அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வரப்போகுதய்யே...!

மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுதய்யே, என்று பாடினாராமே நந்தன், அந்த நாள் வருகிறது. ஊர் பலவற்றிலே, உள்ளே கிடக்கும் உற்சவ மூர்த்திகள், வெளிக்கிளம்புவர்! திருவாதிரை ஒருவாய்க்களி, என்ற பேச்சும், திரும்பிப் பார்த்தால் உலக்கைத் தடி என்ற ஏசலும், நடக்கும். அத்திருவிழாவிலே கலந்து கொள்பவர்கள், சேவை செய்து விட்டு, நெற்றியிலே அர்ச்சகர் அளிக்கும் திருச் சாந்தினை அணிந்து வீடு திரும்புவர், மோட்சத் திற்கு அச்சாரம் தந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு, அந்த விழாவிலே, திலகமிடும் செயல் புரியும் சீலர்கட்கு, அதை ஒட்டியுள்ள புராணம் தெரியுமோ, என்பது சந்தேகந்தான். தெரிந்தால், தன்மானமுள்ளவன், இத்தகைய திருவிழாவிலே கலந்து கொள்ளவுமாட்டான். திலகமிட்டுக் கொள்ளவுமாட்டான். கேட்க ஆபாசமானது, அந்தத் திலகத்தின் திருக்கதை!

சிவனுக்கும், காளிக்கும், நர்த்தனம், நடந்த தாம் முன்பொருபோது. சளைக்காமல் சதிராடிய காளியை எப்படியேனும் தோற்கடிக்க வேண்டு மென்ற கருத்துடன் தோடுடைய செவியன், காலைத் தூக்கி நின்று ஆடினாராம். ஒரு ஆடவன், பெண்ணின் எதிரே காலைத் தூக்கி நின்று ஆடினால், காட்சியின் கோரத்தையும், அதைக் காண நேரிடும் அம்மையின் கண்ணிலும் கருத்தியலுமுண்டாகும் மிரட்சியையும் விவரிக்க வேண்டுமா? அதிலும், அவர் எப்படி ஆடு கிறாரோ, அப்படியெல்லாம் அம்மையும் ஆட வேண்டும் என்பதே நர்த்தனப் போட்டியிலே முக்கியாம்சம், என்ன செய்வாள் காளி? எப்படிக் காலைத் தூக்கி ஆடுவது? தோற்றாளாம். இந்தக் கேவலமான முறையில் கெலித்த கடவுள், களித்தாராம், இன்றும் பக்தர்கள் இதைத்தான், காலைத் தூக்கி நின்றாடிய தெய்வமே! என்று பாடிக் களிக்கின்றனர். புராணம் இத்துடன் முடிந்திருந்தால், திருவாதிரை திலகம் ஏற்பட் டிராது. மேற்கொண்டும் ஒன்று நடந்தது, அதைவிட ஆபாசமானது. சிவனாரின் நர்த்தனத் தின்போதும் ஜடையிலேயே இருந்தாளாம் கங்கா தேவியார். திடீரெனச் சிவனாரின் நெற்றியிலே, உதிரம் ஒழுகிற்றாம். அவர் கீழே விழவுமில்லை, வேறு வகை காயமும் ஏற்படவில்லை. அவர் தெரிந்துகொண்டார், உதிர உற்பத்தின் காரணத்தை, மேலே இருந்த கங்கையும் சற்று வெட்கினார்கள், திடீரென மாதவிடாய் ஆனதால், உதிரம் சிவனாருக்கு அபிஷேகிக்க வேண்டி நேரிட்டதற்காக சிவனார் உதிரத்தையே திலகமாக்கிக் கொண்டார். அந்த உதிரத்தின் அறிகுறியாகத்தான் இன்றும் திருவாதிரையின் போது, பக்தர்கள் திருச்சாந்தை திருவிழாவிலே பெற்று, நெற்றியிலே தீட்டிக் கொள்கின்றனர். அறிவும் தன்மானமும் தமிழருக்குப் பிறந்தால், இனி இத்திருவாதிரைத் திலகத்தைத் தரிப்பானா என்று கேட்கிறோம். வெட்கக் கேடு! வெட்கக் கேடு!! வேண்டாம் இந்த மானமற்ற செயல்!!