அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


உப்புத்தொழிலாளர் போராட்டம்

கே.வி.கே.சாமி மீது அடக்குமுறை
தூத்துக்குடியில் ‘சுயராஜ்யம்!’

தூத்துக்குடியில் இந்த வாரம் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திவிட்டது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் உப்புத் தொழிலாளர் பிரச்சினை இப்பொழுது உப்பின் விலை மணங்கு ஒன்றுக்கு ரூபா.0.12.6 அதிகம் விற்று வருவதால் தொழிலாளிகள் தாங்கள் இப்பொழுது பெற்றுவரும் கூலி. ரூ.1.14.0 போதாதென்று ரூ.2.2.0 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுவந்தனர். உப்புத்தொழில் முதலாளிகள் இதற்கு இணங்கவில்லை. தொழிலாளிகளின் கோரிக்கையைத் தள்ளிவிட்டு, அவர்களை மிரட்டியும் திட்டியும் அடக்கிவிடலாம் என்று எண்ணி அந்தத் திருப்பணியிலே ஈடுபட்டிருந்தனர்!

3.9.50 ல் வயது முதிர்ந்தும் உணர்ச்சி குன்றாத உப்புத் தொழிலாளத் தோழர் கருமலையார் என்பவர், திடீரென்று தாக்கப்பட்டார் அவர் உடலெங்கும் அரிவாள் வெட்டுகள் தொழிலாளப் பிரச்சினையில் தீவிரமாக ஈடுபட்டதற்கு அவர் பெற்ற பரிசுகள், அரிவாள் வெட்டுக் காயங்கள்.

5.9.50 ல் எந்த முன் எச்சரிக்கையுமின்றி காரணம் எதுவுமே காட்டாமல், உப்புத்தொழிலாளர் சங்கத் தலைவர் கே.வி.கே.சாமியையும், செவத்தபாண்டியன் என்ற மற்றொரு தோழரையும் போலீசார் கைது செய்தனர். காட்டுத்தீயென இச்செய்தி, உப்பளங்களிலே வேலை செய்து கொண்டிருந்தவர் களிடையே பரவியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும், சுமார் 10,000 தொழிலாளர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்து போலீஸ் நிலையத்தைச் சுற்றி நின்று ‘எங்கள் தலைவர் கே.வி.கே.சாமியை விடுதலை செய்யுங்கள்’ என்று முழங்கிய வண்ணமிருந்தனர்.

சிறிது நேரத்திற்குள்ளாகவே ஆளவந்தாரின் அடக்குமுறை தர்பார் ஆரம்பமாகிவிட்டது. தடியடித்திருவிழா நடத்தினர். பெண்கள் பலர்பெரும் அவதிக்குள்ளாகப்பட்டனர். வயோதிகத் தொழிலாளர் பலர் அடக்கு முறைக்கு ஆளாயினர்.

6.9.50 மாலை கைது செய்யப்பட்ட இரு தோழர்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் கே.வி.கே.சாமியை ஜில்லா கடத்தி சர்க்கார் மறு உத்தரவு கிடைக்கும்வரை நெல்லை மாவட்டத்திற்குள் வரக்கூடாது என்று கட்டளையிட்டனர்.

தொழிலாளர்கள் இன்னும் வேலைக்குத் திரும்பவில்லை.

அடக்குமுறையினால் ஆளவந்தார் பெரும்பழிக்கு ஆளாகிவிட்டனர். தாய் மார்களைத் தாறுமாறாக நடத்தியிருக்கின்றனர். தள்ளாதகிழவர்களையும் இரக்கமற்ற முறையில் தாக்கியிருக்கின்றனர். அவர்கள் கஞ்சிக் கலயங்களையும் தொழிலுக்கு வேண்டிய உபகரணங்களையும் தூள் தூளாகச் சிதறடித்திருக்கின்றனர்.

விளைந்த பாதகம், சொல்லிடவும் வேதனை தரும்!

இன்று தூத்துக்குடி அகிம்சாவாதிகளின் அடக்குமுறை ஆர்ப்பாட்டத்தைக் கண்டு, ஆத்திரத்தின் குடியிருப்பிடமாக மாறியிருக்கிறது. கட்சிக் கருத்து மாறுபாடுகளை தூரத்தே விலக்கி வைத்து மனமாச்சரியத்தை எடுத்தெறிந்துவிட்டு எல்லோரும் ஆட்சியாளரின் போக்கைக் கண்டு மனங்கொதித்து அக்கினிச்சிலைகளாக மாறியுள்ளனர். சோஷியஸில்ட் கட்சி, தி.மு.க. இன்னும் பல சங்கங்கள் தொழிலாளர்களிடம் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளன.

(திராவிடநாடு. 17.9.50)