அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


உலக்கை தாசர்!
சென்னை சர்க்காரின் மில் தடைக் கொள்கையை, மத்திய சர்க்கார் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திரத் தலைவர்களுள் ஒருவரான தோழர் என்.ஜி. ரங்கா அவர்கள் இதுபற்றி மத்திய சட்ட சபையிலே கேள்வி கேட்டபோது, தோழர் ஆச்சாரியார், சென்னை சர்க்காரின் மில் தடைத் திட்டத்தைக் கண்டித்துப் பேசினார்.

மண்டையில் அடி விழுந்தும், பிரகாசம்காருவுக்கு, மனம் குழம்பியபடியேதான் இருக்கிறது.

மில் தடைக் கொள்கையைக் கை விட்டு விட்டதாகத் தெரிவித்துவிட மனம் வரவில்லை. வெட்கம், துக்கம், வீண் கௌரவத்தில் ஆசை, பிடிவாதம் இவை போன்ற எந்த உணர்ச்சியாலோ தெரியவில்லை. இன்னும், மில் தடைத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன் என்று கூறாமலிருக்கிறார்.

மத்திய சர்க்காருடன் கடிதப் போக்குவரத்து இது குறித்து நடந்து வருவதாகுவும், அதன் முடிவு தெரிந்தபிறகுதான், சென்னை சட்டசபையிலே இதனைப் பற்றிப் பேச ஏற்பாடு செய்யப்படும் என்று பிரகாசம்காரு தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கடிதப்போக்கு அவசியமா? மத்திய சர்க்காரின் பொறுப்பான பதவியில் இருப்பவரும் இந்த மாகாணப் பொருளாதார நிலையை நேரடியாக அறிந்தவருமான ஆச்சாரியார், வெளிப்படையாக, பொதுக் கூட்டத்திலே அல்ல, மத்திய சட்ட சபையிலே மில் தடைத் திட்டத்தைத் தாக்கிய பிறகும், ஏன் முதலமைச்சர், இதுபற்றிக் கடிதம் எழுதவேண்டும்?

“நான் என்னமோ என்று கருதிக் கொண்டு சொல்லிவிட்டேன், இவ்வளவு எதிர்ப்புக் கிளம்புமென்று தெரியாமற்போய்விட்டது. இப்போது பின் வாங்கினாலோ, கேலி செய்வார்கள். ஆகவே, ஏன் முகத்திலே கரி பூசாதீர்கள். மில் தடைத் திட்டத்தைச் சென்னை சர்க்கார் தங்கள் இஷ்டம்போல நடத்திக்கொள்ளமட்டும் என்று பிறப்பித்து விடுங்கள் என்று கெஞ்சுகிறார்?

“அல்லது, மாகாண சர்க்காருக்கு மத்திய சர்க்காரை எதிர்த்து, இந்தச் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் இருக்கிறது - இன்னின்ன சட்ட நிபுணர்கள் கருத்து இது - ஆகவே, என்னுடைய மில் தடைத் திட்டத்தை மத்ய சர்க்காரின் குறுக்கீடு பற்றிக் கவலைப்படாதபடி, அமுல் நடத்தத்தான் போகிறேன் - மத்திய சர்க்கார் என்ன செய்கிறதோ செய்யப்பட்டும் பார்ப்போம்” என்று மிரட்டுகிறாரா?

ஏன், கடிதம் எழுதுகிறார்!

இந்தப் பிரச்சினை தனக்கும் மத்திய சர்க்காருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது என்று மட்டும் ஏன், இவர் கருத வேண்டும்? மக்கள் மன்றங்களிலே, இது பற்றி எழுந்த கண்டனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை அரசியல் நியாயத்துக்கும் கட்டுப்படப் போவதில்லையா? சேலத்திலே, காங்கிரஸ் M.L.A.க்களே முன்னின்று பலத்த பிரச்சாரம் செய்தும், பொதுக்கூட்டத்திலே, மில் தடைக் கொள்கை கூடாது என்று தீர்மானிக்கப்பட்டதைப் பிரகாசம்காரு அறிவாரா? தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் காமராஜர், இந்தத் திட்டத்தைக் கண்டிப்பதை இவர் அறியாரா?

கட்சிப் பேதமின்றி, இந்தத் திட்டத்தைப் பொறுத்தமட்டிலே கண்டனம் பிறந்தது. காங்கிரஸ் M.L.A.க்களிலே பலருக்கு இந்தத் திட்டம், நஷ்டத்தையோ, விபரீதத்தையோ பொருளாதார மந்தத்தையோ நமது பகுதியிலே ஏற்படுத்தும். வடநாட்டுக்குப் பொருளாதாரத் துறையிலே ஆதிக்கம், தருவதாகும். சீமைக்குப் பதில் பம்பாய்க்கு நாம் அடிமையாக நேரிடும். அந்த நிலைமைக்குத்தான் இந்தத் திட்டம் நம் நாட்டை இழுத்துச்செல்லும் என்ற கருத்து இருப்பதை அவர் அறியாரா? அறிந்தும் தமது போக்கிலேயே இருக்க விரும்பும் காரணம் என்ன? இது M.L.A.க்களின் கருத்து கிள்ளுக்கீரை, என்று எண்ணி அல்லது கட்சிக் கட்டுப்பாடு என்று மிரட்டி இவர்களைப் பணியவைத்துவிடலாம். என்ற தைரியமா? எல்லைக் காந்தியை காந்திதாசராக்க வேண்டுமென்ற ஆசையா? என்ன காரணத்திற்காக, இன்னமும் வீண் பிடிவாதம் காட்டவேண்டும்?
மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள். இந்தப் போக்குமாறும் என்பதை இவர் அறியமாட்டார்.

“கிடக்கு தள்ளுங்க சார்! ஆச்சாரியார் சரியாக மண்டையில் அடி கொடுத்தார். இந்தக் காவலர் தத்தளிக்கிறார். இவர் மத்திய சர்க்காருடன் கடிதப் போக்குவரத்து நடத்தி முடிப்பதற்கு இவருடைய மந்திரி சபைகளைக் கலைந்து விடப்போகிறது - புதிய மந்திரி சபை - புதிய வேலைத் திட்டம் வரப்போகிறது - இவருடைய மில் தடைத் திட்டம், குப்பைக் கூடைக்குத்தான் போய்ச் சேரப்போகிறது” என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.

இருந்தும், இவருடைய பிடிவாதம் குறையக் காணோம் வயது அதிகம். கொஞ்சம் திடீர்க் கோபம் கொள்ளும் சுபாவம்! இந்த நிலையில் தாங்க முடியாத பொறுப்புகளையும் தொல்லைகளையும், இவர் தாமாக எடுத்துச் சுமந்துகொண்டு, மிகச் சிரமப்படுகிறார் என்றே கருதுகிறோம். விரைவில் இவருக்கு. விடுதலை கிடைத்தால், அவருக்கும் நல்லது நாட்டுக்குங்கூடத்தான்!

நாட்டு மக்களின் மனத்திலே உள்ள எவ்வளவோ பிரச்சனைகளைப் பற்றித் திட்டம் தயாரிக்க வேண்டிய நேரம் இது. புதுப்புதுச் செலவுகள் ஏற்படும் காலம். பழைய வருமானம் குறைகிறது. நகரிலும் கிராமத்திலும், மக்களின் வாழ்க்கையிலே சிக்கிக் கிளம்பிடக் காண்கிறோம். ஆலைகளிலே அமளிநிலை! ஏர்முனையோ போர்முனை நிலையில்! இந்த இலட்சணத்திலே, கதர்த் திட்டத்துக்குப் பெரும் பொருள் ஒதுக்கினர். ஆசிரியர்கள் அழுகுரல் கிளம்பி ஆண்டு ஒன்றாகப் போகிறது. அடிப்படைக் கொள்கையை நிர்ணயிக்க வேண்டுமென்று உழவனும் கேட்கிறான். ஆலைத் தொழிலாளியும் கேட்கிறான். ஜெமீன்களை ஒழிக்கிறேன் என்று சபதம் கூறியாகிவிட்டது. ஒழிக்க முன்வந்தால், ஜெமீன்தாரர்களுக்கு நஷ்ட உடு தரவேண்டும் இதற்குப் பணம் எங்கே, என்ற பிரச்சனை கிளம்பிவிட்டது. மதுவிலக்கினால், வரி வருமானத்தில் திடீர்த் துண்டு விழுந்துவிட்டது.

செலவு பெருகுகிறது. வரவு குறைகிறது. புதுவரி போடுவதானால், எத்தகைய வரி போடுவது. புதுவரி மூலமே, நிலைமையைச் சரிக்கட்டுவதென்றால், மக்களால் தாங்க முடியுமா, புதுவரிகள் போடாமல், சர்காகரின் வருமானத்தை அதிகப்படுத்தவ் கூடிய வழிவகை கண்டுபிடிக்கக் கூடாதா, ஒரு சர்க்கார் வரவு செலவுக் கணக்கைக் கவனித்து, வரவு குறைந்தால்புது வரி போடுவது, என்ற ஒருவேலைக்கு மட்டுந்தான் இருப்பதா! வருமானத்தைப் பெருக்கும் கடமை இல்லையா? இப்படிப்பட்ட சிக்கலான பல புதுப் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்க, கூடிப்பேச, கலந்தாலோசிக்க, நிபுணர்களின் கருத்தைத் திரட்ட, வேறு இடத்து முறைகளை ஆராய வேண்டிய அவசியமும் அவரசமும் மிகுந்திருக்கிற இந்த நாட்களிலே, ஊராளவந்துள்ள மந்திரியார், உலக்கை தாசர் ஆகிறார்! இதுவா அவசரமான, அவசியமான காரியம்? உலக்கைக்குத் தாசராக வேண்டுமென்ற எண்ணம் கொண்டுவிட்டார் மக்களின் ஊழியர் ஆகவேண்டியவர்.

கைக்குத்தல் அரிசியின் மேன்மையை உணர்ந்து, அதனை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் காரியத்திலே அக்கறை செலுத்துகிறது மந்திரி சபை!

எப்படிப்பட்ட சமயத்திலே! ஒருபுற அவசரச் சட்டம்! மற்றோர்புறம் ஆலைகளில் வேலை நிறுத்தம்! பிறிதோர் பக்கமோ, வரவு செலவுச் சிக்கல்! இவ்வளவுக்கிடையிலே, இந்த மந்திரி சபைக்குக் கைக்குத்தல் - அரிசியின் மீது பக்தி சென்ற அழகை என்னென்று வர்ணிப்பது!

ஆலை இல்லையே! மக்கள் கூக்குரல்.

போதுமான நூல் இல்லையே! நெசவாளர் கேட்கின்றனர்.

போதுமான சம்பளம் இல்லையே! பல துறைகளிலே பணிபுரிவோர் பேச்சு இது.

144 கூட்டம் கூடாது! பல ஊர்களில், இது நிலைமை.

“வெளி மாகாணத்துக்கு நூலை ஏற்றுமதி செய்யாதீர்கள்” சென்னை நெசாவளரின் கஷ்டத்தைப் போக்க, இதுபோல் வேண்டுகோள் வெளியிடுகின்றனர்.

“முடியாது! பிற மாகாணங்களுக்கு அனுப்பாமல் இருக்க முடியாது! இது மத்திய சர்க்கார் முடிவு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கைக்குத்தல் அரிசியன் மேன்மையைப் பற்றி எண்ணவும், மனம் இடங்கொடுத்ததே, அந்த ஆச்சரியத்தை எண்ண எண்ணச் சிரிப்பு வருகிறது.

நெல் அரைக்கும் மெஷின்கள், இனிப் புதிதாகத் துவக்க அனுமதி கிடையாது.

இது சென்னை சர்க்காரின் புதிய உத்தரவு! வடநாட்டவர், வார்தா முனிவரை வாழ்த்திவிட்டு, காணிக்கையும் செலுத்திவிட்டு அதேபோது நவீனய்நதிர சாதனங்களைக் கொண்ட, புதிய புதிய தொழிற்சாலைகளைப், பரந்த இந்தியப் பூபாகம் எங்கும் பரப்புகின்றனர். மோப்பம் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். புதிய புதிய மாரக்கட்டுகள் தேடிக் கொண்டு, விந்தியத்தைக் கடந்து வந்து ‘வனஸ்பதி’ தொழிலைத் துவக்குகிறார் பிர்லா. டாடாவின் விமானங்கள், காவிரித் தென்பெண்ணை என்று கவிவாணர் பாடும் திராவிடத்திலே, விண்ணிலே வட்டமிட்ட வண்ணம் உள்ளன! உலகை நமது வீட்டுக்கு அழைத்துவரும் பத்திரிகைத் தொழிலை ஒரு கோயங்கா நடத்துகிறார்! டால்மியா நமக்குக் கண் வைத்தியம் பார்க்கிறார் - தர்மத்துக்கு! மண்ணைப் பொன்னாக்குகிறார் சிமிட்டித் தொழில் மூலம், டால்மியா!

இப்படி, வடநாட்டவர் திக்கெட்டும் வட்டமிட்டுத் தொழிலனைத்தையும் கைப்பற்றிடக் காண்கிறோம். நமது மாகாண முதலமைச்சர், ஆளுக்கொரு ராட்டை கொடுப்பேன், இரணங்குகள் கையில் உலக்கையும் கொடுப்பேன் என்கிறார்! நியாயாமா? தேவையா? அவசரமான, அவசியமான காரியம் இதுதானா?

போரிலே தோற்ற ஜெர்மனி, இந்தியாவுக்குத் தரவேண்டிய நஷ்ட உடு தொகைக்காக, பணத்துக்குப் பதில், அங்கே உள்ள பெரியதோர் “நவீன விஞ்ஞான யந்திரத் தொழிற்சாலை” யைப் பிரித்து எடுத்துவருகிறார்கள். இங்கு விஞ்ஞானிகள் மாநாட்டிலே விரிவுரையாற்றி, நாட்டு வளம், பெருக. தொழில் திறம் வளர, விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்கிறார் பண்டித ஜவஹர். குடிசைத் தொழிலைப் பற்றிப் பேசும் எங்களைப் பக்குவமாக நடத்திச் செல்லவேண்டிய, அடக்கி அனைத்து அழைத்துச் செல்லவேண்டிய, பொறுப்பும் உங்களுடையதுதான். இயற்கையின் சேஷ்டைகளை எல்லாம்கூட அடக்கிப் பக்குவப்படுத்தத் தெரிந்த உங்களால் இது முடியாத காரியமா?” என்று “லாகவமாகப் பேசுகிறார் ஆச்சாரியார். மந்திரி குமாரசாமிராஜா, விவசாயத்திலிலே விஞ்ஞான முறை புகுத்தப்படவேண்டுமென்று மாநாடுகளில் பேசுகிறார். இவ்வளவுக்கும் பிறகு, உலக்கையைத் தருகிறார் முதல் மந்திரியார்! “கொஞ்சமும் நியாயமில்லை - கிராம வாழ்வின் போக்கு இந்தத் தலைமுறையில் கணிசமாக மாறியிருக்கிறது - கைக்குத்துமுறை கடினம், கைவிடப்பட்ட முறை - இதனால் போக்குவரத்துத் தொல்லை அதிகமாகும் - கிராமத்தார்கள் மீது இந்தப் பாரத்தை ஏற்றிவிடுவதாகவே இது முடியும் - நாட்டிலே தொழில்வளம் பெருகப் பெருகக் கிராமத்து ஆட்கள் நகரங்களில் வந்துவிடுவார்கள் - ஆகவே, நெல் அரைக்கும் யந்திரத்தைத் தடுப்பது, அனாவசியமான தொந்தரவு - என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலத் ‘தினமணி’ புட்டுப்புட்டுச் சொல்கிறது! கேட்பாரா, பிரகாசம்காரு? நாம் சந்தேகிக்கிறோம். தினமணியின் வாதத் திறமையையல்ல, பிரகாசம் காருவின் பிடிவாதத்தைக் குறைக்கும் அளவு “காரசாரம்” இந்த வாதத்திலே கிடைக்குமா என்று சந்தேகிக்கிறோம். மிகச் சிரமப்பட்டு, தினமணி ஆத்திரத்தை அடக்கி, நாசுக்காக, மந்திரிசபைக்கு விஷயத்தை விளக்குவதன் மூலம் போக்கை மாற்ற முடியுமா என்று பார்க்கிறது. ஆனால், அந்த ஏடும், ஓரிடத்திலே கோபத்தைக் கொட்டிவிட நேரிடுகிறது.
“நாட்டு வளப்பமறியாத கிணற்றுத் தவளையின் லீலை” என்று வர்ணித்து விடகிறது, இந்த உலக்கைப் பக்தியை!!

காங்கிரஸ் ஆட்சியிலே கண்ட பலன்கள், மிக மிகத்தெளிவாக, இனி முழங்கும், வீடெங்கும் நாடெங்கும்!! ஒருபுறம் ராட்டையின் ரீங்காரம்! வீட்டின் பின்புறத்திலேயோ வேல்விழி மாதர், கைவளை குலுங்க, வியர்வை பொழிய, மேல்மூச்சு வாங்க இடை நெகிழ, கூந்தல் கலையக் குழந்தை பக்கம் நின்று கூவ, உலக்கை கொண்டு நெல்லைக் குத்திடும், சத்தம் கிளம்பும், அதற்கு உறுதுணையாக அவர்களின் ‘எங்காரம்’ இருக்கும்.

நாட்டுப்புறத்திலே ஒரு பாட்டு

“நெல்லுக்குத்துற பெண்ணே!

ஏன், என்னையே பார்க்கிறயே கண்ணே!

புருஷன் வாரான் பின்னே!

நீ புடைத்துப் போடடி கண்ணே!

என்று உண்டு! அந்தப் பண் மறைந்து ஆண்டு பலவாகிவிட்டன! இனிப் பிரகாசம்காருவின் தயவால், அந்தப் பண்ணோ, அதுபோல் நமக்கல்லார் அமைக்கக்கூடிய வேறு பண்ணோ கிளம்பும்.
பண் மட்டுமல்ல! உலக்கை பிடித்துக் குத்திக், குத்திக் கரத்திலே உண்டாகும் புண்ணும் ஏற்படும்! கரத்திலே மட்டுமல்ல காட்டு மிராண்டிக் காலத்துக்கு நம்மை இழுத்துச் செல்லும் திட்டத்தைப் போடும் இந்தக் காங்கிரசாரை, நாட்டுத் துரைத்தனத்தை நடத்தச் சொல்லி, நாமே வலிய வலிய அழைத்தோமே, என்று எண்ணி, மனத்திலேயும் புண் ஏற்படும்!! உலக்கை தாசர்கள், மக்களின் உள்ளத்தைப் புண்ணாக்கும், இந்த உளுத்துப்போன திட்டத்தைக் கை விடும்படி, கூறவேண்டிய, வற்புறுத்தவேண்டிய, பொறுப்பு திராவிடர் கழகத்தாராகிய எங்களுக்கு இருப்பதைவிட, காங்கிரசிலே உள்ள தமிழ் இளைஞர்கட்கே அதிகம்.வாழ்த்தி வரவேற்றவர்கள், வகையறியாது, மக்களை உலக்கை தூக்கச் செய்யும் போக்கினைக் கண்டும், வாளாவிருப்பது அழகுமல்ல, ஆண்மையுமாகாது! விஞ்ஞானத்துக்கு முரணாக, நாட்டுத் தொழில் முறை மாற்றத்துக்கு முரணாக, ‘மெஷின்கள்’ மீது போர் தொடுக்கும் போக்கு. அனுமதிக்கப்பட்டால் சிகத்துக் கொள்ளப்பட்டால் கட்சி, கட்டுப்பாடு, ஒழுங்கு என்ற பல காணரங்களுக்காகப் பொறுத்துக் கொள்ளப்பட்டால் எங்குக் கொண்டு போய்விடும்? இதனை யோசிக்கவேண்டும். நேற்று இடைக்கு ஆலைவேண்டாம் என்றார்! இன்று அரிசிக்கு மெஷின் வேண்டாம் என்கிறார்! நாளை, என்ன சொல்வாரோ, நாமறியோம் பராபரமே! நாடு இள அவர்களை அழைத்த அன்பர்களைக் கேட்கிறோம், “தோழர்களே? நாம் எங்கே அழைத்துச் செல்லப்படுகிறோம்?” கண் திறந்து பார்த்து வாய்திறந்து கேளுங்கள்.

(திராவிட நாடு - 16-2-47)