அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாலை சுருட்டிக் கொண்டு...

பரதா! ஒரு நல்ல கோல் வேண்டும்.

என்னிடம் எழுதுகோல் தானே வீரா, இருப்பத அதுவா தேவை.

அது ஏனப்பா எனக்கு? ஆடிக் கறக்கும் மாட்டை ஆடிக் கறப்போம், அடித்துக் கறக்க வேண்டிய மாட்டுக்கு அடிக்கத்தானே வேண்டும்.

வேண்டாமப்பா விபரீத யோசனை. கோல் கொண்டு யாரையும் தாக்கப் புறப்படாதே.

நான் கோல் கேட்டது, அதற்கல்ல, கோலாடக் குரங்காடும் என்பார்களே பழமொழி, அதன்படி கோல் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று எண்ணினேன்.

எங்கே, போக உத்தேசம்?

ஆனந்த விகடன் ஆபீசுக்கு!

விளையாடாதே வீரா! அங்கே என்ன வேலை? கோல் ஏன்? ஒரு ஆசிரியரிடம் எப்படி நடந்து கொள்வது என்பது கூடத் தெரிய வில்லையா உனக்கு.

ஆசிரியரிடமல்ல பரதா, நான் போய்ப் பேசப் போவது, ஆனந்த விகடன் ஆசிரியர் ராஜீய நிருபராக ஒரு குரங்கைத்தானே. வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார். அதைப் போய் காண வேண்டும். கையிலே கோலிருந்தால் குரங்கு சொன்னபடி ஆடும். அதற்கே, கோல் கேட்டேன்.
அடடா! அந்த ராஜீய நிருபரிடம் போக, கோல் வேண்டாமப்பா. இரண்டொரு வாழைப் பழத் தோல் இருந்தால் போதும். அதை வீசினால், சொன்னபடி கேட்கும், கிடக்கட்டும். அந்த வாலரிடம் ஏன் வம்பு! உன்னை என்ன செய்தது?

என்னை என்ன செய்யும்? குரங்கின் சேட்டை தெரியாதா! உயர உட்கார்ந்து கொண்டு `உர் உர்’ என்னும், இளிக்கும், கீச்செனக் கத்தும்,....

சாதாரணக் குரங்கு இவை செய்யும். ஆனந்த விகடனின் ராஜீய நிருபர், செய்தது என்ன?

ராஜீயம் என்றால், ஆனந்தவிகடன் கொண்டுள்ள வந்தது எப்படி இருக்கிறதென்பது, ராஜீய விஷய செய்திகளைச் சேகரிக்க, வரும் குரங்கை நிருபர் எனக் கொண்டிருப்பதைப் பற்றிப் பெருமையுடன், பூரிப்புடன், சித்திரந் தீட்டியும் காட்டுகிறாரே, அதிலிருந்தே தெரிகிறது பார். குரங்கு சேட்டைக்குப் பேர் போனது! திருட்டுக்கும் ராஜா! தாவிக் குதிக்கும். தடி கண்டால் ஓடும்! பிடிபட்டால், ஆட்டி வைக்கிற படி ஆடும். குரங்குக் குணம் என்பதே ஏளன மொழி! குரங்கு எனக்கு ராஜீய நிருபராக இருக்கிறார் என்று ஒரு ஆசிரியர், தமது பத்திரிகையிலே படம் போட்டுக் காட்டுகிறாரே, இதன் ஆபாசம் அவருக்குத் தெரியவில்லையா?

தெரியாதா! அது தவறென அவர் கருத வில்லை. அவர்களின் பரம்பரையே கருதாது. ஏன்? ஆரிய இராமனுக்கு அனுமார் தானே தூதன், தோழன், படைத் தலைவன், அதுபோல் ஆனந்தவிகடனுக்கு இருப்பதிலே தப்பில்லை.

உண்மைதான், பரதா!ஆனால், அந்தக் குரங்கு கூறுவதை ராஜீயம் என்று தமிழர்கள் படிக்க வேண்டுமோ! அதற்காகத்தான், கோல் கொடு, போய்க் கேட்கிறேன் அந்தக் குரங்கை, என்று உன்னிடம் வந்தேன்...

வீரனுக்கும், எனக்கும் நடந்த உரையாடல் மேலே நான் தந்தது. நான் கோல் தரவுமில்லை, வீரன் வாழைப் பழத் தோலுடன், விகடனாலயம் செல்லவுமில்லை, ஆனந்த விகடனிலே, அரசியல் உலகம் என்ற பகுதியிலே, ராஜீய நிருபர் சரடு என்ற கட்டுரை, தமிழ்த் தலைவர் களைத் தாக்கவும், நையாண்டி செய்யவும், நிந்திக்கவும், பலமுறை பயன்படுவதுண்டு. சென்ற இதழிலே, சர். முகம்து உஸ்மான் மீது பாய்ந்தது, குரங்கு! பேட்டி கண்டாராம், அந்த நிருபர்! சர் உஸ்மானிடம் பேசினதில், அவருக்குப் பதவி மீது உள்ள மோகம் நன்கு தெரிந்து விட்டது போலும். அதை ராஜீய நிருபர், ஆரியரசத்தைக் கலந்து, அளிக்கிறார். அதைக் கண்டே, வீரன் வெகுண்டான்.

ராஜீய நிருபர், சர். முகமது உஸ்மானிடம் போய் பின்னால் நின்றாராம்! முன்னால் வர, பயம் போலும்!! பின்னால் நின்றுகாண்டு, ``சலாம் வருகிறது’’ என்றாராம்.

சர், உஸ்மான், யார் என்றாராம். ``கொஞ்சம் பின் பக்கம் திரும்பிப் பாருங்கள்’’ என்று விகடனின் குரங்கு கூறியதாம்!

``முடியாது! முன்னால் வா!’’ என்றாராம் சர். முகம்மது!

ஆமாம்! வருகிற வக்கிரம், முன்னாலே வருவது தானே! பின்னாலே நின்றால், இதைச் சட்டை செய்து கொண்டு, திரும்பிப் பார்த்து திருஷ்டிக் கழிக்கவா, முன் வருவார்! பார்க் வந்தது சர். முகம்மது உஸ்மானின் முகத்தைத் தானே! அவருக்குப் பின்புறம் நின்றால், முகமா தெரியும் குரங்காருக்கு! ஆகவேதான் போலும் முகமது, ``வா, முன்பக்கம்’’ என்று அழைத்தார்.

டாக்டர் முகர்ஜியின் முயற்சி பலித்து, புதிய நிர்வாக சபை அமைக்கப்பட்டு விட்டால், புது சபைப் பதவியும் போய், பழைய வைஸ்சான்ச லரும் போய் நடு ஆற்றில் கைவிடப்பட்டது போல் தவிப்பதா என்று சர். உஸ்மான் கூறினாராம்.

குரங்குக்குக் கவனம் வேறிடத்திலே பாய்ந்திருக்க வேண்டும், அதனால்தான், சர். உஸ்மான் இவ்விதஞ் சொன்னார் என்று கூறுகிறது. சர். உஸ்மான் போன்றவர்களை, உத்யோகங்கள் வேட்டையாடுகின்றன, ராஜீய நிருபராக உள்ள குரங்கனாரின் எஜமானர் கூட்டமோ உத்யோகத்தை வேட்டையாடி அலுத்து, மேல் மூச்சு வாங்கிக் கிடக்கிறது. ``இருந்த பிரதம மந்தி வேலையும் போச்சு! வைசிராய் நிர்வாக சபையிலே இடங்கிடைக்கும் என்ற ஆசையிலும் மண் விழலாச்சு, இரண்டுங் கெட்டு, மாம்பலத்திலே கிடக்கலாச்சு’’ என்று ஆச்சாரியார் அழுகிறார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்! சர். உஸ்மான் ஏன் ஏங்கப் போகிறார்! மாகாண கவர்னர் பதவி வரையிலே, அவருடைய மடியிலே தவழ்ந்தது. பதவிக்காக வேண்டி அவர் பார் வேட்டைக்குப் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தமில்லை. ஆரியத் தலைவர்கள் இன்று அந்த அவசியத்திலே இருக்கிறார்கள்!

என் நண்பர் ஒருவர், சிறு பிராயத்திலே, பாட்டியிடம் பணம் பறிக்க, தந்திரம் ஒன்று செய்வதுண்டு. பணம் கேட்பார். இல்லை என்றால், உடனே `இதோ பார் கிணற்றிலே விழுந்து உயிரை விடுகிறேன்’ என்று கூறிக் கொண்டே, புறக் கடைப் பக்கம் போவார். ஒரே பேரப் பிள்ளை, செல்லம். ஆகவே பாட்டி, ``வேண்டாமடா கண்ணா, பொன்னா’ என்று கெஞ்சுவார்கள். என் நண்பன், தன் தந்திரம் பலிக்கிறது என்று கண்டதும், கிணற்றிலே, இறங்கவே ஆரம்பிப்ப துண்டு, சர்வ ஜாக்கிரதையுடன் கெட்டியாகக் காலைக் கிணற்றுப் படிக்கட்டுகளில் ஊன்றிக் கொண்டு! ஒரு படி இறங்கினால், பத்து தண்ணீரிலேயே போய் நின்றால், கேட்கிற அளவு! உயிரை விட்டு விடுவேன் என்று பயமுறுத்தி னால், பணந் தரப் பாட்டி இருந்ததால் இது முடிந்தது.

அந்த என் நண்பர் போல், ஆரியத் தலைவர்கள், பிரிட்டிஷ் பாட்டியிடம் பதவி பெற, இதோ கிணற்றிலே விழுகிறேன் என்று என் நண்பர் பால பருவத்திலே மிரட்டினாரே அதுபோல, ``இதோ சத்யாகிரகம். இதோ பஹிஷ்காரம், இதோ சிறைவாசம்’’ என்று ஒவ்வாரு படிக்கட்டாக இறங்கி இறங்கி, பதவி கேட்டுப் பார்க்கின்றனர். பிரிட்டிஷ் பாட்டி, என் நண்பனுக்கு இருந்த அம்மையைப் போல், பேரனின் நெஞ்சாழமும் கிணற்றின் நீராழமும் தெரியாத பெயர் வழியல்ல! எனவே, கிணற்றிலே இறங்கினால், நீந்தப் பழகலாம், அல்லது நீர் நோய் பெறலாம், என்று பிரிட்டிஷ் பாட்டி கூறிடக் காண்கிறோம்.

எனவே ஆரியத் தலைவர்கள், அழ வேண்டுமேயொழிய, சர். உஸ்மான் அழ வேண் டிய அவசியமே இல்லை. வைசிராய் நிர்வாக சபை, மாகாண சபைகள் யாவுமே ஆரியத் தலைவர்கள் மயமாகிவிட்டது என்றே வைத்துக் கொண்டாலும் அதுபோதும் சர். முகமது போன்றவர்களுக்கு அந்த நிலை வரும்போது, சர். முகம்மதுகளுக்கு, கவர்னர், வைசிராய், முதலிய பீடங்கள் அமர்ந்திருந்து ``ஆரியரே! ஆட்சிசி செய்யும் முறை தவறாது நடமின்!’’ என்று கூறிடும் நிலைமை வரும் காட்சியைக் காண்போம். எனவே, ஆனந்த விகடனின் அரசியல் நிருபர், அழுகுரல் சர். முகம்மதுவிடம் கிளம்பியதாகச் சரடு விடுவது பொருளற்றது என்பேன்.

வேறு பல பேசிவிட்டு, விகடனிடம், வேலைக்கு அமர்ந்துள்ள குரங்கர், ஆபிசுக்கு வருகிறார்.

சர். முகம்மது உஸ்மானைக் கண்டு பேசி, கிண்டல் மொழிந்து வந்ததன் பலன் என்ன வென்று எண்ணுகிறீர்கள். ``வாலை என்னால் ஆட்ட முடியவில்லை. வாலைச் சுருட்டிக் கொண்டு, உட்கார்ந்திருந்தேன்’’ என்று கூறுகிறது, ராஜீய நிருபராக உள்ள குரங்கு.

ஆனந்தவிகடனின் ராஜிய நிருபரின் இந்தச் செய்தி பாடப் புத்தகத்திலே சேர்க்கப் பட்டு, ஆரிய நிருபர்களுக்குத் தரப்பட வேண்டும் என்று ஒரு யோசனை கூறுகிறேன், அவசிய முள்ளோர் அவசரமாகக் கவனிக்க வேண்டு கிறேன்.

சர். முகமது போன்றோரிடம், ஆரிய நிருபர்கள், சென்று கிண்டல் பேசினால், `வாலைச் சுருட்டிக் கொண்டு, வாலை அசைக்க முடியாமல், வாலில் வலி தாங்க முடியாமல்’ கஷ்டப்பட வேண்டித்தான் நேரிடும்! சில வேளைகளிலே வால் நொறுக்கப்பட்டும் விடும்!! ஆ.வி.னின், ராஜீய நிருபரின் வாலில் வலி ஏற்பட்டதன் காரணம், சர். உஸ்மான், பேசிக் கொண்டிருக்கை யில், அதன் வாலின் மீது உட்கார்ந்து கொண்டிருந் தாராம், அதனால்தான் வலி தாங்க முடியவில்லை யாம்.
அந்த நிருபரோ, சிறிய உருவம்! சர். முகமது கெம்பீரன்! எனவே, அவருடைய கால் மட்டுமே வாலின் மீது இருந்திருக்குமென்று நான் எண்ணு கிறேன். முழு உஸ்மான் உட்கார்ந்திருந்தால், நிருபரின் வாலைத் தரையிலிருந்து பிறகு, வழித்து எடுக்க வேண்டும், கூழாகிவிட்டிருக்கும். சர். முகமதுவின் காலடியிலேதான், ராஜீய நிருபரின் வால் சிக்கியிருக்கும்! வலிக்குக் காரணம் அதுதான்! உண்மையிலேயே, சர் முகம்மது போன்றாரிடம் வாலை நீட்டினால் இத்தகைய வலி தான் வரும்.

இனியேனும், அந்த நிருபர், வாலைச் சுருட்டிக் கொண்டு, தமது வாழ்க்கையை நடத்தி வந்தால், வாலுக்கு வலி வராது இருக்கும். அதன் வாலிடம் அதற்கல்லவா அக்கரை இருக்க வேண்டும், நமக்கென்ன!

இவ்விதம் வால் சுருட்டிக் கொள்வதும், வாயை அடக்கிக் கொள்வதும், ஆரியத் தலைவர் களுக்கே அடிக்கடி ஏற்பட்டு விடுகிறது. தலைவர்கள் கதியே அதுவெனில், வாலர்கள் கதியைக் கூறவும் வேண்டுமா?

எங்கள் காந்தியார் அஹிம்சாமூர்த்தி, அவரடியார்களாகிய நாங்கள் அஹிம்சை யையே மூச்சாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றார்கள் முன்னம். ``உங்கள் நோக்கம், அஹிம்சையாக இருக்கலாம். திட்டங்கூட அதுவாக இருக்கலாம், ஆனால் விளைவு, இம்சையாகத்தான் முடியும்!’’ என்று விவேகிகள் சொன்னபோது, கேட்க மறுத்தனர். இன்று நாட்டிலே காந்தீயம், எவ்வளவு இம்சைக்கு இடமுண்டாக்கி விட்டதெனப்தைக் கண்டபிறகு, வாய் அடைக்காமல், என்ன செய்வார் ஆளுந்திறன், ஆறு காத தூரம் வரை அகோரக் கூச்சலிடச் கற்றுக் கொண்டதால், ஏற்பட்டு விடாது. அதற்கு அறிவாற்றல் வேண்டும், அத்தகைய அறிவாற்றலை பெற்றவர்களை, அழுத்தமுற்பட்டால் நடவாது. அவர்களின் உயர்வை, ஏற்றத்தைத் தடுக்க முடியாது என்று எத்தனையோ முறை விஷயம் தெரிந்தவர்கள் எடுத்துரைத்தனர்.

(திராவிட நாடு - 20.9.1942)