அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாலாட்டம்!

பர்மாவில் இருந்த ஜப்பானியப்படை இப்போது பர்மா எல்லையைத் தாண்டி மணிப்பூர் சமஸ்தானத்துக்குள் நுழைந்துவிட்டதென்ற செய்தி கடந்த நாலைந்து நாள்களாகக் கேட்கப்படுகின்றது. இதன் விளைவு என்னவாகுமோ என்ற பயம் மக்களுக்கு ஏற்பட்டுவிடாதபடி நேசப்படைகளின் எதிர்த் தாக்குதல், எதிர்பார்த்தபடி ஜப்பானியருக்குப் பெருதத தேசங்களை உண்டாக்கிவருகிறது. கடந்த நாலைந்து நாள்களுக்குள் பல ஆகாய விமானங்களையும், பர்மாவிலுள்ள ஒரு முக்கியமான எண்ணெய்க் கிணற்றையும், சில போர்க் கப்பல்களையும் நேசப்படை நாசமாக்கிவிட்டது. போர்முனையிலுள்ள ஒருயுத்த நிருபர் கூறுவதுபோல, ஜப்பானியப்படை இப்போது அடிபட்ட புலிபோலாகிவிட்டது. அடியின் வேகத்தால் ஏற்பட்ட களைப்புத் தெளிந்து மீண்டும் அந்தப் புலி வாலை ஆட்டினால், நேசப்படையாகிய சிங்கம் அதன் வாலைக் கடித்து வாயைப் பிளக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், பதுங்கிப் பாயும் சுபாவம் புலிக்குண்டென்பதைச் சிங்கம் மறந்துவிடாமல் முன் எச்சரிக்கையுடன் அதனிடம் போர்புரியவேண்டும். இது, நேசப்படைகளுக்கு நாம் விடுக்கும் எச்சரிக்கையும், காட்டும ஊக்கமுமாகுமேயன்றி, அதனிடம் சந்தேகம் கொண்டு கூறுவதன்று.

இந்தியாவில் வந்து குவிந்துகிடக்கும் படைபலத்தை அறியாமலே ஜப்பானியர் தங்கள் ஆரம்ப சூரத்தனத்தைக் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். இவர்களின் சூரத்தனம் சீரழிவதற்கு, இருப்பது போதுமென்ற திருபதிகொள்ளமல், இன்றும் அதிகமான படைபலமும் போர்க்கருவிகளும் தயார்செய்ய வேண்டுவது இந்தியாவின் நலனைக் குறித்துமட்டுமல்ல, உலக சமாதானத்தையும் குறித்தே இதை நாம் வற்வுறுத்திக் கூறுகிறோம். இந்தியாவின் பாதுகாப்பு உலகப் பாதுகாப்பாகும். கோர்ப்புயலினின்றும் இவ்வுபகண்டம் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தை நாம் வற்புறுத்துவது நம்முடைய கடமைகளில் முக்கியமாகும். நேசநாட்டினர் இதனைப் பாதுகாப்பது அவர்களின் நலனைக் குறித்ததாகும். இவ்வுபகண்டம் பாதுகாக்கப்பட்டால், இப்போது ஜபபானியல் வசமாகியுள்ள சிங்கப்பூர், பர்மா, அந்தமான் முதலான நாடுகளைத் திரும்பப் பெறுவதற்கு மிகவும் அநுகூலமாய் இருக்குமென்பதை நாம் பிரிட்டீஷாருக்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறோம்.

எனவே, ஆழமறியாமல் காலைவிட்டோம், வால் அறுபட்டோம், இனித் தம்பபித்துக்கொள்ள வகையறியோம் என்று தவிக்கும் முறையில் நேசநாடுகள் தங்கள் திறமையைக் காட்ட முன்வர வேண்டுமென்பதோடு, இவ்வுபகண்டத்திலுள்ள அனைவரும் தங்களாலான உதவி அனைத்ததையும் செய்து ஜப்பானியரின் வாலாட்டத்தை அடக்கி முறியடிப்பதில் துணைபுரிவதையே இன்றைய குறிக்கோளாகக் கொள்ளவும் வேண்டும்.

(திராவிடநாடு - 02.04.1944)