அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வேவல் பிரபு

இந்தியாவின், வைசிராயாக நியமிக்கப்பட்டுள்ள வேவல்பிரபு, அவர்கள், நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். நமது நாட்டுப் படைத்தலைவராக வீற்றிருந்தவர். இவர், இச்சமயம் இங்கு வைசிராயாக நியமிக்கப்பட்டிருப்பது பற்றி, இங்கும் வெளிநாடுகளிலும் விசேஷமான பாராட்டுதல் பூத்தன.

வேவல் பிரபு, இராணுவத்தையே தொட்டிலாகக் கொண்டவர். போர்க்களங்கில் பற்பல பணி புரிந்தவர். அனுபவம் அமோகம்.

இராணுவப் பள்ளிக்கூடத்திலே, அவர் படித்தபோது, முதல் வகுப்பிலே தேறினார். ரஷிய துருப்பிலே அவர் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த ஜெர்மன் சண்டையின்போது, வேவல் பிரபு, பிரான்சிலே, போர்க்களத்திலே பணிபுரிந்தார். அச்சமயம் அவருக்குக் காயம் ஏற்பட்டது. பிறகு, ஓர் முறை வேவல் பிரபு, ரஷியப்படையிடம் சென்று, பல விஷயங்களை ஆராய்ந்தறியும் சந்தர்ப்பம் பெற்றார்.

1920க்குப் பிறகு, வேவல் பிரபு, மீண்டும் ஓர் முறை, ரஷ்யப் படைகளின் யுத்த முறைப் பயிற்சி நடைபெற்றதைக் கண்டறிந்தார். பல பிரபல இராணுவத் தலைவர்களிடம் - ஜெனரல் சர். எட்மண்டு ஆலன்பி, சர். பிலிப்செட் உட், போன்ற பலரிடம் நெருங்கிப் பழகி இருக்கிறார். பிரான்சு, பாலஸ்தீன், டிரான்ஸ் ஜோர்டான் முதலிய பல நாடுகளிலே சேவை புரிந்திருக்கிறார். 1939, ஜூலை மாதம், வேவல் பிரபு மத்தியக் கிழக்குக் களத்திற்குச் சேனாதிபதியாக நியமிக்கப்
பட்டார். 1941 ஜூன் மாதம், வேவல் பிரபுவை, இந்தியாவின் சேனாதிபதியாக நியமித்தனர்.

இப்போது, வேவல் பிரபு, இந்தியாவுக்கு வைசிராயாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவ்வளவு போர் அனுபவம் பெற்றுள்ளவர், போர் மூண்டு கொழுந்து விட்டெரியும் இந்த நாட்களிலே, இந்தியா
வுக்கு வைசிராயாக நியமிக்கப்பட்டது மிக்க பயன்தரக்கூடியது என்பதிலே ஐயமடைவோர், இல்லை. வேவல் பிரபு, வைசிராயாக வீற்றிருக்கும் காலம் போர்க் காலமாக இருக்கும் என்பது மட்டுமன்று, வெற்றி விழாவை நம்நாடு கொண்டாடப் போவதும், வேவல் பிரபு வைசிராயாக இருக்கும் காலத்திலேயேதான்.

வேவல் பிரபு, போர் அனுபவம் பெற்றவர் மட்டுமன்று, அவ்விஷயத்திலும் மற்ற அறிவுத்துறையிலும், ஆராய்ச்சித் திறம் கொண்டவர் என்பது, அவருடைய சொற்பொழிவுகளின் தொகுப்பான, “போர்த்தலைவர்களும் - போர்த்தலைமையும்” (நிமீஸீமீக்ஷீணீறீண் ணீஸீபீ நிமீஸீமீக்ஷீணீறீண்லீவீஜீ) என்ற அரிய ஏட்டினைப் படித்தோர் உணருவர். அதிலே, அவருடையத் தெளிவான அறிவு, ஆராய்ச்சி நுட்பம், அனுபவம், யாவும் மிளிருகிறது. 1939ஆம் ஆண்டு, இங்கிலாந்திலே, டிரினிடி கல்லூரியில் அவர் இது விஷயமாக ஆற்றியுள்ள சொற்பொழிவு, அவருடைய பரந்த அறிவைக் காட்டுகிறது. மிக்க அபூர்வமான விஷயங்களை, வேவல் பிரபு, எவ்வளவு அழகாகவும், எளிதில் புரிந்துக் கொள்ளக்கூடிய விதத்திலும், சிறந்த சரித சம்பவங்களை மேற்கோள்களாகக் காட்டியும் (குட்டிக் கதை கூறியன்று!) விளக்கியுள்ளார், என்பதற்கு, அவருடைய சொற்பொழிவுகளிலிருந்து இரண்டோர் எடுத்துக் காட்டுகளை இங்கே தருகிறேன்.

போரின்போது, படைத்தலைவரின் மனம் எவ்வண்ணம் இருக்கவேண்டும் என்பதுபற்றி, வேவல் பிரபு விளக்கலானார். அதிலே அவர் அனுபவத்தையும் அறிவையும் இணைத்திருப்பதைப் பாருங்கள். வேவல் பிரபு கூறினார் அக்கல்லூரியிலே.
“நான் ஒரு சாமான்ய ஆபீசராக இராணுவத்திலே இருந்தபோது, மலை (அரண்களிலே) பீரங்கிப் படை வீரனொருவன், மலை பீரங்கிப் படையினருக்குப் புதிய அமைப்புள்ள ஒரு பீரங்கி தரப்பட்டால், அது உறுதியானதா என்பதைப் பரீட்சிக்க, சிலநூறு அடி உயரத்திலிருந்து, அந்தப் பீரங்கியைக் கீழே போட்டுப்பார்ப்பார்கள். கீழே விழுந்த பிறகும், அந்தப் பீரங்கி, பயன்படுமானால்தான், அந்தரகமான பீரங்கியை ஏற்றுக் கொள்வார்கள். ஏன் இந்தப் பரீட்சை என்று கேட்டால், மலைமீது ஏற்றிவைக்கப்படும் பீரங்கி தவறிக் கீழே வீழ்ந்துவிடுவது சகஜமல்லவா, அத்தகைய தவறு நேரிட்டால் தாக்குப்பிடிக்கும் தன்மையிருக்கும் பீரங்கிதானே, மலைச்சண்டைக்குப் பயன்படும், என்று என்னிடம் கூறினார்கள்.

அதுபோலவே, ரைபிள்களை, உபயோகத்துக்கு ஏற்றவைகளா என்று தீர்மானிக்குமுன்னம், அந்த ரைபிள்களை 48 மணிநேரம் சேற்றிலே புதைத்துவைப்பார்கள். பிறகு எடுத்து உபயோகிப்பார்கள். சேற்றிலே இரண்டு நாட்கள் புதைபட்டுக் கிடந்த பிறகும், அந்த ரைபிள்கள் உபயோகமாகக் கூடியவைகளாக இருந்தால் மட்டுமே, அந்த ரக ரைபிள்களை அங்கீகரிப்பார்கள்.

இவ்விதம் செய்யாததால், கடந்த ஜெர்மன் சண்டையின் போது ஓர் இடர் ஏற்பட்டது. பிரான்சுக்கு வந்திருந்த கனடா நாட்டுப் படைகளிடம் ரைபிள்கள், சாதாரண காலத்திலே, உபயோகப்படுத்தப்
பட்டபோது வேகமாகச் சுடக்கூடியவைகளாக இருந்தன. ஆனால் புழுதியும் சேறும் உள்ள பள்ளங்களிலே இருந்தபோது, அதே ரைபிள்களைச் சுட்டபோது, கொஞ்ச நேரம் வேலை செய்ததும், அவை பயனற்றுப்போயின. கனடாத் துருப்புகள், பிறகு இந்த ரைபிள்கள் வேண்டாமென்று கூறிவிட்டு, பிரிட்டிஷ் ரைபிள்களைக் கேட்டுப் பெற்றன.

ஒரு போர்த்தலைவருக்கு உறுதி இருக்க வேண்டும், என்பதை விளக்க, வேவல் பிரபு இந்த இரு விஷயங்களையும் கூறினார். பீரங்கியும் ரைபிளும் உறுதியாக இருக்க வேண்டும் என்பது அவர் கூறினதால் தெரிகிறது; ஆனால், போர்த்தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டுமென்பது இதனால் எங்ஙனம் விளங்கும் என்று கேட்பீர்கள். இதோ கேளுங்கள் அவர் மொழியை.

போரிலே ஈடுபடும், தலைவனின் மனம், 48 மணி நேரம் மட்டுமன்று நாட்கணக்கில், வாரக்கணக்கிலே, புதைந்து கிடக்கிறது! எதிலே? அபத்தமான சேதிகள், நிச்சயமற்ற நிலைமைகள் என்ற சேற்றிலே, போர்த்தலைவனின் மனம் புதைந்துகிடக்கும். எந்தச் சமயத்திலும், எதிரி, எதிர்பாராதவிதமாகப் பாயலாம், எதிர்பாராத விபத்து நேரிடலாம், திடீரெனக் காலநிலை (பருவநிலை) மாறிக்கஷ்டம் விளையலாம்; இச்சமயங்களிலே, சில நூறடி உயரத்திலிருந்து கீழே தள்ளப்பட்டால், உண்டாகும் அதிர்ச்சியைவிட அதிகமான, பலமான அதிர்ச்சி, அந்தப் போர்த் தலைவனுக்கு ஏற்பட வேண்டும்” வேவலின் விளக்க விசேஷத்தைப் பாருங்கள்! மலைமீதிருந்து பீரங்கி தள்ளப்பட்டு, பரீட்சிக்கப்படுவதுபோல, ஒரு போர்த்தலைவன் எதிர்பாராத நிலைமையினால் தாக்கப்படுகிறான். பீரங்கியின் உறுதி, உச்சியிலிருந்து கீழே வீழ்ந்தாலும் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே நிரூபிக்கப்படும், என்பதுபோல, எதிர்பாராத தாக்குதல் தரும் அதிர்ச்சி கண்டு மனதிடத்தை இழக்காதவனே, உறுதி படைத்த போர்த்தலைவனாவான்! எவ்வளவு, ரசமான விளக்கம், எவ்வளவு லலிதாமாகக் கூறினார் என்பதைக் கவனிக்க வேண்டுகிறேன்.

போர்த்தலைவர்களுக்குப் புகழும், செல்வாக்கும் செல்வமும் கிடைத்தால், அது கண்டு, மனம் பொறாது, பொச்செரிப்புக் கொள்பவர்களைப் பற்றி அவர் நன்கு அறிந்தவர். ஆகவே அந்த மனப்பான்மையை மிக அழகாகக் கண்டிக்கிறார், ஒரு பழைய சம்பவத்தை எடுத்துக்காட்டி.

நெப்போலியனிடம் வேலை பார்த்த ஒரு போர்த் தலைவருக்கு, டான்சிப் பிரபு என்ற பட்டம் அளிக்கப்பட்டது. மாளிகை தரப்பட்டது. பதக்கங்களும், ஆடம்பர அணிகளும் அளிக்கப்பட்டன.

போர்த்தலைவருக்கு இவ்வளவு செல்வமும் வழங்கப்படுவதா, என்று பொச்செரிப்புக்கொண்ட, பட்டாளத்தைச் சேராத ஒரு நண்பர், டான்சிக் பிரபுவிடம் சற்று அசூயை கொண்டான். இதனை அந்த யூகமிக்க போர்த்தலைவர் தெரிந்துகொண்டார். சரி, இவனுக்குப் புத்தி கற்பிக்கவேண்டும் என்று எண்ணினார். ஒருநாள், அந்த அங்கலாய்ப்புக்காரனைக்கண்டு, “சரி, இந்தச் செல்வம், சுகம் ஆகியவைகள் யாவும், நீயும் பெறவேண்டுமானால் ஒரு காரியம் செய் தோட்டத்துக்குவா, உனக்கு எதிரே 40 காலடி தூரத்திலே நான் நின்று, 10 தடவை துப்பாக்கியால் சுடுவேன், நீ கலங்காது எதிரே நிற்கவேண்டும், அந்தச் சோதனையிலே நீ பிழைத்துக்கொண்டால், நான் என் மாளிகையையும், அதிலுள்ள பொருளையும் உனக்கு அளித்து விடுகிறேன்” என்று அந்தப் போர்த்தலைவர் கூறினார். என்ன செய்வான் பொச்செரிப்புக் காரன்? ஐய்யோ, அது முடியாது, என்று கூறினான். அப்போது, போர்த் தலைவன், அவனைப் பார்த்து “அப்பா, நான் இந்தச் சுக சம்பத்துகளைப் பெறுவதற்கு முன், பல நூறு தடவை, குண்டுகள் சுடப்பட்டன, என்மீது; அவைகளிலிருந்து பிழைத்தபிறகே இந்தச் செல்வத்தைப் பெற்றேன், அது கவனமிருக்கட்டும் என்று கூறிப் புத்தி புகட்டினாராம்! இந்தச் சுவையுள்ள சம்பவத்தை வேவல் பிரபு கூறினார் போர்த்தலைவர்கள், எவ்வளவு ஆபத்துகளை அணைத்த பிறகு,, செல்வத்தையோ, சுகத்தையோ, புகழையோ, பொன்னையோ, பதவியையோ படாடோபத்தையோ பெற்றுத் தழுவுகிறார்கள், என்பதை விளக்க. ஆம்! உண்மைதான்! என்று கூறாதவர் யார், என்று கேட்கிறேன்.

போர்த்தலைவர்கள், வாலிபர்களாக இருக்க வேண்டுமா? வயது முதிர்ந்தவர்களாக இருத்தல் வேண்டுமா? என்ற பிரச்னை பலராலும் பேசப்படுகிறது. இப்போது கிழக்கு ஆசியாவுக்குப் போர்த் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மவுன்ட்பேடன் பிரபுவுக்கு வயது 43! இது, மேனாட்டு முறையின்படி, சிறிய வயது! நம் நாட்டிலே, இதுதான் பாட்டனார் பருவம் - அங்கு அப்படி அல்ல! 43 வயதிலே, இவ்வளவு பெரிய பொறுப்புள்ள பணியிலே, மவுன்ட் பேடன் பிரபுவை நியமிக்கலாமா என்று கேள்வி பிறந்ததாம், அதுபற்றி பிரிட்டிஷ் முதலமைச்சர், ஒரு சொற்பொழிவிலே “43 வயதிலே ஓர் ஆசாமி, முக்கியமான விஷயங்களைத் தெரிந்து, திறமை சாலியாக முடியாது போனால், அவன் பிறகு, திறமைசாலியாகும் இலாயக்கே அற்றவன் என்று கூறிவிடலாம். ஆகவே 43 வயது என்பது, மகத்தான பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாத பருவமன்று” என்று கூறியிருக்கிறார். இந்தப் பிரச்னைபற்றி, வேவல் பிரபு, நீதிபதி தீர்ப்புக் கூறுமுன், இரு தரப்பு வாதங்களையும் சீர்தூக்கிப் பார்ப்பதுபோல் திறமையாகப் பேசியிருக்கிறார்.
ஹனிபால், அலெக்சாண்டர், நெப்போலியன், வெலிங்டன், உல்ப், ஆகிய பலர் வாலிபப் பருவத்திலேயே போர்த் தலைவர்களாகி, விருதுகள் பெற்று, தமது ஜெயக்கொடியைப் பறக்கவிட்டனர். இந்தப் பட்டியைப் படிக்கும்போது, நரைத்த தலையரைவிட நாடி முறுக்குள்ள வாலிபர்களையே போர்த் தலைவராக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், ஜுலியஸ் சீசர் எனும் ரோமாபுரி ரணகளச் சூரரும், கிராம்வெல் என்ற பிரிட்டிஷ் வீரனும், 40 வயதுக்கு மேல்தான், போர் வீரர் ஆயினர். பிரிட்டனின் பெருமை வாய்ந்த படைத்தலைவருள் ஒருவரான மாரல்பரோ என்பவர், மகத்தான வெற்றி பெற்றபோது அவருக்கு வயது 61. ராபர்ட் என்ற மற்றோர் பிரிட்டிஷ் போர்த்தலைவருக்கு 67ம் வயதிலே அரிய வெற்றிகள் கிடைத்தன. கடந்த ஜெர்மன் சண்டை யின்போது நேசநாட்டு வீரராம் பாஷ் என்பவருக்கு வயது 67.

ஆகவே முதியோர், கீர்த்திபெற்றதற்கும் பட்டி உண்டு, வாலிபர் விருது பெற்றதற்கும் வரலாறு உண்டு.

கிழப்பருவத்திலே, களத்திலும் காதலிலும் ஈடுபடுவது கேலிக்கூத்து என்பர். இவ்விரண்டிலும் ஈடுபடக்கூடாத, பருவம் இது என்று நிச்சயமாகக் கூறமுடியாது. ஆனாலும், வாலிபர்கள் போர்த் தலைவர்களாவதற்குத் தடையோ, வசதிக் குறைவோ, இருத்தலாகாது, வயது நிர்ணயத்தைத் தளர்த்திவிடவேண்டும்; இது, வேவல் பிரபுவின் கருத்து. இது வாலிப உள்ளத்துக்கு, எவ்வளவு உவகை தரும், என்பதை விவரிக்க வேண்டுமா! போர்த் தலைவனுக்கும் அவன் ஆணைக்கடங்கியுள்ள பட்டாளத்துக்கும் இருக்கவேண்டிய தொடர்பு பற்றி, வேவல் பிரபு கூறியுள்ள கருத்தும் ரசமிக்கது.

“ஒரு போர்த்தலைவனுக்கும் அவனிடமுள்ள துருப்புகளுக்கும் இடையே இருக்கவேண்டிய சம்பந்தம், ஒரு குதிரை வீரனுக்கும், அவன் சவாரி செய்யும் குதிரைக்கும் எத்தகைய சம்பந்தம் இருக்கவேண்டுமோ, அது போன்றது, குதிரையை அடக்கிச் செலுத்த வேண்டும், பழக்கிக் கட்டுப்படுத்தவேண்டும். ஆனாலும், அன்பும் ஆதரவும்காட்டி, உற்சாகமூட்டவும் வேண்டும்” என்று வேவல் பிரபு கூறுகிறார். தமது கருத்தை மேலும் எளிதாக்க ஒரு பழமொழி கூறினார். யாது அஃது?

“லாயத்திலே இருக்கும்போது, குதிரை, 500 பவுன் பெறுமானமுள்ள உயர்தரமானதென்று கருதிப் பராமரிக்க வேண்டும். சவாரிக்கு மைதானத்தில குதிரையைச் செலுத்தும்போது, பத்தரை ஷிலிங்கூடப் பெறுமானமற்றதாக எண்ணியே அதைச் செலுத்தவேண்டும்.”

இந்த ஒரு மொழியே, ஒரு கிழமை பூராவும் சிந்தனைக்குக் சரக்குதரும்! இத்தகைய அழகும் ஆழமும் கொண்ட அறிவுச்சுடர் மிளிருகிறது அவருடைய சொற்பொழிவிலே.

எல்லாம் சரிதான்! அவர் ஒரு போர்வீரன்தானே! அரசளா அவர் வருகிறாரே! அந்தத்துறையிலே அவருடைய அறிவு எப்படி என்று அன்பர்கள் கேட்பர். அதனையும் அவரே, 1939லேயே விளக்கிப் பேசியிருக்கிறார்.

நிர்வாகத்திலே ஆமையாக இருக்கிறார் அரசாளும் கூட்டத்தைச் சார்ந்தவர் என்று போர்வீரன் கருதுவான், குறை கூறுவான். போர்வீரன் பதட்டமாகக் காரியமாற்றுகிறான் என்று அரசாளும் நிர்வாகி நிந்திப்பான். யோசித்தால், இருவர் நிலையும் ஒன்றே என்பது தெரிந்துவிடும். இதனை வேவல் பிரவு, வேடிக்கையாக கூறுகிறார்.

“இதைச் செய்வது என்று நிச்சயித்த பிறகு, என்னய்யா, இவ்வளவு மந்தம்; தாமதம்” என்று போர்வீரன் அரசியல் நிர்வாகியைக் கேட்கிறான். அந்த அரசியல் நிர்வாகி, “சரியப்பா! ஓர் ஆற்றைக்கடந்து, எதிரியைத் தாக்கவேண்டுமென்று தீர்மானித்து விடுகிறாய். ஆனால் அந்தத் தீர்மானம் செய்தானதும், உடனே ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் பாய்ந்துவிடுகிறாயா?” என்று போர்வீரனைக் கேட்டால் என்ன பதில் கிடைக்கும். “அது முடியுமா? படையை அணிவகுக்க வேண்டாமா? முஸ்தீப்புகளைச் சரிபார்க்க வேண்டாமா? ஒரு பக்கத்திலே பாலங்கள் அமைத்துக்கொண்டே இருக்கவேண்டும், அதைக்கண்டு எதிரி இந்தப்பக்கம்தான் நாம் வருவோம், என்று எண்ணுவான், அவ்விதம் அவன் ஏமாறும் சமயத்தை உண்டாக்கிவிட்டு வேறு பக்கமாக ஆற்றைத்தாண்ட வேண்டுமே! உடனே நடக்குமா காரியம்” என்று போர்வீரன் பதில் கூறுவான். “அதைப்போலத்தான் அப்பா! நான் ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னால், பொது மக்களின் மனதைப் பக்குவப்படுத்த வேண்டாமா, என்னென்ன விதமான எதிர்ப்புகள் வருமோ என்று யூகித்து அவைகளைச் சமாளிக்கத் திட்டம் தயாரிக்கவேண்டாமா, சகலருக்கும் திருப்தி தரக்கூடியதாக அதைச்செய்ய வேண்டாமா?” என்று அரசியல் நிர்வாகி கூறுவான்.

இவ்விதமாகப், போர்வீரர், அரசியல் நிர்வாகம் புரிவோர், எனும் இருசாரார் கொண்டுள்ள கருத்தைத் திறம்படப் படம் பிடிக்கும், வேவல் பிரபு வைசிராயாக நியமனம் பெற்றிருப்பது, பொருத்தமானது என்பதிலே இனியும் சில பொச்செரிப்புக் காரருக்குத் தவிர வேறு யாருக்குச் சந்தேகமிருக்க முடியும் என்று கேட்கிறேன். அவருடைய உருவப்படமே, இந்த இதழிலே முதலிலே காணப்படுவது.

12.9.1943