறைகளைத் தீர்க்க இயலுமோ என்று பேசியதெல்லாம், வெறும் பேச்சுத்தானா?

மந்திரிகள் தங்கள் சம்பள விஷயத்திலே அக்கறையுடன், நடந்துகொண்டு, சம்பளத்தை உயர்த்திக்கொண்டனரே, தமிழாசிரியர்களின் நிலையைக் கவனிக்க மறுப்பது, அறமாகுமா? அறிவுடைமைதானாகுமா?

உண்மையைக் கூறுகிறோம், தமிழாசிரியர்கள் துக்கவாரம் என்று பெயர் வைத்தனர். ஆனால், அவர்களின் அறிவு நிரம்பிய பேச்சுகளைக் கேட்ட பொதுமக்கள், “தமிழாசிரியர்களின் துக்கவாரம் என்று கூடக் கூறவேண்டாம். இது வெட்கவாரம் இப்படிப்பட்ட ஆளவந்தார்களைப் பெற்றிருக்கிறோமே - இப்படிப்பட்டவர்களை ஏத்தி ஏத்தித் தொழுதோமே - இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டுமென்று இஷ்ட தேவதைகளை எல்லாம் வேண்டிக் கொண்டோமே - வந்தவர்களின் வல்லமை இப்படி இருக்கிறதே என்று எண்ணி? ஓட் அளித்த நாங்கள் வெட்கப்படுகிறோம் - இது வெட்கவாரம்” - என்று பொதுமக்கள் பேசுகின்றனர்.

துக்கவாரக் கூட்டங்களை முடித்துக்கொண்டு, சென்னையில், பல கட்சி ஆதரவாளர்களையும் கொண்ட, மாபெரும் கூட்டம் நடத்தி, நேரடி நடவடிக்கையில், தமிழாசிரியர்கள் இறங்க இருக்கிறார்கள்.

ஆளவந்தவர்கள், பாட்டாளிகளை, ஜெயிலில் போட்டாயிற்று - இனித்தமிழாசிரியர்களையும் சிறையில் தள்ளும் சிலாக்கியமான - கீர்த்தி மிக்க - தலைமுறை தலைமுறைக்கும் புகழ் தேடித்தரத்தக்க - கைங்கரியத்தையும் செய்யட்டும்.

பொதுமக்களிடம், ஆசைமொழி கூறவும், அவர்கள் எதிர்த்துக் கேட்டால் அடக்கவும், முறையே பிரசார பலமும், அடக்குமுறைக் கருவிகளும், நம்மிடம் இருக்கும்போது, நமக்குப் பயமென்ன, என்று அமைச்சர் எண்ணுகிறார்போலும், தமிழாசிரியர்கள், கடைசி நிமிஷத்தில் பின்வாங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்போலும்.

அமைச்சர், பெரிய ஏமாற்றத்துக்குள்ளாகப் போகிறார். தமிழாசிரியர்களின் உள்ளம் கொதிப்பேறி இருக்கிறது - பொதுமக்கள் - குறிப்பாக மாணவர்கள் - பெற்றோர்கள் - அவர்களை ஆதரிக்கத் துணிந்துவிட்டனர். தமிழாசிரியர்களின் ‘துக்கவாரம்’ இந்த வகையிலே, நல்லபயனளித்து விட்டது.
பொதுமக்கள் நன்கு அறிவார்கள், இவர்கள் எதிர்க்கட்சிக்காரரல்லலர், பதவிக்காகப் போரிடுபவரல்லர், காங்கிரஸ் எது செய்தாலும் எதிர்க்கும் போக்குக்கொண்டவர்களல்லர் - அரசியலுக்குப் புறம்பானவர்கள்; ஆட்சியாளர்களிடம் வீண் வம்புக்கு வருபவர்களல்லர், என்பதை இப்படிப்பட்டவர்கள், துக்கவாரம் நடத்த வேண்டிய அளவுக்கு நிலைமை இருப்பது, பொதுமக்கள் மனத்திலே, புதியதோர் அதிர்ச்சியைத்தந்து, விழிப்பையும் உண்டாக்கிவிட்டது. ஆளவந்தார்களின் போக்குச் சரியன்று என்று, பொதுமக்கள் தீர்ப்பளித்துள்ளனர் - ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும்.

ஆண்மையுடன் நடக்க விருப்பமிருந்தால், அமைச்சர், பொதுமக்களிடம், தமது கட்சியை எடுத்துக் கூறட்டும்; அதே கூட்டத்திலே ஒரு தமிழாசிரியர், தமது கட்சியையும் எடுத்துப் பேசட்டும் - பொதுமக்கள் தீர்ப்பளிக்கட்டும் - பார்ப்போம்.

அமைச்சர், இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்வாரா?

30.11.1947