அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


உடுமலை வழக்கு

உடுமலைப் பேட்டை வழக்கு வாபஸ் பெறப்பட்டது! பெரியார், மதியழகன், நாராயணன், தங்கவேலு ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்!

வழக்கு விசாரிக்கப்படும் நிலையிலிருக்கும் போதே 2.7.48 ல் சர்க்கார் தாங்கள் கொடுத்திருந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டதால், சப்மாஜிஸ்ட்ரேட் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நால்வரையும் விடுதலை செய்தார்.

உடுமலையில் 16.4.47 ல் பெரியார் கூட்டம் நடைபெற்றால், அமைதியின்மை ஏற்படும் என்று கருதி 144 தடையுத்தரவு விதிப்பு.

தடையுத்தரவை மீறி அமைதியோடு பெரியார் கூட்டம்.

அமைதியோடு நடைபெற்ற கூட்டத்தினிடையே பெரியாரும் மற்றும் மதியழகன், நாராயணன், தங்கவேல் ஆகியோர் கைது.

மாலை கைது செய்யப்பட்டு நள்ளிரவு வரையில் காவலில் வைக்கப்படல்.

பிறகு நிபந்தனையின்றிச் சொந்தப் பொறுப்பில் விடுதலை.

ஒரு மாத காலம் என்று விதிக்கப்பட்டிருந்த 144 தடையுத்தரவு பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு நீக்கம்.

மூன்று மாதம் கழித்து இ.பி.கோ. 143 வது பிரிவின் கீழும் 188 வது பிரிவின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டு 16.7.49 ல் வழக்கு எடுத்துக்கொள்ளப்படல்.

25.7.49 ல் சர்க்கார் தரப்புச் சாட்சிகள் விசாரணை.

2.7.49 ல் வழக்கு வாபஸ்.

அன்றே குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுதலை! இவை ஒரு விஷயத்தைப் பொறுத்தவரையில் நடத்திக் காட்டப்பட்ட அரசியல் ‘நாடகங்கள்’! இந்த முறையில் இன்றைய ஆட்சி தன் ‘செங்கோல்’ ஒச்சி வருகிறது.

மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட எதிர்க் கட்சிக்காரர்களையும், பொதுமக்களையும் எவ்வளவு துச்சமாகக் கருதி வருகிறது. இன்றைய அரசாங்கம் என்பதற்கு இது வொன்றே போதுமான எடுத்துக் காட்டாகும். இதனால் பொது மக்கள் பணத்தினால் நடைபெறும் அரசாங்கத்திற்கு எவ்வளவு நேரக்கேடு, பொருள்கேடு? அதில் தொடர்பு படுத்தப்பட்டுப் பல தடவை உடுமலைக்கு இழுத்தடிக்கப்பட்டு அலக்கழிக்கப்பட்ட நால்வருக்கு எவ்வளவு நேரக்கேடு பொருள் கேடு? இத்தகைய பாழ்படும் நிலைமைகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் அரசாங்கத்தால், நீதிவழியும், நேர்மை வழியும் செல்ல அது முன்பே முனைந்திருந்தால், ‘ஒருபால் கோடாமை சான்றோர்க்கணி’ என்ற முறையில், தான் தூக்கிய துலாக்கோலைச் சமமாக சரியாகப் பிடிக்க, எல்லா விடத்திலும், எப்பொழுதும் முற்படுமேயானால், எவ்வளவோ குறைபாடுகளைத் தவிர்க்க வழியேற்பட்டுவிடும். எதிர்க்கட்சியினரை அலட்சியமாகக் கருதும் மனப்பான்மையே மேற்குறித்த வீணான நாடகங்கள் நடைபெற வழியேற்பட்டது. இனியாயினும் அரசியல் நேர்மை நிலவட்டும்!

(திராவிட நாடு. 7.8.49)