அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வேவல் திட்டம் - பகற் கனவு

முன்பக்கம் வேவல்! பின்புறம் ஜனாப் ஜின்னா! “பாடை”யைத் தூக்கிச் செல்கின்றனர்! பாதையோரத்திலே நின்று கொண்டு, இவ்விருவரும் பிணம் தூக்கிச் செல்வதைப் பார்க்கின்றனர் காந்தியாரும் அவருடைய வாரிசுகளும்! மனிதப் பிணங்கூட அன்று. கழுதை!! வைசிராய் வேவலும், முஸ்லீம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னாவும், செத்துப்போன கழுதையைப் பாடையில் வைத்துச் சுமந்து செல்கின்றனர்.

வேவல் திட்டம் கழுதையாகவும், தோற்றுப்போன திட்டம் என்பதை விளக்கக் கழுதையைச் செத்ததாகவும், திட்டம் தோற்றதற்குக் காரணம் வைசிராயும், ஜனாப் ஜின்னாவுந்தான் என்பதைச் சுட்டிக்காட்டப், பிணத்தை அவர்கள் சுமக்கிறார்கள் என்றும், தீட்டப்பட்டிருக்கிறது.

வேவல் திட்டம் தோற்றுவிட்டது என்பதை வாசகர்களுக்கு விளக்குகிறதாம், இந்தச் சித்திரம் முத்தமிழ் வளர்த்த மதுரையிலே முளைத்துள்ள “தந்தி” என்ற ஏடு, இது போன்றதோர் படத்தைப் பிரசுரித்திருக்கிறது.

உண்மையிலேயே இந்த வேவல் திட்டம், வெளிவந்தது முதற்கொண்டு, தோற்றது வரையிலே, விதவிதமான விசித்திரமான படங்கள் வெளியிடப்பட்டன. தண்டவாளத்தின்மீது ஜனாப் ஜின்னா உட்கார்ந்திருக்கிறார். அவருக்குப் பின்புறமாக “சுயராஜ்ய மெயில்” வருகிறது! இந்தத்தடவை “ஜின்னா முட்டுக்கட்டை” பலிக்குமா என்று கேள்வி? பொறிக்கப்பட்டிருக்கிறது. மெயிலை வேவல் பிரபு ஓட்டிக்கொண்டு வருகிறார்! இவ்விதம் ஒரு படம்!! காந்தியார் சிம்மலா மாநாட்டுக்குக் கிளம்புகிறார். வெற்றியுடன் திரும்பி வருக என்று கூறி ஓர் அம்மையார், அவருக்கு நெற்றியிலே குங்குமம் தீட்டுகிறார்! இவ்விதம் வேறோர் படம்! ஆஜாதின் புன்னகை, நேருவின் கோலம், படேலின் பயணம், பிரசாதின் புறப்பாடு, பந்தின் பரிவு, பாபுவின் பரவசம், என்று வெளிவந்த படங்கள் பலப்பல! சித்திரக்காரரும் நிருபர்களும், போட்டியிட்டுக்கொண்டு, மின்சார வேகத்திலே தங்கள் கற்பனா சக்தியை, பிரசார யந்திரத்தை ஓட்டினர். ஆனால் எந்தப் படக்காரரும் அடைய முடியாத உன்னதமான ஸ்தானத்தை அடைந்துவிட்டார், ‘தந்தி’யில் தீட்டுகோல் நீட்டிக்கிடப்பவர். வைசிராயையும் ஜனாப் ஜின்னாவையும், கேவலம் பிணம் தூக்கிகளாக்கிவிட்டார். பிணத்திலும் பிணம் கழுதையின் பிணம்!! எவ்வளவு திறமை இருந்தால் இவ்விதமான கற்பனை உதிக்க முடியும்! ஒரே படம், அதன்மூலம், இந்த இதழ், வைசிராயையும் ஜனாப் ஜின்னாவையும், கேவலப்படுத்தி, நாட்டு மக்கள் கண்டு கைகொட்டி நகைத்திடும்படி செய்துவிட்டது! என்று அந்த இதழினர் இறும்பூதெய்தியிருப்பர். சித்திரக்காரரை ஆசிரியர் பாராட்ட, ஆசிரியர் அளித்த அருமையான கருத்தாலல்லவா அடியேனால் அந்தப் படைத்தை வரைய முடிந்தது என்று ஓவியர்கூற, வாசகர் இருவரின் இணையில்லாத் திறமை கண்டு பாராட்ட, “தந்தி” இந்த ஒரே படத்தின் மூலம், தன் கீர்த்தியை நிலைநாட்டிவிட்டது!! “தந்தி” காரியாலயத்தார் களிப்புக் கடலிலே மூழ்கியிருப்பர்!!

பார்த்தவுடனே பாரதமாதாவின் புத்ரர்களைப் பரவசப் படுத்தக்கூடிய அந்தப் படம், ஜனாப் ஜின்னாவை மிகத் தாழ்வான முறையிலே கேவலப்படுத்தியிருக்கிறது. படங்கள், விஷய விளக்கங் களுக்குப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சியினரை வேண்டுமென்றே கேவலப்படுத்தப் பயன்படுகிறது, பண்பாடு மறந்த இந்நாட்டிலே! துவேஷத்தினால் தூண்டப்பட்டு இங்ஙனம், எதிர்க்கட்சியினரைக் கேவலப்படுத்தும் கேலிச்சித்திரங்களும் கட்டுரைகளும், ஆத்திரத்திலே கிளம்புவன. எனவேதான், அற்புதமானது, அர்த்தபுஷ்டியுள்ளது, எதிரியைப் படுபாதாளத்திலே தள்ளக்கூடியது என்றெண்ணிப் பூரித்து இவர்கள் வெளியிடும் படங்களைக் கொஞ்சம் நுட்பமாகச் சிறிதளவு மூளைக்கு வேலை கொடுத்துப் பரிசீலனை செய்தால், பிறரை இகழ இவர்கள் சீட்டும் அதே படங்கள் உண்மையிலே, தீட்டும் கட்சியினரையே கேவலமாக்குவதைக் காணலாம்! ஆத்திரம் அடங்கிய பிறகேனும் இவர்கள் அறிவுக்கண் கொண்டு பார்ப்பர் என்ற நம்பிக்கையிலே நாம் இதனைக் கூறுகிறோம், அவர்களுக்குத்தான் அது கிடையாதே என்பீரேல், நமது அனுதாபம் அவர்கட்கு உரித்தாகுக!

இந்தப் பிணந்தூக்கும் காட்சியையே கவனிப்போம். செத்துப்போன கழுதையை வைசிராயும் ஜனாப் ஜின்னாவும் சுமந்து செல்கின்றனர், என்று படம் தீட்டப்பட்டதால், பரவசமடையும் பாரதபுத்ரர்களை, நாம் ஒன்று கேட்கிறோம், “ஐயன்மீர்! ஜனாப் ஜின்னாவை இந்தப் படமூலம் கேவலப்படுத்துகிறீர்கள், இது உங்களுக்கு வாடிக்கை. ஆனால் வேவல் திட்டத்தைக் கழுதை என்று சித்தரித்தீர்களே, வேவல் திட்டம் கேவலமானதுதானா? ஆமெனில் அந்த உணர்ச்சி எப்போது ஏற்பட்டது? திட்டம் தோற்றது, செத்த கழுதையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறதே, திட்டம் தோற்கா முன்னம் உயிருள்ள கழுதையாக இருந்திருக்கும். ஆகஸ்டு வீரரே! அமெரியை எதிர்க்கும் சூரரே! அந்தக் கழுதையைக்காண, ஏனய்யா உங்களின் மாபெருந்தலைவர்கள் ஓட்டம் பெருநடையாக ஓடினர்! அந்தக் கழுதைக்குத்தானே, காந்தியார் உட்பட உமது தலைவர்கள், அனைவரும் அருகம்புல்லும் அருவி நீரும் எடுத்துக்கொண்டு கிளம்பினர், ஆகாயவிமானத்திலே! கழுதை என்று தெரியாது பரி என்றெண்ணி விரைந்தனர் என்று தெரிந்திருக்குமே! தெரிந்த பிறகு ஏன் அதன் தரிசனத்துக்கு ஏங்கிக்கிடந்தீர், அந்தக் கழுதைக்குப் புல் வைத்துக் கொள் வைத்து மேய்த்துத் தேய்த்து, நேசம் கொண்டாடினீர்! அந்தப் பொல்லாத கழுதையோ, தன்னை நெருங்கிவந்த காங்கிரசாரின் சிந்தனையும் செருக்கும் சிதறும்படி காலால் உதைத்தது! ஏனய்யா இப்படிக் கழுதையின் காலடி படத்தானா, இவ்வளவு ஆவலாகச் சிம்லா சென்றீர்? என்று நாம் கேட்பதானால் தீட்டுகோலர் என்ன பதில் கூறுவார்!

இன்று, இந்து முஸ்லீம் பிணக்கு ஆரிய - திராவிடப் பூசல் ஏன் கொழுந்து விட்டு எரிகிறது என்பதற்குள்ள முக்கியமான காரணங்களிலே ஒன்று, இவ்விதமான படங்கள், பதட்டமான கண்டனங்கள், பழி சுமத்தல், பொய்யுரை எனும் முறைகளிலே காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், மற்றவர்களைத் தாக்கும் மடைமைதான், கீர்த்திதரும் செயல் என்றும் நேர்த்தியான முறை என்றும் எண்ணிக்கொண்டு பிற கட்சித் தலைவர்களை, பிரமுகர்களை, கொஞ்சமும் நாகரிக உணர்ச்சியின்றிக், கேவலப்படுத்த ஏடுகள் உள்ளவரையிலே, எரியும் நெருப்புக்கு எண்ணெய்க்குக் குறைவில்லை. மீண்டும் அந்தக் கழுதைப் படத்தைப் பார்க்கும்படி, இதழினரை கேட்டுக்கொள்கிறோம், இவ்வளவு கேவலமான நிலைக்கு ஒரு மாபெருந்தலைவரை, பத்து கோடி மக்களின் வாழ்வுக்காகப் போராடும் தன்னலமற்றத் தீரரை, எதிர்ப்புக்கு அஞ்சாது, மையலில் சொக்காது, குறிக்கோளைக் கைவிட மறுக்கும் தலைவரை, இஸ்லாமிய இலட்சியத்தின் சின்னமாக விளங்குபவரைக் கேலி செய்வது, இந்து - முஸ்லீம் சமரசத்துக்கு நன்மை பயக்குமா? என்று கேட்கிறோம்.

வேவல் திட்டம் தோற்றுவிட்டது, மன மாளிகை மண் மேடாகிவிட்டது, மாய மான் மறைந்து விட்டது, கனவு கலைந்தது, அதற்கு ஜனாப் ஜின்னா என்ன செய்ய முடியும்? பதவிப் பித்தம் காங்கிரசை எதை மறந்தேனும், வேவல் திட்டத்தை ஒப்புக்கொண்டே தீரவேண்டும் என்று வெளிப்படையாகவே பேசவைத்தது. அந்தப் பித்தத்தைச் சித்தத்தில் கொள்ள மறுத்துவிட்டார் ஜனாப் ஜின்னா, அதற்காக அவரைப் படம் போட்டுக் கேவலப்படுத்துவது, என்ன விளைவுக்கு வழி செய்யும்? எதிர்காலத்திலேயுங்கூட, எந்தச் சமரசமும் பலிக்க முடியாத அளவுக்குப் பகைமை உணர்ச்சியையன்றோ வளர்க்கும்.

வேவல் திட்டத்தைக் காங்கிரசார் வரப்பிரசாதம் என்று கருதினர், இன்றும் அது கிடைக்காமற் போயிற்றே என்று ‘தாபம்’ தணியாமுறையிலேதான் உள்ளனர். முஸ்லீம் லீக் தலைவர் வேவல் திட்டத்தை ஆரம்ப முதலே “மோகமயமகாமல்” கவனித்தார், வேவல் திட்டம் வெளியிடப்பட்ட உடனே, காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவு பேரும், “கண்டேன், களிகொண்டேன்” என்று கூவினர் குதூகலத்துடன். “நம்மால் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை இது” என்று எச்சரிக்கையுடன், எக்காளத்துடனன்று, ஜனாப் ஜின்னா பேசினார். வேவல் திட்டம் வெளிவந்த உடனே, காங்கிரசார் நாட்டிய களிப்பை, வெறிக்கூத்தை அதேசமயத்திலே ராஜதந்திர நோக்குடன் அதைக்கவனித்து, அவேசமடையாது, ஆரூடம் கணிக்காது, அலசிப்பார்க்க வேண்டும் என்று பேசின ஜனாப் ஜின்னாவின் யூகத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வேவல் திட்டம் வெளிவந்த பிறகு “நடந்த நடனம் இருக்கட்டும், வேவல் திட்டம் வெளிவருவதற்கு முன்பே, தெளிவாகக் கூறுகிறோம், வேவல் சீமையில் இருக்கும்போதே, “கண்ணன் காட்டிய வழியை” நாட்டுக்குத் தீட்டிய, கனமாகிச் சிலகாலமிருந்து பிறகு மெலிந்த அன்பர் ஆச்சாரியார், வேவல் திட்டத்தின் நகல் எழுதப்படுவதற்கு முன்பே, இங்கு, “எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன? இன்பம் வருவதென்று, சொல், சொல், சொல்” என்று பாடி ஆடினாரே, புலாபாய் தேசாயுடன் கூடிச் சமரசத் திட்டத்தின் சாயலைத் தீட்டிய நவாப் சாடா லியாகத் அலிகான் எவ்வளவு பற்றற்று விளங்கினார் என்பதை, ஆச்சாரியாரின் ஆனந்த நடனத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வேவல் திட்டம் வெளிவந்த உடனே, காங்கிரஸ் தலைவர்கள், வைசிராயை வானளாவப் புகழ்ந்ததையும், பிரிட்டிஷாரின் மனமாறுதலைக் கண்டதாகக் கூறிக் களித்தனர். லீக் அதே சமயத்தில், களிப்புக் கக்கிக்கொண்டிராமல், கருமமே கண்ணாகி இருந்தது. அம்மட்டுந்தானோ, ஐயன்மீர்! சுயராஜியத்தைத் தரக் காந்தியாரை வேவல் அழைத்திருக்கிறார், இனி அரிசிக்குப் பஞ்சமில்லை, ஆடைக்குக் குறைவில்லை, பீடைக்கு இடமில்லை, என்றெல்லாம், பிரசாரம் ஆரம்பமாகிவிட்டதே! போராட்டப் படலம் முடிவுற்றது. இனிப் பட்டாபிஷேகப்படலம் ஆரம்பமாகிறது என்று அமெரிக்காவிலே இருக்கும் காங்கிரஸ் தோழரொருவர் அறிக்கை வெளியிட்டார். படேல் பம்பாயிலே முழக்கமிட்டார், பந்த் திட்டம் தயாரித்தார், நேரு வெளிவந்தார், நீண்ட பிரசங்கங்களை ஏவினார்! இவைகளுக்குப் பொருள் என்ன? வேவல் திட்டம் கழுதை என்று கருதினவர்கள் இப்படி அதன் தரிசனார்த்தம், கற்பூரத்துடன் கிளம்பியிருப்பரா? ஆரம்ப முதல் ஜனாப் ஜின்னா, வேவல் திட்ட விஷயமாகக் காட்டிய ராஜதந்திரப் போக்குடன், காங்கிரஸ் காட்டிய குதூகலத்தை, ஆர அமர ஒப்பிட்டுப் பாருங்கள்.

“ஆம்! இந்தக் கண்ணாடிக் கடையிலே இலாபம் கிடைக்கும், பெருத்த இலாபம் வரும், அந்த இலாபத்தைச் செலவிடமாட்டேன். முதலாக்கி, இன்னமும் பெரிய வியாபாரம் நடத்துவேன், அப்போது இலட்சக்கணக்கிலே பணம்புரளும்! அதுகண்டு, ஊரார் என்னிடம் மதிப்புடன் நடப்பர். ஊரார் மட்டுமா? ஊரை ஆளுகிற பாதுஷாவே கூடத்தான்! என்னிடம் அவரும் பெருமதிப்பு காட்டுவார்! என் சினேகத்தை விரும்புவார்! சினேகம் மட்டுமா? உறவு கொண்டாடுவார்! ஏன்! அவருடைய, ஒரே மகள் இருக்கிறாளே ஒய்யாரி, ராஜகுமாரி, அவளைக்கலியாணம் செய்துகொள்ளச் சொல்லுவார். சொல்லுவாரா? கெஞ்சுவார்! நான் என்ன உடனே சம்மதித்துவிடுவேனா! பராரியா நான்! பலப்பல இலட்சங்களுக்குச் சொந்தக்காரனல்லவா! பாதுஷா வேண்டிக்கொள்வார், நான் பார்ப்போம் என்று பக்குவமாகக் கூறுவேன், அவர் கெஞ்சுவார், ஏதோ அவருடைய தாட்சணியத்துக்காக ஒப்புக்கொள்பவன்போல, “ஆகட்டும்” என்று கூறுவேன். கூறின உடனே பாதுஷா ஆனந்தமடைவார். “ஷாதி” நடக்கும். கலியாண வைபவம் சாமான்யமாகவா இருக்கும்! பாதுஷாவின் மகளுக்கும், பட்டத்தரசர்களையும் எட்டிநில் என்று கூறத்தக்க வியாபாரச் சக்கரவர்த்திக்கும் திருமணம் என்றால், நாடே திருவிழாக் கொண்டாடும்! திருமணமான பிறகு, அந்தத் திரிலோகசுந்தரி என்னிடம் பிரேமை காட்டுவதிலேதான் குறைவிருக்குமா, மரியாதைக்குத்தான் குறைவிருக்குமா? “ஏ, யாரங்கே!” என்று என் கெம்பீரமான குரல் கிளம்பினதும், “நான்தான், தங்கள் அடிமை!” என்று அந்தக் கோகிலம் கூறும். சரசமாடுவாள் உல்லாசி. “என்னருகே அமர்ந்து கொஞ்சம் கால்பிடி” என்று கூறுவேன். அவள் வருவதற்குக் கொஞ்சம் தாமதமாயிற்றோ, கோபித்துக்கொண்டு, ஒரு உதை கொடுப்பேன்.....”

பளபளவென்று சத்தம்! பதைத்தெழுந்தான் பகற்கனவுக் காரன். ராஜகுமாரியை உதைக்கத் தூக்கிய கால் தனக்குக் கால் வயற்றுக் கஞ்சிக்கு ஆதாரமாக இருந்து வந்த கண்ணாடிச் சாமான் கூடைமீது பட்டுக் கண்ணாடிச் சாமான்கள் பொடி பொடியானது கண்டு புலம்பினான்!

அல்நாஷர் என்ற கண்ணாடிச் சாமான் வியாபாரி, ஒருநாள் பகற்கனவு காண்கிறான், வியாபாரத்திலே கொள்ளை இலாபம் வருவதாக, அந்தக் கனவு நாம்மேலே குறிப்பிட்டுள்ளபடி, பாதுஷா மகளைக் கலியாணம் செய்துகொண்டு அவளைக் காலால் உதைக்கும் அளவு வளருகிறது! பகற்கனவின் பயன், அந்தப் பஞ்சையின் பிழைப்புத் தூளாயிற்று, என்றோர் கதை உண்டு! வேவல் ரேடியோவிலே பேசின உடனே காங்கிரஸ் இந்தப் பகற்கனவுக்காரன் நிலையை அடைந்தது! என்னென்ன கனவு! வேவல் திட்டம், பூரண சுயராஜ்யமன்று என்றபோதிலும், சுயராஜ்யத்தின் வாயிற்படி என்று ஒரு கனவு! கிரிப்ஸ் திட்த்தைக் காட்டிலும் இது அழகானது! என்றும், இந்த அதிகாரத்தைக்கொண்டு, என்னென்னவெல்லாமோ செய்யலாம் என்றும் ஒரு கனவு! வேவலைச் சந்தித்த உடனே “மந்திரிகள் ஜாபிதா” தயாரித்தனர். காந்தியாரின் வாரிசும், என்றும் மாறாத இளமை படைத்தவரும், பண்டிதருமான நேருவை அயல் நாட்டு மந்திரியாக்கினர்! அவரும், ஜப்பானியருடன் சேர்ந்து சபாஷ் வந்தால் எதிர்ப்பேன், ஜப்பான் யுத்தம் முடிந்தபிறகு வந்தால் வரவேற்பேன், சைனாவுடன் சரசாமாடுவேன், சயாமுக்குச் சுயாட்சி தருவேன், பர்மாவுக்குப் பூரண சுயாட்சி தரச் சொல்வேன். பம்பாய் திட்டத்தைப் பக்குவமான முறையிலே நடத்திவைப்பேன், என்று அயல் நாட்டு மந்திரி வேலையை நடத்த ஆரம்பித்துவிட்டார்! சர்க்கார் நிலையங்களிலே ஊழல்கள் இருப்பதைக் கண்டு பிடித்துவிட்டார்! கள்ள மார்க்கட் வியாபாரிகளைத் தூக்கிவிட்டார்! சும்மாவா இருந்தார்! மிகமிகச் சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தார், அயல்நாட்டு மந்திரி!!

இவ்வளவும், இன்று கழுதையாகச் சித்தரித்துக்காட்டும் வேவல் திட்டத்தினுடைய வாடை நாசிக்கு எட்டியதும், நடந்த காங்கிரஸ் நடனம்! இன்று - இன அரசுக்கு இடமளிக்காத எந்தத் திட்டத்தையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாப் ஜின்னா கூறிவிட்டதனால், தாங்கள் கண்டுவந்த பகற்கனவு பலிக்காது போனதைக் கண்டு பதைக்கும் இன்று - வேவல் திட்டம் கழுதைபோல் உருவெடுத்திருக்கிறது, காங்கிரஸ் கண்முன். அன்று? அடித்தது யோகம் என்று கருதியிருந்த அன்று - பிராமண வைசிராயை நியமியுங்கள் சர்வரோகமும் தீர்ந்துபோகும் என்று யாரோ ஒரு பிராமணர் தந்தி அடித்தாராமே வைசிராய்க்கு, அது கண்டு காங்கிரஸ் தலைவர்கள் மிக மிக ரசித்தார்களாமே அன்று? மௌலானாவே! இப்போது உமக்கு யோக ஜாதகம்! மலை போன்ற ஆபத்து. மேலே வீழினும், துரும்பெனப் போகும் என்று ஜோதிடர் தந்தி கொடுக்க, குடிகாரர் யோசனை என்று வேறொருவர் தந்தி கொடுக்க, விஜயலட்சுமியை மறவாதீர், வீரர் பந்தத்தைக் கைவிடாதீர், தலாலைச் சேர்க்கத் தவறாதீர், என்றெல்லாம் தந்திகள் குவிந்தனவே அன்று, இதே வேவல் திட்டம், காங்கிரசின் கண்ணுக்குக் கழுதையாக அன்று, பாரதமாதா பவனிக்கு ஏற்ற, நேரு, படேல், பிரசாத் போன்றார் தூக்கும் இலாயக்குடைய பல்லக்காகத்தான் காணப்பட்டது. அந்தச் சமயத்திலே, காங்கிரசார் மோகங்கொண்டிருந்த காட்சியைக்காண வேண்டுமாயின், அன்பர்கள், வேவல் பிரபுவுடன் ஆச்சாரியார் கைகுலுக்கி நிற்கும் படமொன்று ‘இந்து’ பத்திரிகையிலே வெளியிடப்பட்டிருந்தது, அதை இதுபோது எடுத்துப் பார்க்கும்படி சிபார்சு செய்கிறோம். அந்தக் குழைவு, அந்த வளைவு, ஆஹா! அந்தப் பசியை மிகப்பட்டவர்த்தனமாகக் காட்டிக்கொடுக்கும் பவதீ பிக்ஷாந்தேஹி சிரிப்பு, இவைகளைப் பாருங்கள். பல்லெல்லாம் தெரியக்காட்டி நிற்கும் பான்மைக்கு என்ன பொருள், என்று எண்ணித், திகைத்து நிற்கும் வைசிராயின் முகத்திலே தோன்றும், குறிகளையும் கவனிப்பவர்கள் ‘என்னைக் கைவிடாதீர் மகாப்பிரபு’ என்று ஆச்சாரியார் கூறுவதையும், “இவ்வளவுதானா! அட பாவமே! மனுஷ்யன் என்ன இப்படிப் பல்லை இளிக்கிறாரே” என்று வைசிராய் மனதிற்குள் கூறிக்கொள்வதையும் தெளிவாகக் காணலாம். இந்த நிலையினர், இன்று ஜனாப் ஜின்னாவை மீண்டும் தாக்குவது என்று துணிந்துவிட்டனர். லீகின் பிடிவாதத்தைக் கண்டிக்கத் தொடங்கி விட்டனராம்! நேரு பண்டிதர் தனித்தொகுதியே கூடாது என்றார், லீக், கிழவியாம்! காங்கிரஸ் காளையாம்!! பண்டிதரின் புகழ், பதற்றமான பேச்சு எனும் அடிப்படையின் மீதே கட்டப் பட்டிருப்பதால், அவர் இதுபோலப் பேசுவது கேட்டு நாம் ஆச்சரியப்படவில்லை; அதிலும் அவசர அவசரமாக அயல் நாட்டு மந்திரியாக அபிஷேகிக்கப்பட்டு, பகற்கனவு கலைந்ததும், பழைய பண்டிதராகவே இருப்பதைக் காணும் போது நேரு கொஞ்சம் அதிகமாகவே நெருப்பைக் கக்குவார், ஆனால் பாவம், அவருக்குங்கூட, இந்த ஆசை தாக்கியதால் ஏற்பட்ட அல்லல், சற்றுச் சிரமத்தைக் கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது. சகஜம்! எனவே அவர் சாந்தியை நாடி, இமயமலைச்சாரலுக்குச் செல்கிறார். காஷ்மீரத்துக்குப் பயணமானார். அங்கு, அருமைக் குமாரி இந்திராவின் குழந்தை இருக்கிறதாம், தாத்தாவின் மடியிலே தவழ! அந்த இன்பகரமான சூழ்நிலையிலே பண்டிதர் தமது கோபத்தையும் சலிப்பையும் ஆற்றிக்கொள்ள முடியும். மேலும், அங்குள்ள “பனியைக் கண்டு பரவசமடைவேன்! சிற்றாறுகள் பாடும் சிந்துகளைக்கேட்டு இன்புறுவேன். பறவைகளிடம் பேசுவேன். காஷ்மீரம் என்னை வா! வா! என்று அழைக்கிறது”” என்று பண்டிதர் கூறியிருக்கிறார். காஷ்மீர், பண்டிதரின் ஜென்மபூமி. காஷ்மீரத்துப் பார்ப்பன குலம், நேரு. அந்தப் பூர்விக இடத்திலே, இயற்கை எழிலைக்கண்டு இன்புற்று, உடலுக்கும் உள்ளத்துக்கும், உற்சாகம் ஊட்டிக்கொண்டு, பண்டித நேரு, வரப் போகிறார்! வருமுன்னம், அரசியல் கொந்தளிப்பு இல்லாத அந்த அழகிய இடத்திலேயிருந்து பண்டித நேரு நாட்டின் நிலைமை, அதை மீட்டிடப் போட்டுள்ள திட்டத்தின் தன்மை என்பன போன்றவைகளைப் பற்றி நிம்மதியாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

22.7.1945