அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாலாஜா தோழர்களுக்கு!

மாணிக்கவேலர் அனுப்பிவைத்த ஆங்கிலக் கடிதம் – என்னை ஆனந்தத்திலாழ்த்திய கடிதம் – தி.மு.க. தோழர்களை மாணிக்கவேலருக்காகப் பரிவுடன் பணியாற்றத் தூண்டிய கடிதம் எத்தனை ‘படேபடே‘ காங்கிரஸ் தலைவர்கள் திராவிட நாடு பிரச்சினையை அலட்சியம் செய்தாலும், எதிர்த்தாலும், ஏளனம் செய்தாலும், கவலையில்லை, கருத்திலே தெளிவும் காரியமாற்றும் திறனும், கஷ்டப்படும் சமூகத்திடம் தொடர்பும் கொண்ட தலைவர்கள் திராவிட நாடு பிரச்சினையை ஆதரிக்கிறார்கள். எனவே, வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற களிப்பையும் நம்பிக்கையும் நமக்கெல்லாம் தந்த கடிதம் – மாணிக்கவேலர், திராவிட நாடு அமைவதை ஆதரிப்பதாக எழுதியுள்ள கடிதம் – நமது இதயகீதத்தை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடும் கடிதம் – எந்த இலட்சியத்தை நாம் மக்கள் மன்றத்திலே எடுத்துரைத்து வந்திருக்கிறோமோ – எந்த இலட்சியத்துக்காக எண்ணற்ற இளைஞர்கள் சிறைச் சாலையை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எனக்கூறி ஏற்றுக் கொள்ளவும், தேவைப்பட்டால் தூக்குக் கயிறை முத்தமிடவும் சித்தமாக உள்ளனரோ, அந்த இலட்சியத்தை ஏற்றுக் கொள்வதாக, மாணிக்கவேலர் உறுதிதரும் கடிதம்.

இதைக் கண்டதும் களிப்புப் பிறக்காமலிருக்க முடியுமா!

திராவிட நாடு எனும் பேச்சு, காட்டுக் கூச்சல் என்றார் காமராசர் – இதோ, மாணிக்கவேலர், ஏற்றுக் கொள்கிறார்.

திராவிட நாடு என்றால் இன்னதென்றே புரியவில்லை என்று பேசினார் பக்தவத்சலம் – இதோ அதைப் புரிந்து கொண்டதுடன் ஆதரவும் தர இசைகிறார், மாணிக்கவேலர். அவர் சட்டசபை சென்று அமருவது நமது இலட்சியத்தக்கு உரம் ஊட்டும், நமது இயக்கத்துக்கு மதிப்பளிக்கும் நமது கிளர்ச்சிக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்று எண்ணாமலிருக்க முடியுமா – தெளிவாகத் தெரிவிக்கிறாரே, திராவிட நாடு அமைவதை நான் ஆதரிக்கிறோன் என்று

எனவேதான், பூரிப்படைந்தோம்.

இரட்டைச் சந்தோஷமல்லவா அவருக்கு

மாணிக்கவேலருக்குக் கருப்புக் கொடி காட்டப்படுகிறது – திராவிட இனத்தவருக்குக் காட்டப்படுகிறது – காங்கிரசை முறியடித்தவருக்குக் காட்டப்படுகிறது – நமது இனத்தாருக்கு அல்ல – என்பது பெரு மகிழ்ச்சி ஊட்டத்தான் செய்யும் ஆச்சாரியாருக்கு!

மாணிக்கவேலர் திராவிட முன்னேற்றக்கழகத்தாரை ஏசிப் பேசுகிறார், சீறித் தாக்குகிறார் – இதுவும் பெருமகிழ்ச்சி அவருக்கு!

சிங்கங்கள் மோதிக் கொள்ளும் போது சிறு நரி இரத்தம்குடித்து இன்பம் பெறுமோ காடுகளில் – அதுபோல, நாட்டிலே இது.

காட்டட்டும்! காட்டட்டும்! - என்று கூறிக்களிக்கிறார் தன் அந்தரங்க நண்பர்களிடம்!

தாக்கட்டும், தாக்கட்டும் – உறவு அற்றுப் போகட்டும் – என்று பேசி மகிழ்கிறார், தன் குழுவினருடன்!

அவருக்கு இதுபோன்ற சம்பவங்கள் இரட்டைச் சந்தோஷம் அளிக்கத்தான் செய்யும்.

இது நமக்கு நன்றாகப் புரிகிறபோதுதான், மாணிக்கவேலரின் போக்கால் மூண்ட கோபத்துடன், இந்தப் போக்கு மூலம் ஆச்சாரியார் பெறும் ஆனந்தத்தை எண்ணி ஏக்கம் – ஏக்கமா! வேதனை மூண்டு விடுகிறது. என் செய்வது – திராவிட முன்னேற்றக் கழகம் தன் வலிவை மேலும் பக்குவப்படுத்தியாக வேண்டும் – ஆம் – தி.மு.கழகம் நண்பர்களை நாடித் தேடிப் பெறலாம், ஆனால் நயவஞ்சகத்தைத் திறமை மிக்க கலையாக்கிக் கொண்டுள்ள ஆச்சாரியாரின் பிடியிலே நாடு சிக்கிக் கொண்டதால், நாம் பெறும் நண்பர்களை நம்மிடமிருந்து பிரித்து விடவும், பகையை மூட்டிவிடவுமான காரியம், பலப்பல நடைபெறத்தான் செய்யும் – எனவே இந்தச் சம்பவங்கள் மூலம் நாம் பெற வேண்டிய பாடம், தி.மு.க.வின் வலிவு, நிச்சயமாக வளர்ந்தாக வேண்டும் – வளரச் செய்வோம் என்று வாலிபத் தோழர்கள் சூளுரைக்க வேண்டும்.

ஆச்சாரியார் ஆட்சிப்பீடம் ஏறியதும், இத்தகைய திருத்தொண்டு புரிகிறார் – திறம்படப் புரிகிறார் – திறமை எப்படி இராமற்போகும் – அவர்தான் இராமாயணத்தைப் பாராயணம் செய்கிறவராயிற்றே, வாலியை வதைத்துச் சுக்ரீவனுக்குப் பட்டம் சூட்டிய காண்டம், சில திருத்தங்களுடன் அரசயிலில் இப்போது வெளியிடப்படுகிறது.

இறுதியில் இந்தப் போக்கு, ஆச்சாரியாரையும் அவருடைய ஆதினத்துக்கு வந்த சேர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியையும், எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கம் என்பது அரசியல் வரலாறுகளிலே ஆராய்ச்சி உள்ளவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது, துவக்கமோ, அவருக்கும் அவருடைய துதிபாடகர்களுக்கும் களிப்பூட்டத்தான் செய்யும் மாணிக்கவேலர் மந்திரி வேலையை ஏற்றுக் கொண்டதும், ஆச்சாரியார் ஆனந்தமாக அல்லவா ஊஞ்சலாடி இருப்பார்.

அதைவிட ஆனந்தம் பிறந்திருக்கும் மாணிக்க வேலருக்குக் கருப்புக் கொடி பிடித்த செய்தி கேட்டு!

அதனினும் அதிகமான மகிழ்ச்சி பிறந்திருக்கும் மாணிக்கவேலர் சீற்றமுற்று, நம்மைத் தாக்கிப் பேசுகிறார் என்று கேள்விப்படும்போது.

ஆகவே, களிப்பை மேலும் மேலும் பெற, மற்றும் பல, மாணிக்கவேலர்களைத் தேடிக் கொண்டுதானிருப்பார் – தன் சீடகோடிகளிடமும். இந்தத் திருமந்திரத்தைத்தான் உபதேசித்தபடி இருப்பார்.

இந்தச் சூழ்நிலையைத்தான், நாம் தகர்த்தெறிந்தாக வேண்டும்,

ஆச்சாரியாருடைய ஆட்சியின் அடிப்படையே, ‘மித்ரபேதம்‘ என்பதிலதான் இருக்கிறது!

எனவே, மாணிக்கவேலர்களுக்குக் கருப்புக்கொடி காட்டிவிடுவதுடன் நமது பணி தீர்ந்து போகவில்லை சிக்கலும் தீர்ந்து போகவில்லை, இத்தகைய சூழ்ச்சி முறை மூலம், நாடாளலாம் என்று மனப்பால் குடிக்கும் ஆச்சாரியாரின் சூது அம்பலமாக வேண்டும் – அவருடைய பிடியிிலிருந்து நாடு விடுபட்டாக வேண்டும் – அதற்கான அறப்போர் உருவாக வேண்டும் – அதிலே ஆயிரமாயிரம் வீர இளைஞர்கள் குதித்தாக வேண்டும் – வீரமும் தியாக சுபாவமும், கொள்கைற் பற்றும் கொண்டவர்களையெல்லாம் கொன்று குவிக்கட்டும் குல்லூகபட்டர் – அந்தப் பிணங்களைத்தமது சூதுத் தோட்டத்துக்கு உரமாக்கி, சூழ்ச்சிமலர் பூத்ததும், எடுத்து மணமும் பார்த்து மகிழட்டும் – ஜார்போல! சியாங்கேஷேக்போல! பிரஞ்சு நாட்டு லூயி போல!

அறப்போருக்கான வலிவைப் பெறுவதிலே, தி.மு.க. தோழர்கள் முனைந்திருக்க வேண்டும்.

தி.மு.கவி.ன வளர்ச்சி, மாணிக்கவேலரின் உதவியாலோ, கூட்டறவாலோ ஏற்பட்டதல்ல – இதனை அனைவரும் அறிவர்.

தேர்தலின்போது ஏற்பட்ட உறவுக்கு முன்பு, அவரிடமிருந்து தி.மு.க. துரும்பளவு உதவியும் பெற்றதில்லை, தூசிபோன்ற ஆதரவும் பெற்றதில்லை!

தேர்தலின்போது நாம் தேவைப்பட்டோம்.

தேர்தலின்போது நமக்கு அவர் தேவைப்பட்டார், காங்கிரசை முறிடிக்க.

தேர்தல் முடிந்தது – காங்கிரஸ் முறியடிக்கப்பட்டது.

இப்போது அவர் வேறு ‘திசை‘ செல்கிறார்!

அதை அவருடைய நண்பர்கள் ‘சுக்ரதிசை‘ என்கிறார்கள், அரசியல் யூகமிகுந்தவர்கள் ‘சனிதிசை‘ என்கிறார்கள். எது எப்படியாயினும், அவர் செல்லும் ‘திசை‘ தவறு என்பதை அந்தத் ‘திக்கு‘த் திரும்பியவருக்குக் கருப்புக்கொடி மூலம் வாலாஜாவில் அன்று காட்டிவிட்டீர்கள் – தி.மு.க.வின் கருத்து என்ன அவர் ‘கனம்‘ ஆனது பற்றி, என்று பலரும் கேட்டுக் ்கொண்டிருந்த கேள்விக்கு அன்று பதிலளித்து விட்டீர்கள் – நாம், அந்தப் போக்கைக் கண்டிக்கிறோம் என்பதை நாடு அறிந்து கொண்டு விட்டது.

வாலாஜாவிலேயே மாணிக்கவேலரும் பதிலளித்திருக்கிறார் நமக்கு. அன்றையச் சம்பவம் முன்பு கிடையாது, எனவே அவர் அன்று கருப்புக் கொடி காட்டியதைத் தப்பர்த்தம் செய்து கொண்டு பேசியிருக்கிறார் – ஏசவும் செய்தார்.

மாணிக்கவேலர் மந்திரியானதன் மூலம் மக்களிடையே வெறுப்புக்கு ஆளான காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் மந்திரி சபைக்கும் ஆதரவு தேடித்தருகிறார் – இதனால்தான் நாம் அவரைக் கண்டிக்கிறோம், கருப்புக் கொடி காட்டுகிறோம்.

தி.மு.க.தோழர்கள் மட்டுமல்ல, அவருக்கு ‘ஓட்‘ அளித்த மக்களெல்லாம் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது, என்பதற்காகத்தான் ஓட் தந்தனர்!

எனவே, காரணம் ஆயிரம் காட்டினாலும் அவர் இன்று, காங்கிரஸ் மந்திரிசபை அமைவதற்குத் துணையாகி, ஆச்சாரியாருக்குத் துணையாக்கி, ஆச்சாரியாருக்குத் துதிபாடிக் கொண்டிருப்பதைக் கண்டு, வேதனைப்படாமலிக்க முடியாது.

காங்கிரஸ் மந்திரிசபையாக இருந்தாலென்ன, மாணிக்க வேலருக்கு அதிலே ஒரு இடம் கிடைத்துவிட்டது, அந்த வரையிலே இலாபம்தான், அதுவரையிலே சந்தோஷந்தான் என்று எண்ணுபவர்கள், சிலர் இருக்கலாம், அவர்களின் தொகை, வேக வேகமாகக் குறையத்தான் செய்யும். காங்கிரசுக்கு எதிர்ப்புணர்ச்சி காட்டும் அறிகுறியாக மாணிக்கவேலருக்கு எதிர்ப்புணர்ச்சி காட்டும் அறிகுறியாக, மாணிக்கவேலருக்கு ஓட அளித்தவர்கள் அவர் மந்திரியாகி விட்டார் என்பதற்காக மகிழ மாட்டார்கள். இப்படி இவர் செய்வது சரி என்றால்,இவர் காங்கிரஸ் பேராலேயே தேர்தலுக்கு நின்றிருக்கலாமே, ஏன் நம்மை எல்லாம் காங்கிரஸ் அபேட்சருக்கு ‘ஓட்‘ தராதீகள், மீண்டும் காங்கிரசாட்சி ஏற்பட விட்டுவிடாதீர்கள் என்று தூபமிட்டுவிட்டு இப்போது, அதே காங்கிரசாட்சியிலே இவர் பங்கு பெற்றுக் கொண்டார் என்று எண்ணுவர்.

நம்மவர் மந்திரியானாரே! என்று சொந்தம் கொண்டாடி மகிழ்ந்நது பேசுபவர்கள்கூட, அவர் மந்திரியாக்கப்பட்டதால், ஒரு பலனும் ஏற்படவில்லை, என்பதை உணரத்தலைப்படும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

எப்படியோ ஒன்று நம்மவர் மந்திரியாகிவிட்டார், எனவே நம்மவர்களின் குறைகளைப் போக்குவார், என்று இன்று நம்பிக் கொண்டு, அவரை நாவார !மனமார அல்ல) வாழ்த்துபவர்கள்கூட, நாளாவட்டத்திலே, ஆச்சாரியார் மந்திரி சபையில் இருந்துகொண்டு மாணிக்கவேலரால் நம்மவர்களுக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது என்பதை உணரத்தான் போகிறார்கள்.

துவக்கத்திலே அவர்களுக்கு இலேசான சபலம் தட்டத்தான் செய்யும்.

காகிதப்பூ, கண்ணுக்கு மட்டும்தான் கவர்ச்சி – மணம் கிடைக்காது.

அதுபோலவேத்தான், ஆச்சாரியார், மந்திரிசபையிலே வீற்றிருப்பதும்.

ஆச்சாரியாரும் ஆள் தேடும் படலம், அணைத்து அழிக்கும் படலம், என்பவைகளுக்குப் பிறகு,உதறித் தள்ளும் படலத்தைத்தான் துவக்குவார்! அப்போதுதான், இன்று ஆயாசப்படும் நண்பர்கள்கூட வாலாஜாவில் கருப்புக்கொடி காட்டப்பட்டதன் கருத்தைப் பாராட்டுவர்!

பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நலனைப்பேண, மந்திரியானார் வேறு ஒன்றுமில்லை – என்று தழதழத்த குரலில் பேசும் நண்பர்களுக்கு, மிகப்பழைய அல்ல, சமீப காலத்திலே நடைபெற்ற ஒரு அரசியல் சம்பவத்தை நினைவூட்டுகிறேன்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நலனைக் காக்கும் வாய்ப்பு இது என்று கூறிக் கொண்டுதான், டாக்டர் அம்பேத்கார், நேரு சர்க்காரிலே மந்திரிவேலை பார்த்து வந்தார்.

அந்தோ! அம்பேத்கார் இப்படி நேருவின் வலையிலே வீழலாமா, என்ற அவருடைய உண்மையான நண்பர்கள் கூறியபோதுகூட அவருடைய ஆதரவாளர்கள், பொறு, பொறு! பார், பார்! தாழ்த்தப்பட்டோருக்கு அம்பேத்கார் என்னென்ன நன்மைகள் செய்யப் போகிறார் பார்! என்று நல்வாக்குக் கொடுத்தனர்.

நடைபெற்றதோ, நாடு அறிந்ததே!

மனம் நொந்து மனதைத் திறந்து பேசியபடி டாக்டர் அம்பேத்கார் நேரு சர்க்காரிலிருந்து விலகினார்.

விலகும்போது கூறினார், நான் மந்திரிகளிலே ஒருவனாக இருந்தேனே தவிர, மந்திரிசபையின் வேலைத் திட்டத்தைக் காங்கிரஸ் தலைவர்கள்தான் தயாரித்தனர். எனவே தாழ்த்தப்பட் டோருக்கு ஏதும் நலன் கிடைக்கவழி இல்லாமல் போய்விட்டது – என்னிடம் கலந்துபேசுவதோ, பொறுப்பு களைத் தருவதோகூட இல்லை – எனவே என்னால் என் சமூகத்தினருக்கு நன்மை செய்ய இயலாமல் போய்விட்டது. எனவே, நான் நேரு சர்க்காரில் மந்திரியாக இனிஇரேன் என்று கூறிவிட்டு வந்தார்!

டாக்டர் அம்பேத்கார், தாழ்த்தப்பட்டோருக்கு நன்மை செய்வதற்காகத் தான் பதவியில் அமர்ந்தார் – ஆனால் அவரால் முடியவில்லை – அதற்கு நேரு சர்க்கார் இடமளிக்க வில்லை. மனம் நொந்து இநத் உண்மையை அவர் வெளியிட்ட பிறகும், பிற்பட்ட சமூகத்தினரின் நலனுக்காகப் பாடுபடத்தான் பதவி ஏற்றேன், என்று மாணிக்கவேலர் கூறினால், பொருள் உண்டா!

இதை எண்ணிடும்போது, மாணிக்கவேலரின் போக்கு பிற்பட்ட சமூகத்துக்கும் நலனளிக்கும் என்று எப்படி உறுதி பிறக்க முடியும் எனவேதான் மாணிக்கவேலரின் போக்கைக் கண்டித்துக் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

அவரோ, “ஆஹா! நான் யார்? நீங்கள் யார்? நான் யாருடன் சேர்ந்தால் உங்களுக்கு என்ன?என்னைக் கட்டுப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை? நானோ பொதுநலக் கட்சியின் தலைவர்! நீங்களோ, தி.மு.க.! என்னை இது செய்யாதே அது செய்யாதே என்று கூற நீங்கள் யார்?“ என்று கேட்கிறார்.

அவர் வேறு நாம் வேறு, என்பதால்தான், அவர் ஆச்சாரியாருடன் கூடிக்கொள்ள முடிந்தது – தி.மு.க.வாகவோ, உண்மையில் தி.மு.கழகத்தினிடம் பற்றும் பாசமும் கொண்டவராகவோ இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டே இராது.

அவர் பொதுநலக் கட்சியின் தலைவர்.

பொதுநலத்துக்குக் காங்கிரசாட்சி ஊறு செய்தது.

எனவேதான் காங்கிரசைத்தேர்தலிலே மக்கள் முறியடித்தனர்.

பொதுநலக்கட்சியும், காங்கிரசாட்சி கூடாது என்று மக்களிடம் கூறித்தான் ஓட் பெற்றது.

இன்று பொதுநலக் கட்சியின் தலைவர், பொதுநலத்துக்கு ஊறுசெய்வதும், மக்களால் வெறுத்துத் தள்ளப்பட்டதுமான காங்கிரஸ் கட்சி, ‘ஜனநாயக தர்மத்தின்‘படி ஆளும் நிலை பெற முடியாத அளவுக்குத் தேய்ந்திருக்கும்போது, அதற்கு ‘டானிக்‘ கொடுப்பதுபோல, உதவி செய்து மந்திரிசபையிலே இருக்க இசைவது, எந்த வகையான நியாயம் என்று மக்கள் கேட்கிறார்கள். கேட்கமாட்டார்களா? தி.மு.கழகத்தினர் கேட்கின்றனர் – கேட்பதா குற்றம் – ஓடி ஆடி அவர் புகழ் பாடி ஓட்டுங்கள் மாட்டை என்று முழக்கமிட்டு, மாணிககவேலர்களுக்கு வேலை செய்யமட்டும்தான் தி.மு.கழகமோ!

நான் யார் – இவர்கள் யார்!
எவ்வளவு சுலபமாகக் கூறிவிட்டார்!

தேர்தலின்போது ‘நாமெல்லாம் ஒன்று’ அந்த உறவு, பந்தம், பாசம் இப்போது இல்லை!

ஆச்சாரியார் யார்? இவர் யார்?

இவர்களுக்குள்ளே என்ன தொடர்பு?

தேர்தலின்போது இவருக்கும் ஆச்சாரியாருக்கும் என்ன தொடர்பு? ஒன்றும் கிடையாது! இப்போது? ஆச்சாரியாரா அரசியல் ஞானியாகத் தென்படுகிறார் இவர் கண்களுக்கு! பாசமும் நேசமும் வழிந்த ஓடுகிறது! கனிவு கசிந்து வருகிறது, உருகிறார், ஆச்சாரியாரின் அருங்குணங்களைக் கூறிக்கூறி! மாணிக்க வேலருக்காக ஓட்டு தேடித்தர நாம் – பிறகோ நான் யார்? இவர்கள் யார்? என்ற பேச்சு!!

இந்தப் பேச்சு கேட்டு தி.மு.க. தோழர்கள் கோபப்பட்டுப் பயன் இல்லை – கழகத்தை எஃகுக் கோட்டையாக்கும் ஆர்வத்தைப் பெற்றாக வேண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நேரிடாதிருக்க வேண்டுமானால்.

இந்த நிலைமையால் தி.மு.கழகத்துக்கு ஏதும் நஷ்டமில்லை – மாணிக்கவேலர், தனது உண்மையான நண்பர்களை இழக்கிறார் – அரசியல் இழக்கிறார் – அரசியல் பட்டுப்பூச்சிகளைக் கண்டுகளிக்கிறார் – தாரளமாகச் செய்யட்டும்.

தி.மு.க. மாணிக்கவேலர்களின் கூட்டுறவின்றித்தான், வளர்ந்தது – மாணிக்கவேலர்கள், நாடிவரும் அளவுக்கு வளர்ச்சி கிடைத்தது, தி.மு.கழகத்துக்கு.

இன்று வரையில் தி.மு.கழகம் தேர்தலின்போது யாராருக்கு ஆதரவு அளித்து அரும்பாடுபட்டதோ அவர்களிடமிருந்து எந்தவகையான உதவியையும் பெற்று வளரவில்லை. தி.மு.கழகம் வளர்ந்தது, வீர இளைஞர்களின் உழைப்பால், இலட்சியவாதிகளின் பணியினால், வளர்ந்த கழகத்தின் உதவி தேவையாக இருந்தது மாணிக்க வேலர்களுக்கு, நமக்கும் காங்கிரசைத் தேர்தல் களத்திலே முறியடிக்க அவர்கள் தேவைப்பட்டார்கள் – அவ்வளவுதான்! எனவே, மாணிக்கவேலர் மாம்பலத்தாரிடம் தன்னை ஒப்படைத்துவிட்டதால், தி.மு.கழகத்துக்கு ஏதும் நஷ்டம் இல்லை! எனினும், அவருடைய செயலை, தி.மு.கழகம் கண்டிக்கிறது, பொது மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டிய பொறுப்புணர்ச்சியினால் வாலாஜாவில் கருப்புக் கொடி காட்டப்பட்டது – பொச்சரிப்பால் அல்ல!

எந்த நோக்கத்தோடு பாடுபட்டோமோ, அந்த நோக்கம் பாழாகும் வண்ணம் மாணிக்கவேலர் நடந்து கொண்டாரே, என்பதால் ஏற்படும் வேதனைகளையும், எளிதாக தந்திரமாகவும் சுலபமாகவும், ஆச்சாரியார் தனக்குப் புதிய வலிவு தேடிக்கொண்டார், என்பதையும் எண்ணும்போது எழும்கோபமும்தான் கருப்புக்கொடி காட்டியதற்குக் காரணமே தவிர, நமக்கு வரவேண்டிய மந்திரி வேலையை மாணிக்க வேலர் தட்டிப்பறித்துக் கொண்டார் என்ற காரணத்தாலா கருப்புக் கொடி காட்டினார்கள்!

பொதுமக்களிடமும், குறிப்பாகப் பாட்டாளிச் சமூகத்திடமும் மாணிக்கவேலருக்கு உள்ள தொடர்பையும் செல்வாக்கையும் அழித்து, தேர்தலின்போது அவர் காங்கிரசை எதிர்த்ததற்கு அவர்மீது பழி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆழ்ந்த சதித்திட்டமிட்டே ஆச்சாரியார் மாணிக்கவேலரை மந்திரியாக்கினார் என்று நிச்சயமாக கூறவிரும்புகிறேன்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தாருக்குப் பரிந்துதான் ஆச்சாரியார் மாணிக்கவேலருக்குப் பதவி தந்தாரா? அல்லது ஆட்டம் கொடுக்கும் நிலையிலே அமைக்கப்பட்டுள்ள தன் மந்திரிசபைக்கு ஆதரவு தேடிக் கொள்ள வேலை தந்தாரா? என்பதை எண்ணிப் பார்க்கம் எவருக்குத் தான் ஆச்சாரியாரின் சூழ்ச்சி புரியாமலிருக்க முடியும்.

சூழ்ச்சியானல் தவிர வேறு எப்படி 152 பேர் கொண்ட ஒரு கட்சி, மந்திரிசபை அமைத்து விழாமல் பாதுகாக்க முடியும்? ஆச்சாரியாரின் சூழ்ச்சியின் ஆரம்பம். மாணிக்க வேலர் படலம் இந்த சோகத்தை தொடர்ந்து எழுதப்படுகிறது. ஆனால் கடைசி அத்தியாத்தை மக்கள் எழுதப்போகிறார்கள். இது நிச்சயம்!

மாணிக்கவேலர் சேர்ந்துவிட்டார் என்று கூறி மற்றும் சிலரையும் இழுத்துக் கொள்ள முடிந்தது ஆச்சாரியாரால்! ஆனால் இந்த ‘வித்தை‘ மூலமாகவே, மந்திரிசபையைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பது அவருக்கே தெரியும் – தெரிந்துதான் அவரே கூறினார். நமக்கு ஆபத்து எப்போதும் இருந்தபடி இருக்கும் என்று! இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க, ‘அல்பாயுசு‘ மந்திரி சபையிலேயா மாணிக்கவேலர் வீற்றிருக்க இசைவது? அதில் இருந்துகொண்டு என்ன காரியம் சாதிக்க முடியும்? என்று மக்கள் கேட்பதில் தவறு என்ன?

நான் என் தொகுதியிலே சென்று கலந்துபேசி சம்மதம் பெற்றுத்தான் இந்த முடிவுக்கு வந்தேன் – என்ற மாணிக்கவேலர் கூறுகிறார்.

எந்தப் பத்திரிகையிலும் இந்தச் ‘சேதி‘ காணப்படவில்லை.

மாணிக்கவேலருக்கு நான் ஒன்று கூறவிரும்புகிறேன். காங்கிரஸ் எதிர்ப்பாளர்களின் ஓட்டுக்களைப் பெற்று வெற்றிபெற்றீர். காங்கிரசை முறியடிப்பதுதான் பொது நலத்துக்கு உகந்தது என்றீர். காங்கிரஸ் அபேட்சகரை மக்கள் முறியடித்தார்கள்! செட்டிநாட்டு அரசருக்குவிட்டுக் கொடுத்தது போலக்கூட காங்கிரஸ் தங்களுடன் போட்டிக் போடாமலில்லை.

தங்கள் வெற்றி நாட்டுக்குக் கேடு என்று காங்கிரஸ் பிரசாரம் செய்தது.

காங்கிரஸ் வெற்றிபெற்றால் நாடும் நாசமாகும் பிற்பட்ட வகுப்புக்கும் கேடு விளையும் என்று கூறினீர்.

மக்கள் உமது பேச்சை ஏற்றுக் கொண்டனர் – வாகை சூடினீர் – தி.மு.கழகத்தின் உதவியுடன்.

தி.மு.கழகத்தைக் கூட மறந்துவிடுங்கள் – ‘ஓட்‘ அளித்தார்களே, மக்கள், அவர்களிடம் தாங்கள் தங்கள் நிலையை விளக்கிப் பேசுங்கள், தங்கள் போக்கு சரியல்ல, என்று கருதுபவர்களும் பேசட்டும், தங்கள் தொகுதியில் –அமைதியான முறையிலே இந்தக் கூட்டங்களை நடத்துவோம் – தங்கள் தொகுதியில் இதற்கு ‘ஓட்‘ எடுத்துப் பார்ப்போம் – சம்மதமா?

அறைகூவி அழைக்கிறேன் என்று கோபிக்க வேண்டாம். அரசியல் உலகிலே ஒரு நல்லமுறை ஏற்படட்டும் என்ற ஆசை மிகுதியினால் கூறுகிறேன்.

மறுதேர்தலுக்கு நின்று பாருங்கள் என்று கூடக் கூறவில்லை. ஆச்சாரியார் மந்திரி சபையிலே சேரத்தான் வேண்டும் என்று தாங்கள் கூறி, ஆச்சாரியார் மந்திரி சபையிலே சேரக்கூடாது என்று நாங்கள் கூறி இருதரப்புப் பேச்சையும் கேட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும் – ஏற்றுக் கொள்கிறீரா என்று கேட்கிறேன்.

இந்த முறையைக் கையாளாமல், காங்கிரசை முறியடித்த தாங்கள் காங்கிரஸ் கட்சி அமைத்த மந்திரி சபையிலே, இடம் பெற்றதாலேதான் துரோகம் செய்துவிட்டார் மாணிக்கவேலர் என்று மக்கள் கூறுகிறார்கள்.

அதைத்தான் தி.மு.கழகம் எடுத்துரைக்கிறது – தி.மு.கழகத்துக்குத் துரோகம் செய்துவிட்டீர்கள் என்று அல்ல!

ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், மாணிக்கவேலர், வாலாஜாவில் நான் தி.மு.கழகத்துக்கு ஒரு துரோகமும் செய்யவில்லை என்று கூறுகிறார்.

வேலூரில் காமன்வீல் காரியாலயத்தினர் மாணிக்கவேலரின் வாலாஜா சொற்பொழிவை வெளியிட்டுள்ளார்.

போளூர் தொகுதியில் காமன்வீல் கட்சியின் சார்பாக சென்னை சட்டசபைத் தேர்தலில் நின்றேன். அப்பொழுது சில தோழர்கள் ‘திராவிட நாடு‘ பிரிவினைத் தீர்மானம் சட்டசபை விவாதத்திற்கு வரும்பொழுது அத்தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கடிதம் போட்டார்கள். அதற்கு இணங்கி, திராவிட நாடு பிரிவினைத் தீர்மானம் சென்னை சட்டசபையில் விவாதத்திற்குக் கொண்டுவரப் படுமானால் அதை ஆதரிப்பதாக எழுதிக் கொடுத்தேன். அந்தத் தீர்மானம் சட்டசபையில் இன்னும் விவாதத்திற்கு வரவில்லை. வந்த பிறகு அத்தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை என்றால் அப்பொழுது தான் அவர்களுக்கு நான் எழுதிக் கொடுத்தபடிச் செய்யவில்லை என்றும் அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டேன் என்றும் கூறிக் கொள்ள நியாயம் உண்டு. அதற்கு முன்னால் அவர்கள் இப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்வது சரியா என்று பொது மக்கள் யோசித்துத் தீர்ப்புக் கூறவேண்டும்“ என்று கூறியிருக்கிறார்.

தி.மு.கழகத்துக்குத் துரோகம் செய்ததாக அல்ல, ஓட்டளித்த மகக்ளுக்குத் துரோகம் செய்ததற்காகத்தான் கருப்புக் கொடி காட்டப்பட்டது,. மக்கள் அவ்விதம் எண்ணவில்லை. நான் அவர்களுக்குத் துரோகம் செய்யவில்லை, என்று மாணிக்கவேலர் கூறுகிறார் இதிலே எந்தக்கருத்து சரி என்று அறிய, ஒரே வழி மக்களிடம் இரு தரப்பினரும் இது விஷயமாகப் பேசி காரணங்களை விளக்கிக் காட்டியான பிறகு, மக்கள் கூறும் முடிவைத் தெரிந்து கொள்வதுதான். எனவேதான், அவருடைய தொகுதியிலே, இந்த முறையைக் கையாளச் சம்மதமா என்று கேட்கிறேன்.

மாணிக்கவேலர் தி.மு.கழகத்தவராக இருந்தால்,அவரை தி.மு.கழகத்துக்குத் துரோகம் செய்துவிட்டார் என்று கூற இயலும் – இப்போது நிலை அது அல்ல. இப்போது தி.மு.கழகம் கூறுவது, மாணிக்கவேலர், மகக்ளக்குத் துரோகம் செய்துவிட்டார் என்பதுதான்.

தி.மு.கழகம் மட்டுமல்ல இதைக் கூறுவது.

திராவிடர் கழகமும் இதைக் கூறுகிறது.

கம்யூனிஸ்டு கட்சியும், பிரஜா கட்சியும் இதைக் கூறுகின்றன.

இந்தக் கட்சிகளெல்லாம் எனக்கு எம்மாத்திரம் என்று மாணிக்கவேலர் பேசக்கூடும், அது அவருடைய இஷ்டம்! ஆனால் ஒன்றுமட்டும் அவர் அறிந்துகொள்ள வேண்டும், இவரை மக்கள் ஆதரித்தது போலவே, கம்யூனிஸ்டுகளையும் பிரஜா கட்சியையும் மக்கள் ஆதரிக்கிறார்கள், மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற மாணிக்கவேலரின் கட்சியைவிட, இவை இரண்டும் அளவிலே மிகமிகப் பெரியன – ஏறத்தாழ 100 உறுப்பினர்கள் அவர்கள் சட்டசபையில் – அறுவர் எம்மவர் என்கிறார் மாணிக்கவேலர்!

காங்கிரசை ஆளவிடக்கூடாது என்பதற்காக பல இலட்சம் மக்கள் ‘ஓட்‘ அளித்தனர் – மாணிக்கவேலரும். இதே முறையிலேதான் ஓட் பெற்றார். அவர்கள் காங்கிரஸ் மந்திரி சபையை ஆதரிக்கவில்லை – இவர் அதிலே இடமே பெற்றார் – இதை எண்ணும்போது, இவர் தொகுதி மக்கள் இருக்கட்டும், பொதுவாக நாடு பூராவிலும் உள்ள பொது மக்கள், இவரைப்பற்றி என்ன எண்ணுவார்கள்? என்ன எண்ணுகிறார்கள் என்பதைக் கூறவா வேண்டும்!

நான், தி.மு.கழகத்துக்கு என்ன துரோகம் செய்து விட்டேன் என்று கேட்கிறார் – தி.மு.க. கூறுகிறது, ஐயா! தாங்கள் மக்களுக்குத் துரோகம் செய்தீர் என்று.

தி.மு.கழகத்துக்கும் தமக்கும், ஏற்பட்ட தேர்தல் உறவை, மாணிக்க வேலர் விளக்கியிருப்பது கண்டு மகிழ்கிறேன். அதிலே சில சிறிய திருத்தங்களையும் கூறிக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை படியுங்கள் நான் குறிப்பிட்டிருக்கும் அவருடைய வாலாஜா சொற்பொழிவை.

திராவிட நாடு பிரிவினைத் தீர்மானம் சென்னை சட்டசபையிலே விவாதத்திற்கு கொண்டுவரப்படுமானால் அதை ஆதரிப்பதாக எழுதிக் கொடுத்தேன் என்று பேசுகிறார்.

அவருடைய ஆங்கிலக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறேன் – பாருங்கள்.

நான் திராவிடஸ்தான் அமைவதை ஆதரிக்கிறேன்.

இதுதான் அவருடைய வாசகக் கருத்து.

சட்டசபையிலே தீர்மானம் கொண்டுவரப்படுமானால் நான் ஆதரிக்கிறேன் என்று அல்ல, இரத்னச்சுருக்கமாகக் கூறுகிறார்.

I SUPPORT THE FORMATION OF DRAVIDASTHAN

திராவிடஸ்தான் அமைவதை நான் ஆதரிக்கிறேன் – என்றார்.

சட்டசபையிலே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுமேயானால் நான் அதை ஆதரிக்கிறேன் என்றதானே நான் எழுதிக் கொடுத்தேன், இப்போது அந்தத் தீர்மானம் வரவில்லையே – அந்தத் தீர்மானம் வந்து அப்போது நான் ஆதரிக்காவிட்டால்தானே என்னை துரோகி என்று கூறலாம் – என்று கேட்கிறார். சரியாா இந்த வாதம்! திறமையான வாதம் – ஒப்புக் கொள்கிறேன் – ஆனால் நியாயாமான வாதமா?

திராவிடநாடு அமைப்பை நான் ஆதரிக்கிறேன் என்று கடிதம் தெரிவிக்கிறது. தீர்மானத்தைச் சட்டசபையிலே கொண்டு வந்தால் ஆதரிக்கிறேன் என்று அல்ல.

திராவிடநாடு அமைப்பை நான் ஆதரிக்கிறேன் என்றால், அதற்காவன செய்தல், மக்களிடம் அதுபற்றி எடுத்துரைத்தல், அதை மறுப்போர்க்கு மறுப்பளித்தல், அதுபற்றிச் சட்டசபையிலும் ஆதரவு காட்டுவது – எனும் இவ்வளவும் அடங்கியதுதானே!

முடியுமா இப்போது இவரால் திராவிடநாடு தேவைதான், நான் அதை ஆதரிக்கிறேன் என்று பேச.

விடுவாரா ஆச்சாரியார்!

எங்கே ஒரு தடவை பரீட்சை செய்து பார்க்கட்டும் மாணிக்கவேலர்!!

திராவிடநாடு அமைவதை நான் ஆதரிக்கிறேன் என்று உறுதி கூறியவர் மாணிக்கவேலர்.

திராவிடநாடு என்பது பித்தர் திட்டம் என்ற கொள்கை கொண்டவர், ஆச்சரியாார்.

ஆச்சாரியார் ‘பாரத்வர்ஷம்‘ ‘பஜகோவிந்தம்‘!

அவருடைய மந்திரிசபையிலே திராவிட நாடு அமைப்பை ஆதரிக்கும் மாணிக்கவேலர்.

பொறுத்தம் இருக்கிறதா!

திராவிட நாடு அமைவரை ஆதரிப்பவர் திராவிட நாடு அமைவதை எதிர்ப்பவரான ஆச்சாரியாருடன் எப்படிக் கூட்டாகப் பணியாற்றலாம்!

மாணிக்கவேலர் திராவிடநாடு ஆதரவாளர் – அதை இப்போதும் மறுக்காததற்காக என் நன்றி, மகிழ்ச்சி – ஆனால் ஆச்சாரியாரோ, திராவிடநாடு எதிர்ப்பாளர் – எங்ஙனம் திராவிட நாடு அமைவதை மாணிக்கவேலர் ஆதரிக்க முடியும் ஆச்சாரியார் மநதிரி சபையிலே இருந்துகொண்டு! விளக்கம் தேவை!

காங்கிரஸ் கட்சி, திராவிட நாடு அமைவதை எதிர்ப்பது இன்று ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற நிலைக்குக் காரணமே, காங்கிரசாட்சி அமையாவிட்டால் திராவிட நாடு பிரச்சினை திடீர்ப்பலம் பெற்றுவிடும் என்ற பயம்தான். இதையறியாரா மாணிக்கவேலர்! வெண்ணெய் உருண்டையைச் சுண்ணாம்பு போடப்பட்டுள்ள சட்டியிலேதான் வைத்திருக்கிறேன் என்று பேசுவதா!

திராவிடநாடு ஆதரவாளர் பாரத நாடு பாதுகாவலரின் கட்சி நடத்தும் மந்திரிசபையில்! விந்தையான நிலைமை! விசித்திரமான வாதம்!

ஏதோ வாதத்துக்காகவாவது அன்பர் திராவிட நாடு அமைவதை நான் எதிர்க்கவில்லையே, அந்தத் தீர்மானம் வந்தால்நான் ஆதரிக்காவிட்டால், அப்போதுதானே நீங்கள் என்னைத் துரோகி என்று சொல்ல நியாயம் உண்டு, என்று பேசுவதன் முலம், திராவிட நாடு பிரச்சனையை ஆதரிப்பதாகக் கூறுகிறாரே, அதுவரையிலே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தரும் பேச்சை அவரிடமிருந்து பெற்றுத் தந்ததும், நீங்கள் காட்டிய கருப்புக் கொடிதான் எனவே அதற்காக உங்களுக்கு, என் நன்றி.

அன்பன்
அண்ணாதுரை

திராவிட நாடு – 11-5-52