அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வரலாற்றில் இடம் பெறும் வைபவம்!

மகா மேதாவிகளும் - காந்தியவாதி களும்- பொதுஜனத் தலைவர்களும்- எதிர்ப்பு களை எல்லாம் ஏளனத்தாலேயே சாகடித்து விடக் கூடிய சக்தி வாய்ந்தவர்களும் கொண்ட இந்த மாகாண மந்திரி சபை, தேர்தலுக்கு நிற்காத `தேவதா அனுக்ரகத்துக்குப் பாத்திரமாகாத' பொது மக்களிடம் இச்சகம் பேசியாவது இருதயத்தை அபகரித்து விட வேண்டும் என்று அரசியல் இலாப வேட்டை முறையை விரும்பாத, திராவிடர் கழகத்தின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் கூடுவதைப் பற்றிக் கவனம் செலுத்தும் என்று யார் எண்ணியிருக்க முடியும்!

கலியுக ஜனகர் என்று புகழ் பெற்ற ஓமந்தூராருக்கு எவ்வளவோ மிகமிக முக்கிய மான அலுவல்கள் உள்ளன.

ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் ஆட்சி என்ற ஏடுகளைத் தமிழாக்கித் தரச் சொல்லவும், தரப்பட்டவை சரியா என்று கேட்டறியவும், கேட்டறிந்து சரியா என்று மேற்கொண்டறியவும், அறிந்ததைப் புரிந்து கொள்ளவும் புரிந்து கொண்டதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவுமான அலுவலை மட்டுமல்ல நான் குறிப்பிடுவது.

ஆகாது இந்த ஆளின் ஆட்சி! இந்த ஆட்சியினால் நமது அபிலாஷைகள் சித்தி யாகாது- நம்மவாளுடைய ஷேம அபிவிருத்தி யிலே லவலேசமும் அக்கறை கொள்ளாத இந்த ஆசாமியைச் சீக்கிரத்திலேயே வெளியேற்றி விட்டு, விப்ரபந்துவான சுப்பராயனையோ விசேஷ தீட்சண்யமில்லாவிட்டாலும், அபி மானம் நிறைந்த பக்தவச்சலத்தையோ, வேறு யாரையோ பீடமேறச் செய்து நமது காரியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்- என்று யோசித்தபடி உள்ள, வரதாச்சாரி கம்பெனியின் `போக்குவரத்துக்களைக் கூர்ந்து கவனித்து, அவ்வப்போது அரசியல் ஆரூடம் பார்த்தபடி, ஏற்படும் பிளவுகளைச் சரிப்படுத்த ஆசை அணைகள்' கட்டுவதையும், மட்டுமல்ல நான் குறிப்பிடுவது- முதலமைச்சர் ஓமந்தூராருக்குப் பலப்பல அலுவல்கள் உள்ளன- நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்த, நினைத்தது நினைத்தபடி ஏன் நடைபெறவில்லை என்பதைக் கண்டறிய, நிஜா மின் போக்குக்குத் தக்கபடியான, முன்னேற்பாடு களைச் செய்ய, பணப் பெருக்கமும், உற்பத்திக் குறைவும், ஒழிய என்ன செய்வது என்று கண்டறிய, பருவ மழை பெய்யாத காரணம், பாவம் அதிகரித்ததால் என்று கூறிவிட்டோம். ஆனால், அது போதுமா, பாவம் குறையவும் புண்யம் அதிகரிக்கவும் ஏதேனும் செய்ய வேண்டுமே, அதற்கென்ன வழி, என்று கண் டறிய, கள்ளுக் கடைகளை மூடிவிட்டோமே ஒழிய, கள்வாடை மட்டும் அடங்கக் காணோமே, இதற்கென்ன செய்வது என்று யோசிக்க, இவ்விதமான பலப்பல அலுவல்கள் உள்ளனவே. இவ்வளவுக்கு இடையே, ஓமந்தூரார் திராவிடர் கழகத்தின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தைப் பற்றி, எண்ணவோ, கவனிக்கவோ, நேரமோ- அவ சியமோ இருக்க முடியாது- அவ்வளவு பெரியவர் இவ்வளவு சிறிய விவகாரத்தையா கவனிக்க இசைவார்- அவருடைய வீரதீர பராக்கிராமத்தை, நிஜாமை எதிர்க்க, பஞ்சத்தை எதிர்க்க, இலஞ்சத்தை ஒழிக்க, நாட்டைச் சீராக்க, ஆட்சியைப் புது முறையாக்க, இப்படிப்பட்ட காரியங்களுக்கல்லவா பயன்படுத்துவார்.

சட்டசபையை எட்டியும் பாராத, சாமான் யர்களின் கமிட்டிக் கூட்டத்தின் மீது அவருடைய திருப்பார்வை ஏன் பாயப் போகிறது என்றுதான் நான் நினைத்தேன்- நான் மட்டுமா- நாடாளும் கட்சியைச் சார்ந்த நண்பர்கள் பலரும் நினைத்த னர். ஆனால் நடந்தது என்ன? நாடாளும் கட்சியின் நண்பர்களே, வெட்கித் தலைகுனிய வேண்டிய முறையிலே, காரியங்கள் நடை பெற்றன- மின்சார வேகத்தில்- நடைபெற்றுக் கொண்டுள்ளன! என்னென்ன இனியும் நடை பெறுமோ, யார் கண்டார்கள்!

அரசியல் வாண வேடிக்கை!
நாலுநாள் கூத்து!
தன்னாலே நசித்துவிடும்!
காட்டுக் கூச்சல்!
கவைக்கு உதவாதது!
கவலைப்பட வேண்டாம் கரைந்து விடும்!
புசுபுசுவென்று போய்விடும்!

என்றெல்லாம், எந்த இந்தி எதிர்ப்பைப் பற்றி, மாறி மாறி மந்திரிமார்கள் பேசி வந்தார் களோ, மக்கள் மன்றத்திலே மார்தட்டிக் கூறி னார்களோ மமதையுடன், இன்னும் நாலு நாட்களிலே இருக்குமிடம் தெரியாது. இந்தி எதிர்ப்புப் போய்விடத்தான போகிறது பாரீர் என்று பேசினார்களோ அந்த இந்தி எதிர்ப்புச் சம்பந்தமாக, திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி மேற்கொண்டு என்னென்ன செய்வது என்று யோசிக்கக் கூடிற்று. கூடிய கமிட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையிலே, மாகாண சர்க்காரின் போலீஸ் படையும் ஜரூராக வேலை செய்த வண்ணம் இருந்ததைப் பிறகே அறிய முடிந்தது.

கமிட்டி கூடியிருந்த பெரியார் மாளிகை உள்ள தெருவைச் சுற்றிலும் போலீஸ் வளைத்துக் கொண்டிருப்பதையோ, கழகத்தினரைக் கைது செய்து கொண்டு செல்ல, தயாராக போலீஸ் லாரிகள் வந்திருப்பதையோ, கமிஷனரும் அவருடைய துணைவர்களும், அப்பக்கம் பவனி வருவதையோ, எதிர்பாராத கமிட்டியினர், எங்கள் ஊருக்கு வரவேண்டும்- எங்கள் ஜில்லா வில் மாநாடு நடத்த வேண்டும்- எங்கள் ஊரில் மறியல் துவக்க அனுமதி தர வேண்டும்- என்று கேட்டுக் கொண்டிருந்த வெளியூர்ப் பிரமுகர் களுக்குத் தக்க சமாதானங்களைக் கூறிக் கொண்டும், தகுதியான திட்டங்களைப் பற்றிக் கலந்து பேசிக் கொண்டும் இருந்தனர்!

அதேபோது தான் போலும், நாலு அடிக்கு ஒருவர் நிற்கட்டும்- ஆறு லாரிகளை அனுப்பி வைப்போம், அசிஸ்டெண்ட் கமிஷனர் போகட் டும்- ஆசாமிகளை அப்படியே சுற்றி வளைத்துக் கொள்ள வேண்டும்- எல்லோரையும் ஒரே அடியாகப் பிடித்து மூடி விட வேண்டும் என்றெல்லாம், கமிஷனர், தமது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தது! புசுபுசுவென்று போய் விடப் போவது இந்த இயக்கம் என்று பல இயக்கங்களை நடத்திப் பழக்கப்பட்ட தலை வர்கள் பேசிவிட்டார்களே. அப்படிப்பட்ட `ஞானஸ்தாள்' அவ்வளவு தெளிவாகப் பேசி, இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அலட்சியமாகக் கருதி விட்ட பிறகு, போலீஸ் பாராவோ லாரியோ, கமிஷனரின் உத்தரவோ, கைது ஆவதோ வரக் கூடுமென்று, ஏன் கழகத்தினர் எண்ணப் போகி றார்கள்! கழகம், மிக மிக ஏமாற்றத்துக்குள்ளா யிற்று, அன்றைய நடவடிக்கையால்! அசகாய சூரர்கள் இந்த ஆளவந்தார்கள் என்று எண்ணிக் கொண்ட கழகத்தவருக்கு, அன்று தான் விளங்கிற்று. அந்த அசகாய சூரர்களுக்கு, ``அஸ்தியில் ஜூரம்'' எவ்வளவு வேகமாக அடித்துக் கொண்டிருந்தது என்பது. பெரியதோர் ஏமாற்றம்! அதிர்ச்சி என்றே கூறலாம்! புசு புசு வென்று போய்விடும் என்று கூறிய மந்திரி மார்கள், இவ்வளவு ஜரூராக வேலை செய்ய முனைவார்கள் என்று எப்படி யார் தான் எண்ணி யிருக்க முடியும்!

கழகத்தவர் கொண்ட அதிர்ச்சியைவிட, ஏமாற்றத்தைவிட, அதிகமான அளவு, ஆளவந் தார்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்- இல்லை என்றால், மிகமிகக் கவலையற்ற முறையிலும், கெம்பீரத் தொனியிலும் பேசிவந்தார்கள். திடீரென, `ஜல்லடம்' கட்டிக் கொண்டு கிளம்பி யிருக்க மாட்டார்களல்லவா! பாபவம்! அவர்கள் பட்ட கஷ்டத்தை யார் கவனிக்கிறார்கள்! கொஞ்சம் கவனித்தால் விளங்கும். அவர்களின் மனவேதனை! குறிப்பாகவும் சிறப்பாகவும் ஓமந்தூராரின் மனவேதனை மிகமிக அதிக மாகவே இருந்திருக்க வேண்டும்!

இந்தி எதிர்ப்பு இயக்கம் துவக்கப்பட்டதும், தாங்கள் அதனை மதிக்கப் போவதில்லை, பிரமாதப்படுத்தப் போவதில்லை, கைது செய்வது போன்ற நடவடிக்கைகளைச் செய்யப் போவ தில்லை என்று ஆளவந்தார்கள் வீம்பு பேசினர்.

கருணை- நீதி- ஜனநாயகம் போன்ற கோட்பாடுகளைக் காரணம் காட்டியல்ல! இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் மீது கவனம் செலுத்துவதே, அந்தக் கனவான்களின் கண்ணியத்துக்குக் குறைவு ஏற்படுத்திவிடும் என்றும், இந்தி எதிர்ப் பாளர்களைக் கைது செய்தால், அதன் விளை வாக அவர்களும் இயக்கமும் நாட்டு மக்களின் கவனத்துக்கு உரியதாகிவிடும் என்றும் அந்த நிலையைத் தாங்கள் உண்டாக்கப் போவதில்லை என்றும், ஒரு நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்துவிட்டால், கேட்பாரற்று கவனிப்பாரற்று, சீந்துவாரற்று இயக்கம் செத்துவிடும் என்றும், இப்படிக் காரணம் காட்டிப் பேசினர் கனம்கள்! இதழ்கள், இதே ராகத்தைப் பாடின!

``ஆச்சாரியாரைவிட ஓமந்தூரார் புத்திசாலி, சார்! இந்தி எதிர்ப்பாளர்களை முன்பு ஆச்சாரியார் கைது செய்ததாலேதான் இயக்கம் வளர்ந்தது. இந்தச் சூட்சுமத்தை அறிந்து, ஓமந்தூரார் ஓர் யுக்தி செய்திருக்கிறார். இந்தி வேண்டாம் என்று இதுகள் கத்து கத்தென்று கத்தட்டும் என்று விட்டு விட்டார்- கைது செய்வதில்லை என்று கூறி விட்டார். இனி இயக்கம் வளராது- என்று ஓமந் தூராரை அவருடைய சகாக்கள் பாராட்டினர்.

இந்தி எதிர்ப்பு, இவர்கள் எண்ணியதைப் போல, கவனிப்பாரற்றுப் போயிற்றா! இல்லை! மாறாக, வளர்ந்த வண்ணம் இருந்தது.

முதல் நாள் மறியலின்போது, பொது மக்களும், மாணவர்களும், மறியல் தொண்டர்கள் கைது செய்யப்படுவார்கள், பார்க்கலாம் என்ற முறையிலேதான் கூடினர்.

தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருந் தால், பிறகு ஒவ்வொரு நாளும், அங்குப் பொது மக்களுக்கும் போலீசுக்கும் ஒரு கால் மணி நேர வேலைதான் இருக்கும்- இயக்கத்தைப் பற்றியும் கழகத்தைக் குறித்தும் பொது மக்களின் கவனமும் பேச்சும் சில நிமிஷ நேரம் மட்டுமே இருந்திருக்கும்.

தொண்டர்கள் வந்தனர்- இந்தி ஒழிக என்றனர்- போலீஸ் லாரி வந்தது- ஏற்றிவிட்ட னர்- மறியல் முடிந்துவிட்டது- என்று இவ்வள வோடு முடிந்துவிட்டிருக்கும்.

புசுபுசுவென்று இயக்கம் போய்விட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட மகா மேதாவிகள் செய்த புத்தி தீட்சணிய மிகுந்த காரியம். இப்படி இயக்கம் ஒருநாள், ஒரு பொழுது, ஒரு பத்து பதினைந்து நிமிஷ விளையாட்டாகி விடும் நிலையிலே சிக்கிக் கொள்ளாதபடி தடுத்ததுடன், உண்மையான,உ ருவான, பலன் தரத் தக்க, பிரசார பலம் பொருந்திய வகையான மறியல் திட்டமாக மாற்றிறி அமைத்துவிட்டது. இரண்டு மணி நேர அளவுக்கு மறியல்! பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரையும் காணவும், பணிவும் அன்பும் கலந்த குரலிலும், முறையிலும், இந்தி வேண்டாம் என்று தொண்டர் கள் கூறவும், பிறகு கலையவும், அன்று முழுவதும் மக்கள், மறியல் பற்றிப் பேசவும், மறியலை நடத்தும் கழகத்தின் கொள்கைகளைப் பற்றி விவாதித்து விளக்கம் பெறவும், வசதி ஏற்பட்டது.

இந்த உண்மையைச் சர்க்கார் மட்டுமல்ல, நமது கழகத்தவரில் பலரும் உணரச் சில நாள் பிடித்தது. பொதுவாகவே, திடீர் நடவடிக்கை களிலும் மயிர்க் கூச்செறியும் சம்பவங்களிலுமே பொது மக்களுக்குப் பிரியம்- நேரடி நடவடிக் கைகளில் ஈடுபடும் இயக்கங்களுக்கும் இதே மனோபாவந்தான் பொதுவாக உண்டு. ஆனால், திராவிடர் கழகத்தாரின் திட்டத்தை நமது தந்திரத் தால் தகர்ப்பதாக எண்ணிக் கொண்ட ஆள வந்தார்கள் கையாண்ட புதுமுறை, உண்மை யாகவே, பொது மக்களுக்கும், திராவிடர் கழகத்துக்கும், புதியதோர் உண்மையை விளக்க உதவிற்று- உடனடியாகக் கைது செய்யப்பட்டுக் கூண்டில் அடைத்துவிடும் முறையினாலே ஏற்படும் பலனைவிட, மறியல் நெடுநேரமும் தொடர்ந்தும் நடைபெற வழி கிடைப்பதனால் உண்டாகும் பலன் அளவிலே மட்டுமல்ல, தரத் திலும் பெரியது என்பது விளக்கமாகத் தெரியலாயிற்று.

இதுவரை நடைபெற்ற எந்த மறியலும், இந்தி எதிர்ப்பு மறியலின் போது காணப்படுவது போன்ற நீண்ட நேரப் பணியினைக் கண்டிருக்க முடியாது. இந்த மறியல் பொதுமக்கள் மனத்திலும் மாணவர்கள் மனத்திலும் ஆழப் பதிவது போல, வேறு மறியல்கள், பதிந்ததில்லை.

உடனடியாகக் கைது செய்து விடட்டும் என்ற நோக்கத்துடனேயே காங்கிரஸ் நண்பர்கள் முன்பெல்லாம், பலவகை மறியல்களை நடத்தி னர்- காரணம், அவர்கள், கைது செய்யப்பட்டுச் சிறைவாச முத்திரை பெற்று, பிறகு அந்த முத்திரையைப் பொது மக்களிடம் காட்டி, தேர் தலில் பலன் பெற வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாக, முதல் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். திராவிடர் கழகத்தின் நோக்கம் வேறு- எனவே முறையும் வேறாக இருக்கிறது.

கைது செய்வதானால், தாராளமாகச் செய்யட்டும்- ஆனால் கைது செய்யாதிருப்பின், மறியல் காரியத்தை ஒழுங்காக மேலும் மேலும் செய்வோம் என்பதே, திராவிடர் கழகத்தின் முறை. அந்த முறையின் பலனை, உணரச் சர்க்காருக்குச் சிலநாள் பிடித்தது- ஆனால் இன்னமும் முழுவதும் உணர்ந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. பதவிப் பித்தம் புலன்களைக் கெடுக்கிறது- நல்லவர்களைக்கூட!

முதல்நாள் மறியலின்போது, நடவடிக் கையை மட்டும் எதிர்பார்த்துக் கூடினர். பிறகோ, மக்கள், பிரச்னையைக் கவனிக்கக் கூடினர்- பிறகு ஆதரவாளர்களாக மாறினர். முதல் நாள் மாணவர்கள், தமது பள்ளி வாயலில் சில பலர் கைது செய்யப்படுவார்கள்- என்ற எண்ணத் துடன் வந்தனர். பிறகோ, மறியலின் போக்கையும், பாடத்தையும் கவனிக்கலாயினர்- அவர்களும் ஆதரவாளராயினர். புசுபுசுவென்று போய் விடும் இந்த இயக்கம் என்று கூறிய அமைச்சர், இவை களைக் கண்டாரா? அவர் ஏதோ ஓர் கற்பனா உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்- நாட்டு மக்களின் உள்ளம் என்னென்ன விதமாக மாறுகிறது என்பதை கவனிக்க முடியவில்லை!

ஆனால் அமைச்சர்களின் சிந்தனைக்கு வேலை தரும் விதமாகப் போலீஸ் நண்பர்களின் `சேதிகள்' குவியலாயின.
* * *

மறியல் நடந்ததா?

ஆமாம் நடந்தது!

இன்றுகூட!

ஆமாம்- இன்றும்.

தொண்டர் தொகை?

வழக்கம் போல!

எவ்வளவு நேரம் நடந்தது?

இன்று அரை மணி நேரம் அதிகம்.

மாணவர்கள் போக்கு எப்படி இருந்தது?

நாளுக்க நாள் மாறுகிறது.

விளக்கமாகச் சொல்லுமய்யா? என்ன மாறுதல்!

மாணவர்கள், இந்தி எதிர்ப்பாளர்களா கின்றனர்!

ஏன்?

மறியல் பலிக்கிறது என்று எண்ணுகிறேன்.

எப்படித் தெரிகிறது?

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதே இந்தி ஒழிக என்று முழக்கமிட்டுக் கொண்டு வருகிறார்கள்.
அதே பள்ளிக்கூட மாணவர்களா?

ஆமாம்.

அந்த ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்- வெளியே. பள்ளிக் கூடத்துக்கு உள்ளே, கண்டிக் கிறார்கள்.
வேறு என்ன செய்கிறார்கள்?

மாணவர்களா?

ஆமாம், அவர்கள்தான்.

மறியல்காரர்கள், இந்தி வகுப்புக்குப் போகாதே தம்பி என்று கூறும்போது, புன்னகை செய்கிறார்கள். வணக்கம் செய்கிறார்கள்- இந்தி வகுப்புக்குப் போவதில்லை என்று கூறுகிறார் கள்- மறியல் தொண்டர்களுக்கு மாலை சூட்டுகிறார்கள்.

யார் மாணவர்களா?

ஆமாம்- மாணவர்கள்தான்.

சரி- பிறகு?

இந்திப் புத்தகத்தைக் கொளுத்துகிறார்கள்.

மறியல்காரர்களா?

இல்லை!- மாணவர்கள்!

மாணவர்கள் கதை போதும்- ஜனங்கள்?

வழக்கம் போலவே கூடுகிறார்கள்- நாங்கள் நெடுந்தொலைவிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறோம்.
நீங்கள் தடுத்ததும், ஜனங்கள் திரும்பிப் போய்விடுகிறார்களா?

அதுதானே இல்லை! மறியல்காரர்கள், ஜனங்களின் கண்களுக்குக் கூடத் தெரிவ தில்லை- என்றாலும் கூட்டமோ கலைவதில்லை!

நின்றுகொண்டே இருக்கிறார்கள்!

ஆமாம்- நின்று கொண்டு பேசிக் கொண்டு- இருக்கிறார்கள்.

என்ன பேசிக் கொள்கிறார்கள்?

அதை எல்லாம் நான் எப்படிச் சொல்வது?

பரவாயில்லை - சொல்லு- என்ன பேசுகிறார்கள்.

சர்க்காரின் போக்கைப் பலமாகக் கண்டிக் கிறார்கள்- நான் நாசுக்காகச் சொன்னேன்.

பார்ப்பனர்களைக் கண்டபடி தூஷிப் பார்கள். பயல்களுக்கு அதுதானே பழக்கம்.

இல்லையே! ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. அதுபோல.

எனைய்யா இது வேடிக்கை! உச்சிக் குடுமி ஒழிக. பூணூல் ஒழிக என்றெல்லாம் கூவுவார்களே.

கிடையவே கிடையாது- இந்தி ஒழிக- வட நாட்டான் ஒழிக, இவ்வளவுதான்.

அப்படியா?

ஆமாம்- பொதுமக்கள் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் பிரச்னை அல்ல இது- இது வடநாட்டான் தென்னாட்டான் பிரச்னை என்று பேசுகிறார்கள். மறியல்காரர்கள் இந்தி ஒழிக என்று தான் கூறுகிறார்கள். பொதுமக்களோ, வட நாட்டு ஆதிக்கம் பரவியிருப்பது அதனாலே தென்னாடு கெடுவது, பிர்லா, பஜாஜ், டாட்டா, டால்மியா ஆகியவர்களின் ஆதிக்கம், அவர் களுக்குப் படேலின் பக்கபலம் இருப்பது, என்று இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசிக் கொள் கிறார்கள்.
எப்போது பேசுகிறார்கள்?

மறியல் நடக்கும்போது.
சரி...
தொண்டர்களைக் கைது செய்யலாமோ?
வேண்டாம் பார்ப்போம்-
* * *

ஓமாந்தூராருக்கும் உயர்தரப் போலீஸ் அதிகாரிக்கும், இதுபோலத் தானே உரையாடல். டெலிபோன் மூலமோ, நேரடியாகவோ நடைபெற்றிருக்க வேண்டும், என்ன `பாடம்' தரும். இந்த உரையாடல்? இயக்கம், புசு புசு வென்று போவதையா! மந்தி மதியினரும் உணருவார்களோ, இந்தி எதிர்ப்பாளர்கள். கெண்டையை வீசி வராலை இழுக்கிறார்கள் என்பதை!

மறியல் செய்தால் என்ன? மாணவர்களின் தொகை குறையவில்லை! என்று மதியூத ஆசிரி யர்கள் கூறக்கேட்டு, மந்திரிகள் மகிழ முடியுமா, மாணவர்கள் மனத்தில் மட்டுமல்ல, பொது மக்கள் மனத்திலேயும், வடநாட்டு ஆதிக்கத்தால் வரும் கேடுகள் பற்றிய விஷயம் நிறைந்த உண்மை இருக்கிறதே- அது நிறைய நிறைய, ஒழியப் போவது இந்தி மட்டுமல்லவே, வடநாட்டு ஆதிக்கமல்லவா ஒழியப் போகிறது! இதுவா, புசுபுசு!

செச்சே! நாம் போட்ட கணக்குத் தவறு என்று அமைச்சர்கள் உணர்ந்து, ஏதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்த நேரமும் ஆச்சாரியார் இங்கு வருகிற நேரமும், ஏறத்தாழ ஒன்றாக இருந்தது. எனவே, எந்த இயக்கத்தின் மீது இந்தக் கனம்களின் கண் விழாது என்று கூறினார்களோ, அந்த இயக்கத் தின், கமிட்டிக் கூட்டத்தை, போலீஸ் சுற்றி வளைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு ஜுர வேகம் ஏற்பட்டது. ஆளவந்தார்ர்களின் போக்கிலே.

பொதுமக்களின் ஆதரவு இந்தி எதிர்ப்பின் காரணமாக உருவாகி இருப்பதையும்,

மறியல் தொண்டர்களின் சாந்தமும், அன்பும் கொண்ட முறை, பொதுமக்களின் அபிமானத்தைப் பெற்றுவிட்டதையும்,

மாணவர்களின் மனம் இந்தி எதிர்ப்பாளர் களின் சார்பாகத் திரும்பி இருப்பதையும்,

பார்ப்பனத் துவேஷம், ஆபாசக் கூச்சல், போன்றவைகள் தலைகாட்டாததால் இயக்கம் கண்ணியம் நிரம்பியதாகி வளருவதையும்,

இந்தி எதிர்ப்புப் பிரசாரத்தின் விளைவாக, வடநாட்டு ஆதிக்க நோக்கத்தைப் பொது மக்கள் உணர்ந்து, வடநாட்டு ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி கொண்டு வருவதையும், அலட்சியத்தால், ஏளனத் தால், இந்தி எதிர்ப்பு இயக்கத்தைக் சாகடித்து விடலாம் என்று எண்ணிய அமைச்சர் குழு கண்டறிந்தனர்- அதேபோது இங்கு ஆச்சாரி யார்- வெறும் ஆச்சாரியார் என்ற முறையிலே அல்ல- கவர்னர் ஜெனரல் என்ற முறையிலே வருவதாகச் சேதி கிடைத்ததும்- உண்மையி லேயே, உறக்கமிழந்தவராயினர்- பொது மக்களின் போக்கு, எப்படி இருக்குமோ, இந்தி எதிர்ப்பாளர்களின் திட்டம் எப்படி எப்படி விரிவடையுமோ என்றெல்லாம் அஞ்சத் தொடங்கினர்.
கண்மூடி மௌனியாக இருந்தவர்கள், கை கால்களை உதறிக் கொண்டு கண்டபடி பேசவும், கண்டபடி உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் முனைந்தனர்.

கைது செய்,
யாரை?
எல்லோரையும்!
தொண்டர்களையா?
அகப்படுகிற அத்தனை பேரையும் கைது செய்- விடாதே- ஓடு- கமிட்டி கூடுகிறது தலைவர் வீட்டில்- சென்று வளைத்துக் கொள்- அனைவரையும் கைது செய்-
என்ன குற்றத்துக்காக?
குற்றமாவது குறையாவது- கும்பலாகக் கூடுகிறார்கள்- அப்படியே இழுத்துக் கொண்டு போய், கூண்டில் போடு- சீக்கிரம்- உடனே- வேகமாக.

இப்படித் துரித காலத்தில் அமைச்சரின் அடாணா அமையலாயிற்று.

அமைச்சர்களின் அச்சத்துக்குப் பல காரணங்கள்- சில விசித்திரமானவை.

ஆச்சாரியார் பவனி வருகிறார்- கவர்னர் ஜெனரல் என்ற அந்தஸ்த்துடன், இந்தி எதிர்ப்புக் காரர்கள், தங்கள் அதிருப்தியைக் காட்டக் கறுப்புக் கொடி பிடிக்க இருக்கிறார்கள்- பொது மக்களோ, வடநாட்டு ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி கொண்டிருப்பதால், கறுப்புக்கொடி காட்டுவது மிக மிக வெற்றிகரமாக இருக்கும்- இதைக் கண்டால், ஆச்சாரியார் என்ன எண்ணுவார்- என்ன சொல்லுவார்- என்ன செய்வார்- என்பது பற்றி எண்ணினர்- எண்ணும்போது ஏற்பட்ட அச்சம் இவ்வளவு அவ்வளவு அல்ல.

ஏன்? கவர்னர் ஜெனரலின் கண்களிலே கறுப்புக் கொடி தென்படக் கூடாது என்பதல்ல அவர்களின் எண்ணம். கறுப்புக் கொடி தெரிந் தால், அவர் தங்களைப் பற்றி என்ன எண்ணிக் கொள்வாரோ என்ற கிலியே அதிகம். குற்ற முள்ள நெஞ்சு குறுகுறுக்குமல்லவா? இன்றைய அமைச்சர்கள், ஆச்சாரியாரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்- அவரை ஆகஸ்ட்டுத் துரோகி என்று தூற்றியவர் கள்- நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தியவர்கள் ஆச்சாரியாரின் வகுப்பு வாத உணர்ச்சியை, நாடறியச் செய்தவர்கள்- அவர், இந்த மாகாணத்தில் எந்த வகையான ஆதிக் கமும் பெறக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தவர்கள்- திருப்பரம் குன்றக் கலகமும், பல இடங்களிலும் நடைபெற்ற கூட்டங்களும், ஆச்சாரியாரின் செல்வாக்கைச் சிதைக்க நடத்தப்பட்டவைகள். அவைகளில் நடு நாயகங்களாக இருந்தவர்கள்- ஆச்சாரியார் தமிழ்நாடு காங்கிரசில் தலைமை வகிப்பது கூடாது என்று தடுத்தவர்கள்- அப்படிப்பட்டவர்களைப் பெரிதும் கொண்டது அமைச்சர் சபையை ஆக்கி வைத்த தமிழ்நாட்டுக் காங்கிரஸ். அதன் தலைவர் காமராஜர், கடும்புயல் வேகத்தில் தமிழகத்தைச் சுற்றினார் ஆச்சாரியாரைத் தொலைக்க, கல்கி உருவைப் பெரிதாக்கிக் கொண்டும், வார்த்தை களை அனலாக்கிக் கொண்டும் ஆச்சாரியாரின் சார்பிலே நின்று போராடிப் பார்த்தது. அப்போது ஆச்சாரியாரைக் கண்டிக்க, இவர்கள் உப யோகித்த கடுமையான, சூடான, காரசாரமான, கேவலமான சொற்களை இப்போது கவனத் திற்குக் கொண்டு வந்தால் நடுக்கம் ஏற்படும்.

இவர் மண்டைக் கர்வி!
சுயஜாதி அபிமானமுள்ளவர்!
சூழ்ச்சிக்காரர்!
காந்தியாரின் சம்பந்தியாகிவிட்டதால், எதையும் சாதிக்கலாம் என்று எண்ணுபவர்.
பாகிஸ்தானுக்குத் தாளம் போட்டவர்.
ஆகஸ்ட்டில் காட்டிக் கொடுத்தவர்.
மேலிடத்துக்குக் காவடி தூக்குபவர்.

இவ்விதமாகவெல்லாம் பொதுக் கூட்டங் களில் பேசி, பத்திரிகைகளில் எழுதி, ஆச்சாரி யாரின் வாழ்நாட்களிலேயே, அவர் மறக்க முடியாத வேதனையை உண்டாக்கினவர்கள்- அவருடைய வீழ்ச்சியைத் திருநாளாகக் கொண் டாடியவர்கள்- அந்தக் கிளர்ச்சியின் போது, நாடு நகரமெங்கும் காங்கிரசுக்குள்ளாகவே இரண்டு கட்சிகளாகி, சொல்லடியும், கல்லடியும் மிகுந்திட, கோரமான நிலைமையை உண்டாக்கியவர்கள் அப்படிப்பட்ட தலைவர்களே, இன்று தமிழ்நாட்டு காங்கிரசின் முக்கியத் தலைவர்களாகவும், ஆட்சி மன்றத்தினராகவும், கொலு வீற்றிருக்கிறார்கள்.

``சிறை சென்ற தேச பக்தர்களை, உண்மை ஊழியர்களை, சிறந்த தியாகிகளை, அவமதித்தார். அவர்களை ஐந்தாம் படையினர், சோம்பேறிகள், ஒன்றுக்கும் உதவாத கயவர்கள் என்று நிந்திக்க வும் துணிந்தார்! அதற்கு வாயும் வந்தது! அது மட்டுமா? தமிழ்நாட்டிலே எத்தனை குட்டிக் குழப்பங்களையும் கட்சிகளையும் சிருஷ்டித்தார்! அவர் அன்று போட்ட விஷவித்து, இன்று வளர்ந்து, பூத்துக் காய்த்து விஷக் கனிகளையும் கொடுத்து வருகிறது! இன்று தமிழ்நாட்டின் சீரழிவுக்கும் சீர்கேட்டுக்கும் அந்த விஷ வித்துத் தான் காரணம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் மட்டுமா இந்த விஷமம் செய்தார்? இல்லை, இல்லை. இந்தியாவெங்கும் போய் விஷமப்பிரசாரஞ் செய்தார்! காங்கிரசை யும், மகாத்மா காந்தியையும் கூட எதிர்த்தார்! ஆகஸ்ட் தீர்மானத்தைக் கிண்டல் செய்தார்! புரட்சியை ஒடுக்க முனைந்தார்! அடக் கடவுளே அத்துடன் நின்றாரா? ஜின்னா சாய்புவைத் தட்டிக் கொடுத்துப் பாகிஸ்தானுக்கும் தூபம் போட்டார்! அதற்கு வழியும் வகுத்துக் கொடுத்தார்! இதன் காரணமாக காங்கிரசிலுள்ள 4 அணா மெம்பர் பதவியைத் தவிர, எல்லாப் பதவிகளையும் ராஜிநாமா செய்தார். அவர் போன போக்கும், அவருக்கு நாடெங்கும் ஏற்பட்ட எதிர்ப்பையும், கண்ட மக்கள் அவருக்கு இனிமேல் அரசிய லிலே இடமே இருக்காது. அவர் அரசியல் துறவறம் பூண்டு, திருச்செங்கோடு ஆசிரமத் திலே முக்காடு போட்டுக் குந்தி விடுவார் என்றே நினைத்தார்கள்! தமிழ்நாட்டிலே, தமிழ் மக்கள் எல்லோரும் அவரை வெறுத்தார்கள், அவர் தலைமையே வேண்டாமென உதறித் தள்ளினார்கள்!''

ஆச்சாரியாரைப் பற்றிய இந்த அர்ச் சனை- முன்பு அவர் மீது பொழியப் பட்டதிலே, ஆயிரத்திலே ஒரு பங்குதான் என்ற போதிலும், இந்த அர்ச்சனையில் ஒரு விசேஷம் இருக் கிறது- இது வெளிவந்திருப்பது `தமிழ் மணி'யில் அதாவது இந்தி எதிர்ப்புக்கு ஆதரவளிக்காத ஏட்டில் வெளிவந்திருக்கும் தேதி ஆகஸ்ட்டு 22ல்.

இப்படிப்பட்ட பல அர்ச்சனைகளைத் `தமிழ் மணி' அன்று போல் இன்றும் செய்கிறது. ஆச்சாரியார் விஷயத்தில் மட்டுமல்ல, தவறான பாதையில் செல்லும் எந்தக் காங்கிரஸ் தலை வருடைய விஷயத்திலும், இந்தப் போக்கிலே கொண்ட கொள்கையின்படி நடப்பது என்ற நேர்மையைத் ...... கடைப்பிடித்து, ஆச்சாரியாரைத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்தவர் என்று அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன் என்று வெளிப்படையாகக் கூறுகிறது. காமராஜர் உட்பட மற்றக் காங்கிரஸ் தலைவர்களுக்கோ, இந்த நேர்மையிலே அக்கறையில்லை. முன்பு நாக்கில் நரம்பின்றி ஆச்சாரியாரைத் தூற்றி னோமே, தமிழ்நாட்டுத் தலைமைப் பதவிக்கே அவர் இலாயக்கற்றவர் என்று கூறி அவரை ஓட ஓட விரட்டினோமே, இப்போது ஆச்சாரியார் திருவடிகளே சரணம் என்று கூறினால், நாடு நகைக்காதா, நமது மனமே சுடாதா, எதிர்க்கட்சி கேலி செய்யாதா, ஆச்சாரியாரே கூட அலட்சி யமாகப் பார்க்க மாட்டாரா என்றெல்லாம் எண்ணவில்லை.

இதேதடாப் பெரிய தொல்லை! நாட்டிலே இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடைபெறுகிற நேரத்தில், வடநாட்டு ஆதிக்கத்தை மக்கள் உணர்ந்து, எதிர்க்கும் நேரத்தில், ஆச்சாரியார் வருகிறாரே- அவர் வருகிறபோது, கறுப்புக் கொடி காட்டப் போகிறார்களாமே- காட்டினால், அவர் ஒரு சமயம், நம்மை ஆகஸ்ட்டுத் துரோகி என்று கேவலமாகப் பேசி ஏசிய காமராஜ் கூட்டம் இப்படிக் கறுப்புக் கொடி வைபவம் நடத்தட்டும், நாமும் கண்குளிரப் பார்ப்போம் என்று தூபமிட்டு, மறைமுகமாக ஆதரித்து விட்டார்கள் போலும் என்று ஆச்சாரியார் எண்ணிக் கொண்டால் என்ன செய்வது? அவரோ இப்போது கவர்னர் ஜெனரல் இருக்கும் இடமோ, டில்லி- டில்லியோ நமது அரசியல் வாழ்வை நிர்ணயிக்கும் இடம்- அப்படி இருக்கும்போது, அவர் மனம் குளிர்ந்தால்தானே நமது அரசியல் ஆயுள் வளரும் என்று யோசித்து, இந்தக் கறுப்புக் கொடி சம்பவத்தை நாம் ஏனோ தானோ என்று விட்டு விட்டதாக ஆச்சாரியார் எண்ணிவிடக் கூடாது- ஏதாவது செய்து, அவர் மனத்தில் நம்மைப் பற்றிச் சந்தேகமோ, தப்பு எண்ணமோ உண்டாகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும், நமது அரசியல் வாழ்வுக்குப் பெருத்த சோதனைக் காலம் இது- என்று அஞ்சி, அவசர அவசரமாக யோசித்து, ஒரு முடிவு செய்ய வேண்டியதாயிற்று- பெரியாரை யும் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தோர் அனைவரையும் சிறையிலிட்டு விட்டு, ஆச்சாரியாரைப் பேட்டி காண்பததான், பெரு நெறி என்று. அந்தப் பெரிய மனிதர்கள் முடிவு செய்தனர்- தமது முன்னாள் சிறுமைக் குணத்தை மறைக்க, இந்த அடக்குமுறைப் படுதா தேவைப் பட்டது.

கவர்னர் ஜெனரலுக்குக் கறுப்புக் கொடி காட்ட திட்டமிட்டவர்களை முன்கூட்டிக் கைது செய்து, பாதுகாப்பான நடவடிக்கை எடுத்து, கவர்னர் ஜெனரலின் பவனிக்குச் சீரும், சிறப்பும் ஏற்படும்படியான, ஒழுங்கான நிர்வாகத்தையும் செய்ய முடியாத ஒரு மந்திரி சபை, சென்னை மாகாணத்தில் இருக்கிறது- என்று கவர்னர் ஜெனரல் கூறிவிட்டால் என்ன செய்வது?

என்னிடம் வெறுப்பும் துவேஷமும் கொண்டு, தமிழ்நாட்டில் பிரசாரம் செய்து வந்த காமராஜர்தான். இப்போதும் தமிழ்நாடு காங்கிர சின் தலைவர் - அவருடைய ஆதரவைப் பெற்றதுதான் மந்திரிசபை. அந்த மந்திரி சபையின் மாண்பை நான் கூறத் தேவையில்லை. எனக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள்- அதிலே காமராஜ் என்று எழுதப்பட்டில்லை. ஆனால், என் மனக் கண்ணால் அந்தப் பெயரைக் கண்டேன் என்று கூறி விட்டால், என்ன செய்வது, என்ற கிலி பிடித்தாட்டிற்று. ஆச்சாரியாருடைய உயர்ந்த பதவி, இவர்கள் மனத்திலே, அவரிடம் ஆசையை அல்ல. அச்சத்தை- மதிப்பை அல்ல மருட்சியை, உண்டாக்கிற்று. இதனால்தான், தங்கள் பத்தினித் தனத்தைக் காட்டிக் கொள்ள வெகு பாடுபட்டார்கள்- பெரியாரையும் கழகத் தோழர்கள் பலரையும், சிறையில் தள்ளி விட்டு, ஆச்சாரியாரைக் காணச் சென்றார்கள். ஐயனே! எம்மைப் பற்றிச் சந்தேகிக்காதீர்.

ஆச்சாரியாரே! முன்பு நாங்கள் துற்றியதை மனத்தில் கொள்ளாதீர்!

கவர்னர் ஜெனரலே! உமது கருணை எமக்குத் தேவை. திராவிடர் கழகத் தலைவரை யும், மற்றும் பலரையும் சிறைப்படுத்திவிட்டோம். உமக்குக் கறுப்புக் கொடி பிடிக்க ஏற்பாடு செய் தார்கள் என்று தெரிந்ததும் உமக்குக் கறுப்புக் கொடி பிடிக்க ஒருவர் எண்ணுவது தெரிந்தும் எங்கள் உள்ளம் பதறாதா- அந்த உலுத்தர்களைச் சும்மா விடுவோமா!

என்றெல்லாம், அவர்களின் பார்வை பேச அவர்களை நோக்கி ஆச்சாரியார்- ``கறுப்புக் கொடி பிடிப்பவர்கள், கபடமறியாதவர்கள். கண்ணியமாகத் தங்கள் அதிருப்தியைக் காட்டுகிறார்கள். உங்களைப் போல உதட்டில் உபசாரமும், உள்ளத்தில் துவேஷமும் கொண்டவர்களல்லர்.

அவர்கள், என்னை, என் சொந்தக் குணக் கேட்டுக்காகவோ நடவடிக்கைக்காகவோ, வெறுப்பதாகக் கூறவில்லை- நான் வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்க்காமலிருக்கிறேன்- ஏற்றுக் கொள்ளுகிறேன் என்பதற்காகவே குறை கூறிக் கறுப்புக் கொடி காட்டுகிறார்கள்- நீங்களோ நான் டில்லி தேவனாவதற்கு முன்பு, என் யோக்கிய தையைச் சந்தேகித்தீர்கள். என் அறிவைக் கேலி செய்தீர்கள். என் திறமையைச் சூழ்ச்சி என்றீர்கள். என் தியாகத்தை வேஷம் என்றீர்கள், என்னைப் படாதபாடு படுத்தினீர்கள்- நீங்கள் என்னிடம் பேசுகிறீர்கள் அன்பொழுக! நான் அனுபவசாலி! அந்தக் கறுப்புக் கொடியினரின் போக்கையும் அறிவேன்- உங்ங்கள் மலர் மாலையின் சிலாக் கியத்தையும் அறிவேன். நீங்கள் பதவிக்குப் பயந்து பல்லிளிக்கிறீர்கள்- அவர்கள், ஒரு கொள்கை காரணமாகக் கருப்புக் கொடி காட்டு கிறார்கள். அவர்களிடம் நான் நாணயத்தைக் காண்கிறேன்- உங்களிடம் நடுக்கத்தைக் காண் கிறேன். நீங்கள், திடீரென்று தயாரிக்கப்பட்ட அன்பைக் கக்குவது தெரிகிறது- அவர்களோ, ஓர் போர் முழக்கமிடுகிறார்கள். என்னால் சாத்யப் படுமானால் நான் அவர்களோடு இருக்க முயல் வேன்- உங்களோடு அல்ல- என்று ஆச்சாரியார் பேச முடியாது- ஆனால் பார்வை காட்டி யிருக்கும் இந்தக் கருத்துக்களை.

சந்தேகத்துக்கு ஆளாவி விட்டால் என்ன செய்வது என்ற சஞ்சலம் கொண்ட தலைவர்கள், மின்னல் வேகத்தில் பாய்ந்து, திராவிடர் கழகத்தின் முக்கியஸ்தர்களை எல்லாம் சிறைப் படுத்தினர்- கறுப்புக்கொடி அவர்களிடமா இருந்தது, மறைந்துவிட- அது பறந்தது, ஆச்சாரி யர் கண் முன்!

வருகிறார் ஆச்சாரியார் என்று மகிழ்ந்து (மேலுக்காவது) காலையில் எழுந்து நீராடி விட்டு, காங்கிரஸ் தலைவர்கள் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த அன்று, திராவிடர் கழகத் தோழர் கள், சிறையிலே சோளக் கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தனர்- சோளக் கஞ்சி! சிறை வாசம்! யாராருக்கு! கோவில்பட்டி நகராட்சி மன்றத் தலைவர் கையில் சோளக் கஞ்சிக் கலயம்- ஒத்தைக் கொட்டடி வாசம்- 151வது செக்ஷன்! வாணியம்பாடி நகரசபைத் துணைத் தலைவருக் கும் அதே கதி! ஈரோடு நகர உறுப்பினருக்கு அதே நிலை! மிட்டா மிராசு பாத்யதை உடைய வர்கள், வியாபார வளம் உள்ளவர்கள், சமுதாயத்தில் யர் நிலையில் வாழ்பவர்கள் பலருக்கும், சி வகுப்பு!அவர்களைக் காண, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் வந்து கூடப் போனார். அவருடைய கண்களிலே நீர் சொரிந்தது? நானறியேன், என்ன எண்ணியிருப்பர்.

உள்ளே சென்றிருந்தவர்களல்ல- வெளியே இருந்த மக்கள்- ஆச்சாரியாரைக் கண்டவர்கள்- வரவேற்பு நடத்தினவர்கள்- வைஷ்ணவ ஜனதோ பாடினவர்கள்- நடன விருந்து அளித்தவர்கள்- நாடாளும் நண்பர்கள்.

ஆச்சாரியார் வந்தார்- சிறையில் பெரியார் தள்ளப்பட்ட பிறகு!

ஆச்சாரியாரும் பெரியாரும், அடுத்தடுத்த இடம்- முனைவர் சேலம், பின்னவர், ஈரோடு- இருவரும் தத்தமது ஊர்களில், நகர சபைத் தலைவர்கள்- இருவருக்கும் நல்ல வருவாய், வக்கீல் வேலை ஆச்சாரியாருக்கு வியாபாரம் பெரியாருக்கு இருவரும் காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினர்- ஏறத்தாழ ஒத்த வயதினர்- ஒருவர் கவர்னர் ஜெனரலாகப் பவனி வருகிறார்- மற்றவர் சிறையிலே கைதி! விமான நிலையத் திலே ஆச்சாரியார் வந்து இறங்க, அவரைக் கவர்னர் தம்பதிகள் வரவேற்க, ஆச்சாரியார் அங்கு வந்தவர்களைப் பார்வையிடுகிறார்- இங்கே சிறையில்- மற்றக் கைதிகளுடன் பெரியார் நிற்கிறார், ஜெயில் சூப்ரிண்டெண்டு, கைதிகளைப் பார்வையிடுகிறார்!

வெளியே ஆச்சாரியாருக்கு, வெள்ளித் தாம்பாளம் வட்டில் அவைகளிலே, விசேஷ பட்சணாதிகள்!
உள்ளே பெரியார் முன்பு அலுமினியத் தட்டும், அதிலே அவர் உடலுக்கு ஒவ்வாத காரமுள்ள குழம்பு கலந்த சோறு.

பொதுவாழ்க்கையின் பலனாக, ஆச்சாரி யார் கவர்னர் ஜெனரலாகி அன்று பவனி வருகிறார்.

பொதுத் தொண்டின் பலனாகப் பெரியார் அன்று சிறையில், வேப்ப மரத்து அடியில், உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், அவர் முகத்தில் புன்னகை தவழுகிறது- அந்த வெண் தாடி அசைவைக் கண்டு, அவருடைய கூட்டுத் தோழர்களின் உள்ளத்தில் உவகை கூத்தாடுகிறது- அதேபோது கவர்னர் ஜெனரல் எதிரே கறுப்புக் கொடிகள் பறக்கின்றன- கடுகடுப்பை மாற்ற அவர் புன் னகையை அழைக்கிறார்- அது சிறையில் இருக்கிறது- ஸ்டேடியம் வர மறுக்கிறது!

இவைகளை அன்று யார் எண்ணாமலிருந் திருக்க முடியும். எண்ணியவர்கள் யார், தமது ஆயுட் காலத்தில் இதனை மறந்திட முடியும்! எதிர் காலத்திலும், இந்தச் சம்பவத்தைப் படிக்கும் எந்த இளைஞனின் புருவம்தான் நெறித்திடாதிருக்கும்- யாருக்குத்தான் பெருமூச்சு வராதிருக்கும்- ஆச்சாரியார் கவர்னர் ஜெனரல்- பெரியார், கைதி! அவர் பவனி இவர் சிறை வாசம்!

ஆச்சாரியாருக்கு மகத்தான உபசாரம் செய்வதாக எண்ணிக் கொண்டு, மந்திரிமார் செய்த இந்த ஏற்பாடு, மானமுள்ள தமிழனின் நெஞ்சிலே இடம்பெறும் மகத்தான ஓர் பாடத்தைத் தந்துவிட்டது.

ஆச்சாரியார் வந்தார்- பெரியார் சிறைப் பட்டார்.

ஆச்சாரியார் வந்தார்- கழகத்தினர் நூறு பேருக்குக் கைது ஆயினர்.

ஆச்சாரியார் வந்தார்- தமிழருக்குத் தடியடி கிடைத்தது.

ஆச்சாரியார் வந்தார்- தமிழ் இளைஞர் சிலருக்கு அடி கிடைத்தது. இரத்தம் பீறிட்டது.

இப்படித்தானே இருக்கிறது. சேதி!

புசுபுசுவென்று இயக்கம் போய் விடுமாமே!

குபுகுபுவென இரத்தம் ஒழுகுகிறது. தடியடி பட்டவர் மண்டையில்! தமிழர்கள் கண்டனர்! வரலாற்றில் இது இடம் பெறும்!

(திராவிட நாடு - 5.9.1948)