அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


உதைக்கும் காலுக்கு..!
“உதைக்கும் காலுக்கு முத்தமிடக் கூடாது” உண்மைதான். உதைக்கும் கால் என்ன, வெறும் காலுக்குக் கூடத்தான் முத்தமிடக்கூடாது. முத்தமிடுவதே கூடாது என்று கூறுகிறார்கள் சில டாக்டர்கள் - கிருமிகள் உள்ளனவாம்! இருக்கலாம். ஆனால், அவர்கள் அந்தப் பேச்சை, டாக்டர்கள் என்ற முறையிலே கூறி இருப்பார்கள் என்று எண்ணுகிறோம் - காதலர் - தந்தையர் - இம்முறையிலே அல்ல. அந்தமுறையின் அனுபவம் அவ்விவதமா இருந்திருக்கும். செச்செ! அதெல்லாம் இராது. ஏதோ மருத்துவ முறைப்பபடி கூறினார்கள்.

முத்தமிடுவது, நல்லதுதான் - ஆனால், காலுக்கு வேண்டாம் - உதைக்கிற காலானாலும் சரி, உதைக்காத கானாலும் சரி.

ஆனால், எங்கே நடக்கிறது இந்த அக்ரமம் என்று கேட்பீர்கள். வெளியே சொல்லாதீர்கள், பல இடங்களிலே நடக்கின்றன.

உதைக்க வரும் காலை, “அடி வருடி”டும் முறை பற்றி அருணகிரியார் பாடி இருக்கிறார் திருப்புகழில்.

கேகயன் மகள், சோகத்தைக் கோலகலமாகக் காட்டியபோது, அயோத்திரசக்னும் அந்தச் செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட திருவடிகளைத் தன் மார்பிலே தாங்கினான் என்று காவிய ரசனைக்காரர்கள், களிப்புடன் கூறக் கேட்டிருக்கிறோம்.

உதைக்கிற கால்மட்டுமல்ல, தலை மீது காலை வைத்தபோது, ஜென்ம சாபல்யம் ஆயிற்று என்று பூரித்தான் மாபலி என்று புராணிகர்கள் கூறக் கேட்டிருக்கிறோம்.

காதல், பக்தி எனும் இருநிலைகளிலே உதைக்கும், காதலுக்கு முத்தமிடுவது மட்டுமல்ல, உதைக்கும் காலை வருடியதாக - பூஜித்ததாக ஏடுகள் பல கூறுகின்றன.

இதுவும் தவறு என்றே சுயமரியாதைக்காரன் கூறுகிறான்.

இவை மட்டுமல்ல! சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் என்பனவற்றின் பேரால், “காலைத் தொட்டுக் கும்பிட்டு”, “காலைக் கழுவி அந்த நீரைப் பருகி” மோட்ச சாம்ராஜ்யத்துக்கு வழி தேடிக் கொள்வதை, வகையற்றவரின் செயல் என்று, நெடுநாட்களாகவே சுயமரியாதைக்காரன் சொல்லி வந்திருக்கிறான். எனவே, உதைக்கும் காலுக்கு முத்தமிடுவது கூடாது என்ற அறிவுரையைச் சுயமரியாதைக்காரனுக்குக் கூறுவது, சரியுமல்ல, அது போதனையுமாகாது.

ஆனால், “தமிழ் முரசு” அத்தகைய உரையை அளித்திருக்கிறது - எண்ணத்திலே தவறு கொண்டல்ல - முறை தெரியாத காரணத்தால், என்று எண்ணுகிறோம்.

மலையாளிகள், தெலுங்கர் இருவரும், தமிழரின் உரிமைகளைப் பாதிக்கும் முறையிலே நடந்து கொள்வது கண்டும், அவர்களிடம் “திராவிடர்” என்று பேசி, உறவு கொண்டாடுவதும், ஒன்று சேரப் பார்ப்பதும், உதைக்கும் காலுக்கு முத்தமிடும் போக்காகுமே இது ஆகுமா என்று “முரசு” கேட்கிறது. முரசு, ஒலிக்கிறதே யொழிய இந்த இடத்திலே, ஒளி இல்லை! ஒளியும் வேண்டும்.

சென்னை தங்களுடையது என்று இந்திரர் கூறுகின்றனர். இது தவறு, கண்டனத்துக்குரியது. சகல தமிழர்களும் ஒன்றுகூடி, சரிதச் சான்று காட்டி, சென்னை தமிழருக்குத்தான் என்பதை எடுத்துக்காட்டத் தவறக்கூடாது.

அதுபோலவே, மலையாள நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள, தமிழ் நிலம், தமிழகத்துடன், இணைக்கப்படவேண்டும். இதனை எதிர்க்கும் கேரளருக்கு, உண்மையைக் கூறித் தமிழர் தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும்.

இந்த இரு காரியங்களும் அவசியம்.

ஆனால், இந்த இரண்டு காரியங்கள் நடைபெற வேண்டியது. நாம் அவர்களைத் “திராவிடர்” என்று சொந்தம் கொண்டாடுவது, ஆகிய இந்த இரண்டு செயல்களும், ஒன்றுக்கொன்று எப்படி முரணாகும் - இதனை விளக்கவில்லை - எனவேதான் ஒளி இல்லை என்கிறோம்.

கோபம், கருத்தைக் கொஞ்சம் கருநிறமாக்கும். தமிழரின் இடம் தெலுங்கராலும், கேரளராலும் பறிபோகுமோ என்ற அச்சம் கோபத்தை மூட்டிவிட, அந்தக் கோபத்தால், கருத்து கருநிறமாகிவிடவே, இந்தக் கேரளரும், இந்திரரும், இவ்வண்ணம் தமிழரிடம் தகராறுகள் செய்கிறார்களே, இதைக்கண்டும் அவர்களிடம் உறவாடுவது - திராவிடர் என்று சொந்தம் கொண்டாடுவது ஏன் என்று கேட்கிறது முரசு.

கோபம் குறைந்தவுடன் யோசித்தால், விளங்கும், சென்னை நமக்கா இந்திரருக்கா என்று தகராரு வந்ததே, தமிழரும் இந்திரரும் சொந்தக்கார்கள் என்பதற்குப் போதுமான சான்று என்று சிந்திக்கும் தமிழனுக்கும் அல்லது பஞ்சாபிக்கும் தமிழனுக்கும் இடையே, இத்தகைய இட பாத்தியதைத் தகராறு வராது. ஒரே இன மக்களுக்குள் தான் வரும். பங்காளிச் சண்டை தான்.

“என்னப்பா வழக்கு?”

“அந்த அரைக்காணி தனக்கு என்று வம்பு செய்கிறான்”

“யார்?”

“அவன்தான், வம்புக்காரன் இருக்கிறானே, வரதன்”

“எந்த அரைக்காணி?”

“அதுதான் அப்பா, ஏரி ஓரம் இருக்கே துண்டு, அது”

“வரதனா வம்புக்கு வருகிறான்? ஆமாம், எந்த வரதன்?”

“அவன்தான், நம்ம, பெரியப்பா மகன்.”

“ஓஹோ! ஒண்ணுக்கொண்ணு தானா. உங்க அப்பாவும் வரதன் அப்பாவும், அண்ணன் தம்பியா?”
“ஆமாம் இருந்தா? நான் அவன் முகலோபனம் செய்வதில்லை.”

“போப்பா! என்னமோ பங்காளிச் சண்டைதானே. சொத்துத் தகராறு தீர்ந்ததும், சொந்தம் கொண்டாடமல் போய்விடுவீர்களா? ஒன்றுக் கொன்றுதானே பாத்யம் விட்டுவிடுமா?”

வழக்குமன்றமேறுபவரிடம் இப்படிப்பட்ட பேச்சு, நடைபெறும் முராசரியர் இதனையும் கேட்கவேண்டும். கேட்டால், சென்னை யாருக்குச் சொந்தம் என்ற தகராறு இருக்கிற காரணத்தாலேயே, தமிழர் இந்திரர், ஆகியோர், திராவிடர் என்ற பொதுப் பெயரில் சேர வேண்டியவர்கள்தான் என்பதைக் கூறுவது கூடாது என்று பேசுவது நியாயமுமாகாது பிரச்சனையைத் தீர்க்கும் வழியுமாகாது என்பதை அறிவார். உதைக்கும் காலை முத்தமிடுவது என்பது ஒரு பழமொழி. உபயோகமுள்ளதுதான். உபயோகிக்க வேண்டிய இடமும், சமயமும், இது அல்ல. இங்கு ஏதேனும் பழமொழி, மொழி அழகுக்காக, உபயோகித்தே தீரவேண்டுமென்று தோன்றினால், முடுக்கு தீர முதுகைத் தட்டிக் கொடுப்பது, “அடிக்கவரும் கரத்தை, அணைத்துக் கொள்வது இப்படி ஏதாவது கூறட்டும். நாடகத் தமிழிலே முரசுக்கு இஷ்டம் இருக்கும். கோபம் கொண்ட ஒரு குமாரி காதலிக்க வந்தவனைக் கன்னத்தில் அடிக்கக் கரத்தைத் தூக்கினாள், ஆவனோ முரசாசிரியர் போலக் கோபம் மட்டும் தெரிந்தவனல்ல, சாகசமும் அறிந்தவன், எனவே அடிக்க வந்த கரத்தைச் சட்டெனப் பிடித்துக்கொண்டு, ஆஹா! என்ன மிருதுவான கரம் என்று முரட்டு உடலிலே மோதினால்.... என்று பேசினான் - அவள் சிரித்துவிட்டாள் வேறு என்ன செய்வாள்.

இப்படி எவ்வளவோ உண்டு. தகராறுகள் வருகிறபோது உபயோகமாகக் கூடிய வழிகள். இதற்காக “அக்கு தொக்கு” கிடையாது, என்று அறுத்துக் கொள்பவர்களை என்னென்பது; ஒன்றுக்கொன்று பெழர்தமோ, பாசமோ என்றேனும் ஓர் நாள் ஒருமைப்பாடு ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கைக்கு இடமோ அற்ற பல இனத்தவரை, தேசியப் போராட்டத்துக்காக ஒன்று போலாக்கி, ஒரு பெயரிட்டு, இந்தியர், என்று இதுகாறும் அழைத்து வந்தது - இன்றும் அநேகர் அழைப்பது உதைத்த காலுக்கு முத்தமிடுவதாகத் தோன்றாத காரணம் என்னவோ!

திராவிடர்கள் தாம், இந்திரரும், கேரளரும். இது மறைக்கப்பட வேண்டியதுமல்ல மறுக்கவும் ஆளில்லை. மறந்தவர்கள் உள்ளனர் தமிழரிலும் கூட உள்ளனர்.

சென்னையாருக்கு என்ற தகராறு வருவதனால், “திராவிடர்” என்ற பொதுப் பாத்யதை மறுக்கப்பட்டதாக அர்த்தமில்லை - உறுதிப்பட்டது என்றே பொருள்.

இதனை இதுவரை உணராதாரும் உணரச் செய்யவேண்டும்.

எல்லை கோலுவதை முன்னணி வேலையாக முரசு கொள்வதிலே நமக்கு மாறுபாடான கருத்து இல்லை. செய்யப்பட வேண்யடி வேலை, சேர்ந்தும் செய்வோம். ஆனால், எல்லைத் தகறாறு காரணமாக, திராவிடர் என்ற சொல்லையே, துரத்துவோம் என்று மனப்பால் மட்டும் குடிக்கவேண்டாம்.

“திராவிடர்” - அவர்களும் அவர்கள் அறியாமலிருக்கலாம். நாமும் அவர்களுக்கு அறிவிக்க முயற்சிக்கவில்லை - போதிய வசதி இல்லை.

அவர்களும் நாமும் ஒரு “மூலத்திலே” வந்த காணரத்தாலே தான், இடத்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்த இடத் தகராறைக் காரணம் காட்டி, இனப் பிரச்சனை தவறு என்று முடிவு கட்டிவிடவேண்டாம், என்று முரசாசிரியருக்குக் கூறுகிறோம்.

தமிழர் வரலாறு முதலிய சான்று காட்டி, சென்னை, தமிழகத்துக்குச் சொந்தம் என்பதை நிலைநாட்டுவதுடன், “நாம் திராவிடர்” எனவே தகராறுகளைச் சமரசமாகத் தீர்த்துக்கொள்ள முடியும், என்ற பாத்தியமும் கொண்டாடத்தான் வேண்டும்.

அவர்கள், கூடவே கூடாது என்று கூறிவிட்டால், பிறகு, நமது குடும்பத்தை விட்டு வெளி ஏறிவிட்ட “பங்காளி” என்று, கருதி, நமது காரியத்தை நாம் கவனித்துக் கொள்வோம்.

இந்த மனப்போக்கு நம்முடையது - இது உதைக்கும் காலுக்கு முத்தமிடும் போக்கு அல்ல என்பது, இப்போது விளங்கி இருக்கும் என்று நம்புகிறோம்.

1. தமிழகம் உருவாக வேண்டும். எல்லை சிதையாமல்.

2. உருவாகும் தமிழகம், புதிய அகமாகவும் இருக்கவேண்டும்.

3. அச்சத் தமிழகத்துடன் கூட்டாக உள்ள இந்திரமும், கேரளமும், வாட்ட வருத்தமின்றி வாழ வேண்டும்.

இது திராவிட நாடு -
தமிழகம், எல்லை சிதையாமல் இருக்கவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதிலே இம்மி அளவும் குறைந்ததல்ல, தமிழகத்தின் தாள்பணியும் போக்கு அறவே ஒழியவேண்டும் என்ற குறிக்கோள். இந்தத் தாள்பணியும் போக்கு, பூர்ண கும்பத்துக்கானாலும் சரி, இரும்புப் பெட்டிக்கானாலும் சரி, பிராமணீயத்துக்கானாலும் சரி, வடநாட்டுப் பொருளாதார, ஏகாதிபத்தியத்துக்கு ஆனாலும் சரி, தாள் பணிதல் கூடாது என்பது, தன்மான இயக்கத்தின் கோட்பாடு, புதிய தமிழகத்திலே இந்நிலை பிறக்கச் செய்ய, முரசாசிரியர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் திராவிடர் கழகத்தார் என்றும் துணை நிற்பர். வடநாட்டுத் தொடர்பு நமது வாழ்வின் வளத்தைச் சுரண்டுவதாக இருப்பதைப் போக்கி, முழு உரிமையும் வளமான வாழ்வும் பெற மேற்கொள்ளும் காரியத்திலும், துணை நிற்பர். அதே போது, தமிழரின், மூலத்துடன் சேர்ந்த கேரளர், இந்திரர் என்பவர், திராவிடர் என்ற பொதுப் பெயருக்கு உரியவர்கள், இதற்கு இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எனவே, மூன்று அரசுகளும், கூட்டாட்சி நடத்த வேண்டும், என்று கூறிவரத்தான் செய்வர். இது உதைக்கும் காலுக்கு முத்தமிடுவதில்லை; வழி தவறுபவரையும் நேர் வழி கொண்டு வருதாகும்.

இது, ‘இந்தியர்’ என்பதைப் போல் அர்த்தமற்ற பேச்சல்ல. இசிய மக்கள் என்பதைப் போல, ராஜதந்திரப் பேச்சுமல்ல.

திராவிடர் என்பது தெளிவான பெயர் - திட்டமான பதம் - வரலாற்று உண்மை - எனவே, அதனைக் கூறுவது. எல்லை கோலுவதற்கு முரணாகப் போகாது. முரசாசிரியர் இதனை அறிய வேண்டுகிறோம்.

எனவே, உதைக்கும் காலுக்கு முத்தமிடும் போக்குக் கூடாது என்ற அறிவுரையை “திராவிடர்” என்ற உண்மை பேசுவோருக்குத் தராமல், உண்மையாகவே, அந்தப் போக்கிலுள்ளவர்களுக்குத் தரவேண்டுகிறோம். யார் இருக்கிறார்கள், என்று சந்தேகம் தோன்றாது. நமது மக்களில் அத்தகையவர் ஏராளம்.

நீ மட்ட ஜாதி நான் உயர்ந்த ஜாதி - இந்தப் பேச்சும் மறையவில்லை. பேசுபவருக்குப் பணிபவரின் தொகை குறையவில்லை, பணிவது மட்டுமல்ல அவர்களைக் குருமார்களாய்க் கொள்வது குறையவில்லை - காணிக்கை தருவது நிற்கவில்லை. காலைத் தொட்டுக் கும்பிடுவது நிற்கவில்லை - இது உதைத்த காலுக்கு முத்தமிடும் போக்கு. இவர்களுக்குத் தேவை, இந்த அறிவுரை, இடமறியாது, உபயோகிக்கிறார் முரசாசிரியர்.

ஆண்டையிடம் பெற்ற அரை மரக்காலுக்காக அடிபணியும் உழவன், அந்த ஆண்டையை ஆண்டவனின் அருள்பெற்றவன் என்றெண்ணி அடி பணியக்காணும்போது, இந்த அறிவுரையைக் கூறட்டும். சுரண்டிச் செல்லும் வடநாட்டுச் செல்வர்கள். தமிழர் தலைமீது வடநாட்டு மொழிகளைச் சுமத்தும்போது கூறட்டும். இங்ஙனம் அருமையான பல இடங்கள், சமயங்கள் உண்டு அப்போது தான், அப்பழமொழி பொருத்தமாக உபயோகிக்கப்பட்டது என்று பொருள்.

அதற்காகவே, இதனைச் சற்று விரிவாகத் தீட்ட நேரிட்டது. தேடுவது எல்லை - தொல்லையை அல்ல! இதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். வெற்றிக்கு அதுவே வழி.

(திராவிடநாடு - 20-4-47)