அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வல்லூறுகளுக்கு அழைப்பு!

யார் இந்த வெள்யைர்? தொலை தூரத்திலிருந்து இங்கு வரக்காரணம் என்ன?

இவர்களா! பாபம், பிழைப்புக்காக இங்கு வந்திருக்கிறார்கள். வியாபாரிகள்.

நம் நாட்டிலே இவர்கள் தங்கி இருந்து வியாபாரம் செய்ய, தொழில் நடத்த, அனுமதி கிடைக்குமா?

அனுமதி தரவேண்டும் என்று, கெஞ்சிக் கேட்டுக் கொள்வதற்காகத் தான், ராஜசபைக்குச் செல்கிறார்கள். மண்டியிட்டு வணங்கி, மன்னனிடம் முறையிட்டு, அனுமதி பெற்றானபிறகு, வியாபாரம் செய்து, பிழைத்துக் கொள்வார்கள்.
*****

1601-இம் ஆண்டுக்குப் பிறகு பரங்கியர், இங்கு புகுந்து, வியாபாரம் செய்யும் அனுமதியைப் பெற, கெஞ்சிக் கிடந்ததில்லை. மேலே தீட்டப்பட்டிருப்பது.
*****

யார் இந்தக் கருநிறத்தார் - அதிகக் கருப்பாகவும் காணோம்! பழுப்பு நிறத்தவர்களாக உள்ளனர்! எதற்காக இங்கு வந்துள்ளனர்?

இவர்கள் இந்தியா நாட்டுத் தலைவர்கள்! தங்கள் நாட்டிலே, வந்திருந்து தொழில் நடத்தும்படி, நம்மைக் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறார்கள்.

அவர்கள் நாட்டிலே, நாம் சென்று, தொழில் நடத்துவதா? ஏன்? அவர்களால் முடியவில்லையா, தொழில் நடத்த?

போதுமான பணமும், தேவையான திறமையும் இல்லை.

ஓஹோ! அதனால் தான் நம்மை நாடி வந்துள்ளனரோ?

ஆமாம், பாபம்! ரொம்பவும், வேண்டிக்கொள்கிறார்கள். நமக்கு அங்கு சகல வசதியும் உரிமையும் தருவதாகக் கூறுகிறார்கள்.
*****

1949-ம் ஆண்டிலே, அமெரிக்கா போன்ற நாடுகளிலே உள்ளவர்கள் பேசிக்கொள்வதும் தீட்டப்பட்டிருக்கிறது.
*****

மண்டியிட்டு அனுமதி கேட்டகாலம், பதினேழாம் நூற்றாண்டு!

மனுச்செய்து கொண்டு, மனமகிழ்ச்சி யூட்டி, அவர்களை, அழைத்து வருவது, இருபதாம் நூற்றாண்டில்!

உள்ளே புக முடியுமோ என்று அஞ்சிக்கிடந்த அன்னியருக்கு இப்போது உபசாரம் பலமாக நடக்கிறது உள்ளே, வரச்சொல்லி
*****

அன்னியரின் நுழைவு, ஆக்கிரமமானது, ஆதிக்கத்துக்கு வழிகோலுவது, அதிலேயும், வியாபார தொழில், சம்பந்தமாக அன்னியர், நுழைவது, மக்களின் வாழ்வைக் கெடுக்கக்கூடியது - வியாபாரியாக உள்ளே நுழைய முதில் இடம் கிடைத்துவிட்டால், பிறகு அவர்கள், ஆதிக்கக்காரராகி, நமது அரசுகூடக் கெடும்படி செய்துவிடுவர், என்றுஅஞ்சிய, அந்நாள் மன்னர்கள், உள்ளே நுழைய விரும்பிய ஆங்கிலருக்குப் பல நிபந்தனைகளை விதித்தனர் - இன்னின்ன கட்டுத்திட்டங்களுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்று முறைவகுத்தனர்.

எல்லா நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு, அடக்கமாகவே வியாபாரத்தைத் துவக்கினர், வெள்ளையர்.
இரண்டோர் நூற்றாண்டுகளுக்குள், பண்டகசாலைக்குப் பக்கத்திலே பாசறைகள், கண்கெழுதுவோருக்குத் துணையாகக் குண்டுவீசிகள், என்ற நிலை பிறந்துவிட்டது.

கோட்டைகள் கட்டிக்கொண்டனர் - செயின்ட் ஜார்ஜ்கோட்டை போல!

எந்த ராஜசபையில் மண்டியிட்டு நினறு, அனுமதி கோரினரோ, அதே ராஜசபைகளிலே, பேரம் பேசவும் பிறகு, படைஎடுக்கவும், துணிந்தனர்.

வியபாரியாக வந்தனர் உள்ளே - பணிவுடன் - அனுமதியின் பேரில் பிறகோ, வேந்தராயினர் - அடக்கலாயினர் இந்நாட்டை.

இந்தக் கேட்டினைக் களைந்து நாட்டை மீட்டிட, எண்ணற்ற இளைஞர்கள், தியாகத் தீயிலே குதித்தனர் - நாடு, சுயாட்சி பெற்றது! ஆனால்...!

தனிப்பட்ட முதலாளிகள் பெருந்தொழிற்சாலைகளை வைத்து நடத்தி இலாபவேட்டையில் ஈடுபடும், போக்கே, பொரளாதாரச் சுரண்டல் முறை என்றும், இந்தக்கேடு நீக்கப்பட்டாலொழிய, ஏழைக்கு வாழ்வுக்கு நாட்டுக்கு வளமும் கிடைக்காது என்றும், மேடை ஆதிரத் தலைவர்கள் முழக்கமிட்டனர்.

இலாப உணர்ச்சியை ஒழித்து, சேவா உணர்ச்சியைப் புகுத்தி முதலாளித்துவ முறையின், நச்சுக்கொள்கையை, தூய்மைப்படுத்த வேண்டும் - அப்போதுதான், சமூகம் சுகப்படும், நாடு புதுவாழ்வு பெறும், என்று உத்தமர் காந்தியார் உரைத்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பெருங்கொள்ளைக் கூட்டத்தின் தலைவன்! அவன், உள்நாட்டு உழைப்புறிஞ்சிகளைத் தன்னுடன், கூட்டாளியாக - பங்காளியாக இக்கிக் கொண்டான். ஏழை, இந்தக் கூட்டுக்கம்பெனியால் கொள்ளையடிக்கப் பட்டுத் தேய்கிறான், என்று கர்ஜனை செய்தனர், தலைவர்கள், உள்நாட்டு முதலாளிகளின் இலாபவேட்டையும், ஏகாதிபத்யத்தின் சுரண்டல் திட்டமும், இரண்டும் ஒழிக்கப்படுவதுடன், வெளிநாட்டார் இங்கு, பணம் போட்டுத் தொழில் நடத்தி, அதன்மூலம் இலாபம் ஆடைவதுடன், நாட்டின் ஜீவநாடிகளைக் கைப்பற்றி, ஆதிக்கம் செலுத்தி, நம்நாட்டை ஆட்டிப்படைக்கும் கொடுமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும், அன்னிய நாட்டுமூலதனம், இங்கே புகுந்து, ஆதிக்கம் பெறுவதற்கு நாம் இடமளிக்கூடாது. என்று வீராவேசமாகத் தலைவர்கள் பேசிவந்தனர். ஆனால், இப்போது, என்ன நடைபெற்றுக்கொண்டு வருகிறது?

தொழில்களைச் சர்க்கார் உடைமையாக்கு வது, என்ற திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இந்தத் திட்டத்தை முதலாளிமார்கள் பலமாகக் கண்டித்துள்ளனர்.

அவர்கள் கண்டித்தது ஆச்சரியமூட்டக்கூடியதல்ல, நேரு, பட்டேல் போன்ற தலைவர்களே, இப்போது அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டனர்.

பெருந்தொழிற்சாலைகள், எப்போதும் போலவே, முதலாளிகளிடமே உள்ளன.

புதிய தொழிற்சாலைகளையும் அமைக்கும் படி, அந்த முதலாளிகளை முதலாளித்துவ முறையை ஒழித்தே தீருவோம் என்று முழக்கமிட்ட, தலைவர்களே வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்கள்.

இலாபவேட்டையைக் கண்டித்த அதே தலைவர்கள், முதலாளிகள் இலாபநோக்கம் இல்லையேல் தொழில் ஆர்வம் பிறக்காது என்று பச்சையாகக் கூறிவிட்டதுகேட்டு, கோபமோ பயமோ கொள்ளாமல், உபதேசம் கேட்டு உண்மையை அறிந்து கொண்ட உத்தமச்சீடன், குருவின்முன் கைகட்டி, நிற்பதுபோல, முதலாளிகள் முன்நின்று, இலாபநோக்கத்தை விட்டு விடும்படி கூறவில்லை - அந்த நோக்கத்தைக் கண்டிப்பதைவிட்டுவிட்டோம் - தொழில்களை நடத்துங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறார்கள்.

சரக்காரின் தலையீடும் இல்லை - இலாப வேட்டைக்குத் தடையும் கிடையாது என்ற இரண்டு வரம் கிடைத்திருக்கிறது. சபிக்கப்பட்டு வந்த முதலாளிகளுக்கு!

இதுமட்டுமா? வெளிநாட்டாரின், “முதல்” இங்கு முகாம் அமைத்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்துவது கூடாது என்று முழக்கமிட்ட அதே தலைவர்கள், வெளிநாட்டு “முதல்” வேண்டும், ஏராளமாகவேண்டும், தங்கு தடையின்றி, உள்ளே வரலாம், என்று உபசாரமொழி பேசுகின்றனர்.

புதிய புதிய தொழில்களைத் துவக்க, ஏராளமான பணம் முதலாகப் போட முன்வரும்படி, வெளிநாட்டாரைக். குறிப்பாக, அமெரிக்காவை நேருவே, கேட்டுக்கொள்கிறார்.

போட்ட முதல் கெட்டுவிடாது! துவக்கப்படும் தொழிலை, துரைத்தனம், கைப்பற்றிக் கொண்டுவிடாது! கிடைக்கும் இலாபத்துக்குக் குந்தகம் ஏற்படாது! இலாபத்தை உங்கள், நாட்டுக்குக்கொண்டு போவதற்கு ஒரு தடையும் ஏற்படாது! வருக! வருக! என்று நேருவே வருந்தி வருந்தி அழைக்கிறார்.

வல்லூறுகளை அழைக்கிறார். கிளி கொஞ்சும் சோலைக்கு - விருந்துக்கு!

கையிலே கவண் இல்லை! வலை எதும் இல்லை! தினை உண்டு! தீங்கனிகள் பல உண்டு. தத்தைக் உண்டு! - என்று விவரிக்கிறார்.

புதிய ஆட்சியின்போக்கு எங்ஙனமிருக்கு மோ, சமதர்மத்திட்டத்தைச் சதா பேசிக் கொண்டிருந்தவர்களல்லவா இப்போது சர்க்காரை நடத்துகிறார்கள் - ஏழை பங்காளர்களல்லவா இப்போது ஆளவந்தார்களாகியுள்ளனர். இவர்கள் முதலாளித்வமுறையைக் கருவறுத்து விடுவதாகச் சபதம் செய்தவர்களாயிற்றே, அன்னிய நாட்டுப் பொருளாதாரப் பிடியிலிருந்து நாட்டை விடுவித்து, நல்வாழ்வு தரப்போகிறோம் என்று மக்களிடம் வாக்குக் கொடுத்தவர்களாயிற்றே, இவர்களை நம்பி, நாம் எப்படி இந்தியாவில் பணம் போட்டுத் தொழில் நடத்துவது, இலாபமோ, நிரந்தர நிலையோ, எது, என்று பயந்தனர், இங்கிலோ - அமெரிக்க முதலாளிகள் இன்றோ, அவர்களை அழைக்கின்றனர். தலைவர்கள்!! இலாபம் உண்டு, வாரீர்! தயங்காமல் வாரீர்! தடை எதும் இராது வாரீர்! என்று.

கண்ணே வருக! கனிரசமே வருக! - என்று பிள்ளைத் தமிழ் பாடும், தலைவர்களாகிவிட்டனர். “ஒழித்தே தீருவோம்” என்று முழக்கமிட்டுவந்த அதே தலைவர்கள்.

வல்லூறுகள் வரப்போகின்றன, விருந்துண்ண! விசேஷ அழைப்பின் பேரில்!

சர்க்காரின் திட்டம் தெளிவாக்கப்பட்டுவிட்டது, எனவே இனிச் சந்தேகமோ அச்சமோ கொள்ளாமல், தாராளமாகவந்து தர்பார் செய்யலாம் என்று தைரியம் கூறுகிறார். சர்.விஸ்வேஸ்வரர், டாலர் சீமான்களுக்கு!

பதினேழாம் நூற்றாண்டு - அன்னிய ஆதிக்கத்தைப் புகுத்த வேண்டுமானால் படுகொலைகளும், பயங்கரச் சண்டைகளும் நடத்தியாக வேண்டிய நிலை இருந்தகாலம்.

இருபதாம் நூற்றாண்டு - அன்னிய ஆதிக்கம், மிக மிக நாசுக்கான முறையிலே, தந்திரமாக பிறர் அறியாவண்ணம், புகத்தி விடுவதற்கான வழிமுறை வளர்ந்துவிட்டகாலம்.

இளைப் பிடித்து மிருகத்தனமான முறையிலே அடித்துக் கொன்று போடும் காட்டு மிராண்டி முறைமாறி, ஒரு சிறு ஊசியில் விஷத்தைத் தோய்த்துவைத்து அதனால் அவனும் அறியாவண்ணம் குத்தி இளைச் சாகடிக்கும், சாகசக் கொடுமை வளர்ந்திருப்பது போலவே, இன்று ஒருநாடு மற்றோர் நாட்டின்மீது ஆதிக்கத்தைப் புகுத்துவதற்கு, மிக மிக இலகுவான முறைகளைக் கற்றுக்கொண்டுள்ளன வல்லரசுகள்.

மூலதனம் போடுதல் - தொழில் ஆபிவிருத்தி செய்தல் - நிபுணர்களைத் தருவது - என்பன போன்ற முறைகளின் மூலம், வல்லரசுகள், இன்று பெரும்படைகளால் சாதிக்க முடியாத காரியத்தை எல்லாம், எளிதாகச் சாதித்துக் கொள்கின்றன.

உருட்டும் கண்! மிரட்டும் சொல்! ஒரு காலத்திலே, ஆதிக்கக் கருவிகள்.

இன்று, அன்புப் பார்வை, உபசார மொழி, ஆதிக்கக் கருவிகளாகிவிட்டன.

இத்தகைய சூழ்நிலையின்போது, அன்னிய மூலதனத்தை, இங்கு வரவழைப்பது, ஆதிக்கக்காரரை, நாமாக வலிய வலிய வரவழைக்கும், விபரீதமான காரியமாகும்.

அன்னியர்கள், இங்கு பல ஆயிரம்கோடி பவுன்களையோ, டாலர்களையோ, கொண்டுவந்து, புதிய தொழிற்சாலைகளை அமைத்துக் கொண்டு, இலாபவேட்டை இடத் தொடங்கினால், அந்த ருசி அவர்களை, மீண்டும் புதிய ஏகாதிபத்தியத்தை - தந்திரமான ஏகாதிபத்தியத்தைத அமைக்கும் படியே தூண்டும். அந்தச் சமயத்திலே, நம் நாடு, அவர்களின் பிடியிலிருந்து, விடுபடுவதும், கஷ்டமாகிவிடும்.

அமெரிக்கா, ஒரு கரத்தில் பணக்குண்டும், மற்றோர் கரத்தில் அணுகுண்டும் வைத்துக்கொண்டு, அகில உலகிலும் தன் ஆதிக்கத்தைப் பரப்பும் திட்டத்துடன் வேலை செய்து வருகிறது.

இதனைத் தகர்க்கச் சம்மட்டி ஏந்தி நிற்கிறது சோவியத்நாடு.

உலகு, இரு முகாம்களாகிவிடுமோ, என்ற எண்ணம், பலருடைய மனதைக் குடையும் காலம் இது.

இந்தச் சமயத்திலே, வெளிநாட்டு மூலதனத்தை, வேண்டி வேண்டி அழைப்பதும், பழைய கொள்கைகள், முன்னாள் முழக்கங்களை மறந்துவிட்டு, வெளிநாட்டாருக்குத் திருப்தியும் தைரியமும் ஏற்படும் அளவிலும் முறையிலும், உபசாரம் பேசுவதும், சலுகைகள் காட்டுவதும், வசதிகள் செய்து தருவதும், நாட்டை அன்னியருக்குக் காட்டிக் கொடுக்கும், துரோகக் காரியமாகும்.

இலாப மோப்பம் பிடித்துக்கொண்டு, பணம் படைத்தவர்கள், தாமாக வருவதும், வருகிறவர்களின் கொடிவழிப் பட்டியைக் கண்டறிந்து அவர்களுக்கு நாம் நிபந்தனைகள் விதிப்பதும், முறையாயிருக்க, இங்கு தலைவர்கள், முதலாளிகளைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, கெஞ்சிக் கூத்தாடி நின்று அவர்களுக்கு என்ன வசதி தேவை, என்ன உரிமை தேவை என்று வினயமாக விசாரித்து, அவர்கள் கேட்பதற்கெல்லாம் ஆணங்கும் போக்குக் கொண்டுள்ளனர் தலைவர்கள் இது கேவலமானது மட்டுமல்ல, கேடு தருவது பாமரன் மொழியிலே கூறுவதானால், நாட்டை அமெரிக்காகாரனிடம் ஆடகுவைத்துக் கடன் வாங்குகிறார்கள் என்று கூறவேண்டும். ஏன், தலைவர்கள், இந்தத் தீய பாதையில் செல்கிறார்கள்? நாட்டை மீட்டிடும் நற்பணி புரிந்த வீரஇளைஞர்கள், ஏன், இதனை அனுமதிக்கிறார்கள்?

வல்லூறுகளுக்கு விருந்து! விருந்துக்கு அழைப்பு! வாய் திறவாமல் இருக்கின்றனர் மக்கள் - வர இருக்கும் விபத்தை அறியாமல்!

(திராவிடநாடு - 17.4.49)