அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாய்ப்பூட்டு
“ஜாதி இந்துக்களின் பிணத்தைக் கொளுத்தவதற்கு என்று தனியாக உள்ள இடத்திலே, ஆதித்திராவிடரின் பிணத்தை எரித்தற்காக, மதுரையில் இரு ஆதிதிராவிடர்கள் தண்டிக்கப்பட்டது உண்மையா?”

“ஆமாம் இரு ஆதித்திராவிடர்களுக்குத் தண்டனை தரப்பட்டது.”

“அவர்கள் பிறகு, மந்திரி சபையினரால் விடுவிக்கப்பட்டனரா.”

“ஆமாம்.”

“அப்படித் தண்டிக்கப்பட்டது தவறு என்பதற்காகவா, அவர்களை மந்திரி சபை விடுதலை செய்தது?”

“அவர்களுக்கு அளிக்கப்பட்டது, கடுமையான தண்டனை என்பதற்காக, விடுதலை செய்யப்பட்டனர்.”

மதுரையில் நடைபெற்ற சம்பத்தைப் பற்றி, சட்டசபை அங்கத்தினர், கேட்ட கேள்விக்குச் சட்ட மந்திரியார் தந்த பதில் இது. சட்டசபைத் தலைவர் தோழர் சிவசண்முகம், மந்திரி கூர்மைய்யா, மந்திரிக்குக் காரியதரிசியாக உள்ள இளைஞர் பரமேஸ்வரன் ஆகிய அன்பர்களின் முகம், இந்தப் பதிலைக் கேட்டபிறகு எப்படி இருந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் சட்ட மந்திரியாரின் பதிலைப் படித்ததும் நமது கண்களிலே நீர் கசிகிறது. ஆதித்திராவிடர்கள், அரிஜனங்கள் காந்தியாரின் கருணாவிலாசத்துக்குப் பாத்திரமாயினர். இதனினும் பெரும்பேறு வேறு என்னவேண்டும் என்று ஆனந்தக் கூத்தாடும் சகஜானந்தரின் உடன்பிறந்தோர்களுக்கு, சுடுகாட்டிலேகூட, நரியும் பிறவும், கழுகும் காகமும் வட்டமிட்டுவரும் பிணபுரியிலுங்கூட, சமஉரிமை கிடையாது, சம உரிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அதன்படி காரியம் ஆற்றுவது சட்ட விரோதம், சட்ட விரோதமாக நடந்ததற்கு அவர்கள் தண்டிக்கப்பட்டனர், அதுவே முறை, இவைகளை மந்திரி சபை.

“ஏழை என்னும் அடிமை என்றும்
ஏவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதர் ஏன்போர்
இந்தியாவில் இல்லையே”
என்று தேசிய கீதம்பாடித் தேர்தலில் மக்களின் ஆதரவை நாடிய நண்பர்களின் மந்திரிசபை, கண்டிக்கவோ, மறுக்கவோ இல்லை. உரிமையை நிலை நாட்டுவதற்காகவே பேதத்தை ஒழிப்பதற்காகவே, அந்த ஆதித்திராவிடர்களை விடுதலை செய்ததாக மந்திரியார் கூறவில்லை. சட்ட மந்திரியாரின் பதில் தெளிவாக இருக்கிறது. கொடுக்கப்பட்ட தண்டனை, கடுமை, ஆகவே, பச்சாதாபப்பட்டு, பரிதாபத்தால் தூண்டப்பட்டு, இரக்ககுணம் காட்டாமற் போனால், இரக்கமெனும் ஒரு பொருளிலா ஆரக்கன் என்று பழி வருமோ என்றெண்ணி, பெருந்தன்மையைக்காட்ட, தண்டனையைக் குறைத்து, அவர்களை மந்திரியார் விடுதலை செய்தார், அதைத் தெளிவாக்கியும் விட்டார். தமது பதில் மூலம். ஆகவே, இன்னமும் பிணமானாலும் சரியே, ஆதித்திராவிடருக்கு, இடம் வேறுதான்! அத்துமீறிப் பிரவேசிப்பவருக்குத் தண்டனைதான் கிடைக்கும். தண்டனை கடுமை என்று மந்திரிகளுக்குத் தோன்றினால், அவர்களின் மனம் இளகி, தயவு பிறந்து, தண்டனை குறைக்கப்படும். சாஸ்திரமும் அதை ஓட்டிச் செய்யப்பட்ட சட்டமும், அப்படியேதான் இருக்கிறது. அதிலேமாற்றம் இல்லை! மாற்ற வேண்டுமென்ற மனப்போக்கு மந்திரிமார்களுக்கு இல்லை! அதிலேகூட ஆச்சரியம் நமக்கில்லை, மாற்றும்படி வற்புறுத்தத் தைரியம் இல்லையே, ஆதித்திராவிட அங்கத்தினர்களுக்கு! ஏன்னே அவர் தம் நிலை! உரிமைப்போர் முழக்கமிடத் தெரியாவிட்டாலும் நந்தனார் கீர்த்தனை மெட்டிலாவது, “காலில் வெள்ளெலும்பு முளைத்தநாள் முதலாய் அடிமைக்காரன் ஒயே” என்ற பஜனை முறையிலாவது பாடிக் கேட்கக் கூடாதா! ஏன் தோன்றவில்லை அந்த எண்ணம்? 1946ம் ஆண்டிலே மதுரையிலே, ஜாதி இந்துவுக்கென்று உள்ள பிணம் சுடும் இடத்திலே, ஒரு ஆதித்திராவிடத் தோழன் தன் குழந்தையின் பிணத்தைச் சுட்ட குற்றத்துக்காகச் சிறையில் தள்ளப்பட்டான்.

அதுபோதுதான், ஆதித்திராவிட மக்களில் ஒருவரான தோழர் சிவசண்முகம் சென்னை சட்டசபைக்குத் தலைவராகக் கொலுவீற்றிருந்தார்.

கூர்மைய்யா எனும் மற்றோர் ஆதித்திராவிடர் மந்திரியாக இருந்தார்.

இந்தச் “செய்தியை” எதிர்காலத்திலே படித்திடும் வாலிபர்களின் உள்ளம் எப்படிக் கொதிப்படையும்! எங்கே இருக்கிறது, அந்த இன உணர்ச்சி ஆற்றவர்களின் கல்லரை, காட்டுங்கள்...” என்றல்லவா ஆத்திரத்துடன் கேட்பர். மந்திரியாரோ, மற்றவர்களோ, மதுரைச் சம்பவத்தைப் பற்றி, மனம் உருகிப் பேசினரா? இல்லை! சுடுகாட்டிலுமா ஜாதி பேதம்? என்று இடித்துரைத்தனரா? இல்லை! பாடுபடும் கூட்டத்தை, பிறருக்காகவே பாடுபட்டுப் பாடுபட்டு மேனி கருத்துப் போன இனத்தை நாகரிகம் பெருகி, அறிவு வளர்ந்து, ஜனநாயகம் தாண்டவமாடும் நாட்களிலேயுமா பேதம் காட்டி இழிவுபடுத்தி வருவது, இந்தக் கொடுமை இனியும் நடக்கலாமா, இதைச் சகித்துக் கொண்டிக்க முடியுமா என்று பேசினரா? இல்லை வேறே என்ன பேசினர்! ஒயோ! பாவம்!! என்பதற்காக, அந்த ஆதித்திராவிடர்களை விடுதலை செய்தனராம் - அதைக் கூறினார் மந்திரியார்! சாட்டை அடி பலமாகி மாட்டின் முதுகிலே புண் ஏற்பட்டு, புண்ணிலே உ மொய்த்துக் கொண்டு இருப்பது கண்டு, வண்டிச்சக்கரத்தில் உள்ள மையை எடுத்துப் புண்ணின்மேல் பூசுகிறோமல்லவா, அதுபோல சாஸ்திரம கொடுத்த அடி, பேதமென்ற புண்ணை உண்டாக்க, அதன்மீது சட்டமும், அதன்பேரால் தரப்படும் தண்டனை எனும் உயும் உட்காரும்போது சட்டமந்திரியார் உயை ஓட்டிவிட்டு தண்டனையைக் குறைத்து விடுதலை செய்தோம் என்ற மையைப் பூசிக்காட்டினார். இது 1946ல்! ஆதோ ஆப்பிரிக்காவில், ஸ்மட்ஸ்துரையின் பேதத் திட்டத்தை எதிர்த்து நமது நண்பர்கள் போரிடும் நாட்களில்! நமக்கே இது பற்றி விரிவாக எழுத வெட்கமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நாட்களிலே வாழ்கிறோமே என்று துக்கமாகவும் இருக்கிறது, அதே போது, இது பற்றிய சிந்தனையற்று ஒரு ஆதித்திராவிடர் சபாநாயகராகவும் மற்றொருவர் மந்திரியாகவும் இருந்துகொண்டு, இந்த இழிவைத் துடைக்கத் தமது சிறுவிரலையும் அசைக்காமலிருக்கின்றனர்! எந்த இனத்துக்குப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, ஆட்சி மன்றத்திலே இவர்கள் அமர்ந்திருக்கிறார்களோ, அந்த இனம் இழிவுபடுத்தப்படுகிறது. இவர்கள் அதுகண்டு மனம் பதறாமலிருக்கின்றனர். கோழியும் தன்குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்துடன் போரிடும் என்றார் பாரதிதாசன்! இதோ இவர்கள், கூடப்பிறந்தவர்கள் சமூகக் கொடுமைக்கு ஆளாகும்போது, வைதிக சட்டத்திட்டத்துக்கு இறையாகும்போது, பார்த்துக் கொண்டு வாய் திறவாது உள்ளனர்! பேசத் தெரியாததால் அல்ல! பேசச்சொல்லுங்கள், டாக்டர் ஆம்பேத்காரை எதிர்த்து. சாளரத்திலிருந்து விழும் நீரோசைப்போல் இருக்கும், பேச்சு! தன் இனத்தின் தன்மானம் பறி போகிறதே அதுபற்றிப் பேசச் சொன்னால் மட்டுமே, வாய்மூடிவிடும்! இந்த வாய்ப்பூட்டுக்கு இலாபம் கிடைக்காமல் போகவில்லை. மாதாமாதம் ஆயிரத்து ஐந்நூறு! ஏசுவைக்காட்டிக் கொடுத்து ஜுடாசு பெற்றதுபோல முன்னூறு மடங்கு அதிகம் பெற்று மகிழ்கிறார்கள்! இம் ஜுடாசுக்குக் கிடைத்த பழிச்சொல் போல முன்னூறு மடங்கு அதிகமான பழிச் சொல்லுக்கு இலாயக்குள்ளவராகிறார்கள். இன்று இல்லை பழிச்சொல், ஆனால், நாளை? ஒவ்வொரு மாதமும், பணம் பெறும்போது, அவர்கள் சிந்திக்க வேண்டும் இந்தப் பணம் பெறுகிறோம், நமது இனத்தின் இழிவுதுடைக்கும் பணியை மறந்து, என்பதை!

(திராவிட நாடு - 18.8.46)