அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வருக, தலைவரே வாழ்க!

செங்கற்பட்டு மாவட்ட ஆட்சி மன்றத்துக்குத் தலைவராகத் தமிழர் தளபதி, தன்னுணர்வு வீரர், தோழர் டி. சண்முகம் அவர்கள், 15-9-43ல் ஆட்சி மன்றத்தினரின் ஒருமித்த கருத்தால், தேர்ந்தெடுக்கப் பட்டார், என்ற செய்திகேட்டுக் கழிபேருவகை அடைந்தோம். தன்னுணர்வாளர் யாவரும், தோழர் சண்முகம் அவர்களை நன்கு அறிவர். கல்வியொடு செல்வமும், இவற்றுடன் சீர்மிகு குணமும், செயலாற்றல் திறனும் படைத்திருப்பதுடன், எவரிடமும் இன்சொல்பேசி, எவர் குறை களையவும் முன்வந்து நின்று, பெருந்தொண்டுபுரியும் தோழர் சண்முகம் அவர்களைச் செங்கற்பட்டு வட்டாரம், தலைவராகப் பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்திருக்க வேண்டும். செங்கற்பட்டு வட்டாரத் தலைவர்கள் திசைக்கொருவராகத் திரும்பி நின்றதாலும், உட்பகை, சதிச்சுழல் என்பன திருநடனமாடினதாலுமே, உயர் குணம் படைத்தவர், தமக்குரிய நிலைமையில் அமர நாட்கள் பல சென்றன.

“தொண்டை நாடு சான்றோருடைத்து” என்பது பழமொழி, சரிதச் சான்றுகள் அம்மொழிக்கு அரண். தொண்டை நாட்டிலோர் பகுதியே செங்கற்பட்டு மாவட்டம். இன்றோ, இவ்வட்டாரம், எல்லாத் துறைகளிலும், பின்னணியில் நிற்கிறது. செல்வவான்கள் பலர் இங்கு உண்டு, ஆனால் பொதுவளம் இல்லை. கல்விமான்கள் பலர் உண்டு. ஆனால் பொதுக்கல்வி போதுமான அளவு பரவவில்லை. நஞ்சையும் புஞ்சையும் உண்டு, ஆனால் ஒட்டிய வயிரினரின் தொகையோ குறையவில்லை பாலாறு உண்டு, அதிலே நீரோ இல்லை. பாதைகள் உண்டு, ஆனால் பக்குவமாக பூஜ்யம், நெசவுத் தொழிலுக்கு இலட்சக்கணக்கிலே மக்கள் உண்டு; ஆனால் வடநாட்டு மில்சாக்கோ வண்டி வண்டியாக குவியும்! இந் நிலையிலுள்ள வட்டாரத்துக்குப், பொதுக்காரியத்துக்கு யார் பொறுப்பேற்றுக்கொண்டு பணியாற்று

கின்றனர், என்று கேட்டாலோ, எதிரொலியன்றி வேறு பதிலோ இல்லை. குறுநில மன்னர்களுக்கோ சொந்த வேலை அதிகம். வியாபாரக் கோமான்களுக்கோ விடாத்தொல்லை, படித்தோருக்கோ, பல வேலை. வக்கீல்களுக்கோ வழக்கு மன்றம். மற்றவருக்கோ, குடும்ப பாரமே பெரிது. இந்நிலையில், யார் இவ்வட்டாரத்துக்குத் தலைவர், யார் பொதுப்பணிபுரிய கச்சையை வரிந்து கட்டுகின்றனர், என்ற கேள்விக்கு, ஏக்கமும் துக்கமுமன்றி வேறு பதில் கிடைப்ப தில்லை.

இவ்வளவு குறைபாடுடைய வட்டாரத்துக்கு, முயற்சியும் பொதுப்பணியில் பயிற்சியும், உடைய நமது அன்பர், தலைவரானது, நமக்குப் புதியதோர் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. ஆடம்பர வாழ்வையோ, பதவிப் பித்தத்தையோ, அவர் மதிப்பவரல்லர். படத்திறப்பு விழாக்களாற்றியோ, கொடிமரம் நாட்டியோ கூவிடும் போலி தேசிய வாதியுமல்லர். உழைப்பு என்றால் என்ன என்று அறியாத மேனாமினுக்கியல்லர். ஏழைகளிடம் எரிந்துவிழும் இயல்பினரல்லர். இலட்சங்கள் கோடியாக வேண்டாமா, என்ற பிணப்பெட்டிப் பிரபாவத்தையே பெரிதென்று எண்ணுபவரல்லர். காரியமாற்றவல்லவர், மக்கள் கருத்தைத் தெரிந்தவர். தமிழகத்தைக் கண்டவர். தன்னுணர்வாளர். தியாகத்துக்கும் வீரத்துக்கும் தகுதியானவர். அவருடைய ஆட்சிக்காலத்திலே, அரும்பணி புரிந்து, மக்களின் பல குறை போக்குவார் என்ற நம்பிக்கை நமக்குண்டு. எனவே அவரை நாம் வாயார மனமார, வருக, தலைவரே! வாழ்க! என்று வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்.

19.9.1943