அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வளரும் வடக்கு

சரிதம் திரும்பிவிட்டதாம்! - சாக்ராப்ட் என்பவர், அலறுகிறார்.

சாக்ராப்ட், பிரிட்டிஷ் துணி உற்பத்தியாளர்களின் தலைவர், அவர், அலறுகிறார்.

இந்தியாவின் துணிகள், ஏராளமாக நுழைய ஆரம்பித்து விட்டதாம், பிரிட்டனுக்குள்! இப்படியே நிலைமை நீடித்தால், லங்காஷயரும், மான்செஸ்டரும் ஸ்தம்பிக்குமாம் – வேலையில்லாக், கஷ்டம்கூட ஏற்பட நேரலாமாம். சர்க்காரை, எச்சரிக்கிறார், சாக்ராப்ட் – “மான்செஸ்டர் கார்டியன்“ எனும் பத்திரிகையில்.

“சீமைக்கு மார்க்கெட்டாக இருக்கிறது, இந்தியா“ என்று தேசியத் தலைவர்கள் கர்ஜித்தது. அந்தக் காலம்! பரதேசித் துணிகளைப் பகிஷ்கரிப்பதற்காக, இயக்கம், நடத்தப்பட்டது ஒருகாலம்!!

இப்போது, இந்தியாவின் ஆலைத் துணிகள், அங்கே இடம் பிடித்துக் கொண்டதாம் – அலறுகிறார், அவர்.

சீமையில் தயாரிக்கப்படும் துணிகளைவிட இந்தியாவிலிருந்து வரும் துணிகள் விலை குறைவாக இருக்கிறதாம்! அதனால், பிரிட்டனில், இந்தியத் துணிகளுக்கு ‘கிராக்கி‘ ஏராளமாக இருக்கிறதாம்!

இதேபோல, முன்பெல்லாம், இந்தியத் தலைவர்கள் சொல்லுவார்கள் “விலை அதிகமாயிருந்தாலும்கூட, சுதேசித் துணிகளையே வாங்குவீர்! சுயராஜ்ய தேவியைப் போஷிப்பீர்!“ என்று இப்போது, இந்தியா மிஞ்சுகிறது! லங்காஷியர் மிரளுகிறது!“

இங்கிலாந்திலே, குவியும் இந்தியத் துணிகள் எவை? காஞ்சீபுரம் பட்டா? கொரநாடு சேலையா? சின்னாளப்பட்டி செயற்கைப்பட்டா! சேலமா? கோவையா, அல்ல, அல்ல கைத்தறித்துணிகள் அல்ல! ஆலைத் துணிகள்.

லங்காஷயரை மிஞ்சுகிறது, பம்பாய்!

சரிதம், திரும்புகிறதே! - என்கிறார், பிரிட்டிஷ்துணி உற்பத்தியாளர் சங்கத் தலைவர், சாக்ராபட்.

இந்நிலையே, ஏற்படும் என்றோம். இந்திய சுயராஜ்யம் குறித்து, இங்குள்ளோர், வெற்றி முரசம் கொட்டிய நேரத்தில் “சுதந்திர தேவி, சும்மா வரவில்லை! நாங்கள் சிந்திய இரத்தத்தின் விளைவால், மலருகிறாள்“ என்று மார்தட்டியபோது, “உண்மை ஐயனே, உண்மை நீங்கள், குருதி கொட்டியது உண்மை. ஆனால், அது மட்டுமல்ல, இன்று வெள்ளையன் வெளியேறுவதற்குக் காரணம். அவன், இந்திய முதலாளிகளிடம் தக்க திட்டம் பேசி வைத்துக் கொண்டே வெளியேறுகிறான்“ எனச் சொன்னோம்.

வெள்ளை ஏகாபத்தியம் மாறி பழுப்பு ஏகாதிபத்தியம் வருகிறது எனக் குறிப்பிட்டோம் – வெள்ளையனுக்கும் வடவருக்கும் இடையிலேற்பட்ட, வியாபார ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டு.

சுயராஜ்யம் வடக்குக்கே ஒழிய, அதன் முழு மணமும் நமக்குக் கிட்டாது – என்றோம் விளக்கத்தை, பிதற்றல் என்றெண்ணினர் – வடவரல்ல – நமது நண்பர்கள் இதோ, செய்தி பணம் வருகிறது, பம்பாய்க்கு – வெள்ளையன் தருகிற பணம்.

“அதனால் என்ன? ஒருபோது, வெள்ளை முதலாளி சுரண்டிச் சென்றதுபோல, இப்போது நமது முதலாளி அந்தநாட்டி மக்களின் பணத்தைச் சுரண்டி வருகிறான். இதில் தவறென்ன, அந்தளவுக்கு புத்தியூகம் கொண்டுவிட்ட நமது முதலாளிகளை,நமது சர்க்கார் பாராட்டவல்லவோ வேண்டும்“ எனக் கூற வரலாம், பராக்குப்படையினர்.

அதனால், வீம்பு விளங்குமே ஒழிய, விவேகம் தென்படாது.

சில தினங்களுக்கு முன்பு, ஆமதாபாத், பம்பாய் போன்ற இடங்களிலுள்ள ஆலையரசர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துபோய், எங்கள் தொழில் நசுகிறது. போதிய இலாபம் வரவில்லை“ என்று டில்லியினரைச் சந்தித்தை, அறிவோம், நாம் அப்படிச் சொல்லி, ஆமதாபாத் போன்ற இடங்களில், ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் அவதியுற்றோர்களாக அலைந்ததையும் நாடு அறியும். அப்போது, அவர்களுக்காகப் பரிந்து பேசினார் அன்பர் கிருஷ்ணமாச்சாரி – டில்லி, மந்திரி.

இதோ லங்காஷயர் கூறுகிறது இங்கிலாந்தின் பணம் கொள்ளை போகிறது என்று.

எனவே, நேருவின் கைக்க அதிகாரம் வந்ததால், வடக்கின் வளம் அதிகமாயிருக்கிறதென்பது விளங்கும். வளம், மக்களுக்கு ஏற்படாமலிருக்கலாம்! ஆனால் நிச்சயம் பணாதிபதிகளுக்குக் கிடைத்திதுத்தாளிருக்கும்!! இல்லையென்றால், பிர்லா இலங்கை போன்ற இடங்களைத் தேடி அலைவாரா, ஆலைகளைத் துவங்க.

வளம் கொழிக்கிறது, வடக்கே!

தெற்கேயோ, செய்திகள் வருகின்றன, கலங்கக்கூடிய வகையில்.

கைத்தறி, நசிப்பது மட்டுமல்ல – வேறு வழிகளிலும் நாடு வளம் பெறும் வழிகள் தெரியவில்லை.

வடவர் பூமி, ஆலையரசு! என்று அடிக்கடி, வலியுறுத்தி வருகிறோம்.

அங்கே ஆலைகளை அமைப்பதிலும், பெரிய பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதிலுமே, டில்லி அரசு, கவனம் செலுத்துகிறது – என்று, நாம் மட்டுமல்ல – நல்லவர்கள் யாவருமே மேடைகளில் மட்டுமல்ல, பாராளும் சபையில்கூட இடித்துரைத்து வந்திருக்கிறார்கள்.

பலன்! பெரிய பூஜ்யம்தான் இதுவரையில்.

இப்படி வடக்கு வாழ, தெற்கு தேய நம்மவர்களும் ஒத்தூதுகின்றனர் என்றும், நாம் எடுத்துக்காட்டத் தயங்கியதில்லை. அப்போதெல்லாம் மறுப்பர், நமது காங்கிரஸ் அன்பர்கள்.

இதோ ஒருவர் காட்சியளிக்கிறார்! கிண்டலும், காரமும் கலந்து கலந்து தெரிவிக்கிறார். தென்னாடு இலாயக்கில்லையாம் – ஒரே ஒரு இரும்பு ஆலை நிறுவ.

ஒரு நாட்டின் வளத்தை மதிப்பிடும்போது, அங்குள்ள எஃகு – இரும்பு ஆலையையே பெரிய விசேஷமாக, எண்ணுகிறது இவற்றை நாள் உலகம். விமானங்கள் பறக்கவும், ரயில்கள் ஓடவும், கார்கள் தயாரிக்கப்படவும், களிமாடக் கூடங்கள் அமைக்கப்படவும், துளைக்கும் பீரங்கிகள் செய்யவும், அழிக்கும் டாங்கியை உண்டாக்கவும், மிகமிக முக்கியமான பொருள், இரும்பும் எஃகும்! போருக்கு மட்டுமல்ல, நாட்டின் நல்வாழ்வுக்கு, இவை முக்கியம்.

இதற்கோர், ஆலை! இங்கே!! - ஆசை முகம் காட்டி, கெஞ்சுகின்றனர், வடக்கே.

கிருஷ்ணர் தெரிவிக்கிறார். ‘முடியாது‘ ஏனெனில் இலாயக்கில்லை!“ என்ற.

“ஏன் இலாயக்கில்லை? இதோ, இரும்பு இருக்கிறது, சேலத்தில்! அதை உருக்கும் நிலக்கரி இருக்கிறது நெய்வேலியில்! இவைதானே வேண்டும், இரும்பாலைக்கு, இந்த இரண்டும் இருக்கும்போது, இலாயக்கில்லை என்று தெரிவிக்க யாரய்யா நீர் – யார்?

கேட்பது நாம் அல்ல, தோழர் எஸ்.வி. இராமசாமி எனும் பார்லிமெண்டு உறுப்பினர் காங்கிரஸ்காரர் அண்மையில் சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற, மாவட்ட அபிவிருத்தி போர்டு வட்டத்தில், இவ்வண்ணம் கேட்டிருக்கிறார். அவசியம் சேலத்தில் ஆலை அமைக்க வேண்டுமென்று டில்லியை வற்புறுத்துமாறு சென்னை சர்க்காரைக் கோரி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பம்பாய், ஆலையூர்!

அது, மிஞ்சுகிறது, லங்காஷயரை!

தென்னகம் – தறியூர்!

தவிக்கிறது, பல் காட்டி!!

வந்த சுதந்திரம் வடவர் பூமிக்கே வாழ்வளிக்கும் என்று, பொருளாதாரத் துறையை வைத்து மட்டுமல்ல – சமுதாயம், மொழி, அரசியல் எல்லாவற்றையும் காரணம் காட்டி எடுத்துரைத்து வருகிறோம் இதனை, இன்றும், ஏற்காதோர் உளர். “இந்தியா ஒரு நாடாயிற்றே“ என்ற பல்லவியையே பாடிக் காட்டுவர்.

“அவர்கள் அப்படிச் சொல்லுகிறார்களென்றால், இதய பூர்வமாக அல்ல, ஏதோ சொல்லுகிறார்கள் பழைய பழக்கத்தால் பிரச்சனை புரியும்போது, அவர்களும் ‘ஆமாம்‘ போடுகிறார்கள்“.

என்று, சச்சிவோத்தம சர்.சி.பி. இராமசாமி அய்யர், தெரிவித்திருக்கிறார் – மயிலாப்பூர் நடாத்திய வக்கீல்கள் மாநாட்டில்.

“உதட்டுச்சொல்“, தருபவர்களாம், அவர்கள் ஆங்கிலத்தில், அழகாக வர்ணிக்கிறார், “ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தேன், சென்ற இடமெல்லாம்.....“, அப்படியே இருக்கிறது, என வர்ணிக்கிறார்.

இந்தியை வடவர் புகுத்த நினைப்பது பற்றி மொழி ஏகாதிபத்யம் என்று, நாம் குறிப்பிட்டு வருகிறோமல்லவா? இதே உணர்ச்சி, பம்பாய், குஜராத், பீகார், ராஜஸ்தான், வங்கம் முதலிய எல்லா இடங்களிலும், இருக்கிறதாம் அவர்கள், “ஆகா! இந்யே, நமது தேசிய மொழி“ என்று ‘உதட்டுச் சொல்“ தந்தாலும், உண்மையை நான் கண்டேன். ஒவ்வொருவரும் தத்தமது மொழியிலேயே எல்லாக் காரியங்களையும் நடத்த வேண்டுமெனக் கருதுகின்றனர். இப்படியிருக்கும்போது, எங்கேயிருந்து ஏக இந்தியா உணர்ச்சி“ – என்று, கேட்கிறார், அவர்.

சச்சிவோத்தமா பிரிவினை விரும்பியல்ல! எனினும், இதனைச் சுட்டிக் காட்டுகிறார்.

“இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னை, தமிழன் என்றோ, தெலுங்கன் என்றோ, மராட்டியன் என்றோ, குஜராத்தி என்றோ எண்ணுகின்றார்கள். இந்த அடிப்படையில், நாடுகள் அமைக்கப்பட வேண்டுமெனவும், கிளர்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.“

குறிப்பிடுவது, சி.பி.இராமசாமி அய்யர்! அண்ணாமலை, காசி – ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் ஏகதுணை வேந்தர்!!.

இது, நாம் கூறிவரும், மொழி ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி எல்லா இடங்களிலும் இருப்பதை விளக்குகிறது.

எங்கே, இருக்கிறது, இந்தியா? – இப்படி ஒவ்வொருவரும் எண்ணத் தலைப்பட்டால்....

அதனை உணராது, அதே நேரத்தில் தமது பூமிவளம் பெறும் வகையையும் இழக்க வேண்டியவர்களாயிருந்து வருகிறார்கள் – நமது நண்பர்கள். இதைச் சுட்டிக்காட்டும் நம்மீதும் பாய்கிறார்கள்.

சர்.சி.பி. இராமசாமி, கண்டு வந்தேன்! என்கிறார்.

சேலத்து இராமசாமி, “ஏன் இலாயக்கில்லை. எமது தென்னாடு!“ என்று கேட்கிறார்.

இதே கேள்விகளை, அண்மையில் ஆவடியில் கூட இருக்கிற, காங்கிரஸ் கமிட்டியில், தென்னகத்துப் பிரதிநிதிகள் சிலர், கிளப்ப இருப்பதாக “மெயில்“ ஏடு கூறுகிறது.

மொழி ஏகாதிபத்யத்தைச் சகியோம். தென்னாட்டுக்கும் ஆலைவளர்ச்சி வேண்டும்.

என்று, சில தீர்மானங்கள் செல்லப் போகின்றனவாம்! தீர்மானங்கள் மாநாடு வரையில் செல்லுமோ, நடுவழியிலேயே ‘குரல்வளை‘ நெறிக்கப்படுமோ, நாம் அறியோம்.

ஆனால், இப்படி ஒருவிதக் ‘கோபம்‘ அந்த வட்டாரத்தில் அரும்பியிருப்பது மட்டும் உண்மை! சச்சிவோத்தமா குறிப்பிடுவதுபோல, வெளிப்படையாகச் சொல்லாவிடினும், உள்ளத்தில் இந்த உணர்ச்சி இல்லாமலிருக்காது!!.

ஏனெனில், ‘லங்காஷயர்‘ மிரள பம்பாய் வாழ்வதையும், தெற்குத் தேய வடக்கில் புது ஆலைகள் அமைக்கப்படுவதையும், நம்மைப்போல அவர்களும் உணர்ந்தே வருகிறார்கள். ‘இந்தி மொழியை இன்னும் பதினைந்து ஆண்டுகளில், அரசு மொழியா வதனின்றும் தடுக்கப்பட வேண்டும்“ என ‘நமது‘ நிதியமைச்சர் சுப்ரமணியமே, சொல்லியிருக்கிறார், மயிலை மாநாட்டில்.

அந்தளவுக்கு, அங்கெல்லாம் ஒவ்வொரு பிரச்சனையிலும், அலைகள் எழும்பாமலில்லை. ஆயினும், நாம் சொல்லும் போது,“ இதையெல்லாம் பரஸ்பரம் பேசித் தீர்த்துக் கொண்டு நாம் எப்போதும் ஏக இந்தியாவைச் சிதறவிடாமல் வைத்துக் கொள்ளலாம்“ என்று எண்ணுகிறார்கள்.

அவர்கள், சிந்தனையில், வளரும் பம்பாய் தெரிய, கொஞ்ச காலம் செல்லலாம்! ஆனால், என்றுமே தெரியாமல் இருந்துவிடாது.

வந்த சுயராஜ்யம், வடக்குக்கே ஒழிய, தெற்குக்கு அல்ல – என்பதை நெடுநாட்கள், யாராலும் மறைத்துவிட முடியாது.

லங்காஷயரே – மிரளுமளவுக்கு வளர்ந்திருக்கிறது, பம்பாய் அதுவும் ஏழாண்டு சுயராஜ்யத்தில்!

இதுபோல, ஒவ்வொருதுறையிலும் வடக்கு ‘ஆலை யூராகி‘க் கொண்டேயிருந்தால்..... இராமசாமிகள் அந்தக் கூடாரத்திலிருந்து அல்ல, நமது கூடாரத்துக்கு வந்தே பேச நேரும்! அந்தக் காலம் வெகு தூரத்திலில்லை!!

திராவிட நாடு – 9-1-55