அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வேதாந்தியின் விழிப்பு

வாழ்வோ அநித்யம்; உலகமோ மாயை, எல்லாம் மன மயக்கு, இதை நம்பினாலோ வரும் மன அழுக்கு; என்று வேதாந்தி விளக்கினார். ஆதாரஙகளைக் காட்டினார். ஆஹா! என்ற கேட்போர் வந்தனர், அவரது புகழ் ஓங்கிற்று.

கந்தலும் பீதாம்பரமும் என்ற பேதம், அரண்மனை குடிசை என்ற வித்தியாசம், சொக்குவது துக்கத்தால் கிடப்பது, இவைகள் உண்மையை சார்ந்தோர்க்கு இல்லை, என்று உபதேசிக்கிறார்.

அவருடைய உபதேசத்தைக் கேட்டு உள்ளம் குளிர்ந்த மக்கள், பாலும் பழமும் தேனும் பிறவும் தந்தனர். “இவை என் எதிரே இருப்பதும் ஒன்றுதான் உள்ளே போவதும் ஒன்று தான். எனக்கு அந்த வித்தியாசம் இல்லை” என்றுரைத்தார் பழத்தைத் தேனில் தோய்த்து உள்ளே அனுப்பி, அந்தப் தயைப் பிறகு பாலால் கழுவினார். படுத்தார், துயின்றார்.

அவருடைய வேதாந்தத்தைக் கேட்ட நேரத்திலே வேதனைப்பட்ட மக்கள் ஓர் வித ஆறுதல் பெற்றனர், வீடு பெற்றனர், அங்கே அவர்களை உலகம் கொண்டு அழைத்தது, “உன் உடம்புக்குக் காய்ச்சல்! அதற்கு மருந்து வாங்கி வா, போ! உன் மனைவி கர்ப்பவதி, கேள் அவளுடைய வேதனைக்கு போய் அழைத்து வா மருத்துவரை. அதோ, கதவு தட்டுகிறது யார், மார்வாடி! போய் மண்டியிட்டு மனுச் செய்துகொள், மழைக்காலமாயிற்றே கூரை ஒழுகுமே, அதைக் கவனி” என்று உலகம் உரைக்கிறது.

துயிலினின்றும் எழுந்த வேதாந்தி, காணிக்கை செலுத்த வந்த செல்வவானைப் பார்த்து, “மாயா உலகை நீ மதியாதே, மாநில வாழ்வது நிலையாதே!” என்று உபதேசிக்கிறார். பொருள் தருகிறார் உபதேசிக்கிறார். பொருள் தருகிறார் புண்ணியந்தேடி வந்த பூமான். பொருள் உன்னிடம் இருந்தாலென்ன, என்னிடம் இருந்தால் என்ன?” என்று புன்முறுவலுடன் கூறுகிறார் வேதாந்தி. பணம் வேதாந்தியின் பெட்டியிலே படுத்து உறங்குகிறது!

வேதாந்தி, வேதனையறியாது வாழ்கிறான், உழைக்காது அனுபவிக்கிறான், ஊர்க்குபதேசம் செய்து வாழ்க்கைச் சுவையைப் பருகுகிறான். ஆனால், உலகமே மாயை என்று பேசுகிறான்.

வேதாந்தத்தைக் கேட்ட உழைப்பாளியோ, புழுப்போல் துடிக்கிறான் தரித்திரத்தில், செக்குமாடாக உழைக்கிறான், சீலைப்பேன் குத்துகிறான், அவன் வாழ்க்கையைச் செல்லரிக்கிறது.

ஏழைக்குக் கருத்து வளராதது கண் திறவாதது, கஷ்டத்துக்குக் காரணம் கண்டு பிடிக்க முடியாது திணறுவது கஷ்டத்தைப் போக்கிக் கொள்ளக் கையை மேலுக்குத் தூக்கிடும் காரியமின்றி வேறறியாதிருப்பது, வேதாந்தி, சித்தாந்தி, மதவாதி, என்போர் உலகிலே காணப்படும் காட்சி, நிலை, ஆகியவற்றுக்கு மாயை என்ற தத்துவமோ, வினை என்ற சாக்கோ, மேலுலகம் என்ற ஆசை மொழியோ கூறி வைத்ததால்தான்.

சமதர்மச் சிங்கம், சோவியத் தலைவர், லெனின், இத்தகைய வேதாந்தி, சித்தாந்திகளைக் குறித்து அழகியதோர் மொழி, ஆழ்ந்த கருத்தமைந்ததோர் வாசக முரைத்தார், “உலகவிளக்கம், வர்ணனை, காரணம், பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிவந்தனரே யொழிய, உலகை மாற்றி அமைக்க வேண்டும் என்று முயன்றதில்லை” என்றுரைத்தார்.

வேதாந்தி, சித்தாந்தி, மதவாதி என்போர், உலக உற்பவம், உலக காரணம், உலகினோருக் குற்ற நிலைக்குக் காரணம் என்பன பற்றிப்பேசினர், ஏடெழுதினர், நாட்டினரால் நன்கு உபசரிக்கப் பட்டு வாழ்ந்தனர். ஆனால், உலகிலே இருக்கும் கொடுமை மடைமை, வேதனை, சூது, என்பவைகளைப் போக்கத் தம் சிறு விரலை அசைத்தனரில்லை. அரண்மனைப் பூங்காவிலே, சதங்கை குலுங்க நடந்து வந்த அரசிளங்குமரி, அன்றலர்ந்த ரோஜா, மணம் வீசும் மல்லிகை, முறுவல் தரும் முல்லை, அழகிய அல்லி, சுகந்தம் வீசும் மனோரஞ்சிதம் ஆகியவற்றைக் கண்டு களிகொண்டு, ஆடிப்பாடி, சேடியருடன் கூடிப், பூக்கொய்து மாலை தொடுத்து மகிழ்கிறாள். ஆனால், கதிரோனைக் கண்டதும் கண் விழித்து, நிலந்திருத்தி நீர் பாய்ச்சி, காவலிருந்து பாடு பட்ட தோட்டக்காரனன்றோ கஷ்டமறிவான். வேதாந்தி, அந்த அரசிளங்குமரி போன்றவனே! காட்டைத் திருத்த கழனியை உழ, தோட்டம் காக்க, மலை குடையப் பாறை பிளக்க, அவன் வாரான். காய்ந்த வயறும் குழி விழுந்த கன்னமும் பஞ்சடைந்த கண்களும் அவனுக்கல்ல! கந்தலன்று அவன் அணிந்திருப்பது, கம்பங் கூழன்று அவனுக்கு; பீதாம்பரதாரியாக இருப்பான்! அத்தகைய வேதாந்திகளை விரட்டியடித்தே வீரன் லெனின், பாட்டாளி மக்களின் ஆட்சியை ரஷியாவிலே அமைத்தான். செல்வம் படைத்துச் சொகுசாக வாழ்வோர் சிலராய் சொல்திறமும், மக்களை மயக்கும் மொழித் திறமும் பெற்ற சிலரும், சொகுசாக வாழுகின்றனர்; முன்னவர் சிற்றரசன், சீமான், முதலாளி; பின்னவர், வேதாந்தி, சித்தாந்தி, புராணிகன், பாகவதன், குருக்கள், ஜோதிடன், மடாதிபதி ஜீயர், மகந்து குலகுரு முதலியோராவர்; முன்னவர், உரிமை கொண்டாடி உரத்த குரலில் பேசி ஊரை அடக்குவர், பின்னவர், மாயைபேசி, மெல்லிய குரலால் மக்களை மயக்குவர்; இருசாராரும் சமதர்ம வாழ்வுக்கு இசையார்.

சர். ராதாகிருஷ்ணன் ஒரு வேதாந்தி! ஆரிய பீடமாம் காசியிலே உள்ள சர்வ கலாசாலையின் பிரதம பூஜாரி! மெல்லிய உடல் படைத்த இந்த வேதியரின் உள்ளத்திலே, மேனாட்டு கீழ்நாட்டு வேதாந்த சாரம் ததும்புகிறதாம். நவீன வேதாந்தி, எனவே நடந்து சென்று நல்லுரை கூறார், பறந்து செல்கிறார் பாரிஸ், இலண்டன் முதலிய பட்டினங்கட்கு; பட்டுப் பீதாம்பரமணிந்து மான் தோலாசனத்தில் அமர்ந்து உலக சம்ரட்சணார்த்தம் உபதேசம் புரிவதில்லை, ஆங்கில உடைதரித்து, அழகான மோட்டார் ஏறி, மாணவர் கூட்டத்திடையே “மன்னர் பிரானின் மொழியை” மலருகிறார். நடை உடை பாவனை மேனாட்டுடையது; எண்ணமோ, ஆரியம்! ஆங்கிலமேல் பூச்சிலே ஆரிய நச்சு!! அதை அவர் தந்திருக்கிறார், கல்கத்தாவிலே சென்ற வாரம் அவராற்றிய கமலா பிரசங்கத்திலே! இங்கு, சோவியத் வாடை வீசினால், இத்தகைய சொகுசுக்காரர் தம் கடையக் கட்டுவர். அதைத்தான் வார்தா தடுத்து விட்டதே. எனவே இத்தகைய வேதாந்திகள் உலவவும் பேசவும் வசதி இருக்கிறது. வார்தா தந்த பாதுகாப்பே தன்போன்றவர்கட்கு வாழ்க்கை வழியை வசதியானதாகச் செய்து தந்திருக்கிறது என்பதை அறிந்த சர். இராதா கிருஷ்ணன், செய்நன்றி கொல்லாமல், காந்தியாரைப் புகழ்ந்தும், அஹிம்சையைப் போற்றியும், அகில உலகும் இந்த அவதார புருஷரை அறிந்து கொள்ளப் போகும்நாள் வருமென்று ஆரூடம் கூறியும் பேசினார்.

காந்தியாரை அவதார புருஷரென்று உலகம் தெரிந்து கொள்வது பிறகு இருக்கட்டும், அறிந்து கொண்ட இந்த அந்தணர், ஏன் இன்னமும் அகாகான் அரண்மனை சென்று அவரடி பூஜித்து நில்லாது, உபஅத்யட்சகராக உலவி ஊன் சுமந்து திரிகிறார் என்று கேட்கிறோம். அஹிம்சையைப் பற்றிப்பேசும் இந்த “அறிவாளி” அஹிம்சாவாதிகள் இன்று “அகோர வீரபத்திரர்களான”து தெரிந்து, அதைத் தடுக்க, என்ன செய்தார் என்று கேட்கிறோம். இவருடைய ஆளுகையிலே இருக்கும் காசி சர்வகலாசாலையின் கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு கடுவேகமாக வெளியே போனாரே தவிர, அஹிம்சை பற்றிப் பேச ஏன் அவர் முயலவில்லை என்று கேட்கிறோம்.

“இன்றைய மதம்” என்பது பற்றிப், பேசவும் மனந்துணிந்தார் இந்த மின்மினி. இதற்கு ஏதேதோ ஏட்டுரைகளைக் கொட்டுகிறார். இருதய ஜோதியே இந்த மார்க்கம், இகபர மார்க்கமே இந்து மதம் என்று சுலோகங்களைக் கூறுகிறார். ஏட்டிலே இருப்பதை இனியோர் சமயம் கவனிப்போம், நாட்டிலே உள்ள இன்றைய மதம் எது என்று ஆண்மையுடன் உரைக்கட்டும் ஆங்கில மேல் பூச்சுக்கார ஆரியர். அகில உலகும் அறியட்டும், ஆபாசமும் அநீதியும், அக்ரமமும் ஆணவமும், மடைமையும் மமதையும், “இன்றைய மதமாக” இருக்கும் கோரத்தை, கூறவாரும் என்று அறைகூவி அழைக்கிறோம்.

இந்நாட்டிலே, பல்லாயிரம் சாமிகள், கோட்டை கொத்தளம் போல் கோயில்கள், அவைகளைக் கூடாரமாகக்கொண்டு வேட்டையாடும் ஆரியக் கூட்டம், அந்தக் கூட்டத்திடம் சிக்கிக் கருத்திழந்து காசு இழந்து கபோதிகளாக உள்ள மக்கள் அவர்கள் படிக்கும் மதநூற்கள், அதிலே வரும் மடத்தனமான கதைகள் “இன்றைய மதமாக” இருப்பதையும், இவைகளைக் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்பவனே பக்தன் - ஆஸ்திகன் - இவ்வளவு ஆபாசத்தையும் எப்படியப்பா நம்புவது என்று கேட்பவன் நாத்திகன் என்று பேசப்படுவதை நெஞ்சிலே ஈரமும் வீரமும் இருப்பின் சர். இராதாகிருஷ்ணன் எடுத்துரைக்கட்டும். கூறக் கூசுவாரானால், நாம் கூறுகிறோம், அதை மறுக்கட்டும். மனதிலே திடமிருப்பின் என்று கூறுகிறோம்.

இத்தகைய ஆபாசத்தை களைய இவர் முயன்றாரா இது வரை! எப்படி முயலுவார்? அது, நுனி மரமேறி அடி மரம் வெட்டுவது, அவரைப் பொறுத்த மட்டிலே! அவருடைய பீடமே, அந்த ஆபாச மாளிகையிலே இருப்பது.

ஆனால், இந்நாட்டிலே ஓர் சமதர்மச் சூறாவளி மக்கள் மனதிலே எழும்பினால் உரிமைப் போர் உணர்ச்சி மக்கள் உள்ளத்திலே கிளம்பினால், “பசி! பசி!” என்று கதறும் மக்களிடம் இவர் போன்றோர் “பஜி! பஜி!” என்று கூறினால், யாரை? எம்மை இக்கதிக்கு ஆளாக்கி, நாங்கள் இவ்வளவு இடரிலே வீழ்ந்து கிடந்தபோது இதம் செய்ய யார் முன் வந்தனர், நாங்கள் பஜிக்க” என்று பதைத்த மக்கள் கூறி, “பிடி! இந்த வேதாந்தி சித்தாந்தி மதவாதிக் கூட்டத்தை என்று முழக்கமிடுவர். வேதாந்திகளின் மனப்பிராந்தி அன்று ஒழியும் விழிப்பு ஏற்படும். அதுவரை சர். இராதாகிருஷ்ணர்கள் உலவட்டும்!

20.12.1942