அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


உருளைக் கிழங்கும் உபதேசியார்களும்!
“பாபம்! மகாபாபம்! கர்த்தர் உங்களைக் கடுமையான நரகத்திலேதான் தள்ளுவார். வேதத்தை மீறுகிறீர்கள், பரமபதத்தைச் சேர மாட்டீர்கள். தேவனைத் துச்சமென்று எண்ணி நாசமாகிப் போகிறீர்கள்.

கண்ணீர்கூடப் பொழிகிறார் கர்த்தரின் பூஜாரியாக உள்ளவர். பொறி பறக்கிறது பேச்சில் தன் கண் முன்னே, கர்த்தர் கடுங்கோபத்துடன் நிற்பது போலவும், ஏன் பாலகர்களைத் தீயவழியில் செல்லாமல் தடுக்கும் திறனும் உரிமையும் அருளினேனே, ஏன் மக்கள் பாபப்படுகுழி நோக்கிச் செல்லும்போது தடுத்து நிறுத்தவில்லையே, இதற்கோ உன்னை ஏன் அருள் பெற்றுத்தரும் இலய அதிபனாக்கினேன் என்று கேட்பது போலவும் அவர் எண்ணுகிறார். உள்ளம் உண்மையிலேயே பதறுகிறது. மக்கள் உலத்தர்களாகி விட்டனரே என்று உபதேசியார் ஆயாசப்படுகிறார் திருச்சபையிலே திரு அருளின் மகிமைபற்றி, எத்தனை எத்தனை உள்ளமுருக்கும் உபதேசங்கள் செய்தோம், எல்லாம் விழலுக்கிறைத்த நீராயிற்றே, விநாசம் வருவதறியாது மக்கள் விபரீதப் போக்கிலே செல்கிறார்களே! ஐயன் அருள்பாலிப்பாரா! அவருடைய வேதத்தை மீறும் மாபாவிகளைச் சும்மா விடுவாரா! ஏன்னே காலக் கொடுமை ஏன் பிறந்ததோ இந்த அநியாய புத்தி? என்று அவர் ஆயாசப்படுகிறார்.

ஒப்புக்காக அல்ல! ஊரார் மெச்சிக் கொள்வதற்காகவோ, அச்சம் கொண்டு அடி தொழ வேண்டும் என்பதற்காகவோ அல்ல, உண்மையாகவே அவருக்குப் பயம் - தேவகட்டளை மீறப்படுகிறது என்று.

அவர் என்றால் ஒரே ஒரு உபதேசியார் மட்டுமல்ல, உபதேசியார்கள் அனைவருமே கிளம்பி விட்டனர், மக்களைப் பாபப் பாதையிலே செல்லவிடாமல் தடுத்திட! பரமண்டலத்திலே உள்ள பிதாவின் பாதார விந்தத்த இழந்துவிடாதீர்கள், சுட்டுச் சாம்பலாக்கும் பாழ் நரகு சேராதீர், பாபம் புரியாதீர் என்று உருக்கமாகக் கேட்டுக் கொள்கின்றனர்.

மக்ள் செய்த பாபம் என்ன? உபதேசியார்கள் கண்டிக்கத்தக்க பாபம் என்ன புரிந்தனர்?

உருளைக்கிழங்கு தின்றனர்!

இமாய்ய ஆம்! விகடமல்ல, வேடிக்கை அல்ல, மக்கள் செய்த பாபம், உருளைக்கிழமை சாப்பிட்டதுதான்!

உபதேசியர்கள், குய்யோ முறையோ என்று கூவி, ஆகுமா? ஆடுக்குமா? என்று ஆர்ப்பரித்து, படுநாசம் சம்பவிக்கும் என்று அச்சமூட்டி பாபிகாளாகாதீர்? பரமனை ஆகழாதீர், வேதத்தை மீறாதீர், சாத்தானுக்கு இடமளிக்காதீர், சர்வேஸ்வரனின் கோபத்துக்கு ஆளாகாதீர் என்று கொதித்தெழுந்து கூறினது, உருளைக்கிழங்கு சாப்பிட்டதற்காகத்தான்!

வரலாற்று உண்மை - கட்டுக்கதை அல்ல - புராணமல்ல!

உருளைக்கிழங்கு - எங்கும் சர்வ சாதாரணமாக இன்று காணக்கிடக்கிறது - ஆனால் முன்பு, இந்தப் பண்டம் உலகினரால் உணவுப் பொரளாகக் கொள்ளப்பட்டதில்லை. காட்டிலே மேட்டிலே விளைந்து கிடந்த கிழங்கு. அதை முதன்முதலில் தென் அமெரிக்காவில், பெரு எனும் நாட்டிலே கண்டனர், மேனாட்டினர். அவர்கள் அங்கு பொன்னும் மணியும் புதையலும், புதை பொருளும் தேடிடச் சென்றனர் - இந்தக் கிழங்கைக் கண்டனர் - உண்டு பார்த்தனர் - ருசி அறிந்தனர் - எனவே இதுநாள்வரை தங்கட்குத் தெரியாமலிருந்து வந்த ஓர் விசித்திரக் கிழங்கு கிடைத்தது என்று மகிழ்ந்து, தத்தமது தாயகத்துக்கு அதனைக் கொண்டுவந்தனர் - பயிரிட்டனர் - மக்களுக்கு இந்தப் புதுஉணவுப் பொருளைத் தந்தனர் - அப்போதுதான், ஸ்காத்லாந்து நாட்டுப் பாதிரிமார்கள் பதறினர், கதறினர், உருளைக்கிழங்கைச் சாப்பிடக்கூடாது, வேதத்துக்கு விரோதம் என்றனர்.

“நமது வேதப் புத்தகத்தில் உருளைக் கிழங்கு பற்றிய குறிப்பு இருக்கிறதா?”

இல்லை

உருளைக் கிழங்கு மனிதருக்கு உணவாக வேண்டுமென்று பரமபிதா விரும்பி இருந்தால் வேதபுத்தகத்திலே குறிப்பு இருக்குமல்லவா!

இருக்கும்..

இழுத்தாற்போல் பதில் கூறாதே, இழிவும் பழியும் தேடிக் கொள்ளாதே! உருளைக்கிழங்கு என்ன தெரியும்?

உருளை உருளையாக இருக்கிறது, வேக வைத்தால் மாவுமாவாக வருகிறது, உருசியாகவும் இருக்கிறது.

பாபிகள்! நாக்கு ருசியால்தானே, மனித குலமே நாசமாயிற்று. இதாமும் ஐவாளும் பாப ஜென்மமானது ஏதனால்? நாதன் கட்டளையைவிட நாவின் ருசி பெரிது என்று கொண்டதால்தானே! பரமன் தீண்டாதே என்று கட்டளையிட்டும் தீஞ்சுவைக் கனி என்றெண்ணி பாபப் பழத்தைத் தின்றதால்தானே அவர்கள் பாபஜென்மம் ஆயினர் அதே பழம்தான் இது! உருளைக்கிழங்கு, சாத்தான் சரக்கு!

இவ்விதம் வாதாடினர் உபதேசியார்கள்.

மக்களுக்கோ மருட்சியாகவுமிருக்கிறது, சந்தேகமாகவும் இருக்கிறது.

ஒரு கிழங்கு தின்றாலா பாபம்? என்றும் கேட்டனர், ஒரு பழம் தின்றதால்தானே பாபமே ஆரம்பமாயிற்று என்றும் எண்ணிக் கொண்டனர். உருளைக்கிழங்கோ உபதேசியார்கள் ஊரார் மனதை மருட்டியும்கூட, மக்களின் நாவை வென்றது! உணவுப் பொருளாயிற்று.

காடுகளில் - குகைகளில், மரப்பட்டைகளைத் தரித்துக் கொண்டு, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டிருந்த காட்டுமிராண்டிக் காலத்துச் சம்பவமல்ல, மணிமுடி தரித்த மன்னர்கள், கோட்டை கொத்தளம் கட்டி ஆண்ட பிரபுக்கள், கலம் ஏறிக்கடல் கடந்து சென்று வாணபிம் நடத்திய செல்வர்கள், உலவிய நாட்களில் 1580ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி.

தற்செயலாகத்தான் உருளைக்கிழங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

நாளாவட்டத்திலேதான் அதனுடைய நானாவிதமான உபயோகமும் புரிந்தது.

பல ஆண்டுகள் பரீட்சை பார்த்தான பிறகுதான் உருளை, பல்வேறு நாடுகளிலே பயிரிடப்பட்டது.

முதன் முதலில் ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கு, மெள்ள மெள்ள இத்தாலி சென்றது, பிறகு இங்கிலாந்து, ஸ்காத்லாந்து, ஆயர்லாந்து ஆகிய நாடுகளில் பரவிற்று, அப்போதுதான் உபதேசியார்கள், வேதத்தில் கூறப்படாத விபரீதப்பண்டம் என்று கண்டித்துப் பேசினர். ஆயர்லாந்து நாட்டுப் பாதிரிகளோ, பக்தியையும் யூகத்தையும் சம ஏடையாக்கி, உருளைக்கிழங்கு பாபப்பண்டம் தான், எனினும் புனித நீர் தெளித்துப் பாபத்தைக் கழுவிவிடலாம் என்று கூறி, உருளை பயிரிடப்பட்ட வயல்களில் மந்திர உச்சாடனம் செய்தபடி புனித நீர் தெளித்தனராம்!

மக்களும் மருட்சி நிலையைக் கடந்தனர் - மன்னர்களோ உருளைக்கிழங்குக்கு ஆதரவு திரட்ட முன்வந்தனர்.

பேரரசன் பிரடரிக் என்பான், தன் அரண்மனைத் தோட்டத்திலேயே உருளைக்கிழங்கு பயிரிட்டான்! ஊர் மக்கள் உள்ளத்தை உலுக்கிக் கொண்டிருந்த பயம் போயிற்று.

பிரஞ்சு மன்னன் மனைவி, உருளைச் செடியின் பூங்கொத்தினைத் தன் தலையணியில் செருகி, அலங்காரம் செய்து கொண்டான்!

இங்ஙனம், உபதேசியார்களால் சபிக்கப்பட்ட உருளைக்கிழங்கு ஊராள்வோரால் பராமரிக்கப்பட்டது. விஞ்ஞானிகள், அந்தக் கிழங்கின் தன்மைபற்றியும் நன்மை பற்றியும்ம எடுத்துரைத்தனர் - பயங்கரப் பகை ஒழிந் உருளை ஊராரிடம் நிலைத்திடத் தொடங்கிற்று.

மதத் தலைவர்கள், எதை எதை எல்லாம் எதிர்த்தனர், எதெதற்கு வேதத்தில் இதாரம் இருக்கிறதா என்று தேடினர், எதெதற்கு மக்களிடம் பாவ புண்ணியம் பேசி மிரட்டினர், எவ்வளவு காலம் வரையில் அவர்களுக்கு இந்த ஆதிக்கம் இருந்தது என்று ருசிகரமான உண்மை, உருளைக் கிழங்கு மூலமும் தெரிகிறது!

வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தபோதுதான், இங்கு முதன்முதலாக உருளைக்கிழங்கு கொண்டுவரப்பட்டதாம். அப்போது அது கிடைத்தற்கரிய ராஜபோஜனம் என்று கருதப்பட்டது.

பம்பாய் கவர்னருக்கு வாரன் ஹேடிங்ஸ் எப்போதாவது ஒரு கூடை உருளைக்கிழங்கு அனுப்பி வைப்பாராம்! கவர்னர், உடனே ஒரு தனி விருந்த ஏற்பாடு ùச்யது, பிரமுகர்களையும் ஆட்சியில் உடனிருப்போரையும் அழைத்து, உருளைக்கிழங்கு விருந்தளிப்பாராம்!

ஸ்காத்லாந்து நாட்டுப் பாதிரிமார்கள் கண்டித்தது போலவே, இங்கு வைதீகப் பார்ப்பனர், உருளைக்கிழங்கு நீச உணவு என்று கண்டித்தனர் இன்றோ...

இந்தியாவில் சுமார் பல இலட்சம் ஐக்கரில் உருளை உயிரிடப்படுகிறது.

திராவிடத்தில் உதகைப் பகுதியில் உயர்தரமான உருளைக்கிழங்கு பயிராகிறது, மைசூரிலும் உண்டு இன்னமும் மற்ற நாடுகளைப் போல வளமான முறையிலே உருளை இங்கு பயிரிடப்படவில்லை. விளையும் கிழங்கிலும் ஆண்டொன்றுக்கு பதம் கெடுவதால் இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள உருளைக்கிழங்கு நாசமாகிவிடுகிறதாம். விஞ்ஞான முறைகளைக் கொண்டு, இந்த நாசத்தைத் தடுத்திடவும், விளைவினை அதிகரிக்கவும், வழிவகைகள் கூறப்படுகின்றன! அஞ்ஞானிகளின் அக்ரமம் என்று கண்டிக்கப்பட்ட உருளைக்கிழங்கு இன்று எங்கும் பயன்படுகிறது மேனாடுகளில், உணவுக்காக மட்டுமல்லாமல், வேறு தொழில் துறைக்குரிய வசதிகளையும் உருளை மூலம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. நித்தநித்தம் பொரித்தோ, வறுத்தெடுத்தோ, கூட்டாக்கியோ, குழம்பாக்கியோ, உருளையை உண்ணுபவர்களிலே, எவ்வளவு பேருக்கு உருளைக்கிழங்குக்கு உபதேசியார்கள் கொடுத்து சாபம்பற்றியும், மூட்டிய எதிர்ப்புப் பற்றியும் தெரியும்!

புதிதாகத் தோன்றும் எதற்கும் இடமளிக்கக்கூடாது என்ற பொன்னான குணம் கொண்டவர்கள் மதவாதிகள்! ஆனால், ஒவ்வொன்றிலும், அவர்கள் தோல்விதான் கண்டனர்! கேவலம், உருளைக்கிழங்கினிடம் கூடத் தோற்றிட வேண்டித்தான் வந்தது!

ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வி கண்டாலும், மதத் தலைவர்களும் அவர்களுடைய பிடியில் சிக்குண்டு கிடக்கும் ஏடுதாங்கிகளும் ஏதமறியாதாரும், புதுமை அரும்பும் போதெல்லாம் எதிர்க்கக் கிளம்பாமலிருப்பதில்லை! போது போக, மீதமிருப்பதாவது நிலைக்குமா என்ற ஆசையும், அடியோடு அத்தனையும் போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களைப் பிடித்தாட்டுகிறது.

எந்த எத்தன் தான் செய்யும் அக்ரமத்துக்கு மூடி போட விரும்பினாலும் மத ஏடுகளின் பின்னால் போய் ஒளிந்துக் கொள்வதும், மதத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு, அவர்கட்கு ஆபயம் அளிக்க, அருளாளர்கள் என்ற சின்னத்தைச் சூட்டிக் கொண்டிருப்போர் முன் வருவதும், இன்றும் காணக்கிடக்கும் கண்றாவிக் காட்சியாகத்தான் இருக்கிறது. விஞ்ஞானம் எத்தணை பெரிய வெற்றிகளைப் பெற்று மதவாதிகள் உட்பட, மனிதகுலமத்தனையும், புதிய வசதிகளையும் இன்பத்தையும் பெறுவதற்கான வழிகோலிய போதிலும், தாம் கற்றதே மெய்ஞ்ஞானம், மற்றதெல்லாம் அஞ்ஞானம் என்றும், தாம் கூறுவதே, அருட்பா, மற்றையோர் மொழிவதெல்லாம் மருட்பா என்றும் பேசி வரும் மதத்துறைத் தலைவர்களைக் காண்கிறோம். பெரிய இடத்திலிருந்து இடியும் அடியும் கிடைக்கும்போது, துடைத்துக் கொள்வதும், மற்றையோர் உண்மையை உரைக்கும்போது உறுமிக் கொண்டு கிளம்புவதும் இவர்தம் வித்தையாகி விட்டது.

சின்னாட்களுக்கு முன்பு நேரு பண்டிதர் பளீர் பளீர் என்று அறைவது போல, விண்ணை அண்ணாந்து பார்த்து, அது விளையும் இது நேரும் என்று பேசும் வீணர்களைக் கண்டித்தார், ஜோதிடத்தைச் சாடினார், இரண்டு கோடி பேர் இருந்தபோது மனு சொன்னதை முப்பதுகோடி மக்களாகப் பெருகிவிட்ட இந்த நாட்களிலே வலியுறுத்துவது மடைமை என்றார், மாட்டுவண்டிக் கால மனப்பான்மை விமான யுகத்துக்குப் பொருந்துமா என்று கேலிபேசினார். வாய்திறந்தனரோ, திருவாய்மொழியும் தேவாரமும் ஓதினோம், இனி உலகில் ஓதத்தக்கதும் உணரத் தக்கதும் யாதுளது என்று வீராப்புப் பேசும் வித்தகர்கள்! யானை மீதேறிச் செல்பவன் வெற்றிலைச் சாற்றினை மேலே ஊமிழ்ந்தால், தமது பட்டாடைக்கு அவர்தரும் சந்தனாபிஷேகம் அது என்று எண்ணிக்கொள்ளும் பான்மைபோல், கடவுட் கொள்கையிலிருந்து கைரேகைக் காரரின் எத்தவரையில் கண்டித்து நேரு பண்டிதர் பேசும்போது, கண்மூடி மௌனியாக இருந்துவிட்டு, அதுபோன்ற கருத்துக்கள், மேலிடம் சிலவற்றிலே மட்டும் இருந்தால் போதாது, மக்கள் மனதிலேயும் இடம்பெற வேண்டும் என்று நமது தோழர்கள் பேசி வரும்போது மட்டும், சங்கநாதம் செய்வதும், சாபம் கொடுப்பதும் சாடி சொல்வதுமாகக் கிளம்புகிறார்கள்! மோதிக் கொள்கிறார்களா பாருங்கள் நேர பண்டிதருடன்! நம்மீது பாய்வதிலே மட்டும் எவ்வளவு சூரத்தனம் காட்டுகிறார்கள் என்பதையும் பாருங்கள் - அவர்தம் இயல்பு தெரியும், உருளைக்கிழங்கு பாபப்பண்டம் என்று சபித்துப் பேசி மக்களை மிரட்டினரே உபதேசியார்கள். ஊராளும் நிலை பெற்றோர், உருளைக்கிழங்கு உண்பது நல்லது என்று கூறிட முன்வந்ததும், என்ன செய்தனர்! ஐ! சாத்தானின் சகாவே! வேத நிந்தர்களே! உன் கட்டளையைக் கேளோம்! கர்த்தரின் இணையை மீறோம்! என்றுகூறி, உருளைக்கிழங்கு பயிரிடப்பட்ட வயலில் சென்று அழித்தனரோ! உண்டு உருசி பார்த்து, நன்று! நன்று! என்று நவின்றனர். இதுதான் அவர்தம் இயல்பு.

ஜ÷ன் 20ந் தேதி, ஆபூர்வமான முறையில் சூரிய கிரஹணம் ஏற்பட இருக்கிறது 1250 ஆண்டுகளாக ஏற்பட்டதில்லையாம் இதுபோன்ற கிரஹணம். இனி இதுபோல் 2168ல் தான் ஏற்படுமாம், சில இடங்களில் ஏழு நிமிடங்களும் சில இடங்களில் ஐந்து நிமிடங்களும் முழுச் சூரிய கிரஹணம் இருக்கப் போகிறது. சிலோன், அந்தமான் தீவு, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன் ஆகிய இடங்களில் மட்டுமே இந்த ஆபூர்வ சூரிய கிரஹணம்! இதை உலக விஞ்ஞானிகள் கிடைத்தற்கரிய ஓர் வாய்ப்பாகக் கொண்டு, அன்று ஆராய்ச்சி நடத்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டுள்ளனர். சிலோனில் இதற்காக விஞ்ஞானிகள் முகாம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழு நிமிட நேரம், முழு இருட்டு, பகலில்! கதிரவன் மறைகிறான், காரிருள் கப்பிக் கொள்கிறது, ஏழு நிமிடம் வரையில்! இதுபோல ஏற்படுவது இபூர்வம், ஆகவே, நீண்டகாலமாக பரீட்சித்துப் பார்க்கவேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ள விஞ்ஞான தத்துவங்களைப் குறித்து ஆராய்ச்சி நடத்த இது பொன்னான வாய்ப்பெனக் கொண்டு விஞ்ஞானிகள் புறப்படுகிறார்கள். உன்ஸ்டின் கூறிச்சென்ற ஒரு கோட்பாடு பற்றிய ஒரு புது உண்மை இந்த ஆராய்ச்சி மூலம் கிடைக்குமென்று நம்புகிறார்கள். புது உண்மையாவது கிடைக்கும், தவறான எண்ணம் ஏதாவது இதுவரை இருந்துவந்தால் அது களையப்படுவதற்கான வாய்ப்பாவது கிடைக்கும். விஞ்ஞானிகள் இவ்விதம் பணியாற்றக் கிளம்புகிறார்கள், மற்றவர்களை அஞ்ஞானிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் பக்தர் குழாம் என்ன செய்ய இரக்கிறது தெரியுமோ! விஞ்ஞானிகள் போலவே அவர்களும் பரபரப்பாகக் காரியமாற்றக் கிளம்புகிறார்கள்! தீர்த்தமாடி புண்யம் தேடப் போகிறார்கள் - வடக்கே குருக்ஷேத்திரத்திலே சென்று, புண்யம் தேடப் போகிறார்கள் இதற்காக இவர்கள் முஸ்தீபு செய்து கொண்டுள்ளனர். புண்யம் சம்பாதித்துக் கொண்டுவர அவர்கள் நடத்தும் புனித யாத்திரையின்போது, காலரா, பிளேக் முதலிய கொடிய நோயால் தாக்குண்டு அவர்கள் “கயா” ஆகிவிடக்கூடாதே என்பதற்காகச் சர்க்கார், போகிறதே போகிறீர்கள், காலரா, பிளேக் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தவஞானிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மனப்பான்மையில் உள்ள மகத்தான வித்யாசத்தைப் பாருங்கள்.

விஞ்ஞானிகள் தமக்காக அல்ல, உலகுக்குப் புது உண்மை அளிக்கலாம், அதன்மூலம் புது நன்மை பெறட்டும் என்ற விரிந்து, பரந்த, தன்னலமற்ற, தூய எண்ணத்தால் ஊந்தப்பட்டு, ஆராய்ச்சி செய்யச் செல்கிறார்கள், பக்தர் குழாமோ தாம் செய்த பாபத்தைத் தொலைத்துத் தலை முழுகிவிட்டு, புண்ணியம் தேடிக்கொள்ளச் செல்கிறார்கள். பண்டாவிட மிருந்தும் முதலைகளிடமிருந்தும் பலவகையான திடீர் வியாதிகளிடமிருந்தும் தப்பி, அவர்கள் திரும்பினால், அவர்களால் உலகுக்கு ஏற்படப்போகும் நன்மை என்ன?

புண்யம் பெற்றாலும், அது அவர்களுக்குப் பயன்படும் - இஙகல்ல - அங்கு! எங்கு, சென்றவர் திரும்பாத ஜெகஜோதிபுரத்தில்! விஞ்ஞானிகள் நடத்த இருக்கும் ஆராய்ச்சியின் பலனோ, அனைவருக்கும் கிடைக்கும்- அனைவருக்கும்!! விஞ்ஞானத்தைச் சபிக்கும் இந்த மெய்ஞ்ஞானிகளுக்கும் சேர்த்து! சூரிய கிரஹணம் என்றவுடன், யாருக்கு உலகுபற்றி உண்மையைப் பற்றி, மக்கட் சமுதாயத்துக்கு நன்மை தேடுவதுபற்றி எண்ணம் பிறக்கிறது? விஞ்ஞானிகளுக்குத்தான்! மதவாதிகளின் எண்ணம், உருளைக்கிழங்கு முதற்கொண்டு ஊராரின் உடைமை ஒரு சிலரிடம் குவிவது கூடாது என்பது வரையில், எதுவாக இருந்தாலும், அவர்களின் பரணையில் கிடக்கும் பழைய ஏடுகளிலே இதாரம் இருக்கிறதா என்று தேடச் சொல்லுகிறது. ஒவ்வோர் முறையும் காலம் ஓங்கித் தாக்குகிறது, எனினும் சுபாவம் சாக மறுக்கிறது. திருமண முறை விவாக விடுதலை, போன்றவை குறித்து, புதிய சட்டம், இவர்களின், கூக்குரலுக்காக நின்றுவிடவில்லை. நிறைவேறிவிட்டது!

எனினும், எப்பாடு பட்டாவது பாமர மக்கள் மனதிலே பீதி மூட்டியாவது பழைமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் சாகமறுக்கிறது. நமது பணி, மக்கள் மன்றத்தில், மதவாதிகள், கொடுமையும் மடைமையும் நிரம்பிய கொள்கைகளுக்காக வாதாடிப் போராடி வந்த வரலாற்றினையும், ஒவ்வோர் முறையும், அறிவு வென்றதன் அருமையையும் எடுத்துரைத்து, பாமரத் தன்மையைப் பக்தி என்றும், தெளிவற்ற தன்மையைத் தெய்வ நம்பிக்கை என்றும் நம்பிக் கொண்டிருக்கும் வெள்ளை உள்ளத்தினரை, விழிப்படையச் செய்வதேயாகும். உருளைக்கிழங்கு, வெற்றி பெற்றிருக்கும்போது, உண்மைக்காகப் போரிடும் ஆண்மையாளர்கள் வெற்றி பெறாமலா போவார்கள்!

(திராவிட நாடு - 29.5.55)