அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வேண்டுகோள்!

“மலேய சர்க்காரால் தூக்குத் தண்டனைக்கனுப்பப்பட்ட கன்னையா அதிலிருந்து தப்பி இன்று ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். அவரை நம்பி வாழ்ந்த அவரது குடும்பம் தெருவீதியிலே நிற்கிறது. வறுமையோடு போராடி வாழ்க்கையிலே துன்ப முத்திரை பொறிக்கப்பட்ட அவரது குடும்பம் நாதியற்றுத் தவிக்கிறது.

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த கன்னைய்யாவை நம்பி வாழும் உயிர்கள் ஐந்து கிழத்தாய் – தந்தை – விதவை சகோதரி – இரண்டு தங்கைகள். அவர்கள் அனைவரும் கன்னையாவை நம்பி வாழ்கிறார்கள். தூக்கு மேடையிலிருந்து கன்னையாவை தப்ப வைத்தோம். அதற்கென உழைத்த இடதுசாரி கட்சிகளுக்கும் இந்திய அரசாருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். பிரச்சினை முடிந்துவிடவில்லை. சிறைத் தண்டனையை ரத்துசெய்து கன்னையாவை இந்தியாவிற்கு அனுப்ப மலேயா சர்க்காரை வற்வுறுத்துவோம். அதற்காகஉழைக்க சகல முற்போக்குக் கருத்துப் படைத்த கட்சிகள் – தொழிற் சங்கங்கள் – இயக்கங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கூட்டங்களைக் கூட்டி – தீர்மானங்கள் நிறைவேற்றி – தந்திகள் அனுப்பி இந்திய சர்க்காரையும் மலேயா சர்க்காரையும் கேட்டுக் கொள்வோம்“ என்பதாக நாகல்கோவில் கன்னையா விடுதலைக் கமிட்டி செயலாளர் தோழர் அந்தோணி எழுதுகிறார்.

செய்தி – திராவிட நாடு – 23-3-52