அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாரீர்! வகுத்த வழி நடப்போம்!

மாவீரர் ஸ்டாலின் மறைந்துவிட்டார் – மனிதகுல மாணிக்கம் மறைந்துவிட்டது. வரலாறு கண்ணீரால் எழுதப்படுகிறது – வாழ்வளித்த வீரத்தலைவன், மறைந்து போனான். வையகமெங்கும், தேம்புகிறார்கள் – தலைநகர்களிலே தத்தமது கொடியினைத் தாழப்பறக்கவிட்டு, மரியாதை செலுத்தினர் அவர் மரணம் கேட்டு.

அரை நூற்றாண்டுக் காலம் அரும்பாடுபட்டு, அவனியோர் கண்டு ஆச்சரியப்படும்படியான ஆற்றல்காட்டி, அரிய பெரிய வெற்றியைச் சாதித்த அஞ்சாநெஞ்சன், அடலேறு சமதர்மச் செம்மல், ஸ்டாலின் மறைந்துவிட்டார். கண்ணீரைக் காணிக்கையாக்கித் தருகிறார்கள் உலகோர்.

ஒப்பற்றத் தலைவர் – உலகிற்கு ஓர் உத்தமமான வழியைக் காட்டிய தலைவர் – மறைந்து போனார் – உலகு திகைத்துக் கிடக்கிறது.

உலகம் ஓர் இலட்சிய புருஷனை இழந்துவிட்டது – ஈடு செய்ய முடியாத பெருநஷ்டம் – இணையற்ற செல்வத்தை இழந்துவிட்டது உலகு – திக்கற்றோம் என்று திகைக்கிறது உலகம்.

ஸ்டாலின்! மருண்டனர் மமதையாளர்கள் இந்தச் சொல்கேட்டு! இருண்டது நம்வாழ்வு என்று இன்று ஏழையர் உலகம் ஏங்குகிறது அவர் மறைவு கேட்டு.

ஸ்டாலின் சூதுமதியினரும், சுகபோகிகளும், நடுநடுங்கினர் இந்தச் சொல்கேட்டு – இன்று, அந்தோ! எம்மைவிட்டுப் பிரிந்தாயோ எம் தலைவா! என்று பாட்டாளி மக்கள் பதறிக் கதறுகின்றனர், அவர் மறைவு கேட்டு.

களம் பல கண்ட காவலன் – படை பல வென்று தடைபலத் தாண்டி வெற்றிக் கோட்டத்தில் வீரக்கொடியினை ஏற்றி வைத்த தீரன் – ஸ்டாலின்- மறைந்துவிட்டார். அவர் சடலத்தின் பின்னே சோக உருவங்கள், வழியும் கண்ணீரையும் துடைக்கும் நிலையற்று, ஊர்ந்து செல்கின்றன.

பாடுக பரணி! தரணி உமக்கே சொந்தம், தருக்கருக்கு அல்ல! சீறிடும் சிட்டு, வல்லூறை வீழ்த்த இயலும், கூப்பிய கரத்தினரே! குமுறும் நெஞ்சத்தினரே! அழுதது போதும், இனிச் செயல்புரிய வாரீர்! திகைத்தது போதும், திரண்டெழுந்து பாய்வீர்! என்று வீர முழக்கமிட்டு எந்த மாவீரன் ரஷ்ய மக்களை வெற்றிப் பாதையிலே அழைத்துச் சென்றானோ, அந்த மாவீரனுடைய சவ ஊர்வலம் நடைபெறுகிறது – நெஞ்சம் அனலிடும் புழுவெனத் தானே ஆகிவிடும்.

ஸ்டாலின்! அந்தச் சொல் ஒரு தத்துவ விளக்கம்! ஒரு போர்முறை! ஓர் செயல் திறன்! ஓர் கலங்கரை விளக்கு! ஏழைகளுக்கு, நம்பிக்கை! எத்தர்களுக்கு, எச்சரிக்கை! சுயநலமிகளின் கருத்தைக் குழப்பும் கேள்விக்குறி! ஏழை மக்கள் கண்டு களிக்கும் ஆச்சரியக்குறி! ஸ்டாலின்! ஒரு தனி நபரின் பெயரா அது! இல்லை, இல்லை, உலக வரலாற்றிலே ஓர் பெரிய அத்தியாயம்! அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது – கண்ணீரால் எழுதப்படுகிறது, மாவீரன் ஸ்டாலின் மறைந்தார் என்று.

அரசுகள் அமைத்த ஆற்றல் மிக்கவர்களின் பெயர்ப்பட்டியல்தான் வரலாறு சென்றேன், கண்டேன், வென்றேன், என்று முழக்கமிட்ட ரோம்நாட்டு ரணகளச்சூரன் ஜுலியஸ் சீசர் போன்றவர்களின் பெயர் தீட்டப்பட்டிருக்கும் சுவடி, வரலாறு! அதுபோலவே அரசு அமைத்திருக்கும் வழிகோலுவதாய், அனைவரையும் வாழவைப்பதாய், எவருக்கும் எக்கெடுதியும் இல்லாத இன்பம் தருவதாய் அமைத்தல் வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டு, சிந்தித்துச் சிந்தித்து சீர்மிகு கருத்துக்களைத் தந்து சென்றவர்களின் பெயர்களும் தீட்டப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சுவடியில்! கூர்வாள் கொண்டோன், கூர்த்தமதி படைத்தோன் – இவர்களின் உழைப்பால் உருவாக்கப்படும் காலம் – இது வரலாறு தரும் பாடம்! என் அரசு! என் முரசு! - என்று முழக்கிய வீரர் பலர்! என் அரசு! நல்லரசு! - என்று கூறியவர் சிலர்! வீரர் பலப்பலர்! விவேகிகள் சிலர்! இவர்களுக்கிடையே கோடானுகோடி மக்கள்! என் நாடு! இதை எதிர்ப்பவன் எவனுண்டு! யார் எனக்கு ஈடு? – என்று முழக்கமிடும் வீரர் – தன்நாடு தன் நாடு என்று மார்தட்டினர் எனினும், அதனைக் காத்திடத் தோள் தட்டி நின்றனர் எனினும், தன் நாடு, யாருக்கு வாழ்வளிக்கிறது, யாருக்கு வட்டம் அளிக்கிறது என்பது பற்றி அதிகம் எண்ணவோ, சிற்சில வேளைகளில் எண்ணினாலும் திருத்த முறைகளைப் புகுத்தவோ தெளிவும் திறனுமற்றுப்போய், கொட்டு முரசு! கொட்டு முரசு! என்று கூவிக்கிடந்தனர் – ஒட்டிய வயிற்றினர், உலுத்தர்களின் கொடுமைக்கு ஆளாகி, வாழ்வு எட்டி, சாவே, கரும்பு என்று கதறிக் கிடந்தனர். வரலாறு இதனைக் காட்டுகிறது. ஏழையும் வாழத்தான் வேண்டும் – வாழ்வு அனைவருக்கும் உள்ள உரிமை – அதைப் பறிப்பது கொடுமை – அந்தக் கொடுமையை நீக்காதிருப்பது மடைமை – என்று எண்ணிய நுண்ணறிவாளர்கள், சிலர் உண்மையை உரைத்தனர், அரசுகளை அறநெறி செல்லப் பணித்தனர், அறநெறியினரை அரசோச்ச அழைத்தனர், புதிய முறைகளைத் தீட்டிக் காட்டினர், தித்திக்கம் தத்துவங்களைத் தந்தனர் – கொடுமைக்கு ஆளான ஏழையின் மனதிலே ஓர் இன்ப அரிப்பும் ஏற்பட்டுவிட்டது – எனினும், அவனுக்கு வாழ்வளிக்கும் வழிகாண ‘மேதை‘களால் முடியவில்லை என் நாடு! என்நாடு! என்றம் இதை எதிர்க்கும் நாடு சுடுகாடு என்று முழக்கமிட்ட சீசர்கள் – வீரர்கள் பலர் – இந்நாடு, பொன்னாடு ஆதல் வேண்டும் – பாரெல்லாம்வாழ வேண்டும், பாழ்நிலை ஒழிய வேண்டும் என்று பண்ணிசைத்த விவேகிகள் சிலர் – வரலாற்றுச் சுவடியில் – ஆனால் ஒரே ஒரு முறை, ஒப்பற்ற சம்பவம் காட்டுகிறது தீட்டுகிறது வரலாறு, வீரமும் விவேகமும் ஒரு சேரநின்று, உருவளித்ததை – அந்தச் சம்பவம் – அந்தச் சகாப்தம் – லெனின் – ஸ்டாலின் சகாப்தம் அந்த சகாப்தத்தில் அரை நூற்றாண்டுக்காலம், ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது, ஒப்பற்ற வெற்றி கண்டார் – ஓயாத உழைப்பைக் கொட்டினார், திறன் அவ்வளவும் செலவிட்டார் – அப்படிப்பட்ட வரலாறு முடிவடைகிறது – மாவீரன் மறைந்து விட்டார் – மனிதகுலம் மனமுருகி அழுகிறது!

ஸ்டாலின்! அவர் பெயர் அறியாப் பாட்டாளி இல்லை! அவர் புகழ் பேசப்படாத இடம் இல்லை! அவர் இலட்சியம் பரவாத மண்டலம் இல்லை! அவரை நேரில் காணாதவர்கள் கோடி – கோடி ஆனால் அவர் காட்டும் வழியே நல்லவழி என்று கொள்பவர்கள், அவர்கள் எல்லாம், தொலைதூரத்து விளக்கு – புகழொளியோ, ஏழையின் இல்லங்களிலெல்லாம், கடல்கடந்து, காடு கடந்து, மலை கடந்து மமதையாளரின் தடை கடந்து, பரவிற்று, பரவிக் கொண்டே இருக்கிறது – பரவவிடக்கூடாது என்ற தடைமுறை அதிகரிக்க அதிகரிக்க, புகழொளி மேலும் மேலும் வேகமாகப் பரவுதல் கண்டோம். அந்தப் புகழொளி பரப்பிய பொன்னவிர்மேனியன், உயிர் நீத்தார், உடலத்தைக் கண்ணாடிப் பேழையிலிட்டுக் காட்சிப் பொருளாக்கி விடுகிறார்கள் – கண்ணீர் விடாமலிருக்க எந்தக் கல்நெஞ்சனாலும் முடியாதே!

மாஸ்கோவில் ஸ்டாலின் – இங்கே மரத்தடியில் படுத்துப் புரளும் மாடனும், கழனியிலே மாடாய் உழைக்கும் வேலனும், ஆலையிலே வேகும் கந்தனும், ஐயோ! அடுத்த வேளைக்கு உணவுக்கு எங்கே செல்வேன் என்று அலறும் ஆறுமுகமும், நமக்கு ஓர் தலைவர் இருக்கிறார். நாம் வாழ வழிசெய்யும் விஞ்ஞானி இருக்கிறார், அவர் கண்ணோட்டம் வறுமையை ஒழிக்குமாம், அவர் திட்டம் நமது வாட்டத்தைத் துடைக்குமாம்.

‘வடக்கே ருஷிய நாடொன்றிருக்குதாம்
அங்கு வாழ்கின்றார், ஸ்டாலின், நம் மாமருந்து,“

என்று சிந்து பாடுகிறார்கள் என்றால், அந்த மாவீரனுடைய செல்வாக்கு எத்தகையது!

ஸ்டாலின்! ஒரு இலட்சியத் சொல்லாக மாறிவிட்ட மாண்பு மானிலத்திலே புதுமையானதோர் நிகழ்ச்சி. எங்கோ ஒரு நாட்டிலே ஒரு கட்சி – அந்தக் கட்சிக்குத் தலைவன் என்ற நிலை – ஆனால் அந்த நிலை பெற்றவர்கள் உலகிலே, பல்வேறு நாடுகளிலேயும் உண்டு, மலான் ஓர் கட்சித் தலைவர்தான், சேனாநாயகரும் அதுபோலவே, சர்ச்சில் இன்னொருவர், மற்றம் பலருளர் – ஸ்டாலின், அதுபோலத்தான் ஒரு கட்சியின் தலைவர் – ஆனால் கட்சித் தலைவர் நாட்டின் தலைவரானார், நாட்டின் தலைவர் மட்டுமல்ல, உலக வழிகாட்டியுமானார். சொந்த நாட்டிலே அவருடைய கண் காட்டிய வழி செல்வதைப் பெருமைக்குரியதாகக் கொண்டவர்கள் இருப்பது மட்டுமா, எந்த நாட்டிலும், அவர் காட்டும் வழியே நல்வழி என்று கொள்பவர்கள் ஏராளம் – அந்தத் தொகை வளர்ந்தவண்ணமும் இருந்திடக் காண்கிறோம். அவர் காட்டும் வழி செல்வோம் என்று கூறிப் பயணத்தைத் தொடங்குவோர்அவர் காட்டிய வழி செல்ல வகைகாண வேண்டும் முதலில் என்று கூறுவோர், அவர் காட்டும் வழி செல்லச் செய்வோம், வழி தவறியோரையும் என்று சொல்வோர் – என இவ்வண்ணம் சிலபலமுறை மாற்றங்கள் தென்படுகின்றனவே தவிர, பொதுவாகப் பார்க்கும்போது, அவர் காட்டிய வழியே நல்வழி என்று கருதுவோரின் தொகை எங்கும் வளர்ந்தவண்ணம் இருக்கிறது – இது உண்மை – வெறும் புகழ்ச்சியில்லை – இதனை உணராதார் ஏதும், உணராதாரே! எனவேதான், ஸ்டாலின் மறைவு கேட்டு, ஏழை அழுகிறான், எங்கும், எந்த நிறத்தானும் – எந்த நாட்டவனும்! இங்ஙனம் உலகில் உள்ள உழைப்பாளர் உள்ளங்களைத் தொட்டுவிட்ட பெருமைக்குரியவர், ஸ்டாலின். அவரன்றோ மறைந்து போனார்.

உலகிலேயே மிகக்கொடுமையான கொடுங்கோன்மை எதிர்க்கும் நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டது – அரும்பு மீசைப் பருவத்திலேயே, கொடுங்கோலன் என்ற சொல்லுக்கும் ஜார் என்ற சொல்லுக்கும் மாறுபாடு இல்லா வண்ணம் செய்த மதோன்மத்தன் மன்னன் – கபட சந்யாசி ரஸ்புடீன் அவனுக்கு குரு – ஏழையின் இரத்தத்தைக் குடிக்கும் மனித மிருகங்கள் கொலுமண்டபத்தில் – மாளிகைகளிலே களியாட்டம் வெறியாட்டம் – வெளியே கடும்பனி, அதிலே விறைத்துச் சாகும் ஏழைகள்! இது ரஷ்யா! சீமாட்டிகள் சிரிப்பொலி, ஒளை ஒலு, அலங்கார மாளிகைகள்! காசம், குன்மம், கைகால் முடக்கு, இது வெளியே, வறுமையாளர்களிடம் இவர்கள், வேலை, வேலை என்று உழல்வர் பிணமாகும்போதுதான் ஓய்வு – இடையே வரி செலுத்துவர் – அந்த வரிப்பணம் மதுக்கிண்ணமாக ஆசைக்கிளியே! என்று அவனும், ஆஹா! ஆருயிரே! என்று அவளும் கொஞ்சிக் குலாவும் பஞ்சணையாக, தோட்டாவாக துப்பாகியாக, யாழாக, பேழையாக மாறும் இது ரஷ்யா!

ஓடப்பர் – மிகப் பெரும்பாலோர்! உயரப்பர் – மிகச் சிலர்! அவர்களுக்கு ஞானப்பிதா, ஒரு கபடன்! இந்த ரஷ்யா, ஸ்டாலின்! பேழையிலே, பொன், பொருள் – பேழைக் குடையார் உள்ளமோ, பாம்புப் புற்று! ஏழையோ, அழவும் அறியாதவன்! அடிபணிவான், ஆண்டை பார்க்காமலிருப்பினும்! அவர்கள் சார்பிலே வாதிட, போரிட லெனின் – முன்வந்தார் – அவருக்கு வலக்கரமானார் ஸ்டாலின்.

பாசறைகள் அமைக்கும் பொறுப்பாளர் – பரணி தரும் பாலவன் – புதிய எண்ணம் தரும் பேச்சாளர் – புதுமைக் கருத்தளிக்கும் எழுத்தாளர் – புதிய படைவரிசைகளை அமைக்கும் படைவீரரர் – அணிவகுப்புகளை நடத்திச் செல்லும் தளபதி – எல்லாமானார்! எங்கும் புயலெனச் சுற்றினர் – நெருப்பு என்றனர் உல்லாசபுரியினர் – நிலவு என்றனர் ஏழையர் – கடும் விஷம் என்றனர் கனதனவான்கள், அருமருந்து என்றனர், ஏழை எளியோர் என் வாரிசு என்றான் லெனின்.

ஓடப்பர், உயரப்பர் எல்லாம்மாறி, ஒப்பப்பர் ஆயினர் ரஷ்ய மக்கள்! நாடு, இனி வேட்டைக்காடு அல்ல, என்று அறிவித்தார் லெனின் – தலைவா! இதுபோல, பாரெங்கும் பூக்காடு மணம் கமழச் செய்யும் பணியில், என்னை ஈடுபடப் பணியுங்கள் என்றார் ஸ்டாலின். புதியதோர் உலகு செய்வோர் என்றார், லெனின்! ஸ்டாலின் அவர் பக்கம் நின்றார், உலகு கண்களை அகலத் திறந்து நோக்கிற்று உலுத்தர் உறுமினர் பயணம் நிற்கவில்லை.

சதிகாரர் கிளம்பினர் – வெற்றி பெறமுடியவில்லை! வெள்ளை ரஷ்யா, சிகப்பாயிற்று – அந்தச் செந்நிறத்தைக் காக்கும் செம்படை திறம்பட நின்றது – அதனை நடத்திச் செல்ல செம்மல், ஸ்டாலின் நின்றார்! லெனின், ஒளிவிளக்கை ஸ்டாலின் ஏந்தினர் – லெனின் மறைந்தார் – ஸ்டாலினிடம் இலட்சியத்தை ஒப்படைத்தார்.

உலகிலே உருட்டு விழியினர் ஒன்று கூடினர், புத்தம்புதுப் பூங்காவை அழிக்க – ஸ்டாலின் கண்ணொளி காதகர்களின் திட்டத்தை கருகிறடச் செய்தது. சோவியத் ஆட்சியின் சோபிதத்தை உலகறியச் செய்தல் வேண்டும். இந்த ஓவியத்தைக் கண்டு, உலகு புது வழியில் புக வேண்டும், என்பது ஸ்டாலின் கொண்ட கோட்பாடு! அதற்கு எதிர்ப்பு, எந்தக் திக்கிலிருந்து கிளம்பினாலும், என்ன உருவிலே வந்தாலும், சீறிடும் வெறியனாக வரினும், சிரித்திடும், ராஜத்ந்திரியாக வரினும் ஜெபமாலை கொண்ட மதவாதி உருவிலே வரினும், ஜனநாயகம் பேசும் போலி உருவிலே வரினும், ஸ்டாலின் அவர்களை வென்றார் – சோவியத் ஆட்சியைச் சோபிதமானதாக்கினார்.

இல்லாமை இல்லா நாடு! பூலோக சுவர்க்கம்! இன்பபுரி! பாட்டாளி அரசு! பொது உடைமை பூமி! - அர்ச்சனை வளர்ந்தது – அசூயையும் வளர்ந்ததது – ஸ்டாலின், புகழுரையால் மயங்காமல், பொல்லாங்கு கண்டறியத் தயங்காமல், தொல்டிலருகே அன்புடன் இருந்திடும் தாயானார் – சமதர்மக் குழுவி வளர்ந்தது.

உலக ஜனநாயகத்துக்கே உலை வைப்பேன் என்று உறுமிய ஹிட்லர் மூலம், புது முறைக்குப் பேராபத்து ஏற்பட்டபோது, ஸ்டாலின் உலக மாவீரர்கள் கர்ட்டிய வீரதீரம் அனைத்தையும் ஒரு உருவாகக் கொண்ட தீரனாகக் கிளம்பினார் – பெர்லின் வீழ்ந்தது – பேயரசு சாய்ந்தது.

உலகுக்கு ஓர் நற்பணி புரிந்தான் உத்தமன் என்று சிகப்பு கண்டாலே சீறும் ‘சீலர்களும்‘ புகழ்ந்தனர், அதுபோது.

பாட்டாளி அரசாம், பாட்டாளி அரசு! - அங்கே என்ன உண்டு – எழில் உண்டா, கலை உண்டா, தொழில் உண்டா, திறம் உண்டா, நுண்ணறிவுண்டா, நூல் உண்டா, விஞ்ஞானம் உண்டா, வியக்கத் தகும் பொருள் உண்டா, சோறு உண்டாம் ஏழைக்கு, பாடு உண்டாம் அனைவர்க்கும் என்று சமதர்ம விரோதிகள் பிரச்சாரம் செய்வது அறிந்த ஸ்டாலின், ரஷ்ய நாட்டிலே புது ஆட்சி முறை, சோவியத் ஆட்சி முறை, எவ்வளவு அற்புதமான மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை சொல்லாலா – இல்லை, இல்லை, செயலில் காட்டினார், மாபெரும் நீர்த்தேக்கங்கள் – அற்புதமான அணைக்கட்டுகள் – விஞ்ஞான முறைப்படி விவசாயம் – முதலாளித்துவம் புகாத தொழிற்சாலைகள் – விஞஞானக் கூடங்கள், அஞ்ஞானத்தை விரட்டும் கலைஞான மாடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓய்விடங்கள், - என் ஒவ்வொரு துறையிலும் உயர்தரமான வெற்றிகளைக் கண்டார்! கடும்பனி, கொட்டும் குளிர் போன்ற இயற்கையின் கொடுமைகளைக் கூடக் கட்டுப்படுத்திட முடியும் என்பதைக் காட்டினார்.

ஜாருக்கு எதிராகப் படைகளை நடத்திச் சென்ற தலைவன், காடு கரம்புகளைக் கழனிகளாக்கும் உழவர் படைக்கும் தலைவனானான்! பாட்டாளிகள் ஜாரின் மாளிகையைத் தூள்தூளாக்கிடத் துடித்ததைக் கண்டு களித்த தலைவன், காட்டாறுகள் கட்டுப்படுத்தப்பட்டதையும், வயல்களிலே சூல்கொண்ட மங்கைபோல தலை சாய்த்து நிற்கும் பயிர்களையும் கிராமங்களிலே களிப்பையும், நகரங்களிலே நேர்த்தியையும் எங்கும் எழிலையும் எவர் வாழ்க்கையிலும், நிம்மதியையும், கண்டு பெருமிதம் கொண்டான், அண்மையிலே வெளிவந்த அவருடைய உருவப்படத்தைக் கண்டால், அவருடைய நெஞ்சிலே இருந்த களிப்பு, விளங்கும். பார்வையிலே ஓர் கெம்பீரம் கண்களிலே வெற்றி ஒளி, இவை தெரியும் – நிலைமை புரியும்.

ஸ்டாலின் – புதுவாழ்வு தந்த பெரியார் – அவர் இது போது கொண்டிருந்த எண்ணம். நிறைவேறி இருக்குமானால், இதுவரை அவர் சாதித்தவைகள் எல்லாவற்றுக்கும் சிகரம்போல் அமைந்திருக்கும் – அதுதான் போரற்ற பொச்சரிப்பு அற்ற, பொல்லாங்கு நினைப்பற்ற, உலக சமாதனம் – இதற்கான எண்ணம் ஏற்பாடு இவைகளிலே ஈடுபட்டிருந்த வேளையில் மறைந்தார். வட்டமிடும் வல்லூறும், வலைவீசும் வேடனும், கணைவிடும் காதகனும் இல்லை என்ற நிலையில், வான்வெளி நோக்கி, அழகாகப் பறக்கும் வெண்புறாபோல், மனித சமுதாயம், இன்ப வாழ்வில் நீந்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஈடில்லாத் தலைவன், இறந்துபட்டான் – உலகின் உயர்வுக்குப் பாடுபட்டு வந்த உத்தமன் மறைந்துவிட்டான் – ஒளிவிளக்கு அணைந்தது – ஓயாதுழைத்த உயர் தனிச் செல்வம், இறந்து பட்டார் – அந்தோ! கொடுமை! கொடுமை!

ஆறாத்துயர் கொண்ட மக்கள் –அவனியில் பல்வேறு நாடுகளிலும் உள்ள பாட்டாளித் தோழர்கள், பரிதவிக்கிறார்கள். துடைத்திட – எளிதல்ல – மறந்திடச் சாத்தியமில்லை – மனநிலை சுலபத்தில் மாறவும் செய்யாது. மாபெருந்தலைவர் மனிதகுலத்துக்கு உய்வும் உயர்வும் அளிததவர் மறைந்தார் – ஏழையர் உலகு தன் வழிகாட்டியை இழந்துவிட்டது. என் செய்வது!

திராவிட முன்னேற்றக் கழகம், இந்த மகத்தான இழப்பு கண்டு ஆழ்ந்த துக்கம் கொள்ளுகிறது. மறைந்த மாவீரனுடைய மாண்புகளை மறவாமல் இருப்பதும், அவர் காட்டிச் சென்ற அரிய கொள்கைக்காக தன் ஆற்றலைப் பயன்படுத்துவதும் தான், மறைந்த பெரியாருக்குக் காட்டும் உயர் தனிச்சிறப்புடைக் காணிக்கை என்ற முறையில் அவர் அளித்த அரியபெரிய கருத்துக்களுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் அயராது உழைக்கும், என்ற உறுதியை, இந்த மகத்தான சோகச் சம்பவம், நமக்கெல்லாம் தருவதாக அமையட்டும் ஸ்டாலின் மறைந்தார் – அவர் புகழும், கொள்கையும் மறையாது – நாமெல்லாம் மறைந்த மாவீரரின் பின்சந்ததிகள் என்ற முறையில், பொதுப்பணியில் ஈடுபடுவோமாக. நாடு பொன்னாடு ஆகவும், எல்லோரும் வாழவும், ஏற்படையதோர் ஆட்சிமுறை அமையவுமான அறநெறியில் அயராமல் உழைப்பதுதான் ஸ்டாலின் வழி செல்வதாகும். ஸ்டாலின் மறைந்தார் – ஆனால் அவர் வகுத்த பாதை, தெள்ளத் தெளியத் தெரிகிறது வாரீர், அவர் வகுத்த வழி நடப்போம்.

அண்ணாதுரை
பொதுச் செயலாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட நாடு – 8-3-53