அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வேல் பாய்ந்த வேழம்!

அவன் வீசிய வேல், பாய்ந்தது, வேழத்தின் மார்பகத்தருகே! வலி! என்னும் அதற்குத்தாங்கும் சக்தியும் உண்டல்லவா? துதிக்கையால் வேலைப்பற்றி இழுத்து எறிந்தது, வெளியே - இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது - அதேபோது, ஏயோ! என்ற அலறலுடன், வேல் வீசிய வீரன் ஓடி வருகிறான், யானையிருக்கும் பக்கம் - வேங்கையொன்று அவனைத் துரத்துவதால், வேழம் துதிக்கையால் அவனைத் தூக்கித் தன் முதுகிலே வைத்துக் கொண்டு, காட்டுக்குள்ளே சென்றுவிட்டது - வேங்கை பின்தொடர முடியா வண்ணம்! வேழத்தின்மீது வேல் பாய்ச்சிய வீரன். வேங்கையிடம் இரையாகாதபடி காப்பாற்றப்பட்டான். அவன் வீசிய வேலால் வெளிப்பட்ட இரத்தக் கறைபடிந்த, யானையினாலே!

இது, எந்தக் காட்டிலே கண்ட காட்சி? என்று கேட்டுவிடாதீர்கள், நாம் கூறுவது காட்டுக்கதையல்ல, நாட்டுநிலை!
*****

காங்கிரஸ் சர்க்கார், எதைச் செய்ய முன்வந்தாலும், ஏதேனும் காரணம் காட்டி எதிர்க்கும், சூதர்க்கவாதிகள் - காங்கிரசின் மீது தீராதபகை இவர்களுக்கு. எனவே சமயம் கிடைத்தபோதெல்லாம், விரோதம் என்ற விஷத்தைக் கக்குகிறார்கள் - காங்கிரசுக்குத் தொல்லை தருவதே இவர்கள் வேலை - அதே வேலையாகத் திரிகிறார்கள். எவ்வளவு நல்ல காரியம் செய்ய முனைந்தாலும் குறுக்கிட்டுத் தடைசெய்வதே இவர்களின் சுபாவம்.

நம்மைப்பற்றிக் காங்கிரஸ் தலைவர்கள், பேசுவது, இவ்விதம் எதுவது, மேடைகளிலே, இதுபோல.

காங்கிரஸ் சர்க்கார், மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றினர். நாம் ஆதரித்தோம்.

காங்கிரஸ் சர்க்கார், ஜெமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தனர், நாம் ஆதரித்தோம்.

காங்கிரஸ் சர்க்காரின் தலைமைப் பீடத்தினர் ஹைதராபாத்தை அடக்கப் படையை அனுப்பினர் - நாம் ஆதரித்தோம்.

நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய, எந்தக் காரியத்தைக் காங்கிர சர்க்கார் செய்ய முன்வந்தபோதும், நாம் ஆதரித்தே வந்திருக்கிறோம்.

எனினும், காங்கிரசிலே உள்ள சில கண்ணியர்கள், நாம் அவர்கள் செய்யும் எந்தக் காரியத்தையும், எதிர்க்கிறவர்கள், கண்டிக்கிறவர்கள், என்றே பேசுகின்றனர்.

காங்கிரஸ் சர்க்கார், தொழிலாளர் பிரச்னையிலே காட்டு முடுக்கையும், கொள்ளும் போக்கையும், வீசும் அடக்குமுறையையும் நாம் கண்டிக்கிறோம் - எதிர்க்கிறோம் - நீதியிலும் நேர்மையிலும், மக்களின் நல்வாழ்விலும் நமக்குக் கவலை இருக்கிற காரணத்தால்.

காங்கிரஸ் சர்க்கார், உணவு, உடைப்பிரச்சனைகளைக் கவனிக்கும் முறையையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் சிரமத்தையும் கண்டிக்கிறோம். மக்களின் அன்றாட வாழ்வு, அரைவயிற்றுக் கஞ்சிக்கு இலாயப்பறக்கும் விதமாகிறதே என்ற கவலையால்.

யாரையும், எப்போது வேண்டுமானாலும், காரணம் எதும் காட்டாமலேயே, வழக்கு மன்றத்துக்குக் கொண்டுவராமலேயே, சிறையிலே தள்ளக்கூடிய விதமாக அமைக்கப்பட்டிருக்கும், பொதுஜன பாதுகாப்பு சட்டத்தை நிச்சயமாகக் கண்டிருக்கிறோம். மக்களாட்சியின் மாண்பை மாய்க்கிறது அந்தச் சட்டம் என்ற காரணத்தால்.

எதிர்க்கட்சி எதுவுமே தலைதூக்க முடியாதபடி அடக்குமுறையும் தடை உத்தரவும் போடுவதைப் பலமாகக் கண்டிக்கிறோம், உரிமை பறிக்கப்பட்டு, மக்கள் எமைகளாக்கப்படுகிறார்கள். இது ஊராளும் முறையல்ல, உறுமிக்கிடந்த இட்லர், முசோலினி போன்றோரின் முறை என்ற காரணத்தால்.

எதற்கு எடுத்தாலும் டில்லிக்குக் காவடி தூக்கும் போக்கைக் கண்டிக்கிறோம். மாகாண சுயாட்சி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்ற காரணத்தால்.

இந்தியைத் திணிப்பதைக் கண்டிக்கிறோம், இனிய தமிழ்கெடும், தமிழர் வாழ்விலே உரியநஞ்சு கலக்கப்படும், என்ற காரணத்தால்.

மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான, மதுவிலக்கு, ஜெமீன் ஒழிப்பு, உள்நாட்டு பாதுகாப்புப் போன்ற பிரச்சனைகளிலே, நாம் காங்கிரஸ் சர்க்காரின் திட்டத்தையும் முறையையும் ஆதரித்து வந்திருக்கிறோம் - அதே, மக்களின் நல்வாழ்வுக்குக் கேடு செய்யக்கூடிய காரியங்களைக் காங்கிரஸ் சர்க்கார், எக்காரணம் கூறியோ, செய்ய முனையும்போது, எதிர்த்து வந்திருக்கிறோம்.
நல்லறிவும், நாட்டு மக்களிடம் அக்கறையும் கொண்ட எதைக் கட்சி செய்யாது. இதுபோல! இதைவிடக் கண்ணியமான முறையிலும் கருத்துத் தெளிவுள்ள விதத்திலும், எந்தக் கட்சியாவது, நடந்து கொள்ள முடியுமா என்று கேட்கிறோம்.

இந்தக் கண்ணியத்துக்கு நமக்குக் கிடைத்த பரிசு என்ன? நூற்றுக்கணக்கானவர்களுக்குச் சிறைவாசம்! பலருக்குத் தடியடி! பத்திரிகைக்கு ஜாமீன்! புத்தகங்களுக்குத் தடை! நாடகங்களுக்குத் தடை! பொதுக் கூட்டங்களுக்குத் தடை! கட்சித் தோழர்கள்மீது வழக்கு! கட்சிப் பற்றுக்கொண்ட மாணவர்களுக்குத் தண்டனை! இவ்வளவும், நமக்கு!! அதன்றி, ஏசல்பணம் ஏராளமாக! தூற்றல் பிரசாரம், தொடர்ந்து!

காங்கிரஸ் சர்க்கார் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் நாட்டு மக்களின் நன்மைக்கு உகந்த, எந்தக் காரியத்தைச் செய்யும்போது, நாம் எதிர்த்தோம் என்று கூறட்டுமே, தூற்றட்டுமே நண்பர்கள்.

நாட்கள் பலவாகிவிடவில்லை. நமது தோழர்களுக்கு அடிவிழுந்து குடந்தையில் அன்பின்உருவம், அஹிம்சைப் போதகர், காந்தியாரின் பெயர் கூறி, ஆளவந்துள்ளவர்கள் தந்த தடியடி? அந்த இரத்தக்கறை கூட இன்னும் போகவில்லை - தழும்பு மாறவில்லை - எனினும் - அதே நிலையிலேயும் கூட, நாம், அறநிலைப் பாதுகாப்பு விஷயமாகக் காங்கிரஸ் சர்க்கார் ஒரு சட்டம் தீட்ட முன்வந்து, மகிமையினால் எப்புரியிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று எண்ணும் எத்தர் சிலர், இதன் பொருட்டுக் காங்கிரஸ் சர்க்காரைக் கண்டிக்கவும், எதிர்க்கவும் துணிந்தபோது, இரத்தக்கறையைக் கூடப் பிறகு கழுவிக் கொள்ளலாம், இப்போது நாம் முதலில் செய்ய வேண்டியது, காங்கிரஸ் சர்க்காரை ஆதரிப்பதுதான், என்று பெருங்குணம் கொண்டு, ஓமந்தூரரின் பக்கம் திரண்டு நின்றோம்!

கண்ணியத்துக்கும், கொள்கைப் பற்றுக்கும் இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு ஏதேனும் உண்டா, என்று கேட்கிறோம்.

பண்புடையோரின் செயல் எங்ஙனம் இருக்கும் என்பதை, இதிலிருந்தேனும், காமராஜர்கள் தெரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

காங்கிரஸ் சர்க்காரின் திட்டம், நமது கட்சியைக் கருவறுக்கும் அளவுக்கு அடக்குமுறை வீசும் கட்சியின் திட்டம் என்ற காரணத்துக்காக அந்தக் கட்சி கொண்டுவரும் மடாலய சம்பந்தமான மசோதாவை நாம் ஆதரிக்காமலோ, அக்கறை செலுத்தாமலோ, இருந்துவிடவில்லை கட்சிமாச்சரியங்களைவிட, கொள்கைமேலானது, என்ற உள்ளத்தினராகையால், நாம், இச்சமயத்தில், காங்கிரஸ் சர்க்காரின் போக்கை ஆதரிப்பதே முறை என்று தீர்மானித்தோம்.

இதேபோது, சொந்தக் கட்சியினர், கூடிக்குலவுபவர், கொடிகட்டி வாழ்பவர்கள், எவ்வளவு கோணற் சேட்டைகளைச் செய்து வருகின்றனர் என்பதைக் கவனித்துப்பார்க்க வேண்டுகிறோம்.

கட்சிமாச்சரியம், அடக்குமுறையினால் தாக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள கோபம், இவைகளை எல்லாம் மறந்து, மடாலயங்களின் போக்கைக் கட்டுப்படுத்தும் துவக்கமாக உள்ள மசோதா மக்களின் நன்மைக்கு ஏற்றது. எனவே அதனை ஆதரித்ததாக வேண்டும், என்று நாம் துடித்தெழ, அதே சமயம், வைத்தியநாத ஐயர்கள், கட்சிப் பற்று, கட்சிக் கட்டுப்பாடு, முதலியவற்றைத் துச்சமென்று தூக்கி எறிந்துவிட்டு, மத விஷயத்திலே தலையிட அனுமதித்துவிட்டால், பிறகு நம்மவரின் ஆதிக்கமே ஆஸ்தமித்துவிடுமே என்று அஞ்சி, முக்கியம் என்று எண்ணி, ஓமந்தூரரின் திட்டத்தை முறியடிக்கக் கிளம்பியுள்ளதையும் - இந்த இரு காட்சிகளையும், ஒப்பிட்டுப் பார்த்து பாடம் பெற வேண்டுகிறோம், நம்மைப் பகைத்துக் கொள்வதே, பாரத மாதாவுக்குப் பிரியமான சேவை என்று எண்ணும் நண்பர்கள்! நமது கழகம், வேல் பாய்ந்த வேழம் போலிருக்கிறது, ஓமந்தூரார் வேல் வீசிய வீரர் - வேங்கை துரத்துகிறது அவரை, வஞ்சகம், சனாதனம், வர்ணாஸ்ரமம், அவரைத் துரத்துகிறது, வேழம் அவருக்குத் துணை நிற்கிறது!

(திராவிடநாடு - 20.2.49)