அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


"உஷார்"
அவனுக்கு வயது அறுபது, கை காலிலே நடுக்கம், குரலிலே தயக்கம், பார்வை பழுது! அவனைக் கணவனாகக் கொள்ளவேண்டி நேரிட்ட அவளோ, அழகி, சரசி, இருபது வயதும் இனிய நகையும் உடைய ஏந்திழை! எதிர்வீட்டு வாலிபன், கட்டழகன், பக்கத்து வீட்டிலே வேறோர் காளை! கிழவன், பகலிலே ‘பாரா’ கொடுக்கிறான், இரவிலே விழித்த கண்ணோடு இருக்கிறான். வீட்டுக் கதவுக்கு இரட்டைத் தாள்; தோட்டத்துச் சுவருக்குக் கண்ணாடித் தூள், என்று பாதுகாப்பு அமைத்துக்கொண்டு, ‘உஷாராக’ இருக்கிறான்!

எல்லையிலே தொல்லை! படையிலே குழப்பம்! ஆயுதமோ சொற்பம்! ஆட்பலமோ குறைவு! அத்தகைய நாட்டு மன்னன், எந்தப் பக்கத்திலிருந்து எந்தச் சமயத்திலே, என்ன ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சிக்கிடக்கிறான். ஆபத்து வராது தடுக்கும் வழி, மிகமிக ‘உஷாராக’ இருப்பதுதான் என்று எண்ணுகிறான்.

பொருத்தமற்ற மணம் செய்வானேன், பொழுது முழுவதும் பூவையைச் சிறைவைத்துவிட்டு, உஷார் கொடுத்துக்கொண்டு உழல்வானேன்! நாட்டு நிலையைக் கேட்போர் நகைத்திடும் விதமாக வைத்துக்கொண்டிருப்பானேன், நாலு பக்கமும் நோக்கி நடுங்கி நலிவானேன்.

ஆரணங்குக்கு ஏற்றவனாக அவன் இருப்பின், எதிர்ப்பை அடக்கும் ஆற்றலுள்ள படை கொண்டவனாக மன்னன் இருப்பின், உஷார்! உஷார்! என்று கூறிக்கிடக்கத் தேவையில்லை!!

நெல்லையிலே, சைவத்தின் எல்லையிலே, நால்வரின் பாடல்கள் நாவிலே நர்த்தனமாட, நரிபரியான நாதன் விளையா டலை நாரிமணிகளும் எடுத்தோத, திருநீறு அணிந்த திருவாளர்கள் திருக்கோலத்தோடு வீற்றுள்ள திருநெல்வேலியிலே ஓர் “உஷார் சங்கம்” சின்னாட்களுக்கு முன்பு அமைக்கப் பட்டதாம்!! எதற்கு? சேரியிலே வாழும் மக்களைக் காப்பாற்ற! என்ன ஆபத்துச் சேரி யிலே! இஸ்லாம் பரவுகிறதாம்!! இஸ்லாத்தினால் யாருக்கு ஆபத்து? இஸ்லாத்திலே சேருபவருக்கா? இல்லை! இஸ்லாம் அல்லா தாருக்கா? இல்லை! வேறு எதற்கு ஆபத்து? வர்ணாஸ்ரமத்துக்கு ஆபத்து! ஜாதிக்கு ஆபத்து! அநீதிக்கு ஆபத்து! அக்ரமத்துக்கு ஆபத்து!!

உண்மை இது, ஆனால் ஊரறிய ஒரு சிலர் போடும் கூச்சல் வேறுவிதமாக இருக்கிறது. மக்கள் மதம் மாறிவிடுகிறார்கள்! இந்து மார்க்கம் குறைகிறது! இதை தடுக்க வேண்டும்! என்பது இரைச்சல்! இதற்காகவே ஓர் உஷார் சங்கமாம்! பேஷ்! பலப்பல யுகங்களுக்கு முன்பு தோன்றினதாகக் கூறப்படும் இந்து மதத்தைக் காப்பாற்ற ஓர் உஷார் சங்கம் இன்று தேவைப்படுகிறது! கேளுங்கள் இந்தக் கூத்தின் விஷயத்தை,

“வேறுபடு சமயமெலாம்
புகுந்து பார்க்கினும்
விளங்கு பரம்பொருளே
உன் விளையாட்டே!”

என்றார் தாயுமானார், எந்தச் சமயமாக இருப்பினுமென்ன, எல்லாம் ஈசன், திருவிளையாடலே என்பதும், எந்தச் சமயத்தைச் சார்ந்திருப்பினும் சரி என்பதும், எம்மதமும் சம்மதம் என்பதும், அவர் கருத்து, இந்த விரிந்த மனப்பான்மையை, சமரசப் போக்கை, குரோதமற்ற தன்மையைப் புகழ்வர் மெய்யன்பர்கள், ராமுவும் ரஹிமும் ஒன்றே! சிவனும் மாலும் ஒன்றே! ஏசுவும் கிருஷ்ணனும் ஒன்றே! இறைவன் ஒருவனே! அவன், விரும்புவார் விரும்பும் வண்ணம் பல வடிவாய், அம்மையாய் அப்பனாய், அம்மை அப்பனாய், அரியாய் அரனாய், அரிஅரனுமாய்த் தோன்றுகிறான், எனினும் அவன் ஒருவனேதான்! என்று அன்பர்கள் அறிவுரையாற்றத் தவறுவதில்லை.

அவரவர்கள் தத்தம் அறிவுக்குத்தக்கபடி அந்தந்தத் தேவதையை ஈசன் என்று வணங்குகிறார்கள்; அந்தந்தத் தேவதையும் தன்னை ஆராதிப்பவர்கள் வேண்டிய பலனைக் கொடுப்பதிலே சக்தி குறைவதில்லை, என்று சர்வமத சமரசத்தைத் தெளிவாக்கி,

“அவரவர்தமதம தறிவறி
வகைவகை
அவரவரிறையவ ரெனவடி
யடைவர்கள்
அவரவரிறையவர் குறைவில
ரிறையவர்
அவரவர் விதிவழியடைய
நின்றனரே”

என்று நம்மாழ்வார் கூறுவதை நமக்கு எடுத்துக்காட்ட வைணவத் தோழர்கள் தயங்குவதில்லை. சமயபேதங்களைச் சட்டை செய்யக்கூடாதென்றும், அருள் எனும் இலட்சியத்துக்குப் பல பாதைகள் அமைந்துள்ளன, அவைகளே பல்வேறு மதங்கள், அத்தகைய பாதைகளிலே எதை வழி எனக் கொண்டாலும் சரியே, இலட்சியத்துக்கே கொண்டுவந்து சேர்க்கும் என்று கூறுவர்.

இந்தச், சர்வமத சமரசம் உண்மையிலே, பேசப் படுபவர்களால் நெஞ்சார நம்பப்படுகிறதென்றால், மதம்விட்டு மதம் மாறுவதுபற்றி, யாரும் மனக்கொதிப்படையக் காரணம் இல்லை. எந்த மதத்திலே இருந்தால் என்ன, எல்லாம் சம்மதமே என்று இருக்கவேண்டும். ஆனால், திருநெல்வேலி வட்டாரத்திலே ஆயிரம்பேர் இஸ்லாமிய மதத்திலே சேர்ந்துவிட்டனர் என்பதற்காகப் பெரியதோர் கூக்குரல் கிளம்பிவிட்டது. ஏன்? அந்த மதம்மாறினவர்கள், ஆண்டவனின் அருளுக்குப் பாத்திரமாக மாட்டார்களா? இஸ்லாம், ஆண்டவனுடைய அருளாலயத்துக்கு அமைந்துள்ள பாதை யல்லவா? இந்து மார்க்கம் தவிர பிற மார்க்கங்கள், “நரகலோகத்துக்கான” பாதைகளா? தாயுமான வரையும், நம்மாழ்வாரையும், தேவாரத்தையும், சித்தாந்தத்தையும் சாட்சிக்கு இழுத்துவந்து விளக்கமும் வியாக்யானமும் கூறி, கருப்பொருளும் மெய்ப்பொருளும் உரைத்து, எந்த மதமானாலும் ஈசனுக்கு அன்பராகில் போதும் என்று பேசிடும் அன்பர்கள், ஓர் ஆயிரமன்று, ஒரு கோடி பேர்; இஸ்லாத்திலே சேர்ந்தால்தான் என்ன! ஏன் அதுகேட்டுப் பதைக்க வேண்டும்! கடவுளை மறந்து ஒழுக்கத்தைவிட்டு, ஓங்காரச் சொரூபத்தின் ஆட்சியை மறுத்து, எவரேனும் சென்றால், அவர்பால் இரக்கப்படுவதோ, அவரை அங்ஙனம் இழுத்துச்செல்பவரிடம் கோபங்கொள்வதோ கூட, ‘அவனடியார்களுக்கு’ ஏற்றதாக, பொருத்தமுடையதாக இருக்கலாம். இஸ்லாம் இறைவனருளைக் கூட்டித்தர முடியாத மார்க்கம் என்று, கூற இவர்கள் முன் வருவார்களா? முடியாது! இஸ்லாம் இறைவனை அடையும் மார்க்கமாகாது என்று கூறிவிட்டுப் பிறகு ஐயகோ! இத்தகைய தவறான வழி செல்கின்றனரே! தயாபரனின் அருளை இழக்கின்றனரே” என்று கூறிப் பதைத்தால், இவர்கள் குறைமதி கொண்டோர் என்ற போதிலும், நெஞ்சிலே உரமும் நேர்மையில் திறமும் இருக்கிறது என்று ஒரு சிலரேனும் பாராட்டுவர். ஆனால், எம்மதமும் சம்மதம்! எம்மதமும் ஈசனை அடையும் மார்க்கமே! ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வற்றது! அவரவர்கள் தத்தமக்கு இசைந்தபடி ஈசனை வழி படலாம்! அவரும் வேண்டுவார்க்கு வேண்டுவது போல நின்று அருள்புரிவார்” என்றெல்லாம் பேசிடும் வேதாந்தவாயர்கள், சமரசப்பிரியர்கள், சர்வமதஞான உபதேசகர்கள், திருநெல்வேலிப் பகுதியிலே சென்றகிழமை சில பலர், இஸ்லாமிய மார்க்கத்திலே சேர்ந்தனர் என்பதற்காக, இரு கை எடுத்து மார்தனிலடித்து பெருங்குரல் கிளப்பிப் புலம்பிடுகின்றனரே! இதற்குப் பொருள் உண்டா? பொருத்தமுள்ள செயல்தானா? இவர் தம் ஏட்டறிவுக்கும் காட்டிடும் செயலுக்கும் ஏதேனம் சம்பந்தம் இருக்கிறதா? என்று கேட்கிறோம். யார் எந்த மதத்திலே இருந்தால் என்ன, எவர் எந்த மதத்தைவிட்டு எந்த மதம் புகுந்தால் என்ன, எம்மதமும் சம்மதம் என்ற எழிலைக் கூறிக்கொண்டு, இவ்வளவுபேர் இஸ்லாத்திலே சேர்ந்துவிட்டனரே, இதற்கென்ன செய்யலாம், இந்த ஆபத்தினின்றும் “இந்து சமுதாயத்தை” எப்படிக் காப்பாற்றுவது, என்ற பேச்சு எழுவானேன்? மக்களின் மறுமைக்கான வழி மதம், அந்த மதம் பலவிதம், விதம் பலவே தவிர குணம் ஒன்றுதான் என்று பேசுவதும் அதே வாயினால், ‘இந்து இஸ்லாமியனானால்’, ஐயோ! இஸ்லாமாகிவிட்டாரே என்று அலறிக்கூவுவதும், ஏன்? இஸ்லாமாகி விட்டால், இறைவனருளை இழந்துவிட்டனரா? என்று கேட்கிறோம். இதற்குப் பதிலுரைக்க வகையற்றுக் கிடக்கும் மெய்யன்பர்களுக்கு ஒன்று கூறுகிறோம். “அன்பரீர்! வேதமும், ஆகமும், சாஸ்திரமும் பாசனமும், அனாதிகாலத்தவை, என்று பெருமை பேசுகிறீர். ஆண்டவன் அடிக்கடி வந்து வந்து போனார் என்று அகமகிழ்ந்து கூறுகிறீர். இந்து மார்க்கம் இன்று நேற்றுத் தோன்றியதன்று, மிகமிகப் பழங்கால முதற் கொண்டிருக்கும் ஆதிமார்க்கம் என்று ஆவேசமுறப் பேசுகிறீர். ரிஷிசிரேஷ்டர்களையும் முனீஸ்வரர்களையும், தவசிகளையும், தத்துவவாதிகளையும், சித்தரையும் ஜீவன் முக்தரையும், பெற்றுள்ள மார்க்கம் என்று பெருமிதத்துடன் பேசுகிறீர். ஆனால், இவ்வளவு பெருமைக்குரிய உமது இந்துமார்க்கத்துக்கு நீங்கள் குறிக்கும் காலத்துக்குப் பிறகு, உலகிலே, பௌத்தமென்ன, கிருத்தவமென்ன ஜைனமென்ன, இஸ்லாமென்ன, இன்னோரன்ன மார்க்கங்கள் எங்ஙனம் நிலைத்திட, வளர்ந்திட, வழிவகை பெற்றன? ஏன், இவைகள் ஏதும் பரவாமல் பரிபாலனம் செய்யாதபடி, பண்டைப் பெருமை வாய்ந்த உமது மதம் தன் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை! இந்து மதத்தின் பிறப்பிடமென்று பெருமை பேசும் ‘பரதகண்டத்திலே’ பத்துக்கோடி முஸ்லீம் மதத்தினரும், பலபல இலட்சம் கிருத்தவமார்க்கத்தினரும், இன்று காணப்படுகின்றனரே, ஏன் இந்து மார்க்கத்தின் “எழில்” அவ்வளவு பெருந் தொகையினரை வசீகரிக்க முடியவில்லை? ஆண்டி, அப்துல்லாவானதேன், பச்சை, பால் ஆனது ஏன்? வேத புராணாதிகளின் பிடியிலிருந்து, இவர்கள் தப்பித்துக் கொண்டது ஏன்? இதுவும் இன்று நேற்றா நடந்து வருகிறது? சைவத்தின் சாரம் தங்குமிடமென்று சாற்றப்படும் திருநெல்வேலி மாவட்டத்திலே சென்ற கிழமைதானா புதிதாக மதமாற்றம் நடைபெற்றது! பன்னெடு நாட்களுக்கு முன்பிருந்தே, இது நடைபெற்று வருகிறதே, இன்று காகூவெனக் கூவிடும் காரணம் என்ன? வெட்கித் தலைகுனிய
வேண்டிய நேரத்திலே, வீம்புபேசித் திரிவது கூடாது! என்று அறிவுறுத்துகிறோம். எதற்காக, உங்கள் கோபம் பாய்கிறது மதம் மாறினவர்கள்மீது? அவர்கள் “ஆண்டவனின் அன்பை” இழந்துவிடுவார்கள் இஸ்லாத்தைத் தழுவியதால் என்று கூறமுடியாது. வேறு என்ன கெடுதி அவர்களுக்கு நேரிட்டு விட்டது என்று நீவிர் விம்முகிறீர் என்று கேட்கிறோம்.

நெல்லையிலே நேரிட்ட இந்த மதமாற்றத்தைக் கண்டு, மனம் நொந்து பேபாயினராம். இதுபற்றிக் கவனிக்கக் கமிட்டியாம். இனி இதுபோல் நேரிடாதபடி பார்த்துக்கொள்ள உஷார் சங்கமாம், நெல்லையிலே இவ்வளவும் எதன் பொருட்டு? இகத்தைப்பற்றியா? பரத்தைப்பற்றியா? இஸ்லாமாகி விட்டவரின் எதிர்காலத்தைப் பற்றியா? இஸ்லாத்துக்கும் கிருத்துவத்துக்கும் அடிக்கடி “காணிக்கை” செலுத்திவரும் இந்துக்களின் எதிர்காலத்தைப் பற்றியா? மதப்பிரச்னையா, மக்கள் வாழ்க்கையின் பொதுப் பிரச்னையா? எந்தப் பிரச்னையின் மீது இந்த ஓலம், உஷார், இவ்வளவும் என்று கேட்கிறோம். நேரி வாழ் மக்களை இனி இவ்விதமான ‘ஆபத்து’ சூழாதபடி பார்த்துக்கொள்ள வேலைகள் நடக்குமாம். ஏன், சேரி வாழ் மக்கள் மீது திடீரென்று இவ்வளவு அன்பு, அக்கறை, அபிமானம்? உறவு கொண்டாடும் உள்ளப்போக்கு வரக்காரணம் என்ன? இதனைத் தெளிவு படுத்த நெல்லை உஷார் சங்கம் முன்வருமா என்று கேட்கிறோம்.

“பரலோக”த்தைப்பற்றியன்று, “இகலோகத்தில்” இங்கு, இந்து மதத்திலே பிறந்து அதன் பயங்கரப் பொறியாகிய, வர்ணாஸ் ரமத்திலே சிக்கி, தாழ்ந்த ஜாதி, தீண்டாதார் என்று ஒதுக்கப்பட்டுச் சமுதாயத்திலே சத்தற்ற வாழ்வு நடாத்தி எடுபிடியாக்கிக் கிடக்கும் மக்களெல்லாம், சமுதாயத்திலே சமஉரிமைபெற, மானத்தோடு வாழ, உயர் ஜாதிக்காரர் என்ற ஆணவக்காரரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட, ஓரே வழி, அவர்கள் இல்லாமாவதுதான் என்று பெரியார் இராமசாமி பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூறி வருகிறார். டாக்டர் அம்பேத்கார் “மதம் மாறப் போகிறேன் நான் மட்டுமன்று, என் இனமே மாறப்போகிறது” என்று கூறினார். இந்து மார்க்கத்தவர், இவர்கள்மீது சீறிடவும். பத்திரிகைகளை ஏவி விடவும், பாவி என்றும் நாஸ்திகன் என்று தூற்றவும் முனைந்தனரே தவிர, இந்து மார்க்கத்தைச் சீர்திருத்துவோம் என்ற யூகமும் பெறவில்லை. இன்று உஷார் சங்கமாம் குதிரை போயிற்று, கொட்டிலுக்குக் கனமான பூட்டாம்! என்னே இவர் தம் சிறுமதியும் சிறு செயலும்!!

இந்த “உஷார்” போக்கும் உள்ளன்பு வெளிப்படுத்தப் படுவதும், பலப்பல உருவிலே இன்று காணப்படுகிறது. தீண்டாதாருக்குத் திருக்கோயில் புக நாம் உரிமை தரவேண்டும் என்கிறார் ஓர் ஐயர்! மற்றோர் ஐயர் ஜாதிபேதங்களை ஒழித்தாக வேண்டும் என்கிறார்! அன்பர் ஆச்சாரியாரோ, பெரியார் ஈ.வே.ரா. வேடத்திலே தோன்றிக் கலப்பு மணமே சிறந்த வழி ஜாதிகளை ஒழிக்க, என்று கன்னியர் கல்லூரியிலே கனிரசமொழி பேசுகிறார். இவர் போன்றாரின் “கனிவு” பற்றி அடுத்த இதழிலே எழுதுகிறோம். ஒன்று மட்டும் கூறுவோம். இந்த “அன்புப்பெருக்கு,” “சமாதானக்குண்டு வீச்சு” இருக்கிறதே, இதை “உஷாராக”க் கவனிக்க வேண்டும்!! இந்த அன்பு, ஆர்வம், சீர்திருத்த நோக்கம், தீவிரப்போக்கு, நிரந்தர நாதமா, அல்லது நிலைமையைச் சரிப்படுத்தும் தந்திரக்கீதமா, என்பது பற்றி மிகமிகக் கூர்மையாக ஆராயவேண்டும். எனவே உஷார்! சனாதனம் சிரித்துப் பேசுகிறது, சரசமாட வருகிறது; ஆதிக்கக்காரர்கள் அணைத்துக் கொள்ள வருகிறார்கள், ஆரியம் அன்பு சொரிகிறது; அந்தச் சிரிப்பும் ஆலிங்கனமும், அன்பும் ஆர்வமும், கனிரசத்திலே கலக்கப்பட்ட கடுவிஷமாக இருக்கக்கூடும், அவசரப்பட்டு உபயோகிக்காதீர், உஷாராக இருங்கள் என்று கூற விரும்புகிறோம், திராவிட இன உணர்ச்சி உள்ளவர்களுக்கன்று, இனத்தால் திராவிடராக இருப்பினும், எதிரிகளிடம் சிக்கியுள்ள தோழர்களுக்கு!!

(திராவிடநாடு - 05.08.1945)