அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


உழைப்பாளிக்கே உலகம் உரியது
“உலகப்பனே! உள்ளபடியே நீ ஓர் ஏழைதானா?” இது, வாழ வகையற்றுக் கிடக்கும் பாட்டாளிகளின் கண்ணீரைக் கண்டு, அந்தக் கண்ணீர் ஆறாய்ப் பெருகுவதற்கு, இல்லாமையும், போதாமையுமே அடிப்படைக் காரணங்கள் என்பதையுணர்ந்து, உடனே உலகப்பனைத் திரும்பிப் பார்த்து, உயர்வுள்ளங் கொண்டோர் கேட்கும் கேள்வியாக இருந்து வருகிறது.

“என்னிடத்திலே பொன், வெள்ளி, இரும்பு போன்ற உலோகங்கள் ஏராளமாகப் புதைந்து கிடக்கின்றன; அவற்றில் ஒரு பகுதி பொன், வெள்ளி நாணயங்களெனப் பெயர் பெற்று, மாளிகைகளிலேயும், கோயில்களிலும், பாங்குகளிலும் சென்று குவிந்து கிடக்கின்றன. விளைபொருள்களை விளைவிக்கத் தாராளமான நீர் வளங்களையும், நிலவளங்களையுங் கொண்
டிருக்கிறேன்; அவற்றில் விளையும் தானியங்கள் அம்பாரமாக ஆங்காங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. பருத்திவிளையுங்காடுகள் என்னிடத்தில் அமோகமாக ஆங்காங்கு இருக்கின்றன; அவற்றில் பயிரிடும் பருத்தி ஆடைகளாக நெய்யப்பட்டுக் கிடங்குகளிலே பொதிபொதியாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகள் எழுப்புவதற்கான கற்களையும், மரங்களையும் எங்கணும் அடர்த்தியாகக் கொண்டிருக்கிறேன்; அவையெல்லாம் எடுத்துப் பயன்படுத்துமளவுக்குப் பரந்து கிடக்கின்றன. இவையெல்லாங் கொண்டிருக்கும் நான் ஏழையா, என்று விடையிறுத்து நிற்பதுபோல் காட்சியளிக்கிறான் உலகப்பன்!”

உலக மக்களுக்குப் போதுமான அளவுக்கு உணவும், உடையும், உறையுளும் உண்டாக்கப்படுகின்றன - உண்டாக்க முடியும் என்றே பேரறிஞர்கள் பலரும் இயம்புகின்றனர். நமது பார்வைக்கே இதன் உண்மை நன்கு புலனாகிறது. இந்த நிலையை அரசுகளுங்கூட ஒத்துக்கொள்ளுகின்றன. அப்படியிருந்தும் இல்லாமையாலும், போதாமையாலும் உலக மக்கள் பண்டு தொட்டு இன்று வரை வாடி வதங்கியே வருகின்றனர். பொருளாதாரப் பேரறிஞர்கள் உலகம் வருந்துவது இல்லாமையாலல்ல, அதிகம் இருப்பதாலேயே வருந்துகின்றது என்று கூறுகின்றனர். இந்த ‘அதிகம்’ யாருக்குப் பயன்படுகின்றது, யாருக்கும் பயன்படாமலேயே பாழ்படுத்தப்படுகிறது! மக்களின் உழைப்பால் உண்டான இந்த ‘அதிகம்’ மக்கள் வயிற்றுக்கு உதவாமல், உலக ஆடம்பரங்களுக்கான வகைகளில் செலவழிக்கப்பட்டுவருவதால், பண்டுதொட்டு உலகம் ஆளாகும் துயரத்திற்கு, இந்தப் பயன்படாச் செலவு முதற்காரணமாக இருந்துவருகிறது.

இந்த ‘அதிகம்’ கோயில்களுக்கும் குளங்களுக்கும், மண்டபங்களுக்கும், மடங்களுக்கும் செலவு செய்யப்பட்டு மூடப்பக்தியை வளர்க்கப்பயன்பட்டு வருகிறது. மனிதனின் வீண் பெருமைக்கு வழிவகையாக இருக்கும் நவரத்தினங்களுக்கும், நகைகளுக்கும் பயன்பட்டு வருகிறது. கல்லுக்கும், செம்புக்கும் செய்யும் அதிபஷேக ஆராதனை, நைவேத்திய, நிவேதனங்களால் விளையும் மூடநம்பிக்கையை வளர்க்க உதவுகின்றது. மனிதனை மனிதன் கொல்லும் ஆயுதங்களுக்குச் செலவிடப்படுகிறது. வீண் ஆடம்பரத்தை வளர்க்கும் வசதிகளுக்குச் செலவிடப்படுகிறது. இந்த மிகுதி, தானத்திலும், தருமத்திலும் செலவிடப்பட்டு, மக்களைச் சோம்பேறியாக்கும் சத்திரங்களுக்கும், சாவடிகளும், அன்னதான மடங்களும், சொர்ணதான சமாஜங்களும், புரோகிதர்களும் மதத்தரகர்களும் மடாதிபதிகளும் உருவாகின்றனர். சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும், மிராசுதாரர்களும், சுரோத்தியதார்களும், கடனுக்கு வட்டிவாங்கும் சோம்பேறிகளும், யாதொரு உழைப்புமின்றிச் சோம்பித்திரியும் கனதனவான்களும் நாட்டிலே நடமாடுவது இந்த மிகுதியாலன்றோ! வாழ்வின் இன்றியைமையாத தேவைக்கும் மிகுதியான சம்பளத்தைப் பெறும் கவர்னர் ஜெனரல்களும், கவர்னர்களும் , நீதிபதிகளும், கலெக்டர்களும், இன்னும் இவர்கள் போன்றோரும் தங்களுக்கு மட்டுமல்லாமல், தங்கள் வழியில் பிறக்கும் பலதலைமுறையினரும் வேலையின்றிப் பிழைத்து வாழச் சேமிக்கப்படும் செல்வம் யாவும் இந்த மிகுதியாலன்றோ! இந்த மிகுதியின் ஆதாரத்தையும், அதன் பாழ்பட்ட செலவழிப்பையும் ஆராய்ந்தறிய வேண்டும்.

பண்டைக்கால முதல், செல்வம் உண்டாகும் வழிகளையும், அப்படி உண்டாகும் செல்வங்களுக்கு யார் உண்மையாக உரியவர்களென்பதையும், எவ்விதமான உலகச் செல்வத்திற்கு யாதொரு உரிமையும் இல்லாதவர்கள் உரிமையாளராக வர முடிந்ததென்பதையும், உலகச் செல்வங்கள் அனைத்தும் அனைவருடைய வாழ்விற்கும் பயன்படும் வகையில் பகிர்ந்து கொடுக்கப்படாமல், சிலரே தம் விருப்பப்படி செலவழித்து வந்ததையும் ஆராய்ந்துணராத குற்றத்தினால், மதங்கள் காட்டும் வழிகளும், நீதிநெறி மார்க்கங்களும், தத்துவ ஞானங்களும், அரசுகளின் ஏற்பாடுகளும், உலகம் படும் துன்பத்தை நீக்க முடியாமற் போயின.

உலகில் காணப்படும் செல்வங்களனைத்தும் மனித உழைப்பாலேயே உண்டானவையாகும். மனிதன் உழைப்புக் கலக்கப்பட்ட பிறகே பொருள்களெல்லாம் செல்வங்களாகின்றன. நிலத்தில் விளைவிக்கும் விளைபொருளும், சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்படும் உலோகமும், மலையைக் கல்லி எடுக்கும் மணிகளும் கடலில் குளித்தெடுக்கும் முத்தும், எல்லாம் உழைப்பின் பயனே. நிலமிருக்கலாம், நீரிருக்கலாம். இவையாவும் அந்த நிலையிலேயே செல்வங்களாகமாட்டா. பூமியிலே புதைந்து கிடக்கும் கோடானுகோடி விலை மதிப்புள்ள தாதுக்கள் செல்வமாகா. அவற்றைத் தோண்டி எடுத்துவந்து மனிதனுடைய உழைப்பால் பக்குவப்படுத்தப்பட்ட பின்னர்தான், அவை செல்வங்களாகின்றன. காடுகளில் ஏராளமாக மரங்களிருக்கலாம். அவையெல்லாம் செல்வமாகா. அவை மனிதனால் வெட்டப்பட்டு, கப்பலோ, கைவண்டியோ, வீடுகளோ, வாகனங்களோ, படங்களோ, பொம்மைகளோ, மாட்டுக்கொட்டிலோ, மகேஸ்வரன்ரதமோ, செய்யப்படுமேயாகில், அப்பொழுதுதான் அவை செல்வங்களாகும். இரும்பு மண்ணோடு கலந்து காணப்படும் ஒருவித உலோகம். இந்த இரும்பு மண்ணை வெட்டி எடுத்து, ஆணியாயினும், அச்சாயினும், தண்டவாளங்களாயினும் செய்யப்பட்ட பிறகே செல்வமாகும். மண்ணெண்ணெய், அல்லது நிலக்கரி இவை மண்ணில் புதைந்து கிடக்கின்ற வரையில் செல்வமல்ல. இந்த எண்ணெய்ச் சுரங்கங்களிலும் நிலக்கரிச் சுரங்கங்களிலும், மனிதன் உள்நுழைந்து, மண்ணெண்ணெய் நிலக்கரி, ஆகியவற்றை வெளியே கொண்டுவந்த பிறகே செல்வமாகின்றன. இவ்விதமாக எந்த இயற்கைப் பொருளாக இருந்தபோதிலும், உழைப்பவனுடைய கைபட்டமாத்திரத்தில் அவை செல்வங்களாக மதிக்கப்படுகின்றன. நிலமுமிருக்கலாம், நீருமிருக்கலாம், கால மழையும் பெய்து வரலாம். ஆனால், உழவன் உழுது, நீர் பாய்ச்சிக் காலத்தில் விதைத்துக் களை யெடுத்துப் பாதுகாத்து வந்தால்தான், விளைந்த கதிர் செல்வமாகும். உலகில் விளைந்த எவ்வித விளை பொருளாயினும், செய்த எவ்விதச் செய்பொருளாயினும், விளைந்த பிறகும், செய்த பிறகுமே செல்வங்களென மதிக்கப்படும். விளைவிப்பதற்கு முன்னாலும், செய்விப்பதற்கு முன்னாலும், உலகிலுள்ள எல்லா இயற்கைப் பொருள்களும் யாருக்கும் சொந்தமில்லை. மனிதனின் உழைப்பை அவை அணைத்துக் கொள்ளும்போதுதான், அவை செல்வங்களாக மாறுகின்றன.

உலக இயற்கைப் பொருள்களைத் தாங்கள் கைப்பற்றிக் கொண்டதாகக் கருதிச் சிலர், அரண் அமைத்தோ, எல்லை வகுத்தோ, வேலி போட்டோ, பட்டா செய்தோ வைத்துக் கொள்ளலாம்; சொந்தக்காரர் என்றும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அவ்வியற்கைப் பொருள்களை ஒரு தம்படிகூட வாங்கமாட்டார்கள். உழைப்பவன் உழுது பயிரிட்ட பிறகும், சுரங்கத்தில் புகுந்து உலோகத்தை வெளிப்படுத்திய பிறகும், மரங்களை வெட்டிக் கப்பலாகவும், வீடாகவும் அமைக்கப்பட்ட பிறகும் அவற்றுக்கு விலையும் மதிப்பும் ஏற்படுகின்றன. எல்லாவித விளை பொருள்களுக்கும், எல்லாவிதச் செய்பொருள்களுக்கும், மனிதனின் கைபட்ட பிறகே, அவற்றுக்கு விலை மதிப்பு ஏற்படுகின்றது - உண்மையில் எல்லாப் பொருள்களினுடைய விலை மதிப்பு மனித உழைப்பால் ஏற்படுகின்ற மனிதனின் வாழ்க்கை வசதிக்குத் தேவையான வகையில் செய்யப்பட்டும், விற்கப்பட்டும் வரும் சொத்துகள் யாவும், மனிதன் உழைப்பால் உண்டாகின்றன. ஆதலின் நாம் எந்தப் பொருளைப் பயன்படுத்தி வந்தபோதிலும், மனிதனுடைய உழைப்பைத்தான் பயன்படுத்தி வருகிறோம் என்பதாகும். பொருளின் விலைமதிப்பும், மனித உழைப்பும் ஒன்று. நாம் பொருள்களை விலை கொடுத்து வாங்கும்போது, உண்மையில் மனித உழைப்பைத்தான் வாங்குகின்றோம் என்று அர்த்தம். மனித உழைப்பே விலையாகும். ஆகவேதான் மனித உழைப்பை விலை என்கிறார் அறிஞர் காரல் மார்க்ஸ்.

இந்த விலை உண்மையில் யாரைச் சேரவேண்டும்? உழைப்பாளிகளையல்லவா! ஆனால், உழைப்பால் உண்டான விலை முழுமையும், உழைப்பாளிக்கு உதவாமற் போன குற்றத்தால், உலகில் உழைப்போர் வறுமைக்கும், இல்லாமைக்கும் ஆளாகி நிற்கின்றனர்.

அரசர்களும், அமைச்சர்களும், வணிகர்களும், புரோகிதர்களும், நிலச் சொந்தக்காரர்களும், பணக்காரர்களும் தோன்றுவதற்கு முன், ஒரு காலத்தில், நிலம், நீர், காடு, மலை, வெட்டவெளி, இரும்பு, வெள்ளி, பொன் ஆகிய யாவும் பொதுவாக இருந்தன. பறவைகள், ஆடுமாடுகள் போன்ற விலங்குகள், கோழி, மீன்கள், ஆகிய இனங்கள் முதலியன உணவுப் பொருள்களாக வேட்டையாடப்பட்டு, அவனவனுக்குக் கிடைத்த உணவை அவனவன் பயன்படுத்திவந்தான். மக்கட் சமுதாயம் பெருகவும், அரசர்களும், புரோகிதர்களும், மதவாதிகளும், மந்திரக்காரர்களும், தந்திரக்காரர்களும் தோன்றி, உழைப்பாளிகளை மூட நம்பிக்கை, குருட்டுப் பழக்கங்களிலாழ்த்தி, அந்தந்தக் கிராமத்தலைவனை கடவுளுக்கொப்பிட்டு அயல் கிராமங்களையும், அயல் நாட்டு ஆடு மாடுகளையும், அயல் நாட்டு மக்களையும், போரில் வென்று அடிமைகளாக்கி, நாடென்றும், நகரமென்றும் உண்டாக்கிக் கொண்ட பிறகே, அரசன் சொத்தென்றும், அமைச்சன் சொத்தென்றும், வணிகன் சொத்தென்றும் வேற்றுமைப்பட்டு, அவனவன் சொத்தென்ற தனி உடைமை உலகில் உருவாயிற்று. இந்தக் காலத்தில் நிலமும், நீரும் பொதுவாகவே கருதப்பட்டு யாவராலும் நுகரப்பட்டு வந்தன. மதக்கோட்பாடுகள் வலுக்க, வலுக்க, அரசனின் ஆதிக்கம் வலுக்க வலுக்க அயல் நாடுகள் கைப்பற்றப்பட்டன. தோற்ற நாட்டாரை வென்ற நாட்டினர் அடிமைகளாக்கினர். வெற்றியடைந்த நாட்டின் படைவீரர்கள், தோல்வியுற்ற நாடுகளையும், அடிமைகளையும் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு, தங்கள் தங்கள் பங்கிற்கு வந்த நிலங்களை, அந்த அடிமைகளைக் கொண்டு பயிரிட்டு, அதன் விளைவை அவரவர்கள் சொந்தமாகக் கவர்ந்துகொண்டு முழுப்பயனையும் தாமே நுகர்ந்து வரலாயினர். இவ்விதமாகத்தான் நிலத்திலும், நீரிலும், ஆடுமாடுகளிலும், ஆதியில் தனி உடைமை ஏற்பட்டது. இத்தகைய காரணங்களைக் கொண்டுதான், புர்தான் என்ற பேரறிஞர், ‘சொத்து என்பது கொள்ளையடிக்கப்பட்டதாகும்’ என்றார். இந்தக் கொள்ளைச் சொத்திலிருந்துதான், எல்லாத் தனிச் சொத்துகளும் பிறந்தன என அறியவேண்டும்.

இந்த ஆதி அடிமைத் தொழிலாளிகளிலிருந்துதான், தற்காலத் தொழிலாளிகள் உதித்தனர். அடிமைகளுக்கு அந்தக் காலத்தில் உழுது பயிரிடவும், ஆடு மாடுகளை மேய்க்கவும், மீன்களைப் பிடிக்கவும், மரங்களை வெட்டவும் கொடுத்து வந்த சொற்ப உணவே, தற்காலத் தொழிலாளர்கள் பெறும் கூலியாகும்.
கால நிகழ்ச்சியில் பெரும் பெரும் நகரங்கள் தோன்றலாயின. வாணிபம் வலுத்தது. ஏற்றுமதி இறக்குமதிகள் பெருகின. போக்குவரத்து விரிவடைந்தது. உலகம் இவற்றையெல்லாம் பெற்றபின், நாகரிகம் பெற்றதாயிற்று.

பழம்பெருங்காலத்தில் உண்டாக்கப்பட்ட பொருள்கள் மிகச் சிலவே. பிறகு நாகரிகம் வளர வளர வசதிகளும், தேவைகளும் பெருகின; பொருள்களும் அதற்கேற்றாற்போல் பலகோடி பல்லாயிரங்களாகப் பெருகின. ஆதிகாலத்தில் மக்கட் கூட்டம் குறைந்திருந்தபடியாலும், செய்யப்படும் பொருள்களும் மிகச் சொற்பமாகவே இருந்தபடியாலும், பண்டமாற்று என்ற முறை வழங்கி வந்தது. பொருள்கள் கோடிக்கணக்கில் பெருகி வளர்ந்து நின்ற நிலையில், பண்டம் மாற்றுதல் முடியா
மற் போய்விட்டது. ஆதலின், பொருள்கள் பகிர்ந்துகொள்ளப்படவேண்டியிருந்ததால், அந்தப் பொருள்களுக்கு விலைமதிப்பு ஏற்பட்டது. ஒரு பொருள் உருவாக்க ஆகும் நேரத்தை அளவாகக் கொண்டும், தொழிலின் திறமையைக் கொண்டும் அந்தந்தப் பொருள்களுக்கு விலையேற்பட்டது. இதுதான் நமக்கு வேண்டிய பொருள்களுக்கு நாம் கொடுத்துவாங்கும் விலையாகும். இந்த விலை, தொழிலாளர்களின் அந்தப் பொருளைச் செய்து முடிக்கப் பிடித்த நேரத்திற்கும், செய்து முடித்த திறமைக்கும் ஏற்பட்ட பரிசாகும். இதைத்தான் (சர்ப்பிளஸ் வால்யூ) அதாவது மேலும் உண்டாக்கப்படும் விலை மதிப்பு என்பார்கள். அதாவது நிலம், நீர் மற்றும் பல சொத்துகளுக்கு நாம் கொடுத்து வரும் விலை என அறிக.

இப்படியாக, இயற்கைப் பொருள்களை ஆதியில் கொள்ளையிட்டுக்கொண்ட காரணமாகத் தற்காலச் சொந்தக்காரர்களென்றும், உடையவர்களென்றும், உரிமையாளரென்றும் தாங்களே தங்களை உண்டாக்கிக்கொண்டனர். இந்த நிலங்களையும், நீர்களையும், மற்றும் பலவிதப் பொருள்களையும் விரும்பி உண்டாக்கியவர்கள், நாளடைவில் கூலித் தொழிலாளர்களென்றும், வேலைக்காரர்களென்றும், பண்ணையாட்கள் என்றும் அழைக்கப்படலாயினர். ஆதி அடிமைகளுக்கு, அவர்களால் செப்பனிடப்படும் பொருள்களுக்கு அந்த முதலாளிகள் விரும்பிக் கொடுத்த கூலியே அவர்கள் வேலைக்குச் சன்மானமாக ஏற்பட்டது.

இவ்வாறு பொருள்களின் உண்மையான உரிமையாளர்கள் உழைப்பாளிகளாக இருக்க, அவர்களின் உரிமை, கைத்திறனும் வாய்த்திறனுங் கொண்டவர்களால், பன்னெடுங்காலமாகக் கொத்திக்கொண்டு ஏப்பமிடப்பட்டு வந்திருக்கிறது. இன்று உலுத்தர்களுக்குச் சொந்தமாக்கப்பட்டிருக்கும் உலகு, அதற்கு உரியவர்களான உழைப்பாளிகளுக்குச் சொந்தமாக்கப்
பட வேண்டுமானால், உழைப்பாளிகள் ஒன்று திரண்டு எழுந்து யாவரையும் சக்திக்கேற்றபடி உழைக்கும் உழைப்பாளர்களாக்கி, யாவரும் தேவைக்கேற்ற வசதிகளைப் பெறும்படியாக நாட்டின் நிலையையும், உலகின் நிலையையுங் கொண்டுவரப் பாடுபடவேண்டும். அப்பொழுது உழைப்போர்க்கே உலகம் உரியது என்றாகிவிடும்!

1.5.1949