அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


துவஜாரோகணம்!

காஷ்மீரத் திவானாக இருந்தவரும், தற்போது, மத்திய மேல்சபையிலே வீற்றிருப்பவருமான சர்.கோபாலசாமி ஐயங்கார் காங்கிரஸ்காரரல்ல, தேசியப்பற்றும், சுதந்திரக் கருத்துங்கொண்ட மேதாவி என்று, கூறப்பட்டது அவர் சின்னாள்களுக்கு முன்னர், தில்லை மூவாயிரவரின் திரு அவதாரத் தலத்திலே கூடிய, கல்வி மாநாட்டிலே தலைமை பூண்டு தமது கருதனைத் திருவாய் மலர்ந்துள்ளார். அதனை நோக்கும்போது ஐயங்கார், இன இயல்பின்படி, பழமைக்குத் தொண்டுசெய்யும் கைங்கரியத்துக்கான துவவஜாரோகணம் செய்கிறார் என்று தோன்றுகிறது. நாட்டிலே தற்குறித்தனம் இருக்கக் கூடாது என்றும், பொதுக்கல்விபரவத்தக்க திட்டத்தைச் சர்க்கார் விரைவிலே நடைமுறைக்குக் கொண்டு வர வண்டுமென்றும்; ஐயங்கார் கூறியிருக்கிறார், எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே இவை. ஆனால் இடையே, ஐயங்கார், காந்தியார் வெளியிட்ட வார்த்தா கல்வித் திட்டத்தைப் புகழ்ந்துரைத்து, அம்முறையைப் புகுத்த வேண்டுமென்று பேசியிருக்கிறார் எங்கே இருந்தால் என்ன? என்குறி ஒன்றேதான்ஐயங்கார் என்று ஆரியம் முழக்கமிடுவது போலிருக்கிறது, இதனைக் காணும்போது, காந்தியாரின் வார்தாதிட்டம், வர்ணாஸ்ரம ஓலை, சனாதனச் சுவடி, என்று, கல்வி வல்லவர்களும், இனஇயல்பு அறிந்தோரும் கூறினர், கண்டித்தனர். குலத்துக்கொடு நீதிகூறும் கோணற் புத்தியைக் கொடுக்கக் கூடியதும், ஜாதிபேதத்தை நிலைக்கச் செய்வதும், குலத்துக்கொரு தொழில் கூறிப் பழங்குடி மக்களைப் பாட்டாளிகளாக்கிப் பாடுபடா இனத்தை ஆசானாக்கி, பாரிலே எவரும் ஏற்கமுடியாத அநீதியை நிலைத் திடச்செய்வதும், தந்தையின் தொழிலில் மகள் புகவேண்டும் என்ற தத்துவத்தைப் போதித்து அதன் மூலம், தர்மத்தை அதாவது ஆரிய உயர்வு திராவிடரின் தாழ்வு எனம் நிலையை ஆடாதிருக்கச் செய்வதுமான வார்த் திட்டத்தை ஒரு வரப்பிரசாதம் கனபாடிகளுக்குக் காயகல்பம் என முன்னான் திவான் கருதக்கூடும். ஆனால் திராவிடப் பெருங்குடி மக்களோ, அதனைச் சனாதனத்தின் சதி என்று கருதுகின்றனர், இஸ்லாமிய இனம் அதனை இந்துக்களின் எதேச்சாதிகாரப்பொறி என்று எண்ணுகிறது. இதனைச் சர்.ஐயங்காருக்கு நாம் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். தேசியக் கல்வி என்றால் அரிய ஆதிக்கத்தைப் புகுத்தக் கூடிய கல்விமுறை, என்று வெளிப்படையாகக் கூறுவதில்லை. ஆனால், உண்மையில் உட்பொருள் அதுவே, அதசியத் தொழில் வளர்ச்சித் திட்டம் கூறினால் அதன் உட்கொருள், மார்வாடிகளின் ஆதிக்கம் என்பதுதான். தேசிய சர்க்கார் என்றால் அதன் உட்பொருள் ஆரிய ஆட்சிதான்! சர்.ஐயங்கார், வார்த்தா கல்வித் திட்டத்துககு வக்காலத்து வாங்கிப் பேசுவது வீண்வம்பை விலைக்கு வாங்குவதாகும். இந்நாட்டிலே, திராவிடத்திலே, கட்டாய இந்திக்கு என்ன கதி நேரிட்டது என்பதைக் கவனியாமல் சர்.கோபாலசாமி ஐயங்கார் வார்த்தா திட்டத்திற்கு துவஜா ரோஹணம் செய்கிறார், செய்யுமுன், மாஜிதிவான், மாஜி முதலமைச்சரைக் கலந்து பேசவில்லை போலும்! அன்று ஆச்சாரியார் கட்டாய இந்தியைப் புகுத்தியதன் கொதிப்பு, இன்றும் அடங்கவில்லை. சமரசத் தூதராக ஆசசாரியார் இலங்கை சென்றபோது, கருப்புக்கொடிகள் காட்டப்பட்டனவாம்! சர்.கோபாலசாமி ஐயங்காருக்குத் திராவிடத்தின் இன்றைய மனப்பாங்கு தெரியாது, அது அவருடைய குற்றமல்ல, கொற்றவனுக்குக் குற்றேவல் புரிந்துவிட்டு, வந்திருக்கிறார், இனிமேல்தானே நாடு சுற்றி, மக்களின் போக்கை அவர் தெரிந்து கொள்ளவேண்டும்!!

(திராவிடநாடு - 14.05.1944)