அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வைத்திய வேவல்!

இந்தியவுக்கு என்ன தேவை என்பதைப் பற்றி வைஸ்ராய் சேவல் ஐரோப்பிய வர்த்தக சபையில் பேசியிருக்கிறார். வர்த்தகர்களாக நுழைந்த வெள்ளையர்கள் நாட்டையாளத் தொடங்கியது எவ்வளவு விசித்திரமோ, அவ்வளவு விசித்திரந்தான் இந்தியாவின் தேவைபற்றி ஐரோப்பிய வார்த்தக சங்கத்தில் பேசியது. அரசியல் இந்தியாவை நோயாளியாகவும் தம்மை ஓர் ஆலோசனை கூறும் டாக்டராகவும் வைத்துககொண்டு வைஸ்ராய் வேவல் பேசியிருக்கிறார். அவருடைய சொற்பொழிவிலே யாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பல பகுதிகள் உள்ளன என்றபோதிலும் அவர் யோசனை கூறும் டாக்டராக மட்டும் இருந்துகொண்டு மருந்தூட்ட முன்வராமலிருப்பதைப் பலரும் ஆட்சேபித்தே தீருவார்கள். இந்தியாவில் பல சிக்கல்களிருப்பது உண்மை. ஐரோப்பா பூராவையும் ஒரே குடையின் கீழ் ஆளுவதற்கு அமைப்பு ஏற்பட்டால் அவ்வளவு சிக்கல்களிருக்குமோ அதைவிட இந்தியாவில் அதாவது பல நாடுகள், பலமதங்கள், பல இனங்கள் ஆகிய ஒரு கதம்பத்தில் இன்றுள்ள சிக்கல்கள் குறைவு என்று சொல்லலாம். இந்த சிக்கல்களிலே சில, பிரிட்டிஷ் ஆட்சியின் பயனாகவே ஏற்பட்டவை. ஆட்சி முறைகிக்க வசதி தேடிக்கொள்ளவோ அல்லது ராணுவக்காரணத்தை முன்னிட்டோ பிரிட்டிஷார் இந்த உபகண்டம் ஒரே நாடு என்ற கற்பனையை ஏற்படுத்திவிட்டார்கள் இதனுடைய பலனாக ஒன்றக்கொன்று நேர்மாறானதும் முரண்பாடுகள் மிகுந்ததுமான பல இன மக்களை ஒரு மத்தியப் பொது ஆட்சியின் கீழ்க்கொண்டு வர எற்பாடாயிற்று. பசுவும் புலியும் ஒரே துறையிலே சீரருந்தியதாகக் கதை கூறும் புராணமுங் கூடப் புலி பசுமீது பாயலாமென்று எண்ணிய நேரத்தில் ஆண்டவனின் சக்ராயுதம் வந்த புலியைக் கொன்றதாகத்தான் தெரிவிக்கிறதேயொழிய, பசுவும் புலியும் என்றென்னும் ஒன்றாக வாழ்ந்ததாகக் கூறவில்லை. பச்சைப் புளுகான புராணங்களை எழுதியவர்கள் கூடச் சொல்லுவதற்குக் கூசும் விஷயத்தைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொஞ்சமும் கூச்சமின்றி, கூறுகிறார்கள். கூறுவது மாத்திரமல்ல, அது தங்களுடைய கூர்த்த மதிக்கு அறிகுறி என்றும் நம்புகிறார்கள். அண்டை வீடான அயர்லாந்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரமுடியாததை வேவல் அறிந்திருக்கிறார். அயர்லாந்து என்ற வீட்டிற்கக்ப் புறக்கடை போலிருக்கம் அல்ஸ்டர் என்ற பகுதியை அயர்லாந்தோடு ஒட்டி வாழவைக்க முடியாமல் வெட்டித் தனியாக்க வேண்டியநிலைமை உண்டானதை வைசிராய் மறந்திருக்க முடியாது. அப்படியிருந்தும் வர வேவல் வர்க்கத்தினர் இந்தியா என்ற இந்த உபகண்டத்தை ஒரே நாடு, ஒரே ஆட்சியின் கீழ்இருந்து தீர வேண்டுமென்று கூறுவது ஈளைகட்டி இருமிக் கொண்டிருப்பவனுக்கு வேளைக்கு வேளை தவறாமல் எலுமிச்சம் பழச்சறைத் தருவது போலவும், மக்கநோய் கொண்டவனுக்கு மதுவை மருந்தாக அளிப்பது போலவும், படுக்கையறையிலே எலி நுழையாதிருக்கப் பாம்பைக் காவல் வைப்பதுபோலவும், லண்டன் அ.கீ.க. ஸ்தாபனத்திற்கு ஜெர்மன் கோயபெல்ஸை விசேஷ அதிகாரியாக நியமிக்க விரும்புவது போலவுமிருக்கிறதேயொழிய, விவேகத்தின் அறிகுறியாகவோ நல்லெண்ணத்தின் விளைவாகவோ நமக்குத் தோன்றவில்லை. வெள்ளையனே வெளியேபோ என்ற மருந்தும் சத்யாகிரக மாத்திரைகளும் அரசியல் இந்தியாவின் நோயைப் போக்க முடியாதென்று வெள்ளை வர்த்தகச் சபையிலே ஆங்கில வைஸ்ராய் மருத்துவ மொழியிலே பேசியிருக்கிறார். அந்த மருந்தும் மாத்திரையும் நாட்டு நலிவு தீர்க்க ஏற்றதல்லவென்று நாமும் கூறியிருக்கிறோம், இன்றும் கூறுகிறோம், ஆனால் பாகிஸ்துன் திட்டம் போன்ற ஆபரேஷன் முளையும் கூடாது என்று வைஸ்ராய் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள மறக்கிறோம். பாகிஸ்தானம், இந்துஸ்தானம், திராவிடநாடு என்று இந்திய உபகண்டத்தை மூன்று அமைப்புகளாகப் பிரிப்பது தவிர இந்த உபகண்டத்தைப் பீடித்திருக்கும் பிணியைப் போக்க வேற தக்க முறை இல்லையென்பதை வைஸ்ராய் வேவல் தம்முடைய போர்க்கள அனுபவங்களை மனத்திலே நிறுத்தி, பிரிட்டிஷ் ராஜதந்திரத்தை விலகியிருக்கச் செய்து யோசித்துப பார்ப்பாரானால் உணர முடியும். ஆனால் புள்ளிமானைத் துள்ளி விளையாடாதே என்றும், சிறுத்தையைச் சுறாதே என்றும் சொல்லிப் பயனில்லை என்பதை நாம் அறிவோம்.

இந்த ஆபரேஷன் இப்போது அவசியமில்லை. வேறு பல மருந்துகளிருக்கின்றன. அவைகளை உட்கொள்ளலாம் என்ற வைத்திய வேவல் யோசனை கூறுகிறார். மூன்று வட்டமேஜை மகாநாடுகள் கூடிக் கலைந்து தயாரித்த மருந்து, நோயை அதிக்ப்படுத்திற்றே தவிரப் பலன் தரவில்லை. சமரச போதனைகள் சச்சரவுகளை அதிகப்படுததிற்றே தவிரச் சாந்தியையுண்டாக்கவில்லை. தனித்தொகுதி தாக விடாயை அதிகரிக்கச் செய்தது. தர்மோபதேசம், தருக்கர்களக்குத் தாட்சண்யவாதிகளைப் பலியாக்கிற்று. துன்பத்திலே இன்பத்தைக் காண வேண்டுமென்றும், வேற்றுமையிலே ஒற்றுமையைப் பெற வேண்டுமென்றும், வேதாந்திகள் போத்தது எப்படி வீணாயிற்றோ, அதைப்போலவே அரசியல் நோயைத் தீர்க்க இதுவரை அளிக்கப்பட்ட மருந்துகள் நோயாளிக்கு வேதனையை பதிகப்படுத்திற்றே தவிர, ஆரோக்கியத்தை அளிக்கவில்லை மற்ற மருந்துகள் உள்ளுக்குப் பிடிக்காததை உர்ந்துதான் இந்த அறுவை முறை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதே ஒழிய வேறல்ல வென்பதை வைஸ்ராய் உணர வேண்டுகிறோம். அந்தக் காலத்து இராட்டினம் இந்தக் காலத்துக்குப் பயன்படாதென்று பொருளாதாரத் துறைபற்றிப் பேசுகையில் வைஸ்ராய் வேவல் கூறியிருப்பதைப் போலவே நாமும் கூறுகிறோம், அத்தக்காலத்து அரசியல் அமைப்பு முறைகள், இந்தக் காலத்திற்கு ஏற்காது என்ற எல்லைக் கோடுகளுக்காகவும் இன உரிமைக்காகவும் எண்ணற்ற வீரர்கள் மாண்ட களக்காட்சியைக் கண்ணால் கண்ட வைஸ்ராய் வேவலுக்கு நாம் நினைவூட்டுகிறோம். ஜெர்மனி ஆதிக்கத்திலே வரமறுக்கும் ஆஸ்டிரியாவையும், ஸ்பெயின் ஆட்சியிலிருந்து விலகியிருக்கும் உரிமையைப் பெற்றுள்ள போர்ச்சுக்கலையும் வைஸ்ராய் வேவல் மனத்திலிருத்திப் பார்ப்பாரானால் பத்துககோடி மக்களுக்கு ஒரு பாகிஸ்தானம் கேட்பது பாதகம் ஆகாதென்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். மருந்துகூட தேவையில்லை. காற்றோட்டமுள்ள இடத்திலே உலவி, உழைத்தால் இந்தியா ஆரோக்கியத்தைப் பெற முடியும் என்று வைஸ்ருய் பேசியிருக்கிறார். ஆரோக்கியத்தைப் பெற நல்ல காற்றும் உழைப்பும் தேவையென்பது மருத்துவ அரிச்சுவடி, அதை நாம் மறக்கவில்லை, ஆனால், நல்ல காற்றோட்டமுள்ள இடம் எப்படிக் கிடைக்கும்? மடமை மலைகளும், குரோதக் குன்றுகளும், துவேஷ அகழிகளம், புரட்டு என்னும் பழைய மாளிகைகளும், பழங்காலக் கருத்து என்னும் குப்பைக் கூளங்களும், வேதாந்த வேலிகளும், சித்தாந்தச் சதுப்பு நிலங்களும், ஆரிய ஆதிக்கமும், ஆங்கில பிடியும் நிறைந்துள்ள இடத்திலே நல்ல காற்று கிடைப்பதேது! இஸ்லாமிய திராவிட இனங்கள் ஆரோக்கியத்தைப் பெறவும் இன முன்னேற்றத்திற் குழைக்கவும் நல்ல காற்றோட்டமுள்ள இடங்களைக் கேட்கிறார்கள், ஆனால், ஆரோக்கியத்திற்கு வழி சொல்லும் ஆங்கில அறிஞர் ஆரோக்கியஸ்துன். பெறுவதை ஆபத்தானதென்றம் சொல்லுகிறார். இந்த விசித்திரத்தை என்னென்பது! பிரிட்டிஷாரின் நல்லலெண்ணத்திலே நம்பிக்கை வையுங்கள், அந்த ஒரு மருந்தே போதும் என்ற வைஸ்ராய் கூறுகிறார். அந்த நல்லெண்ணம் இருக்கும் இருக்கும் என்ற மனப்பால் குடிக்க மக்கள் இன்று தயாரில்லை. நோய்வகையும் தெரியாது நாடடிப் பரிட்சையிம் அறியாது நல்ல மருந்து முறையும் அறியாத வைத்தியர் நோயாளியின் கையிலே மஞ்சள் துணியைக் கட்டுவதும், வாயிலே துளசித்தீர்த்தத்தை ஊற்றுவதும் சில இடங்களிலே நடக்க காண்கிறோம். வைஸ்ராய் வேவலினுடைய வைத்திய முறையும் இதுபோலத் தானிருக்கிறது.

(திராவிடநாடு - 17.12.44)