அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


துயர் துடைக்க வாரீர்!

உறுப்பினர்கள் ஏராளமான அளவிலே சேர்த்தாக வேண்டும். அதுதான் ஆக்கவேலை, ஊக்கத்துடன் அதைச் செய்தாக வேண்டும் அப்போதுதான் கழகம் எஃகு போட்டையாகும் என்று ஆர்வத்துடன் கூறினீர்கள், மகிழ்ந்தேன்.

எங்கே உறுப்பினர் சீட்டுகள் என்று கேட்டீர்கள் – ஆவல் கொந்தளித்து உங்கள் கடிதங்களில். உறுப்பினர் சீட்டுகளை அனுப்பி வைத்தேன்.

போதாது – மேலும் உறுப்பினர் சீட்டுகள் தேவை என்று கேட்டீர்கள் – அச்சாகத் தாமதமாகிறது என்றேன். ஆயாசப்பட்டீர்கள். அச்சகத்தாரிடம் மன்றாடினேன் – மீண்டும் சீட்டுகளை அனுப்பினேன்.

கேட்பவர்க்கெல்லாம் அனுப்பி வைப்பது முறையல்ல, மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி அவர்கள் கிளைகளுக்கு அனுப்பி வைப்பதே முறை என்று மாவட்டச் செயலாளர்கள் கூறினர் – அதையும் ஒப்புக் கொண்டேன் – அனுப்பி வைத்தேன். உறப்பினர்கள் சேர்த்தாகிவிட்டதா என்று உசாவியபடி இருந்தேன் – இதோ – இன்னும் சிலநாட்களில் என்று பதிலளித்தீர்கள்.

காத்துக் கிடந்தேன் உறுப்பினர் சேர்க்கும் வேலை முடிந்து. தேர்தல்கள் நடைபெறவேண்டும் பிறகு பொதுக்குழு அமைய வேண்டும் என்று எடுத்துரைத்தேன், எட்டு நாள். இரண்டு வாரம் –என்று தவணைகள் கூறினீர்கள்.

வருத்தப்பட்டேன் – தலைமை நிலையம் அவ்வப்போது இது குறித்துத் தபால் அனுப்பவேண்டும் என்றீர்கள் – சரி என்றேன் தோழர் ஒருவர் அலுவலகப் பணிக்காக அமர்த்தப்பட்டார் அவரும் நானும் சேர்ந்து, கடிதங்களை அனுப்பினோம் – தபால் இலாகா தழைத்தது. உறுப்பனிர் சேர்க்கும் பணி முடிவுபெறவில்லை.
தொடர்ந்து, முறைப்படி, அலுவலக வேலையைக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் உறப்பினர் சேர்க்கும் வேலை வெற்றிகரமான நடைபெறும், என்றீர்கள் தோழர் ஈ.வி.கே. சம்பத் அவர்களைச் சென்னையில் தங்கியிருந்து தலைமை நிலையப் பொறுப்பாளராக இருக்கக் கேட்டுக் கொண்டேன் – அவரும் ஒரு மூன்று மாத காலம் இரக்க இசைந்து, மாதம் இருநூறு ரூபாய்க்கு மேல் சொந்தப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டு காரியமாற்றுகிறார் – எனினும், உறுப்பினர் சேர்க்கும் காரியம் வெற்றிகரமாக நடைபெற வில்லை.

நாட்டிலே உள்ள ஆர்வம், நண்பர்கள் காட்டிய உற்சாகம், முறைகளைக் கூறியவர்கள் வெளியிட்ட ஆவல், இவைகளுடன் சேர்ந்திருக்கும் உறுப்பினர் தொகையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன், வெட்கப்படுகிறேன்.

துயர்துடைக்கும் விதமாகத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள், தஞ்சை மாவட்டத்திலே சேர்க்கப்பட்ட உறுப்பினர் தொகையின் அளவுக்கேற்ற பணமும் அனுப்பி, மேற்கொண்டு பணியைத் துரிதப்படுத்தும்படி நண்பர்களுக்குக் கூறியிருக்கிறார்.

அதுபோலவே, தலைமை நிலையத்திலிருந்து நேரிடையாக உறுப்பினர் சீட்டுகள் பெற்றுக் கொண்ட கிளைகள் சிலபல, பணம் அனுப்பி வைத்துள்ளன.

மொத்தத்திலே, இது விஷயத்திலே ஆர்வத்தை அதிகமாகக் காட்டிய நண்பர்கள். நான் எதிர்பார்த்ததில் நூற்றில் ஒரு பகுதி அளவுகூட வெற்றியைத் பெற்றுத் தரவில்லை.

தலைமை நிலைய அறிக்கைகள் பல வெளிவந்தன. பொறுப்பாளரின் கடிதங்கள் பலப்பல அனுப்பப்பட்டன. புதுப்புதுப் பொதுக்கூட்டங்கள் தவறாமல் நடைபெறுகின்றன, ஆனால் உறுப்பினர் சேர்க்கும் விஷயம் கவனிக்கப்படவில்லை.

நாள் குறித்துவிடுங்கள், உடனே மளமளவென்று காரியம் நடற்தேறிவிடும், என்றீர்கள், சரி என்றேன் ஜுன் 15 என்று நாள் குறித்தேன். நண்பர்களுக்குக் கூறினேன், இயக்க ஏடுகள் தலையங்கங்களைத் தீட்டின, காரியம் முடியவில்லை. இனி என்ன செய்ய?

இன்னும் ஒரே ஒரு யோசனை – ஒரே ஒரு திங்கள் தவணை தேவை, என்று நண்பர்கள் கூறுகிறார்கள். இசைகிறேன் – ஆனால் உள்ளத்தில் வேதனையுடன். ஒவ்வொரு முறையும் நாள் உங்கள் யோசனைகளை ஏற்றுக் கொள்கிறேன் நம்பிக்கையுடன் – ஆனால் ஒவ்வொரு முறையும் என் மனம் மகிழும்படி காரியமாற்றாமலேயே இருந்துவிடுகிறீர்கள் – எனினும் இப்போதும் உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்கிறேன்.

ஜுலை 15 – வரை உறுப்பினர்கள் சேர்க்கலாம்.

மேலும் நாள்தர, நான் இசையப் போவதில்லை.

ஜுலை 15க்குள், இந்தக் காரியம் முடிந்தாக வேண்டும்.

மாவட்டச் செயலாளர்கள் இதுவரை பெற்றிருக்கும் வெற்றியைத் தெரிவிக்க வேண்டுகிறேன் – உடனடியாக பல மாவட்டங்களில் கிளைக் கழகங்கள் மாவட்டச் செயலாளரிடம், உறுப்பினர் சேர்த்துத் தந்துவிட்டதாகத் தெரிகிறது.

உடனுக்குடன், அந்தத் தகவலைத் தலைமை நிலையத்துக்குத் தெரிவிப்பதுடன், சேர்ந்துள்ள தொகையை, மாவட்டச் செயலாளர்கள், அனுப்பி வைக்க வேண்டுகிறேன். மேலும் தாமதப்படுத்துவது வேண்டுமென்றே, எனக்கு இழைக்கப்படும் கொடுமை என்றே நான் கருதுகிறேன்.

ஜுலை 15 – கடைசி நாள் – உங்கள் ஆர்வம் செயலளவில், எந்த முறையில் உருவாக முடிகிறது, என்பதை உலகு தெரிந்துகொள்ளும் நாள்.

ஜுலை 15 என்றதும் மற்றொரு ஜுலை 15, என்ற போக்கிலே கருதி விடாதீர்கள் – மிகமிக மனச்சோர்வுடன் இசை எழுதுகிறேன்.

எனவே, ஜுலை 15க்குள், உறுப்பினர் சேர்க்கும் பணியினை முடித்துத் தரக் கேட்டுக் கொள்கிறேன். உடனே முனைந்து பணியாற்றுங்கள். நம்பிக்கையை ஊட்டிவிட்டு செயலிலே சோர்வைக் காட்டுவது சரியல்ல. உறுப்பினர் சேர்த்து, தேர்தல்களை முடித்து, மாவட்டக் கழகங்களையும், பொதுக் குழுவையும் காண வேண்டாமா? அப்போதுதானே, கழகம், எழிலுள்ள உருவத்தைப் பெறும். அந்த உருவம் பெற்றால்தானே ஊராள்வோர் நமது கொள்கையைக் கவனிக்கவும், திட்டங்களை ஆராயவும் முன்வருவார். அந்த நிலை பெற்றால்தானே, நாம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் அறப்போர் வெற்றி பெறும்! ஏன், நண்பர்களிடம் இதை வலியுறுத்திக் கூறக்கூடாது! உடனே புறப்படுங்கள். இந்தப் பொறுப்பான பணியுரிய! ஜுலை 15 கடைசி நாள்!

கடந்த மூன்றாண்டுகளாக நாம் கடுமையாக உழைத்திருக்கிறோம் – கஷ்ட நஷ்டங்களைக் கண்டோம் – துப்பாக்கியும் தடியும் கண்டோம் – சிறை கண்டோம் – சீற்றம் கொண்டோரின் சீரழிவான ஏசலைத் தாங்கிக் கொண்டோம் – எல்லாம் எதன் பொருட்டு? உறுப்பினர்கள் சேர்க்கும் காரியத்தைக் கூட ஒழுங்காகவும் திறம்படவும் நம்மாலே நடத்திக்காட்ட முடியவில்லை என்ற செய்தியை உலகுக்கு அறிவிக்கவா! சிந்தியுங்கள் – சிந்தியுங்கள் – என்நிலைமை எப்படி இருக்கும் என்பதைச் சிந்தியுங்கள் ஆவன செய்யுங்கள் – இன்றே துவக்குங்கள்.

அன்பன்
அண்ணாதுரை

திராவிட நாடு – 22-6-52