அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாலாஜா தி.மு.க. தோழர்களுக்கு!

மானங்காத்த மாவீரர்காள்!

தலை நிமிர்ந்து நடந்தேன் – நோய்கூட ஓய்வு எடுத்துக் கொண்டது – கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டு அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுண்டு கொள்கையை இழந்து விடாமல், உறுதி எவர் உள்ளத்திலும் பாராட்டுதலைக் கிளறும் விதமாகக் கொண்டு, திராவிடம் களிக்கவும், அத்திரு நாட்டின் மீது தீரா விடத்தைக் கக்கும் திருப்பணி புரிந்துவரும் தீய நோக்கினர் கலங்கவும், அறத்தினை ஓம்புவோர் மகிழவும், அதனை மறந்தோர் மருளவும், அரசியல் வட்டாரங்கள் ஆச்சரியப்படவும், அரசியலைத் தமக்குச் சுயநல வட்டாரமாக்கிக் கொள்ளும் சூதுமதியினர் வேதனைப்படவும், அன்று நீங்கள், அறப்போர்க்களத்திலே ஆண்மையுடன் நின்று வென்ற செய்தி கேட்டேன் – தலை நிமிர்ந்து நடந்தேன்.

அன்று ‘கருப்புக் கொடி‘ காட்டிய செயலைத்தான் குறிப்பிடுகிறேன்.

மந்திரி மாணிக்கவேலர் – நமது நண்பர், அவருடைய வெற்றியை தமது வெற்றியாகக் கருதினோம் – களித்தோம். அவருடைய வெற்றிக்காக அரும்பாடுபட்டோம் – அதனைப் பெருமையாகக் கொண்டோம் நாம், இரும்புப் பெட்டிக்காரர்களல்ல – நல்ல இதயம் கொண்டவர்கள் – எனவே அவருக்காகப் பாடுபட்டு, பலன் கிடைத்ததும், அவர் சென்னை சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பூரிப்படைந்தோம் – மார்தட்டி நின்றோம். அரசியல் மாற்றுக் கட்சிக்காரர்களைக் கண்டு, முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதி காணீர்! உழைப்பாளிச் சமூகத்தின் தலைவருக்குக் கிடைத்த வெற்றியினைக் காணீர்! மாணிக்கவேலரின் மகத்தான வெற்றியினைக் காணீர்! - என்று சிந்து பாடினோம். இந்த ‘ஆனந்தக் களிப்புக்காக‘ சந்துமுனைச் சச்சரவினர், கனைத்துக் கலகம் விளைவிப்போர், கல்வீசிச் சொல்லை மறைக்க முயல்வோர் எனும், பல திறத்தினரின், எதிர்ப்புகளை, ஏளனங்களை, ஏசலைத் தாங்கிக் கொண்டோம் – உழைத்தோம் – அவர் வெற்றி அடைந்ததும், உள்ளம் மகிழ்ந்தோம் – ஊராருக்கும் உரைத்தோம்.

அவருக்குக் கருப்புக் கொடி காட்டித் தீரவேண்டிய நிலை பிறந்ததும் – அதை எண்ணும்போது, உண்மையாகவே வருந்துகிறேன். என் செய்வது, நாம், தொடர்ந்து மகிழ்ச்சியைப் பெறுவதைத் தடுக்க, களிப்பைக் கருகிய மொட்டு ஆக்குவதற்காக, ‘சாணக்கியாஸ்திரம்‘ கிளம்பிற்று – இதோ, யாருடைய வெற்றிக்காக நாம் உழைத்தோமோ, யாருடைய வெற்றியைக் கேட்டுக் களித்தோமோ, யாருடைய பெயர் செந்தேன் போல இனிப்பு அளித்ததோ, அவருக்கு, நாம் கருப்புக் கொடிக் காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது – ஒரு தந்திரக்காரரின் போக்குக்கு, நாடு, இடம் கொடுத்து விட்டக் காரணத்தால்

மாணிக்கவேலர் எம்.எல்.ஏ. ஆனார் – மகிழ்ந்தோம்
மாணிக்கவேலர் மந்திரி ஆக்கப்பட்டார் – மருண்டோம்
மாணிக்கவேலருக்கு ‘வெற்றி மாலை‘ சூட்டி மகிழ்ந்தோம்.

மந்திரி மாணிக்கவேலருக்குக் கருப்புக் கொடி காட்டும், வேதனையை நாம் அடைந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டது. அரசியலிலே ஒரு ஆபத்தான மனிதர் நுழைந்து நடாத்திய திருவிளையாடலால்!

எவருக்காக, பட்டி தொட்டிகளிலே எல்லாம் சென்று, பரணி பாடினோமோ, அவருடைய அறிவையும் ஆற்றலையும் எதிர்க்கட்சியினரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தோமோ, எவருடைய முகத்திலே வெற்றிக்களை தெரிவதற்காக நமது. முகத்திலே வியர்வையைப் பொழிய வைத்துக் கொண்டோமோ, அவருக்கு, நமது நண்பருக்கு, நமது உழைப்பைக் காணிக்கையாகப் பெற்று ஊராளும் மன்ற உறுப்பினராகக்கப்பட்டவருக்கு, எந்தக் கரங்கள், மாணிக்கவேலருக்கு ஓட்டுஅளியுங்கள்! மாட்டுப் பெட்டியிலே மண் போடுங்கள்! - என்று தட்டிகளைத் தூக்கினவோ, அதே கரங்கள் – எந்தக் கரங்கள் அவருக்கு நமது அன்பைத் தெரிவிப்பதற்கு அறிகுறியாக மலர் மாலைகளைச் சூட்டினவோ அதே கரங்கள், கருப்புக் கொடிகளை ஏந்தின! வருக! வருக! - என்று வாழ்த்தினோம், உள்ளன்போடு – முகமலர்ச்சியுடன் – திரும்பிப்போ! திரும்பிப்போ! - என்று முழக்கமிட வேண்டிய வந்தது. தாங்கமுடியாத வேதனையைத் தாங்கிக்கொண்டு! மாணிக்கவேலர் மந்திரி ஆக்கப்பட்டார் – நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார்! கண்டெடுத்த தங்கத்தைக் கருப்புக் கண்ணாடியார் தட்டிப் பறித்துக் கொண்டார்! ஏழை எளியவருக்ககாகச் சீறிப் போரிடும் சிங்கம் என்பதால் சித்தம் களித்தோம். அந்தச் சிங்கத்தைப் பதவிக் கூண்டிலேபோட்டு அடைத்துவிட்டார், பார்ப்பனீயத்தின் கடைசி பாதுகாவலர்! மாணிக்கவேலர் கிடைத்தார் நமக்கு – குணத்திலே, தரத்திலே மாணிக்கம் என்று மகிழ்ந்தோம் – திராவிடத்தின் எதிரிகளைத் தாக்கும் ‘வேலர்‘ என்ற களித்தோம், மாணிக்கவேலரை மாம்பலத்தார் அபகரித்துக் கொண்டார் – மலர்ந்த முகம் – நமக்குக் கிடைத்த பரிசு, தேர்தலின்போது ஆயிரம் தொல்லைகளைத்தாங்கிக் கொண்ட நமக்கு – அந்த மலர்ந்த முகத்தின் பொலிவுகண்டு பொறுக்கவில், போலி வேதாந்திக்கு, நமது கண்களிலே வேல்கொண்டு குத்தி, வேதனையை மூட்டி விட்டார், ஆச்சாரியார். நம்மைக் கொண்டே, நமது மாணிக்கவேலருக்குக் கருப்புக் கொடி காட்டச் சய்துவிட்டார்! ஒருகல், இரண்டுபழம், என்பார்கள் – இது, அது அல்ல – ஒரு செயல், அதன் விளைவாக, எத்துணையோ வேதனை திராவிடக் குடும்பத்திலே இருந்து ஒரு தீரரைச் சிறைபிடித்துக் கொண்டு சென்று விட்டார் – குடும்பத்துக்கு நஷ்டம் – கஷ்டம் – அவருக்கோ, மிக்க மகிழ்ச்சி – மாணிக்கவேலரை, அவருடைய நண்பர்களிடமிருந்து, ஆதரவாளர்களிடமிருந்து பிரித்து விட்டேன் – குடும்பப் பாசத்தைக் குலைத்துவிட்டேன் – அதிகம் செலவுகூட இல்லை – ஒரே ஒரு மந்திரி வேலையை வீசினேன் – குடும்பம் சீர்குலைந்து கிடக்கிறது – தேர்தலின்போது குலவினார்களே, அவர்கள் இன்று குமுறுகிறார்கள் காணீர் என்று கூறாமற் கூறி நம்மைக் குத்துகிறார், குல்லூகப்பட்டார்.

“இந்த மாணிக்கவேலர்கள் எல்லாம் ஏன் காங்கிரஸ் மகாசபையை எதிர்க்கிறார்கள் தெரியுமா – பதவி மோகம்! இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? பட்டம் பதவி கிடைத்த பக்கம் பல்லிளித்துச் செல்பவர்கள்! இவர்களை எல்லாம் எமது தேசிய மகாசபை மட்டந்தட்டி வைத்திருந்தது – அந்தக் கோபம், வயற்றெறிச்சல், பதவி ஆசை, காரணமாகத் தான் இந்த மாணிக்கவேலர்கள், காங்கிரசை எதிர்த்துத் தேர்தலிலே நிற்கிறார்கள்“

சொன்னார்களே, நமது காதுகளில் நாராசத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருந்ததல்லவா, இந்தச் சொற்கள் – தேர்தலின் போது, காங்கிரஸ் பிரசாரகர்கள் பேசியபோது.

எத்துணை வீரத்துடன் – வீரம் கூடக்கிடக்கட்டும் – எத்துணை நம்பிக்கையுடன் நாம், மார்தட்டிக் கூறினோம் மேடை அதிரும்வண்ணம், “எமது மாணிக்கவேலருக்கா பதவி மோகம்! பித்தனே! பேசாதே அதுபோல்! அவருடைய அறிவும் ஆற்றலும் அறியாததால், ஏதேதோ ஏசிப்பேசுகிறாய், அவர் நாடு வாழவும் கேடு வீழவும், ஏழை வளமாகவும் எத்தர் தொலையவும், பாடுபடும் அறப்போர் வீரர் – பதவிக்காகப் பல்லை இளிப்பவர் அல்ல“ – என்று எத்தனை எத்தனை முறை கூறினோம் – அப்பதிலுரைகள் ஒவ்வொன்றும் படமெடுத்தாடும் பாம்பாகி வந்தல்லவா, நமது இதயத்தைக் கடிக்கின்றன இன்று – நம்மை மறந்து, நமது குடும்பத்தின் நலனை மறந்து, ஆச்சாரியாரின் முகாமுக்குள் நமது மாணிக்கவேலர் இழுத்துக் கொள்ளப்பட்டார் என்று செய்தி வந்ததும், எவ்வளவு வேதனை! எத்துணை வெட்கம்! இதுவா மாணிக்க வேலரிடம் நாம் எதிர்பார்த்த பரிசு! இதுவா நமது நேசத்தின் விளைவு!

எவ்வளவு ஏளனப் பார்வையுடன் காங்கிரசார், கண்டனர், மந்திரி கும்பலின் படத்தைப் பத்திரிகைகள் வெளியிட்டதை! எத்தனைவிதமான கேலிப்பேச்சு, மாணிக்கவேலர், “கனமானது‘து பற்றி நாம் எதிர்பார்த்தது என்ன – வெற்றிக்குப் பிறகு! ஆச்சாரியார் ஆனந்தமாக அமர்ந்திருக்க, அவர் பக்கத்திலே வடநாட்டுக் காங்கிரஸ்காரர் கவர்னராகக் கொலுவீற்றிருக்க, பின்புறத்தில், மாவீரர் மாணிக்கவேலர், நின்ற திருக்கோலத்தில் காட்சிதரும் படம் வெளிவந்ததே அந்தப்படம், சரித்திலே உள்ள சோகச் சித்திரமான கங்குபட்டரிடம் சிவாஜி பணிந்திடும் காட்சியை அல்லவா நினைவிற்குக் கொண்டு வந்தது – கண்களிலே நீரும், நெஞ்சிலே நெருப்பும் மூண்டதே. ஆஹா! எவ்வளவு சுலபமாக, வேதனையை மூட்டிவிட்டார் ஆச்சாரியார், அதே மாணிக்கவேலரைக் கொண்டு! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாமே – உண்மையாகத்தானே போயிற்று – இதோ மாலைக்காக நம்முன் மகிழ்ச்சியுடன் நின்ற மாணிக்கவேலருக்கு, கருப்புக் கொடி காட்டவைத்துவிட்டாரே, ஆச்சாரியார், பத்தோடு பதினொன்று என்ற முறையிலே மாணிக்கவேலரைப் பதவியில் அமரச் செய்து! மாணிக்கவேலருக்கும் நமக்கும் எவ்வளவு மகிழ்ச்சிகரமான ‘நேசம்‘ உருவாயிற்று சுதந்தரமாக ஊர்ந்து செல்லும் தோணியைக் கவிழ்த்து விடும் சுறாபோலக் கிளம்பினாரே, சுந்தரகாண்ட பாராயணப் பிரியரான ஆச்சாரியார், நேசத்தை நாசமாக்கிவிட்டாரே! மாணிக்க வேலருக்கும் நமக்கும் இடையிலே மனமாச்சரிய மடுவை வெட்டி விட்டாரே! இதை எண்ணும்போது, உள்ளம் வேதனைப்படுவது மட்டுமல்ல, வெட்கம் பீறிட்டு வருவதுமட்டுமல்ல, எவ்வளவு ஆபத்தான மனிதர் ஆட்சிப்பீடம் ஏறி இருக்கிறார் என்பது புரிகிறதே, அச்சம்கூடக் கிளம்புகிறதே! நினைத்தாலே நெஞ்சு நோகும் நிலை அல்லவா! மாணிக்கவேலர் யார்? நாம் யார்? எப்படிப்பட்ட ‘நேசம்‘ மலர்ந்தது – எவ்வளவு இலோசக அதனை நாசமாக்கிவிட்டார் ஆச்சாரியார், நண்பர் மாணிக்கவேலரைக் ‘கனமாக்கி‘ தோடோ தொங்கட்டமோ செய்து, குழந்தைக்குப் போட்டு மகிழலாம் என்று பூரிப்பான வைரத்தை வாங்கிவரும் சீமானுக்கு அதே வைரத்தைப் பொடியாக்கித் தீயவன் ஒருவன், உள்ளுக்குக் கொடுத்துவிட்டால் – என்ன ஆகும்! மாணிக்கவேலரின் வெற்றி, வைரம்போல், ஒளிவிட்டது! திராவிடம் களித்தது! ஆச்சாரியார் அந்த வெற்றி வைரத்தைத் தூளாக்கித் திராவிடத்துக்குத் தருகிறாரே, என்னென்பது! இவ்வளவும் செய்துவிட்ட ஆச்சாரியார், இகத்தைவிடப் பரமே மேல் என்று பேசிக்கொண்டு பவனி வருகிறார், இங்கே நாமோ, வேதனையில் தள்ளப்படுகிறோம்.

“என்னமோ, இந்தப்பயல்களெல்லாம் ஓடி ஆடிப்பாடுகின்றனர். ஓங்காரக் கூச்சலிட்டு ஆங்காரப் பேச்சுப் பேசி அலைந்து திரிகின்றனர், மாணிக்க வேலருக்காக – கடைசியில், அவர், ‘இதுகளைச் சட்டை செய்யப்போவதில்லை. எங்கே பதவி கிடைக்கிறதோ அந்தப் பக்கம் பாய்வார், இதுகளின் முகத்திலே கரிபூசப் போகிறார், பார் பார்!“ என்று காங்கிரசார் சிலர் பேசியபோது, எரிச்சலாக இருந்தது – இன்று அதை எண்ணிக் கொண்டாலே வேதனையாக இருக்கிறது.

நம்மை எல்லாம் இவ்வளவு வேதனைக்கு ஆளாக்கினாலும் பரவாயில்லை ஒரு மந்திரி வேலை கிடைத்தால் போதும் என்று எண்ண வேண்டிய நிலையா, மாணிக்க வேலருக்கு! இல்லையே!! அறிவாற்றல் உள்ளவர் – அனுபவம் உள்ளவர் – இன்றைய மந்திரிகளிலே பலர் அரசியல் அரிச்சுவடி படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, மந்திரி சபையிலே பார்லிமெண்டரி ‘செகரட்ரி‘யாக இருந்தவர் – பஞ்சத்தில் அடிபட்டவரல்ல! பதவிப்பசி எடுத்துத் தீரவேண்டிய அளவு அலைச்சல் பட்டவருமல்ல! எனினும் நம்மை வேதனையிலாழ்த்திவிட்டு, மந்திரியானார் – ஏன் – என்ன காரணம்? காரணம் தெரியவில்லையா, என்று கேட்கிறார், ‘கண்ணன் காட்டிய வழி‘ ஆசிரியாராம் ஆச்சாரியார்! ‘என்ன பொடி போட்டாரோ‘ என்பார்களே ஊரில் இதுபோல, என்ன சொன்னாரோ ஆச்சாரியார் கவிழ்த்தே விட்டார், மாணிக்கவேலரை!

ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது, ஆள்தான் இறந்துவிட்டான் – என்பதுபோல! காங்கிரசை முறியடித்தார் மாணிக்கவேலர், ஆனால் காங்கிரஸ் மந்திரி சபையிலே அவரும் ஒரு மந்திரியானார், என்றல்லவா ஆகிவிட்டது. வடாற்காடு மாவட்ட முழுவதையும் அடக்கி, மடக்கிவிட்டேன், அங்கு, நமக்கு அருமையான ‘வக்கீல்‘, கிடைத்துவிட்டார், பீசும் சாதாரணந்தான், மாதம் இரண்டாயிரத்துக்கு மேலாகாது, என்றல்லவா, ஆச்சாரியார் எண்ணுவார்!

அவா இரண்டுபேரும் சேர்ந்துண்டு, ஒரே அமர்க்களப்படுத்தினா, வடாற்காடிலே,இப்போ அவாளுக்குள்ளே, ‘சிண்டு‘ முடிந்தாச்சி, பார் வேடிக்கையை எலக்ஷனிலே, மாணிக்க வேலரும் அவரோட நண்பர்களும் நம்ம காங்கிரசுக்குக் தொல்லை கொடுத்தாளேன்னோ, இனி பார், அவாளுக்குள்ளாகவே வாக்குவாதம் கிளம்பும், நம்ம காங்கிரசுக்கு நல்ல சான்சு!! - என்றல்லவா ஆச்சாரியார் களிப்படைவார்!

இவைகளை எல்லாம் எண்ணி எண்ணி ஏக்கம் கொண்ட இலட்சியவாதிகள்தான், நண்பரானாலும நம்மவரானாலும் அறிவாற்றலுள்ளவரானாலும், நம்மை மறந்து நம்மைத் துச்சமென மதித்து, பொதுமக்கள் நம்மைக் கேவலமாகக் கருதும் விதமாக,எதிரி முகாமில் இடம்பிடித்துக் கொண்ட மாணிக்கவேலரை, நாங்கள் கண்டித்தே தீருவோம். எமது வெறுப்பைக் காட்டியே தீருவோம் அவ்விதம் செய்தால் மட்டுமே, எமது ‘மானம்‘ தப்பிப் பிழைக்கும் நாட்டிலே ஜனநாயகம் தழைக்கும், பொதுவாழ்விலே தூய்மை நிலைக்கும், கொள்கைக்கு ஊறு ஏற்படாமல் இருக்கும், அறநெறி தெளிவாகும் என்று எண்ணிய இளைஞர்கள்தான், அன்று கருப்புக்கொடி காட்டி, தங்கள், கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.

கருப்புக் கொடி மாணிக்கவேலர் முன்னிலையில் காட்டப்பட்டது, என்றாலும், அது ஆச்சாரியாருக்கு நாம் அளிக்கும் கண்டனமே ஆகும். ஆச்சாரியாரே! எமது அன்பரும் நண்பருமான மாணிக்கவேலரை எம்மிடமிருந்து பிரித்துவிட்டீர்! உமது சூது எமக்குத் தெரியும்! அதை அம்பலப்படுத்துவது இந்த கருப்புக் கொடிதான்! மாணிக்கவேலரை மந்திரியாக்கிவிட்டால், காங்கிரஸ் எதிர்ப்பாளர்களை, திராவிடர்களை, மயக்கிவிட்டதாக எண்ண வேண்டாம்! ஆவர்த் தீ, கொழுந்துவிட்டு எரிந்தவண்ணம் இருக்கிறது. உம்முடன் சேர்ந்ததால் மாணிக்கவேலருக்கு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் – என்று அன்று பறந்த நூற்றுக்கணக்கான கருப்புக் கொடிகள் கூறின!

ஆச்சாரியார் போட்டிருக்கும் கணக்கு தவறானது.

மாணிக்கவேலர் மந்திரியாக வேண்டும், அந்த ஒரு காட்சியைக் கண்ணால் கண்டுவிட்டால் போதும், புழுத்த சோளமும் உளுத்த அரிசியும் துப்பாக்கி தர்பாரும் தொல்லை தரும் துரைத்தனமும் எது கிடைத்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள், வடாற்காடு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்டு, மக்கள் ஆத்திரப்பட்டால், மாணிக்க வேலரை மந்திரியாக்கினேன், போதாதா, திருப்தி இல்லையா என்று சாகசமாகப் பேசலாம், என்று ஆச்சாரியார் கருதுகிறார். மிகமிகத் தவறான கணக்கு!

தேர்தலிலே காங்கிரசை முறியடித்து வெற்றி முரசு கொட்டியவர் மாணிக்கவேலர்! அவருக்கு, மந்திரிவேலை தந்தவர், தேர்தலிலே தலையிடாத ஆச்சாரியார்!

பெருமைக்குரியதா இது!

மாணிக்கவேலர், அறிவாற்றலுள்ளவர், அனுபவசாலி, எனவே, அவரை நிர்வாகத்துக்கு இழுத்துக் கொண்டேன் என்று காங்கிரஸ் கூறமுடியாது. ஏனெனில் தேர்தலின்போது காங்கிரஸ், மாணிக்கவேலர் மேதாவியாகக்கூட இருக்கலாம், ஆனால் அவர் காங்கிரஸ்காரர் அல்ல, ஆகவே அவருக்கு ‘ஓட்‘ அளிக்காதீர் என்றுதான் ‘கர்ஜனை‘ செய்தனர்.

அறிவாற்றலுள்ளவர், ஆனால் காங்கிரசால் எதிர்க்கப்பட்டவர்.

அறிவாற்றலுள்ளவர் காங்கிரசை முறியடித்தவர், அவர் மட்டுமல்ல – அவர்போலப் பலர் – பலப்பலர்! அவர்களின் தொக, பெருவாரியானது! வெற்றி பெற்ற காங்கிரசாரின் தொகையைவிட அளவிலே பெரியது – எனவே, நாட்டை ஆளும் உரிமை பெற்றது – அந்த உரிமை பெற்ற குழுவிலே உள்ள மாணிக்கவேலருக்கு, மெஜாரடி பெறமுடியாதுபோன காங்கிரஸ், மந்திரிவேலை தருகிறதாம்!! பெருமைக்குரியதா இது? மாணிக்கவேலரின் உண்மை நண்பர்கள், இதனை அவருக்கோ, நண்பர்களுக்கோ, பெருமை தருவது என்றா எண்ண முடியும்.

மக்கள் அளிக்கிறார்கள் மணிமுடியை – காங்கிரசுக்கு அல்ல – காங்கிரஸ் அல்லாதாருக்கு! காங்கிரசல்லாதார், மாணிக்கவேலருக்கா அதிலே இடமிருக்காது! நிச்சயமாக உண்டு! எனினும் அவருக்கு ஆச்சாரியார் ‘வேலை‘ தருவதாம், இது பெருமையா! என்ன வேடிக்கை வேதனை ததும்பும் வேடிக்கை! வேங்கைக்காடு – நரி ஆட்சி – நரிக்கு நகாரா கொட்டும் வேலைக்கு, புலி மனு போடுவது!

மாணிக்கவேலருக்கு மந்திரி பதவி தருகிற உரிமையோ, யோக்யதையோ, ஆச்சாரியார் பெறவில்லை – காரணம் ஆச்சாரியார் காங்கிரசுக்கு மக்கள் பெருவாரியான ஓட் அளிக்கவில்லை.

காங்கிரசுக்கு நாடாளும் உரிமை இல்லை – மக்கள் தீர்ப்பு அது.

‘உருகி உடல் கருகி‘ உள்ளே நுழைந்த காங்கிரஸ் கட்சியிலே ஆச்சாரியார் இல்லை – அவர் அப்போது ‘பஜகோவிந்தம்‘ செய்து கொண்டிருந்தார்.

மாணிக்கவேலரும் அவர்போலவே வெற்றி பெற்ற காங்கிரசல்லாதாரும் ஐக்ய ஜனநாயக முன்னணி அமைத்தனர் – நேர்மையான அரசியல் முறையின்படி காரியம் நடைபெறுவதானால் முன்னணிதான் மந்திரிசபை அமைத்திருக்க வேண்டும். அமைந்திருந்தால், மாணிக்கவேலர், ‘கனம்‘ ஆகியிருப்பார் ஆச்சாரியாரோ, ‘அரேராம்‘ எழுதிக் கொண்டிருக்கக் கூடும்! அத்தகைய ஆச்சாரியார், உள்ளே நுழைகிறார், கொல்லைப்புறக் கதவைக் கவர்னர் திறந்ததால். நுழைந்தவர் காங்கிரசுக்கு மெஜாரடி இல்லாததைக் காண்கிறார், மந்திரி வேலைக்கு வருமாறு மாணிக்க வேலரை அழைக்கிறார்! தண்டச்சோற்று ராமன், தயிர்வடை பாயாசத்துடன் விருந்து வைக்கிறான், சமாராதனைக் கூடம் நடத்தும் சம்பூரண சாஸ்திரிகளுக்கு – என்றால் எப்படி இருக்கும் வேடிக்கை!

அதைவிட வேடிக்கை அல்லவா இது, மேஜாரடியற்ற காங்கிரஸ், தேர்தலுக்கு நிற்காத ஆச்சாரியாருடைய தலைமையிலே, மந்திரிசபை அமைக்கிறேன், உமக்கு ஒரு இடம் உண்டு வருகிறீரா, என்று மாணிக்கவேலரை அழைப்பது! இதைவிட வெற்றி பெற்றவருக்கு அவமானம் வேறு என்ன செய்யு முடியும்! அந்த அவமானச் சின்னத்தையா, அன்பர் மாணிக்கவேலர், அமைச்சர் பதவி என்று எண்ணுவது! அவருக்கு ‘இடம்‘ மக்கள் தீர்ப்பின்படி கிடைத்துத் தீரும் – ஆச்சாரியார் யார்? அவரிடம் கைகட்டிச் ‘சேவகம்‘ செய்வதா? மாணிக்கவேலருக்கு ஏற்ற நிலைமை பெறவா? காங்கிரசை மண் கவ்வச் செய்தார்! அவர், எண்ணுகிறாரோ இல்லையோ, நாம் எண்ணுகிறோம், வேதனை குபுகுபுவெனக் கிளம்பத்தான் செய்கிறது அந்த வேதனைக் கொண்டவர்கள்தான், வாலாஜாவில் அவருக்குக் கருப்புக் கொடி காட்டினவர்கள் என்பதை நான் அறிவேன் நாடு அறியும், அவர் அறிய மாட்டார், ஆச்சாரியார் அனுமதிக்கமாட்டார்!

மெஜாரடி பெறாத காங்கிரஸ், மந்திரிசபை அமைத்த அக்ரமத்தையும் 152 உருவாரங்கள் நுழைந்தும் மூளை பலத்துக்காக ஆச்சாரியாரை அழைத்துவந்த ஆபாசத்தையும். இவ்வளவும், எப்படியும் பதவியில் காங்கிரஸ் ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்ற சுயநலத்தின் விளைவு என்பதையும் நாடெங்கும் எடுத்துரைத்து, மக்களை வீரர் களாக்கி, விடுதலை விரும்பிகளாக்கி, நாட்டை நயவஞ்சகர்களிடமிருந்து மீ்ட்டு, நல்லாட்சி அமைக்கும் காரியத்தில் நண்பர் மாணிக்கவேலர் ஈடுபடுவார் – அதற்கு ஏற்ற அறிவாற்றலும், பொதுஜன செல்வாக்கும் உள்ளவர், என்று நாம் எதிர்பார்த்தோம் – அவரோ.

என்னைப்பார்
என் இடத்தைப்பார்
உன் கண்ணாலே!
ஆச்சாரியார் பின்னாலே!

என்று பாடுகிறார்! இதுவா, ‘மாணிக்கவேலர்!‘ பிற்பட்ட வகுப்புக்குத் துரோகமிழைத்த காங்கிரஸ் ஆட்சியைத் தொலைக்கவேண்டும் என்று வீரமுழக்கமிட்ட மாணிக்கவேலர் எங்கே, மகா மேதாவியும் தவசியுமான ஆச்சாரியாருடைய தலைமையிலே பணிபுரியும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன், என்போல் பாக்யவான் வேறு உண்டோ என்று திருவாய் மொழிபாடும் மாணிக்கவேலர் எங்கே! வீரரைக் கண்ட கண்களால், வீழ்ந்தவரைக் காணக் கூசுமல்லவா! கருப்புக் கொடியின் பொருள் அதுதான்.

கருப்புக்கொடி ஆச்சாரியாரின் சூழ்ச்சிக்கு மாணிக்க வேலர் பலியானதை உணர்ந்த கொள்கை வீரர்கள், மாணிக்கவேலரின் போக்கைக் கண்டிப்பதன் மூலம் ஆச்சாரியார் மந்திரிசபைக்கு மக்களின் முழுமூச்சான எதிர்ப்பு கிளம்பிவிட்டது துவக்கத்திலேயே, என்பதை எடுத்துக்காட்டும் கொடி மாணிக்கவேலர், இப்போது செல்லும் பாதை சரியானதல்ல, அவருககம் சரி, வீரமரபுக்கும்சரி, அந்தப்பாதை பெருமை தருவதல்ல, வேறுபாதை, ஜனநாயகப்பாதை தெளிவாக இருக்கிறது. அதிலே மாணிக்கவேலர் வந்துவிட வேண்டும், அந்தப் பாதையிலே, அவருக்கு ஆதரவுகாட்ட, ஒத்துழைக்க ஆயிரமாயிரம் இலட்சிய வீரர்களும், இலட்ச இலட்சமாகப் பொது மக்களும் உள்ளனர், எனவே நேர்வழி வருக, நேர்வழி வருக! என்று மாணிக்கவேலரைக் கூப்பிடும், கொடிதான், கருப்புக்கொடி.

தகுதியோ, திறமையோ, அற்றவராக, மாணிக்கவேலர் இருந்திருந்தால், அவருக்கு, மந்திரி வேலை கிடைத்ததை, ஒரு வகையிலே பரவாயில்லை, ‘பிரைஸ்‘ அடித்தது, என்று கூறியாவது, திருப்தி அடையலாம். மாணிக்கவேலர், குதிரைகளின் குளம்புச் சத்தத்திலே இலயித்துக் கிடந்த, இராமநாதபுரம் ராஜா அல்ல – மக்கள் இயக்கத்திலே ஈடுபட்டவர் – உழைத்து உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் சமூகத்திலே தோன்றிய கருவூலம்! காலை முதல் மாலைவரை பாடுபட்டுப் பாடுபட்டு, பிறரை வாழ வைத்து, தான் இளைத்துப்போகும் உழைப்பாளிச் சமூகத்திலே தோன்றி, அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல், கண்மூடி தர்பார் நடாத்தும் காங்கிரசைக் கண்டித்து மக்களைக் காங்கிரஸ் வலையிலிருந்து விடுவித்திடப் பணிபுரிந்து வந்தவர் – அவர் இப்போது ஆச்சாரியார் வீசிய வலையில் வீழ்வதா! இதைக் கண்டிக்காமலிக்க முடியுமா? பூனைக்குத் தாலாட்டுப் பாடக் கிளியை அமர்த்துவதா? எனவேதான், கருப்புக்கொடி!

நல்லவர் – நம்மவர் – மந்திரி வேலையைத் திறம்படப் பார்ப்பவர் – அவருக்கு வேலை கிடைத்திருக்கும்போது கருப்புக் கொடி காட்டலாமா என்று சிலர் செப்பினாராம்- உண்மை! அவர்களுக்கே முதலிலே அப்படித்தான் எண்ணம் பிறக்கும், நல்லவரும், நம்மவரும் திறமைசாலியுமான மாணிக்கவேலர், பொல்லாத ஆட்சிக்காரருடன் கூடிக்குலவலாமா? அவர்களிடம் ‘வேலை‘ பெறலாமா? எடைபோடுவதிலே எல்லப்பன், குண்டுமணி அளவுகூடத் தவறு செய்யமாட்டான் – ஆனால், வேலை பார்க்கும் கடையிலே, தேய்ந்துபோனபடிக் கற்கள் உள்ளனவே – வீசைக்குண்டு, முப்பது பலம்தானே கொடுக்கும்! எல்லப்பன் அந்தக் கடையிலே உட்கார்ந்தால் யாருக்கு நல்லதாகும்? அதுபோலத்தான் இவர். இவருடன்கூடிக்கொள்வதும் எனவேதான், கருப்புக்கொடி! இதுவரையில் மந்திரி சபையிலே இடமே கிடைத்ததில்லை, இந்தச் சமூகத்துக்கு, இதுசமயம் எதிர்க்கலாமா என்றுசிலர் கேட்கின்றனர் – என்று அறிகிறேன். உண்மையிலேயே, உருக்கம் நிறைந்த கேள்வி இது. நானும், நமது தி.மு.கழகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாரும் ஆட்சிப்பீடத்திலே உரிய இடம் தரப்படவேண்டும் என்ற கொள்கை கொண்டு, பணியாற்றுவதை அனைவரும் அறிவர் குறிப்பாக, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டங்களில், முன்னதில் உழைப்பாளர் கட்சிக்கும், இரண்டாவதில் பொதுநலக் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட கழகமும் எந்த அளவுக்குப் பாடுபட்டன, என்பதை நாடு அறியும் – நல்லோர் மறக்க முடியாது. எனவே, நெஞ்சில் நேர்மையுடன் கூறுகிறேன்., ஒன்றல்ல, ஜனத்தொகை எண்ணிக்கையின்படி பார்த்தால் மூன்றுக்கு மேல் மந்திரிகள் கிடைக்கம் உரிமை நிச்சயமாக பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலே, வன்னிய சமூகத்துக்கு உண்டு. சட்டசபையிலும், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் காங்கிரசல்லாத மந்திரி சபை அமைந்திருந்தால் – அமைக்கப்பட்டால், மாணிக்கவேலருக்கு மட்டுமல்ல, அந்தச் சமூகத்தினரில் மற்றும் இருவருக்குக்கூட, மந்திரி வேலைக்கும். அங்ஙனம் கிடைத்தாக வேண்டும் என்று, யார் கிளர்ச்சி செய்தாலும் மந்திரி என்ற ஆச்சாரியாரின் சிறையிலிருந்து விடுபட்டு மாணிக்கவேலர் கிளர்ச்சி யெத்ாலும், அந்தக் கிளர்ச்சிக்குத் தக்க ஆதரவு திரட்டும் காரியத்தை நான் பெருமையுடன் செய்வேன். எனவே, மாணிக்கவேலரை மந்திரியாக்கி விட்டதன் மூலம், நியாயமாகக் கிடைக்க வேண்டியது குறைந்திருக்கிறது. மற்றும், மாணிக்கவேலர், பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் முன்னேற்றத்துக்காக ஒரு திட்டம் தீட்டி நாட்டுக்குக் காட்டி, ஆச்சாரியருக்கு விளக்கி அந்தத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதிலே தனக்கு முழு சுதந்திரமும் சகல வசதியும் தந்தாக வேண்டும் என்ற நிபந்தனை விதித்து, அதற்கு ஆச்சாரியார் சம்மதம் அளித்து, அப்படி ஒரு இலாகாவை ஏற்படுத்தி அதற்கு மாணிக்கவேலர் மந்திரியாக்கப்பட்டிருக்கிறாரா, என்றால், இல்லை! பிறகு, அவர்மந்திரியானதால் மார்பு உடையப் பாடுபடும் உழைப்பாளிச் சமூகத்துக்கு உடனடியாகவோ, நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கிடைக்கப் போகும் உரிமை, வசதி, சலுகை என்ன? மந்திரிசபை விளக்குமா! கேட்டால், ஆச்சாரியார், வகுப்பு, ஜாதி, குலம், இனம் என்றெல்லாம் பேசுவது அநாகரீகம், என்று கூறுவார், அதற்கும் ஒரு பஜகோவிந்தம் பாடுவார், வேறு என்ன செய்வார். சமூக நலன்பற்றி, மந்திரி மாணிக்கவேலர் தொடர்ந்து நாலுகூட்டத்திலே பேசினாலே போதுமே, ஆச்சாரியார் ‘நிறுத்து‘ என்று கூறிவிடுவாரே! இந்நிலையில், மாணிக்கவேலர் மந்திரியானதால் சமூக உயர்வு எப்படிக் கிடைத்துவிடும் என்ன உறுதி தரப்பட்டிருக்கிறது! எனவே உழைப்பாளிச் சமூகத்தை ஆச்சாரியார் ஏமாற்றிவிட முடியாது என்பதை எடுத்துக்காட்டும் கொடிதான் கருப்புக் கொடி காரணமின்றி, மனக்கஷ்டத்தையும் அடக்கிக் கொண்டு, நண்பராக இருந்தவரைப் பகைத்துக் கொள்ள எந்தப் பித்தனுக்குத்தான் மனத்வரும், மாணிக்கவேலரின் போக்கைக் கருப்புக் கொடிமூலம் கண்டிப்பவர்கள், உண்மையில், பொதுநலத்துக்கும் ஜனநாயகத்துக்கும், சமூக உயர்வுக்கும் பாடுபடும் நோக்கம் கொண்டவர்கள் எனவேதான், சபலம், ஏளனம், என்பவைகளைப் பொருட்படுத்தாமல், இளைஞர்கள் கருப்புக் கொடி காட்டினர். தடி தர்பார் செய்தது – இரத்தம் கசிந்தது! தடைமீறப்பட்டதும் வழக்கு கொட்டும்! சிறைபுக நேரிடும்! இவ்வளவையும் தாங்கிக்கொள்ள முன்வந்த தோழர்களின் கொள்கைப்பற்றைப் பாராட்டுகிறேன். நமது நோக்கம் தூய்மையானது – எனவே நமது நெஞ்சுரம் வளரத்தான் செய்யும்். நமது முறை, கண்ணியம் நிரம்பியதாக இருக்க வேண்டும். மாணிக்கவேலருக்கும் சரி, கருப்புகொடி காட்டப்பட வேண்டிய நிலை எப்போது ஏற்பட்டாலும் சரி, நமது தோழர்கள் அரரசியல் நாகரீகத்தின் வரம்பிலே நிற்கவேண்டும் – அப்போதுதான், வெற்றி கிடைக்கும். கரத்திலே கருப்புக் கொடியும், மண்டையிலிருந்து போலீஸ் தடியால் ஒழுகும் செந்நீரும், இப்படியும் ‘சூழ்நிலை‘ சூது மதியினரால் ஏற்பட்டதே என்பதை எண்ணுவதால் கிளம்பும் கண்ணீரும் கொண்ட தோழர்கள், வெற்றி வீரர்களாவர்!

வாலாஜாவில், நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தைக் கண்ட கனம் மாணிக்கவேலருக்குச் சினம் மிகுந்து, சில பல கூறினார் என்று அறிகிறேன். கருப்புக்கொடி காட்டவேண்டி நேரிட்டதற்காக நாம் வருந்துகிறோம் – நம்மை வேதனையில் ஆழ்த்தியவர், கோபிக்கிறார்! என் செய்வது! பன்னெடுங் காலமாகவே, யாருக்காக, மனமாறப்படுகிறோமோ, அவர்களை, எப்படியோ எதிர்முகாம் இழுத்துக்கொள்கிறது. அந்தத் தூபம் போடப்பட்டதும், நம்மைத் தாக்குவதிலே நம் உதவி பெற்றவர்கள் தனிச்சுவை காண்கிறார்கள். மந்திரி மாணிக்கவேலரும் அன்று வெகுண்டு பேசினார் என்று அறிகிறேன். அவருடைய கோபத்தை, நீக்கி விடும்படி கேட்டுக் கொள்ளக்கூடிய, நெருங்கிய தொடர்பு எனக்கு இல்லை. உண்மையில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் – நான் அவரைப் பார்த்தது இல்லை – என்னையும் அவர் பார்த்ததில்லையாம்! வெற்றிக்குப் பிறகு, சென்னையில் நடைபெற்ற பாராட்டு விருந்திலே, அவரை நான் ஆவலோடு எதிர்பார்த்தேன், காணவில்லை! எப்படியும் விரைவிலே காண இயலும், என்று எண்ணிக் கொண்டிருக்கும் சமயமாகப் பார்த்து, ஆச்சாரியார் அவரை அழைத்துக் கொண்டார்.

அன்று வாலாஜாவில் அவர் கோபமாகப் பேசினார் என்றார்கள். கோபம் வரத்தான் செய்யும். எனக்கும் கூடத்தான் கோபம் – மாணிக்கவேலர் மீது அல்ல – ஆச்சாரியார்மீது.

எந்த வாலாஜாவில், வெற்றி வீரராக மாணிக்கவேலர் வந்திருந்து தி.மு.கழகத்தின் பாராட்டுரையைப் பெற்றிருக்க வேண்டுமோ, அங்கு அவருக்கு தி.மு.க. கருப்புக்கொடி பிடிக்கிறது என்றால் அவருக்குக் கோபமாகத்தான் இருக்கும். அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு வருத்தமும் கோபமாகவும் இருக்கும். தி.மு.க. அவர்கள் மனதைப் புண்படுத்தும் எண்ணம் கொண்டதல்ல – என்ன இலாபம் அதனாலே! மாணிக்கவேலரும் கோபம் குறைந்த பிறகு, எண்ணிப் பார்க்க வேண்டும், கருப்புக் கொடி காட்டுகிறவர்கள் யார், என்ன நோக்கம் என்பது பற்றி,ஓட்டு வேட்டையின்மீது அவருடன் இருந்து கஷ்டம் அனுபவித்தவர்கள் தி.மு.கழகத்தினர் – மந்திரியாகிவிட்டார் அவர் கூட இருந்தால் அறுவடையில் ஏதோ சிறிதளவாவது கிடைக்குமல்லவா தி.மு.கவுக்கு! அறுவடையிலே பங்கு வேண்டாம். எமக்கு அந்தப் பழைய மாணிக்கவேலர்தான் வேண்டும் என்றல்லவா கேட்கிறோம். கொள்கைப்பற்று தவிர, வேறென்ன காரணம் காட்ட முடியும் தி.மு.க.வின் போக்குக்கு, மந்திரியின் நேரம், ருசிகரமானது – அவருடைய பகை, ஆஸ்பத்திரிக்கோ சிறைச்சாலைக்கோ கொண்டுபோய்ச் சேர்க்கும் – தெரியும் – தெரிந்துதான கருப்புக்கொடி காட்டினீர்கள் – காரணம்? – கொள்கை வேறென்ன?

இந்த இலட்சிய உணர்ச்சி உங்களை உயர்த்தும், நிச்சயமாக தி.மு.க.வுக்கு உரம் தரும், திராவிடத்துக்குப் பெருமை அளிக்கும்.

கோபம் கொண்டு மாணிக்கவேலர், கூறிய பலவற்றுள் ஒன்று, பதவி ஏற்றுக் கொண்டதற்காக இவர்கள் ஏன் கருப்புக் கொடி காட்ட வேண்டும் நான் என்ன இவர்களிடம் ஒப்பந்தத்தில் கைஎழுத்தா போட்டேன் என்பதாகும் என்று தெரிய வருகிறது.

தேர்தலின்போது தி.மு.க.வின் துணையை நாடியவர்களை, தி.மு.க.வின் கொள்கையிலே உயரியதும், உயிர் போன்றதுமான திராவிட நாடு பிரிவினைத் திட்டத்துக்காகச் சட்டசபையிலே ஆதரவளிக்கச் சம்மதம் தரவேண்டும் என்ற ஒப்பந்தம் கேட்கப்பட்டது – கோரப்பட்டது. இதற்காக, ஸ்டாம்பு ஒட்டிக் கைஎழுத்து வாங்குவது அல்லது அச்சடித்த ஒப்பந்தத் தாளில் கையொப்பம் பெறுவது போன்ற முறை ஏதும் கிடையாது. நமது கோரிக்கை நியாயமானது என்று ஏற்றுக் கொண்டவர்களும், நமது துணை தேவை என்று கருதினவர்களும், கடித மூலமும், ஒப்பந்தத்தின் கருத்தைத் ‘திராவிட நாடு‘ இதழில் வெளியிட்டிருந்ததே அந்த வாசகப் படியும், எழுதித் தமது கையொப்பமிட்டு அனுப்பினார்கள். நன்றியுடன் ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் அவர்களுக்காகப் பணியாற்றினோம்.

நமக்கும் நம்முடைய ஆதரவைப் பெறுபவர்களுக்கும் இடையே இருக்க வேண்டிய நேசம் எத்தகையது, தொடர்பு எவ்விதமானது, என்பதை உருவாக்கவே, இந்த முறையும், கையாளப்பட்டது. மேலும், புதிய அரசியல் சட்டத்தின்படி நடைபெறும் முதல் தேர்தலில், திராவிட நாடு பிரச்னை மக்கள் முன் வைக்கப்பட, இது உதவி அளித்தது.

இந்தத் தூய்மையான நோக்கம் சிலருக்குக் கேலிக்குரியதாகத் தெரிந்தது, காரணம், அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல துணையின்றி நெடுவழி போகிற ஆற்றலுள்ளவர்கள் அது வேறுகதை.

ஒப்பந்தம் என்றவுடனே, இது ஒரு பத்திரமாகப் பதிவு செய்யப்பட வேண்டியது போலும் என்று எண்ணிக் கொண்டு ஸ்டாம்பு பேப்பரில் எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பியவர்ககூட உண்டு! - அவர்கள்போல, புரியாதவர்களல்லவே மற்றவர்கள். சிலர், திராவிட நாடு இதழின் வாசகத்தை எழுதிக் கையொப்பமிட்டு அனுப்பினர். சிலர் தமிழில் அல்ல, ஆங்கிலத்திலேயே திராவிடநாடு பிரச்சினையை ஆதரித்து ஒப்பந்தக் கடிதம் அனுப்பினார்கள். நண்பர் மாணிக்கவேலர் – மறந்துவிட்டேன். மந்திரி மாணிக்க வேலர் – அனுப்பிய ஆங்கிலக் கடிதம், அடுத்தக் கடிதம், அடுத்த இதழில் ‘பிளாக்‘ செய்யப்ட்டு வெளிவருகிறது. இந்தக் கடிதத்தின் தொடர்ச்சியும் வெளிவருகிறது.

அன்று கொள்கையைக் காத்த உங்களுக்கு, என் நன்றியறிதலைக் கூறி, இதனை முடிக்கிறேன். வாலாஜா தோழர்கள், தி.மு.கழகத்தின் கருத்தை, அமைச்சர் அறியும்படிச் செய்ததற்கான, கழக்ம நன்றி கூறிக் கொள்கிறது. தொடர்ந்து பத்திரிகையில், முன்கூட்டியே அறிக்கைகள், வேண்டுகோள், விளம்பரம் இவை ஏதும் இல்லை – எனினும், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, காஞ்சீபுரம் ஆகிய இடங்களிலிருந்து ஆர்வமிக்க தோழர்கள் கிளம்பி, ஒரே நாளில், ஏற்பாடுகளைச் செய்து, வெற்றி பெற்றுத் தந்தனர். சிலர் சிறை செல்வார்கள் போலத் தெரிகிறது. பரவாயில்லை! ஆச்சாரியார் மாணிக்கவேலருக்கு மந்திரி வேலையும், நம்மிலே சிலருக்கு, சிறைவாசமும் தருகிறார்! மாணிக்கவேலரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டதை விடக்கொடுமையானதல்ல சிறைவாசம்! செல்வோம் – வெல்வோம்.

அன்பன்
அண்ணாதுரை

திராவிட நாடு – 4-5-52